ஊர்பேர்

சராசரிக்கதிகமான நினைவாற்றல் எனக்குண்டு என்ற மிதப்பில் இத்தனை வருடங்களாக இருந்தவனுக்கு ஊர்களின் பெயர்களை மறந்து போகிறேன் என்பதை ஏற்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஒரு வாரம் முன் சென்ற ஊரை நினைவில் கொண்டு வர முயல்கிறேன். மனதின் காட்சியில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிய நேரம் ஞாபகமிருக்கிறது. தெருமுக்கில் இருந்த பிக் பஸார் கடையை கடந்து சென்றது, ஹூடா ஐங்ஷன் வந்தபோது நஜஃப்கர் வழியாகச் செல்லலாம் என்று ஓட்டுனர் சொல்கையில் லேசாக தலையாட்டியது – எல்லாம் மனக்காட்சியில் தெளிவாக வந்து விழுந்தன. நஜஃப்கர் தாண்டியதும் குறுகலான சந்தில் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கினோம். சற்று தூரத்தில் காரில் சிஎன்ஜி குறைவு என்பதால் அதை நிரப்புவதற்காக நின்ற போது யாரோ எனக்கு போன் செய்தார்கள். யார் போன் செய்தது? மனைவியோ குழந்தைகளோ நிச்சயமாக இல்லை. அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு என்று எண்ணுகிறேன். ஞாயிற்றுக்கிழமை அல்லவா பயணமானோம்? அலுவலகத்திலிருந்தோ வாடிக்கையாளர்களிடமிருந்தோ அழைப்பு வந்திருக்க முடியாது. சிஎன்ஜி நிரப்பிய பின்தான் காய்கறிச் சந்தை நெரிசலில் சிக்கிக் கொண்டோமோ? ஊர் பேரை நினைவுபடுத்திக் கொள்ளச் சென்ற மனப்பயணம் வேறு சிலவற்றையும் நான் மறந்து போகிறேன் என்பதை புலப்படுத்தியது.

எந்த ஊரை நோக்கிப் பயணம் என்பது மூலவினா. அதற்கு விடையளிக்கும் வழியில் நிறைய துணைவினாக்கள். யார் போன் செய்தார்கள்? எனக்கு ஓட்டுனர் பெயரும் ஞாபகமில்லை. காய்கறிச் சந்தை நெரிசல் முதலில் வந்ததா? சிஎன்ஜிக்காக நின்றது முதலில் வந்ததா? தெளிவு என்பது கூரான ஞாபக சக்திதான். இல்லை..அப்படியும் சொல்லிவிட முடியாது. தெளிவு என்பது தெளிவான மன நிலை. நினைவுத் துல்லியம் தெளிவின் முக்கிய அங்கம் என்று சொல்லிக் கொள்ளலாம். 

சிஎன்ஜி ஸ்டேஷனுக்கப்பால் என் மனப்பயணம் நின்றுபோனது. எதையாவது பற்றி நிற்காவிடில் கீழே விழுந்துவிடுவோமில்லையா?  பிடி தளர்ந்து தடுமாறுகையில் ஏதாவது ஒரு நினைவைப் பிடித்துக் கொண்டால் நம் இருப்பு உறுதியாகும்.

குர்கான் வரைபடத்தை விரித்தேன். பக்கத்தில் என்னென்ன ஊர்கள் இருக்கின்றன?  நஜஃப்கரை நோக்கி விரலை நகர்த்தினேன். அதைச் சுற்றி பல ஊர்கள், கிராமங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ரோகிணி, பகதூர்கர், பவானா……வெறும் பெயர்கள்…..எல்லாம் பெயர்கள்…தலையை அசைத்தேன். பெயர்கள் வைக்காவிடில் ஊர்களுக்கென தனித்த அடையாளம் ஏதேனும் இருக்குமா? வீடுகளும், வயல்களும், குளங்களும், மேடுகளும் பள்ளங்களும் – அவற்றின் எண்ணிக்கைகளும், வடிவங்களும், அமைப்புகளும் மாறுந்தன்மையை வைத்து…குழப்பமாய் இருக்கிறது…என் உடல் எங்கே? நான் இருக்கிறேனா…எனக்கு நினைவிருக்கிறது..எனவே நான் இருக்கிறேன்…எதையோ உதறுவது போல் சைகை செய்தேன்…

“உடம்பை அசைக்காதீங்க” – எனக்கு யாரோ ஊசி போட்டுக் கொண்டிருந்தார்கள். முக கவசம் அணிந்திருந்தனர். 

சற்றுத் தள்ளி ஒரு பெண் சதுர கண்ணாடி பதித்த கதவினுடே நோக்குகிறாள். ஒரு வித பயத்துடன் நின்றிருந்தாள். கண்ணில் நீர் படிந்திருந்தது. மனக்காட்சி மாறிவிட்டதா? ஊர் பெயர் மறந்ததை நான் இன்னும் மறக்கவில்லை. புதுக்காட்சியிலும் பழைய காட்சியைத் தொடர விழைந்தேன். 

என் தலையை யாரோ நேராகப் பிடித்துக் கொண்டனர். கதவு பக்கம் என் முகத்தை திருப்ப முடியவில்லை. வெண்ணிற திரையை….சுவரை வெறித்து மேல் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போதும் “என்ன பெயர் என்ன பெயர்” என்று மனதில் அசை போட்டபடியிருந்தேன். என் கால்களை யாரோ தூக்கினார்கள். எதையோ யாரோ தூக்குவது மாதிரி எடையற்று உணர்ந்தேன். 

“நான் எந்த ஊருக்குப் போனேன். ” – என்று உரக்கக் கேட்டேன். உதடு மட்டும் அசைந்ததா எனத் தெரியவில்லை. நான் சொன்னது யார்க்கும் கேட்கவில்லை. யாரும் கேட்க பிரயாசப்பட்டதாகவும் தெரியவில்லை. என்னைச் சுற்றிலும் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கதவினூடே நின்றிருப்பவள் இன்னும் அழுது கொண்டிருப்பாளா? அவள் அழுகை நின்றதாவெனத் தெரியவில்லை. அழுகை வந்தது. கண்ணீர் சிந்தினேனா என்று சந்தேகமாய் இருக்கிறது. நான் அழுகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது தான் பிரக்ஞையின் அடையாளமா? வேறொரு காட்சிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டார்கள்….காட்சிகள் ஏதுமில்லை. இருட்டு அறைக்குள் நுழைந்துவிட்டேன். எங்கிருக்கிறேன். இது வேறோரு காட்சியா? அல்லது வேறொரு எண்ணமா? வடிவங்களும் சிந்தனைகளும் பிணைந்து என்னை நெருக்குவது போல் இருந்தது. காட்சிகள் இல்லாத புதுக்காட்சியா? இல்லை…நானே என்னை இந்த இருட்டுக்குள் என்னைத் தள்ளிக்கொண்டேனோ?

பித்ரு கடன் செய்யும் போது ஓதும் மந்திரங்கள் எங்கிருந்தோ ஒலித்தன. என் பெயர், என் தந்தையார் பெயர், தந்தையாரின் தந்தையார் பெயர் – இவற்றைச் சொல்லி வசு, ருத்ர, ஆதித்யர்களாக உருவகிக்கும் மந்திரங்களின் உச்சரிப்பு…பெயர்கள்…பெயர்கள்…பெயர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.