தானாக உய்த்தறியும் எர்க் எப்படி ஒரு வெள்ளையனை ஒழித்தான்


வல்லமை படைத்த அரசன் போலுதார் வினோதப் பொருட்களை மிகவும் விரும்பினார், அவற்றைச் சேகரிப்பதிலேயே தன் முழு நேரத்தையும் செலவழித்தார், இதற்கென அனேக நேரம் ராஜாங்க விவகாரங்களில் முக்கியமானவற்றைக் கூட மறந்து விடுவார். அவரிடம் கடிகாரங்களால் ஆன ஒரு சேமிப்பு இருந்தது, அவற்றில் நடனமாடும் கடிகாரங்கள் உண்டு, சூரியோதயக் கடிகாரங்களும், மேகக் கடிகாரங்களும் இருந்தன. அவரிடம் பதமிட்டு பஞ்சடைத்த அச்சமூட்டும் ராட்சத உருக்கள் இருந்தன, அவை பேரண்டத்தின் எல்லா மூலைகளிலும் இருந்து வந்தவை, ஒரு சிறப்பு அறையில் மணி போன்ற உரு கொண்ட ஜாடிக்குள் ஜீவராசியிலேயே மிக அரிதானவை இருந்தன – ஹோமோஸ் ஆந்த்ரோபோஸ், பிரமிப்பூட்டும் விதமாக வெளுத்து, இரண்டு கால்களோடு இருந்த அவற்றுக்கு இரு கண்கள் கூட இருந்தன, ஆனால் காலியாக இருந்தன. அரசர் இரண்டு ரத்தினங்களை அந்தக் கண்கள் இருந்த இடத்தில் பொருத்துவதற்காக வரவழைக்க ஏற்பாடு செய்திருந்தார். அவை ஹோமோஸிற்கு சிவந்த முறைப்பைக் கொடுத்தன. மதுவால் மனம் நெகிழ்ந்திருந்த தருணங்களில் போலுதார் தனக்கு விருப்பமான விருந்தாளிகளை இந்த அறைக்கு அழைத்து, அவர்களுக்கு இந்த பீதிதரும் பொருளைக் காட்டுவார்.
ஒரு நாள் அரசரின் அவைக்கு ஒரு முதிய மின்ஞானி(எலெக்ட்ரொஸேஜ்) வந்தார், அவர் மிக முதியவரானதால், அவருடைய புத்தியின் படிகங்கள் (க்ரிஸ்டல்) வயதால் குழம்பி விட்டிருந்தன, இருந்தும் அந்த மின்ஞானி, ஹாலஸோன் என்பது அவர் பெயர், ஒரு விண்மண்டலத்தின் ஞானத்தைக் கொண்டிருந்தார். ஃபோடான்களை ஒரு நூலில் கோர்ப்பது எப்படி என்ற விஷயம் அவருக்குத் தெரியும், அதன் மூலம் ஒளியாலான கழுத்து மாலைகளை உருவாக்க முடிந்தது என்று சொல்லப்பட்டது. அவருக்கு உயிருள்ள ஆந்த்ரோபோஸ் ஒன்றை எப்படிப் பிடிப்பது என்பதும் தெரிந்திருந்ததாகச் சொல்லப்பட்டது. அந்த முதியவரின் மனமெலிவு எது என்று நன்கு தெரிந்திருந்த அரசர் வைன் நிலவறைகளை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்; அந்த மின்ஞானி லெய்டன் மின் தேக்கியில் நிறைய அருந்தியிருந்ததால், மகிழ்வான மின்னோட்டம் அவருடைய கைகால்களூடே ஓடிக் கொண்டிருந்தது, அதனால் அரசனிடம் ஒரு மோசமான ரகசியத்தை வெளியிட்டு விட்டார், அவருக்கு ஒரு ஆந்த்ரோபாஸைப் பிடித்துக் கொடுப்பதாக உறுதி அளித்திருந்தார், அதுவோ ஒரு பல கிரகவாசிகளான சமூகக் குழு ஒன்றின் ஆட்சியாளன். அதற்கான விலையாக அந்த ஞானி கேட்டது மிக அதிகமானது- அந்த ஆந்த்ரோபாஸின் எடைக்கு நிகரான வைரங்கள்- ஆனால் அரசன் அதைக் கேட்டு கண் கொட்டக் கூட இல்லை, ஏற்றுக் கொண்டார்.
ஹாலஸொன் தன் பயணத்தைத் துவங்கினார். அரசன் தன் அரசவை முன் தனக்குக் கிட்டப் போகிற ஒரு அரிய பொருளைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளத் துவங்கி இருந்தார். அதை அவர் எப்படியுமே மறைத்திருக்க முடியாது, ஏனெனில் அவர் கோட்டையின் பூங்காட்டில், படிகங்களிலேயே அற்புதமானவை வளரும் இடத்தில், ஒரு கூண்டைக் கட்டச் சொல்லி ஆணைகள் பிறப்பித்திருந்தார். அந்தக் கூண்டு கனமான இரும்புக் கம்பிகள் கொண்டதாக இருக்கத் திட்டம்.  அரசவை பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தது. அரசர் தன் விருப்பத்திலிருந்து அசைய மாட்டாரென்பது தெரிந்ததும், அரசரின் ஆலோசகர்கள் கோட்டைக்கு இரண்டு மெத்தப் படித்த அமைப்பு ஒப்பியல் நிபுணர்களை வரவழைத்தனர். அரசர் இவர்களை அன்புடன் வரவேற்றார், மெத்தப்படித்தவர்களான சலாமித் மற்றும் தாலடோன் இருவரும், வெளுத்த ஜீவராசியைப் பற்றி தனக்குத் தெரியாததாக எதைச் சொல்வார்கள் என்று அறிய அவருக்கு ஆர்வம் இருந்தது.
“அது உண்மையா,” முழங்காலிட்டு வணக்கம் தெரிவித்தவர்கள் எழுந்ததும், அரசர் கேட்டார், “ஹோமோஸ்கள் மெழுகை விட மென்மையானவர்கள் என்பது?”
“ஒளியாளரே, அது உண்மைதான்,” இருவரும் பதில் சொன்னார்கள்.
“அதன் முகத்தினடியில் உள்ள ஒரு துளை வழியே அது பலவிதமான ஒலிகளை எழுப்பும் என்பதும் உண்மையா?”
“ஆமாம், உயர்திரு அரசே, அதோடு கூட, அந்தத் துளைக்குள்ளேயே ஹோமோஸ் பல பொருட்களைத் திணித்துக் கொள்கிறது, பிறகு தலையின் கீழ் பாகத்தை அசைக்கிறது, அந்தப் பாகம் தலையின் மேல் பாகத்தோடு ஒரு கீலால் இணைக்கப்பட்டிருக்கிறது, (அப்படி அசைப்பதன் மூலம்) அந்தப் பொருட்கள் உடைக்கப்படுகின்றன, பிறகு அவற்றைத் தன் உள்ளே இழுத்துக் கொள்கிறது.”
“விசித்திரமான பழக்கம், அதைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன்,” என்றார் அரசர். “ஆனால், அறிஞர்களே நீங்கள் எனக்கு விளக்குங்கள், அது எதற்காக இப்படிச் செய்கிறது?”
“இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி நான்கு கோட்பாடுகள் உள்ளன, அரசே,” என்றனர் அமைப்பு ஒப்பியலாளர்கள். “முதலாவது, அது தன் விஷத்தை வெளியேற்றுவதற்காக இப்படிச் செய்கிறது (அது நிறைய விஷம் உள்ளது). இரண்டாவது, அழிப்பதற்காக இப்படிச் செய்கிறது, அதைத்தான் வேறெந்த சந்தோஷத்தையும் விட மேலானதாக அது கருதுகிறது. மூன்றாவது- பேராசை, ஏனெனில் எதையெல்லாம் தன்னால் நுகர முடியுமோ அதையெல்லாம் அது பயன்படுத்தி விடுகிறது. நான்காவது,….”
“நல்லது, நல்லது,” அரசர் சொன்னார். “அந்த ஜீவன் தண்ணீரால் ஆனது என்கிறார்கள், அது உண்மையா? ஆனாலும் அது என்னுடைய பாவைப் பொம்மை போல ஒளி ஊடுருவாததாக இருக்கிறதே!”
“அதுவும் உண்மைதான்! பெருமானே, அதனுள் ஏராளமான கொழகொழப்பான குழாய்கள் உள்ளன, அவற்றினூடே நீர் சுழற்சியில் இருக்கிறது, அந்தக் குழாய்களில் சில மஞ்சளாக, சில முத்துச் சாம்பல் நிறத்தில், ஆனால் பெரும்பாலானவை சிவப்பாக உள்ளவை. அது தொடுகிற எதுவும் உடனே துருப்பிடிக்கிறது அல்லது நெருப்புப் பற்றி எரிகிறது. ஹோமோஸ் அதனால் நிறம் மாறிக் கொண்டிருக்கிறது- முத்து நிறம், மஞ்சளாக அல்லது சிவப்பாக ஆகும். இருந்தபோதும், பெருந்தகையே, உயிருள்ள ஹோமோஸை இங்கு கொணரும் திட்டத்தை நீங்கள் கைவிட வேண்டுமென நாங்கள் மிக மரியாதையோடு கேட்டுக் கொள்கிறோம், அது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஜீவன், கெடுமதியில் இருப்பதிலேயே…”
“இதை நீங்கள் எனக்கு மேலும் விரிவாக விளக்க வேண்டும்,” என்றார் அரசர், ஏதோ அறிஞர்களின் எண்ணத்தைத் தான் ஏற்பது போல. உண்மையில் அவர் தன் ஆர்வத்தை மேலும் வளர்க்கத்தான் இப்படிக் கேட்டார்.
“நச்சு ஆவிகள் உருவாக்கிய ஜீவராசிகளில் ஒரு வகைதான் ஹோமோஸ். ஸிலிகைட்களும், ப்ரோடியைடுகளும் இந்த வகையினதான்; முதல் வகை மேலும் தடிமனாக சீராக இருக்கும், அவற்றை நாம் ஜெலடினோய்டுகள் அல்லது இறைச்சி மசியல் வகை என்கிறோம்; மற்றவை, இன்னுமே அரிதானவை, பல ஆய்வாளர்களால் பல பெயர்கள் கொடுக்கப்பட்டவை, உதாரணமாக – கோந்து போன்றவை, சளியமானவை என்று போலோமாண்டர் சொல்கிறார், சதுப்பு அல்லது சேறில் இருந்து பிறந்தவை என்று ஆர்போரனைச் சேர்ந்த ட்ரைசெஃபலோஸ் சொல்கிறார், மேலும் இறுதியாக அனால்ஸிமாண்டர் என்ற துணிச்சல்காரர் அவற்றை சதுப்புக் கண்ணுள்ள அவசர கோரங்கள் என்று அழைக்கிறார்…”
ராஜா போலுதார் கேட்டார், “அப்போது அவற்றின் கண்கள் கூட அழுக்கு நிறைந்தவை என்பது உண்மைதானா?”
“உண்மையே, பெருமானே. இந்த ஜீவன்கள், வெளிப்பார்வைக்கு மெலிவானவை, சக்தியற்றவை, சும்மா அறுபது அடி கீழே விழுந்தாலே அவை சிவப்பான பசையாக ஆகி விடும், ஆனால் அவற்றிற்கே உரிய வஞ்சக குணத்தால் அத்தனை நீர்ச்சுழிகளையும், பெரும் சுருக்குக் கயிறு விண்மீன்களையும் சேர்த்து நோக்கினால், அவற்றை எல்லாம் விட மோசமான ஆபத்து நிறைந்தவை. எனவே நமது ராஜ்ஜியத்தின் நலனைக் கருதி, நாங்கள் உங்களிடம் இறைஞ்சுகிறோம், எம் பெருமானே…”
“சரி, சரி, நல்லது,” இடைமறித்தார் அரசர். “நீங்கள் போகலாம், அன்பானவர்களே, எல்லாவற்றையும் பற்றி யோசித்து நாம் ஒரு முடிவுக்கு வருவோம்.”
அந்த அறிவுசால் அமைப்பு ஒப்பியல் நிபுணர்கள் தலை தாழ்த்தி வணங்கி, போகையில் தம் மனதில் கவலையோடு போனார்கள், ஏனெனில் அவர்களுக்கு அரசர் இன்னும் தன் ஆபத்தான திட்டத்தைக் கைவிடவில்லை என்று அச்சமிருந்தது.
நாளாவட்டத்தில் கிரக சஞ்சாரம் செய்யும் கப்பல் இரவில் வந்தது, பிரும்மாண்டமான கூண்டுகளை இறக்கியது. அவை உடனே அரச பூந்தோட்டத்திற்கு எடுத்துப் போகப்பட்டன. சிறிது நாட்களிலேயே அரசரின் அனைத்துக் குடிமக்களுக்கும் அதன் தங்கக் கதவுகள் திறக்கப்பட்டன, அங்கு வைரத் தோப்புகள், செதுக்கப்பட்ட சூரியகாந்தக் கல்லாலான மண்டபங்கள், சலவைக்கல்லால் ஆன அபாரமான கட்டடங்கள் ஆகியவற்றின் நடுவே இரும்பால் ஆன ஒரு கூண்டைக் கண்டனர் – அதனுள்- கொளகொளவென்று இருந்த உடலோடு இருந்த வெளுத்த உரு, சிறு பீப்பாய் மீது, ஒரு வட்டிலில் இருந்த ஏதோ வினோதமான சாறின் முன் அமர்ந்திருந்தது- அந்த வஸ்து எண்ணெய் வாடை அடித்தது உண்மைதான், அதுவும் நெருப்பின் மீது எரிக்கப்பட்ட எண்ணெய் வாடையடித்தது, எனவே முழுதும் கெட்டுப் போயிருக்க வேண்டும், பயன்படுத்தச் சிறிதும் உதவாததாக இருக்க வேண்டும். ஆனாலும் அந்தப் பிராணி’ வட்டிலில் இருந்த அந்த எண்ணெய் போன்ற பிசுபிசுப்பான திரவத்தில் ஒரு குடுவையை அமைதியாக முக்கி எடுத்து, அதைத் தன் முகத்திலிருந்த திறப்பில் போட்டது.
பார்வையாளர்கள், கூண்டின் முன் இருந்த அறிவிப்புப் பலகையில், அங்கு அவர்கள் முன் இருப்பது ‘ஆந்த்ரொபோஸ், உயிரோடு இருக்கும் வெள்ளையன்’ என்று படித்து அச்சத்தால் பேச்சிழந்து நின்றார்கள். கும்பல் அதை ஏளனம் செய்து சீண்டத் துவங்கியது, ஆனால் ஹோமோஸ் எழுந்தது, தான் அமர்ந்திருந்த பீப்பாயிலிருந்து எதையோ அள்ளி எடுத்தது, வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தின் மீது அந்த கொல்லக் கூடிய திரவத்தை விசிறி அடித்தது. சிலர் ஓடினார்கள், மற்றவர்கள் கற்களை எடுத்து அந்த ஜந்துவை நொறுக்க எண்ணினார்கள், ஆனால் காவலாளிகள் அவர்கள் எல்லாரையும் விரட்டி விட்டார்கள்.
இந்த சம்பவங்கள் அரசனின் மகள், எலெக்ட்ரீனாவின், காதுக்கு எட்டின. அவளும் தன் தந்தையின் அறியும் ஆர்வத்தைக் கொண்டிருந்தவள் போலிருக்கிறது, ஏனெனில் அவள் அந்த அச்சமூட்டும் ஜந்து இருந்த கூண்டுக்கு அருகில் செல்லத் தயங்கவில்லை. அது தன்னைச் சொறிந்து கொள்வதிலோ, போதுமான நீரையோ அல்லது ராஜாவின் குடிமக்களில் நூறு பேரை அந்த இடத்திலேயே கொல்லக் கூடிய அளவு கெட்டுப்போன எண்ணெயையோ அருந்துவதிலேயே தன் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தது.
ஹோமோஸ் வெகு சீக்கிரம் அறிவுள்ள பேச்சைக் கற்றுக் கொண்டு விட்டது, எனவே தைரியமாக எலெக்ட்ரீனாவிடம் பேசியது.
ராஜகுமாரி அதனிடம் ஒரு தடவை கேட்டாள், அதன் முகத் துவாரத்தில் மின்னுகிற வெள்ளைப் பொருள் என்னவென்று.
“அதை நான் பல் என்று அழைப்பேன்,” அது சொன்னது.
“ஓ, எனக்கு அதில் ஒன்றைக் கொடேன்!” என்று வேண்டினாள் அரசகுமாரி.
“அதுக்குப் பதிலாக நீ எனக்கு என்ன கொடுப்பாய்?” அது கேட்டது.
“நான் என்னோட சின்ன தங்கச் சாவியைத் தருவேன். ஆனால் ஒரு கணம்தான்.”
“அது என்ன சாவி?”
“என் சொந்தச் சாவி. தினம் மாலையில் அதை வச்சு என் மூளைக்கு நான் சாவி கொடுப்பேன். உனக்கும் ஒண்ணு இருக்கணுமே.”
“என்னோட சாவி உன்னோடதிலேருந்து வித்தியாசமானது,” அது மழுப்பலாகப் பதில் சொன்னது. “அதை எங்கே வச்சிருக்கே?”
“இங்கேதான், என் மார்பிலேயே இருக்கு, இந்த தங்க மூடிக்குக் கீழே.”
“அதைக் கொடு…”
“அப்ப நீ எனக்கு ஒரு பல்லைக் கொடுப்பியா?”
“நிச்சயமா….”
ராஜகுமாரி ஒரு தங்கத் திருகாணியைத் திருப்பினாள், ஒரு மூடியைத் திறந்தாள், ஒரு சின்ன தங்கச் சாவியை எடுத்தாள், அதைக் கம்பிகள் வழியே கொடுத்தாள். அந்த வெள்ளையன் அதைப் பேராசையோடு வாங்கிக் கொண்டது, மகிழ்ச்சியோடு சிரித்தபடி, கூண்டின் மத்திக்குப் போய் விட்டது. ராஜகுமாரி அதனிடம் கெஞ்சினாள், வேண்டிக் கேட்டாள், சாவியைத் திருப்பிக் கொடுக்கும்படி, எதற்கும் பயனில்லை. வேறு யாரும் தான் செய்ததைக் கண்டுபிடிக்கக் கூடாதென்று எண்ணியவள், தன் அரண்மனை அறைகளுக்குத் திரும்பினாள், கனத்த நெஞ்சோடு. அவள் முட்டாள்தனமாக நடந்திருக்கிறாள் என்று சொல்லலாம், ஆனால் அவள் கிட்டத்தட்ட ஒரு குழந்தைதான். அடுத்த நாள் வேலைக்காரர்கள் அவள் தன் படிகப் படுக்கையில் மதிமயங்கிக் கிடப்பதைப் பார்த்தார்கள். ராஜாவும், ராணியும் ஓடி வந்தார்கள், மொத்த அரசவையும் பின்னால் வந்தது. அவள் தூங்குவது போலப் படுத்திருந்தாள், ஆனால் எதுவும் அவளை எழுப்ப முடியவில்லை. அரசன் அவையின் மருத்துவர்-எலெக்ட்ரீஷியன்களை, தன் மருத்துவ உதவியாளர்களை, பொறியாளர்களை, எந்திரவியலாளர்களை எல்லாம் கூப்பிட்டனுப்பினார். வந்தவர்கள் எல்லாம் ராஜகுமாரியைச் சோதித்து விட்டு, அவளுடைய மூடி திறந்திருப்பதைக் கவனித்தார்கள், ஆனால் சின்னத் திருகாணி இல்லை, குட்டிச் சாவியும் அங்கே இல்லை! அரண்மனையில் அபாய அறிவிப்பு செய்யப்பட்டது, ஒரே அமளி நிலவியது, எல்லாரும் எல்லாப் பக்கமும் ஓடினார்கள், இங்குமங்கும் அந்தச் சின்னச் சாவியைத் தேடினார்கள், ஒரு பயனும் இல்லை. அடுத்த நாள், நம்பிக்கையின்மையில் ஆழ்ந்த நிலையில் இருந்த அரசரிடம், வெள்ளையன் அரசரிடம் தொலைந்த சாவியைப் பற்றிப் பேச விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது. அரசர் சற்றும் காலதாமதம் செய்யாமல் பூங்காவுக்கு விரைந்தார், அந்த கொடூர ஜந்து அவரிடம் சொன்னது, ராஜகுமாரி எங்கே சாவியைத் தொலைத்தாள் என்பது தனக்குத் தெரியும் என்றும், அதைத் தான் சொல்ல வேண்டுமென்றால், அரசர் தனக்கு விடுதலை கொடுப்பேன் என்று உறுதி அளிக்க வேண்டும், அதோடு கூட தனக்கு விண்வெளிப் பயணம் செய்யத் தக்க கப்பலொன்று கொடுக்கப்பட வேண்டும், அது தன் கூட்டத்திற்குத் திரும்ப உதவ வேண்டும் என்று தெரிவித்தது. அரசர் பிடிவாதமாக அதை மறுத்து விட்டார். பூங்காவை அலசித் தேட உத்தரவிட்டார், ஆனால் இறுதியாக அந்த நிபந்தனைகளை ஒத்துக் கொண்டார். ஒரு விண்கப்பல் தயார் செய்யப்பட்டது, காவலர்கள் வெள்ளையனைக் கூண்டிலிருந்து விடுவித்து அந்தக் கப்பலுக்கு அழைத்துப் போனார்கள். அரசர் கப்பலருகே காத்திருந்தார்; ஆந்த்ரோபோஸ் தான் கப்பலுக்குள் போன பிறகுதான் சொல்வேன் என்றது, அதற்கு முன்பு சொல்ல மாட்டேன் என்று விட்டது.
கப்பலுக்குள் போன பின்பு தன் தலையை ஒரு காற்றுக் குழாய் வழியே வெளியே நீட்டியது, அந்தப் பளபளப்பான சாவியைத் தன் கையில் காட்டியபடி கத்தியது:
“இங்கேதான் சாவி இருக்கு! இதை நான் என்னோடு எடுத்துப் போகிறேன், ராஜாவே, அப்போதுதான் உன் மகள் ஒருபோதும் விழித்து எழ மாட்டாள், ஏனெனில் எனக்கு வஞ்சம் தீர்க்க வேண்டும், நீ என்னை அவமானப்படுத்தினாய், இரும்புக் கூண்டில் ஊர் சிரிக்கும்படி அடைத்து வைத்தாய்!”
அந்த விண்கப்பலின் கீழ் நெருப்பு பற்றியது, அது ஆகாயத்தில் எழுந்தது, எல்லாரும் திக்பிரமித்து நின்றார்கள். அரசர் தன்னுடைய மிக வேகமான மேகத்தைக் கொளுத்தும் இரும்புக் கப்பல்களையும், சூறாவளிப்ராப்களையும் அதைத் துரத்த அனுப்பினார், ஆனால் அவை எல்லாம் வெறுங்கையோடு திரும்பின. ஏனெனில் அந்த வெள்ளையன் தன் பாதையை நன்கு மறைத்து விட்டது, துரத்தியவர்களிடம் இருந்து தப்பி விட்டது.
அரசர் போலுதாருக்குத் தான் அந்த அறிவுசால் அமைப்பு ஒப்பியலாளர்கள் சொன்னதைக் கேட்காது செய்தது எத்தனை தவறானது என்று புரிந்தது. ஆனால் சேதம் ஏற்பட்டது ஏற்பட்டதுதான். எலெக்ட்ரிகல் பூட்டு விற்பன்னர்கள் ஒரு மறுசாவி தயாரிப்பதில் இறங்கினார்கள், அரசவையின் பிரதான கூட்டமைப்பாளர், அரசவைக் கைவினைஞர்கள், அரசவை பழுது பார்ப்பவர்கள், அரசவை உருக்கிரும்புக் கொல்லர்கள், மற்றும் அரசவைத் தட்டார்களும், ஸைபர் கோமான்களும், டைனமார்க்ரேவ்களும் முயன்று மாற்றுச் சாவி தயாரிக்க முனைந்தனர்- எல்லாமே வியர்த்தமாயிற்று. அரசர் வெள்ளையன் எடுத்துப் போன சாவியைத்தான் மறுபடி கொணர வேண்டுமென்றும், அல்லது ராஜகுமாரியின் புத்தியிலும், மற்ற உணர்வு மையங்களிலும் இருள்தான் என்றென்றும் நிலவும் என்றும் புரிந்து கொண்டார்.
அதனால் அவர் தன் ராஜ்யம் பூராவும் அறிவிப்பு செய்தார், இதுவும் அதுவும் நடந்தது, ஆந்த்ரோபிக் வெள்ளையன் ஹோமோஸ் தங்கச் சாவியுடன் ஓடி மறைந்து விட்டது, அதை யார் பிடித்துக் கொண்டு வந்தாலும், அல்லது அந்த உயிர் கொடுக்கும் தங்கச் சாவியை மட்டுமாவது கொணர்ந்து ராஜ குமாரியை மீட்டு எழுப்பினால், அவளைத் திருமணம் செய்து கரம் பற்றலாம், பிறகு அரியணையிலும் ஏறலாம் என்பது அது.
உடனேயே பெருந்திரளாக பல விதமான சாகசக்காரர்கள், பல உருக்களிலும் பல அளவுகளிலும் திரண்டார்கள். அவர்களில், பெரும் சாகசக்காரர்கள் என அறியப்பட்ட மின்ஆண்டகைகளும் இருந்தனர், மாறாகப் பித்தலாட்டக்காரர்களும் இருந்தார்கள், நட்சத்திரத் திருடர்களும், நட்சத்திர நாடோடிகளும் இருந்தனர். தமெட்ரிகஸ் மெகவாட் எனும் வாள்வீரனும் ஆஸிலேட்டருமானவர் அரண்மனைக்கு வந்தார், அவர் அப்படி ஒரு பின்னூட்டமும், தொடர்ந்து நீண்ட நாள் வேக ஓட்டமும் கொண்டவர், அதனால் அவருக்கு எதிராக யாரும் களத்தில் நிற்க முடியாது; பல தூரத்து நாடுகளிலிருந்து சுயமாக பயணப்படக் கூடிய, இரண்டு ஆட்டோமாட்களைப் போன்ற, ஸெல்ஃப்மொட்கள் வந்தனர், நூறு சண்டைகளில் வென்ற திசை-வல்லாளர்கள் (வெக்டர் -விக்டர்கள்), அல்லது ப்ரொஸ்தீஸியஸ் என்ற அப்பழுக்கற்ற கட்டுமான நிபுணர் போன்றவர்கள், அவர் எங்கு சென்றாலும் இரண்டு மின்தெறிப்பு அடக்கிகள் இல்லாமல் போக மாட்டார், ஒன்று கருப்பு, இன்னொன்று வெள்ளை நிறமாக இருப்பன அவை; அப்புறம் அங்கு படிவங்களுக்கு முந்தைய நிலை வஸ்துக்களால் முற்றிலும் உருவாக்கப்பட்டவரும், ஒல்லியான உயர்ந்த உருக் கொண்டவருமான ஆர்பிட்ரான் – காஸ்மோஸ்கி என்பவர் வந்தார், மேலும் எண்பது பெட்டிகளில் இருந்த நாற்பது ஆண்ட்ரோமீடியரிகளில் ஒரு பழைய டிஜிடல் கணினியைக் கொணர்ந்த ஆக்ரைமைச் சேர்ந்த ஸைஃபர் வந்தார், அவர் மிக்க சிந்தனையால் துருப்பிடித்த ஆனால் இன்னமும் வலுவான புத்தியைக் கொண்டவராக இருந்தவர். தீர்மானித்த அலைவரிசையைத் தவிர மற்றவற்றை ஒதுக்க முடிந்த இனத்தவரான ஸெலக்டிவிடிகளிலிருந்து மூன்று வெற்றி வீரர்கள் வந்தனர், அவர்கள் டயோடியஸ், ட்ரையோடியஸ் மற்றும் ஹெப்டோடியஸ் என்பார். அவர்களின் தலைகளில் அப்படி ஒரு முற்றிலும் கச்சிதமான வெற்றிடம் இருந்தது, அவர்களின் கருத்த எண்ணம் என்பது நட்சத்திரமே இல்லாத இரவு போல இருந்தது. லெய்டன் கவசம் அணிந்து பர்பெச்சுவனும் வந்தார், அவருடைய கம்யூடேடர் முழுதும் முந்நூறு யுத்தங்களினால் உருவான வெர்டிக்ரிகளால் (காப்பர் கார்பொனேட் படிவுகள்) மூடப்பட்டிருந்தது, அடுத்து மேட்ரிக்ஸ் பெர்ஃபோரேடெம் வந்தார், அவர் யாரையாவது இணைத்துத் தொகுக்காமல் ஒருநாள் கூட வீணடித்ததில்லை, தன்னுடைய தோற்கடிக்கப்படாத ஸைபர்ஸ்டீடை (கணினிக் குதிரை) அரண்மனைக்குக் கொணர்ந்திருந்தார், மெகாஸஸ் என்ற பெயர் கொண்ட அது ஒரு சூபர்சார்ஜர். அவர்கள் எல்லாம் குழுமினர், அரசவை நிரம்பிய போது, ஒரு மர உருளைக் கலம் வாயிற்படிக்கு உருண்டு வந்தது, அதிலிருந்து குதித்தெழுந்தவன், பாதரசத்தால் ஆன உருவாக இருந்தான், அவன் தானாக உய்த்தறியும் எர்க், விரும்பிய வடிவுகளை அடையக் கூடியவன்.
அந்த நாயகர்கள் விருந்துண்டார்கள், அரண்மனையில் அறைகளை ஒளிரச் செய்தார்கள், அதனால் அறைகளின் பளிங்கு விதானங்கள் சூரிய அஸ்தமன நேரத்து மேகங்களைப் போல சிவந்து மின்னின, பிறகு அவர்கள் அவரவர் வழிகளில் வெள்ளையனைத் தேடிப் போய், அதைச் சாகும் வரை போரிடச் சவால் விடுவதற்கும், சாவியைத் திரும்பப் பெறவும் அதன் மூலம் ராஜகுமாரியையும் அரியணையையும் வென்றெடுக்கவும் கிளம்பிப் போனார்கள். தமெட்ரிகஸ் மெகவாட், கோல்ட்லீயாக்குக்குப் பறந்தார், அங்கே ஜெல்லிக்ளாபர்கள் வசித்தார்கள், அங்கே அவர் ஏதோ கண்டுபிடிக்க எண்ணினார். அவர்களுடைய உளைக்குள் குதித்தார், தன் ரிமோட்-கண்ட்ரோல் கத்தியின் மூலம் வழி ஒன்றை வெட்டி எடுத்தார், ஆனால் அவர் எதையும் சாதிக்கவில்லை. ஏனெனில் அவர் உரு மிகவும் வளர்ந்ததால் சூடானபோது அவருடைய குளிர்விக்கும் அமைப்பு செயலிழந்தது, எனவே ஒப்பில்லாத போராளியான அவர் ஒரு அன்னிய மண்ணில் தன் புதைகுழியைக் கண்டார், ஜெல்லிக்ளாபர்களுடைய புளித்து கட்டியாக உறைந்த பாலின் அழுக்கான உளை அவர் மீது மூடி அவருடைய அஞ்சாமையும், விடாப்பிடிவாதமும் கொண்ட காதோட்களின் மீது என்றென்றைக்குமாக மூடிக் கொண்டது.
இரு ஆடோமாட்களான வெக்டோரியர்கள் ராடோமாண்ட்களின் நாட்டை அடைந்தனர். அந்த நாட்டினர் ஒளியுமிழும் வாயுவால், கதிர்வீச்சு பற்றிய சிக்கலான நம்பிக்கை அமைப்புகளைக் கட்டுவோர், மேலும் மிகச் சிக்கனமான கருமிகள் என்பதால் தம் கிரகத்திலிருக்கும் ஒவ்வொரு அணுவையும் தினம் மாலையில் அவர்கள் கணக்கெடுப்பார்கள். இப்படிப் பேராசை பிடித்த ராடோமாண்ட்கள் ஆடோமாட்களுக்குக் கொடுத்த வரவேற்பு கெட்டதாகவே இருந்தது. அவர்களிடம் ஆனிக்ஸ், க்ரிஸலைட் எனும் பச்சை மணிகள், கால்ஸெட்னி எனப்படும் மஞ்சள் மணிகள், ஸ்பினெல் எனும் பல நிறக் கற்கள் கொண்ட பள்ளத்தாக்கைக் காட்டினார்கள் ராடோமாண்ட்கள். அந்த மின்மாவீரர்கள் (எலெக்ட்ரோநைட்கள்) வைரவைடூரியங்களின் ஈர்ப்பில் மயங்கிய போது, ராடோமாண்ட்கள், மேலே இருந்து அற்புதக் கற்களின் பெரும் சரிவை உண்டாக்கி அவர்கள் மீது கொட்டி, அருங்கற்களால் அடித்துக் கொன்றார்கள். அந்த சரிவு நகர்ந்து விழுந்த போது, நூறு வண்ணங்களில் எரிந்து வீழும் ஒரு விண்கல்லைப் போல இருந்தது. இந்தக் கொலை நடந்தது ஏனென்றால், ராடோமாண்ட்கள் வெள்ளையனோடு ஒரு ரகசிய உடன்படிக்கை வைத்திருந்தனர், அதைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
மூன்றாவதாக, ப்ரொஸ்தீஸியஸ், கட்டுமான நிபுணர், அண்டவெளியின் இருளூடே மேற்கொண்ட நீண்ட பயணத்துக்குப் பிறகு அல்காங்குகளின் நிலத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு விண்கற்கள் பயணம் செய்வது கற்களால் ஆன சுழற்காற்றுப் புயல் போல வினோதமாக இருக்கும். ப்ரொஸ்தீஸியஸின் கப்பல், அவற்றின் தீர்வு இல்லாத சுவற்றில் மோதியது, உடைந்த சுக்கானோடு அவர் ஆழ்வெளியில் அலைந்தார், இறுதியாக தூரத்து சூரியன்கள் சிலவற்றை அவர் நெருங்கிய போது, அவற்றின் ஒளி அந்த துரதிருஷ்டம் பிடித்த நாயகரின் பார்வையில்லாத கண்கள் மீதே வீசியது. நான்காவதான, ஆர்பிட்ரான் காஸ்மோஸ்கி, முதலில் மேலான அதிர்ஷ்டத்தை அடைந்தார். அவர் ஆண்ட்ரோமீடா சந்திகளை அடைந்து விட்டார், வேட்டைநாய்களெனப்படும் நான்கு சுருளுருளைகளின் சுழலையும் கடந்து விட்டார், அதற்குப் பிறகு அமைதியான ஒரு வெளியை அடைந்தவருக்கு, அங்கு ஃபோடான் வீச்சில் மிதந்து பயணிப்பது சாத்தியமாக இருந்தது, துடிப்பான ஓர் ஒளிக்கற்றையைப் போல கப்பலைச் செலுத்தும் வேலையைத் தானே எடுத்துக் கொண்டார், அடித்து வீசும் நெருப்புச் சுவடைப் பின்னே விட்டு விரைந்தவர், மெயெஸ்ட்ரீஷியா எனும் கிரகத்தை வந்தடைந்தார். அங்கு விண்மீன் பாறைகளின் நடுவே ப்ரோஸ்தீஸியஸின் கப்பல் நொறுங்கிக் கிடந்ததைப் பார்த்தார். அந்தக் கட்டுமான நிபுணரின் பளபளப்பான, உயிருள்ளவற்றிற்கு ஆவதைப் போலக் குளிர்ந்து கிடந்த உடலை, எரிமலைப் பாறைகளின் குவியல் ஒன்றின் கீழ் புதைத்தார். ஆனால் அவரிடமிருந்து ஒரு வெள்ளை, ஒரு கருப்பு நிறத்துத் தெறிப்பு அடக்கிகள் இரண்டை எடுத்துக் கொண்டார். அவை கவசங்களாகப் பயன்படும். பிறகு தன் பயணத்தைத் தொடர்ந்தார். ஆளற்றதும், பெரும் மேடுபள்ளங்கள் கொண்டதுமான மேயெஸ்ட்ரீஷியாவில் ஊடாக கற்களின் பெரும் சரிவு பேரரவத்தோடு கொட்டியபடி இருக்கும், செங்குத்துப் பாறைகளின் மீது மேகங்களில் மின்னலின் வெள்ளிப் பின்னல்கள் மின்னும். அந்தக் கோமான் மலையிடுக்குகள் நிறைந்த ஒரு நிலப்பகுதியை அடைந்தார், அங்கு எல்லாம் பச்சையாக இருந்த மாலகைட் கற்களே இருந்த ஒரு கணவாய்ப் பகுதியில் பாலின்ட்ரோமைட்கள் அவரைத் தாக்கினர். இடிகளால் மேலிருந்து அவர்கள் தாக்கியபோது, அவர் தன்னிடமிருந்த தெறிப்பு அடக்கிகளாலான கவசத்தால் அவற்றைத் தடுத்தார். ஆனால் அவர்கள் ஒரு எரிமலைக்கு மேல் நகர்ந்து, அங்கிருந்த மலைக் கிண்ணத்தைப் பக்கவாட்டில் சாய்த்து, அவரைக் குறி வைத்து நெருப்பை அவர் மீது பாய்ச்சினர். அந்த வீரர் வீழ்ந்தார், கொதிக்கும் லாவா அவரது மண்டை ஓட்டுக்குள் புகுந்தது, அதிலிருந்து எல்லா வெள்ளியும் வெளியே வழிந்தது. ஐந்தாவதான, ஆக்ரிமிலிருந்து வந்த இண்டெலெக்ட்ரீஷியனான ஸைஃபர் எங்குமே செல்லவில்லை. மாறாக அரசன் போலுதாருடைய ராஜ்யத்தின் எல்லைக்கருகே தங்கி, அவர் தன் ஆண்ட்ரோமீடியரிகளை விண்வெளியின் மேய்நிலங்களில் உலாவ விட்டார், தான் அந்த எந்திரத்தோடு தொடர்பு கொண்டிருந்தார், அதைச் சரி செய்தார், அதற்கு செயல் நிரலியைத் தயாரித்தார், அதன் எண்பது பெட்டிகளைச் சுற்றி அலைந்தார், எல்லாம் மின்சாரத்தால் நிரம்பியதும், அதில் புத்திசாலித்தனம் நிரம்பி வழிந்தது, அதனிடம் கருக்காக வரையறுக்கப்பட்ட கேள்விகளைக் கேட்கத் துவங்கினார். வெள்ளையன் எங்கே வாழ்ந்தது? அதற்கு வழியை எப்படிக் காண்பது? அது எப்படி ஏமாற்றப்படக் கூடும்? எப்படி பிடிக்கப்பட முடியும்? எப்படி அதைச் சாவியைக் கொடுக்கும்படி செய்வது? விடைகள் வந்தபோது அவை தெளிவின்றியும், எதற்கும் ஒப்புதல் கொடுக்காததாகவும் இருந்தன. கடும் கோபத்தில் அவர் அந்த எந்திரத்தைச் சாடின போது அது சூடாகிக் கொதிக்கத் துவங்கிய செம்பு போல வாடையடிக்க ஆரம்பித்தது. அவ
ர் அதை மேலும் வருத்தத் துவங்கினார், இரைந்து கத்தி, இந்தக் கேள்விகளைக் கேட்டார்: “உண்மையைச் சொல் இப்போது, உடனே சொல்லு, பாழாப் போன பழைய டிஜிடல் கணினியே!”  கடைசியில் அதன் இணைப்புகள் உருகின, ஈயம் அதிலிருந்து வெள்ளி நிறக் கண்ணீர்த் துளிகள் போல உருகி வெளி வந்தது, மிகையாகச் சூடான குழாய்கள் வெடித்துத் திறந்தன, அவர் எதிரே உருகிய கசட்டுக் குவியல் ஒன்றுதான் எஞ்சியது, அவர் பெரும் ஆத்திரத்தோடு அதன் முன் ஒரு கனமான தண்டத்தோடு நின்றிருந்தார்.
வெட்கத்தோடு அவர் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனார். இன்னொரு புதிய எந்திரத்துக்கு ஆணை பிறப்பித்தார், ஆனால் அது வந்து சேர நானூறு ஆண்டுகள் ஆயின.
ஆறாவதான ஸெலெக்டிவிடிகளின் முயற்சி துவங்கிய போது, டயோடியஸ், ட்ரையோடியஸ் மற்றும் ஹெப்டோடியஸ் ஆகியோர் வேறு விதமாக விஷயங்களைத் துவக்கினர். அவர்களிடம் ட்ரிடியம், லிதியம் மற்றும் டியூடெரியமும் தீராத அளவில் இருந்தன. அவர்கள் கன ஹைட்ரஜனை வெடிக்க வைத்து வெள்ளையனின் இடத்துக்குப் போகும் எல்லாப் பாதைகளையும் திறக்கச் செய்ய முடிவு செய்தனர். ஆனால் அந்தச் சாலைகள் எங்கே துவங்கின என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதால், பைரோபாட்களைக் கேட்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களோ தங்களின் தலைநகரின் தங்கச் சுவர்களுக்குப் பின்னே கதவுகளைப் பூட்டிக் கொண்டு பதுங்கி இருந்து, நெருப்பை வீசினர்; அஞ்சாத வாலெண்ட் களான ஸெலெக்டிவிடிகள் அந்தக் கோட்டையை டியூடெரியத்தையும், ட்ரிடியத்தையும் கணக்கின்றி அள்ளி வீசித் தாக்கினர், அதனால் பிளக்கப்பட்ட அணுக்களின் பெரும் தீ வானத்தின் நட்சத்திரக் கண்ணை விடப் பெரிதாக இருந்தது. அந்தக் கோட்டையின் சுவர்கள் தங்கமாய் மின்னவே செய்தன, ஆனால் அந்த நெருப்பில் அவை தம் உண்மையான இயல்பைக் காட்டிக் கொடுத்தன, சல்ஃப்யூரிக் புகையாக மாறின, அவை பைரைடிஸ்-மார்கசைட்களால் (வெள்ளை- இரும்பு கந்தகக் கல்) கட்டப்பட்டிருந்தன. அங்கே டயோடியஸ் வீழ்ந்தார், பைரோபாட்கள் அவரை மிதித்து மேலேறிச் சென்றன, அவருடைய புத்தி வண்ணப் படிகங்களின் பூங்கொத்து போல வெடித்துச் சிதறியது, அவருடைய கவசத்தின் மீதெல்லாம் வீழ்ந்தது. மற்ற இருவரும் அவரை கருப்பு ஆலிவீன்களால் ஆன கல்லறையில் புதைத்தனர், பிறகு இன்னும் சென்றனர், சார் ராஜ்ஜியத்தின் எல்லைகளுக்குச் சென்றனர், அங்கே நட்சத்திரங்களை அழித்தவரான ராஜா ஆஸ்ட்ரோசைடா ஆண்டார். அந்த ராஜாவின் கருவூலத்தில் வெண் குறு நட்சத்திரங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கனல் தெறிக்கும் ந்யூக்ளியை நிரம்பு வழிந்தது, அவை அத்தனை பளுவாக இருந்தன என்பதால், அரண்மனையின் மகத்தான சக்தி வாய்ந்த காந்தங்கள்தாம் அவற்றை அரண்மனையின் உள்ளிருந்து பிய்த்துக் கொண்டு போய் அந்த கிரகத்தின் மையத்திற்கே போய்ச் சேராமல் தடுத்து வந்தன. அதன் எல்லைக்குள் யார் காலெடுத்து வைத்தாலும் அவர்களால் கை கால்களை அசைக்க முடியாமல் போய் விடும், ஏனெனில் அங்கிருந்த பிரும்மாண்டமான ஈர்ப்பு விசை வேறெந்த சங்கிலிகளையும் தாழ்ப்பாள்களையும் விட சக்தி வாய்ந்ததாக இருந்தது. ட்ரையோடியஸும், ஹெப்டொடியஸும் இங்கு மிக்க துன்பத்தை எதிர் கொண்டார்கள், ஏனெனில் ஆஸ்ட்ரோசைடா, இவர்களைக் கோட்டையின் மதில் சுவர்களின் கீழே பார்த்ததும், வெள்ளைக் குறு நட்சத்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாக வெளியே கொணர்ந்து, நெருப்பைக் கக்கும் அந்தத் திணிவுகளை அவர்கள் மீது வீசினார். அவர்கள் அந்த அரசனை எப்படியோ தோற்கடித்தனர், அவர் அவர்களுக்கு வெள்ளையனுக்கு இட்டுச் செல்லும் பாதையைச் சுட்டினார், ஆனால் அவர் அவர்களை ஏமாற்றி இருந்தார், ஏனெனில் அவருக்குமே அந்தப் பாதை தெரிந்திருக்கவில்லை, ஆனால் அவர் அந்த பயங்கரமான வீரர்கள் தம் ராஜ்ஜியத்தை விட்டுப் போக வேண்டும் என்பதைத்தான் விரும்பினார். எனவே அவர்கள் பெரும்பாழின் கரும் மையத்துக்குள் பயணம் போனார்கள், அங்கே ட்ரையோடியஸை யாரோ ஒரு ஆண்டிமாட்டர் ப்ளண்டர்பஸ்ஸைக் (பொருளெதிர் துப்பாக்கி) கொண்டு சுட்டு விட்டார்கள். அது ஒரு ஸைபர்னீயர் வேட்டைக்காரராக இருந்திருக்கலாம், அல்லது வாலில்லாத ஒரு விண்மீனுக்கு வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியாக இருந்திருக்கலாம். அது எதானாலும் ட்ரையோடியஸ் காணாமல் போனார், அவருடைய அபிமானச் சொல்லும், போர் முழக்கமுமான ‘டிக்கஃப்’ என்பதைக் கூவப் போதுமான நேரம்தான் அவருக்கு அப்போது இருந்தது. ஹெப்டோடியஸ் விடாப்பிடிவாதமாக மேலே ச
ென்றார், ஆனால் அவருக்கும் கசப்பான முடிவுதான் காத்திருந்தது. அவருடைய விண்கப்பல் பாக்ரிடா மற்றும் ஸிண்டில்லா எனப்படும் ஈர்ப்பு விசைகளின் பெருஞ்சுழல்களிடையே அகப்பட்டுக் கொண்டது; பாக்ரிடா காலத்தை துரிதப்படுத்தும், ஸிண்டில்லாவோ மறுபுறம் காலத்தை மெதுவாக்கும், இரண்டுக்கும் இடையில் தேக்கத்தில் இருக்கும் ஒரு பகுதி உண்டு, அதில் நிகழ் காலம் அமைதியாகி முன்னேயும் போகாது, பின்னேயும் செல்லாது. அங்கே ஹெப்டோடியஸ் உயிரோடு உறைந்தார், இன்றளவும் அங்கேயே இருக்கிறார், கூடவே எண்ணற்ற விண்வெளி மாலுமிகள், கொள்ளையர்கள், மேலும் விண்வெளியைச் சுத்திகரிப்போர்களின் கப்பல்களும், போர்க்கப்பல்களும் சிறிதும் வயதாகாமல், நித்தியம் என்னும் தாங்கவொண்ணாச் சலிப்பிலும், மௌனத்திலும் அந்தரத்தில் தொங்கியபடி இருந்தனர்.
ஸெலக்டிவிடிகளின் இந்த முயற்சி முடிவடைந்த போது, பெர்பெச்சுவன், ஃபட் நாட்டின் ஸைபர் கௌண்ட், ஏழாவதாக இருந்தவர்தான் அடுத்துப் போனார். நிறைய நாட்களுக்கு அவர் வெளியே போகவே இல்லை. மாறாக இந்த மின் கோமான் (எலெக்ட்ரோநைட்) போருக்கான மிகுந்த தயாரிப்புகளைச் செய்தார், மேன்மேலும் தெறிக்கும் ஸ்பார்க் ப்ளக்குகள் கொண்ட கூடுதலாகக் கூர்மையான கடத்திகளுக்கும் (கண்டக்டர்கள்), சிறு பீரங்கிகளுக்கும், ட்ராக்டர்களுக்கும் ஏற்பாடு செய்தார். மிகுந்த எச்சரிக்கையோடு, நன்றியுள்ள உதவிப் படைகளின் தலைமையில் போவதாகத் தீர்மானித்தார். அவருடைய கொடியின் கீழ், படையெடுப்பாளர்களும், படைகளில் சேர்க்கப்படாமல் ஒதுக்கப்பட்டோரும், செய்வதற்கு வேறேதும் இல்லாததால் படைவீரராகிப் பார்க்கலாம் என்று முயல வந்த ரோபாட்களும் குவிந்தனர். இவர்களிலிருந்து பெர்பெச்சுவன், அண்டவெளியில் துரிதத் தாக்குதலுக்கான படை ஒன்றையும், விடாமல் நீண்ட காலம் தாக்கத் தேவையான காலாட்படையை ஒத்த கனமான, இரும்புக் கவசங்களோடு, தங்கமே குறிக்கோளாகக் கொண்டவர்களும், மேலும் பல சிறு படைக்குழுகளில் அடங்கிய பாலிட்ரகூன்களும், பால்லாடின்களுமாக ஒரு படையை உருவாக்கினார். ஆனால், தான் எங்கோ ஒரு விவரம் தெரியாத நாட்டில் தன் முடிவைச் சந்திக்க வேண்டி வரும், ஏதோ ஒரு குட்டையில் தான் முழுதும் துருப்பிடித்துப் போவோம், தன் இரும்புக் கால்கள் நொடிக்கும் என்பதை எல்லாம் கற்பனை செய்த போது அவருக்குப் பெரும் மனவருத்தம் எழுந்தது – அவர் உடனே தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டு விட்டார், ஆனால் வெட்கத்தாலும், வருத்தத்தாலும் அவர் உகுத்த கண்ணீர் டொபாஸ் கற்களாக விழுந்தது, ஏனெனில் அவர் ஒரு வல்லாளரான கோமான், அவருடைய ஆன்மாவில் மணிக்கற்கள் நிரம்பி இருந்தன.
கடைசிக்கு முந்தையவரான மேட்ரிக்ஸ் பெர்ஃபொரேடெம், இந்த விஷயத்தை செயல்முறைக்கு ஏற்ற விதமாக அணுகினார். அவர் பிக்மெல்லியண்ட்களின் நாட்டைப் பற்றிக் கேட்டிருந்தார், இந்த நாட்டிலிருந்தே ரோபாட் நோம்கள் வந்தனர், அவர்களை உருவாக்கியவரின் பென்ஸில், வரையும் பலகையில் வழுக்கி நகர்ந்ததால், அவர்களைத் தயாரிக்கப் பயன்பட்ட மூல வார்ப்பு மாறிப் போய், அதிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு நோமும் கூன் முதுகுள்ளவர்களாக ஆகிப் போனார்கள் என்பதும் அவர் அறிந்த ஒன்று. அதை மாற்றுவதற்கு ஆகும் செலவை மீட்க வழியில்லாததால், அவர்களெல்லாம் அப்படியே விடப்பட்டார்கள். இந்தக் குள்ளர்கள் தகவலறிவை ஏராளமாகச் சேமிப்பார்கள், அதனால் இவர்கள் வரம்பற்ற முழுமையைப் பதுக்குபவர்கள் என்று பெயர் பெற்றிருந்தனர்.
அவர்கள் தகவலறிவைச் சேகரித்தார்களே அன்றி, அதைப் பயன்படுத்தவில்லை என்பதில்தான் அவர்களின் அறிவு புலப்பட்டது. அவர்களிடம் பெர்ஃபொரேடெம் போனார், ராணுவ முறையில் இல்லை, மாறாக பிரமிக்கத்தக்க பரிசுகளைச் சுமந்ததால் தொய்யும் தளங்களைக் கொண்ட கப்பல்களோடு போனார்; அவர் பாஸிட்ரான்களாலும், நியூட்ரான்களின் மழை வீசி அடிக்கிறதாலும் மின்னுகிற ஆடைகளால் பிக்மெல்லியண்ட்களின் மனதைக் கவர்ந்து விடலாம், தனக்கு உதவ ஒத்துக் கொள்வார்களென்று நினைத்திருந்தார்; அவர்களுக்கென ஏழு கையளவு பெரியதான, தங்க அணுக்களைக் கொண்டு வந்திருந்தார், அபூர்வத்திலும் அரிதான அயனோஸ்ஃபியர்கள் கொண்ட பெருங் குடுவைகளையும் கொண்டு வந்திருந்தார். ஆனால் பிக்மெல்லியண்ட்கள் அற்புதமான விண்வெளி நிறக்கலவைகளின் அலைகளைக் கொண்டு நெய்யப்பட்ட மேதகு வெற்றிடத்தைக் கூட அலட்சியமாக ஒதுக்கி விட்டார்கள். ஆத்திரத்தில் அவர்கள் மீது வெறுப்போடு கனைக்கும் தன் மின்னோடியான மெகாஸஸை அவர்கள் மீது செலுத்துவதாகக் கூட பயமுறுத்தினார். கடைசியாக அவர்கள் ஒரு வழிகாட்டியைக் கொடுப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இந்த வழிகாட்டி பத்தாயிரம் கைகள் கொண்ட ஒரு மிரியஃபலாஞ்சியல் என்பதால் ஒரே நேரத்தில் அனைத்து திசைகள் நோக்கியும் கை காட்டியது.
பெர்ஃபொரேடெம் அதைத் திருப்பி அனுப்பி விட்டு, மெகாஸஸை வெள்ளையனின் பாதையை நோக்கித் திருப்பினார், ஆனால் அந்தப் பாதை பொய்யானதாகிப் போயிற்று, ஏனெனில் ஒரு விண்மீண், கால்சியம் ஹைட்ராக்ஸைடால் ஆனது அந்த வழியே போக வேண்டியதாகவிருந்தது, ஆனால் எளிய புத்தி கொண்ட சார்ஜர் ஆன மெகாஸஸ் குதிரை, அதைத் தவறாக கால்சியம் ஃபாஸ்ஃபேட் என்று புரிந்து கொண்டு விட்டது, அது வெள்ளையனின் எலும்புக் கூட்டில் அடிப்படை மூலம்: மெகாஸஸ் சுண்ணாம்பை (லைம்) சளி (ஸ்லைம்) என்று புரிந்து கொண்டு விட்டது. பெர்ஃபொரேடெம் பல சூரியன்களிடையே அலைந்து திரிந்தார். அவை படிப்படியாக மங்கலானவையாக இருந்தன, ஏனெனில் அவர் பேரண்டத்தின் மிகப் புராதனப் பகுதிக்குள் போய் விட்டிருந்தார்.
அவர் ஊதா நிறத்திலிருந்த பிரும்மாண்ட நட்சத்திரங்களைத் தாண்டிப் போனார், ஓரிடத்தில் தன் கப்பலை மௌன வரிசையாயிருந்த நட்சத்திரங்களோடு பிரதிபலிக்கும் ஒரு சுருள் கண்ணாடியில் பார்த்தார், அது வெள்ளித் தளம் கொண்ட பிளப்பான் (ஸ்பெகுலம்). இதைக் கண்ட அவர் வியப்புற்றார், எதற்கும் இருக்கட்டுமென்று தன் சூபர்நோவா அணைப்பானை வெளியே எடுத்தார். பால் வீதியில் தான் மிகவும் சூடாக்கி விடப்படக் கூடிய ஆபத்திலிருந்து பாதுகாக்கவென, அதை அவர் பிக்மெல்லியண்ட்களிடமிருந்து வாங்கி இருந்தார். தான் என்ன பார்க்கிறோம் என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை- அது நிஜத்தில் அண்டவெளியில் ஒரு முடிச்சு, தொடர்ச்சியில் மிக அண்மையிலுள்ள தொடர் பெருக்கம், அந்த இடத்திலேயே இருந்த மடங்களில் வசித்தவர்களுக்குக் கூடத் தெரியாத ஒரு விஷயம். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், அங்கு போனவர்கள் பிறகு திரும்பி வருவதில்லை என்பதுதான். இன்று வரை மேட்ரிக்ஸுக்கு அண்ட வெளியில் இருந்த அந்த அரவைத் தலத்தில் என்ன ஆயிற்றென்று யாருக்கும் தெரியாது. அவருடைய நம்பகமான சார்ஜர் மெகாஸஸ், வெற்றிடப் பாழில் மென்மையாக முனகியபடி, வீட்டுக்கு விரைவாகத் திரும்பியது. அதன் நீலமணிக் கண்கள் பயங்கரத்தைக் காட்டும் குளங்கள் போல இருந்தன, யாராலும் அவற்றைப் பார்த்தால் அதிர்வடையாமல் இருக்க முடிந்ததில்லை. கப்பலோ, சூபர் நோவா அணைப்பான்களோ, மேட்ரிக்ஸோ பிறகு யாராலும் காணப்படவில்லை.
ஆகவே, கடைசியாக தானாக உய்த்தறியும் எர்க், தனியாக முன்னேறிச் சென்றான். அவன் ஒரு வருடமும் மூன்று பதினைந்து நாட்களும் போயிருந்தான். அவன் திரும்பியபோது, இது வரை யாருக்கும் தெரியாமலிருந்த நிலங்களைப் பற்றிச் சொன்னான். அதாவது, எபாக்ஸி பிசின் போன்ற பார்வை கொண்டவர்களின் கிரகத்திலிருக்கும், ஊழலுக்காக சூடான மடைகளைக் கட்டும் பெரிஸ்கோன்கள்- அவன் முன்னிலையிலேயே வரிசை வரிசையான கரும் அலைகளாக இணைந்தார்கள், இதைத்தான் போர்க்காலத்தில் அவர்கள் செய்வது பழக்கம், ஆனால் அவன் அவர்களை இரண்டாக வெட்டியபோது அவர்களின் எலும்புகளாகத் தெரிந்தது சுண்ணாம்புக் கல். மடிந்தவர்களைத் தாண்டி அவன் சென்றபோது பாதி ஆகாயத்தை மறைத்த ஒரு உருவைக் கண்டான், வழி விடச் சொல்லி அதைத் தாக்கச் சென்றபோது, நெருப்பான அவனுடைய கத்தி முனைக்குக் கீழே அதன் தோல் கிழிந்து திறந்தது, உள்ளே வெள்ளையான நெளியும் நரம்புகள் தென்பட்டன. மேலும் அவன் பனிக் கிரகமான அபெர்ராபியா எப்படி முழுதும் ஒளி ஊடுருவக் கூடியதாக இருந்தது என்று சொன்னான், ஒரு வைர குவி ஆடி போல மொத்த அண்டத்தின் வரைபடத்தைத் தன்னுள் கொண்டிருந்தது; அங்கு அவன் வெள்ளையனின் கிரகத்துக்குப் போகும் பாதையைப் பிரதி எடுத்துக் கொண்டான். அலுமினியம் க்ரையோட்ரிகா என்ற பகுதியில் இருந்த நிரந்தர மௌனத்தைப் பற்றிச் சொல்லி விட்டு, அங்கு தான் எப்படித் தொங்கும் உறைபனிப் பாறைகளில் நட்சத்திரங்களின் பிம்பங்களை மட்டுமே பார்க்க முடிந்தது என்று விளக்கினான்; உருகிய மார்மலாய்டுகளின் ராஜ்ஜியத்தில், அவர்கள் எரிமலைக் குழம்பிலிருந்து கொதிக்கும் நகைகளை உருவாக்கியதைப் பார்க்கிறான், அங்கு எலெக்ட்ரோநூமாடிஸிஸ்டுகளைக் கண்டதையும், அவர்கள் மீதேன், ஓஸோன், க்ளோரீன், மேலும் எரிமலைகளின் புகையிலிருந்து அறிவின் தெறிப்பைத் தூண்ட முடிறவர்கள் என்றும், மேதமையின் தரத்தை ஒரு வாயுவுக்குள் எப்படி நுழைப்பது என்ற பிரச்சினையோடு தொடர்ந்து போராடுகிறார்கள் என்றும் தெரிவித்தான். வெள்ளையனின் இருப்பிடத்துக்குப் போவதற்காக காபுட் மெடுசே என்ற சூரியனின் கதவை உடைத்துத் திறக்க வேண்டியதாயிற்று, அந்தக் கதவை அதன் நிறக்கலவையால் ஆன கீல்களிலிருந்து தூக்கி எடுத்த பிறகு அவன் அந்த நட்சத்திரத்தின் உள்ளாக ஓடினான், உள்ளெங்கும் வரிசையாக நீலமும், ஊதாவுமாக நெருப்பு ஜுவாலைகள் எரிகையில் அவற்றூடாக ஓடினான், அவனுடைய கவசம் வெப்பத்தில் அவன் மீது சுருண்டு மூடத் துவங்கியது என்றான். ஆஸ்ட்ரோப்ரோஸியோனம் என்பதன் கதவடிச் சிறு துவாரத்தைத் திறந்தால்தான் நச்சு ஆவிகள் இருக்கும் குளிர்ந்த நரகத்திற்குள் நுழைய முடிந்திருக்கும் என்பதால், அதைத் திறக்கும் கடவுச் சொல்லைக் கண்டுபிடிக்க முப்பது நாட்கள் முயன்றான் என்றும் சொன்னான்; இறுதியில் அவர்கள் நடுவே செல்ல முடிந்தபோது அவர்கள் எப்படித் தம் பிசுக்கான, கொழுப்புப் பொறியில் சிக்க வைக்க முயன்றனர், பிடித்துத் தன் தலையிலிருக்கும் பாதரசத்தை வெளியில் தட்டி விடவோ, அல்லது தன்னை மின்சாரப் பாதையில் குறுக்கிணைப்பு செய்து செயலிழக்க வைக்கவோ முயன்றனர் என்றும் விளக்கினான்; உருக் குலைந்த நட்சத்திரங்களைக் காட்டித் தன்னை வழி தவறச் செய்ய முயன்றனர், ஆனால் அது ஒரு போலி வானம், உண்மையான வானத்தை அவர்கள் தமது திருட்டு வழிகளில் மறைத்து வைத்திருந்தனர், சித்திரவதை செய்து அவனிடம் இருந்து அவனுடைய செயல்முறைகளைக் கைப்பற்ற முயன்றனர், அவன் எல்லாவற்றையும் தாங்கி நிற்க முடிந்ததால், அவனை ஒரு குழியில் தூக்கிப் போட்டு விட்டு, அதை மாக்னடைட்டால் ஆன பலகையால் மூடி விட்டனர் என்றும் சொன்னான். உள்ளே இருந்து தன்னை நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான தானாக உய்த்?
?றியும் எர்க்குகளாகப் பெருக்கிக் கொண்டு, அந்த இரும்பு மூடியைத் தூர எறிந்து விட்டு வெளியே வந்தது எப்படி, பிறகு ஒரு முழு மாதமும் ஐந்து நாட்களும் வெள்ளையர் மீது தன் பழி வாங்கலை நடத்தியது எப்படி, அந்தக் கொடூரர்கள் ஒரு கடைசி முயற்சியாக, அவனை காஸ்டர்பில்லர்கள் எனும் ட்ராக்கர்களைக் கொண்டு தாக்கினார்கள், ஆனால் தன்னுடைய போரிடும் வேகத்தைச் சிறிதும் தளர்த்தாமல் வெட்டி, குத்தி, கொந்தி அவர்களை அப்படி ஒரு மோசமான நிலைக்குக் கொண்டு வந்ததால், தேடி வந்த சாவி திருடிய வெள்ளையனை அவர்கள் அவன் காலடியில் போட்டனர், அப்போது எப்படி எர்க் அவனுடைய தலையைப் பிய்த்தான், உடலைப் பிரித்தான், அதற்குள் முடிப்பந்தால் ஆன ட்ரிக்கோபீஜோர் என்ற ஒரு கல் இருந்தது, எப்படி அந்தக் கல்லில் ஒழுக்கநெறியற்ற வெள்ளையனின் மொழியில் வெட்டெழுத்துகளில் சாவி எங்கே இருக்கிறது என்ற செய்தி கிட்டியது, பிறகு அந்த சுயமாக உய்த்தறியும் எர்க் அறுபத்தி ஏழு சூரியன்களை வெட்டிப் பிளந்து- வெள்ளை, நீலம், மேலும் ரத்தினக்கல் போலச் சிவப்பு ஆனவை அவை- கடைசியில் ஒரு சரியான சூரியனைப் பிளந்து அந்தச் சாவியைக் கண்டான் என்றும் விளக்கினான்.
அரசகுமாரியே அவன் எண்ணம் பூராவும் நிறைந்திருப்பதாலும், திருமணத்துக்கும், முடிசூட்டும் விழாவுக்கும் அவனால் இதற்கு மேலும் காத்திருப்பது கடினம் என்பதாலும் திரும்பி வருகையில் தான் எதிர்கொண்ட சாகசங்களையோ, நடத்த வேண்டி இருந்த போர்களையோ பற்றி யோசிக்கக் கூட அவன் விரும்பவில்லை என்றும் தெரிவித்தான். பெருமகிழ்ச்சி கொண்ட அரசனும் அரசியும் அவனை ராஜகுமாரியின் அறைக்கு அழைத்துப் போனார்கள், அங்கு அவள் கல்லறை போல மௌனமாக, ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிப் படுத்திருந்தாள். எர்க் அவள் மீது குனிந்து, திறந்திருந்த மூடியருகே ஏதோ திருகி, பிறகு எதையோ அங்கு நுழைத்தான், ஒரு திருப்பு திருப்பினான், உடனே அரசகுமாரி- அவளுடைய அம்மாவும் அரசரும், மொத்த அரசவையும் பெருமகிழ்ச்சி அடைய- தன் கண்களைத் திறந்து தன்னை விடுவித்தவரைப் பார்த்துப் புன்னகைத்தாள். எர்க் அந்தச் சிறு மூடியை ஒரு ப்ளாஸ்டரால் ஒட்டி அது மூடி இருக்கும்படி செய்தான், பிறகு அவன் எப்படி தொலைந்திருந்த சிறு திருகாணியைக் கண்டு பிடித்தான் என்பதை விளக்கினான். ஜாதபர்கோவியாவின் சக்கரவர்த்தியான போலெயாண்டர் பார்தோபானோடு போரிட்டபோது கீழே விழுந்திருந்ததை, அவன் கண்டு பிடித்திருந்ததாக விளக்கினான். ஆனால் யாரும் இதைப் பற்றி யோசிக்கவில்லை. அரசரும் சரி, ராணியும் சரி, இதை யோசித்திருந்தால் அவன் எங்குமே போயிருக்கவில்லை என்பதைக் கண்டு பிடித்திருப்பார்கள். அவன் சிறுவனாக இருந்த போதிலிருந்தே எர்க்கிற்கு எந்தப் பூட்டையும் திறக்கும் திறன் இருந்தது, அதன் பலனாகத்தான் அவன் ராஜகுமாரி எலெக்ட்ரீனாவுக்குச் சாவி கொடுக்க முடிந்திருந்தது. நிஜத்தில், அவன் வருணித்த எந்த சாகசங்களையும் அவன் நிகழ்த்தவில்லை, தொலைந்த பொருளோடு உடனே திரும்பினால் சந்தேகம் வரக் கூடாதென்பதற்காகவும், அவனுடைய போட்டியாளர்கள் யாரும் திரும்பி வரவில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும் ஒரு வருடம் மூன்று பதினைந்து நாட்களுக்கு அவன் அந்த ஊரிலேயே காத்திருந்தான். அதற்குப் பிறகுதான் அவன் அரசர் போலுதாரின் அவைக்கு வந்து அரசகுமாரியை உயிர்ப்பித்தான், அவளை மணந்து கொண்டான், போலுதாரின் அரியணையில் இருந்து நீண்டகாலம் ஆட்சி புரிந்தான், இறுதி வரை அவனுடைய தில்லுமுல்லு கண்டுபிடிக்கப்படவே இல்லை. இதிலிருந்து நேரடியாகவே உங்களுக்குத் தெரிந்திருக்கும் நாம் உங்களிடம் உண்மையையே சொன்னோம், ஒரு மாயக் கதையல்ல என்பது, ஏனெனில் மாயக் கதைகளில் நல்ல நெறிதான் எப்போதும் வெல்லும் அல்லவா.

~oOo~

(மூலம்: போலிஷ் மொழிக் கதை. இங்கிலிஷ் மொழி பெயர்ப்பு: மைக்கெல் காண்டெல். இங்கிலிஷிலிருந்து தமிழாக்கம்: மைத்ரேயன்)

குறிப்பு:

மூலக் கதாசிரியர் ஸ்டானிஸ்லா லெம் பற்றியும், கதையை இங்கிலிஷுக்கு மொழியாக்கம் செய்த மைக்கெல் காண்டெல் பற்றியும் குறிப்பை, இதே இதழில் வெளியாகி உள்ள அவருடைய இன்னொரு கதையில் கொடுத்திருக்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.