பரிசு

“With tremendous force, Ganga emerged from Lord Shiva’s locks and along with it came several species of fish, animals and the Shishumaar … the dolphin …”
– Valmiki

john_dickson_drowning_house_sunken_1693_79

வீடுகள் காணாமல் போவது போன்ற கனவு பெங்கு சிங்குக்கு அடிக்கடி வருகிறது. இன்றும் வந்தது. அக்கனவு தோன்றும்போதெல்லாம் அதிகம் வியர்க்கிறது. பயவுணர்வு தொற்றிக் கொள்கிறது. விழித்தவுடன் “அப்பாடா கனவுதான்” என்ற நிம்மதி.

மனைவி பங்கஜா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். காற்றடைத்த பையில் லேசான ஓட்டை விழுந்து காற்று சிறு துளையின் வழி வெளி வருகையில் உருவாகும் மெலிதான சத்தம் போல அவள் குறட்டை. பெங்கு சிங் பங்கஜாவின் குறட்டைச் சத்தத்தில் தன் கவனத்தைச் செலுத்தி வீடுகள் தொலைந்து போகும் கனவை மறக்க முயன்றார் – உறக்கத்தைத் தொடர முடியவில்லை. கட்டிலில் இருந்து இறங்கினார், கம்பளிப் போர்வையை போர்த்திக் கொண்டு மாளிகை வாசலில் இருந்த சாய்வு நாற்காலிக்கு வந்தமர்ந்து கொண்டார். எதிரே கியுல் நதி நீர் நிரம்பி மேல் கரையோரத்தில் கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகளை முழுதும் மூடிவிட்டிருந்தது. யாரோ சிறு படகில் துடுப்பு போடும் சத்தம் போல் ஒரு ஓசை விடிகாலை நிசப்தத்தில் தெளிவாகக் கேட்டது. சுசுக்கள் மூச்சுவிட நீர் மட்டத்துக்கு வந்து குதித்தெழும்பும் சத்தமாக இருக்கலாம்.

கங்கு சிங் என்று உள்ளுர் மக்களால் அழைக்கப்பட்ட அவருடைய தந்தையாரின் நினைவு வந்தது. லகிசராய்க்கு அண்மையில் இருந்த கச்சுவா மலையடிவாரத்தில் அடர்த்தியான காட்டுப் பகுதி – ஒரு முறை பன்றி வேட்டைக்கு அங்கு தந்தையுடன் சென்றபோது மிருகங்களுக்கு இழைக்கப்படும் வதையை காணுகையில் பெங்கு சிங் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் வாந்தி எடுத்தார். “பெங்கு, மென்மையாக இருந்தால் உனக்கு பலம் இல்லை என்று நினைத்துக் கொள்வார்கள். பயவுணர்வை விடுத்து ஆண்மகனாக வளைய வா. அப்போதுதான் அடுத்தவர்கள் உன்னைப் பார்த்து பயப்படுவார்கள்” என்றார் அப்பா. அப்பா முன் எதிர்வார்த்தை இல்லை. கங்கு சிங் பேச்சுக்கு லகிசராய் பிராந்தியத்தில் என்றுமே எதிர்பேச்சு இருந்ததில்லை.

பாட்னாவில் இருந்து கமிஷனர் வில்லியம் டெய்லர் துரை ஒவ்வொரு முறை லகிசராய் வரும்போதும் கங்கு சிங்குடன் வேட்டைக்குப் போவது வழக்கம். இருவருக்குமிடையே இருந்த வேட்டை ஆர்வம் ஆழமான நட்பை ஏற்படுத்தியிருந்தது. தேர்ந்த ஒவியராகவும் இருந்த டெய்லர் துரை வரைந்த கங்கு சிங்கின் உருவப்படம் வரவேற்பறையை இன்னும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. டெய்லர் துரையின் முயற்சியால் முங்கேர் நகரின் கமிஷனரின் கீழ் இருந்த லகிசராய் மற்றும் சுற்றியிருக்கும் இருபத்தி ஐந்து கிராமங்களில் வரி வசூலிக்கும் உரிமை கங்கு சிங்கின் குடும்பத்திற்கு கிடைத்தது.

வாசலில் குதிரை வண்டியொன்று வந்து நின்று பெங்கு சிங்கின் நினைவோட்டத்தைத் தடுத்து நிறுத்தியது. பெங்கு சாய்வு நாற்காலியில் இருந்தபடியே “யார்” என்று சத்தம் போட்டார். “நான்தான் அண்ணா. அர்ஜுன் சிங் வந்திருக்கிறேன்” என்றபடி ஒர் உருவம் அவர் அருகே வந்தது. “வா…வா” என்றார் பெங்கு சிங். அர்ஜுனை பாசத்துடன் அணைத்து வரவேற்றார் அவர். அர்ஜுன் பெங்குவின் பாதங்களை தன் கைகளால் தொட்டான்.

அர்ஜுன் பெங்குவின் சித்தப்பா மகன். அப்பாவிற்கும் பாட்னா கமிஷனருக்கும் இருந்த நட்பை பயன்படுத்தி சித்தப்பா பல வருடங்களுக்கு முன்னர் ஈஸ்ட் இண்டியன் ரயில்வே நிறுவனத்தின் முக்கியமான ஒப்பந்ததாரர் ஆகியிருந்தார். ஹௌராவையும் பாட்னாவையும் இணைக்கும் ரயில் பாதை கட்டும் பணியில் பெங்குவின் சித்தப்பா நிறுவனத்துக்கு பல லாபகர ஒப்பந்தங்கள் கிட்டியிருந்தன. சித்தப்பாவின் குடும்பம் கல்கத்தாவில் வசித்தது. இரண்டு மாதங்கள் முன்னர்தான் இருப்புப்பாதை முங்கேர் வரை எட்டியிருந்தது. அர்ஜூன் முங்கேரில் தங்கியிருந்து அவர்கள் நிறுவனத்தில் அலுவல்களை கவனித்து வந்தான்.

”என்னப்பா நீ வருவேன்னு சொல்லவேயில்லையே”

“இல்லண்ணா…திடீர்ன்னு பயணப்பட வேண்டியதாயிற்று… ரயில் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ரௌலண்ட் கொஞ்ச நாளாவே லகிசராய் கியுல் நதி சுசு மாமிசம் சாப்பிடக் கேட்டுக் கொண்டிருக்கிறார். எனவே அப்பா என்னை லகிசராய் சென்று வருமாறு கூறினார். பல்லு எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவான்? அவன் தானே சுசு-வை பிடிக்கறதுல கில்லாடி!”

பல்லு பெங்கு வீட்டில் பல வருடங்களாக வேலை செய்பவன். வீட்டில் பல பேர் வேலை செய்தாலும், எல்லா முக்கிய வேலைகளுக்கும் நம்பிக்கை வாய்ந்தவன் பல்லு. தோட்ட வேலை, சில்லறை வேலைகள், குதிரை வண்டி ஓட்டுதல் எல்லாவற்றிலும் கில்லாடி.

“இரண்டு நாளைக்கு தனௌரி போயிருக்கிறான். மதியம்தான் வருவான்..அதோட இப்போ மழைக்காலம் இல்லையே…சுசு-வை பிடிக்கிறது அப்படியொன்றும் சுலபமாயிராது” என்று பெங்கு அர்ஜுனிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது மூன்று வெண்ணிற சுசுக்கள் கியுல் நதியின் மேல் மட்டத்தில் குதித்தன. சுசு என்ற சத்தத்தோடு அவை மூச்சு விடும் சத்தம் மெலிதாக கேட்டது.

பல்லு வராமல் இருந்தால் தேவலை என்ற எண்ணம் பெங்குவுக்குள் ஓடியது. பெங்குவின் அப்பா கங்கு மற்றும் சித்தப்பா..இப்போது சித்தப்பா மகன்… இவர்களுக்கெல்லாம் லகிசராயை ஒட்டி ஓடும் கியுல் நதி சுசுவின் மாமிசம் தருவதைத் தவிர வேறெந்த அன்பளிப்பும் ஏன் ஞாபகத்துக்கு வருவதில்லை? பெங்குவின் தந்தையார் கூட டெய்லர் துரைக்கு பல முறை சுசு மாமிசம் அனுப்பி வைத்திருக்கிறார். இத்தனைக்கும் நிலப்பிரபுக்களாகிவிட்ட பின்னும் சைவ உணவு மட்டும் சாப்பிடும் பாரம்பரியத்தை காத்துக் கொண்டிருக்கும் குடும்பம்!

சொன்னபடி பல்லு அன்று மதியமே தனௌரியிலிருந்து திரும்பி வந்தான்; பெங்குவிற்கு அது ஏமாற்றமாக இருந்தது.

+++++

மீன்வலையில் சிக்கியிருந்த சுசு என்று அழைக்கப்படும் இந்திய ஆற்று குருட்டு டால்ஃபினை பல்லு பிடித்து வந்தான். மாமிசம் வெட்டும் மாஜீத் அன்று ஊரில் இல்லை. அடுத்த நாள்தான் வருவான் என்று தெரிந்தது. எனவே, அர்ஜுனின் யோசனைப்படி பிடிபட்ட கருநிற சுசுவை பெங்குவின் மாளிகையின் கொல்லைப்புறத்தில் உள்ள குளத்தில் போட்டான். அடுத்த நாள் காலை கியுல் நதி மீனவர் இருவரைக் கொண்டு சுசுவை குளத்தில் இருந்து எடுக்கத் திட்டம்.

லகிசராய் வரும்போதெல்லாம் அர்ஜுன் நேரம் வீணடிக்காமல் நடனக்காரி லதாங்கியை சந்திக்கச் செல்வது வாடிக்கை. பின்மதியப்பொழுதில் நடனக்காரி வசிக்கும் வீதியில் விட்டுவர அர்ஜுனை குதிரை வண்டியில் ஏற்றி பல்லு ஓட்டிச்சென்றான்.

பெங்கு அன்றைய அலுவல்களை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பின்புறம் ஒரு பசுவின் மரண ஓலம் கேட்டது. கொல்லைப்புறத்தில் குளத்தின் விளிம்பில் நின்று நீரருந்திக் கொண்டிருந்த பசு மாட்டின் முன்னங்காலொன்றை இறுக்கி பல்லால் கடித்துக் கொண்டிருந்தது சுசு.

“எவண்டா…பசுவை லாயத்தில் இருந்து திறந்து விட்டவன்?” என்று கோபத்துடன் சத்தம் போட்டார் பெங்கு சிங். லாயத்தைக் கண்காணிக்கும் வேலைக்காரர்களும் வீட்டின் பிற வேலைக்காரர்களும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள். யாருக்கும் குளத்தில் குதித்து சுசுவுடன் போராடும் தைரியம் இல்லை. “பல்லுவைக் காணோமே?” என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

யாருமே எதிர்பாராதவாறு, பெங்கு சிங்கே குளத்தில் குதித்தார். டால்ஃபினின் பின்புறத்தை பிடித்திழுக்க முயன்றார். ஒரே வழுக்கல். பிடி கிட்டவில்லை. டால்ஃபின் தன் உடலை அசைத்துக் கொண்டே இருந்தது, ஆனாலும் பசுவை விடவில்லை. பசுவின் அலறல் லகிசராய் முழுதும் கேட்டிருக்கும். ஒரு வேலைக்காரன் கத்தியை நீட்டினான். அதை வாங்கிக் கொள்ள பெங்குசிங் மறுத்து விட்டார். இன்னொருவன் ஒரு தடியை நீட்டினான். அதை வைத்து டால்ஃபினின் பின்புறத்தில் அடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து அடிவிழவும் எரிச்சலுற்ற சுசு பசுவின் காலை விடுத்து பெங்கு பக்கம் திரும்பியது. அடுத்த சில நிமிடங்கள் ஆக்ரோஷமான போராட்டம் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட பெங்குவின் காலை அது கடித்து விட்டது. ஆனால், அதன் வாயில் பெங்குவின் வேட்டிதான் சிக்கியது. தடியைக் கொண்டு அடித்தும் முக்கால் அடி நீளமுள்ள நீண்ட மூக்கைத் தன் வேட்டியால் சுற்றி இறுக்கியும் சுசுவை பெங்கு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.. அதுவரை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்த வேலைக்காரர்களில் இருவர் இப்போது குளத்தில் குதித்தனர். அவர்களும் கை கொடுக்க சுசுவை குளத்தில் இருந்து தூக்கி தரையில் போட்டனர்.

அந்த ஃடால்பின் எட்டடி நீளம் இருந்தது. இரு பக்கங்களில் கிட்டத்தட்ட அரையடி அகலத்துக்கு அதன் ஃப்லிப்பர்கள் இருந்தன. உடலின் மேல்பாகத்தில் இருந்த சிறு திறப்பு வழி சுசு மூச்சு விட்டது. அது துடித்துக் கொண்டிருந்தது. அதன் அவஸ்தையை காண முடியாமல், “தூக்குங்கடா…. இந்த சுசுவை கியுல் நதியில் சேர்த்து விட்டு வரலாம்” என்று ஆணையிட்டார் பெங்கு. அவரும் மேலும் இரு வேலைக்காரர்களும் சுசுவை தூக்குப்போய் கியுல் நதியில் போட்டார்கள்.

பசுவின் கால்களில் கட்டுபோட்டு மாட்டு வைத்தியர் வைத்தியம் செய்து கொண்டிருந்தபோது, தலையை சொறிந்து கொண்டே லாயக் கண்காணிப்பாளன் கேட்டான் : “எஜமான்…அர்ஜுன் எஜமான் வந்து கேட்டா என்ன சொல்றது?”

“உங்க அர்ஜுன் எஜமான் எங்கே போயிருக்காரு?”

“ஹ்ம்ம் லதாங்கி வீட்டுக்கு…..” என்று இழுத்தான்.

சித்தப்பாவிற்கு அவரைப் போலவே ஒரு மகன் என்று பெங்கு சிங் நினைத்துக் கொண்டார்.

“அப்போ ராத்திரி திரும்ப மாட்டான்…நாளைக்கு வந்தா என் பேரைச் சொல்லுங்க….ஹ்ம்ம்ம் நாளைக்கு எனக்கு பாட்னா போகணும்…வர ஒரு வாரமாகும். பல்லு வந்தவுடன் நாளைக்காலை தயாராக இருக்கணும்னு சொல்லுங்க” என்றார் பெங்கு.

மீண்டும் நதியில் சேர்க்கப்பட்ட டால்ஃபின் கண்ணில் எங்காவது தென்படுகிறதா என்று வாசற்புறம் வந்து நதியை உற்று நோக்கிக் கொண்டிருந்தார் பெங்கு சிங்.

+++++

float

அடுத்த நாள் விடிகாலை பல்லுவை அழைத்துக்கொண்டு பாட்னா கிளம்பினார் அவர். அவருக்கு பாட்னாவில் அலுவல் எதுவும் இருக்கவில்லை. பல்லு இருந்தால் அர்ஜுன் கண்டிப்பாக மீண்டும் வேறொரு சுசுவைப் பிடித்துத் தருமாறு ஆணையிடுவான். பல்லுவை விட்டால் வேறு வேலைக்காரர்களுக்கு சாமர்த்தியமோ திறமையோ கிடையாது.

“என்ன எஜமான், கலெக்டருக்கு நாம போனவாரமே கணக்குகளை அனுப்பிவைத்து விட்டோமே? இப்ப எதுக்கு பாட்னா போறீங்க” என்று குதிரையை ஓட்டிக் கொண்டே பல்லு கேட்டான்.

“இல்ல…கலெக்டர் துரைகிட்ட வேறொரு வேலை இருக்கிறது” என்று பல்லுவிடம் பொய் சொன்னார்.

பாட்னா நகரத்திலும் தானாபூர் கண்டோன்மெண்டிலும் நடந்த சுதந்திரப் போருக்குப் பிறகு ஈஸ்ட் இண்டியா கம்பெனியின் கையிலிருந்து அதிகாரம் கைமாறி இங்கிலாந்து அரசின் நேரடி ஆட்சியின்கீழ் வந்திருந்தது. ஆட்சியமைப்பில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. கமிஷனரின் கீழ் பாதுகாப்பு துறை மட்டும் கொடுக்கப்பட்டது. வரி நிர்வாகத்தைக் கண்காணிக்க கலெக்டர் என்ற புது பதவி உருவாக்கப்பட்டது.

சிப்பாய் கலகம் என்று சொல்லப்பட்ட முதல் இந்திய சுதந்திரப்போர் மீரட்டில் தொடங்கி தீ போல லக்னோ, தில்லி, கான்பூர், ஜான்சி, பாட்னா என்று எல்லா இடத்திலும் பரவியது. பீர் அலி கான் என்ற புத்தகக் கடைக்காரரின் தலைமையில் பாட்னாவில் எழுந்த புரட்சிப்போர் ஆங்கிலேயர்களுக்கு பெரும் உயிர்சேதத்தை விளைவித்தது. புரட்சியை அடக்க சரியான முறைகளை ஆட்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டில் டெய்லர் துரை 1859 இல் தன் பதவியை இழந்தார்.

பீர் அலி கானை நினைத்துப் பார்க்கையில் பெங்குவிற்கு மயிர் கூச்செறிந்தது. இரண்டு முறை அவர் பீர் அலியை அவருடைய புத்தகக் கடையில் சந்தித்திருக்கிறார். இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்த ஆறாவது நாள் புரட்சி தொடங்கியது. பீர் அலியை ஆங்கிலேயர்கள் கைது செய்தபிறகு அவனுடைய வலது கரமாக திகழ்ந்த இன்னொரு புரட்சிக்காரன் அகமது தலைமறைவானான். அப்போது அவனுக்கு ஒரு மறைவிடத்தை தயார் செய்து பெங்கு சிங் உதவினார். லகிசராயிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பொக்ராமா என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் அகமதை மறைவாக தங்க வைத்தார். பெங்கு சிங்கின் தோட்டமொன்றில் வேலை செய்த பாண்டே என்ற வேலைக்காரனின் உறவுக்காரர் வீடு அது. பாண்டே இதைப் பற்றி யாரிடமோ பெருமை அடித்துக் கொள்ள, கங்கு சிங்கின் காதுக்கு பேச்சு எட்டியது. அகமதை பிரிட்டிஷ் காரர்களுக்கு கங்கு சிங் காட்டிக் கொடுத்து விட்டார். பெங்குவிடம் இதைப் பற்றி எதுவும் பேசவுமில்லை ; கேட்கவுமில்லை. அது நடந்த அடுத்த நாள் பெங்கு சிங் பல்லுவைக் கூட்டிக்கொண்டு பாட்னா வந்து ஓரிரு மாதங்கள் தங்கியிருந்தார். இரண்டு முறை வீட்டிலிருந்து ஆட்கள் வந்து அழைத்தபோதும் லகிசராய் திரும்ப மறுத்துவிட்டார். தன் தந்தைக்கு மூளைக்காய்ச்சல் வந்து விட்டது என்ற செய்தி ஒரு நாள் பெங்குவுக்கு கிடைத்தது. அன்றுதான் லகிசராய் திரும்பி வந்தார்.

பாட்னாவில் வழக்கமாக தங்கும் அன்னபூர்ணா சத்திரத்தில் தங்கினார். முதல் நாள் எங்கும் செல்லாமல் சத்திரத்திலேயே இருந்தார். கலெக்டர் துரையை மரியாதை நிமித்தம் இரண்டாவது நாள் சென்று பார்த்தபோது, “பெங்கு சிங், உனக்கு மல்யுத்தத்தில் ஈடுபாடு உண்டே! இன்று மாலை இங்கிலாந்தின் முதல் எண் மல்யுத்தவீரன் ஜேம்ஸின் குஸ்தி தானாபூரில் நடைபெறப் போகிறது. நீயும் வாயேன்” என்று அழைத்தார்.

வேறு வேலை எதுவும் இல்லை என்பதால் சென்று பார்க்கலாமே என்று தோன்றியது. குஸ்தி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ஏன்தான் வந்தோம் என்றிருந்தது அவருக்கு. ஆஜானுபாகுவான பல உள்நாட்டு மல்யுத்த வீரர்கள் மேஜர் ஜேம்ஸின் முன்னால் மண்ணைக் கவ்விக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குஸ்திக்குப் பிறகும் ஜேம்ஸ் “ஹாஹா…இந்தியாவில் எல்லோரும் மிக நன்றாக குஸ்தி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்….ஆனால் அது பொய் என்று இன்று எனக்கு புரிகிறது. எல்லோரும் சொங்கி போல ஒரு நுட்பமும் இல்லாமல் சண்டை செய்கிறார்கள்” என்று கொக்கரித்தான்.

ஒரு சமயத்தில் ”என்னைத் தோற்கடிப்பவர்கள் யாரேனும் இங்கு இருக்கிறார்களா?” என்று கர்வத்துடன் அறைகூவலிட்டான். கலெக்டர் நகைச்சுவைக்காக “எங்கள் லகிசராய் ஜமீன்தார் பெங்கு சிங்கும் நன்றாக குஸ்தி செய்வார். ஒரு முறை முங்கேர் அரண்மனையில் நடந்த போட்டியில் அவர் பல ஆங்கில கிழட்டு மல்யுத்த வீரர்களை முறியடித்திருக்கிறார்” என்று சொன்னார். இதைக் கேட்டு தன் இருக்கையில் இருந்து பெங்கு எழுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

“அதற்கென்ன மேஜர் ஜேம்ஸிடம் மோதிவிட்டால் போயிற்று” என்றார் பெங்கு சிங்.

“என்ன மிஸ்டர் பெங்கு சிங் உனக்கு என்ன எலும்பு முறிய ஆசையா?” என்றான் ஜேம்ஸ்

“யாருடைய எலும்பு முறிகிறது என்று பார்க்க எனக்கு ஆசைதான்…ஆனால் பாழாய்ப்போன என் விரதம்தான் என்னை தடுக்கிறது”

“என்ன விரதம்?” – என்று வினவினார் கலெக்டர்

“ஆம், பரிசில்லாமல் எந்த மல்யுத்தப் போட்டியிலும் பங்கு கொள்வதில்லை என்று விரதம். முன்னர் முங்கேரில் நடந்த போட்டியில்கூட நான் வென்றால் லகிசராய்யில் வருவதாக இருந்த காவல் நிலையம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையிலேயே நான் போட்டியில் குதித்தேன். ஒரு வீரன் இல்லை ஆறு இளம் மல்யுத்த வீரர்களை மூர்ச்சையடையச் செய்தேன்” என்று சொல்லி அமைதியாகப் புன்னகைத்தார் பெங்கு சிங்.

அரசல்புரசலாக முணுமுணுக்கும் குரல்கள் எழுந்தன. மேஜர் ஜேம்ஸ் கலெக்டர் துரையிடம் வந்து ஏதோ பேசினான். கலெக்டர் அவன் பேச்சை கேட்டு பிறகு ஏதோ பதில் சொன்னார். பின்னர் பெங்கு சிங்கிற்கு பதிலளித்தார்.

“பெங்கு சிங், ஆங்கில அரசாங்கத்திற்கு நிதியிழப்பு இல்லாமல், பொருளிழப்பில்லாமல் இடப்படும் நிபந்தனையை மட்டுமே இம்மன்றம் ஏற்கும்…. பொழுதுபோக்கிற்காக நிகழும் இப்போட்டிகேற்ற பளுவற்றதொரு நிபந்தனையையே நீ இடுவாய் என நம்புகிறேன்” என்றார் கலெக்டர்.

“நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் கலெக்டர் துரை. நான் கேட்பது பிரிட்டிஷ் ராஜ்-க்கு எந்த நிதியிழப்பையும் பொருளிழப்பையும் ஏற்படுத்தாது என்று உறுதி கூறுகிறேன். எனக்கு வேண்டுவதை மேஜர் ஜேம்ஸுடன் மோதிய பிறகு சொல்கிறேன்”

“அது எப்படி நியாயம்?” – கலெக்டர்

“நான் கேட்கும் பரிசு கொடுப்பதற்கு கடினமாக இருக்கும்பட்சத்தில் மேஜருடன் மோதுவதை நான் தவிர்ப்பதற்காகவே அப்பரிசை கேட்கிறேன் என்று யாரும் எண்ணிவிடக் கூடாதில்லையா?” என்று கேட்டபடி பெங்கு சிங் தன் தலைப்பாகையை கழற்றத் துவங்கினார். பின்னர் தன் வேட்டியை மேலே தூக்கி பின்புறமாக சொருகி மல்யுத்தத்துக்கு தயாரானார்.

எந்த முடிவெடுப்பது என்ற குழப்பத்தில் சபை மௌனம் காத்தது. மேஜர் ஜேம்ஸ் நெற்றிச் சுருக்கங்களுடன் கலெக்டரை நோக்கினான்.

கலெக்டர் அவனைப் பார்த்து “நீ பெங்கு சிங்கை ஜெயித்து விட முடியும் என்று நம்புகிறாயா?” என்று கேட்டார்.

இலேசான தொந்தியும் நிற்கும் தோரணையும் பெங்கு சிங் சமீப காலமாக மல்யுத்தப் பயிற்சியில் ஈடுபடாதது போன்று காட்டியது.

மேஜர் ஜேம்ஸ் அரைகுறை நம்பிக்கையுடன் தலையாட்டினான். போட்டி தொடங்கியது. அடுத்தடுத்து நடந்த மூன்று மோதல்களிலும் பெங்கு சிங் ஜேம்ஸை பந்தாடினார். ஜேம்ஸ் மற்றவர்களுடன் மோதியபோது, அவன் கையாண்ட உத்திகளை நன்கு கவனித்திருந்தார் பெங்கு சிங். எனவே ஜேம்ஸ் தாடைப்பூட்டு போடுவதற்கு முந்தியதான அவனுடைய இயக்கங்களை அவரால் கணிக்க முடிந்தது, மேலும் அவனுடைய ஆட்டத்தில் அவன் ஒருமுறைகூட நாகமுடிச்சைப் பயன்படுத்தாமல் இருந்ததையும் அவர் அவதானித்திருந்தார். ஜேம்ஸ் களைத்திருந்ததும் பெங்கு சிங்கிற்கு ஆதாயமாக அமைந்தது.

+++++

ஒரு வாரம் கழித்து பெங்கு சிங் லகிசராய் திரும்பினார். பல்லு இல்லாத காரணத்தால் சுசுவை வேட்டையாடாமலோ, அல்லது ஊரில் வேறு யாருடைய உதவியால் வேட்டையாடியோ இந்நேரம் அர்ஜுன் முங்கேர் திரும்பிச் சென்றிருப்பான் என்று பெங்கு சிங் நினைத்தார். ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் அர்ஜுன் லகிசராயிலேயே தங்கியிருந்தான்.

“அண்ணா…..நீங்கள் பல்லுவை அழைத்துக் கொண்டு பாட்னா சென்றிருப்பதாக சொன்னார்கள். உங்களை பார்க்காமல் முங்கேர் செல்வது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் நீங்கள் திரும்பும்வரை காத்திருந்தேன்” என்றான் அர்ஜுன் சிங். ”தம்பீ அர்ஜுன் உன் பாசத்துக்கு லதாங்கிக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்” என்று தம் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டார்.

+++++

அன்று மதியம் அர்ஜுன் லதாங்கியுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது, தெருவில் தண்டோரா சத்தம் கேட்டது.

“இதனால் லகிசராய் ஊர் மக்களுக்கு அறிவிக்கப்படுவது என்னவென்றால், நம்மூர் கியுல் நதியின் கரையில் சுசுவை பிடிப்பதும், அதன் மாமிச வியாபாரத்தில் ஈடுபடுவதும், அல்லது சுசுவின் மாமிசத்தைப் பதப்படுத்தி எண்ணெய் எடுப்பதும் லகிசராய் பிராந்தியத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது”

”என்னங்க..இங்கிலிஷ் துரைக்கு நம்ம ஊர் சுசுவை பரிசளிக்கணும்னு சொன்னீங்களே?” என்று கேட்டாள் லதாங்கி.

“முங்கேரிலோ, பகல்பூரிலோ பிடித்து லகிசராயில் பிடித்ததாக தந்தால் துரை வேண்டாமென்றா சொல்லப் போகிறார்?” என்று சொல்லிய படி அர்ஜுன் அவளை இறுக்கிக் கொண்டான்.

+++++

பெங்கு சிங்கின் கனவில் அன்று வீடுகள் காணாமல் போகவில்லை. வீடுகள் எல்லாம் நீரில் மூழ்கியிருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் புகுந்து கங்கை நதி டால்ஃபின்கள் ஆனந்தமாய் நீந்திக் கொண்டிருந்தன.

பின் குறிப்பு :

(1) இச்சிறுகதையில் இடம் பெறும் சில பாத்திரங்களும் குறிப்பிடப்படும் சில சம்பவங்களும் வரலாற்றில் பதிவானவை :-
(அ) வில்லியம் டெய்லர் – முதல் சுதந்திரப் போரின்போது (1857) பாட்னா கண்டோன்மெண்டில் கமிஷனராக இருந்தார். கலகத்தை அடக்க அவர் எடுத்த முயற்சிகள் பலவீனமானவை என்று ஆங்கில அரசாங்கம் அவரை 1859இல் பணி நீக்கம் செய்தது. அவர் உருவப்படம் வரையும் கலையில் தேர்ச்சி பெற்றவர்.
(ஆ) ரௌலண்ட் – கல்கத்தாவில் இருந்து செயல்பட்ட ஈஸ்டர்ன் இந்தியன் ரயில்வே என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இருந்தார்.
(இ) கல்கத்தா – முங்கேர் இருப்புப்பாதை கட்டும் பணி 1863=இல் முடிவுற்றது.
(ஈ) பீர் அலி கான் – லக்னோவில் பிறந்த இவர் பாட்னா நகரில் புத்தக விற்பனையாளராக இருந்தவர். பாட்னாவில் நடந்த புரட்சிப்போரில் இந்திய வீரர்களின் தலைமை ஏற்றவர். அவரையும் அவர் குடும்பத்தையும் ஆங்கில அரசாங்கம் தூக்கிலேற்றியது.

(2) இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய நதி டால்ஃபின் (Indian River Dolphin) வேகமாக அழிந்து வருகிறது. இந்திய வனவிலங்குகள் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்டாலும், மாமிசத்திற்காகவும் டால்ஃபின் எண்ணெய்க்காகவும் இவ்வுயிரினம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது.