கொடுப்பினை

பழனிக்கு நெருங்க நெருங்க ஆர்வம் பொங்கத்தொடங்கியது. தைப்பூசம் முடிந்து ஆரவாரமெல்லாம் அடங்கியபின் போவதுதான் சரியாக இருக்கும் என்று அப்பா சொன்னது சரிதான். ஆனால் தைப்பூச நாளில் முருகன் கோயில் எப்படி இருக்கும் என்ற ஆசையும் இருந்தது. அப்பா சொன்னார், “விசேச நாட்களில் தங்கத்தேர் இழுப்பதில்லையாம்” என்றார். “ஏன்” என்றாள் சாம்பவி. “திருவிழா நாள்ல பக்தர் கூட்டம் அதிகமா வரும்ங்கிறதால தங்கத்தேர் வலம் இல்லைங்குறாங்க” என்றார்.

இது அம்மாவின் வேண்டுதல், “நாளைக்கு மறுநாள் பழனி முருகன் கோயிலுக்குப் போறோம். நல்ல சேவல் ஒன்ன வாங்கிட்டுப் போகணும்” என்றபோதுதான், சாம்பவி கேட்டாள் “என்னம்மா திடீரென்று முருகன் கோயிலுக்குப் போறோம்.” “மூணாவதா பையன் பொறந்தா உன் சந்நிதியில வந்து தேர் இழுக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன். வேண்டுதல் தள்ளித்தள்ளி போயிருச்சு. அவனுக்கும் ஏழு வயசாயிடுச்சு. இனி தள்ளிப்போடக் கூடாதுன்னு தோணிச்ச. வருசமெல்லாம்தான் டீக்கடையில வேலை இருக்கு. கெடக்கட்டும் ரெண்டு நாள்னு அப்பாகிட்ட சொல்லிதான் நாள் குறிச்சோம்” என்றாள்.

முருகன் மீது சாம்பவிக்குத் தனி பிரியம் உண்டு. மற்றக் கடவுளைவிட முருகன் அதிகமாகப் பிடித்திருந்தார். நெருக்கமான உறவுக்காரர்போல் ஒரு உணர்வு. முதன்முதலாகப் பார்க்கப் போகிறோம் என்பதில் ஏதேதோ எதிர்பார்ப்பும் கற்பனைகளும் அம்மா சொல்லிய பொழுதிலிருந்து தோன்றியபடி இருக்கிறது.

“ஏம்மா பழனிமுருகன் மேற்குப் பக்கமா பாத்துட்டு இருப்பாராமே உண்மையா?” “அதென்னமோ எனக்குத் தெரியலையே.” பின்இருக்கையில் தம்பியுடன் அமர்ந்திருந்த அப்பா கழுத்துப்பக்கம் தலைநீட்டி “மலையாளிகள் மேல அவருக்குப் பிரியம் அதிகமாம்” என்றார். “யார் சொன்னாங்க அப்பா” முகத்தைத் திருப்பிக் கேட்டாள். “மலையாளிகள் சொல்வாங்க.” “நீ எத்தனைமுறை கோயிலுக்கு போயிருக்க.” “மூணுமுறை போயிருக்கேன்.” “அப்ப ஏன் எங்கள நீங்க கூப்பிட்டுப் போகல.” “அதெல்லாம் உங்க அம்மாவ கட்டுறதுக்கு முன்னாடி. சாமிய பாக்கிறதவிட பாதையாத்திரை கோஷ்டியோட போனா ஆட்டமும் பாட்டமுமா இருக்குமா. அதுக்காக போறதுதான்.” “நான் கூட நெனச்சேன்பா. பாதையாத்திரை போகணுமன்னு.” “ ஆனா முந்நூறு மையிலு ரொம்ப கஷ்டம். கால் பாதமெல்லா வெந்து பொக்குளிச்சிடும். போயி சேர்ரதுக்குள்ள தாவு தீந்திடும். சரி கோயிலுக்குள்ள போனா கூட்டம் நெருக்கியடிக்கும். போ போன்னு தள்ளிக்கிட்டே இருப்பானுங்க. கசகசன்னு வேர்த்து ஒழுகும். எப்படா வெளிய வருவோமன்னுதான் இருக்கும். சாமி அலங்காரத்தக் கூட நின்னு மனசார பாக்கமுடியாது. மூணு செக்கண்டில போபோன்னு தள்ள சரியா கூட பாக்காம வருவோம்.” “விசேச நாளா இல்லாம மத்த நாள்ல கூட பாதையாத்திரை போயிருக்கலாமெல்லப்பா.” “உங்க அம்மா தை பூசத்துக்கும் பங்குனி உத்திரத்துக்கும்தானா பாதையாத்திர போவா.” “எப்போ?” “கல்யாணத்துக்கு முன்னாடி.” அம்மா திரும்பி அப்பாவை “வாயமூடுங்க” என்று புன்னகை மிளிரச் சொன்னாள்.

சாம்பவி வாய்விட்டுச் சிரிப்பதைப் பார்த்து ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டு வந்த ரேணு “என்ன என்ன சிரிக்கிற” என்றாள். “நீ சின்னபிள்ள பேசாம வேடிக்கை பாத்துட்டு வா.” “ஒன்னவிட ரெண்டரை வயசதான் எளையவ. எனக்கு எல்லாம் தொயும்.” “தெரியுமன்னா பேசாம இரு” குருகுருவென முறைத்துப் பார்த்தாள். ரேணுவும் ஆறாம் வகுப்பு வந்துவிட்டாள். இவள் எட்டாம் வகுப்புப் போகிறாள். ரேணு அப்பா பக்கம் திரும்பி “என்ன பேசுனீங்கன்னு சொல்லுப்பா” என்றாள். “தங்கத்தேர் எப்ப இழுப்பாங்கன்னு கேட்டாங்க, ஆறரைக்குமேல. ஆனா நாம ரெண்டுமணிக்கெல்லாம் போனாதான் டிக்கெட் எடுக்கமுடியுமன்னு சொன்னேன்.” “இல்ல நீங்க வேற என்னமோ பேசுனீங்க. அம்மா திரும்பி எதுக்கு வாய மூடுன்னுச்சு. எதையோ மறைக்கிறீங்க.” கோவமாகத் திரும்பி மறுபடி ஜன்னல் பக்கம் பார்த்தாள்.

“அம்மா தங்கத்தேர் ரொம்ப பெருசா இருக்குமா? எங்க இழுப்பாங்க.” “மலைஉச்சியிலதான் நானும் பாத்ததில்ல.” “மாரியம்மன் தேராட்டம் இருக்குமா?” “அவ்வளவெல்லாம் இருக்காது. அளவாதான் இருக்கும்.” “தேரு முழுக்கவே தங்கமா.” “அப்படித்தான் சொல்றாங்க.” “முழுக்க தங்கமில்லையாம். பாதி தங்கமாம். மத்ததெல்லாம் தங்க முலாமாம். கூரை ஆரம் வளைவு முழுக்க தங்கமுலாம் பூசுனதுன்னு சொல்றாங்க” என்றார் அப்பா.

“ஏம்பா ரோப்கார் இல்லையன்னா வின்ச் ட்ரெயின்ல போறதெல்லாம் காட்டுறங்கல்ல. அதில ஜாலியா போகலாம்பா.” ரேணு “ஆமாப்பா சூப்பரா இருக்கும். த்ரிலா இருக்கும்பா” என்றாள் நன்றாகத் திரும்பி. “இந்த ரோப்காரு. ட்ரெயினெல்லாம் இந்த வாட்டி கிடையாது. அடுத்த வருசம் பாப்போம். இது வேண்டுதல். முருகன நினைச்சு படியேறி வந்து சேவிக்கணுமன்னுதான் வேண்டியிருக்கேன். படியேறித்தான் போகணும். நான் அவன வேண்டி தவமிருந்தேன். தம்பி பொறந்தான். முருகன லேசா போயி பாக்கிறதில்ல. கஷ்டப்பட்டுத்தான் போயி பார்க்கணும். ரேணு எனக்குப் பையனா பொறக்கணுமன்னுதான் நெனச்சேன். அவளும் பொண்ணாவே பொறந்திட்டா. அத்த மாமா என்ன எப்படியெல்லாம் குத்திப்பேசுனாங்க. உங்க அப்பாவும் அப்ப மொகத்த இந்த இப்பிடி தூக்கிக்கிட்டுதான இருந்தாங்க. தம்பி அவனருளாள கெடச்சவன். இந்த வாட்டி படியேறிதான் போயி கும்பிடணும்.”

“அம்மா முருகன் கோயிலுக்குத்தானம்மா எல்லோரும் போறோம். விஞ்சில போனா என்ன?” “நான் படியேறிவந்து சேவிக்கிறதாதான் வேண்டியிருக்கேன். அதுக்கு ஒருமுறை இருக்கு.”

ரேணுவும், சாம்பவியும் பேசாமல் இருந்தனர். சற்றுநேரம் கழித்து. ரேணு பின் பக்கம் திரும்பி “அப்பா எத்தனை படியேறணும்பா” என்று கேட்டாள். “அது 690 படிக்கும் மேல ஏறணும்”  “690 படிக்கும் மேலயா. ஐயோடா எனக்கு இப்பவே மூச்சு வாங்குதே.” “அதெல்லாம் நீங்க குடுகுடுன்னு ஏறிடுவீங்க. நாங்கதான் மூச்சு வாங்கணும்.” “தம்பி எப்படி ஏறுவான்.” “அவனும் ஏறுவான். ஏறமுடியலையன்னா தூக்கி தோளுள வச்சு ஏற வேண்டியததான்.” “அப்ப என்னையும் தூக்கி தோளுள வச்சு நடப்பா” என்றாள் ரேணு. “சரி” என்றார். ரேணு அப்பாவுக்கு கைகொடுத்தாள். அப்பா கழுத்துப்பக்கம் கையை நீட்டி தங்கையின் உள்ளங்கையைப் பற்றிக் குலுக்கினார்.

அப்பாவின் உள்ளங்கைகள் எல்லாம் வெளிறி தோள் செதில்செதிலாக எழுந்திருந்தன. ரத்தசோகை பிடித்தது போன்று வெள்ளைவேளெரென்று உள்ளங்கைகள் ஆகிவிட்டன. சுடுநீரில் டீ கிளாஸ் கழுவிக்கழுவி உள்ளங்கைகள் வெளிறிப் போய்விட்டன. வேட்டியை இப்போ மடக்கிக் கட்டாமல்தான் நின்று வேலை செய்கிறார். அப்பா கடையில் நின்று நின்று இரு கால்களிலும் ரத்த நரம்புகள் சுருண்டு சுருண்டு புடைத்துப் போய்விட்டன. இந்த வெரிகோஸ் நோய் வந்ததிலிருந்து வலியால் கஷ்டப்படுகிறார். ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரி என்று அலைந்தார். அந்த முறுக்குப் புடைப்புகள் வற்றி அமுங்கவே இல்லை. நாட்டுத் தைலத்தை உள்ளங்கையால் தேய்த்துவிடு வற்றுதா என்று பார்க்கலாம் என்று தந்தார். கெண்டைக்கால் முழுக்க அந்தத் தைலத்தை தேய்த்துவிட்டாள். “இப்ப எப்பிடிப்பா இருக்கு.” “முன்னக்கி இப்ப நல்லா இருக்கு” என்றார். அதன்பின் மாலையில் கெண்டைக்கால் குளிர தைலத்தைத் தேய்த்துவிட்டாள். உள்ளங்கையில் படும் புடைத்த தடதடப்பு அமுங்கவே இல்லை. அப்புறமும் வேறு ஒரு நாட்டு வைத்தியரிடம் சென்றார். அப்புறம் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குச் சென்றார். வலி இறங்கவில்லை. வலியோடு கடையில் வேலை செய்வதைப் பார்க்கும்போது மனசு கிடந்து அடிக்கும். அப்பா சிரித்துக்கொண்டே வடை, பண்ணை காகிதத்தில் தந்து அனுப்பிவிடுவார்.

“முருகா, அம்மா வேண்டுனா, தம்பிய குடுத்த, நான் வேண்டுறேன் முருகா, எங்க அப்பாவுக்கு இந்த நரம்பு சுருட்டு வெரிகோஸ் மறையனும். அவருக்கு வலியே வரக்கூடாது. நான் உன் சந்நிதிக்கு வந்து மொட்டை எடுத்துக்கிறேன்” தன் போக்கில் அவளுள் ஒரு வேண்டுதல் முடிவானது. இரண்டு கைகளால் தலைக்கூந்தலைத் தடவினாள். சடையைத் தோள்பக்கம் எடுத்து மார்புபக்கம் போட்டாள். சடைப்பின்னல் நன்றாக இருந்தது. அம்மா சடை பின்னி விடும்போதெல்லாம். “இந்த வயசில எனக்கும் இப்படித்தான் அடர்த்தியா நீளமா இருந்தது. ரெண்டு வருசமாத்தான் முடி கொட்டிக் கொட்டி இந்தா இப்பிடி ஆகிப்போச்சு” என்று தன் சடையை முன் எடுத்துப்போட்டு கீழுதடு பிதுங்க காட்டுவாள்.

சாம்பவி அப்பா பக்கம் திரும்பி “நீ கவலைப்படாத அப்பா. நல்லது நடக்கும்” என்றாள். அப்பா வாய்கொள்ளாமல் பற்கள் தெரியசிரித்தார். மகளையே பார்த்தார். சாம்பவி அப்பாவின் கன்னத்தைத் தட்டினாள். அப்பாவின் மடியில் தூங்கிக்கொண்டு வந்த குமரன் புரண்டு கைகளை மல்லாத்திப் போட்டான். அவன் கழுத்தில் வேர்வையின் மினுமினுப்பு தெரிந்தது. பிளாஸ்டிக் கூடையில்  மறைத்து வைத்த சேவல் கர்ர்ர் என்றது. “ஐயா சாமி இந்தா வந்தாச்சு. கொஞ்சம் பொறுத்துக்க ராசா. உனக்கொரு புண்ணியமாகட்டும் எனக்கொரு புண்ணியமாகட்டும்” என்று அப்பா காலடியில் வைத்திருந்த கூடையை எக்கிப்பார்த்தாள்.

“இருக்கிற காணிக்கையிலே தேரத்தொட்டு இழுக்குறதுதான். அது ரொம்ப மங்களகரமான காணிக்கை” என்றாள். அம்மா அதே நினைப்பாகவே வருகிறாள் என்றுபட்டது. நாதஸ்வரம் முழங்க, மந்திரங்கள் முன்பொழிய பக்திப்பாடல்கள் பாடிவர தங்கத்தேர் தன் கைப்பிடியாலும் நகர்ந்து வருவதுபோல தோன்றியது. ஏந்து சிப்பிகளில் தீபச்சுடர்கள் மின்ன வெள்ளரளி மாலை சூடிய தங்க முருகன் வேலேந்தி ராஜ பீடத்தில் நிற்க. வெவ்வொளியை தங்க தகடுகள் விசிற முருகன் புன்னகையோடு தேரில் வருகிறான். வடத்தைப் பிடித்த எத்தனையோ கைகளில் தன் கைகளைப் புன்னகைப் பொங்க பார்ப்பது தெரிந்ததும் ரோமக்கண்கள் சிலிர்த்தன. கன்னமயிர்கள் புருபுருவென புல்லரித்தன. “அம்மா என் கன்னம் புல்லரிச்சிரிக்காம்மா.” “ஆமா, அந்தப் பக்கம் காட்டு. ஆமா.” கைகளில் புல்லரித்திருப்பதையும் காட்டினாள். “என்னடி இப்பிடி.” சாம்பவி பெரிய பற்கள் தெரிய சிரித்தபடி “நானும் முருகன் தங்கத்தேர இழுத்தேன்மா” “ஏன்டி நானே இப்பத்தான் முருகன் தங்கத்தேர பாக்கப் போறேன். நீ எப்படி பாத்திருப்ப. கிறுக்கா.” “அது அப்படித்தாமா. கிறுக்கு பாக்கவச்சது.” அம்மா ஒரு வகையான சிரிப்புடன் தலையையும் கழுத்தையும் பின் இழுத்துப் பார்த்தாள். “அம்மா வருசா வருசம் முருகன் கோயிலுக்கு வரணும்மா.” இதற்குப் பெரிமிதமாகச் சிரித்தார்.

பேருந்து நிலையத்தில் வண்டி நின்றதும் அவசர அவசரமாக அம்மா எழுந்தாள். “அவன எழுப்புங்க” என்றாள். “இரு கூட்டம் நகரட்டும். காலுக்கடியில் இருந்த கூடையைத் தலைகுனிந்து பார்த்தார். வெள்ளைச் சேவல் கண்மூடி கிடந்தது. குமரனை நகர்த்து சாம்பவி அம்மா கையில் கொடுத்தார். சாம்பவி கட்டைப் பையையும், ரெக்ஸின் பையையும் காலுக்கடியிலிருந்து நகர்த்தினாள்.

வண்டியைவிட்டு இறங்கி கொய்யாக்காய் வைத்திருக்கும் கூடைக்கார அம்மாக்கள் பக்கம் வந்தனர். “கொய்யாம்மா. ஆயக்குடி கொய்யாம்மா. வாங்குமா.  காலையில பறிச்சது. காம்பு கழண்டது கூட அப்படியே பச்சையா இருக்கு. வெயிலுக்கு வாங்கித் தாங்கம்மா” நல்ல கொய்யாக்காயை எடுத்துக் காண்பித்தார். “அம்மா கொய்யாக்காய்” என்றான் குமரன். “இப்பயே ஆரம்பிச்சிட்டயா.” “ஒண்ணு குடுக்கா” “ஒரு கிலோ வாங்குமா. எழுபது ரூபாதான்” “வந்து வாங்குறோம்மா. சின்ன பையனுக்கு ஒன்னு சொல்லிக் கொடுங்க.” “அரைகிலோ போடுறேம்மா. ஆளுக்கொன்னு தின்னுக்கிட்டே போங்க.” சரியா ஐந்து காய்கள்தான் நின்றன. வாங்கிக்கொண்டு கோயில் சாலைக்கு தெற்குப் பக்கம் வந்தனர். காவி நிறமும் வெள்ளை நிறமும் அடித்த பெரிய கோயில் மலை உச்சியில் தெரிந்தது. பார்ப்பதற்கு எதோ இஞ்ஜினியரிங் கல்லூரியின் அறைகளைப் போல நிறைந்து தெரிந்தது.

ஆட்டோக்காரர்கள் 150 ரூபா கேட்டார்கள். அம்மா “மினி பஸ் வரும். பேசாம நில்லுங்க” என்றாள். மணி பனிரெண்டரையைத் தாண்டியது. வெயில் சுல்லென விழுந்து தாக்கியது. “ரெண்டு மணிக்குள்ள தேர் டிக்கெட் எடுக்கணும். கூட்டம் சேந்தா கிடைக்காது” என்று சொன்னார் அப்பா. “இப்பத்தான வந்து நின்னோம். வந்திடும்” என்றாள் அம்மா.

நல்லவேளை மினிபஸ் வேகமாக வந்து இறக்கிவிட்டு கோயிலுக்குச் செல்பவர்களை ஏற்றியது. “அம்பது ரூபாயில் முடிஞ்சுருச்ச. ஆட்டோன்னா 100 ரூபா எஸ்ட்ரா போயிருக்கும்” என்றாள் அம்மா.

வண்டி கிரிவலப்பாதையில் திரும்பி நின்றது. புலிப்பாணி ஜோதிடர் சமாதிக்குப் பின் உள்ள சேவாலயம் சந்நிதானத்துக்கு வெயிலில் சென்றார்கள். வாசலில் சூடம் ஏற்றி சேவலை ஒப்படைத்து 100 ரூபாய் காணிக்கை பணம் தந்து மலையேறும் பாதைக்கு வந்தார்கள்.

பொருள் வைக்கும் அறையில் பைக்கு 25 ரூபாய் இரண்டு டோக்கனைப் பெற்று வைத்தார்கள். பக்கத்து கடையில் கைபேசியை வைக்க ஐந்து ரூபாய் டோக்கன் பெற்று வைத்தார்கள். 

தரை சூடேறிக்கிடந்தது. குமரன் படியில் கால் வைத்ததும் “பொசுக்குதும்மா” என்றான். “நட பொசுக்குறது தெரியாது” என்றாள். நாலைந்து படி ஏறியவன் “இன்னும் பொசுக்குதும்மா” என்றான். குமரனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு படியேறினாள். படிகளின் ஓரம் திருவோடை வைத்து அமர்ந்திருந்த பரதேசிகள் “அம்ம பிச்சை போட்டு ஏறுங்கம்மா, புண்ணியம் கிட்டும்” என்றனர்.

தஸ்புஸ் என்று முன்னால் இரண்டு குடும்பங்கள் மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. படியோரம் பைப்பிடிச்சுவரைத் தொட்டு சாம்பவியும், ரேணுவும் ஏறினார்கள். இரண்டு கைகளும் இரண்டு கால்களும் குழந்தையின் கைகால் அளவே சிறுத்திருந்த தலை கனத்த முடமான பெரியவர் இரண்டு கைகளையும் றெக்கைபோல ஆட்டி பிச்சை கேட்டார். ரேணு அப்பாவிடமிருந்து பத்து ரூபாயை வாங்கி அவருக்குப் போட்டாள்.

பத்துபடி மேலேறியதும் தொடைவரை கால் இல்லாதவர் மீதிக் தொடையைக் காட்டி பிச்சை கேட்டார். தொடை முடியும் இடம் காய்ந்து சதைகள் சுருங்கி மறைப்பது அசூசையைத்தந்தது. மேலேற மேலேற குன்று பக்கவாட்டில் அகன்று வருவது தெரிந்தது. ஐம்பது படிகளுக்கு நின்று நிதானித்துப்போக நிழல் மண்டபம் நிற்கிறது. வேகமாகவே ஏறினார்கள். மண்டபத்தின் உள்ளே மயிலேறி முருகனின் ஓவியம் மங்கித்தெரிந்தது. மண்டபத்தின் ஓரம் பிளாஸ்டிக்கார் கடை பொம்மைகளைப் பார்த்ததும் “கார் வாங்கிக் கொடு” என்றான் குமரன். “வரும்போது வாங்கித்தர்றேன்டா” “இப்பயே வேணும்.” “ரெண்டு மணிக்கு முன்னால டிக்கெட் வாங்கணும்” குமரன் கால்களை உதறி விசும்பினான். அந்த உதறலை நழுவவிடாமல் இறுக்கிப்பிடித்து ஏறினாள். அப்பா குன்றின் பக்கவாட்டைப் பார்த்தார்.

குன்றின் இருபக்கமிருந்தும் அனல்வந்து தாக்கியது. பாறைகளின் பள்ளங்களில் இலந்தை மரங்களும் கள்ளிமரங்களும் அரப்பு மரங்களும் தெரிந்தன. தலைதூக்கிப் பார்த்தால் குடைவேல் வெள்வேல் மரங்களும் நிற்கின்றன. மரங்களின் அடியில் உன்னிச் செடிகளும், ஆவாரை செடிகளும் குடசப்பாலை குறுமரங்களும் தெரிந்தன. புதர்ச் செடிகளில் படர்ந்திருந்த கோவைக்கொடியும் முடச்சுத்தான் தழைக்கொடியும் வாடிக்கிடந்தன. பிரண்டைகள் குடைக்கருவேலில் ஏறி சடைசடையாக தொங்குவதை அப்பா காட்டினார்.

கைப்பிடிச் சுவருக்கு மேலே முன்னோரம் செங்கஞ்செடிகள் நிற்கின்றன. பாறை இடுக்குகளில் புற்கள் வாடி வதங்கித் தொங்ககின்றன. வெப்பத்தில் பாறைகள் மூச்சுவிட மூச்சுவிட அனலாக வந்து தாக்கியது. குடசபாலை குறுமரத்திற்கு மேல் வரவும் இடும்பர் கோயில் வந்தது. “இடும்பன் கோயில்ன்ன என்னப்பா” “இவர்தான் இந்த மலையைத் தூக்கிட்டு வந்து வைத்தவர். அந்த மலை உச்சியிலதான் முருகன் வந்து நிக்கறாரு” என்றார். “இடும்பன்னா யாருப்பா” என்று கேட்டாள் ரேணு. அவருக்குத் தெரிந்த கதையைச் சொன்னார்.

தஸ்புஸ் என்று இடும்பன் கோயில் வாசலுக்கு வந்து கும்பிட்டனர். இடும்பனைச் சுற்றிவிட்டு மேலேரும் படிக்கட்டில் கால்வைத்து “அப்பா முடியலைப்பா” என்றாள் சாம்பவி. மஞ்சள் சீலை அணிந்த ஒரு கோஷ்டி “வெற்றிவேல் முருகனுக்கு” “அரோகரா” என்று சொல்லிக்கொண்டு மேலேறிச் சென்றது.

முட்டியைப் பிடித்து மேலேறினார்கள். அம்மா குமரனையும் தூக்கிக்கொண்டு முன்னே போய்க்கொண்டிருந்தார். அம்மா மனம் முழுக்க வேகம் புகுந்திருக்கிறது.

உடம்பில் வேர்வை வழிய வழிய அப்பா வயது உள்ள இருவர் பால்காவடி, பன்னீர்காவடி சுமந்தபடி “முருகனுக்கு” “அரோகரா” “கந்தனுக்கு” “அரோகரா” சொல்லிக்கொண்டு கடந்து சென்றார்கள். பொசுக்கும் கல்படியில் வைத்து தாங்கமுடியாமல் மாற்றிவைத்து மேலேறினர்.

நான்கு பெண்களுடன் ஒருதாய் மெல்லமாய் ஏறிக்கொண்டிருந்தாள். அவர் முதுகுச் சட்டையெல்லாம் நனைந்து ஒட்டிப் போய்விட்டது. படி ஓரங்களில் செவ்வாடை அணிந்த பண்டாரங்கள் திருவோடுகளை எடுத்து புடைத்து புடைத்து பிச்சை கேட்டார்கள்.

நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

ஒவ்வொரு வரியையும் மூச்சுவிட்டுச் சொல்லச் சொல்ல, இளம் பெண்கள் ‘காக்க காக்க கனகவேல் காக்க’ என்றனர். அம்மாவும் அவர்களுடன் சேர்ந்து

கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை இரத்தின வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவேல் இருதோள் வளம்பெற காக்க

பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க

அவர்கள் மெதுவாக ஏறியதால் அம்மா ‘விரைவாக ஏறுங்கள்’ என்று கைகட்டினாள். கொஞ்சம் வேகமாக ஏறினார்கள். துடைகள் துவண்டன.

பனைத்தொடை இரண்டும் பெருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர் வேல்காக்க

அப்பா “அப்படியே இடப்பக்கம் திரும்பி யானைபாதை வழியா போன படி நெடுக்குததலா இருக்காது” என்றார். அம்மா “பேசாம எட்டு வச்சு வாங்க” குமரனை இறக்கிவிட்டு அப்பாவைத் தூக்கச் சொன்னார். வானில் வெண்மேகங்கள் கனத்து மேலேறி வருகின்றன. உக்கிரமாக அடிக்கும் வெயிலுக்கு எதிராக பெரும் பெரும் பொதிகளாக வருகின்றன.

அம்மா ஏறிவா ஏறிவாக என்று முடிக்கியதால் வேகமாகவே மலை உச்சியை நெருங்க முடிந்தது. மலை அடிவாரம் முழுக்க கட்டிடங்கள் பெரிய பெரிய கட்டிடத் தோப்புகளாகத் தெரிந்தன. அதிலும் இடையிடையே தென்னை மரங்களும் வேப்பமரங்களும் தெரிந்தன. மேற்குப்பக்கம் பெரியகுளம், பேருந்து நிலையம் வரை நீண்டு கிடக்கிறது. ஆகாசத்தாமரை மூடிய இடங்களில் தண்ணீர் தெரியவில்லை.

படிகளில் ஆட்கள் ஏறி வருவதும் இறங்கிச் செல்வதும் தெரிந்தது. சாம்பவிக்கு வயிறு சுருட்டிப்பிடித்தது. அடிவயிற்றை அமுக்கிவிட்டாள். கொஞ்சம் வலி குறைவதுபோல இருந்தது. மூச்சு வாங்க நின்றாள். வேர்த்து ஒழுகும் முகத்தை துப்பட்டாவால் துடைத்தாள். “வாங்க கண்ணுகளா கொஞ்ச தூரம்தான்” அம்மா ஏழு படிகளுக்கு மேல் நின்று அழைத்தாள். வயிறு மறுபடியும் சுட்டிப் பிடித்தது. வலியுடன் ஏறினாள்.

ஏற ஏற கால்களில் பலம் தளர்ந்தது. “முருகா பலத்த பூராவும் வாங்கிட்டயே. பலத்தக் கொடுப்பா” பல்லைக் கடித்துக் கொண்டு ஏறினாள். முட்டிகள் கிடுகிடுத்தன. உதடுகள் உலர்ந்து நாவரண்டது.

வயிறு ஏதேனும் ஆகக்கூடாது என்பதற்கு லெமன் சாதத்தையும் தயிர்ச்சாதத்தையும் தயாரித்தார். காலையிலையே பேருந்தில் தயிர்சாதத்தைத்தான் சாப்பிட்டாள். புதிய தயிர் என்பதால் புளிப்பில்லாமல் நன்றாக இருந்தது. உடம்பும் சூடேறிக் கிடக்கிறது. தலையைத் தொட்டாள். தலைமுழுக்க சூடாக இருந்தது.

ரொம்ப தளர்ந்து உச்சிக்கு வரும்போது அம்மா கொடி மரத்திற்கு முன் உள்ள சிமெண்ட் தரையில் நின்று திரும்பிப் பார்த்தாள். ரேணுவும் வேர்த்து விறுவிறுத்து வந்தாள். நினைத்ததைவிட பத்து நிமிடத்திற்கு முன்னமே வந்துவிட்டதாகச் சொன்னார் அப்பா. தங்கத்தேர் இழுக்கும் கவுண்டர் பக்கம் விரைவாக வரும்படி அம்மா அழைத்தாள். தம்பியைப் பிடித்துக்கொண்டு வெயிலுக்கு கூரைபோட்ட நிழலடியில் நின்றார்கள். இரண்டு மணிக்குத்தான் கவுண்டர் திறக்கும் என்பதால் இந்த வேகத்தில் வந்து சேரமுடிந்தது. கவுண்டரின் முன் பத்துப்பதினைந்து பேர் இப்போதே வரிசையில் நின்றிருந்தார்கள். “மூணு டிக்கெட் எடுக்கணும். அஞ்சுபேர் குறிக்கணும்” என்றாள் அம்மா. “டிக்கெட் எவ்வளவுப்பா, ஒரு டிக்கெட் 2000 ரூபாய். மூணு டிக்கெட் 6000ம்” “அம்மாடி” என்று சொல்லும்போதே வயிற்று வலி முறுக்கிப் பிடித்தது. அப்பாவிடம் ரூபாயை எடுத்துத்தந்த அம்மா அப்பாவுடன் சென்றார். தண்ணீர் குடிக்க வேண்டும்போல் இருந்தது. குடிநீர் வைத்திருந்த டேங்கிற்குச் சென்று தண்ணீர் குடித்துவிட்டு வந்து அமர்ந்தாள். உடம்பு முழுக்க வேர்த்து ஒழுகியது. வெளிக்கி வருவதுபோலவும் இருந்தது. கழிவறை இருக்கிறதா என்று பார்த்தாள். ஒன்றும் தெரியவில்லை. ரோப் கார் வழியாக வந்தவர்கள் கவுண்டரிலிருந்து வெளியே வந்தார்கள்.

வரிசையில் நின்று அப்பா வாங்கி வரும்போது மூன்று மணி ஆகிவிட்டது. மூன்றரைக்கு உள்ளே போய் பரிசோதனை பிரிவுக்குள் வந்துவிட வேண்டும் என்பது தெரிந்தது. தொடையெல்லாம் ஈரமாகி இறங்குவதுபோல இருந்தது. தொட்டுப்பார்த்தாள் பிசுபிசுவென ஒட்டியது. தொட்ட இடம் சுடிதாரில் சிவப்பாகப் படிந்தது. விரல்களைப் பெருவிரலால் தடவினாள் பிசுபிசுவென்று இருந்தது. விலுவிலுவென்று சோர்வுவந்து அமுக்கியது. அம்மாவை மனபாரத்தோடு பார்த்தாள். அம்மா “அவ்வளவுதாள் தகுப்பாரு. இவ்வளவு தூரம் ஏறி வந்தாச்சு முருகன சந்தோசமா பாக்கணும்.” “அம்மா மென்சஸ் வந்திடுச்சும்மா.” “என்ன பாப்பா சொல்ற.” “ஆமாம்மா” கண்கலங்க அம்மாவைப் பார்த்தாள். “சரி. நீ கோயிலுக்குள்ள வரவேணாம். தீட்டு, இங்ஙனயே இரு. நாங்க உள்ள போயி தேர இழுத்திட்டு முருகன தரிசனம் பண்ணிட்டு வந்திடுறோம். புரிஞ்சுப்பன்னு நெனக்கிறேன். பாரு எத்தனை ஜனங்க இருக்காங்க. தைரியமா இரு. நாங்க நாலுபேரு போயிட்டு வந்திடுறோம் சரியா” தலையை ஆட்டுவதுபோல அம்மாவைப் பார்த்தாள். அம்மா அப்பாவிடம் மென்சஸ் ஆன விசயத்தைக் குசுகுசுவென சொல்லி முடிக்க அப்பா சாம்பவியைப் பரிதாபமாகப் பாத்தார்.

“எப்பம்மா திரும்ப வருவீங்க.”

“தேரு இழுக்கிறது ஏழுல இருந்து ஏழரைவரைக்கும். நாலு மணிக்கெல்லாம் செக்கிங் முடிச்சு வரிசையில நிக்கணுமாம்.” பேசாமல் அம்மாவைப் பார்த்தாள்.

“நான் ராசயில்லாத பொண்ணும்மா” “நீதானே முதல் பொண்ணு.” “என்ன மொதப்பொண்ணு” முகத்தைத் திருப்பி ஏறிவந்த படிக்கட்டுகளைப் பார்த்தாள். பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. என்ன முருகன் இவன். இப்படி ஆசையோடு காணவந்ததிற்கு மோசம் செய்கிற முருகனாக இருக்கிறான். ஓம் முருகா என்று பெரிய சிவப்பு குழல்விளக்கைப் பார்த்தாள். பக்கத்தில் தங்க நிறத்தில் வேல் லேசாக சாய்ந்து நிற்கிறது. முருகன் மீது கசப்பு தோன்றியது. முதல்முறையாக முருகனைக்காண ஆசையோடு வந்தும் தடையாகிப்போனது. சிவன், திருமாலைவிட முருகன் தன் வீட்டு அண்ணன்போல என்று உரிமை புதைந்திருந்தது. மற்ற கோயிலில் இப்படி நேர்ந்திருந்தால்கூட மனம் சோர்ந்திருக்காது.

அம்மா பிரசாதங்களை வாங்கி வந்து தந்தாள். “எனக்கு வேணாம்மா. வயிறு ஒரு மாதிரி இருக்குது” என்று மறுத்தாள்.

தங்கத்தேர் இழுப்பவர்களுக்கான அழைப்பு வந்தது. நால்வரும் எழுந்தார்கள். அம்மா சாம்பவியை வருத்தத்துடன் பார்த்தார். பாவம் அம்மா அவளுக்கும் கஷ்டத்தைக் கொடுத்துவிட்டது வருத்தமளித்தது. “போயிட்டு வாம்மா. நான் இங்கயே இருக்கிறன்” என்றாள். வரிசையில் போய் சேரும் வரை இரண்டு முறை திரும்பிப் பார்த்தார்.

அந்த வரிசை உள் அரங்கிற்குள் நுழையவும் வாயிலை அடைத்தார்கள். ‘வேல்மயில் வீரமயில்’ கோசத்தோடு காவடிகளைத் தோளில் சுமந்தபடி ஏறி வருவது தெரிந்தது. கொத்துக் கொத்தான வெண்மேகங்கள் குன்றின் மேல் நிழலைத் தடவியபடி குன்றின் சரிவுகளில் மரங்களைத் தழுவியும் புதர் செடிகளிலிருந்தும் நகர்ந்து போனது.

இளைப்பாறுவதற்குப் போட்ட நீண்ட தகரக் கூரையின் அடியில் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கின்றனர். நீண்ட குளமும் பேருந்து செல்லும் பாதையும் தெரிந்தது. பாதையில் ஆட்டோக்கள் இரண்டு முன்பின்னாக நடந்துவரும் ஆட்களை விலகிக்கொண்டு மலையடிவாரத்துக்கு வருகின்றன. தன்னை ஒதுக்கிவிட்டு சென்றுவிட்டார்கள் என்ற உணர்வு படபடப்பை உண்டாக்கியது.

வெண்மேகங்களின் அடிப்பரப்பு சாம்பல் நிறமாகிக் கொண்டிருந்தது. மேகங்கள் ஒன்றை ஒன்று தொட்டு இணைந்து பெரிய மேகமாக மாறியது. குன்றின் மூச்சு வெக்கையாக பரவித் ததும்பியது.

முதன்முதல் ஆவலோடு வந்து முருகனைப் பார்க்கமுடியாமல் ஆகிவிட்டது. முழங்கால் நடுங்க ஏறிவந்தும் புண்ணியமில்லை. தொடைகள் கெண்டைக்கால்கள் நோவாக இருந்தன. துக்கம் கண்ணீராகி இமைகளில் லேசாகத் தேங்கியது. இனி அம்மா எப்போது அழைத்தாலும் இந்தக் கோயிலுக்கு வரக்கூடாது என்று நினைப்பு எழுந்தபோதே அப்பாவிற்காக முடி இறக்கிக்கொள்ள நேர்ந்ததும் வந்தது. இன்று தீட்டாகாமல் நாளை ஆயிருக்கக்கூடாதா? இப்படி தன் உடம்பு தன்னை ஏமாற்றத்தில் தள்ளிவிட்டது. விரும்பியது கிட்டாமல் போனதின் ஏமாற்றம் வருத்தத்தை ஏற்றி இறங்க மறுக்கிறது. எதையோ இழந்து விட்டு அமர்ந்திருப்பதுபோல இருந்தது. நசநச்ப்பு முட்டிக்கு இறங்கி வருவதுபோல ஊறல் உண்டானது. முட்டிக்குமேல் உள்ளாடையைத் தொட்டாள் பிசுபிசுத்து ஒட்டியது. கழிவறை இருந்தால் ஆடைகளைக் கழற்றி அலசி போடவேண்டும் என்று திரும்பிப் பக்கமெல்லாம் பார்த்தாள். கோயிலுக்கு வந்தவர்கள்தான் எங்கும் நிற்கிறார்கள். கழிவறை இருப்பது ஒன்றும் தெரியவில்லை. மலைப்பக்கமாக இறங்கி துடைக்கலாமா என்று எட்டிப் பார்த்தாள். இறங்க எங்கும் வழிஇல்லை. மறுபடி படிகளில்தான் இறங்கவேண்டும். கழுவாமல் இருப்பது பெரிய தொந்தரவைக் கொடுக்கிறது. தண்ணீரில் ஒருமுறை கழுவி சுத்தமாக்கிக் கொள்ள ஏது இல்லாது தவித்தாள். ரத்தம் உலர்ந்த தொடை பக்கம் கிர்ர்ர்ரென பிடித்திருக்கிறது. நன்றாகக் குளித்து ஆடை மாற்ற மனது அலை மோதுகிறது. வேறு ஆடையும் இல்லை. என்ன கெரகம். இந்த இம்சைக்கா இவ்வளவுதூரம் ஆசையோடு வந்தது. இனி இந்தக் கோயில் பக்கமே வரக்கூடாது. பெண்ணாகவே பிறக்கக்கூடாது. வெறுப்பு மூழ்கடித்தது. அரைமணிநேரம் மனம் அதிலேயே கிடந்து தவித்தது.

சாம்பலும் ஓரங்களில் வெண்பஞ்சுமாக நகர்ந்து செல்லும் மேகத்தின் அடியில் க்ரோவ் என்ற சத்தத்தோடு பருந்து பறந்தது. அளவான பாம்பொன்று அதன் கால்விரல் பிடிப்பில் சிக்கி நெளிகிறது. “எங்க எங்க” பின்னால் அமர்ந்திருந்தவர்கள் கேட்க சாம்பவி திரும்பி “அந்தா” என்றாள். இடது கால் பக்கம் பாம்பின் தலை வளைந்தெழுந்து கொத்த முயற்சி செய்தது. பருந்து தலையைத் தாழ்த்தி பாம்பு கொத்த எவ்விதம் அசைகிறது என்பதைப் பறந்தபடி மாறிமாறிப் பார்த்தது. பின் இடக்கால் விரல்களை விலக்காமல் வலக்கால் விரல்களை விரிக்க வால் பகுதி நீண்டு தொங்கியது. இப்போது பாம்பு பருந்தின் கால் பக்கம் எகிறி கொத்தியது. படவில்லை. பார்க்கும் மக்கள் கூட்டம் “ஐயோ” என்றனர். ஆபத்தை உணர்ந்ததா வேடிக்கை காட்டியதா என்று தெரியவில்லை. சட்டென இடக்காலை விரிக்க பாம்பு வானிலிருந்து நெளிந்து தரைநோக்கி வந்தது. பருந்து இறக்கைகளைக் குறிக்கி சர்ரென பாய்ந்து இருகால் விரல்களிலும் கவ்வி மேலே பறந்தது. பார்த்துக்கொண்டிருந்தவர்கள் “அடியம்மா” என்றனர், சாம்பவியும் “அம்மாடி” என்றாள்.

பாம்பு தன் தலையாலும் வாலாலும் வளைந்து முறுக்கி விடுபட போராடியது. பருந்து இரு இறக்கைகளையும் விரித்து அப்படியே வட்டமடித்துத் திரும்பியது ‘க்ரோக் க்ரீரிவ்’ என வெளியைப் பார்த்துக் கூவியது. மறுபடி விரில்களை பருந்து விரிக்க அந்தரத்தில் நெளிந்து வந்த பாம்பை இரு கால் விரல்களில் தலை தாழ்த்தி பற்றியது. பருந்தின் பிளவுபட்ட வால் இடப்புறமாக சாயும்போது இறக்கையும் இடப்புறமாகத் திரும்பியது.

சென்ற மேகங்கள் எல்லாம் ஈசான மூலையில் கூடிக்கூடி கருவேறியது. மிதந்து செல்லும் மற்றொரு மேகத்தோடு க்ரீரீக் என்று கத்தியபடி புதிய பருந்தொன்று வேகமாக வந்து திரும்பி வட்டமடித்தது.

இரண்டும் வட்டமிட்டன. பிளவுபட்ட வால் தாழ திருப்பியது. தொங்கும் பாம்பிற்கும் கீழாக வந்து பக்கவாட்டில் சுற்றியது. மறுபடி பாம்பு பற்றிய பருந்திற்கு சமதளத்தில் வந்து வட்டமடித்து தலையைத் திருப்பிப் பார்த்தது. பற்றிய பாம்பைவிட அந்தரத்தில் நெளிந்து கீழிறங்கிய பாம்பு ஒற்றைக்காலால் பற்றி மேலே கொண்டுவந்து மறுபடியும் விட்டு இரண்டு கால்விரல்களால் பற்றி மேலெழுந்தது.

பாம்பை விட்டுவிட்டு கீழே வந்த பருந்து மேலே பறந்த பருந்தின் கால்விரல்களைப் பற்றி தலைகீழாக ஒரு வட்டமடித்து பிரிந்து அடுத்த கனம் தரையை நெருங்கிய பாம்பைப் பற்றி மேலே கொண்டு வந்தது “அடியாத்தாடி” என்றனர்.

என்ன நினைத்ததோ பாம்பைப் பற்றிய பருந்து விரில்களை விரிக்க பாம்பு சரசரவென நெளிந்து குன்றின் நடு புதரில் விழுந்தது. வட்ட மடித்த பருந்துகள் பெரிய மேகத்தின் அடியில் நெருங்கி வட்டமிட்டன. மறுபடியும் புதிய பருந்து தாழ இறங்கி லேசாக உடலைத் திருப்பிப் புரட்டி மற்றொரு பருந்தின் விரல்களைப் பற்றியது. நகரும் மேகத்தின் அடியில் மேலொன்றும் கீழ் ஒன்றும் மல்லாந்தபடி பற்றி ராட்டனம் போல அந்தரத்தில் சுழன்றன. மேகம் அவற்றிற்குக் குடை பிடிப்பதுபோல நகர்ந்தது.

இரண்டும் மேகத்திலிருந்து விலகி சுழன்றபடி குன்றின் மேலாக நகர்ந்தன. அதன் நிழல்கள் செடி கொடிகள் மரங்களில் விழுந்து குன்றைச் சுற்றி வந்தது. பற்றிய விரல்களை விட்டு சுழன்று எழுந்த பருந்து மேலேறிப் பறந்தது. இறக்கைகளை அடித்து மேலே மேலே பறந்து போனது. வெயிலை முழுதாக மேகங்கள் கூடிகூடி மறைத்து நிழலாக்கியது. பருந்துகள் இறக்கைகளை அசைக்காமல் மிக உயரத்தில் வட்டமிட்டன.

மேகம் கருத்துத் திரளத் திரள அப்படியே பறந்தபடி தாள வந்தன. ஈசான மூலையில் இறங்கிய மழை தென்மேற்குப் பக்கம் வரவர பருந்துகள் ஒருமுறை கூவின. மழை நெருங்கும்முன் இரண்டும் இறக்கைகளை முழுதாகக் குறுக்கி பூமியை நோக்கி அம்புகள்போல இறங்கின. நடு குன்றில் நின்ற ஆலமரத்தில் புகுந்து மறைந்தன. சாம்பவி புன்னகையோடு திரும்பினாள். பார்த்தவர்கள் முகங்களில் எல்லாம் ஒரு மகிழ்ச்சி. பூமியை நோக்கி பவளத் துளிகளாக மழைத்துளிகள் பாய்ந்தன. மழையடிவாரத்தில் நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடுவது தெரிந்தது. பூமியை நோக்கிப் பாயும் மழைத்துளிகளை குன்றில் இருந்தபடி பார்த்தாள் சாம்பவி.  தலைதூக்கி சாய்த்து பார்த்த நாட்கள் மழைச்சாரங்கள் வானிலிருந்து இறங்கிவந்தன. பூமியை நோக்கி இறங்கும் சரங்களை இப்போது பார்க்க வாய்த்திருக்கிறது. இடியும் மின்னலும் பயத்திலிருந்து ஒரு சந்தோசத்தைத் தூக்கிக்கொண்டு வந்தது. ஜோவென விழும் மழையைப் பார்க்கத் தொடங்கினார்கள். மழைச்சாரங்கள் வெள்ளி கம்பிகளாக திரைபோட்டது. குன்றில் சடசடவென ஓசையோடு விழ பாறையிலிருந்து ஆவி கிளப்பி அசைவதை சாம்பவி பார்த்தாள். மழையின் ஈரக்காற்று வந்து தழுவியது. இரண்டு குழந்தைகள் மழைக்குள் சென்று குதிக்க அம்மா ஓடிப்போய் இழுத்து தாழ்வாரத்திற்குள் கொண்டுவந்தாள். சாம்பவி எழுந்து கொட்டும் மழைக்குள் சென்றாள். மழை பாரத்தை உச்சந்தலையிலிருந்து கரைப்பதுபோல சட்புட்சட்டென விழுந்து தொப்பலாக்கத் தொடங்கியது.


Discover more from சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.