1

‘கோவேறு கழுதைகள்’ என்ற நாவலினூடாகத் தமிழில் எழுத்தாளராக நிலைபெற்றவர் இமையம். இவர் அடுத்தடுத்து எழுதிய நெடும் புனைவுகளும் தமிழின் புனைகதை மரபுக்கு வளம் சேர்த்தவை. நாவல்களைத் தொடர்ந்து இவரெழுதிய சிறுகதைகளும் கூடுதல் கவனம் பெற்றன. கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வியல் அடையாளங்களாக இவரது கதைகள் உருவாகியிருக்கின்றன. சாதி மற்றும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களின் கதைகளை இவர் வெவ்வேறு பெயர்களில் எழுதி வருகிறார். பிறரிடம் எளிதில் பகிரமுடியாத பெண்களின் துயரங்களை அவர்களது மொழியில் துல்லியமாக எழுதியிருப்பதும் இமையம் கதைகளின் சிறப்புக்குக் காரணம்.
இமையம், சிறுகதை உத்திகளில் நம்பிக்கையற்றவர். அதனால் நவீனத்துவக் கூறுகளை இவரது கதைகளில் தேடிச் சலிப்படைய வேண்டியதில்லை. இவரைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிற எளிய மக்கள்தாம் இவரது கதைகளைப் பின்னிருந்து எழுதுகிறார்கள். ‘இலக்கியம் என்பது சமூக விமர்சனம். சமூக இழிவுகளாக இருப்பவற்றை விமர்சனம் செய்வதுதான் ஒரு நிஜமான கலைஞனின், கலைப்படைப்பின் வேலை. சமூக இழிவுகளைச் சுட்டிக்காட்ட, அடையாளப்படுத்தவே எழுதுகிறேன்’ என்பதுதான் இமையம் தன்னுடைய எழுத்து குறித்து முன்மொழியும் கருத்து. இவரது கதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது ஒரு சில பொதுக்கூறுகளை வாசிப்பவர்கள் கண்டடைய முடியும். இக்கூறுகள் பலரின் கதைகளில் காணக்கிடைக்காத அம்சம். ஓர் எழுத்தாளனின் படைப்பை அவன் சார்ந்திருக்கிற மண்ணும் சாதியும் தொழிலும் மறைமுகமாக இயக்கும். தவிர, இமையம் திராவிடக் கட்சி ஒன்றிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அதனால் அரசியல் தாக்கமும் இவரது கதைகளில் உண்டு.
இமையம் அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அரசு நிறுவனங்கள் அனைத்துமே புனைவுகளை உருவாக்குவதற்கு வசதியாக அமைந்திருப்பவை. பள்ளிக்கு அதில் கூடுதல் இடமிருக்கிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் தன் புத்தகங்களுக்கிடையே பல கதைகளை ஒளித்து வைத்திருப்பார்கள். மாணவர்கள்மீது அக்கறையுள்ள ஆசிரியரால் அதனை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். மேலும் அரசுப் பள்ளிகள் குறித்துப் பொதுப்புத்தியில் ஒரு கருத்து இருக்கிறது. அக்கருத்து ஒரு சார்புத் தன்மையிலானது என்பதை இமையம் தன் புனைவுகளினூடாக நிறுவ முயன்றிருக்கிறார். அதேநேரத்தில் அரசுப் பள்ளிகளின் தரம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் ஒரு கதாபாத்திரத்தையும் இவரே உருவாக்கி, ஆசிரியர்களையும் பொதுமக்களையும் மோதவிடுகிறார். அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் உன்னதமானவை என்பதை நிறுவும் நோக்கம் இமையத்திற்கு இல்லை. அதனை அவரது புனைவுகளும் செய்யவில்லை. ஆனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையிலான சுதந்திர வெளியை இமையம் பிடித்துக் காட்டுகிறார். அரசுப் பள்ளிகள் குறித்துப் பல கதைகளை எழுதியிருந்தாலும் ‘அரசாங்கப் பள்ளிக்கூடம்’ என்ற சிறுகதை முக்கியமானது. ஐம்பத்திரண்டாவது வயதில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைக்குச் சேர்ந்தவர் பொன்னம்பலம். ஷாலினி என்ற மாணவி, ஒருநாள் நடிகர் ஒருவரின் பிறந்த நாளுக்கு வகுப்பில் அனைவருக்கும் சாக்லேட் கொடுக்கிறாள். அதற்காக அந்த மாணவியைத் தலைமை ஆசிரியரிடம் போகச் சொல்கிறார். ஷாலினி மறுநாள் அம்மாவை அழைத்து வருகிறாள். அவள் பெயர் வள்ளி. வள்ளிக்கும் பொன்னம்பலத்திற்கும் வள்ளிக்கும் தலைமை ஆசிரியருக்கும் நடக்கும் உரையாடல்தான் கதை.
வள்ளி, சித்தாள் வேலை செய்பவள். வள்ளி இப்புனைவில் பொதுமக்களின் குறியீடு. ஆசிரியர்களிடம் சுதந்திரமாக உரையாடுகிறாள். ‘நெனச்சதுக்கெல்லாம் வெளிய போ, ஹெட்மாஸ்ட்டரப் பாரு. அப்பா அம்மாவ அழச்சிக்கிட்டுவான்னு சொன்னா நெனச்ச நேரத்துக்கு எங்களால வர முடியுமா? ஓடியாடிப் பொயப்பப் பாக்க வாணாம்? ஒங்கள மாரி குந்திக்கிட்டா சம்பளம் வாங்குறம்?’ என்று அவள் கேட்கும் சுதந்திரத்தை உருவாக்கிக் கொடுத்திருப்பது அரசுப் பள்ளிகள்தாம் என்ற இடம்தான் இக்கதைக்கு முக்கியமானது. ‘யார் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன என்று விடாதது தன் தவறுதான்’ என்று பொன்னம்பலம் நினைக்கிறார். இந்த மனநிலை ஆசிரியர்களிடம் உருவாகக் காரணம் அரசு. அரசு, ஆசிரியர்கள் பக்கம் நிற்காமல், பெரும்பான்மை வாக்குகளைத் தங்கள்வசம் வைத்துள்ள பொதுமக்கள் பக்கம் நின்றதிலிருந்தே அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது. மாணவர்கள்மீது அக்கறை கொண்டுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் ‘பாட்டி’ மனப்பான்மையுள்ள அரசு, வாக்குவங்கி அரசியல் இலாபத்திற்காக இலவசங்களை வாரி இறைக்கின்றன. இலவசமாகக் கிடைக்கும் எதுவும் தரமுடையதாக இருக்காது என்ற மனநிலையைப் பொதுமக்களிடம் உருவாக்கியதும் அரசுதான். அவர்கள் கொடுத்த இலவசங்கள் பழுதுபார்க்கும் கடைகளை அடைத்துக் கொண்டிருப்பதே இதற்குச் சான்று. மேலும், இலவச டிவியும் இலவச மடிக்கணினியும் மாணவர்களுக்குச் சினிமாவை நெருக்கமாக்கி விட்டன. நடிகர்கள்மீது பித்துப்பிடித்து அலையும் மாணவிகளின் பிரதிநிதிதான் இக்கதையின் ஷாலினி. வள்ளி தெய்வத்தின் பெயர்; ஷாலினி நடிகையின் பெயர். இப்பெயர் மாற்றத்திற்குப் பின்பு சினிமா மோகம் காரணமாக இருக்கிறது. இக்கதையில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வரியும் தவறவிடக் கூடாதவை.
அரசுப் பள்ளிகள் முன்புபோல இல்லை என்ற குற்றச்சாட்டிற்கு, இக்கதையின் தலைமை ஆசிரியர் டி.சி.ராமலிங்கம் சொல்லும் விளக்கங்கள் மறுக்க முடியாதவை. ஓ.ஏ.வைக்கூட தலைமை ஆசிரியரால் கேள்வி கேட்க முடியாத சூழல் இன்று. ‘எந்தச் சனியனோ எப்பிடியோ போகுதுன்னு விடாம எதுக்கு சார் அதெப் போயி கேட்டீங்க?’ என்பதுதான் தலைமை ஆசிரியர்களின் மனநிலை. இக்கதை எந்த முடிவையும் நோக்கி நகராது. வள்ளி தன்னுடைய ஒருநாள் வேலை போய்விட்டதே என்ற எரிச்சலில்தான் பேசுகிறாள். அவள் பேசுவதற்கான சூழலை இமையம் உருவாக்கிக் கொடுக்கிறார். அவள் சித்தாள் வேலைக்குப் போனால்தான் கூலி. அது வீணாகிவிட்டதே என்ற கோபம். மகளின் செயலையும் அவள் நியாயப்படுத்தவில்லை; சகித்துக் கொள்கிறாள். எல்லா கெட்டதும் வீட்டுக்குள் வந்துவிட்டது. சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். ‘பெரியவர்களும் சிறியவர்களும்’ என்ற கதையையும் இதனுடன் சேர்த்து வாசிக்கும்போது அரசுப் பள்ளிகளின் இயக்கம் இன்று எப்படியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆசிரியர்களின் புனிதங்களை இமையம் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. அவர்களையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். ‘மெட்ரிக்ல நீங்க செஞ்சதில இங்க நூத்தில ஒரு பங்கு வேல செஞ்சாலே போதும்’ (பெரியவர்களும் சிறியவர்களும்) என்று சொல்லிவிட்டு லேசாகச் சிரித்தார். ‘லேசாகச் சிரித்தார்’ என்று எழுதியிருப்பதுதான் ஆசிரியர்கள்மீது இமையம் வைக்கும் விமர்சனம். இந்த நுட்பம்தான் இமையம் கதைகளின் சிறப்பு. இமையத்தின் கதைகள் மொழிவிளையாட்டில் ஈடுபடுவதில்லை. நேரடியான உரையாடலை நிகழ்த்தக் கூடியவை. இவரது பெரும்பான்மைச் சிறுகதைகள் நீளமானவை. இதழ்களுக்கு உடனடியாக எழுதித் தரவேண்டும் என்ற மனநிலையில் இமையம் கதை எழுதுவது கிடையாது. இவரது பல கதைகள் இதழ்களில் பிரசுரமாகாதவை. பிரசுரமான கதைகளையும் நூலாக்கத்திற்கு முன்பு மீள்வாசிப்புச் செய்து திருத்தியிருக்கிறார். இமையம், தம் கதைகளில் இரண்டு முரணான கதாபாத்திரங்களை உருவாக்கிவிட்டு மறைந்து கொள்கிறார். அந்தக் கதாபாத்திரங்கள்தாம் கதையை முன்நகர்த்துகின்றன. பல கதைகளில் இந்த இரண்டு பாத்திரங்களில் ஒன்றுக்கு ஆசிரியரின் சாயல்.
உள்ளிருந்து விமர்சிக்கும் தன்மையைத் தம் கதைகளில் வலிமையாகப் பயன்படுத்தியிருப்பவர் இமையம். இதுதான் பிறரின் கதைகளில் எளிதில் காணவியலாத அம்சமாக நான் கருதுகிறேன். இமையத்தின் எழுத்து தனித்துத் தெரியும் இடமும் இதுதான். ‘கோவேறு கழுதைகள்’ நாவல் குறித்து எழுதிவிட்டு அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள் ஏராளம். அரசுப் பள்ளியின் நேரெதிர் முரண்களை இமையம் அளவுக்கு என்னுடைய வாசிப்பில் எழுதியவரில்லை. தி.ஜானகிராமன் மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளைக் கவனமெடுத்து எழுதினார். இமையம் அகப்பிரச்சினைகளுக்குக் காரணமான புறப்பிரச்சினைகளை வெளிச்சப்படுத்துகிறார். ஆனாலும் பிரச்சாரத்தன்மை இல்லை. இதில் பதிப்பகத்தின் பங்கும் இருப்பதாக அறிகிறேன். ஒரு கதையை எழுதுவதற்கு எடுத்துக்கொள்ளும் நிதானம் முக்கியமானது.
2
தெய்வத்தின் பெயரால் சுரண்டப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இவரின் பல சிறுகதைகள் காட்சிப்படுத்துகின்றன. நகரங்களிலுள்ள மக்கள் பெருந்தெய்வங்களின் முகவர்களால் சுரண்டப்படுகிறார்கள். கிராமங்களிலுள்ள மக்கள் சிறுதெய்வங்களின் சடங்குகளால் ஏமாற்றப்படுகிறார்கள். திராவிட இயக்கச் சார்புத்தன்மையில் இமையம் பேசுகிறார் என்று நாம் எளிதில் கடந்துவிட முடியாது. இவரது கதைகளில் அதிகமும் சிறுதெய்வங்களே இடம்பெறுகின்றன. இமையம் இத்தெய்வங்களை விமர்சிக்கவில்லை; முகவர்களைத்தான் விமர்சிக்கிறார். எளிய மக்களின் புகலிடங்களாக இருப்பவை கோயில்கள். அந்தக் கட்டமைப்பை நாம் எளிதில் உடைக்கமுடியாது. அதற்கு இணையானதொரு மாற்றை உருவாக்காதவரை இது சாத்தியமில்லை. ஆனால் முகவர்களே பல கோயில்களில் தெய்வங்களாகத் தம்மைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தன்மையைத்தான் இமையத்தின் கதைகள் விமர்சனம் செய்கின்றன. ‘பத்தினி இலை’, ‘கொலைச்சேவல்’, ‘பிராது மனு’ போன்ற கதைகளை இதற்குச் சான்றாகச் சொல்லலாம்.
உதாரணத்திற்குப் ‘பிராது மனு’ கதையை எடுத்துக்கொள்வோம். தங்கமணி என்ற பெண்ணின் இரண்டு சவரன் நகை காணாமல் போகிறது. கொளஞ்சியப்பர் கோயிலுக்குப் பிராது மனு கொடுக்கச் செல்கிறாள். அந்தக் கோயிலின் நடைமுறைகளால் அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளே கதை. இதுபோன்ற கோயில்களின் தொன்மக்கதைகள் குறித்து ஏராளமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. சு.தமிழ்ச்செல்வியின் பல கதைகள் இத்தன்மையிலானவை. இமையம் இந்த இடத்தில் வேறுபடுகிறார். கோயில் என்கிற அமைப்பு, எளிய மக்கள்மீது அதிகாரம் செலுத்தக்கூடிய இடமாக மாறி நீண்ட காலமாகிவிட்டது. இந்த எல்லை கிராமங்கள்வரை நீண்டிருக்கிறது. வீட்டிலிருந்து எழுதிக் கொண்டுவந்த கோரிக்கை மனு செல்லாது என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. ‘நீ பாட்டுக்கும் எழுதிக்கிட்டு வந்து சீட்டக் கட்டிட்டுப் போறதுக்கு நாங்க எதுக்கு இங்க ஆபிசு வச்சிக்கிட்டுக் குந்தியிருக்கம்’ என்ற கேள்வியைத் தங்கமணியால் உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. ‘நான் தரக்கூடிய சீட்டில் எழுதிக் கட்டினால்தான் சாமியை அனுப்புவேன்’ என்று அவன் கூறுகிறான். ‘சாமியை அனுப்புவேன்’ என்று கூறுவதைக் கேட்டுத் தங்கமணி அதிர்ச்சியடைகிறாள். அந்தச் சீட்டின் விலை இருநூறு ரூபாய்; பிராது மனுவை விசாரிக்க சாமி குதிரையில் வரும்; அதற்கு நூறு ரூபாய் என்று கேட்டதும் அவள் மேலும் அதிர்ந்து போகிறாள். இமையம் இத்துடன் நிறுத்தவில்லை. அவள் ஓர் அப்பாவி. அதற்கானச் சூழலைக் கதையில் உருவாக்கிவிடுகிறார். அந்தக் களம் கதையை மேலும் வளர்ப்பதற்கும் உரையாடுவதற்கும் வசதியாக அமைந்துவிடுகிறது. அவளுடைய நகை அவளுக்குத் திரும்ப கிடைக்கவேண்டும்; அதற்காக அவள் எதையும் நம்பத் தயாராக இருக்கிறாள். இந்த நம்பிக்கைதான் இறை முகவர்களுக்கு வருமானத்தை அள்ளித் தருகிறது.
‘பணம் வாங்குவது எதுக்கு? சாமி விசயத்த மறந்திடாம இருக்கத்தான்’ என்ற பதிலைக் கேட்டு தங்கமணி ஆச்சரியமடைகிறாள். ‘சாமி மறந்திடுமா சார்?’ என்ற கேள்விக்குப் பின் ஒலிக்கும் அப்பாவித்தனத்தைப் பகடியாக எடுக்க முடியாது. யதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது. கதை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. ‘பிராது மனு கட்டி பதினெட்டு நாளுக்குள்ளார ஒன்னோட காரியம் முடிஞ்சிடும். முடியலன்னா மறுநாளே வந்து படிப்பணம் கட்டணும். அப்படியும் முடியலன்னா, ரெண்டாவது தவண படிப்பணம் கட்டணும்’ என்று அந்த உரையாடல் நீள்கிறது. கடவுள் மீதான நம்பிக்கை மக்களுக்குப் பயன்படுவதைவிட முகவர்களுக்கே அதிகமும் பயன்படுகிறது. ‘பத்தினி இலை’ என்ற கதையில் முகவரே சாமியாக மாறுகிறார். இக்கதையில் இடம்பெறும் தெய்வம் நொண்டிக் கருப்பன். முழுக்க எள்ளல் தொனியில் எழுதப்பட்ட கதையாக இதனைக் கருதலாம். ஆனால் ‘பிராது மனு’ காத்திரத் தொனியில் எழுதப்பட்ட கதை.
‘கொலைச் சேவல்’ கதை இவ்விரண்டிலும் வேறுபட்டது. தன்னையும் இரு மகள்களையும் ஏமாற்றிய செல்வத்தைப் பழிதீர்க்க, கொலைச் சேவல் குத்த முத்தாண்டி குப்பத்துக் கருப்பையா கோவிலுக்கு வந்திருக்கிறாள் கோகிலா. சேவல்தான் இங்குக் கருப்பையா. சேவலின் அங்க அசைவுகளே கருப்பையாவின் உத்தரவு. ‘இது பவரு உள்ள சாமி. வேண்டுனது நடக்கும்’ என்ற நம்பிக்கைதான் கருப்பையாவின் பலம். ‘பவரு உள்ள சாமி’ என்பதால் இவருக்குப் படிப்பணம் ஆயிரம் ரூபாய். கருப்பையாவுக்கும் ஞாபக மறதி உண்டு. மூன்றுமுறை படிப்பணம் கட்டவேண்டும். ‘தவறிட்டா செய்வின செஞ்சவங்க பக்கமே திரும்பிடும்’ என்ற அச்சுறுத்தலும் உண்டு. இந்தப் புனைவில் சாமியையே மிரட்டும் அதிகாரத்தை முகவர் பெற்றிருக்கிறார். நன்றாகப் பயிற்சி அளிக்கப்பட்ட சேவல் (கருப்பையா), முகவர் சொல்வதையெல்லாம் கேட்கிறது. அவ்வாறு கேட்கவில்லையெனில் ‘கொலைப்பட்டினிப் போட்டுக் கொன்னுடுவன்’ என்ற மிரட்டலை எதிர்கொள்கிறார் கருப்பையா. இந்த இடத்தில் முகவர்தான் சாமி. சாமியை வணங்குவதும் அவ்வப்போது சாமியாக மாறி அருள்பாலிக்கும் முகவரை வணங்குவதும் ஒன்றுதான். கண்மூடித்தனமாகக் கடவுளை நம்பும் இமையத்தின் கதாபாத்திரங்கள் கடவுளைத் திட்டவும் செய்கிறார்கள். செம்பையனாரு கோவில் திருவிழாவில் ஐந்து சவரன் சங்கிலியைப் பறிகொடுத்தவள், ‘சாண்ட குடிச்ச சாமி திருநாவுக்கு வந்து எஞ் சங்கிலி போச்சே’ (அன்னக்கிளியும் பன்றிக் கறியும்) என்று பலரும் கேட்கத் திட்டுகிறாள். ‘என் வீட்டுக்கு வராத சாமி என்ன மசுரு சாமிடா’ (வீடியோ மாரியம்மன்) என்று கூட்டத்தில் திட்டுகிறான் ஒருவன். கடவுள் நம்பிக்கை குறித்த எதிர்க்கதையாடலைத்தான் இமையத்தின் பிரதிகள் முன்னெடுக்கின்றன. ‘எங்க குலசாமி மூக்குத்தி அம்மன் யாரயும் கேக்கல. எங்கப்பா வருசா வருசம் கெடா வெட்டிப் பொங்க பூசன்னு முப்பூசவச்சதெல்லாம் தண்டம்தான்’ (அணையும் நெருப்பு) என்று துயரத்தின் உச்சத்தில் ஒருத்திப் பேசுகிறாள். ‘வெங்காயத்திலதான் இருக்கான்’ (பெத்தவன்) என்று ஒருத்தி விமர்சிக்கிறாள். கிராமங்களில் கடவுள் மீதான நம்பிக்கை சரியத் தொடங்கியுள்ளதையே இதுபோன்ற உரையாடல்கள் காட்டுகின்றன. நம்பிக்கையின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களைச் சுரண்டி பிழைப்பவர்கள்மீது கல்லெறிகிறார் இமையம். இவரது சிறுகதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது இத்தன்மை அழுத்தமாகப் பதிவாகியிருப்பதை அவதானிக்கலாம்.
3
இமையம், தற்கால அரசியல் கட்சிகள் குறித்து எழுதிய கதைகள் குறிப்பிடத்தக்கவை. ‘கட்சிக்காரன்’ என்றொரு கதை எழுதியிருக்கிறார். ஆனந்தவிகடனில் (2017) இக்கதை பிரசுரமாகியிருக்கிறது. இமையத்தின் சிறுகதைகளில் ஆண்களுக்கான வெளி மிகக் குறைவு. பெண்களின் வாதைகளைத்தான் இவர் கவனமெடுத்து எழுதி வருகிறார். இக்கதை விதிவிலக்கு. இந்தக் கதையில் பெண்களுக்கான இடம் குறைவு. அரசியலில் ஆண்களின் கைதான் ஓங்கியிருக்கிறது என்பதாகவும் கருதலாம். இக்கதையின் பொன்னுசாமி என்ற கதாபாத்திரம் மனதைக் கனக்கச் செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பினாமிகளாகிவிட்ட அரசியல் கட்சிகளுக்குப் பொன்னுசாமி போன்றவர்கள் இன்று அனாவசியம். உள்ளிருந்து விமர்சிக்கும் தன்மையை இக்கதையில் கூடுதலாகக் காணலாம். இமையம் திமுகவின் பிரதிநிதி. கட்சிக்குள் இருப்பதால்தான் இப்படியொரு கதையை இவரால் எழுத முடிந்திருக்கிறது. இது உண்மை மனிதர்களின் கதை. திமுக தலைவர் இக்கதையில் வெளிப்படையாக விமர்சிக்கப்படுகிறார். தற்கால அரசியல் பிரதிநிதியான தங்கம் தென்னரசுவுக்கும் தொடக்ககால பிரதிநிதியான பொன்னுசாமிக்கும் இடையே நடைபெறும் உரையாடல்தான் கதையின் ஆன்மா. பொன்னுசாமி ஐம்பது வருடங்களாகக் கட்சியில் இருப்பவர். பதினெட்டுமுறை கட்சி நடத்தும் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றவர். ‘நம்ப சொட்ட என்னா இப்பிடிச் செஞ்சி கட்சிக்காரன் கைய ஒடிச்சிடிச்சி? மைக்கில நாலு வார்த்தப் புகழ்ந்து சொன்னாப் போதும் அவருக்கு’ என்று கட்சித் தலைவரையே விமர்சிக்கும் உரிமை பெற்றவர். உள்ளாட்சித் தேர்தலில்கூட ஒருமுறையும் கட்சி இவருக்குச் சீட்டு வழங்கியது கிடையாது. ஒவ்வொரு முறையும் அடுத்தமுறை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறார். ‘தொண்டர்கள்தாம் கட்சியின் பலம்’ என்று அவ்வப்போது அறிக்கைவிடும் தலைமை, பதவிகளுக்கு இவர்களை ஒருபோதும் பரிசீலிப்பதில்லை. பொன்னுசாமி போன்றவர்களே இதற்குச் சான்று.
‘நீதான் ஒன்றியம்? நீ சொன்னா மாவட்டம் கேப்பாரு. இந்த ஒருமுறை மட்டும் பாத்துச் செய்யி தம்பி’ என்று கெஞ்சிக்கொண்டிருப்பவர்களே உண்மையான கட்சிக்காரர்கள். கொள்கைப் பிடிப்போடு தொடங்கிய பல கட்சிகள் இன்று சாதிய அடையாளத்துடன் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பணமும் சாதியும்தான் தற்சூழலில் கட்சிகளை இயக்குகின்றன என்பதைத் தலைவர்களே ஏற்றுக்கொள்ளும் கதைதான் ‘கட்சிக்காரன்’. இமையத்தால்தான் இந்தக் கதையை எழுத முடியும் என்பதற்குக் ‘கட்சிக்காரன்’ கதை சான்று. இதில் மாவட்டச் செயலாளராக வரும் தங்கம் (தென்னரசு) கதாபாத்திர உருவாக்கமும் நேர்த்தியாகத் தொழிற்பட்டிருக்கிறது. இமையம் அந்தக் கதாபாத்திரத்தைக் கைக்கொண்டுதான் திமுகவின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார். கடலூர் மாவட்டத்துக் கதையை எழுதும் இமையத்துக்கு விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த தங்கம் தேவைப்பட்டிருக்கிறார். இதற்குப் பின்புள்ள அரசியலையும் புரிந்துகொள்ள வேண்டும். கட்சியின் தற்கால முரண்களை விவாதிக்கும்போது நம்பிக்கைக்குரிய நிகரன் பாத்திரம் ஆசிரியருக்குத் தேவைப்படுகிறது. தங்கம் இந்த இடத்திற்குப் பொருந்திப் போகிறார். காலில் விழும் கலாச்சாரத்தைக் கட்சியினர் வெளிப்படையாகத் தடுத்தாலும் விழவேண்டும் என்ற எண்ணம் அதிகார மட்டத்தில் ஊறிப்போயுள்ளது. இதற்குப் பெரியார்வழிக் கட்சிகளும் விதிவிலக்கல்ல. ‘இதெல்லாம் என்ன பழக்கம்? எழுந்திருங்க. காலில் விழுந்து மத்த கட்சி மாதிரியே நம்ம கட்சியயும் மாத்திடாதிங்க’ என்று சொல்கிறார் தங்கம். அடுத்து, ‘மூணு ஊர்லயும் எங்க ஆளுங்கதாண்ணே மெஜாரிட்டி, அண்ணன் மனசு வச்சா, நான் ஜெயிச்சிடுவன்’ என்று சொன்னதோடு தங்கத்தின் காலில் விழுந்து கும்பிட்டான். தங்கத்துக்கு என்ன தோன்றியதோ வாய்விட்டுச் சிரித்தார்’ என்று இமையம் எழுதுகிறார். ‘சிரித்தார்’ என்பதற்கு அர்த்தங்கள் அதிகம்.
‘நம்பாளு’ என்ற கதையும் அரசியல் சார்பானதுதான். ஒவ்வொரு கட்சியும் சாதியத்தைப் பின்புலமாகக்கொண்டே இயங்குகிறது என்ற வாதத்திற்கு வலிமை சேர்க்கும் கதை. தன்னுடைய கட்சியைச் சார்ந்த மற்றொரு வேட்பாளரை அந்தக் கட்சியைச் சேர்ந்தவரே தோற்கடிக்க முயலும் கதை. ஒரே கட்சியைச் சார்ந்த இருவர் ஒரு மாவட்டத்திற்குள் வெற்றிபெறும்போது, அமைச்சர் பதவி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதற்காக மாவட்டச் செயலாளரே செய்யும் உள்ளடி வேலைதான் இக்கதை. இந்த இடத்தில் தன்னுடைய சாதியை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறுவது முக்கியமில்லை; அமைச்சராக வேண்டும். வெற்றி வாய்ப்புள்ள பல தொகுதிகளில் ஒரு கட்சி அதிர்ச்சித் தோல்வி அடைவதற்கு இதுபோன்ற உள்ளடி வேலைகளே காரணம். இரவில் செய்யப்படும் பணப்பட்டுவாடா குறித்து மிக நுட்பமாக இக்கதை பேசுகிறது. இந்தக் கதையை வாசிக்கும்போதே பணம் வாங்க வரிசையில் நிற்கும் ஒருவராக நம்மை உணரத் தொடங்குவோம். அதற்கான புறத்தோற்றத்தை இமையம் கச்சிதமாகக் கதையில் உருவாக்கியிருப்பார். இருட்டும் நிசப்தமும் புனைவுக்குள் இரண்டு கதாபாத்திரங்களாகக் கூடி அமைந்திருக்கும். இந்தக் கதையில் வரும் மாவட்டச் செயலாளர், ஆ.கே.எஸ்.கூட உண்மை மனிதராகத்தான் இருப்பார். இமையத்துக்கே வெளிச்சம். ‘சுய உதவிக் குழு பொம்பளங்களுக்கு நூறு இரநூறு சேத்துக் கொடு. பொம்பளங்கதான் காசு வாங்கிட்டமேன்னு காரியம் பாப்பாளுங்க’ என்று ஆர்.கே.எஸ். கூறுகிறார். சுய உதவிக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘கட்சி வேறயா இருந்தாலும் ஒங்க பேச்ச என்னிக்கி மீறி இருக்கம்?’ என்று ஒரு கதாபாத்திரம் பேசுகிறது. கட்சி என்கிற அமைப்பைவிட கட்சிகளுக்குள் மறைமுகமாக இயங்கும் சாதிய அமைப்புதான் அரசியலின் பலமாக இருக்கிறது என்பதை இமையம் தொடர்ந்து தம் புனைவுகளில் வெவ்வேறு தருணங்களில் எழுதியிருக்கிறார். பொன்னுசாமியைப் போன்றவர்களும் ஆ.கே.எஸ். போன்றவர்களும் நேரெதிர் தன்மைகளைக் கொண்டவர்கள். ‘நீங்க மந்திரி ஆவறதுக்காக நாங்க உசுரயும் விடுவோம்ண்ணே’ என்கிற தொண்டனும் ‘நான் காசுக்காகக் கட்சியில இல்ல’ என்கிற தொண்டனும் ஒரே கட்சியில்தான் இருக்கிறார்கள். உள்ளிருந்து விமர்சனம் செய்வதற்குத் துணிவு வேண்டும். இமையத்தின் கதைகள் வெவ்வேறு தளங்களில் நின்று இதனைத்தான் செய்து கொண்டிருக்கிறது.
4
இமையம் எழுதியுள்ள காதல் சார்ந்த கதைகள் குறித்தும் விரிவாக உரையாடலாம். ‘பணியாரக்காரம்மா’, ‘ராணியின் காதல்’, ‘சாந்தா’, ‘அணையும் நெருப்பு’, ‘மலரின் காதல்’ என்று இத்தன்மையிலான கதைகளுக்கு நீண்ட பட்டியல் போடமுடியும். இதில் ‘பணியாரக்காரம்மா’ செவ்வியல் தன்மை கொண்ட புனைவு. இமையத்தின் முத்திரைக் கதை. கண்ணன்செட்டியாருக்கும் பணியாரம் விற்கும் நாகம்மா என்ற பெண்ணுக்கும் இடையில் முப்பத்தைந்து வருடங்களாக கனன்றுகொண்டிருந்த காதல் வெளிப்பட்ட தருணம்தான் இக்கதை. மூடுண்ட இச்சமூகத்தில் காதலை வெளிப்படுத்துவதென்பதே பண்பாட்டு மீறலாகப் பார்க்கப்படுகிறது. சாதிய அமைப்பில் பின்தங்கியுள்ள நாகம்மாவிற்குப் பாட்டியுடன் பணியாரம் விற்கச்சென்ற நாள்முதலே செட்டியார்மீது ஈர்ப்பு. பருவத்திற்குப் பிறகும் ஈர்ப்பு குறையவில்லை. வசதிக்காக இதனைக் காதல் என்று அழைக்கலாம். ‘ஊமைச் செட்டி’ என்று பெயரெடுத்த கண்ணனுக்கும் நாகம்மாமீது காதல். முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு அவனுக்குத் தன்னுடைய காதலை வெளிப்படுத்த துணிச்சல் வருகிறது. வீடுதேடி வந்து ‘ஒங்கூட ஒருநாள் இருக்கணும்’ என்று மெல்லிய குரலில் கேட்கிறான். இடைப்பட்ட இந்தக் காலகட்டத்தில் இருவருக்குமே திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. கண்ணன் மீதுள்ள ஆசையால் மூன்றே நாளில் தன் மண உறவை முறித்துக்கொண்டு வந்துவிட்டாள் நாகம்மா. அவளுக்குத் தினந்தோறும் கண்ணனை ஒருமுறையாவது பார்க்கவேண்டும்; வேறொரு எதிர்பார்ப்பும் அவளுக்கில்லை. கண்ணனும் திருமணம் முடித்து முப்பது வருடங்களாகத் தவ வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். ‘உன்னுடைய மனைவிக்கு நீ செய்தது பாவம்’ என்று நாகம்மா சொல்கிறாள். நாகம்மாவுக்குப் பாவக் கணக்கு இல்லை. அவள் கணவன் வேறு திருமணம் செய்துகொண்டான். ஆனால் பிரதியை இந்தக் கோணத்தில் இதற்குமேல் நகர்த்தக் கூடாது. இது ஒருவர்மீதுள்ள ஆசையைக்கூட வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள தயங்குகிற அமைப்பை விமர்சனத்துக்கு உட்படுத்துகிற கதை.
நாகம்மா ஆயா என்ற இடத்தை அடைந்துவிட்டாள். ஆனால் இன்னமும் கண்ணன்மீதுள்ள அன்பின் அளவு குறையவில்லை. அவனைப் பார்த்துக்கொண்டே காலத்தைக் கழித்துவிடலாம் என்பது அவளின் கிடக்கை. அவளை நினைத்துக்கொண்டே வாழ்ந்து விடலாம் என்பது இவனின் ஆசை. காசிக்குச் செல்வதற்குமுன்பு கொஞ்சநேரமேனும் நாகம்மாவுக்குக் கணவனாக வாழ்ந்துவிட வேண்டும் என்று கண்ணன் நினைக்கிறான். ‘செட்டி என் நெஞ்சில கல்லாட்டம் குந்தியிருக்கயில நான் இன்னொருத்தன்கூடப் படுக்கவா?’ என்பது நாகம்மாவின் கூற்று. ‘செட்டியும் மனுஷன்தான?’ என்பது கண்ணனின் பதில். இப்படித்தான் இவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். மூன்று பகுதிகளாக இக்கதை எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதிதான் புனைவின் உச்சம். ஐம்பது வயதைக் கடந்த நாகம்மா, தன்னைக் கண்ணனின் காதலியாகவும் மனைவியாகவும் உணரும் தருணங்களை இமையம் ரசித்து எழுதியிருக்கிறார். தன் நரையைப் பற்றிக் கவலைப்படுகிறாள்; ஆயா என்ற இடத்தை வெறுக்கிறாள்; திரும்பத் திரும்பக் கண்ணாடியைப் பார்க்கிறாள். அவள் உடலில் காதலும் காமமும் செம்பாதியாகக் கலந்து புதிய ரத்தம் பாய்கிறது. இயல்பாக அவளால் இருக்க முடியவில்லை. கண்ணனுடனான அந்தக் கொஞ்சநேர வாழ்க்கைக்காகத் தன்னை பதினாறு வயதுப் பெண்ணாகப் புனைந்து கொள்கிறாள். அவனுடனான ஸ்பரிசத்திற்குப் பிறகு தன்னைச் செட்டிப் பெண்ணாகவே உணரத் தொடங்குகிறாள். இமையத்தின் புனைவுகளில் தனித்த நிறமுடைய இக்கதை, காதலுணர்வின் கொடுமுடி.
‘ராணியின் காதல்’ என்ற கதையை இதனுடன் சேர்த்து வாசிக்க வேண்டும். ராணியும் ராஜனும் ஒரே ஊர்; ஒரே தெரு; உறவு. பன்னிரண்டாம் வகுப்புவரை ஒன்றாகப் படிக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு முதலே ராணி, ராஜனின் ஆள். ஆனாலும் இருவரும் ஒன்றுசேரவில்லை. இருவருக்கும் தனித்தனியே திருமணம் நடக்கிறது. ராஜன் இப்போது ஆசிரியர். ராணி குடும்பத் தலைவி. பதினெட்டு வருடத்திற்குப் பிறகு இருவரும் சந்திக்கின்றனர். இந்தக் கதையில் ராஜன் பதற்றமாக இருக்கிறான். அவனது மனம் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைகிறது; நிலைகொள்ள முடியவில்லை. அவளைச் சந்திக்கப்போகும் தருணத்திற்காகக் காத்திருக்கிறான். இருவருக்குமானச் சந்திப்பில் ராணி ராஜனை இயல்பாக எதிர்கொள்கிறாள். ‘எல்லாம் கல்லுலதான் எழுதி வச்சியிருக்கு. காத்துல இல்லே. இன்னிக்கி இருக்கிற தைரியம் அன்னிக்கி இல்லே’ என்று ராணி கூறுகிறாள். இரண்டும் பெண்களின் நிறைவேறாத காதல் கதைகள்தாம். ஆனால் கதையின் முடிவு ‘பணியாரக்காரம்மா’ கதையிலிருந்து இதனை வேறுபடுத்துகிறது. இருவருமே குடும்ப அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பவர்கள். இந்த அமைப்பின்மீது ராணிக்குச் சில விமர்சனங்கள் உண்டு. அதனை மீற முயற்சிக்கிறாள். ‘நீ எங்க கூப்புட்டாலும் வர்றன். லாட்ஜ் மட்டும் வேண்டாம்’ என்கிறாள். ராஜனுக்கு உடல் நடுங்கத் தொடங்குகிறது. ராணியைச் சந்திப்பதற்கு முன்பிருந்த மகிழ்ச்சி காணாமல் போகிறது. இந்தக் கதையின் முடிவுமீது பல வாசிப்புகளை நிகழ்த்த முடியும். விவாதிப்பதற்கான வெளியை இக்கதையில் இமையம் விரிவாக்கியிருக்கிறார். ராஜன், ராணிக்குப் பண உதவி செய்ததால்தான் அவள் இவ்வாறு கேட்கிறாள் என்ற வாதத்தை அவளே தகர்த்துவிடுகிறாள். ராஜனுக்கு ராணியைப் பார்க்கவேண்டும்; அவளுடன் பேசவேண்டும்; அவ்வளவுதான். அந்த மகிழ்ச்சியே அவனுக்குப் போதுமானது. அதனைத் தாண்டி வேறொன்று இல்லை என்பது அவனின் நிலை. கண்ணன் செட்டியாரின் விருப்பத்தை நிறைவேற்றுகிறாள் நாகம்மா. ஆனால் ராணியின் விருப்பத்தை நிறைவேற்றத் தயங்குகிறான் ராஜன் என்ற வாசிப்பையும் நிகழ்த்தலாம். அவளின் பொருளாதாரநிலை அவளை இவ்வாறு கேட்க வைத்துவிட்டதோ என்ற எண்ணம்கூட ராஜனுக்கு உண்டு. இப்படிப் பல வினாக்களை இக்கதை முன்னெடுக்கிறது.
‘சாந்தா’ என்றொரு கதையின் முடிவுகூட வாசிப்பவர்களைத் தொந்தரவு செய்கிறது; பல வினாக்களை எழுப்புகிறது. பொதுப்பணித் துறையில் இஞ்சினியராக வேலைசெய்யும் செல்வகுமார் ஒரு வீடு கட்டுகிறார். அந்த வீட்டுக்குச் சித்தாள் வேலை செய்ய வருகிறாள் சாந்தா. சாந்தாவின்மீது செல்வகுமாருக்குள்ள ஈர்ப்புதான் கதை. இந்த உறவுக்குப் பெயர் காதலா, காமமா என்பதை அனுமானிக்கும் முடிவைப் புனைவை வாசிப்பவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இருவருமே திருமணமானவர்கள். சாந்தா, செல்வகுமாருக்குத் தன்மீது ஈர்ப்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறாள். மறைமுகமாகத் தன் விருப்பத்தை அவளிடம் தெரிவிக்கிறான். அவளுக்கு இவனைப் பார்த்துப் பரிதாபம் தோன்றுகிறது. அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவன், தன்னிடம் பணிந்து கிடப்பதைப் பார்த்து வருத்தப்படுகிறாள். எது தன் எல்லை என்பதையும் அவள் தெளிவாகப் புரிந்துகொள்கிறாள். ‘கார் கிளம்பும்வரை சிரித்த மாதிரி நின்றுகொண்டிருந்த சாந்தா, கார் கண்ணை விட்டு மறைந்ததும் அழ ஆரம்பித்தாள்’ என்று கதை முடிகிறது. இமையத்தின் பல கதைகளின் கடைசி வரி வாசிப்பின் எல்லைகளை விரிவாக்குபவை. ‘அழ ஆரம்பித்தாள்’ என்ற சொற்சேர்க்கைக்குப் பின்புள்ள அர்த்தத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது? செல்வகுமாரின் அன்பை அவள் அங்கீகரிக்கிறாள். அவனும் சாந்தாவுக்காகத் தன் நிலையிலிருந்து இறங்கி வருகிறான். காதலுக்கும் காமத்துக்கும் இடைப்பட்ட உறவின் வரையறைகளைப் புரிந்துகொள்வதில் பெரும் மனத்தடை உள்ளது. இமையம், புனைவின் இறுதியில் ஓர் அசைவை உருவாக்கி விடுகிறார்.
5
இமையம் கதைகளில் சித்தாள் வேலை செய்யும் பெண்களின் மனத்துயரங்கள் காத்திரமாகப் பதிவாகியுள்ளன. அப்பெண்கள் தினமும் எதிர்கொள்ளும் பாலியல் சீண்டல்கள் குறித்து விரிவான பார்வையை இவர் தம் புனைவுகளில் உருவாக்கியுள்ளார். இவரது புனைவுகளில் வெளிப்படும் கனமான பாத்திரங்களில் பெரும்பான்மை சித்தாள் வேலை செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் அந்த வேலைக்குச் செல்லநேர்ந்த சூழலையும் நாம் அவதானிக்க வேண்டும். சாந்தா, தனியார் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்குப் பணம் கட்டுவதற்காகச் சித்தாள் வேலைக்கு வருகிறாள். ராணியின் பணத் தேவைக்கும் பிள்ளைகளின் படிப்புச் செலவுதான் காரணம். இமையம் தம் கதைளினூடாகத் தனியார் பள்ளிகளின் பெருக்கம் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் இடையீடுகளைக் கவனப்படுத்திக்கொண்டே இருக்கிறார். எளிய மக்களின் மனங்களிலும் தனியார் பள்ளிகளின் மோகம் அழுத்தமாகப் பதிந்துள்ளது என்பதையே அப்பள்ளிகளின் பெருக்கம் காட்டுகிறது. ‘ஆஃபர்’ என்ற சிறுகதை, தனியார் பள்ளிகளின் போட்டி மனப்பான்மையையும் அவை வழங்கும் சலுகைகளையும் பகடி செய்யும் தொனியில் எழுதப்பட்டதாகும். ரியல்எஸ்டேட் தொழிலைப் போன்று மாணவர்களின் சேர்க்கையும் இன்று நடைபெறுகிறது. ஆள் பிடிக்கும் வேலையையும் ஆசிரியர்கள்தாம் செய்யவேண்டும். பெரிய கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களைப் பிடித்துத்தரும் வேலையைச் செய்ய பல முகவர்கள் இருக்கிறார்கள். காத்திரமான கதையாக உருப்பெற்றிருக்க வேண்டும்; நகைப்பை ஏற்படுத்திவிட்டுக் கடந்துவிடுகிறது.
‘அணையும் நெருப்பு’, ‘பொன்னம்மாவின் குடும்பக் கதை’, ‘திருட்டுப்போன பொண்ணு’ போன்ற கதைகளில் வெளிப்படுவது பெண்களின் கடக்க முடியாத துயரங்கள். பெண்கள்தாம் இமையம் கதைகளின் ஆன்மா. அவர்களிடம் அவ்வளவு கதைகள் பொதிந்து கிடக்கின்றன. இந்தப் பெண்களின் துயரங்களுக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கிறார்கள்; அல்லது ஆண்மையச் சமூகம் காரணமாக இருக்கிறது. ‘துயரங்களை வலிந்து எழுதுகிறார்’ என்ற விமர்சனம் இவரது புனைவுகள்மீது உண்டு. இந்தக் கதைகள் அவர்களுக்குச் சாதகமானவை. சந்தோஷம் என்ற பெண்ணின் கதை ‘அணையும் நெருப்பு.’ உத்திகளில் நம்பிக்கையற்ற இமையம், வடிவரீதியாக வேறொரு வகையில் முயற்சி செய்திருக்கிறார். சந்தோஷம் மட்டும்தான் இக்கதையில் கடைசிவரை பேசுவாள். எதிரில் ஓர் ஆண் பேசாமல் அமர்ந்திருப்பான். அவன் பேசவேண்டிய இடங்களில் வெறும் புள்ளிகள் மட்டுமே இருக்கும். பதினைந்து வயதில் இவளுக்குத் திருமணம் நடந்திருக்கும். பதினேழு வயதில் இரு குழந்தைகளுக்குத் தாய். தற்போது முதல் மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். கணவன் இறந்துவிட்டான். இவளைத்தான் இருபது வயதைக் கடந்த பையன் ஒருவன் ஒருவருடமாகப் பின்தொடர்கிறான். ஆண்களின் பார்வையில் பெண்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதுதான் இக்கதையின் மையம். ஒரு காவலரின் மனைவியான இவள், தற்போது ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ‘என்ன நெனப்புல எம் பின்னாலியே சுத்தி வர்ற?’ என்ற அவளின் கேள்விக்கு உண்மையான பதில் ஒன்றுதான். பொய்யான பதில்கள் கணக்கற்றவை. இந்தப் புனைவினூடாக இரண்டு விஷயங்களை இமையம் வாசகர்களுக்குக் கடத்த முயன்றிருக்கிறார். ஒன்று, பெண்களின் இளம் வயது காதல் அவர்களின் எதிர்காலத்தையே அழித்துவிடுகிறது. எட்டாம் வகுப்பில் இவளுக்கு வந்த காதல், இளம்வயது திருமணத்திற்கு வழிகோலுகிறது. படிப்புத் தடைபடுகிறது. ஆனால், இவள் காதலித்த பையன் இன்று ஆசிரியர். பெண்களின் இந்தப் பிரச்சினையைப் பல புனைவுகளில் இமையம் விவாதித்திருக்கிறார். இரண்டு, ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் ஊடகங்கள்.
அசுரத்தனமாக வளர்ந்துள்ள ஊடகங்களின் பசிக்குச் சந்தோஷத்தின் வாழ்க்கை இரையாகிவிடுகிறது. இவள் கணவனின் இறப்புக்குப் பிறகு, இவளுக்குக் கிடைக்கவேண்டிய அரசு உதவிகளைப்பெற காவல் ஆய்வாளர் ஒருவர் உதவுகிறார். யாரு சும்மா உதவுவார்கள். இதனை அறிந்த ஆய்வாளரின் மனைவி தற்கொலை செய்துகொள்கிறாள். விஷயம் ஊடகங்களுக்குப் போகிறது. ‘பத்திரிகைக்காரனும் டி.வி.க்காரனும் எவ எவங்கூட போனாங்கிறதப் படம்புடிக்கத்தான அலயுறானுவ. ஒரு வாரம் பத்து நாளு நான் ஒண்ணுக்கு வுடப் போன எடம், கக்கூஸ் போன எடமெல்லாம் வந்து வளச்சி வளச்சிப் படம் புடிச்சானுவ’ என்கிறாள் சந்தோஷம். அவமானத்தில் சந்தோஷத்தின் அம்மா தற்கொலை செய்து கொள்கிறாள். இரண்டு தற்கொலையும் சந்தோஷத்தின் வாழ்க்கையை முடக்கிவிடுகிறது. ஊடகங்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கிறார் இமையம். ‘மணலூரின் கதை’ என்ற சிறுகதையை வாசித்தால் இதனை உணரமுடியும். ‘இருக்கிறத அப்பிடியே காட்டுறது டி.வி. இல்லெ. இருக்கிறதயும் இல்லாததயும் இணைச்சிக் காட்டுறது. புரியுதா? கொல, கொள்ள, கற்பழிப்பு, விபச்சாரம்ன்னு சனங்ககிட்டே பாப்புலரான விஷயமா சொல்லணும்’ (மணலூரின் கதை) என்பதுதான் ஒட்டுமொத்த ஊடகங்களின் மனநிலை. சந்தோஷம் இப்படித்தான் சீரழிக்கப்படுகிறாள்.
‘திருட்டுப்போன பொண்ணு’ என்ற கதையில், ராஜ கம்பளத்துத் தொட்டி நாயக்கர் சாதியைச் சார்ந்த ஒரு பெண்ணின் துயரத்தை எழுதியிருக்கிறார். ஊர் நடுவில் குடிசை அமைத்து, வயதிற்கு வந்த பெண்களைப் பதினாறு நாள்முதல் இருபத்தோர் நாள்வரை தங்கியிருக்கச் செய்வார்கள். இது அந்தச் சாதியின் பண்பாடு. சடங்கு முடியக்கூடிய ஒருநாள் அந்தப் பெண் ஒரு சிலரால் குடிசையிலிருந்து தூக்கிச் செல்லப்படுகிறாள். இப்போது அவள் அனைவருக்கும் திருட்டுப்போன பெண்ணாகிறாள். எந்தக் களங்கமும் இல்லாமல் அவள் வீடு சேர்கிறாள். ஆனாலும் அவளைத் திருமணம் செய்துகொள்ள ஓர் ஆணும் முன்வரவில்லை என்பதுதான் கதை. ‘திருட்டுப்போன பொண்ணு’ என்ற பெயரின் புதுமையைக் கண்டு ஆய்வாளர்கள் இருவர் தேடி வருகின்றனர். அவர்களிடம் இவள் சொல்வதுதான் கதை. இச்சமூகம் கட்டமைத்துள்ள பெண்களுக்கு எதிரான சடங்குகளை இமையம் இக்கதையினூடாக விரிவாக விவாதிக்கிறார். ‘என்னெக் கட்டிக்கத்தான் ஒருத்தனும் வல்லெ. ஆனா எங்கூட படுக்கிறதுக்கு ஊரே அலஞ்சிச்சி’ என்று என்கிறாள். திருமணம் என்கிற சடங்கின்மீது நிறைய விமர்சனங்களை எழுப்புகிறார் இமையம். திருமணம் செய்துகொண்ட பெண்கள் அனைவரும் பூரணத்துவம் அடைந்துவிட்டதாகப் பொண்ணு கருதவில்லை. அவர்களைவிட என்னுடைய வாழ்க்கை மேலானதுதான் என்ற இடத்திற்கு உரையாடலை நகர்த்துகிறாள். ‘ஊருல ஒலகத்தில இருக்கிற பொண்டுவோ படும் பாட்டெப் பாக்கயில என் சீவனம் மோசமில்லெ’ என்கிறாள். ராஜ கம்பளத்துத் தொட்டி நாயக்கர் பின்பற்றும் பண்பாடுதான் பொண்ணுவை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது. இன்று அவள் காட்சிப்பொருள். அந்தச் சாதியில் உள்ள ஆண்கள், வயதிற்கு வந்த பெண்களைத் தனதாக்கிக்கொள்ள தூக்கிச் செல்வதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். ‘ஒருத்தங்கூட படுக்கல. ஒரு புள்ளக்கிப் பாலு கொடுக்கல. வேற என்னா கொற?’ என்று பொண்ணு கேட்கிறாள். இமையம் ஒவ்வொரு கதையிலும் விவாதிப்பதற்கான விரிவான களத்தை உருவாக்கிக் கொள்கிறார். அவர் கதைகளுக்கு உருவாக்கிக்கொள்ளும் புறச்சூழல்கள்தாம் கதைகளை மேலும் மேலும் நகர்த்திச் செல்வதற்கு அடித்தளமாக அமைகிறது. குயவர் இனத்துப் பெண்ணின் துயரக்கதைதான் ‘பொன்னம்மாவின் குடும்பக் கதை.’ ஒரு குடும்பத்திற்கு மூத்த மருமகளாக வாழ்க்கைப்பட்டுப்போன பொன்னாம்மாதான் இக்கதையைச் சொல்கிறாள். மூன்று புனைவுகளுமே காவியத் தன்மை கொண்டவை. பெரிதாகக் கண்டுகொள்ளப்படாத ஒடுக்கப்பட்ட பெண்களின் துயரங்களையே இமையம் தொடர்ந்து தம் புனைவுகளில் கவனப்படுத்தி வருகிறார். வெவ்வேறு சாதியைச் சார்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்களது துயரங்களின் நிறம் ஒன்றாக இருப்பதை இக்கதைகளை ஒருசேர வாசிக்கும்போது அறியலாம்.
6
படித்த பெண்களுக்கு இச்சமூகம் அளித்துள்ள இடமும் குறிப்பிடும்படி இல்லை. ‘வீடும் கதவும்’ என்ற புனைவில் இரண்டு படித்த பெண்களின் கதையை எழுதியிருக்கிறார். ஒருத்தி சகுந்தலா; ஒன்பது வருடமாக ஊராட்சி மன்றத் தலைவி. மற்றொருத்தி ரேவதி; பள்ளி ஆசிரியை. உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் நின்று வெற்றிபெற்ற சகுந்தலா, ஒருநாளும் அந்த நாற்காலியில் அமர்ந்ததே இல்லை. ‘பிரசிடண்டுதான். ஆனா எப்பவும்போல சோறுதான் ஆக்குறன். துணிதான் துவைக்கிறன். வீட்டு வேலதான் செய்யுறன்’ என்பது சகுந்தலாவின் குரல். இதனை ஒட்டுமொத்த பெண் பிரதிநிதிகளின் குரலாகவும் கேட்கலாம். வார்டு உறுப்பினர்கள் முதல் முதலமைச்சர்கள் வரை பெண்கள் ஆண்களின் பினாமிகளாகச் செயல்பட மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அரசியலில் பெண்களின் அதிகாரம் என்பது அவர்கள் சார்ந்திருக்கிற ஆண்களின் அதிகார வரம்பிற்குட்பட்டது. அறுபத்து நான்காயிரம் சம்பளம் வாங்கும் ரேவதி டீச்சருக்கு, அவள் ஏ.டி.எம். கார்டின் பின் நெம்பர்கூடத் தெரியாது. இந்தக் கதையில் நாயொன்று இடம்பெறும். அதன் கழுத்தில் சங்கிலி கட்டப்பட்டிருக்கும். அந்த நாயின் புழங்கு எல்லை சங்கிலியின் நீளத்தைப் பொறுத்தமைகிறது. இந்த இரண்டு பெண்களின் கதையும் பலருக்கும் தெரிந்ததுதான். பெண்களைப் பொறுத்தவரை அனைவருமே ஒடுக்கப்பட்டவர்கள் என்பதை இவரது புனைவுகள் தொடர்ந்து நிறுவுகின்றன. அதிகப்படியான விவரிப்பு கதைக்குப் பிரச்சாரத் தன்மையைக் கொடுத்துவிடுகிறது. இமையத்தின் சிறுகதைகள் குறிப்பிட்ட ஒருசமூகத்தை மையமிட்டு இயங்கவில்லை என்பதற்கு இந்த நான்கு கதைகளுமே சான்று.
உறவுகளின் தன்மைகளைப் பற்றி இமையம் தொடர்ந்து எழுதி வருகிறார். அதில் அம்மா குறித்த புனைவுகள் கூடுதல் கவனம் பெறுபவை. ‘அம்மா’, ‘அம்மாவின் இடம்’, ‘நிஜமும் பொய்யும்’ ஆகிய மூன்று கதைகளும் வெவ்வேறு தளங்களில் இயங்கக்கூடியவை. ‘நிஜமும் பொய்யும்’ என்ற கதை கடித உத்தியைப் பயன்படுத்தி எழுதியிருக்கிறார். நகரத்தில் வேலைசெய்யும் மகன், அம்மாவுக்குக் கடிதம் எழுதுகிறான். கிராமத்தில் மகனின் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் அம்மா, மகனுக்குக் கடிதம் எழுதுகிறாள். இதில் அம்மா எழுதும் கடிதம், மகன் எழுதும் கடிதத்தைவிட நூறு மடங்கு ஆழமானதாக இருக்கிறது. கடிதத்தை எழுதித் தருபவன்கூட அவளின் அன்பின் பரப்பைப் புரிந்துகொண்டு வார்த்தையாக்குவதில் தோற்றுப்போகிறான். வழக்கம்போல் அவன் பலருக்கும் எழுதும் தட்டையான கடிதமாகத்தான் அது உருப்பெறுகிறது. அம்மாவின் அன்பை வார்த்தைகளில் பிடிக்கமுடியாது என்ற படிமத்தை இமையம் இக்கதையில் உருவாக்குகிறார். ஒருவர் மற்றொருவர்மீது கொண்டுள்ள அன்பைக் கடத்துவதில் ஒவ்வொருவரும் தோற்றுப் போகிறார்கள் என்ற இடத்தையும் பிரதி அடைகிறது. இருவரின் கடிதங்களிலும் வெளிப்படுவது அம்மாவின் இணையற்ற அன்புதான் என்பது இக்கதையின் பலம். ‘முந்தின மாசம் அனுப்புன பணத்தில சோத்துக்கு வாங்காம ‘பேரன் பொறந்தா வெள்ளி அர்ணாக்கொடி வேணுமே’ன்னு எடுத்து வச்சியிருக்கியாமே? இன்னும் கல்யாணமே நடக்கல. அதுக்குள்ளார கொடிக்கென்ன அவசரம்?’ என்பது மகனின் கடிதம். ‘காசி பத்தலன்னா சொல்லு, இங்க இருக்கிற ரெண்டு பயிர் ஆட்டெயும் வித்து அனுப்புறன்’ என்பது அம்மாவின் கடிதம். மகனின் கடிதம் நெருக்கடியில் எழுதப்படுகிறது; அம்மாவின் கடிதம் நிதானத்தின் வடிவமாக இருக்கிறது. மகன் நெருக்கடியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அம்மாவுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. எழுதத் தெரிந்த மகனால் அம்மாவுக்குக் கடிதம் எழுத முடியவில்லை; தெரியாத அம்மாவுக்கு, மகனுக்குக் கடிதம் எழுதுவது மகிழ்ச்சியின் உச்சமாக இருக்கிறது.
அம்மா-மகனுக்குள்ள இடைவெளியை ‘அம்மா’ என்ற கதையினூடாக விளங்கிக் கொள்ளலாம். இக்கதையில் வரும் கருப்புசாமி, மாமியார் வீட்டுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன். அம்மாவிடம் பேசுவதற்குக்கூட நேரக்கணக்குப் பார்ப்பவன். நகர வாழ்க்கை உறவுகளுக்குள் தொடர்ந்து இடைவெளியை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அம்மாக்களால் நகர வாழ்க்கைக்குத் தங்களை ஒப்புக்கொடுக்க முடியவில்லை. அடைபட்டுக் கிடக்கும் வீடுகள் அவர்களுக்குப் புழுக்கத்தை ஏற்படுத்துகின்றன. ‘அம்மாவின் இடம்’ என்ற கதை, நகரப் புழுக்கம் மனிதர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும் இடைவெளியை மேலும் கூர்மைப்படுத்துகிறது. ஐடிஐ படித்துவிட்டுக் குறைந்த ஊதியத்திற்குத் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்கிறான் மகன். ஒரே அறையுள்ள வீடு. மூன்று குழந்தைகள். நிச்சயமில்லாத வேலை. தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கட்டணத் தொல்லை. மனைவியுடனான நெருக்கப் பிரச்சனை என எல்லாம் சேர்ந்து மகனை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. நிம்மதியாக கிராமத்தில் வாழ்ந்த அம்மா, தெருவில் படுத்துக் கிடக்கிறாள். மகன் படித்துவிட்டு கம்பெனியில் வேலை செய்கிறான் என்ற பெருமையைத் தவிர, நகரவாழ்க்கை அவளுக்கு வேறெதையும் பெற்றுத் தரவில்லை. அம்மாவினுடைய காதில் விழுமே என்ற எண்ணம்கூட இல்லாமல் முட்டாள், பட்டிக்காடு, கிழவி, முண்டம் என்றெல்லாம் அம்மாவைத் திட்டும் நெருக்கடியை நகர வாழ்க்கை அவனுக்குப் பரிசளிக்கிறது. வெளியே படுத்துக்கிடந்த அம்மாவின் இடம் காலையில் காலியாகக் கிடக்கிறது என்று கதை முடிகிறது. இமையம் புனைவில் உருவாகியுள்ள அம்மாக்கள் அனைவருமே நகர வாழ்க்கைக்குள் தங்களைப் பொருத்திக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். நகரத்தின் சில நாட்களின் வாழ்க்கையே அவர்களைக் கிராமத்தை நோக்கித் திருப்பிவிடுகிறது. ‘ஒங்கம்மாவ கூடவே வச்சிக்கிறத நானா வேணாங்கிறன். அதுக்குப் பெரிய பங்களாவக் கட்டிப் போட்டிருக்கணும்’ (அம்மாவின் இடம்) என்று மருமகள் பேசுகிறாள். வீடு பெரியதாக இருந்தால் அம்மாவை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளலாம் என்பது ஒரு கற்பிதம். இமையம் இந்தக் கருதுகோளையும் உடைத்துவிடுகிறார்.
அம்மாவிற்குத் தேவை பெரிய வீடும் வசதியான வாழ்க்கையும் இல்லை என்பதை மறுபரிசீலனை செய்யும் கதை, ‘சொந்தவீடு.’ நகரத்தில் வசதியாக வாழும் மகன், தன் அம்மாவுக்குத் தனி அறையைக் கட்டித் தருகிறான். அனைத்து வசதிகளும் அந்த வீட்டில் இருக்கின்றன; அம்மா வெறுமையை உணருகிறாள். அந்த வீட்டில் யாரும் மற்றவர்களுடன் பேசுவதே இல்லை. பேரக் குழந்தைகள்கூட அவளிடம் பேசுவதில்லை; அதற்கானச் சூழல் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. பள்ளிக்குச் செல்கிறார்கள்; பள்ளி முடிந்ததும் டியூஷன். வீட்டிலிருக்கும் சமயங்களிலும் ஏதாவது எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். மருமகளுக்கு டிவி; மகனுக்குக் கணினி. கிராமத்திற்கே திரும்பிவிடலாம் என்ற முடிவை மகனின் அனைத்து வசதிகளும் நிரம்பிய வீடுதான் எடுக்க வைக்கிறது. அம்மாவின் மகிழ்ச்சிக்கு வீடு ஒரு பிரச்சினை இல்லை என்ற முடிவை இக்கதை எட்டுகிறது. அப்பாவிற்கும் மகனுக்குமான உறவைச் சொல்லும் கதை ‘பரிசு.’ இக்கதையில் வரும் ராமசாமி கதாபாத்திரம் மனதை நிறைக்கிறது. பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறார். காதல் திருமணத்தினூடாக வனஜா என்ற பெண் அந்தக் குடும்பத்திற்குள் நுழைகிறாள். வீடு நகரமயமாகிறது. ஹீரோ ஹோண்டா வண்டி, ஹோம் தியேட்டர், ஏ.சி., விலை உயர்ந்த கேமரா உள்ள இரண்டு செல்போன் என எல்லாம் உள்ளே வருகிறது. வீட்டிலிருந்த வடக்கயிறு, பூட்டாங்கயிறு, ஏர் கலப்பை, முறம், மரக்கால் உள்ளிட்டவையெல்லாம் வெளியே போகிறது. இந்த மாற்றத்தை அழகாகப் புனைவாக்கியிருப்பார் இமையம்.
நிறைய அம்மாக்களைப் பற்றி எழுதிய இமையம், மருமகள்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். பெரும்பான்மை மருமகள்கள் பழமையுடன் பொருந்த முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். நிறைய விமர்சனங்களை அவர்கள்மீது வைக்கிறார். இக்கதையின் வனஜாவும் அதில் ஒருத்தி. நவீன வாழ்க்கை முறைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட வனஜாவால் அதிலிருந்து மீளமுடியவில்லை. மனைவியின் சொல்லை மகனாலும் தட்டமுடியவில்லை. மகனுக்கு மனைவியை எதிர்ப்பதைவிட தந்தையைப் புறக்கணிப்பது எளிதாக இருக்கிறது. ‘நான் ஒனக்குத்தான் பொறந்தனான்னு தெரியல’ என்ற கேள்வியை அவனால் எளிதாகக் கேட்டுவிட முடிகிறது. ஆனால் அந்தக் கேள்வியை ராமசாமியால் எளிமையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார். நவீன பொறிகளின்மூலம் பெற்ற வாழ்க்கைமுறை, நம் மரபைத் திருப்பிப் போடுகிறது. மகனுக்கு வள்ளுவன் என்று பெயர் வைக்கிறார் ராமசாமி. ரேஷ்மா, க்ருஷி, மோனிகா என்று தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் பெயர் வைக்கிறாள் வனஜா. இந்த மாற்றங்களைக் கூர்ந்து அவதானித்து வருபவர் இமையம். பல கதைகளில் இதுபற்றி விவாதித்திருக்கிறார்.
இமையம் சிறுகதைகளில் சிறுவர்களின் இடமும் விசாலமானது. அக்காவுக்குப் பிறக்கும் குழந்தை, தனது இடத்தை அபகரித்துக் கொண்டதாக உணரும் தம்பியின் கதை ‘எமன்.’ திருமணவீட்டில் நெல்லுச்சோறு சாப்பிட பிரயத்தனப்படும் சிறுவர்களின் மனநிலையைச் சித்திரிக்கும் கதை ‘நெல்லுச் சோறு.’ திருவிழாவில் வீடியோ பார்க்க பாயிக்காகப் போராடும் கதை ‘வீடியோ மாரியம்மன்.’ கிராமங்களில் பாய் என்பதே செல்வத்தின் குறியீடாக உணர்ந்துள்ள சிறுவர்களின் மனநிலையை இமையம் பிடித்திருப்பார். சாக்குப்பை என்பது ஏழ்மையின் சின்னம். பாய் சாக்கின்மீது அதிகாரம் செலுத்துகிறது. பாய் வைத்திருப்பவன் அதிகாரம் செலுத்துவதற்கு உரிமையுடையவனாகிறான். தவிட்டை வறுத்துத் தின்று பசியாறும் இரண்டு சிறுவர்களைப் பற்றிய கதை, ‘பசிக்குப் பின்.’ ‘எமன்’ கதையைத் தவிர பிற கதைகளனைத்தும் வறுமையைப் பின்னணியாகக் கொண்டவை. ஆனால் எந்தக் கதையிலும் வறுமையை வெறுக்கும் தொனி இல்லை. அவர்களுக்கான வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். மருமகள்களிடம் மட்டும் சிறு முனகல் உண்டு. அதனைக்கூட அவர்கள் கணவனையும் மாமியாரையும் வீழ்த்தும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
7
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ‘பெத்தவன்’ கதையை இமையத்தின் சாதனையாகப் பலரும் கூறுகின்றனர். ஒரு சிறுகதையின் மீதான இத்தகைய உயர்வான மதிப்பீடுகள் அவரது பிற படைப்புகளின் வீரியத்தை மழுங்கடித்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. ‘சாவு சோறு’ என்றொரு கதையை எழுதியிருக்கிறார். இரண்டு புனைவுகளுக்கும் தொடர்ச்சி உண்டு. வேறொரு சாதியைச் சார்ந்தவனுடன் ஓடிப்போன தன் மகளைத் தேடி பள்ளிகளெங்கும் அலைகிறாள் அம்மா. எம்.எஸ்ஸி., எம்.எட். படித்திருக்கும் மகள், எங்காவது ஒரு பள்ளியில் வேலை செய்வாள் என்பது அம்மாவின் அசட்டு நம்பிக்கை. மகளுக்குச் சேரவேண்டிய நகை மற்றும் பணத்துடன் அவளின் கல்விச் சான்றிதழ்களையும் வைத்துக்கொண்டு தேடிக் கொண்டிருக்கிறாள். சாதியத்தின் இழிவைப் பேசும் அதே தருணத்தில், ஆண்களின் போலியான வாக்குறுதிகளை நம்பி மோசம்போகும் பெண்களையும் இக்கதை எச்சரிக்கிறது. ‘பொட்டச்சிக்கிப் பணம் காசா பெருசா தெரியுது? நகநட்டா பெருசா தெரியுது? நாலு நல்ல வாத்தத்தான பெரிய மலயாத் தெரியுது. அதெ நம்பிப் போயிடுறாளுவ’ என்கிறாள் அம்மா. அரசுப் பள்ளியில் உதவியாளராக இருக்கும் பெண்ணும் இவளும் விரிவாக உரையாடுகிறார்கள். இவர்களின் உரையாடல், அனைத்தையும் விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்கிறது. ‘மூவாயிரம் பொட்ட புள்ளங்க படிக்கிற எடத்தில ஒரு கக்கூஸ் ரூமுகூட இல்லெ. அப்பறம் பன்னி வராம என்னா செய்யும்’ என்ற உரையாடல் கதைக்கு அந்நியமானதாகத் தோன்றலாம். இந்தத் தன்மைதான் இமையம் சிறுகதைகளின் சிறப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. அந்தப் பெண்களின் பேச்சில் சகலமும் அரைபடும். பேசுவதற்கான சூழலை மட்டும் இமையம் உருவாக்கிவிடுகிறார். பள்ளிகளில் படிக்கும் மாணவிகள், சினிமா மோகத்தில் தங்களை எளிதில் அழித்துக்கொள்கிறார்கள் என்பதை இமையம் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘இப்ப அயிது என்னாப் பண்றது? ஒங்கூடத்தான் அந்தப் பயலும் படிச்சான். வேலைக்கும் போயிட்டான். அவனப் பாத்து ஊரே பயப்படுது. கட்சிக்காரனே அஞ்சுறான். ஆனா ஒன்னெ பாத்து ஊரே சிரிக்குது’ (பெத்தவன்) என்று பழனி பேசுகிறார். காதல் திருமணங்களைப் பற்றி எழுதும்போதெல்லாம் இமையம் பெண்கல்வியின் அவசியத்தையும் சேர்த்துதான் எழுதுகிறார். கல்வி சமூக அங்கீகாரத்தை உருவாக்கித் தரும்; ஆண்களை நம்பிப் பெண்கள் தங்கள் படிப்பை வீணாக்கிக் கொள்கிறார்கள் என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்துகொண்டே இருக்கிறார்.
‘பெத்தவன்’ கதையில் வரும் பழனி, மகளின் உயிரையும் தனது வாக்கையும் காப்பாற்ற தற்கொலை செய்துகொள்கிறார். ‘சாவு சோறு’ புனைவில் வரும் பூங்கோதை, தன் உயிரையும் பொருட்படுத்தாது மகளைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறாள். இவளுக்கும் மகளின் உயிரைச் சாதியத்திற்குப் பலிகொடுக்கக் கூடாது என்கிற ஆசைதான். பழனி கதாபாத்திரம் கதையின் இறுதியில்தான் துலக்கமடைகிறது. பூங்கோதை கதையின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை மகளின் நலனில் அக்கறை கொண்டவளாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். இரு புனைவும் ஆண்களின் குடும்பத்தைப் புறக்கணித்திருப்பதை உணரலாம். ‘சாவு சோறு’ கதையில் ஆணுக்கு அம்மா மட்டும்தான் உறவு. அவளும் மகனின் செயலுக்கு எதிர்வினையாற்ற முடியாமல் தூக்குபோட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். இந்தச் சாவு குறித்துப் புனைவு கவலைப்படவில்லை. ஒற்றை வரித் தகவலுடன் கடந்துபோய்விடுகிறது. ‘பெத்தவன்’ கதையில் வரும் ஆண் காவல்துறையில் பணிபுரிகிறான். இவன் (சாவு சோறு) வீடியோ படமெடுக்கிறான். வேலை என்பது சாதிக்கு முக்கியமில்லை. ஆனாலும் இரண்டு ஆண்களிடமும் ஒரே தாக்குதலைச் சாதியம் நிகழ்த்தவில்லை என்ற நுட்பத்தை விளங்கிக்கொள்ள வேண்டும்.
8
கிராமங்களில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகளைப் புரிந்துகொள்ள இயலாத நகரச் சமூகத்திற்கு இரண்டு கதைகளுமே தர்க்கக் குறைபாடுடையதாகத் தோன்றும். ‘எம் மவ முலய அறுக்கத்தான் எம் புருசனும் எம் மவனுவுளும் சாதி சனத்தோட ஊர் ஊரா தேடிக்கிட்டு அலயறாங்க’ என்று பூங்கோதை சொல்கிறாள். ‘கீச்சாதி பயகூட படுக்கத்தான அலயுறா. அதுக்கு மின்னாடி நம்ப காரியத்த முடிக்கணும்ன்னு சொல்லி ஏயி எட்டு எள வயசுப் பயலுவோ சுத்துறானுவ. கட்சிக்காரன்தான் இதுல மின்ன நிக்குறான்’ என்று பழனி பேசுமிடமெல்லாம் புனைவிற்கு அப்பாற்பட்ட தாக்குதல்கள். சாதியத்தின்மீது தீவிரத் தன்மையைக் கூட்டுவதற்கும் அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்குவதற்கும் இமையம் முயன்றிருக்கிறார் என்ற இடத்தை புனைவு அடைந்துவிடும் ஆபத்தும் இவைபோன்ற உரையாடல்களில் ஒடுங்கியிருக்கிறது. இமையம் நின்று எழுதும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் இன்று சமநிலை அடைந்திருக்கிறார்கள். அவர்களை மையமிட்டு இயங்கும் அரசியல் கட்சியும் இன்று பலமாகச் செயல்படுகிறது. எண்பதுகளுக்கு முன்பிருந்த வெளிப்படையான சாதிய ஒடுக்குதல்கள் இன்றில்லை. மாடுகளுக்கானப் போட்டியில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் மாடு வெற்றி பெற்றதற்காக அவனைக் குத்திக் கொன்றார்கள் (நன்மாறன் கோட்டைக் கதை) என்பதெல்லாம் புனைவைத் துருத்திக்கொண்டு நிற்கின்றன. இன்றைய ஊடக வெளிச்சத்தில் எதனையும் மறைக்க முடியாது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவரின் பிணத்தைத் தூக்கியதற்காக ஆதிக்கச் சாதியைச் சார்ந்த ஒருவன், தனது காவலர் வேலையை விடத் துணிகிறான் (போலிஸ்) என்பதுகூட யதார்த்தத்தை மீறிய எழுத்து. கூட்டிப் பெருக்கும் வேலைக்குக்கூட இன்று நாயாய் அலையும் நிலைதான் நாட்டில் இருக்கிறது என்பது இமையத்திற்குத் தெரியாததன்று.
தன் உயிரைக் கொடுத்து மகளைக் காப்பாற்றிய பழனி யதார்த்தத்தின் சாட்சியமாக இருக்கிறார். அதுபோன்ற மெய்ந்நிகர் கதாபாத்திரங்கள்தாம் புனைவின் பலம். மகள்மீது அன்புகொண்ட அப்பனால் இதனைத்தான் செய்திருக்க முடியும். ‘பெத்தவன்’ கதை வெற்றிபெற்றதற்கு அதுதான் காரணமாக இருக்க முடியும். ‘சாவு சோறு’ கதை பேசப்படாமல் போனதற்குப் ‘பெத்தவன்’ கதைதான் காரணம். இரண்டும் ஒரே தன்மையிலான கதை. ‘சாதி பற்றிய கதைகளை எழுதும்போது இமையம் குறுக்கீடு செய்கிறார்’ என்ற விமர்சனத்தை முன்வைப்பதற்கான நிலைக்களனை அவரே உருவாக்கி விடுகிறார். காலத்தால் அழிக்க முடியாத ‘பணியாரக்காரம்மா’, ‘கட்சிக்காரன்’ ‘அணையும் நெருப்பு’ போன்ற வெவ்வேறு உருவத்திலான கதைகளை இமையம் எழுதவேண்டும்.
இவரின் முதல் கதையான ‘மண்பாரம்’ ஒரு விவசாயியின் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளும் கதை. மானாவாரி விதைப்பின் நுணுக்கங்களை இக்கதை பேசுகிறது. கார்ப்பரேட் கம்பெனியிடமிருந்து தனது நிலத்தைக் காப்பாற்றப் போராடும் ஒரு பெரியவரின் கதை ‘உயிர்நாடி.’ இனி தனது நிலத்தைத் தன்னால் காப்பாற்ற முடியாது என்ற சூழலில் உயிரை விடுகிறார். விவசாயிக்கும் நிலத்துக்குமான உறவைச் சொல்லும் அருமையான கதை. நிலம் கையைவிட்டுப் போய்விட்டால் அந்த வீடே நிர்வாணமாகிவிடும் என்ற பார்வை இந்தக் கதையில் உண்டு. விவசாயமே இந்த மண்ணின் உயிர்நாடி. இமையம் எழுத்தில் மேலும் ஒளிபடவேண்டிய களம் இது.
பெண்கள்தாம் இமையம் எழுத்தின் பலம். மரபாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருவிழாவின் வடிவம் மாறுவதை உணர்த்தும் கதை ‘வீடியோ மாரியம்மன்’. இந்தக் கதையின் முடிவில் வெளிப்படுவதுகூட ஒரு பெண்ணியச் சார்புதான். ராணியின் அண்ணன் பூபாலன். அவன் வான்மதி என்ற பெண்ணைக் காதலிக்கிறான். ராணி, கணேசனைக் காதலிக்கிறாள். ஊரில் வீடியோ ஓடிக் கொண்டிருக்கிறது. ராணியும் கணேசனும் தனிமையில் சந்திக்க ஓரிடத்திற்கு வருகின்றனர். அங்கிருந்த புதரிலிருந்து பூபாலனும் வான்மதியும் வெளியே வருகிறார்கள். பூபாலன், ராணியைப் பார்த்து அதிர்ச்சியடைவில்லை; ராணிதான் அண்ணனைப் பார்த்து அதிர்ந்துபோகிறாள். ‘ஊட்டுக்கு வா, ஒன்னெப் பேசிக்கிறேன்’ என்று கோபமாக வெளியேறுகிறான். அரளிச் செடியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் என்று கதையை முடிக்கிறார் இமையம். மரபின் வீழ்ச்சியை எழுத முனைந்த இடத்தில்கூட ஆணின் காதலுக்கும் பெண்ணின் காதலுக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியை கோடிட்டுக் காட்ட அவர் தவறுவதில்லை. பெத்தவன் உருவாக்கிய மிகை வெளிச்சம் இமையத்தின் எழுத்துப் பாதையைத் திசைதிருப்ப முயன்றிருக்கின்றன. ‘கட்சிக்காரன்’ கதையை எழுதியதினூடாக அவர் மீண்டும் தான் செல்லவேண்டிய வழிக்குத் திரும்பிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
இமையத்தின் சில கதைகளின் முடிவு நம்பிக்கை வறட்சியை ஏற்படுத்துகின்றன. பெத்தவன், உயிர்நாடி, பரிசு, வீடியோ மாரியம்மன், துபாய்க்காரன் பொண்டாட்டி போன்ற பல கதைகள் தற்கொலைகளில் முடிகின்றன. சமூக முரண்களுடன் போராடும் கதாபாத்திரங்கள் இவரது புனைவுகளில் குறைவு. அனைத்து உள்முரண்களையும் விவாதிக்கும் இவரின் மனிதர்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதில் நிம்மதியடைகிறார்கள். அப்புனைவின் முடிவில் வெளிப்படுவது விழுங்க முடியாததொரு கசப்புணர்வுதான். வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை இமையத்தின் சிறுகதைகளில் ஊறுகாய் அளவுக்குக்கூட பார்க்க முடியவில்லை. சோகம் இவரெழுத்தின் ஆணிவேராக நிலைகுத்தி நிற்கிறது. இவரது சிறுகதைகளில் வெளிப்படும் மையம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனைப் புனைவாக்குவதில்தான் வெற்றி பெறுகிறார். ஒரு சிறுபொறியை ஊதிப் பெருக்குவதில் கைதேர்ந்தவர். தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களைக் கூர்ந்து அவதானிக்கிறார். அந்தச் சம்பவத்தின்மீது தன்னுடைய பார்வையை முன்வைக்கிறார். ஒவ்வொரு கதையைப் பற்றியும் விரிவாக விவாதிக்கும் உள்ளீடுகளை இவரின் கதைகள் கொண்டிருக்கின்றன.
Discover more from சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026
Subscribe to get the latest posts sent to your email.
