சொர்க்கத்தின் பறவைகள் – அப்துல்ரஸாக் குர்னா (தமிழில் லதா அருணாச்சலம்)

இந்தியாவும் ஆப்ரிக்க நாடுகளும் சில‌ ஐரோக்கிய நாடுகளுக்கு அடிமையாக சில காலம் இருந்தவை. அது குறித்த சொலவடை அங்கு உண்டு. “இந்தியா விடுதலை பெற்றபோது தங்களது கலாச்சாரத்தை அப்படியே பாதுகாத்துக் வைத்துக் கொண்டு ஆங்கிலேயரிடமிருந்து தொழிற்நுட்பத்தை மட்டும் கற்றுக் கொண்டார்கள், ஆனால் ஆப்ரிக்க நாடுகள் தொழிற்நுட்பத்தை விட்டுவிட்டு ஐரோப்பியர்களது கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டவர்கள்” என்று சொல்வார்கள்.

இந்த ஒரு கணிப்பிலிருந்து நாம் இந்தியாவிலிருந்து ஆப்ரிக்காவை வேறுபடுத்திப் புரிந்துக் கொள்ள முடியும். இந்தியாவை போன்றே ஆப்ரிக்காவும் தனித்தனி சமூகங்களாலும், இனங்களாலும், மொழிகளாலும் மதங்களாலும் பிரிந்திருக்கும் நிலஅமைப்பு கொண்டது. வெவ்வேறு கலாச்சார பின்னணி கொண்ட சமூகத்தின் மோதல்களால் உருவான மக்கள் கூட்டம் கொண்டது. ஆப்ரிக்காவை எளிதாக காலனி ஆதிக்கத்தால் இந்தியாவைப் போன்றே வெல்லவும் முடிந்தது. அங்கிருக்கும் வளங்களையும் செழுமைகளையும் சுரண்டி வாழ அரேபியர்களும் ஐரோப்பியர்களும் தொடர்ந்து வந்தார்கள்.

ஆனால் இன்றைக்கும் புரிந்துக் கொள்ள முடியாத நிலப்பகுதிகளில் ஒன்று ஆப்பிரிக்கா. அங்கு பேசப்படும் மொழிகள், சமூகங்கள், இனக்குழுக்கள், மதப் பின்னணிகளால் பன்முகத்தன்மை மிக சாதாரணமானதாக விரவி இருக்கிற நிலப்பகுதி. அறிந்துக் கொள்ளமுடியாத வேர்பின்னல்கள் அடியே கொண்டிருப்பவை. இதையே மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் சொர்க்கத்தின் பறவைகள். பன்முகத்தன்மையின் பல கூறுகளை வாசகர்களுக்கு எளிதாக கடத்திவிடுகிறது இந்நாவல்.

அப்துல்ரஸாக் குர்னா கிழக்கு ஆப்ரிக்க நாடான‌ தான்சானியா நாட்டின் தனியுரிமை பெற்ற சான்சிபர் என்ற தீவிலிருந்து வந்தவர். 2021க்கான ஒட்டுமொத்த படைப்புகளுக்கு நோபல் பரிசு பெற்ற அப்துல்ரஸாக் குர்னாவின் “பாரடைஸ்” என்ற நாவல் 1994ல் வெளிவந்தது. அந்த நாவலை லதா அருணாச்சலம் தமிழில் சொர்க்கத்தின் பறவைகள் என்று மொழிபெயர்த்திருக்கிறார். 

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் காலனி ஆதிக்கத்தினால் மிகப்பெரிய மாற்றத்தை உலகம் கண்டது, அதிலே ஆப்ரிக்காவும் விதிவிலக்கில்லாமல் மாற்றத்தை கண்டது. சொர்க்கத்தின் பறவைகள் நாவல் 1915-1917ல் ஆப்ரிக்காவில் நடக்கும் வாழ்க்கையை சொல்கிறது. முதல் உலகப் போர் நடக்கும் காலக்கட்டம், ஆப்ரிக்காவில் காலனி ஆதிக்கம் பரவும் காலக்கட்டம். இம்மாதிரியான சூழல் கொண்ட களமும் காலமும் இருக்குமிடத்தில் இந்த நாவல் நடப்பது நாவல் வாசிப்பை சுவாரஸ்யமானதாக ஆக்குகிறது.

சான்சிபார் என்ற தான்சானியா நாட்டின் ஒரு பகுதியில் நடக்கும் யூசுப் என்ற சிறுவனின் கதை. அவன் குழந்தைப் பருவத்திலிருந்து பதின்ம பருவம் வரை நடப்பவையாக இருக்கின்றது. ஒருசிறுவனின் கதை என்று சொல்ல முடியாது, கலீல் என்கிற இன்னொரு சிறுவனின் கதையும் கூட.

வரலாறும் தத்துவங்களும் ஒரு நாவலுக்கு தேவை. வரலாற்று பின்னணியும் தத்துவ விசாரணையும் வெளிப்படையாக தெரியாதபடி அமைந்த நாவலாக சொர்க்கத்தின் பறவைகள் நாவலை சொல்லலாம். எந்த இடத்திலும் நாவல் தனக்குரிய வரலாற்றை நேரடியாக‌ சொல்லவில்லை. எந்த தத்துவ தேடல்களும் அதற்கில்லை, ஆனால் அவை மிகச்சரியாக பின் தொடர்ந்தபடி இருக்கின்றன. நாவலில் உள்ளீடாக இருக்கும் வரலாறும் தத்துவத்தையும் வாசகன் அறியும் போது ஏற்படும் கிளர்ச்சிதான் நாவலை நடத்திச் செல்கிறது. 

யூசுப்பின் கதை என்று நாம் நினைக்கும்போது அது கிழக்கு ஆப்ரிக்காவின் கதை என்று வகைபடுத்த ஏதுவாக எல்லா கூறுகளும் அமைந்துள்ளன. யூசுப் என்ற சிறுவன் அவனுக்கே தெரியாமல் அவன் அப்பாவின் கடனால் அசீஸ் மாமா என்பவருக்கு அடிமையாக போகிறான். அசிஸ் மாமா எனப்படும் செய்யதுவின் வீட்டில் முன் இருக்கும் கடைக்கு வேலைக்கு செல்லும் யூசுப், பின் ஒரு நீண்ட வணிக பயணத்திற்கு செல்கிறான். பின் மீண்டும் அதே இடத்திற்கு வருகிறான். இப்போது வளர்ந்த பதின்பருவ பையனாக இருக்கும் அவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கவனமாக தாண்டி ஒரு அஸ்காரிகளின் ராணுவ அணிவகுப்பில் ஓடி சென்றுகலந்து கொள்வது வரை அவன் வாழ்க்கை நகர்கிறது.

காலனிகளின் ஆதிக்கம் தொடங்கும் காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை எப்படி மாறுகிறது? அதற்கு முன்பிருந்த சிறு சிறு அரசுகளின் சண்டைகளும், போர்களும் எப்படி மக்களின் மனங்களை பாதிக்கிறது என்பதும், மதங்களின் பங்கு எந்த வகையில் சராசரி வாழ்வை கீழிறக்குகிறது என்பதும், சிறுவர்களின் அடிமை வேலை வாழ்க்கை, சிறுமிகளின் திருமண அடிமை வாழ்க்கை பற்றி மிக எளிய வார்த்தைகளில் கூறிக் கடந்து செல்கிறது நாவல்.

மதம், அதிகாரப் போட்டி, காலனிகளின் நுழைவு மக்களை மிக கீழான இடத்திற்கு இட்டுச்சென்றுவிடும் மாற்றத்தை ஒரு சிறுவனின் வளர்ச்சியில் காணும் உத்தி. யூசுப்பின் வாழ்க்கை அவன் செல்லுமிடங்களிலெல்லாம் எப்படி சாமானிய மக்களின் வாழ்க்கை மாறுகிறது, என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவன் பார்வையிலேயே அறியமுடிவது சுவாரஸ்யமானது. 

உதாரணமாக வியாபார பயணம் செல்லும் இடங்கள், சட்டத்திற்கு எதிரான கடத்தல் போன்ற செயல்களை செய்ய அவர்களுக்கு இருக்கும் நிர்பந்தம், மற்ற சிறுஅரசுகளுக்கு அவர்கள் கொடுக்கும் லஞ்சம் போன்றவை வாசகர்களுக்கு மிகப்புதியவை. சுல்தான்கள் என்று அழைக்கப்படும் சிறுபகுதிகளின் அரசர்களுக்கு அன்பளிப்பு அளிப்பதில் அதிருப்தி அடைவதும் அதனால் தண்டனைகளை வணிகர்கள் அடைவதும் முற்றிலும் புதிய வாழ்க்கை சூழலை சொல்கிறது.

இருபதாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே அடிமைமுறை ஆப்பிரிக்காவில் இருந்திருக்கிறது, தான் விற்கப்படுகிறோம் என்று அறியாமல் செல்லும் யூசுப் என்னும் சிறுவனின் பார்வையில் இந்த சமூகத்தின் உண்மை முகத்தை அறியும் போது அவன் அதிர்ச்சிக் கொள்ளவில்லை மாறாக தன் தந்தை தன்னை மீட்டெடுப்பார் என்றே நினைக்கிறான். அதேபோலவே அடிமையான‌ கலீல் என்று சிறுவன் தெளிவாக இருக்கிறான், தான் ஒரு அடிமை என்று அறிந்துக் கொண்ட தெளிவுடன் செயல்படுகிறான். 

சமயம் கிடைக்கும் போது யூசுப்பை அடிப்பதும் சீண்டுவதுமாக இருக்கும் கலீலின் மனநிலை ஒரு முழுஅடிமையின் மனநிலைதான். எந்நேரமும் பாதுகாப்பின்மையில் காணப்படும் கலீலின் செய்கைகள் அப்படிதான் இருக்கமுடியும். ஒருவன் வாழ்வை மிக கசப்பானதுமாகவும் மற்றொருவன் நம்பிக்கை உடையவனாகவும் இருக்கிறார்கள். கலீலின் ஒன்றுவிட்ட தங்கையும் அங்கு எஜமானனுக்கு மற்றொரு அடிமை மனைவியாக இருக்கிறாள்.

கலீல் மட்டும் வெளியே செல்லாமல் கடையில் இருக்க, யூசுப் வெளியே சென்று பெரிய பயணத்தை முடித்து திரும்புகிறான். எஜமானியிடம் பழக பயப்படும் கலீலிலிருந்து வேறுபட்டு எஜமானியிடமும் இரண்டாம் மனைவி இடமும் பேசுகிறான் யூசுப். கலீலின் சொற்களை கேட்காமல் யூசுப் செய்யும் அனைத்தும் அவனுக்கு சாதமாக அமைவதும் பின் கடைசியாக ஜெர்மனியர்களுடன் அஸ்காரி (ராணுவ வீரனாக) செல்வது வரை அவன் வாழ்க்கை மிகப் பெரிய திருப்பமாக இருக்கிறது.

அதாவது யூசுப் அனுபவத்தை பெற தயாராக இருப்பவனாகவும், கலீல் எந்த பிரச்சனைகளில் மாட்டாமல் எளிய வாழ்க்கையை தேர்வு செய்பவனாகவும் இருக்கிறான்.

ஆனால் இந்த நாவல் சொல்வது என்ன?

வெறும் வெற்றிகளையும் தீரங்களையும் தோல்விகளையும் மட்டுமே பேசுவதாக இல்லாமல், தனிமனித அனுபவம் சமூக அனுபவத்துடன் எப்படி எதிர்கொள்கிறது என்பதும், தனி மனித நம்பிக்கைகள் எப்படி சமூக நம்பிக்கைகளுடன் சமரசம் செய்கிறது என்பதை ஒரு நாவல் பேசவேண்டும். இதை இந்த நாவல் எந்த வித ஆர்பாட்டமுமின்றி யூசுபின் பார்வையில் சொல்லிச் செல்கிறது. நாவலில் அஜீஸ்மாமா (செய்யது), ஹமீது, காலாசிங்கா, அப்துல்லா, சிம்பா வேனே, சாட்டு, போன்ற பாத்திரங்கள் தங்களின் சரியான கலவையோடு வருகிறார்கள். அவர்கள் எல்லோரையும் யூசுப் சந்திப்பதும், கவனிப்பதும், அதன் மூலம் உருவாகும் புதிய எண்ணங்களையும் வெளிப்படுத்தும் புதிய மனிதனாககிறான் யூசுப். 

நாவலில் ஸான்சிபார், தான்சானியாவின் குறுநில காடுகள், நாட்டின் கடலோரப் பகுதிகள் போன்ற இடங்களில் பயணங்கள் தொடர்க்கின்றன. குறுநில அரசர்கள், ஏரியா தாதாக்கள் போன்றவர்களை அவர்கள் எதிர்கொள்வதும் நாவலில் பேசுபொருளாக இருக்கிறது. முன்பே சொன்னது போல், 1917ல் ஐரோப்பியர்களால் அடையும் மாற்றங்கள் இந்த நாவலில் மற்றொரு சொல்லப்படாத‌ பேசுபொருள். ஐரோப்பியர்கள் குறிப்பாக ஜெர்மானியர்கள் எவ்வளவு மோசமாக நடந்துக் கொள்கிறார்கள் என்பதோடு, ஐரோப்பியர்களின் காலனி இங்கு உதயமாவதும் உலகப்போர்கள் உதயமாக இருப்பதும் சொல்லப்படாத பேசுபொருட்கள்.

ஜெர்மானியர்களுக்கு கீழிருக்கும் ஆப்ரிக்கர்களின் ராணுவத்திற்கு அஸ்காரிகள் என்று பெயர். முதல் உலகப் போரின் இறுதி கட்டத்தை நெறுங்குபோது அந்த அணிவகுப்பில் யூசுப் ஓடிப் போய் சேர்ந்துக் கொள்கிறான் என்பது நாவலின் முடிவும். இந்த முடிவுதான் அவனுக்கு சரியாக இருக்கும். ஒரு சராசரி ஆப்ரிக்கனுக்கான முடிவாகவும் அதுதான் இருக்கிறது.

ஒரு சமூகம் தன்னை உருவாக்கிக் கொள்வதில் இருக்கும் சிக்கல்களில் மிக முக்கியமானதாக இருப்பது பொருளாதார வேறுபாடுகளும், அதனால் உருவாகும் விழுமியங்களும்தான். இயற்கை வளங்களும் சமூக கட்டமைப்பும் இருந்தாலும்கூட அவற்றை தவறான வழிகளில் பயன்படுத்து அந்த சமூகத்தை மிகப்பெரிய வீழ்ச்சிக்கு கொண்டு செல்லும். சராசரி ஆப்ரிக்கன் உள்ளூர் அரேபியர்களுக்கு அடிமையாக இருப்பது அல்லது ஜெர்மானியர்களின்/ஆங்கிலேயர்களின் ராணுவத்திற்கு செல்வது இதில் எதாவது ஒன்றுதான் செய்ய முடியும். இருபதாம் நூற்றாண்டின் கிழக்கு ஆப்ரிக்க சமூகத்தின் மிகப்பெரிய வீழ்ச்சியை இந்த நாவல் வாழ்வின் வழியே பார்க்க முடிகிறது.


Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.