என் தம்பி சதா பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று வீட்டில் இருந்து ஓடிய பிறகு அவன் ஒரு ஹீரோவாக ஆனான். சிறுவயதில் கடைசி பென்ச் நண்பர்களின் சகவாசத்தில் படிக்காமல் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் திரிந்து வந்தான் அவன். “அவிழ்த்து விட்ட கழுதை” “உதவாக்கறை” என்றேல்லாம் பட்டப் பெயர்கள் தாங்கி உலவினான். ஒருநாள் அவன் வீட்டிலிருந்து விலகி எங்கோ சென்று விட்டான். அவன் காணாமல் போனதும் வீட்டில் எல்லோரும் கவலைப்பட்டனர். ஊரெங்கும் அவனைத் தேடி நானும் என் தந்தையாரும் அலைந்தோம். தெரிந்த நண்பர்கள் எல்லோரிடமும் விசாரித்தோம். “பையனைக் கரித்து கொட்டியே வீட்டை விட்டு துரத்தியடிச்சுட்டீங்களே!” என்று அம்மா அப்பாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.