விடுபட்ட நரி

1

நதிகளையும் நாடோடிகளையும் போலவே, கதைகளுக்கும் நிரந்தரமாய்ப் பிரயாணம் உண்டு; காலத்திலும், தமக்குள்ளாகவும் பயணம் செய்தவாறிருக்கின்றன. 

என்று ஆரம்பிக்கிறது துஷார் குப்தாவின் முன்னுரை. சிறிய முன்னுரைதான். ஆனால் ஆழமானது. 

பார்க்கப்போனால் பணத்தாள்களுக்கும் புத்தகங்களுக்கும்கூட அப்படியொரு பிரயாணம் இருக்கத்தான் செய்கிறது – இல்லாவிட்டால் அவை  பழசாவதை எந்தக் கணக்கில் வைக்க? புத்தகங்களைப் பொறுத்தவரை, உருவத்துக்கு மட்டுமல்லாது, உள்ளடக்கத்துக்கும் பிரயாணம் இருக்கிறதல்லவா! பழுப்பேறிய தாள்களும், படுமோசமான அட்டையுமாகக் கிடைத்த, துஷார் குப்தாவின் புத்தகம் ஒரே சமயத்தில் பழசாகவும் சமகாலத்தியதாகவும் இருந்தது ஒரு ஆச்சரியம். மற்றபடி,  கதைகளும் சரி, புத்தகங்களும் சரி, கைக்குக் கை மாறிச் சேர்வது இன்னொரு பிரயாணம். 

துஷார் குப்தாவின் புத்தகம் கிடைத்ததே ஒரு பயணத்தில்தான். அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன். அதற்கு முன்னால் சொல்வதற்கு ஏகப்பட்டது இருக்கிறது. முதலில் துஷார் குப்தாவைப் பற்றியே சொல்ல  வேண்டுமே… 

எனக்கு வாசிக்கக் கிடைத்தது அவருடைய எட்டாவது புத்தகம். ‘ஆசிரியரின் பிற நூல்கள்’ என கடைசிப் பக்கத்தில் இருக்கும் பட்டியலின் பிரகாரம் தெரிந்துகொண்டேன். ஆனால், அவருடைய பிற புத்தகங்கள் எதுவுமே எங்குமே காணக் கிடைக்கவில்லை. ஒருவேளை, ஆங்கிலத்தில் வெளியானது பதினைந்து சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுப்பு மட்டும்தானோ என்னவோ. ‘ஒருபோதும் முடியாத பயணம்’ (Neverending Journey) என்ற இந்த நூலுமே கூட பிரபலப் பதிப்பகம் எதிலிருந்தும் வெளியானது அல்ல.   

முக்கியமான இன்னொரு விஷயமும் உண்டு – பொதுவாக, ஆசிரியர் பற்றிய குறிப்புகளில் அவருக்குக் கிடைத்த விருதுகள் பற்றிய தகவலும் இடம்பெறுமல்லவா? இந்த நூலின் முதல்பக்கத்தில் உள்ள ஆசிரியர் குறிப்பில், ‘ஆயுள்காலம் முழுக்க எந்த விருதுமே பெறாதவர்’ என்று ஒரு வரி இருக்கிறது!

கதைகள் அனைத்துமே அறுபதுகளில் வெளியானவை – ஒன்றைத் தவிர. ‘55ல் தொடங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதுக்கு மிகவும் தகுதியுள்ளவர் துஷார் குப்தா என்பதே எனது மதிப்பீடு. ஆனால், இவர் பரிசீலிக்கப்படவேயில்லை என்றுதான் படுகிறது. பிராந்திய மொழி எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர்களாய் இருக்க, இவருடைய பெயர் இவ்வளவு இருட்டுக்குள் இருந்திருப்பது ஆச்சரியம்தான். 

இந்த ஆங்கில மொழிபெயர்ப்புகூட, மூல ஆசிரியரின் மறைவுக்குப் பிறகே  வெளியாகியிருக்க வேண்டும். வழக்கமான ஆசிரியர் குறிப்புகளைவிடச் சற்று நீளமான  குறிப்பு. 1920ல் பிறந்தவர்; எம் என் ராயுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர். நாலு நாவல்களும், மூன்று கட்டுரைத் தொகுதிகளும் வெளியாகியுள்ளன. கட்டுரைகள் அனைத்துமே அரசியல் கட்டுரைகள்; இடதுசாரிப் பார்வை கொண்டவை.  ‘1975ல் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட மறு வாரமே குஜராத்தின் காந்திநகரிலிருந்து காணாமல் போன துஷார் குப்தாவைப் பற்றி இன்றுவரை தகவல் ஏதும் இல்லை’ என்று முடிகிறது. 

குறிப்பின் பல வரிகள், துஷார் குப்தாவும் அவரது மற்ற நூல்களும் வெளிச்சம் பெறாதது பற்றிய யூகத்துக்கு இடமளிப்பவை.  உண்மையில், சமகாலத்தில் பிறந்து செயல்பட்ட ஒரு எழுத்தாளர் பற்றிய குறிப்பே, தொன்மத்தின் தொலைவிலும் தொனியிலும் இருப்பது ஆச்சரியப்படுத்தியது… 

யூகத்துக்கு இன்னொரு காரணம், துஷார் குப்தாவின் ஆறு பக்க முன்னுரையில் இடம்பெற்றிருக்கும் பத்தி:

அறிவியல் நோக்கின் வறட்சியோ, ஆன்மிகத் தரப்பின் வழிபாட்டுணர்வோ இன்றிப் பார்க்கும் பட்சத்தில், பழங்கதைகளின் இடைசந்துகளில் ஒளிந்திருக்கும் நூதனமான மானுட உணர்வுகளைக் காண முடியும்; புதிதாக வனைந்து பார்க்கவும் முடியும். பலசமயங்களில், சமகால நிகழ்வுகளின்மீது அவை வெளிச்சம் பாய்ச்சவும் கூடும். 

இன்னொரு வகையில், கலைஞனுக்கு நிம்மதியளிக்கும் கனவுகள் அவை. ஏனெனில்,  சமகாலம் பற்றிய புனைவுகளை எழுதும் பட்ச்த்தில், அவன் ஓடஓடத் துரத்தப்படுவதற்கான சாத்தியம் எப்போதுமே ஒளிந்திருக்கிறது – எந்தக் காலகட்டத்திலும். 

நூலின் சிறப்பம்சம், இதிலுள்ள அத்தனை கதைகளும் நீளமானவை; ஒவ்வொரு கதையும் பல பக்கங்கள் நீள்வது; மரபான சிறுகதை வடிவத்துக்கு விசுவாசம் காட்டாதது. ஆனால்,  கவிதைக்கு நிகரான கூர்மைக்கும்   அக தரிசனங்களுக்கும் மட்டுமின்றி,  கரடுமுரடான கருத்துகளுக்கும் பஞ்சமற்ற எழுத்து.  உதாரணமாக,  ஒரு வாக்கியம்:

பைத்தியக்காரனின் துர்க்கனவு போன்றது வாழ்க்கை; ஆனால், கலைஞனின் துர்க்கனவும் நற்கனவே – அவன் குள்ளநரியின் தந்திரமும், வஞ்சகமும், சாதுரியமும் கொண்டிருந்தாலும்கூட!

தமது கதைகள் பற்றி இன்னொன்றும் சொல்கிறார்:

வேண்டுமென்றேவோ, விவரிப்பின் சுவாரசியத்தில் கவனிக்கத் தவறியோ மூல ஆசிரியர்கள் விடுத்த இடைவெளிகளையே என்னுடைய நோக்கில் நிரப்ப முயன்றிருக்கிறேன். ஒருவகையில் அவர்கள் கட்டியெழுப்பியவற்றில்   விடுபட்டவை  என்றுகூட இவற்றைச் சொல்லலாம்…

தொன்மங்கள் அதிமனிதர்களால் நிரம்பியவை; அவர்களை சாமானியத் தளத்துக்கு இறக்கும்போது, பாமரர்களைவிட பலவீனமானவர்களாய்த் தென்படுகிறார்கள், பாவம்!

நூலின் அத்தனை கதைகளுமே, பெண்கள் பற்றியவை என்பதையும் சொல்ல வேண்டும். விவரிப்பின் பின்புலமாக, கு ப ராவின் கதைகளில் போன்ற வாஞ்சை நிலவுகிறது. என்க்கு அவருடைய ‘காணாமலே காதல்’ தொகுப்பு திரும்பத் திரும்ப நினைவு வந்தது. 

ஆனால், மூன்று வித்தியாசங்கள். கு ப ராவுடையவை எளிமையான, சமச் சீரான, நேரடி மொழியில், மென்குரலில் பேசுகிறவை. துஷார் குப்தாவின் வாக்கியங்களும் மொழியும் சிடுக்கானவை. மூல மொழியில் எப்படி இருந்ததோ, ஆங்கில வடிவம், மிகக் கடினமானதாக, பல்லை உடைப்பதாக இருக்கிறது; மொழிபெயர்ப்பாளரின் சொற்தேர்வும் சிரமம் தருவதுதான். அபூர்வமான, வழக்கொழிந்த சொற்களை மெனக்கெட்டுத் துழாவி எடுத்துக் கோத்ததுபோல. ஆனால், கதைகளின் மையக் கரு, அலாதியான வசீகரம் கொண்டது.

கு ப ராவின் தொகுப்பில் இருப்பவை சரித்திரக் கதைகள். இவருடைய தொகுப்பு இதிகாச புராணக் கதைகள் கொண்டது. இரண்டு எழுத்தாளர்களுமே ஒரேவிதமான, மகத்தான, வாசக ஈர்ப்பைக் கிளர்த்துகிறவர்கள்.  ஆனாலும், உரிய அளவு பிரபலமாகாதவர்கள். 

மூன்றாவது வித்தியாசம் அடிக்கோடிட்டுக் குறிப்பிட வேண்டியது. முன்பே சொன்னதுபோல. கு ப ரா எழுதியவை மாதிரி வடிவப் பிரக்ஞையும், கச்சிதமும், சீரான மொழியொழுக்கும் கொண்டவை அல்ல துஷார் குப்தாவின் கதைகள்; எப்போது புனைவுமொழியில் பேசுவார்; எப்போது கவிதையின் உச்சத்துக்கு நகர்வார்;  எப்போது கட்டுரைபோலக் கருத்துமழை பொழிவார் என்பதை அனுமானிக்கவே முடியாது! இவரைப் பொறுத்தவரை, பரவலான அங்கீகாரத்தைப் பெறாமல் போனதற்கு இதுவேகூட முக்கியமான காரணமாய் இருக்கலாம்.

இருந்தாலும், என்னை வெகுவாகக் கவர்ந்த நூல். வாசிக்க வாசிக்க, தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆசை வளர்ந்தது. கொஞ்சம் முன்பின்னாக இருந்தாலும், தமிழ் வாசகர்களுக்குப் பெரும் இன்பத்தை அளிக்கக்கூடியது என்று தோன்றியது. 

மொழிபெயர்ப்பு நூல்களை வாசிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர்கள்  தமிழ்ச்சூழலில் இருக்கத்தானே செய்கிறார்கள்; மொழிபெயர்ப்பின் தரம் அல்லது நேர்மை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாத பெருந்தன்மை கொண்டவர்களாயிற்றே என்றும் தோன்றியது. உணர்ச்சிபொங்க ஆரம்பித்தேன். 

சில பக்கங்கள் போனதுமே புரிந்துவிட்டது;  விபரீத முயற்சி;   தமிழுக்கும் வாசகர்களுக்கும் நேரும் துரோகமாக முடிந்துவிட வாய்ப்பிருக்கிறது என்று. கைவிட்டுவிட்டேன். ஆமாம், இந்த நூலை மொழிபெயர்ப்பது அத்தனை சுலபமில்லை; பிரிட்டிஷ் காலத்து கெடுபிடி உள்ள ஆங்கிலம். ஏற்கனவே சொன்னபடி,  குழப்பமான, சிக்கலான வாக்கியங்கள். வாசிப்பதே பெரும் பிரயாசை. அப்புறமல்லவா மொழிபெயர்க்க! ஆனாலும் பிடிவாதமாக  வாசித்து முடித்துவிட்டேன். கதைகள் எழுப்பிய ஈர்ப்பின் விசை அப்படி!  

என்னைப் பரவசத்தில் ஆழ்த்திய நூலை அப்படியே விட்டுவிடவும் மனமில்லை. வெகுவாக வசீகரித்த சில கதைகளின் சுருக்கத்தை மட்டும், சற்று விரிவாகவே,  சொல்ல முயல்கிறேன்…

2 

முதலாவது, ராமாயணக் கதை. வனத்தின் தாவரங்களையும், ஜீவராசிகளையும், சீதோஷ்ணத்தையும் விவரிப்பதிலேயே பாதிக் கதை ஓடிவிடுகிறது. இந்த விவரணையோடு, ராமன் வனவாசம் சென்ற பாதையில் வசிக்கும் பழங்குடியினங்கள், அவற்றுக்கிடையிலான படிநிலைகள்,  உறவும் விரோதமும் என்று பெரும் ஆராய்ச்சியை முன்வைக்கும் விவரணை. தற்காலத்தில் அந்த இனங்களின் நிலை என்ன, அவை அனுபவிக்கும் சிரமங்கள் என்ன என்பது பற்றியும் விவரிக்கிறார். அங்கங்கே ராகுல சாங்கிருத்தியாயனின் நினைவு வந்தது எனக்கு.  நவீனகாலத்தின் சிந்தனை முறையும், செவ்வியல் காலத்தின் கலைப் பார்வையும் கொண்டவர் துஷார் குப்தா என்று  தோன்றியது.  

கதை இதுதான்:

தனது படகில் பயணம் செய்து, மறு கரை சேர்ந்த ராமனின் உணர்ச்சிமயமான முகம் மனத்தைவிட்டு அகல மறுக்கிறது – பலகாலம் ஆனபின்னும். அவனுடைய நினைவும் மறுபடியும் அவனைக் காணும் ஆவலும் பொங்கியெழுந்த ஒரு நாளில், சிருங்கிபேரபுரத்திலிருந்து தேடிக் கிளம்புகிறான் குகன். ராமனை சும்மா பார்த்தால் போதும்; பாதம் தொட்டு வணங்கித் திரும்பினால் போதும் என்று வெறியேறி, கானகத்துக்குள் வெகுதூரம் செல்கிறான். 

அலகாபாதுக்கு அருகிலிருந்து கர்நாடகம் ஆந்திரா வரை பரவியிருக்கும் தண்டகாரண்யத்தில், ஹம்ப்பிக்கு அருகில், பம்பா சரோவரத்தின் கரையில் ஒரு கிழவியைச் சந்திக்கிறான். (தொள்ளாயிரத்துச் சொச்சம் கிலோமீட்டர்கள் என்று அடிக்குறிப்பில் சொல்கிறார் துஷார் குப்தா.) நடந்து நடந்து புழுதி படிந்த கால்களும், கலைந்த தலையும்,  சோர்ந்த முகமும், துவண்ட கால்களுமாக வந்து நிற்கும்  அந்நியனைப் பார்த்தவுடன் சபரிக்குப் பச்சாதாபம் பொங்குகிறது. 

பயண அலுப்பு தீர நீராடுவதற்கு சுடுநீர் வைத்துத் தருகிறாள். கைவசம் இருக்கும் சகல பொருட்களையும், சகலத் திறனையும் ஈடுபடுத்திச் சமைத்துப் போடுகிறாள். 

எதற்காக இவ்வளவு உபசாரம்!

என்று உள்ளூர வியந்துகொண்டே, ஆனந்திக்கிறான் குகன். வயிறு நிரம்பச் சாப்பிட்ட பிறகு சாவகாசமாக அமர்ந்து பேசும்போது அவளிடமே கேட்கிறான்:

என்னை இவ்வளவு உபசரிக்கிறீர்களே. என்ன காரணம் அம்மணீ?

ஏனோ, உன்னைப் பார்த்தவுடனே என்னைச் சேர்ந்தவன் என்று தோன்றிவிட்டது மகனே. அது மட்டுமில்லை…

சொல்லுங்கள்.

இந்த அத்துவானக் காட்டில் என்னைத் தேடி வருகிறவர்கள் யார் இருக்கிறார்கள் சொல்லு? பார்க்கப்போனால், எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு ஒரு வாலிபனும் அவன் சகோதரனும் வந்தார்கள்… 

வந்தவர்களின் தோற்றத்தை மீட்டுக்கொள்பவள் போல, சில கணங்கள் கண்ணை மூடி இருக்கிறாள். பின்,

…இன்னும் அதிக நாள் ஆகவில்லை, இதோ நீ வந்திருக்கிறாய்.

என்று முடிக்கிறாள்.

உள்ளூர வியந்தபிறகு, வந்தவர்களின் அடையாளத்தை விசாரிக்க ஆரம்பிக்கிறான் குகன். தான் தேடி வந்தவர்கள் பற்றிய விவரணை கிழவியின் பொக்கைவாயிலிருந்து உதிர்வது விநோதமான கிளர்ச்சியை எழுப்புகிறது. அவள்மீது நேசம் பொங்குகிறது. கிறங்கிய கண்களுடன் சொல்கிறாள் கிழவி:  ஒருவன் கறுப்பு; மற்றவன் தாமரை நிறம். ஆனால், முகச்சாயல் ஒன்றாக இருந்தது – ஒரே தகப்பனுக்கும் வெவ்வேறு தாய்களுக்கும் பிறந்தவர்களாம். 

அகல் சுடர் மாதிரி ஒரு மாதரசியும் உடன் இருந்திருப்பாளே? மூத்தவரின் சம்சாரம்…

இல்லையே அய்யா. பார்த்தாயா, இப்போதுதான் நினைவு வருகிறது. அவளைக் காணோமென்று தேடித்தான் போகிறார்கள். 

அடடா. அப்படியா சேதி?… 

பதறுகிறான் குகன். சிறு இடைவெளிக்குப்பின் சொல்கிறான்:

அவர்களை நான் பார்த்திருக்கிறேன் அம்மா. எந்த வழியாய்க் கிளம்பிப் போனார்கள்?

இங்கேதான், கிஷ்கிந்தையைப் பார்த்து…

உடனே புறப்பட ஆயத்தம் காட்டுகிறான். ஆனாலும், கேள்விகள் ஓயவில்லை. பிறகு எப்படித்தான் தன்னை சமனப்படுத்திக்கொள்வது!

அதிருசியான சாப்பாடு. அவர்களுக்கும் இதேபோலச் சமைத்துப் போட்டீர்களா அம்மா?

இல்லை மகனே…

ஏன்?

நான் சமைத்தால் உண்பார்களோ மாட்டார்களோ என்றுதான்… அது சரி, நீ என்ன படைத்தாய்?

மீனும் தேனும். 

நான் அவனுக்கு வெறும் பழத்துண்டுகள்தான் கொடுத்தேன். ஒரு மரத்துப் பழமாகப் பறித்துவந்து, வகைக்கொன்றாக நானும் ருசி பார்த்துவிட்டுக் கொடுத்தேன்…

இந்த இடத்தில் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. சபரி தான் கடித்து ருசி பார்த்தவற்றைத்தான் ராமனுக்குப் படைத்தாள் என்று என் அப்பா சொல்லியிருக்கிறாரே? துஷார் குப்தாவின் கதையில் இதற்கு நேரடியான விளக்கம் இல்லை; இன்னொரு இடத்தில் கிடைக்கிறது. அந்தக் கதை வரும்போது சொல்கிறேன்… குகன் கேட்கிறான்: 

ஏன், இத்தனை அற்புதமான கைப்பக்குவம் இருக்கிறது. அவர்களுக்குச் சமைத்தே போட்டிருக்கலாமே! நானெல்லாம் சமைத்த மீனைத்தானே படைத்தேன்?

வேட்டுவனானாலும் நீ அரசன். நான் என்ன,  சாதாரணப் பழங்குடிப் பெண்பிள்ளைதானே! என் கையால் சாப்பிடுவார்களோ என்னவோ?

அப்படியெல்லாம் யோசிக்கக்கூடியவர் என்று எனக்குத் தோன்றவில்லை அம்மா! அபூர்வமான பிறவியம்மா அவர். மறுகரைக்குப் படகோட்டி வந்தது தவிர வேறெந்த உபகாரமும் செய்யவில்லை நான். அதற்கே என்னைத் தழுவி நன்றி சொன்னார். 

அதுதானே பார்த்தேன்,  அவன் தழுவியதன் பிரகாசம் இன்னமும் உன்னிடம் மிச்சமிருக்கிறது. அதனால்தான் உன்னைப் பார்த்தவுடன் ‘இவன் நம்மவன்’ என்று எனக்குத் தோன்றியதோ என்னவோ! 

குகன் சிலிர்த்துக்கொள்கிறான். 

தழுவியது மட்டுமில்லை அம்மா;  என் பிறவிப்பயன் போன்ற ஒரு வாக்கியத்தையும் சொன்னார்.

என்ன சொன்னான்?

அவர்கள் நாலுபேர் சகோதரர்களாம். ‘நால்வரொடும் ஐவரானோம்’ என்று சொல்லி என்னை கவுரவித்தார். 

கண் மல்குகிறான். 

அப்படியா சொன்னான்!…

வியப்பு அடங்கும் முன்பே, ஒரு ஆதங்கம் எழுகிறது. ‘உன்னை சகோதரன் என்றானே மகனே, என்னைத் தாய் என்று சொல்லவில்லையே!’.

தலையை உதறி எண்ணவோட்டத்தை அறுக்கிறாள். திடீரென்று அவள்மீது படிந்துவிட்ட மௌனத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் திகைத்தபடியே விடைபெறுகிறான் குகன். 

இதுவும்  ராமாயணக் கதைதான். தொகுப்பில் ஏழாவதாக இருப்பது. மூலப் படைப்பில் அடுக்கப்பட்டிருக்கும் விதமாகவே இங்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லையே. இது என்ன, முழுமையான மொழிபெயர்ப்பா?

மானபங்கப்பட்டு வீடு திரும்பும் பெண்மனத்தின் அல்லாட்டத்தைப் பேசும் கதை.  வங்காளி எழுத்தாளர் சௌரவ் பாசுவின் கதைகளில் இதுபோன்ற உளவியல் மடிப்புகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்; குறிப்பாக, தொன்மங்களை அவர் எழுதும்போது. பரத சத்ருக்கனர்களின் மனைவியரான மாண்டவியும் சுருதகீர்த்தியும் ஊர்மிளையோடு சேர்ந்து தாமும் பிரம்மச்சரியம் அனுசரித்தார்கள் என்று சொல்லும் ஒரு கதை. அதில், 

சிலர்மீது விதி சுமையாய் வந்து அமர்கிறது; சிலர் தலைவிதியைத் தாமாகவே தூக்கித் தோளில் வைத்துக்கொள்கிறார்கள்.

என்ற வாக்கியம் பசுமையாய் நினைவிருக்கிறது. 

ஆனால், பாசுவிடம் ஒரு கோணல் பார்வையும் கேலியும் சேர்ந்தே இருக்கும். துஷார் குப்தா, நிஜமாகவே நடந்ததை விவரிப்பது போன்ற குரலில், கொஞ்சமும் நையாண்டி தொனிக்காமல் எழுதியிருக்கிறார். கால அடிப்படையில் பார்த்தால், பாசுவின் படைப்புகளுக்கு இவரும் ஒரு முன்னோடியாய் இருந்திருக்கக் கூடும் என்றுகூடப் படுகிறது… போகட்டும், கதைக்கு வருகிறேன். 

வீடுதிரும்பும் வழி முழுக்க, கானகத்தில் நிகழ்ந்ததைத் திரும்பத் திரும்ப அசைபோட்டபடி வருகிறாள். தோளில் ஏதோ சொத்தென்று வீழ்கிறது. நிமிர்ந்து பார்க்கிறாள். தலைக்கு மேலாக, தன்போக்கில் பறந்து விரைகிறது கனத்த பறவையொன்று. ஒரு கணம் ஆத்திரம் எழுகிறது; அடுத்த கணமே, வேண்டுமென்றே தன்மீது எச்சமிடவில்லை; தன்னிலை இழந்து, போகும்வழியில் இட்டிருக்கிறது. அந்த நேரத்தில் தற்செயலாக நேர்கீழே இருக்க நேர்ந்த தன் தோளில் வீழ்ந்திருக்கிறது என்று உறைக்கிறது.

அட, இப்படியெல்லாம் யோசிக்கிற பழக்கமே தனக்குக் கிடையாதே, அந்த வீரர்கள் இருவரையும் பார்த்ததால் கிடைத்த திருப்பமோ? என்று வியப்பு எழுகிறது. தோளில் குளிரும் எச்சத்தின் ஈரத்துக்கு நிகராக,  மனத்திலும் மெல்லிய குளிர் தட்டுகிறது.

அவர்களைக் குற்றம் சொல்ல முடியுமா? நானாகச் சென்று சீண்டாவிட்டால், என்னைப் பொருட்படுத்தியாவது இருப்பார்களா? ஒருமுறை கேட்டு மறுத்த பிறகும் விடாமல் நச்சரித்தது என்னுடைய பிசகுதானே?  பலவந்தமாகத் தழுவ முனைந்தால் யாருக்குத்தான் ஆத்திரம் எழாது?…

மனம் இன்னும் வேகமாக இளகுகிறது. இருவருமே தோளில் வில்லை மாட்டியிருந்தாலும்,  மூத்தவன் சாந்தமாய்த்தான் மறுத்தான்.  இளையவனிடம்தான் வேகமும் மூர்க்கமும் அதிகம். 

…அவனுக்குக் கொஞ்சமும் குறையாத மூர்க்கம் கொண்டவனல்லவா என் தமையன்?  ஆனால், இவனிடம் சொல்லாமல் இருக்க முடியுமா? பிரியத் தங்கையின் மூக்கு ஏன் சேதப்பட்டிருக்கிறது என்று கேட்க மாட்டானா? ஒரு கரடியுடன் துவந்தம் செய்ய நேரிட்டது; அது கடித்துத் துப்பிவிட்டது என்று பொய் சொல்லிப் பார்க்கலாம். ஆனால், துவந்தமென்றால் உடம்பில் வேறெங்கும் காயமில்லையே என்று சந்தேகிக்க மாட்டானா? தவிர, சாந்த சொரூபனான அந்த மூத்தவனைப் பார்த்தபிறகு, பொய் சொல்லவேண்டும் என்று நினைத்தாலே மனம் கூசுகிறதே… 

அரண்மனை முகப்பு கண்ணில் படுகிறது. மிகுந்த பிரயாசைப்பட்டுத் தான் எடுத்த மானுட உருவம் உறுத்தலாகப் படுகிறது. இன்னும் கொஞ்சம் நன்றாக ஒப்பனை செய்துகொண்டு போயிருக்கலாமோ?… 

அரண்மனை வாசலை மிதித்த மாத்திரத்தில், தனக்கே  நம்பமுடியாத வகையில், பழைய சூர்ப்பனகையாக மாறுகிறாள். மாறியதுகூட உறைக்காமல்,  ஓவென்று அலறியபடி, தர்பார் மண்டபத்தை நோக்கிப் பாய்கிறாள்.   

காலவரிசைப்படி கோக்கப்பட்ட கதைகளில், ‘71ல் எழுதப்பட்டு, துஷார் குப்தா காணாமல் போனதற்குப் பின் கண்டெடுக்கப்பட்ட கைப்பிரதி இது. தொகுப்பின் கடைசிக் கதையாகச் சேர்த்திருப்பதன் காரணம் புரியவில்லை; அந்த முடிவை எடுத்தது யார், மொழிபெயர்ப்பாளரா, பதிப்பாளரா என்றும் தெரியவில்லை. தொகுப்பின் கதைகளிலேயே ஆக நீளமான கதை என்பதாலோ, இடையில் வரும் ஓரிரு பத்திகளை முன்னிட்டோகூட இப்படி அமைத்திருக்கலாம். அல்லது, தலைப்பு ‘இறுதிக் கதை’ என்று  இருப்பதன் பொருத்தம் கருதிக்கூடச் செய்திருக்கலாம். கதைப்போக்கினூடே துஷார் குப்தா எழுதுகிறார்:

ஆண்களைப் பொறுத்தவரை, அவர்களில் பெரும்பான்மை கொடுங்கோலர்கள்தாம் – அல்லது, வாய்ப்புக் கிடைப்பதற்காகக் காத்திருப்பவர்கள். இதில் சந்தேகத்துக்கே இடமில்லை. ஆனால், சாத்வீகமானவர்களாக அறியப்படும் பெண்ணினமும் அப்படித்தான் இருக்கிறது என்பதுதான் திகைப்பளிக்கிறது! அதிகாரம், ஒருவேளை, பெண்ணை ஆணாக மாற்றிவிடுமோ என்னவோ!

ஆனால், நாயகியர் என்று கருதப்படும் பெண்கள் அரக்கிகளாக மாறுவது வரலாறு முழுவதும் நடந்துதான் வந்திருக்கிறது;  வீராங்கனைகள் கோழைகளாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதும் கூடத்தான், என்ன, கோழைகளோ, அரக்கியரோ எதிர்நிலைக்கு நகரும் சம்பவங்களின் விகிதம் மிகமிகக் குறைவு – கவனத்தில் தைக்காத அளவு. 

ஆனால், மேலே சொன்ன மாதிரி வெளிப்படையாய், வறண்ட கருத்தை  உதிர்ப்பதெல்லாம் கதையின் கலைமேன்மையைக் கீழிறக்குகிறது என்றே சொல்வேன். 

தொகுப்பின் ஒரே மகாபாரதக் கதை இது. மேற்சொன்னதுபோன்ற வாக்கியங்களும் பத்திகளும் புனைவுத்தன்மையை வெகுவாகக் குறைத்து, கட்டுரைபோலவே தொனிக்க வைக்கின்றன. ஐராவதி கார்வேயின் ‘யுகாந்தா’வில், திரௌபதியின் ஆயுள் முடியும் தருணத்தை ஒரு முழுச் சிறுகதையின் நாடகீயத்தோடு விவரிக்கும் கட்டுரையொன்று உண்டு. அதை நினைவூட்டுவது இது.   

பெற்ற மகன்கள் ஐவரையும் கொத்தாகப் பறிகொடுத்து நிற்கும் திரௌபதியின் கதை. ஆரம்பத்தில் ஒரு முன்குறிப்பு இருக்கிறது: 

எனது மூன்றாவது நாவல், மகாபாரதத்தை அடிப்படையாய்க் கொண்டது. அதில் இடம்பெறும் தாய்மார்களை மட்டுமே கவனத்தில் கொண்டு எழுதப்பட்டது. அநேகமாக அனைவருமே அரசிகளாய் இருந்தாலும், ஆடவர்களைப்போல துன்மார்க்கர்களாக அவர்கள் இல்லை என்பதும்; ஒருவேளை அவர்கள் தலைமையில் அன்றைய அரசாங்கங்கள் நடந்திருந்தால், இறுதியில் விளைந்த உற்பாதம் விளைந்திருக்காது என்றும் நிறுவ முயலும் நாவல். அது. எவ்வளவு குழந்தைத்தனமான, அசட்டு நம்பிக்கை! 

உண்மையில், வரலாற்றின் தொடர்ந்த ஓட்டத்தில், எத்தனையோ நம்பிக்கைகள் காலாவதி ஆகியிருக்கின்றன. பண்டைக்கால அரசர்களின் கொடுங்கோன்மைக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை சமகால அரசிகளின் கொடுங்கோன்மை என்பது அபத்தமாக, திரும்பத்திரும்ப  நிரூபணமாகியிருக்கிறது. 

போகட்டும், எனது மூன்றாவது நாவலில் எழுதாமல் விடுபட்ட ஒரு தருணத்தை முன்னிறுத்தியே இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்…

குருட்சேத்திரப் போர் முடிந்ததற்குப் பிறகு, உபபாண்டவர்களைக் கூடாரத்தோடு அசுவத்தாமன் கொளுத்திய பிறகு, தனியே இருந்து புலம்பும் திரௌபதியின் கதை.  வெற்றி வீரர்களாகத் திகழும் கணவர்களையோ, தாய்க்குச் சமமான பாசம் காட்டிய மாமியாரையோ, நிழல்போல உடனிருந்து பேணும் ஓரகத்திகளையோ, தாதியரையோ அருகில் அனுமதிக்காமல், த்ரிஷாவதி நதிக்கரையில் அமர்ந்து குமுறுகிறாள் திரௌபதி. 

ஓரங்க நாடகத்தில், தனக்குத்தானே பேசிக்கொள்ளும் ஒற்றைக் கதாபாத்திரத்தின் வசனப் பொழிவுபோல நகரும் கதை. மகாபாரதக் கதையை அறியாத வாசகர்களுக்காக எழுதப்பட்டதுபோல, ஆதியோடந்தமாக விவரிக்கிறது – திரௌபதியின் பார்வையில்… 

மிகுந்த சிக்கனத்தோடு விவரித்தாலும், மகாபாரதக் கதைச்சுருக்கத்தை முழுசாக வாசிப்பது சலிப்பை அளிக்கத்தான் செய்கிறது. அதுவே கதையின் நீளம்  அதிகமாகிவிட்டதற்கும் காரணம். ஆனால், வேறொரு அம்சம், சுவாரசியம் அளிக்கிறது; வனத்தின் பருவ மாற்றங்கள். அவை நிகழும்போதெல்லாம் பாண்டவர்கள் மனத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அவற்றை ஏந்தித் துயருறும் ஒரே சுமைதாங்கியாக திரௌபதி எதிர்கொள்ளும் சிரமங்கள் என்று விவரிப்பு நீள்வது. சுமை தாளாமல், ஒரு கட்டத்தில் தானே கவுரவர்களின் பக்கம் சென்று சேர்ந்துவிடுவோமோ என்று அச்சம் கொள்கிறாள். 

கவனமாகச் சுருக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் மிகச்சிறந்த கதை ஆகியிருக்கும்; ஆனால், படைப்பாளியின் அனுமதியின்றி யாராவது அதைச் செய்யலாகுமா? மிக மிகத் தொய்வான கதை என்றாலும், கதையின் முடிவை நெருங்கும்போது வாசக மனோகதி வேறு திசையில் புரள்வது உறுதி. மானசீகமாக, பொசுங்கிய உடல்களின் புகைநாற்றத்தை நுகர்ந்தவாறே வாசிப்பதுபோல பிரமை தட்டியது எனக்கு. 

எத்தனை சுயநலமியாய் இருந்துவிட்டேன். இன்றைக்கு இத்தனை துணிச்சல்காரியாய் இருக்கும் நான், அன்றைக்கு ஐந்துபேருக்கு மனைவியாய் வாழ முடியாது என்று தகப்பனையோ, மாமியாரையோ எதிர்த்து நின்றேனா? பெற்றெடுத்த குழந்தைகளை மார்போடணைத்து வளர்த்தேனா? அசட்டுக் கணவர்கள் சூதாடித் தோற்றபின், மைந்தர்களைக் கூட்டிக்கொண்டு தகப்பன் வீட்டுக்குப் போயிருக்கலாமே, போனேனா? உச்சபட்சக் கேவலத்தை அனுபவித்தபிறகு, ஆத்மஹத்தி செய்துகொண்டிருக்கலாமே, செய்தேனா? கௌரவசபையில் நான் பட்ட அவமானமும், அதற்குப் பழிதீர்க்க நான் எடுத்த சபதமுமே பெரிது என்று கருதித்தானே வனம் புகுந்தேன்? வனத்துக்குள்ளும், கணவர்களுடைய பலவீனத்தின் நடமாடும் சாட்சியாக அவர்கள் முன் நடமாடிக்கொண்டே இருந்ததைத் தவிர வேறென்ன சாதித்துவிட்டேன்? 

ஆமாம், என் சுயநலத்துக்குக் கிடைத்த பரிசுதான் இது…

தலையில் அடித்துக்கொள்கிறாள். இறுதியாக, 

சுயநலமிகளை ஊழ் ஒருபோதும் மன்னிப்பதில்லை. 

என்ற வரி, திரௌபதியின் வாசகமாகவும், ஆசிரியர் கூற்றாகவும் ஒருங்கே தொனிக்கிறது. 

இதே மனநிலையோடு கூடாரம் திரும்புகிறாள். பிடிபட்ட அசுவத்தாமனை இவள் எதிரில் கொண்டு நிறுத்துகிறார்கள். அதிகபட்ச இழப்பை எதிர்கொண்டவள் என்பதால், அவனுக்கான தண்டனையை அவளே முடிவுசெய்யலாம் என்கிறான் கிருஷ்ணன். 

சட்டென்று மன எழுச்சி கொள்கிறாள் திரௌபதி. யாருமே எதிர்பாராத வண்ணம், இரண்டே  வாக்கியங்களில் முடிவை அறிவிக்கிறாள்: 

அவனை மன்னிக்கிறேன். அவன் போக்கில் போகட்டும்.

இந்த இடத்தில் முடிந்திருக்க வேண்டிய கதை, மேற்கொண்டும் ஒரு விளக்கத்தை முன்வைக்கிறது – கலைஅமைதி குலையும் விதமாக.

விரக்தியின் காரணமாகக் கனிவு முகிழ்த்தது அவளுக்குள். ஆனால், எல்லாப் பெண்களுக்கும் இப்படி நேர்ந்தாக வேண்டும் என்பதில்லை; சிலருக்கு விரக்தியின் காரணமாகக் குரூரமும் பொங்கக் கூடும்…  

சமகாலத்தில் யாரையோ குறிப்புணர்த்த முயன்றிருக்கிறார் துஷார் குப்தா; அதற்கான விலையாக ஒரு நல்ல கதையைப் பலிகொடுத்திருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது. 

என்னைக் கவர்ந்த இன்னொரு கதை, இப்படியொரு  கனத்த வாக்கியத்தோடு ஆரம்பிக்கிறது:

உத்தமியர் அனைவரும் உத்தமியும் இல்லை; அரக்கியர் அனைவரும் அரக்கியும் இல்லை. 

இந்தச் சமன்பாடு எஸ் எல் பைரப்பாவையும், கதையின் மையக்கரு எம் ட்டி வாசுதேவன் நாயரையும் ஒருங்கே நினைவூட்டின. 

கோகுலத்தின் தெருவில் ஒரு பெண் நடந்துவருகிறாள். சாதாரண யாதவப் பெண்களைவிட ஓங்குதாங்கான உருவம். பூமியதிராமல் நடக்கப் பெரும் பிரயாசைப்படுகிறாள் என்பது வெறும் பார்வைக்கே தெரிகிறது. அடிக்கடி தன் வலது முலையைத் தொட்டுப் பார்த்துக்கொள்கிறாள். பத்திரப்படுத்தியிருக்கும் எதையோ உறுதிப்படுத்திக்கொள்கிற மாதிரி. 

அக்கம்பக்கம் பார்த்துவிட்டு, அவசரமாய் நந்தகோபர் வீட்டுக்குள் நுழைகிறாள். தொட்டிலில் கிடக்கும் ஆறுநாள் சிசு அப்போதுதான் கண்விழித்திருக்கிறது. உலகத்தின் அப்பட்டமான வெளிச்சம் இன்னும் பழக ஆரம்பிக்கவில்லை அதற்கு. இலக்கற்ற பார்வை. குவியாத கவனம். நிமிராத முதுகெலும்பு. நிலைப்படாமல் ஆடும் தலை. வாரியெடுக்கும் புதியவளின் கையில் துவள்கிறது.

தொட்டிலின் அருகில் தரையில் அமர்ந்து, மடியில் கிடத்திக்கொள்கிறாள். பழக்க தோஷத்தால் இடதுமுலைக் கச்சை நெகிழ்த்திப் பாலூட்டத் தொடங்குகிறாள். ‘சம பாவமற்ற பகலும் இரவும்போல, நேருக்குநேர் சந்திக்க முடியாத  முடியாத நன்மையும் தீமையும்போல, இணையவே இயலாத நீரும் நெருப்பும்போல, ஒன்றுக்கொன்று பார்வையைவிட்டு விலகாத ஆகாயமும் தரையும்போல, வலது முலையில் நஞ்சும் இடது முலையில் அமுதமும் சுரக்கும் மாயப் பிறவி அவள்.’ என்று வர்ணிக்கிறார் துஷார் குப்தா.    

அப்போதுதான் அந்த மாயம் நிகழ்ந்தேறுகிறது; கொலைகாரியாகும் திட்டத்துடன் வந்தவள், தன்னையுமறியாமல் தாயாக உணரத் தொடங்குகிறாள்.  

இந்தப் பகுதியில் கதையின் மொழிநடை புது வேகம் கொள்கிறது… 

நேரமாகிறது, யாரும் வருவதற்கு முன்னால் வேலையை முடித்து வெளியேறிவிட வேண்டும்; காத்திருக்கும் கம்ச ராஜனிடம் சென்று தகவலைச் சொல்லி வெகுமதியை வாங்கிக்கொள்ள வேண்டும். பதற்றமாக, குழந்தையை மறுமுலைக்கு மாற்றுகிறாள். 

வந்தவள் மட்டுமல்ல, குழந்தையும் மாயப் பிறவிதான். முலை மாறிய மாத்திரத்தில் பேருரு எடுக்கிறது. வலது முலையில் பாலருந்துவதற்குப் பதிலாக, கடித்துக் குதறத் தொடங்குகிறது. ஆறுநாள் குழந்தைக்கு அத்தனை உறுதியான பற்கள் திடீரென முளைத்தது ஒரு விந்தையென்றால், முலைக் காம்பின் புலப்படாத் துவாரத்தின் வழி,  நஞ்சுக்கு பதிலாகத் தன் உயிர் கசிந்தோடுவது இன்னும் பெரிய விந்தையாய் இருக்கிறது அந்தப் பெண்ணுக்கு.

ஆனால், இனி சுதாரிப்பதற்கில்லை; விஷயம் கைமீறிவிட்டது. 

இறுதிக் கணத்தில், கண்களை விரித்து குழந்தையைப் பார்க்கிறாள். அளப்பரிய வன்மத்துடன் தன்னைக் கொல்லத் துடிக்கும் அபூர்வக் குழந்தை நிச்சயம் சாதாரணப் பிறவியில்லை; தெய்வீகச் சிசுவாய் இருக்கலாம். அல்லது தன்னைப்போன்றே அரக்க வம்சமாக இருக்கவும் கூடும். எப்படியோ ஒரு அசாதாரணக் குழந்தையிடம் பிராணனை இழப்பதில் நஷ்டமில்லை;  ஆறு நாள் சிசுவிடம் கொலையுண்டவள் என்று காலாகாலத்துக்கும் தன் பெயர் நிலைத்திருக்கப் போகிறது என்று தோன்றுகிறது பூதகிக்கு. 

அப்போது மூன்றாவது விந்தையும் நிகழ்கிறது. ஆமாம், உயிர்பிரியும் வாதையைப் பேரானந்தமாய் உணர்கிறாள்…

முழுவதும் இதே போக்கில் நடந்தேறியிருந்தால் மிகச் சிறந்த கதையாகியிருக்கும். இடையில் ஓரிடத்தில் நிகழும்  ஆசிரியக் குறுக்கீடு, கதையொருமையைக் குலைக்கிறது. ஆனாலும், முக்கியமான பத்தி அது.   

…ஆயர்பாடித் தலைவரான நந்தகோபரின் வீட்டு வாசல் உரிய காவல் இல்லாமலா இருந்திருக்கும்? பல கட்டுகள் நீண்டதாக இல்லாமல், உள்ளே நுழைந்ததும் நேரடியாய்க் குழந்தையை நெருங்கும்படியாக அத்தனை சிறிய வீடாகவா இருந்திருக்கும்? தொப்புள் காயம் உதிராத  பச்சிளம் சிசுவை தனியே விட்டுவிட்டுப் போவார்களா யாரும்? அதிலும் ஆறுநாள் குழந்தையை அந்நியர்கள் கைக்கெட்டும் விதத்தில் பகிரங்கமாக விட்டுச் செல்வாளா ஒரு தாய்? யசோதை வளர்ப்புத்தாய்தானே. பெற்றெடுத்த தேவகி என்றால் விட்டுப்போயிருக்க மாட்டாளோ? 

அப்படியும்கூட, குழந்தையைக் கைப்பற்றிவிட்ட அரக்கி, மெனக்கெட்டுப் பால்கொடுக்க வேண்டிய அவசியமென்ன. கொலை செய்ய வந்தவள்தானே, எதிர்ப்புக் காட்டமுடியாத சிசுவை, ஒரு கணத்தில் கழுத்தை நெரித்துப் போட்டிருக்கலாமே?…

என்றெல்லாம் எனக்குள் கேள்விகள் எழத்தான் செய்கின்றன. மேற்படி சம்பவத்தை நடைமுறைக் காலத்தின் சட்டகத்தில் பொருத்தி வியந்து வழிபடுவதோ  முற்றாக நிராகரிப்பதோ வேறு காரியங்கள். அவை கலையின்  அக்கறைகளுக்கு அப்பாற்பட்டவை. தர்க்கத்தை மீறிய ஒரு காரியத்தை, மாற்றுத் தர்க்கத்தால் நிறுவவோ முறிக்கவோ உள்ள சுதந்திரத்தை, கலைஞன் பயன்படுத்திக்கொள்கிறான். அவ்வளவுதான். 

இது வேதவியாசர்மீது துஷார் குப்தா வைக்கும் விமர்சனமா,  தமது சமகால வாசகர்கள்மீது இருந்த அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறாரா தெரியவில்லை.  

எப்படியானாலும், இந்தக் கதையில் என்னை மிகவும் வசீகரித்தது. கொல்லும் நோக்கத்துடன் வந்த பூதகியின் ஒவ்வொரு முலையிலும் நேரெதிரான வெவ்வேறு திரவங்கள் சுரந்தன என்ற விசித்திரம்; அதைவிட என்னை இன்றுவரை பீடித்திருப்பது, அவளது ஒருகணத் தாய்மை.  அந்த ஒரு கணத்துக்குப் பிறகு, அவளால் மீண்டும் அரக்கியாக முடியவில்லை; தன்னைக் குதற முற்படும் சிசுவை எதிர்த்துத் தாக்க முயலவில்லை என்ற ஆச்சரியமும் நீடிக்கிறது; அவளால் தாயாக மட்டுமே இருக்க முடியும் என்ற நிர்ப்பந்தத்தை விளைவித்த மந்திரத் தருணம், சிசு விசுவரூபம் எடுத்த  மாயக் கணமா, இடது முலையில் பால் அருந்திய அதிமாயக் கணமா என்ற ஆச்சரியமும்தான்…

ஒட்டுமொத்தத் தொகுப்பிலும் என் அதிகபட்ச அபிமானத்தை ஈட்டிய இந்தக் கதையே துஷார் குப்தா எழுதிய கடைசிக் கதையாய்க்கூட இருக்கலாம்.  வாசித்து வந்தபோது, இதுவும் ராமாயணக் கதை என்றே நினைத்திருந்தேன். ஆனால், துஷார் குப்தாவின் பின்குறிப்பு, ‘இது பிரம்மபுராணத்தில் வரும் கதை’ என்கிறது. 

மகாபுராணங்களில் முதலாவதாய்த் தோன்றியதாம் அது. அதனாலேயே ‘ஆதி புராணம்’ என்றும் அழைக்கப்படுகிறதாம். பத்தாயிரம் சுலோகங்கள் கொண்டது என்றும்; ‘அனுமனிடம் ஈர்க்கப்பட்டதாலேயே,  தனது நூலில் ஒரு கதாபாத்திரமாக்க விரும்பி கிஷ்கிந்தா காண்டத்தில் சேர்த்திருக்கக் கூடும் வால்மீகி’ என்றும் அடித்துச் சொல்கிறார். ஆதி புராணக் கதையைத் தன் எழுத்து வாழ்க்கையில் கடைசிக் கதையாக எழுதியிருப்பதன் நகைமுரண் சுவாரசியமானது. 

மேற்படித் தகவல்களைவிட, கதைதான் முக்கியமானதாய்ப் படுகிறது எனக்கு. காலவரிசையற்றுத் தொகுப்பில் பிரசுரமாகியிருக்கும் கதைகளில், கடைசிக் கதைக்கு முந்தைய கதை இது. ஆரம்பக் கதைகளில் இருக்கும் தர்க்கமும், விறைப்பும் குறைந்து, துஷார் குப்தாவிடம் அபாரமான கனிவு சேர்ந்திருப்பது புலப்படுகிறது. அவரது புனைவுமொழியின் வல்லமையை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் பயன்படுத்தும் குழப்பமான வாக்கியங்கள், கனத்த சொற்களைத் தாண்டியும் உணர முடிகிறது. அளவில்  சிறிய கதை. பத்தே பக்கங்கள்தாம். வேறு யாரையும் நினைவுபடுத்தவில்லை என்பதால்,  முழுக்க முழுக்க துஷார் குப்தாவின் கதையாகவே தென்படுகிறது…  

பிறந்த மாத்திரத்தில் அபாரமான பசி கிளர்கிறது, வானரக் குழந்தைக்கு. சூரியனைப் பழம் என்று எண்ணி, ஆகாயத்தில் கிளம்புகிறது. கடந்து போகும் குழந்தையின் மனவோட்டத்தை யூகித்த மேகமொன்று பதற்றமடைகிறது.  எவ்வளவு தொலைவு போக வேண்டும்,  ஏற்கனவே பசியோடு புறப்பட்டிருக்கிற பச்சிளம்  குழந்தையால் சமாளிக்கமுடியுமா என்ற பச்சாதாபம் மேலெழ, தானும் உடன் கிளம்புகிறது. 

கணிசமான தொலைவு சென்றவுடன், குழந்தையின் பாதையில் குறுக்கிட்டு, பலவந்தமாய்த் தன்  மடியில் கிடத்திப் பாலூட்டுகிறது. பாதி வயிறு நிறைந்தவுடன் பிடியிலிருந்து திமிறி விலகி மேலும் பறக்கத் தொடங்குகிறது குழந்தை. உண்மையில், ஆரம்பத்திலிருந்த பசியைவிட, அகாத உயரங்களுக்குப் பறந்து செல்வதிலான பேரார்வமே அதைச் செலுத்தத் தொடங்கிவிட்டது இப்போது என்கிறார் துஷார் குப்தா.  

ஆனால், அவதாரங்களுக்குத்தானே வரையறை கிடையாது; மேகங்களுக்கு  உண்டே. குறிப்பிட்ட தொலைவுக்குமேல் உயர முடியாது அவற்றால். ச்குழந்தையை நினைத்துத் தடையற்றுச் சுரந்த பாலை என்ன செய்வது என்று புரியாமல் திகைக்கிறது மேகம். சும்மா அதைச் சுமந்துகொண்டு திரிவதும் சுலபமில்லை.  

சட்டென்று முடிவெடுத்து, மீந்த பாலை பூமி நோக்கிச் சொரிகிறது… ஒரு குழந்தையை முன்னிட்டுச் சுரந்த பால், எண்ணற்ற பிராணிகளுக்கும், தாவரங்களுக்கும், மனிதர்களுக்குமேகூட வரம்போலப் பொழிகிறது. பிற மேகங்களை ஊடுருவித் தரைநோக்கிப் போகும் வழியில் அடர்த்தி வெகுவாகக் குறைந்து, நீர்ப்பதம் மிகுந்து தரைதொடும் தாரைகளில் நனைந்து ஆனந்திக்கின்றன பூமித் தலத்தின் குழந்தைகள்

தொகுப்பிலுள்ள பிறவற்றுக்கு  மாறாக,  மனித நடமாட்டம் அறவே இல்லாத கதை. ஆனாலும்,  அது பெண்மேகமாகவே இருப்பதும்,  பிற கதைகளின் நாயகியர்போலக் கனிந்தவளாகவே இருப்பதும், அவற்றில் போலவே  தாய்மையுணர்வால் தளும்புவதும் கவனத்தில் தைத்தது. 

உபரியாக, பெற்றெடுத்த அஞ்சனை செய்வதறியாமல் திகைத்து நிற்கும்போது, அவளுடைய இடத்தை ஒரு மேகம் எடுத்துக்கொள்வது இயல்பாக இந்தக் கதைக்கு ஒரு ஃபேண்டஸித் தன்மையை வழங்கியிருக்கிறது.  

இறுதிக் கதைக்கு முந்தையதாக இருக்கும் இதையே இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த கதை என்பேன்.

3

கற்பிதமான கதைத் தொகுப்பை முன்வைத்து நீ எழுதும் முப்பத்திரண்டாவது கதை இது.

என்றான் இஸ்மாயில். குரலில் லேசான எரிச்சல் தெரிந்தது. நான் மறுக்கவில்லை. ஆனால், வேறொரு தர்க்கத்தை முன்வைத்தேன்:

‘ஒரு ஊருலெ’  என்றோ, ‘ஒரு காட்டுலெ’ என்றோ ஆரம்பிக்கும் குழந்தைக்கதைகள் எத்தனை நூறு இருக்கின்றன, தமிழில்? மரபான எடுப்பு-தொடுப்பு-முடிப்பு என்ற அமைப்பில்,  நேர்கோட்டில் சொல்லப்படும் கதைகள் எத்தனை ஆயிரம் இருக்கின்றன? பெரியவர்கள் யாருக்காவது அவற்றின்மீது புகார் இருக்கிறதா? இந்தக் கதைகளை இப்படி எழுதுகிறேன் என்றால், எனக்கு வாசிக்கப் பிடிக்கிற மாதிரியான தொகுப்புகளை இந்தவிதமாக நானே உருவாக்கிக்கொள்கிறேன் என்றுதான் அர்த்தம்.  

சரிதான். வில்லங்கமான விஷயங்களைப் பேச நேரும்போது, யாரோ முகமற்றவன்மீது பழியைப் போட்டுவிடுவதற்கும் வசதியாய் இருக்குமே!

சிரித்தான். 

அவன் சொன்னது சரிதான். கற்பனைத் தொகுப்புகளை மையமாகக் கொண்ட  கதைகள் அநேகம் எழுதியிருக்கிறேன்.  எழுதப்படாத கதைகளை அதிகபட்சம் எழுதிப்பார்த்தவன் என்ற பெருமை எனக்குக் கிடைக்கட்டுமே!

ஆனால், இது நிஜமாகவே படிக்கக் கிடைத்த தொகுப்பு. இந்த உண்மையை  நம்பாதவன், தொகுப்பு கிடைத்த விவரத்தைச் சொன்னால் மட்டும் நம்பவா போகிறான். உண்மையில், என் அசல் கதைகளில் ஒன்றாக, முன்பே நான் எழுதியிருக்க வேண்டிய சம்பவம் அது. ஏன் எழுதாமல் விட்டேன்  என்றே புரியவில்லை… 

ஹவுராவுக்கு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். பகல் நேரம். ஜன்னலோர இருக்கை. வலது கையை ஜன்னல் கட்டையில் படுக்க வைத்து, விரல்களால் விரித்த புத்தகத்தைப் படித்துக்கொண்டு போனேன். ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’. அதில் ‘விடுபட்டுப் போன நரி’ என்று ஒரு  கவிதை இருக்கிறதல்லவா.  மாணிக்கவாசகர் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடற்புராணச் சம்பவம் நிகழ்ந்ததற்கு மறுநாள், தாமதமாக வந்துசேரும் நரி பற்றிய கவிதை.  

கவிதையில் மூழ்கி கவனம் சிதைந்ததாலோ, பற்றியிருந்த விரல்களின் பிடி தளர்ந்ததாலோ,  காற்றின் வேகத்தாலோ, புத்தகம்  கைநழுவியது.  இமைக்கும் நேரத்தில், விரையும் ரயிலின் ஜன்னல்வழி வெளியே விழுந்தது. அசட்டுத்தனமாய்ச் சிரித்தபடி, சகபயணிகள் யாரும் பார்க்கிறார்களா என்று பார்வையைச் சுழற்றினேன். எல்லாரும் தத்தமக்குள் மூழ்கியிருந்தார்கள். 

எதிர்ப் படுக்கைக்காரர் மட்டும் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார், என்னைப்போலவே. விசாகப்பட்டினத்தில் இறங்கிப் போனார். அதன் பிறகுதான் பார்த்தேன்; படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மறந்து வைத்துவிட்டுப் போயிருந்தார்…


Discover more from சொல்வனம் | இதழ் 378 | 08 நவ 2026

Subscribe to get the latest posts sent to your email.

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.