ஒரு ட்ராகனோடு போரிட்ட கணினியின் கதை

கைபீரியாவை ஆண்ட ராஜா போலியாண்டர் பார்டோபான், ஒரு பெரும் வீரர், நவீன போர்த் தந்திர முறைகளை முன்மொழிபவராக இருந்ததால், எல்லாவற்றையும் விட பிரதானமான போர்க் கலையாக அவர் கருதியது சைபர்னெடிக்ஸைத்தான். அவருடைய ராஜ்ஜியத்தில் சிந்திக்கும் எந்திரங்கள் எங்கும் திரிந்தன, ஏனெனில் போலியாண்டர் அவற்றை எங்கெல்லாம் அவரால் வைக்க முடியுமோ அங்கெல்லாம் வைத்திருந்தார்; விண்வெளி ஆய்வகங்களிலோ, பள்ளிக் கூடங்களிலோ மட்டுமல்ல, சாலைகளில் கூட பாறைகளில் பொதிந்த மின்சார மூளைகளை நிறுத்தினார், அவை சத்தமான குரலெழுப்பி பாதசாரிகளைத் தடுக்கி விழாமல் இருக்கச் சொல்லி எச்சரித்தன; கம்பங்களிலும், சுவர்களிலும், மரங்களிலும் பொருத்தி வைத்தார், அதனால் ஒருவர் எங்கே வழி தொலைந்தாலும் வழியைக் கேட்டு அறிய முடியும்; அவற்றை மேகங்களில் கூடப் பொருத்தினார், அப்போது அவை மழையை முன்னதாக அறிவிக்க முடியும்; மலைகளுக்கும், பள்ளத் தாக்குகளுக்கும் அவற்றைக் கொணர்ந்தார்சுருக்கமாகச் சொன்னால், கைபீரியாவில் எங்கே நடந்தாலும் ஒரு புத்திசாலி எந்திரத்தின் மீது இடிக்காமல் நடக்க முடியாது. அந்தக் கிரகம் மிக அழகான ஒன்று, ஏனெனில் ராஜா, நீண்டகாலமாக ஏற்கனவே இருந்தவற்றை ஸைபர்னெடிக்ஸ் மூலமாக மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்று மட்டும் ஆணையிடவில்லை, மாறாக சட்டம் ஒன்றை இயற்றி, முற்றிலும் தம்மில் புது ஒழுங்கு முறை கொண்ட பொருட்களையுமே அறிமுகப்படுத்தினார். உதாரணமாக, அவரது ராஜ்ஜியத்தில் ஸைபர்வண்டுகளும், ரீங்கரிக்கும் ஸைபர்தேனீக்களும், ஏன் ஸைபர் ஈக்களும் கூட உற்பத்தி செய்யப்பட்டன. அந்த ஈக்கள் மிக அதிகமாகும்போது எந்திரச் சிலந்திகளால் பிடிக்கப்பட்டன. அந்த கிரகத்தில் ஸைபர்கோர்ஸ் பூச்செடிகளின் ஸைபர்போஸ்க் புதர்கள் காற்றில் சலசலத்தன. ஸைபர்கலையோபிக்களும், ஸைபர்வயொல்களும் பாடினஆனால் இந்த குடிமக்களுக்கான கருவிகளைப் போல இரட்டை மடங்கு கருவிகள் ராணுவத்திற்காக இருந்தன. ஏனெனில் ராஜா மிகவும் சண்டைக்காரர். அவருடைய அரண்மனையின் நிலவறைக் கிடங்குகளில் அவர் ஒரு போர்த்தந்திரக் கணினியை வைத்திருந்தார், அது அசாதாரணமான திறமைகள் கொண்டது; அவரிடம் பல சிறிய கணினிகளும் இருந்தன, தவிர ஸைபர்சரிகளும், பிரும்மாண்டமான ஸைபர்மாடிக்குகளும், மேலும் மொத்த தளவாடக் கிடங்கு முழுதும் நிறைந்த எல்லா வித ஆயுதங்களும், வெடிமருந்தும் சேர்த்து, இருந்தன. அங்கு ஒரே ஒரு பிரச்சினைதான் இருந்தது, அது அவரை மிகவும் உறுத்தி வந்தது, அது என்னவென்றால் அவருக்கு ஒரு எதிரியோ அல்லது பகைவரோ கூட இல்லை, யாரும் எந்த விதத்திலும் அவருடைய நாட்டின் மீது படையெடுக்கத் தயாராக இல்லை, அவருக்கு தன்னுடைய பயமூட்டும் ராஜ வீரத்தையோ, போர் யுக்திகளின் மேதமையையோ, அப்புறம் அவருடைய ஸைபர்னெடிக் ஆயுதங்களின் அபாரமான செயல்திறமையையோ காட்ட வாய்ப்பே இல்லை. உண்மையான எதிரிகளோ, ஆக்கிரமிப்பாளர்களோ இல்லாததால் அந்த ராஜா தன் பொறியாளர்களைக் கொண்டு ஒரு செயற்கை எதிரியை உருவாக்கச் செய்திருந்தார், அதோடு அவர் போர் புரியவே செய்தார், அவரே எப்போதும் ஜெயிப்பார். இருந்தாலும், அந்தப் போர்களும், யுத்த ஆயத்தங்களும் உண்மையிலேயே பயங்கரமாக இருந்தன என்பதால், மக்கள் துன்பப்பட்டது கொஞ்சநஞ்சமில்லை. ஸைபர் எதிரிகள் மிக அதிகமாகி விட்ட போது அவர்களுடைய குடியிருப்புகளையும் நகரங்களையும் அழித்த போதும், செயற்கைத் தயாரிப்பான எதிரி நெருப்பு திரவத்தை அவர்கள் மீது கொட்டிய போதும் மக்கள் குறையோடு முணுமுணுத்தனர்; ராஜாவோ அவர்களைக் காப்பாற்றுபவராகவும், செயற்கை எதிரியை அழிப்பவராகவும்தான் வெளியே வந்து போனாலும், அவருடைய வெற்றிகரமான தாக்குதல்களில் வழியில் என்ன இருந்தாலும் அதெல்லாம் சுத்தமாகத் துடைத்தெடுத்து அழிக்கப்பட்டன என்பதால் தங்களுடைய குறைகளை ராஜாவிடம் சொல்லக்கூட அவர்கள் துணிந்தனர். அவர்களுக்காகத்தான் ராஜா அதை எல்லாம் செய்தார் என்றாலும் நன்றியில்லாத மக்கள், குறை சொன்னார்கள்.

இதெல்லாம் தொடர்ந்தன, அதாவது ராஜாவுக்கு இந்தக் கிரகத்தில் நடந்த போர் விளையாட்டுகளெல்லாம் சலித்துப் போய், தன் பார்வையை உயர்த்த அவர் திட்டமிடும்வரை. இப்போது அவர் அண்ட வெளிப் போர்களையும், படையெடுப்புகளையும் பற்றிக் கனவு காணத் தொடங்கினார்.  அவருடைய கிரகத்துக்கு ஒரு பெரிய சந்திரன் இருந்தது, அது முற்றிலும் வெறிச்சோடியும், யாரும் சென்றிராத பாழ்நிலமாகவும் கிடந்தது; ராஜா தன் குடிமக்கள் மீது வரிகளை எக்கச் சக்கமாக சுமத்தினார், சந்திரனில் பெரும்படைகளைக் கட்டி எழுப்பவும், போரை அந்தப் பாழ் வெளியில் நடத்தவும் பெரும் பணம் அவருக்குத் தேவைப்பட்டது. மக்களோ அந்த வரிகளை மகிழ்வோடே கொடுக்கத் தயாராக இருந்தனர், ராஜா போலாண்டர் இனிமேல் அவர்களைத் தன் ஸைபர்மாடிக்ஸால் காப்பாற்ற வரமாட்டார், அவருடைய ஆயுதங்களின் வலிமையை அவர்களின் வீடுகள் மீதும், தலைகள் மீதும் சோதிக்க மாட்டாரென்பதுதான் அவர்கள் எண்ணம். அதனால் ராஜாவின் பொறியாளர்கள் சந்திரனில் ஒரு அபாரமான கணினியை நிர்மாணித்தனர், அது தன் செயல்பாட்டில் பல விதமான துருப்புகளையும், தானாகச் சுடும் பீரங்கிகளையும் உருவாக்க வேண்டுமென்பது கருத்து. ராஜா சிறிதும் நேரம் கடத்தாமல், உடனே அந்த எந்திரத்தின் திறனை இப்படியும் அப்படியும் சோதிப்பதில் இறங்கினார்; ஒரு கட்டத்தில் அவர் அதற்கு ஒரு கட்டளையிட்டார்டெலிக்ராஃப் மூலமாக்த்தான்ஒரு வோல்ட்வால்ட் எலெக்ட்ரோசால்ட்டைச் செய்து காட்டச் சொன்னார்; அவருடைய பொறியாளர்கள் அந்த எந்திரம் எதையும் செய்யக் கூடியது என்று சொன்னது உண்மையா என்று சோதித்துப் பார்க்க அவர் விரும்பினார். அது எதை வேண்டுமானாலும் செய்ய வல்லது என்றால், அவர் யோசித்தார், அது ஒரு குட்டிக் கரணம் போடட்டுமே. ஆனால் அந்த டெலிக்ராமின் பிரதியில் ஒரு குளறுபடி நடந்தது, அந்த எந்திரத்திடம் கிட்டிய ஆணையில் அந்த எந்திரம் ஒரு எலெக்ட்ரோஸால்ட் செய்ய வேண்டுமென்று இல்லை, மாறாக அது ஒரு எலெக்ட்ரோஸாரைச் செய்ய வேண்டுமென்று இருந்ததுஎனவே அதைத் தன்னால் எத்தனை முடியுமோ அத்தனை சிறப்பாக அது செய்தது.

இதற்கிடையில், ராஜா இன்னொரு படையெடுப்பைச் செய்திருந்தார், சில ஸைபர்நெக்ட்ஸ் பிடித்து வைத்திருந்த  தன் ராஜ்யத்தின் பகுதிகளை விடுவித்தார்; சந்திரனில் இருந்த கணினிக்கு அவர் கொடுத்திருந்த கட்டளையை அவர் முற்றிலும் மறந்து போனார், திடீரென்று அங்கிருந்து பிரும்மாண்டமான பாறைகள் பறந்து வந்து விழுந்தன; ராஜா பெரிதும் ஆச்சரியத்தில் மூழ்கினார், ஏனெனில் ஒன்று அரண்மனையின் ஒரு பகுதியின் மீதே விழுந்து அவருடைய மிக மதிக்கப்பட்ட சேகரிப்பாக இருந்த ஸைபராட்களை அழித்து விட்டது. அவை ஓக் மரத்தில் வசிக்கும் வன தேவதைகள் போன்றவை, ஆனால் அவற்றுக்கு நாம் நம் அபிப்பிராயங்களைச் சொல்ல முடியும். பொங்கியெழுந்த ராஜா, சந்திரனில் இருந்த கணினியை உடனே டெலிக்ராஃப் மூலம் தொடர்பு கொண்டு இதற்கு ஒரு விளக்கம் கேட்டார். ஆனால் அது பதில் சொல்லவில்லை, ஏனெனில் அது இப்போது இல்லை: அந்த எலெக்ட்ரோசார் அதை விழுங்கி விட்டு, தன் வாலாக அதை ஆக்கி விட்டது.

ராஜா உடனே ஆயுதம் தரித்த ஒரு முழுப் படையை, அதன் தலைமையில் இன்னொரு கணினியை, அதுவும் மிக தைரியமானதாகவே இருந்தது, நியமித்து அந்த ட்ராகனைக் கொல்லச் சந்திரனுக்கு அனுப்பினார், ஆனால் அங்கே கொஞ்சம் மின்னல்கள் இருந்தன, கொஞ்சம் உருண்டோடும் ஒலிகள் எழுந்தன, அப்புறம் கணினியும் இல்லை, படைகளும் இல்லை; ஏனெனில் அந்த எலெக்ட்ரோட்ராகன் சும்மா கற்பனை உரு இல்லை, அது நடிக்கவும் இல்லை, ஆனால் போர் செய்யும்போது முழு நிஜத்தன்மையோடு போரிட்டது, தவிர அதற்கு ராஜாவையும், ராஜ்ஜியத்தையும் என்ன செய்வது என்பது பற்றி படுமோசமான யோசனைகள் இருந்தன. ராஜா தன்னுடைய ஸைபர்னண்ட்டுகளை, ஸைபர்னீயர்களை, ஸைபரீன்களை, மேலும் லெஃப்டெனெண்ட் ஸைபர்னெட்களை எல்லாம் அனுப்பிப் பார்த்தார். இறுதியில் ஒரு ஸைபர்லிஸ்ஸிமோவையும் அனுப்பினார், ஆனால் அதுவும் எதையும் சாதிக்கவில்லை, அந்த ரகளை கொஞ்சம் கூடுதலான நேரம் நீடித்தது, அவ்வளவுதான். ராஜா தன் அரண்மனையின் பால்கனியில் நிறுவப்பட்ட டெலஸ்கோப் மூலம் இதை எல்லாம் பார்த்தார்.

அந்த ட்ராகன் பெரிதாக வளர்ந்தது. சந்திரன் சிறியதாக ஆகிக் கொண்டே போனது. அந்தப் பெரும் மிருகம் சந்திரனைத் துண்டு துண்டாக உடைத்து அதைத் தன் உடலில் பகுதியாக ஆக்கிக் கொண்டிருந்தது. அப்போது ராஜா நிலைமை மோசமாக ஆகி விட்டதை அறிந்தார். அவருடைய பிரஜைகளும் இதை அறிந்து விட்டனர். நிலைமை மோசமாகி விட்டது, அதன் காலடியில் இருக்கும் நிலம் தீர்ந்தவுடன் எலெக்ட்ரோஸார், தாவி பூமியின் மீதும் தம் மீதும் இறங்கும் என்பது நிச்சயம் என்று உணர்ந்தனர். ராஜா யோசித்தார், மேன்மேலும் யோசித்தார், ஆனால் அவருக்கு வழி ஏதும் தென்படவில்லை. என்ன செய்வதென்றும் அவருக்குத் தெரியவில்லை. எந்திரங்களை அனுப்புவதில் ஒரு பயனுமில்லை, அவை அழியும், தானே போவதிலும் பயனில்லை, ஏனெனில் அவருக்குப் பயம் வந்திருந்தது. திடீரென்று இரவின் நிசப்தத்தினூடே ராஜாவுக்கு தன் படுக்கை அறைகளிலிருந்த டெலிக்ராஃப் எந்திரம் தட்டச்சும் சப்தம் கேட்டது. அது ராஜாவுடைய சொந்த செய்தி வாங்கி, முழுத் தங்கத்தில் வைர ஊசியோடு செய்யப்பட்டது, சந்திரனோடு இணைக்கப்பட்டிருந்தது; ராஜா குதித்தோடி அதை அடைந்தார், அந்தக் கருவி இதற்கிடையில் டக்டக், டக்டக் என்று ஓடிக் கொண்டிருந்தது. அது அடித்த டெலக்ராமில் இருந்த செய்தி இது:

ட்ராகன் சொல்வது, போலாண்டர் பார்தோபான் இடத்தைக் காலி செய்ய வேண்டும் ஏனெனில் ட்ராகன் தானே அந்த சிம்மாசனத்தில் அமரப் போகிறார்!

 

 

ராஜாவுக்குப் பயம் வந்தது, தலையிலிருந்து கால் விரல் வரை நடுக்கத்தோடு, அவர் ஓடினார். அணிந்திருந்த எர்மின் தோலால் ஆன இரவு உடையோடும், சாதாரண காலணிகளோடும், அரண்மனையின் கீழ்த்தளத்திலிருந்த நிலவறைகளுக்கு ஓடினார், அங்கே அவரது மிக வயதானதும், மதியூகியுமான போர்த் தந்திர எந்திரம் இருந்தது. அவர் அதோடு இன்னும் ஆலோசனை நடத்தி இருக்கவில்லை, ஏனெனில் எலெக்ட்ரோட்ராகனின் எழுச்சிக்கும், பின் எதிர்ப்புக்கும் முன்னால் நடந்த ஒரு ராணுவ நடவடிக்கை பற்றி அவருக்கும் அந்த எந்திரத்துக்கும் இடையே வாக்கு வாதம் நடந்திருந்தது; ஆனால் அதைப் பற்றி இப்போது யோசிக்க நேரமில்லைஅவரது அரியணையே, வாழ்வே பணயம் வைக்கப்பட்டிருக்கிறது இப்போது.

அதை அவர் மின்சாரத்தோடு இணைத்தார், அது சீக்கிரம் சூடாகியது, அவர் கூவினார்.

என்னோட பழம் கணினியே! என் நல்ல கணினியே! அப்படி இப்படி, இந்த ட்ராகன் என் சிம்மாசனத்தைப் பிடுங்க உத்தேசிக்கிறது, என்னைத் துரத்தப் போகிறது, உதவி செய், பேசு, நான் எப்படி அதைத் தோற்கடிப்பது?”

,” என்றது கணினி. “முதலாவது நீங்கள் முந்தைய விஷயத்தில் நான் சொன்னதுதான் சரி என்று ஒத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது, நீங்கள் என்னை டிஜிடல் பிரதம மந்திரியே என்றுதான் அழைக்க வேண்டும், ஆனால் நீங்கள் என்னைமாண்பு மிகு இரும்புகாந்த்அவர்களே என்று வேண்டுமானாலும் அழைக்கலாம்! “

நல்லது, நல்லது. உன்னை நான் பிரதம மந்திரி என்று நியமிக்கிறேன். நீ எது சொன்னாலும் ஏற்கிறேன், என்னைக் காப்பாற்றுவதை முதலில் செய்!”

எந்திரம் விர்ரிட்டது, சிர்ரிட்டது, ஹம்மியது, ஹெம்மியது, பிறகு சொன்னது.

இது எளிய விஷயம். நாம் சந்திரனில் உள்ளதை விடச் சக்தி வாய்ந்த ஒரு எலெக்ட்ரோஸாரைக் கட்டுவோம். அது சந்திரனில் உள்ளதைத் தோற்கடித்து விடும், அதன் சர்க்யூட்களை ஒரு வழியாகச் சரி செய்து விடும்.”

கச்சிதம்!’ ராஜா பதில் சொன்னார். “உன்னால் இதுக்கு ஒரு வரைபடம் தயார் செய்ய முடியுமா?”

அது ஒரு அல்ட்ரா ட்ராகனாக இருக்கும்,” கணினி சொன்னது. “என்னால் ஒரு வரைபடம் மட்டுமில்லை, அந்த ட்ராகனையே உருவாக்க முடியும். அதை நான் இப்போதே செய்யப் போகிறேன். அதற்கு ஒரு நிமிடம் கூட ஆகாது, அரசே!” அது சொன்னதைப் போலவே, உஸ்ஸென்றது, ஜகஜக என்றது, சீட்டி அடித்தது, ரீங்கரித்தது, தன் ஆழத்தில் எதையோ தொகுத்து இணைத்தது, ஏற்கனவே பெரிய நகம் ஒன்று, மின்னியபடி, பொறி பறக்க, அதன் பக்கத்திலிருந்து உருவாகிக் கொண்டிருந்தது, அப்போது ராஜா கத்தினார்.

பழம் கணினி! நிறுத்து!”

இப்படித்தான் என்னை நீங்கள் அழைக்கப் போகிறீர்களா? நான் டிஜிடல் பிரதம மந்திரி!”

, ஆமாம்,” என்றார் ராஜா. “மாண்புமிகு இரும்புகாந்த் அவர்களே, நீங்கள் தயார் செய்யும் எலெக்ட்ரோட்ராகன் மற்ற ட்ராகனைத் தோற்கடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம், ஆனால் இது மற்றதன் இடத்தில்தான் இருக்கும், பிறகு இதை எப்படி நாம் ஒழித்துக் கட்டுவது?”

இதை விட இன்னொரு சக்தி வாய்ந்த ட்ராகனைக் கட்டுவோம்!” கணினி விளக்கியது.

கூடாது, கூடாது! அப்படியானா நீ எதுவுமே செய்யாதே. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன், மேல மேல மோசமான ட்ராகனா சந்திரன்ல கொண்டு வைக்கறதுல என்ன பிரயோசனம், நான் அங்கே ஒரு ட்ராகன் கூட இருக்கக் கூடாதுன்னுதானே நினைக்கிறேன்?”

ஆஹா, அது வேற விஷயமா இருக்கே,” கணினி பதிலளித்தது. “இதை நீங்க ஏன் முதல்லியே சொல்லல்லை? எப்படி சரியான தர்க்கமே இல்லாம நீங்க உங்க கருத்தைச் சொல்றீங்க, தெரியுதா? ஒரு நிமிஷம்நான் கொஞ்சம் யோசிக்கணும்.”

அது மறுபடியும் சிர்ரிட்டது, ஹம்மென்றது, சஃப்ஃபிட்டது, குலுங்கிச் சிரித்தது, இறுதியில் சொன்னது.

நாம் ஒரு எதிர்சந்திரனையும், எதிர் ட்ராகனையும் உருவாக்கி அவற்றை சந்திரனின் சுழல் பாதையில் வைத்து [அப்போது அதன் உள்ளே ஏதோ படக்கென்று கேட்டது.] நெருப்பைச் சுற்றி உட்காருவோம், பாடுவோம்: நான் ஒரு கோமாளி ரோபாட், என்னுள்ளே நிறைய குதூகலம், தண்ணீரைப் பார்த்தால் எனக்குப் பயமில்லை இப்போது, நான் நேரே உள்ளே குதிப்பேன், நான் சிரிப்பேன், ட்ரா லா நூறாண்டு வாழ்க!”

என்னவோ உளறரியே,” என்றார் ராஜா. “எதிர்சந்திரனுக்கும் கோமாளி ரோபாட்டுக்கும் என்ன சம்பந்தம்?”

என்ன கோமாளி ரோபாட்?” கேட்டது கணினி. “, இல்லை, இல்லை நான் ஒரு தப்பு செய்திருக்கிறேன், உள்ளே ஏதோ கோளாறா இருக்கு. நான் ஒரு ட்யூபை வெடிக்க விட்டிருக்கிறேன் போல இருக்கு.” ராஜா என்ன கோளாறு என்று பார்க்க ஆரம்பித்தார். ஒரு கருகிப் போன ட்யூபைக் கண்டு பிடித்தார், புதிதாக ஒன்றைப் பொருத்தினார், பிறகு கணினியை எதிர்சந்திரனைப் பற்றிக் கேட்டார்.

எதிர்சந்திரனா, அதென்னது?” என்று கேட்டது கணினி. இடையில் அதைப் பற்றித் தான் சொன்னதை அது மறந்து விட்டது. “எதிர்சந்திரனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதுஒரு நிமிஷம் இருங்க. நான் இதைப் பத்திக் கொஞ்சம் யோசிக்கணும்.”

அது ஹம்மென்றது, உஸ்ஸென்று பெருமூச்சு சப்தம் எழுப்பியது, பிறகு சொன்னது.

நாம் எலெக்ட்ரோட்ராகன்களைக் கொல்வதைப் பற்றி ஒரு பொது கோட்பாட்டை முதலில் உருவாக்குவோம். அதில் சந்திரனில் உள்ள ட்ராகன் ஒரு தனி உருப்படிதான். அதன் விடை ரொம்ப சாதாரணமானது.”

சரி, அப்படி ஒரு கோட்பாட்டை உருவாக்கேன்.” என்றார் ராஜா.

அதைச் செய்ய நான் முதலில் பல சோதனை ட்ராகன்களை உருவாக்கணும்.”

நிச்சயமா கூடாது! வேண்டாம், நன்றி நன்றி!” கூக்குரலிட்டார் ராஜா. “ஒரு ட்ராகனே என்னிடமிருந்து சிம்மாசனத்தைப் பிடுங்கப் பார்க்கிறது. நீ ஒரு கூட்டம் ட்ராகன்களை உருவாக்கினா என்ன ஆகுமுன்னு யோசி.”

? சரி அப்ப, நாம வேற வழிகளைத்தான் தேடணும். அடுத்தடுத்துக் கிட்டிமுட்டி வருபவை என்னும் வழிமுறையின் போர்த்தந்திர வகையைப் பயன்படுத்துவோம். போய் அந்த ட்ராகனுக்கு ஒரு டெலிக்ராம் கொடுங்க. அதுக்கு உங்களோட சிம்மாசனத்தைக் கொடுக்கத் தயார். ஆனா அதுக்கு முன்னால, அது மூன்று கணித வழிமுறைகளைச் செய்து காட்டணும், அதுவும் மிகவும் சுலபமானவைதான் அவை…’

ராஜா போய் டெலிக்ராம் அனுப்பினார். ட்ராகனும் ஒத்துக் கொண்டது. ராஜா கணினியிடம் திரும்பினார்.

இப்ப,” அது சொன்னது, “இதுதான் முதல் கணக்கு: அது கிட்ட அதை அதாலேயே வகுக்கச் சொல்லுங்க!”

ராஜா அதைச் செய்தார். எலெக்ட்ரோஸார் தன்னைத் தன்னாலேயே வகுத்தது, ஆனால் ஒரு எலெக்ட்ரோஸார் மீது இன்னொரு எலெக்ட்ரோஸார் என்று கணக்குப் போட்டால் விடை ஒரு எலெக்ட்ரோஸார்தானே, அதனால் அது சந்திரனில் எஞ்சியது, எதுவும் மாறவில்லை.

இதுதான் நீ கண்டு பிடிச்ச பிரமாத வழியா?” ராஜா கத்தினார். அவர் அந்த நிலவறைக்கு ஓடி வந்த வேகத்தில் அவர் காலணிகள் கூட கழன்று விழுந்திருந்தன. “அந்த ட்ராகன் தன்னைத் தானே வகுத்துக் கொண்டது, ஆனால் ஒண்ணில ஒண்ணு ஒரு தடவைதானே போகும், எதுவும் மாறல்லை!” 

அது சரிதான். நான் அதை வேணுமுன்னு செய்தேன், அந்தக் கணக்கு சும்மா கவனத்தைத் திசை திருப்பத்தான்,” என்றது கணினி. “இப்ப அதுகிட்ட தன்னோட வேரைக் கண்டுபிடிக்கச் சொல்லுங்க (extract its root)!” ராஜா சந்திரனுக்கு டெலிக்ராஃப் செய்தார். ட்ராகனும் இழுத்தது, தள்ளியது, இழுத்தது, தள்ளியது, முயற்சியின் கடுமை தாங்காமல் பொறி பறந்தது, பெருமூச்சு விட்டது, உடல் முழுதும் நடுங்கியது, ஆனால் திடீரென்று ஏதோ விடுபட்டதுஅது தன்னுடைய வேரை உருவி விட்டது!

ராஜா கணினியிடம் திரும்பப் போனார்.

அந்த ட்ராகன் பொறி பறந்தது, நடுங்கியது, பல்லைக் கூட அரைத்தது, ஆனால் இறுதியில் வேரை உருவி விட்டது, இன்னும் என்னைப் பயமுறுத்துகிறது!” அவர் வாயிலருகே இருந்து இரைந்தார். “இப்ப என்ன என் பழையநான் சொல்ல வந்தது, மாண்பு மிகு இரும்புகாந்த் அவர்களே!”

உறுதியான நெஞ்சம் கொண்டவரா இருங்க,” அது சொன்னது. “இப்ப அது கிட்ட தன்னைத் தன்னிலிருந்தே கழிக்கச் சொல்லுங்க!”

ராஜா தன் படுக்கை அறைக்கு விரைவாகச் சென்றார், டெலிக்ராமை அனுப்பினார், ட்ராகனும் தன்னிலிருந்து தன்னைக் கழிக்க ஆரம்பித்தது, முதலில் வாலை எடுத்தது, பிறகு கால்களை, பிறகு உடலை, இறுதியாக அதற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது, அது தயங்கியது, ஆனால் அதன் செயல் வேகத்தால் நிற்காமல் கழித்தல் வேலை தொடர்ந்தது, அது தன் தலையை எடுத்து விட்டது, ஜீரோவாக ஆகி விட்டது. அதாவது ஒன்றுமில்லாமல் போனது: எலெக்ட்ரோஸார் இனிமேல் இல்லை!

அந்த எலெக்ட்ரோஸார் ஒழிந்தது,” மிக சந்தோஷமாகி விட்ட ராஜா நிலவறைக்குள் பாய்ந்து வந்து கத்தினார்.  நன்றி பழைய கணினியேபலப் பல நன்றிகள்நீ ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்திருக்கிறாய். நீ ஓய்வெடுப்பது நல்லது, அதனால் உன்னை நான் டிஸ்கனெக்ட் செய்யப் போகிறேன்.”

, அத்தனை வேகமா ஏதும் செய்யாதீங்க அன்பானவரே!” கணினி பதிலளித்தது. “நான் கொடுத்த வேலையைச் செய்து முடிக்கிறேன், நீங்க பாட்ல என்னை டிஸ்கனெக்ட் செய்யப் போகறீங்களா, அதுவும் நீங்க இப்ப என்னை மாண்புமிகு இரும்புகாந்துன்னு கூப்பிடப் போறதில்லையா? அது கொஞ்சம் கூட நல்லாயில்லே, நல்லாவே இல்லை! இப்ப நானே என்னை ஒரு எலெக்ட்ரோஸாராக மாத்திக்கப் போறேன், ஆமா, உங்களை இந்த ராஜ்யத்திலேருந்து துரத்தப் போகிறேன், நிச்சயமா உங்களை விட நான் மேலாகவே ஆட்சி செய்வேன், ஏன்னு கேட்டா நீங்க எல்லா முக்கியமான விஷயத்துக்கும் என்னைத்தான் எப்போதும் கலந்தாலோசித்தீங்க, அதனால உண்மையாப் பார்த்தா நான் தான் இத்தனை காலமா ஆட்சி செய்திருக்கேன், நீங்க இல்லே….”

உஸ்ஸென்றது, புஸ்ஸென்றது, அது ஒரு எலெக்ட்ரோஸாராக மாற ஆரம்பித்தது, எரிகிற நகங்கள் ஏற்கனவே அதன் பக்கங்களிலிருந்து நீட்டத் தொடங்கின, அப்போது ராஜா, பயத்தால் மூச்சு கூட விட முடியாமல், தன் கால்களிலிருந்த காலணிகளைக் கழற்றினார், அதன் அருகே ஓடினார், காலணிகளால் குருட்டுத்தனமாக அதன் ட்யூப்களில் அடிக்க ஆரம்பித்தார். கணினி சக்சக்கென்றது, திணறியது, அதன் செயல்முறைகளில் குழம்பியதுஎலெக்ட்ரோஸார் என்ற வார்த்தையை அது எலெக்ட்ரோஸாஸ் என்று புரிந்து கொண்டது, ராஜாவின் கண்கள் முன்பாகவே அந்தக் கணினி மேன்மேலும் மென்மையாக இழுத்து மூச்சு விட்டது போல இருந்தது, ஒரு பெரிய, மின்னுகிற தங்க நிற எலெக்ட்ரோஸாஸ் குவியலாக ஆகி விட்டது. அது இன்னும் கொதித்துக் கொண்டிருந்தது, அதன் மின்சாரச் சேமிப்பை எல்லாம் நீல நிற தெறிப்புகளாக வெளியிட்டது, போலாண்டரை வாயடைத்துப் போன நிலையில் ஆழ்த்தியது. அவர் கடைசியாகப் பார்த்தபோது ஆவி பறக்கும் ஒரு சாம்பல் நிறத்துச் சிறு குட்டைதான் எஞ்சியிருந்தது.

பெருமூச்சோடு ராஜா தன் காலணிகளை அணிந்து கொண்டார், தன் படுக்கை அறைகளுக்குத் திரும்பிப் போனார். ஆனால் அந்த நாளிலிருந்து அவர் முற்றிலும் வேறுபட்ட ராஜாவாக இருந்தார், அங்கு நடந்த சம்பவங்கள் எப்போதும் சண்டைக்குப் போக விரும்பும் நபராக இல்லாமல் அவரை மட்டுப்படுத்தின, தன் இறுதி நாட்கள் வரை அவர் குடிமுறைக்கான ஸைபர்னெடிக்ஸில்தான் ஈடுபட்டார், ராணுவ வகைக்கு கிட்டேயே போகவில்லை.

(போலிஷ் மூலக்கதையை இங்கிலிஷுக்கு மாற்றி மொழியாக்கம் செய்தவர் மைக்கெல் கேண்டல். இந்த இங்கிலிஷ் வடிவிலிருந்து தமிழாக்கம் செய்தவர்: மைத்ரேயன்)

~oOo~

குறிப்பு:

ஸ்டானிஸ்லா லெம் (1921-2006)  போலந்து நாட்டு எழுத்தாளர். புகழ் பெற்ற அறிவியல் கதையாளரான ஆர்தர் ஸி. க்ளார்க் இவரைப் பற்றிச் சொல்கையில் இன்றைய எழுத்தாளர்களில் கடந்த காலத்துப் பெரும் எழுத்தாளர்களுக்கு இணையாக எழுதுபவர் என்கிறார். அது அடக்கி வாசிக்கப்பட்ட புகழுரை என்று நாம் சொல்லலாம்.
போலந்து இலக்கியத்தில் அறிவியல் நவீனங்களுக்கு முன்னோடி இல்லாத காலத்தில் துவங்கிய லெம் அத்துறையில் உலகளவில் கூட முக்கியஸ்தராக எழுந்திருப்பவர். கிழக்கு யூரோப், மேலும் மேலை யூரோப் ஆகிய பகுதிகளின் இலக்கியங்களில் நல்ல பரிச்சயம் உள்ள லெம், தானே ஒரு மரபு எனும் வகையில் தனித்தன்மை கொண்ட இலக்கியத்தைப் படைத்தவர்.
அவருடைய முக்கியமான ஒரு படைப்பு  ‘ஸும்ம டெக்னாலஜியே’ என்ற 1964 ஆம் வருடத்து, புனைவல்லாத கட்டுரைத் தொகுப்பு 2014 இல்தான் இங்கிலிஷில் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரமாகியது. ஆர்தர் ஸி. க்ளார்க் தன் குறிப்பில் இவர் போலிஷ் மொழியிலிருந்து இங்கிலிஷுக்கு மொழிபெயர்க்கப்படுவதில் உள்ள சிரமங்களை மீறி உலகப் புகழ் பெற்றிருக்கிறார் என்று குறிப்பிடுவது உண்மைதான். இவருடைய பல புத்தகங்கள்/ நாவல்கள் திரைப்படங்களாகவும் வெளி வந்துள்ளன.  ‘ஸோலாரிஸ்’ (1972) என்ற ரஷ்யத் திரைப்படம், சிறந்த இயக்குநர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவரான ஆண்ட்ரேய் டார்கோவ்ஸ்கியின் ஒரு படைப்பு. அது ஸ்டானிஸ்லா லெம்மின் கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது, ஆனால் லெம் அதன் கதை மாற்றங்களை ரசிக்கவில்லை.
இவர் ஒரு மருத்துவர், அறிவியலாளர், பல துறை வல்லுநர். 1951 இல் இவரது முதல் படைப்பு பிரசுரமாயிற்று. அமெரிக்க அறிவியல் நவீனங்கள் மீது இவருக்கு இகழ்வுணர்வு உண்டு, அவற்றைக் குறை சொல்லிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கிழக்கு யூரோப்பியப் படைப்புகளுக்கே உரித்தான ஆழ்ந்த அறிவு சார் சிந்தனை கொண்ட படைப்புகள் இவருடையவை. இவரது நாவல்கள் அப்படிக் கனமானவையாக இருந்தாலும், இவரது சிறுகதைகள் நகைச்சுவை கலந்து இலேசான மொழியில் நம்மை உடனடியாகத் தொடும் வகையில் அமைந்துள்ளன. அவற்றின் அடிநாதமாகத்தான் அக்கதைகளின் நிஜக் கருத்து கொடுக்கப்படும் என்பதால் நம்மை அறியாமலே நாம் லெம்மின் கருத்தைப் பெறுகிறோம் இந்த வகைக் கதைகளில். அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று இங்கு மொழி பெயர்க்கப்பட்ட கதை. இது மேலோட்டமாகப் பார்த்தால் சிறுவர் கதை ஒன்றைப் போலவோ, நீதிக்கதை போலவோ தெரியும்.
இதை மொழி பெயர்த்த மைக்கெல் கேண்டல் அவரளவில் சாதனையாளர். இவர் ஒரு அமெரிக்கர். ஸ்லாவிக் மொழிகளில் முனைவர் பட்டதாரியான இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக அருமையான மொழி பெயர்ப்புகளைக் கொடுத்து வருகிறார். ஸ்டானிஸ்லா லெம்மின் கதைகளை மொழி பெயர்ப்பது எளிதே அல்ல. அவர் மொழிப் பயன்பாட்டில் சொற்சிலம்பங்கள் செய்வதில் மிகத் திறமைசாலி என்பதால் மொழிபெயர்ப்பு கடினமாகிறது. இவர் பற்றிய சில தகவல்களை இங்கே பெறலாம். (https://en.wikipedia.org/wiki/Michael_Kandel )
இக்கதையின் இங்கிலிஷ் மூலம்: ஸ்டானிஸ்லா லெம்மின் ‘Mortal Engines’ எனப்பட்ட கதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட, ‘Tale of the Computer That Fought a Dragon’ என்ற கதை. மைக்கெல் கேண்டலின் இந்த இங்கிலிஷ் மொழிபெயர்ப்பை நான் பெற்றது, ‘த வோர்ல்ட் ட்ரெஷரி ஆஃப் ஸைன்ஸ் ஃபிக்‌ஷன்’ என்ற தொகுப்பில். பதிப்பாசிரியர்: டேவிட் ஜி. ஹார்ட்வெல். பிரசுரகர்கள்: லிட்டில், ப்ரௌன் அண்ட் கம்பெனி. (1989 )
லெம்மின் இன்னொரு கதையை இந்த இதழில் பார்க்கலாம்.

 

One Reply to “ஒரு ட்ராகனோடு போரிட்ட கணினியின் கதை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.