ஹெர்மன் ஹெஸ்ஸ-வின் ‘சித்தார்த்தன்’ நாவலை முன்வைத்து

கபிலவஸ்துவில் இருந்து அரசாண்ட சுத்தோதன மன்னனின் மகன் இளவரசன் கௌதம சித்தார்த்தனின் கதையல்ல இது. ஆனால் அவன் புத்தனான அதே காலத்தில் அவனைப் போலவே வாழ்வின் அர்த்தத்தையும், முக்தியையும் தேடிப் பயணித்த மற்றொரு சித்தார்த்தனின் கதை இது. போதி மரத்தடியில் அந்த சித்தார்த்தனுக்கு ஞானம் கிடைத்தது போல், இந்த சித்தார்த்தனுக்கு தோணித் துறையில் ஆற்றங்கரையில் ஞானம் கிடைக்கிறது. தெரிந்தபின்/அடைந்தபின்/தன்னை உணர்ந்த பின் இருவர் முகத்திலும் அதே குறுநகை/முறுவல். சமஸ்கிருதத்தில் ‘சித்தார்த்தா’ என்ற சொல்லுக்கு ‘தான் தேடிச் சென்றதை அடைந்தவர்’ என்று பொருள். இரண்டு வார்த்தைகள் சேர்ந்த ஒரு சொல் இது.. ‘சித்தா’ என்பது ‘அடைந்தவர்/அடைந்ததை’-ஐயும், ‘அர்த்தா’ என்பது ‘அர்த்தம்/பொருள்’-ஐயும் குறிக்கும் (அர்த்தத்தை அடைந்தவர்).
சித்தார்த்தனும் கோவிந்தனும் நண்பர்கள். சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள். இருவரும் தவறாது பிராணாயாமம், தியானம் தினசரி செய்பவர்கள். சித்தார்த்தன் குழந்தைப் பருவத்திலிருந்தே அறிவுச் சுடராய் விளங்குகிறான். சுற்றியிருக்கும் அனைவரும் சித்தார்த்தனால் மகிழ்கிறார்கள். ஆனால் சித்தார்த்தன் மனதில் மட்டும் ஒரு வாட்டம் இருந்து கொண்டே அவனை அலைக்கழித்தது.. வேதங்களிலிருந்தும், உபநிஷதங்களிலிருந்தும் அனைத்தையும் அப்பா மற்றும் சிறந்த ஆசிரியர்களிடம் அவன் கற்றிருந்தாலும், மனதில் எழும் அடிப்படையான கேள்விகளுக்கு விடை கிடைக்காமலேயே அலைக்கழிக்கிறது. நான் யார்?, நான் யார் என்பதை எப்படி அனுபவ பூர்வமாக தன்னிலேயே உணர்வது?. ஞானத்திற்கான ஏக்கம், பூரணத்திற்கான தவிப்பு அவனை உந்திக் கொண்டே இருந்தது.
ஒருநாள் கோவிந்தனுடன் மரத்தடியில் தியானம் செய்ததற்குப் பிறகு, மனதில் முடிவெடுத்து தந்தையிடம் சென்று தான் காட்டிற்குச் சென்று சமணர்களின் சத்சங்கத்தில் இணையப் போவதாகவும், தன் மனதிலிருக்கும் தேடலுக்கு விடை தேடிக் கிளம்புவதாகவும் சொல்கிறான். முதலில் சினமுறும் அவன் தந்தை பின் சித்தார்த்தனின் உறுதியைப் பார்த்து மனம் மாறி தலை தடவி ஆசீர்வதித்து அனுமதி கொடுக்கிறார். அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போ என்கிறார்.
சித்தார்த்தனும், கோவிந்தனும் காட்டிற்குச் சென்று தீட்சை பெற்று சமணக் குழுவினரோடு ஐக்கியமாகிறார்கள். அங்கு பல சித்திகள் பயில்கிறான் சித்தார்த்தன். வாசி அடக்கி கும்பகத்தில் நிற்கக் கற்று சமாதியில் ஆழும் வித்தை கற்கிறான். கூடு விட்டு கூடு பாயும் பயிற்சியும் பெற்று கொக்கு, நரி, மரம், கல், நீர் என்று ஆயிரக்கணக்கான உடல்களில் நுழைந்து வெளிவருகிறான். பசித்திருக்கவும், சிந்தித்திருக்கவும், காத்திருக்கவும் கற்கிறான். மேலும் பல சித்திகளை பயிற்சி செய்கிறான். மூன்று ஆண்டுகள் கழிந்தும் அவன் எதிர்பார்த்த நிர்வாணம்/பூரணத்தின் ஞானம் கைகூடவில்லை. சித்திகளில் அவனுக்கு விருப்பம் அகல்கிறது. மேலும் கால விரயம் செய்து சித்திகள் கற்க அவனுக்கு மனமில்லை. உள்ளின் தாகம் தீராமல் சித்தார்த்தன் அலைவுறுகிறான். இச்சமயம் கௌதம புத்தர் பற்றிய செய்திகள் ஊரெங்கும் பரவுகின்றன. மகத நாட்டு அந்தணன் ஒருவனிடமிருந்து புத்தரைப் பற்றிய செய்திகள் கேள்விப்படும் கோவிந்தன் சித்தார்த்தனிடம் வந்து “நாம் ஏன் அவரை பார்க்க/அவரின் மொழிகள் கேட்கச் செல்லக் கூடாது?” என்று கேட்கிறான். இருவரும் சமணத் தலைவரிடம் சொல்லிவிட்டு புத்தரைப் பார்க்க கிளம்புகிறார்கள்.
புத்தர், சாவதி நகரம் ஜேதாவனத் திருமடத்தில் தன் பிக்ஷுக்களுடன் தங்கியிருக்கிறார். அந்த மடம் செல்வந்தரான அவரின் அணுக்கத் தொண்டர் அநாத பிண்டிகர் அவருக்கும், அவரின் பிக்ஷுக்களும் தங்கிக்கொள்ள அர்ப்பணித்தது. நூற்றுக் கணக்கான பிக்ஷுக்களுக்கு மத்தியில் புத்தரைப் பார்த்ததும் சித்தார்த்தனுக்குத் தெரிந்து விடுகிறது, அவர் ஞானமடைந்தவர்/தன்னை உணர்ந்தவர் என்று. அவரின் முறுவலும், சாந்தியும், அமைதியும், அவரின் மென்மையான நடையும், அவர் கை விரல்களின் ஒவ்வொரு அசைவும் சித்தார்த்தனுக்கு அவர் தேடியதை அடைந்து விட்டவர் என்று உணர்த்துகின்றன. அன்று மாலை கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தினரின் நடுவே புத்தர் சொற்பொழிவாற்றுகிறார். உரை முடித்ததும் மக்களில் சிலர் தங்களையும் அவரின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்கள். கோவிந்தனும் புத்த பிக்ஷுவாக மாறி சங்கத்தில் சேர்கிறான். ஆனால் சித்தார்த்தனை ஏதோ ஒன்று தயக்கம் கொள்ளச் செய்கிறது. சோலையில் புத்தருடனேயே பேசும் சந்தர்ப்பம் வாய்க்கிறது அவனுக்கு. போதனைகளினால் ஞானம் பெற முடியுமா என்பது அவன் கேள்வி. அவரின் சங்கத்திலிருக்கும் பிக்ஷுக்களுக்கு
சுவானுபூதி எங்கு/எப்போது கிடைக்கும்? ‘நான்’ எப்போது அழியும்? பூரண தரிசனம் எப்போது நிகழும்?. எனக்கு ஏன் உபதேசங்களினால் ஞானம் கைவரப் பெறாது என்று தோன்றுகிறது? ஐயனே, நானே என் வழியில் என் பாதையில் மேலும் தேடிக் கொண்டு போக என் மனம் விரும்புகிறது என்கிறான். சொற்களில் சிக்கிக் கொள்ளாதே, பாதையில் கவனத்துடன் இரு, அனுபவங்கள் அறி என்று அவனை வழியனுப்புகிறார் புத்தர்.
சித்தார்த்தனின் வேறொரு வாழ்க்கைச் சக்கரம் அங்கு துவங்குகிறது. நகருக்கு வரும் சித்தார்த்தன் அழகியான தாசி கமலாவை உத்யான வனத்தில் சந்திக்கிறான். தனக்கு குருவாக இருந்து தனக்கு காதல் கலைகளை கற்றுத்தர வேண்டுமென்று கேட்கிறான். சமணனான அவனை கமலாவிற்கு பிடித்துப் போனாலும் தன் உறவு வேண்டுமென்றால் செல்வத்தில், அந்தஸ்தில் அவன் இன்னும் உயரவேண்டும் என்று சொல்லி வர்த்தகர் காமஸ்வாமி-யைச் சென்று சந்தித்து அவரிடம் வேலை கேட்டுச் சேர்ந்து அவனைப் பணம் சம்பாதிக்கும்படிச் சொல்கிறாள். சித்தார்த்தனும் காமஸ்வாமியிடம் சென்று வேலைக்குச் சேர்ந்து அவரிடம் வணிகம் கற்று அவனும் வணிகம் துவங்கி காமஸ்வாமிக்கு ஈடாகவும் அவருக்கு மேலும் செல்வம் சேர்த்து பணக்காரனாகிறான், சொந்த வீடு, சொந்த ஏவலாளர்கள், நகர்ப்புறத்தே ஆற்றங்கரையில் சொந்த தோட்டம், கமலாவுடன் உறவு. அவனின் மெய்த்தேடல் உள்ளுக்குள் தேய்ந்து மறைந்து, மதுவும், சூதும் அவனை ஆக்கிரமிக்கின்றன.
இதுவரை நான் சொல்லியிருப்பது நாவலின் பாதி தான். நாவலின் பின்பாதி இன்னும் சுவாரஸ்யமானது. சித்தார்த்தன் தான் தவறான பாதையில் செல்கிறோம் என்பதை எப்போது, எப்படி உணர்ந்தான், பின் அனைத்தையும் உதறிவிட்டு தான் வந்த வழியே எப்படித் திரும்பினான், எவ்வாறு ஆற்றங்கரையில் தென்னை மரத்தினடியில் தன்னை/பூரணத்தை அறிந்தான், அதன் பின்னான அவன் வாழ்க்கை… இவைதான் நாவலின் பின்பாதி.
முன்பே ஞானமடைந்த படகோட்டி வாசுதேவன் கதாபாத்திரமும் நாவலில் இருக்கிறது. கமலா மூலம் சித்தார்த்தனுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. கமலா இறுதிக்காலத்தில் தன் சொத்து முழுவதையும் பௌத்த சங்கத்திற்கு எழுதிக் கொடுத்துவிட்டு தனது மகனுடன் புத்தரைச் சந்திக்கச் செல்லும் வழியில் சித்தார்த்தனைச் சந்திக்கிறாள். கமலாவின் இறப்பும், கோவிந்தனின் இறப்பும் சித்தார்த்தன் இருக்கும் இடத்திலேயே நிகழ்கிறது.
‘சித்தார்த்தன்’ நூல், தத்துவத் தேடலும் ஆன்மீக வேட்கையும் கொண்ட வாசகர்களுக்கு திறப்புகளையும், புதையலையும் தரும் என்பது நிச்சயம்.
1946-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரான ஹெர்மன் ஹெஸ்ஸெ-யின் ‘சித்தார்த்தா’ வெளிவந்து (1922) கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிறது. 1951-ல் ஆங்கிலத்தில் வெளிவந்த இந்நூல் தமிழில் 1957-ல் வெளியானது. ஹெர்மன் ஹெஸ்ஸெ 1877-ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தவர். கிழக்கத்திய ஆன்மீக, தத்துவ மரபுகளில் நாட்டம் கொண்டவரான ஹெஸ்ஸெ-யின் தாத்தாவும், பாட்டியும் புரொடெஸ்டன்ட் கிறிஸ்தவ சபையைச் சார்ந்த ‘பேசல் மிஷன்’ அமைப்புக்காக தென்னிந்தியாவில் (குறிப்பாக கேரளா) சில காலம் தங்கி பணி புரிந்திருக்கிறார்கள். ஹெஸ்ஸெ-யின் அம்மா இந்தியாவில் பிறந்தவர். நான்கு வயது வரை இந்தியாவில் வசித்து விட்டு பின்பு ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டவர். ஹெஸ்ஸெ-யின் தாத்தா ஹெர்மன் குன்டெர்ட், மலையாள இலக்கியத்தை தொகுக்கும் பணியிலும், மலையாளம்-ஆங்கிலம் அகராதி தயாரிப்பிலும், பைபிளை மலையாளத்தில் கொண்டு வருவதிலும் பணியாற்றியிருக்கிறார்.
திருலோக சீதாராமின் மொழிபெயர்ப்பை, அந்த நடையை நான் மிகவும் ரசித்தேன். தத்துவ சாரங்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் சிறப்பாக, சரளமாக, எளிமையாக மொழியக்கம் செய்திருக்கிறார். திருலோக சீதாராம் எனும் திருவையாறு லோகநாதய்யர் சீதாராம் 1917-ல் பிறந்தவர். தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல களங்களில் செயல்பட்டவர். பாரதி பாடல்களின் புகழைப் பரப்பியவர். பாரதியின் மனைவி செல்லம்மாளுக்கு மகனைப் போல் இருந்து கடமையாற்றியவர். கிராம ஊழியன் பத்திரிகையில் சில ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். திருச்சியிலிருந்து ‘சிவாஜி’ என்ற கலை இலக்கிய இதழை முப்பது வருடங்கள் நடத்தியிருக்கிறார்.
ஒரு சமயம் படகோட்டி வாசுதேவனிடம் சித்தார்த்தன் கேட்கிறான் //’காலம்’ என்ற ஒன்று கிடையாது எனும் ரகசியத்தை நீ நதியிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறாயா வாசுதேவா?”. வாசுதேவன் புன்னகைத்து விட்டு பதில் சொல்கிறான் “ஆம் சித்தார்த்தா, நீ நினைப்பது/சொல்ல வந்தது இதைத்தானே? ஏக காலத்தில் ஆறு எங்கெங்கும் இருக்கிறது. மூலஸ்தானத்திலும், முகத்துவாரத்திலும், நீர்வீழ்ச்சியிலும், ஓடத் துறையிலும், சுழித்தோடும் வேகத்திலும், விரிகடலிலும்… எங்கும் ஒரே நேரத்தில்/நிகழ் கணத்தில் இருக்கிறது. எனவே நிகழ்காலம் ஒன்றுதான் ஆற்றுக்கு உண்டு. கடந்த காலத்தின் நிழலோ, எதிர்காலத்தின் நிழலோ அதன்மேல் படுவதில்லை”.//
ஆற்றங்கரையில் நதியில் குரலைக் கூர்ந்து கேட்கச் சொன்ன வாசுதேவன் முன்னிலையில் சித்தார்த்தனின் ஆன்மா பூரணத்தை/ஒருமையை உணர்ந்த அத்தருணம் நூலில் பிரமாதமாக விவரிக்கப்பட்டிருக்கும்.
நூலில் சித்தார்த்தனுக்கும் கோவிந்தனுக்குமான உரையாடல் பகுதிகள் அனைத்தும் சிறப்பானவை.
நிர்வாணத் தேடலின் துவக்க நிலையில் ஒரு உரையாடலின் போது சித்தார்த்தன் கோவிந்தனிடம் சொல்கிறான் //”தியானம் என்பது என்ன? உடல் மறந்து கிடப்பதும், உபவாசமிருப்பதும், மூச்சை அடக்குவதும் எல்லாம் என்ன? அகத்தை விட்டுப் பறப்பதுதானே? ‘நான்’ எனும் வேதனையிலிருந்து சற்றே தப்பித்துக் கொள்ளும் தந்திரங்கள் தானே? துயரங்களையும் தொல்லைகளையும் சற்றே மறந்திருக்கிற தன் ஏமாற்றம் தானே?”//
//நீர் மேல் நடப்பது, மாயாஜால வித்தைகள் புரிவது போன்ற அற்ப சித்திகளின் மேல் எனக்கு விருப்பமில்லை கோவிந்தா. இத்தகைய சிறிய சித்திகளில் ஆனந்தமடைபவர்கள் எப்பொழுதும் இறுதி மஹா நிர்வாணத்தை அடைவதில்லை. என் இலக்கு ‘தன்னையறிதல்/பூரணத்தை அறிதல்’//
நூலின் பனிரெண்டாம் அத்தியாயமான இறுதி அத்தியாயம் அபாரமான ஒன்று. புத்த பிக்ஷுவாக வாழும் கோவிந்தன் தன் முதிய வயதில் கிழப்பருவத்தில் ஆற்றங்கரையில் நிர்வாணமடைந்த முதிய சித்தார்த்தனைச் சந்திக்கிறான். தனக்கு ஏதேனும் கூறுமாறு பணிவுடன் வேண்டுகிறான். சித்தார்த்தன் கூறுகிறான் “உனது விசாரணை/தேடல் ஒருக்கால் அதிகப்படியானது கோவிந்தா. உனது விசாரணையால் நீ காண முடியாது என்பதைத் தவிர பயனுள்ளதாக வேறென்ன நான் உனக்குக் கூறமுடியும்?” என்று. ஆச்சர்யமடையும் கோவிந்தன் “அது எப்படி?” என்கிறான். “ஒருவன் விசாரிக்கும்போது/தேடும்போது, தான் தேடும் ஒன்றை பார்க்க முடிகிறதேயன்றி அதைப் புரிந்து கொள்ள/உள் வாங்க முடிவதில்லை. தான் தேடுகிற பொருளைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறான். ஏனெனில் அவனுக்கென்று ஒரு லட்சியம் இருக்கிறது. தனது லட்சியத்தால் அவன் பிடிபட்டிருக்கிறான். வழிகளைத் தேடுவது என்பது லட்சியத்தை அடைய. ஆனால் வழி காண்பதோ விடுபட/சுதந்திரமடைய/தன்மயமாக. நீ இலட்சியத்திற்காகப் பாடுபடும்போது உன்முன் எதிர்ப்படும் பலவற்றை நீ காண்பதில்லை.”//
சித்தார்த்தன் மேலும் கூறுகிறான் //”நண்பனே, ‘ஞானம்’ என்பது வழங்கக் கூடியதல்ல. ஞானி ஒருவன் பிறருக்கு வழங்குகிற ஞானம், பேதமை போலவே எப்போதும் தோன்றுகிறது. அறிவு பிறருக்கு வழங்கக் கூடியது. ஆனால் ‘ஞானம்’ அவ்வாறல்ல. ஞானத்தை ஒருவன் அடையலாம். அதில் வாழலாம். எனினும் ஒருவன் அதைப் பிறருக்கு வழங்கவோ, புகட்டவோ முடியாது. நான் உணர்ந்த இன்னொரு விஷயம் ‘ஒவ்வொரு உண்மையிலும் இருக்கும் அதன் எதிரும்/எதிர்மறையும் அவ்வளவு உண்மை’ என்பது. உதாரணமாக ‘உண்மை’ ஒவ்வொன்றும் ஒரு சார்புடையதாக இருந்தால்தான் அதை வெளிப்படுத்தவோ அல்லது வார்த்தைகளில் தேக்கவோ முடியும். அதில் முழுமை/ஒருமை இருக்காது. ஒருமை/முழுமை கண்டவர்களால்/அடைந்தவர்களால் ஒருக்காலும் அதை வெளிப்படுத்தி விட முடியாது. போதிக்கிறவர்களுக்கு வேறு வழியில்லை. உண்மையின் அரைகுறைகளைத்தான் அவர்கள் போதிக்கிறார்கள். உண்மை, உள்ளும் புறமும் ஒரு சார்புடையதல்ல. ஒரு மனிதனோ, செய்கையோ முற்றும் சம்சாரமாகவோ முற்றும் நிர்வாணமாகவோ ஒரு நாளும் இல்லை. ஒரு மனிதன் முற்றிலும் முனிவனோ அல்லது பாவியோ அல்ல. இது இப்படியெல்லாம் தோன்றக் காரணம் ‘காலம்’ என்பது ஏதோ உண்மை போல நாம் மயங்குவதேயாகும். ‘காலம்’ என்பது உண்மையல்ல கோவிந்தா. காலம் உண்மையல்ல எனும்போது உலகுக்கும் இறுதியற்றதற்கும் இடையில், துயருக்கும் களிப்புக்கும் இடையில், நன்மைக்கும் தீமைக்கும் இடையில் கிடப்பது போல் தோன்றுகிற பிரிவுக்கோடும் ஒரு பொய்த் தோற்றம் தான்.”//
“அது எப்படி?” என்று புதிர் விளங்காமல் கேட்கும் கோவிந்தனிடம் மேலும் சொல்கிறான் சித்தார்த்தன் //கேள் நண்பா, நான் ஒரு பாவி, நீயும் ஒரு பாவி. ஆனால் ஏதோ ஒரு நாள் பாவி மீண்டும் பிரம்மனாகியிருப்பான்/ஏதோ ஒரு நாள் நிர்வாணம் பெறுவான்/ஏதோ ஒரு நாள் புத்தனாகி விடுவான். இந்த ‘ஏதோ ஒரு நாள்’ என்பது வெறும் தோற்ற அளவுக்குத்தான். ஒரு ஒப்புக்குத்தான். ‘பாவி’ என்பவன் ‘புத்தர்’ என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கவில்லை. அவன் பரிணமிக்கவில்லை. ‘சத்வ புத்தர்’ முன்னமேயே அந்தப் ‘பாவி’க்குள் இருக்கிறார். அவன் எதிர்காலம் ஏற்கனவே அங்கு இருக்கிறது. அவனில், உன்னில் உறையும் ‘சத்வ புத்தர்’ உணரப்பட வேண்டும், அவ்வளவுதான். உலகம் அபூர்ணமானதோ, நிறைவை நோக்கிய நெடிய பாதையொன்றில் மெதுவாய்ப் பயணித்துக் கொண்டிருப்பதோ அல்ல. ஒவ்வொரு கணமும் அது முழு நிறைவானது. எல்லாச் சிறு குழந்தைகளும் பழுத்த கிழவர்கள் தான். தாய்ப்பால் பருகும் ஒவ்வொரு குழந்தையும் தன்னுடன் மரணத்தைக் கொண்டிருக்கிறது. இறந்துபடும் மக்களனைவரும் அழிவிறுதியற்ற உயிரே. பாதையில் மற்றொருவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதை ஒருவர் காணமுடியாது. ஆழ்ந்த தியானத்தில் ஒருவன் காலத்தை விலக்க இயலும். கடந்தது, நடப்பது, வருவது அனைத்தையும் ஒருங்கே காணலாம். ஒவ்வொன்றும் நல்லதென்றும், ஒவ்வொன்றும் நிறைவானதென்றும், ஒவ்வொன்றும் பிரம்மமென்றும் காணலாம். ஆகவே உயிரைப் போலவே மரணம். புண்ணியத்தைப் போலவே பாவமும், பேதமையைப் போன்றே ஞானமும், நிலவுகிற ஒவ்வொன்றுமே நல்லதென்று எனக்குத் தோன்றுகிறது. தேவையானதெல்லாம், ஒவ்வொன்றுடனும் ஒத்து, இணங்கி அன்புடன் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே. யாவும் சரியாகவே இருக்கிறது. எதுவும் எதற்கும் தீங்கு செய்ய இயலாது.//
சித்தார்த்தன் கீழே குனிந்து ஒரு சிறு கல்லை எடுத்து கையில் வைத்திருந்து விட்டு பின்பு கோவிந்தன் கையில் கொடுத்து மேலும் பேசினான் //”இது ஒரு கல். ஏதோ ஒரு கால அளவில் ஒருவேளை இது மண்ணாகலாம். பின் அம்மண்ணிலிருந்து அது ஒரு தாவரமாகி, விலங்கு அல்லது மனிதனாகும். இப்போது வேண்டுமானால் இது கல்லாக, மதிப்பில்லாத்தாகத் தெரியலாம். மாய கால மாற்றச் சுழற்சியில் இப்போது இது வெறும் கல்லாகத் தெரிகிறது. உணர்ந்துகொள்ள வேண்டியது ‘இது மனிதானகவும், ஆவியாகவும் ஏதோ ஒன்று ஆகவும் சாத்தியம் கொண்டிருக்கிறது, அதுவும் முக்கியமானதுதான்’ என்பதே. இந்தக் கல் ஒரு ‘கல்’தான் என்றாலும் அது ஒரு விலங்கும், மனிதனும், புத்தனும் கூடத்தான். இந்தக் கல்லை, ஒரு பொருளாயிருந்து பிறிதொரு பொருளாய் மாறுவதால் அல்ல அதை நான் மதிப்பதும், நேசிப்பதும். அது ஏற்கனவே எப்பொருளுமாய் எப்பொழுதுமே இலங்குவதனால்தான். இன்று இப்போது கல்லாய்த் தோற்றமளிப்பதற்காகவே நான் அதை நேசிக்கிறேன். இவ்வுலகில் ஒவ்வொன்றும் பிரம்மம்தான். என்ன ஒன்று, அது வெவ்வேறு வடிவத்திலிருக்கிறது. அப்படி இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சியாயிருக்கிறது. நான் இதைப்பற்றி மேலும் கூறமாட்டேன். சொற்கள், எண்ணங்களைச் செவ்வனே புலப்படுத்துவதில்லை. அவை உச்சரிக்கப்பட்டவுடன் எப்பொழுதும் சற்று வேறுபட்டு, குலைந்து பேதமையாய் ஆகிவிடுகின்றன. ஆனாலும் ஒருவனுக்கு மதிக்கத் தக்கதாயும், ஞானமென்றும் இருக்கிற ஒன்று, மற்றவனுக்கு அறிவற்றதாய்த் தோன்றுவது கூட எனக்குப் பிடிக்கிறது. சரியென்று தோன்றுகிறது.”//
வாசித்துக் கொண்டிருந்த நான் கையில் ‘சித்தார்த்தன்’-உடன் கண்கள் நிறைந்து அந்தப் பின்னிரவின் அமைதியில் நெடுநேரம் மௌனமாக அமர்ந்திருந்தேன். ‘சித்தார்த்தன்’ வாசிப்பு எனக்குள் பல திறப்புகள் தந்தது. ‘சித்தார்த்தன்’-ஐ வாசித்தது என் நல்லூழ். பேறு.
‘வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்…”
பள்ளி நாட்களில் தமிழ்ப் பாடத்தில் படித்த பாடல் தான். அப்பருவத்தில் தேர்வுக்காக உருப் போட்ட பாடல். சொல்லிக் கொடுத்த தமிழாசிரியரும் அவர் உள்வாங்கிய அளவில் சிறப்பாகத்தான் சொல்லிக் கொடுத்திருந்தார். ஆனால் பத்து/பதினைந்து வருடங்கள் கழித்துத்தான் ஒருநாள், வட இந்திய நண்பன் மிஸ்ராவிடம் (தத்துவத்தில் விருப்பமுள்ளவன்) ஏதோ ஓர் உரையாடலில் இச்செய்யுளின் பொருளை சொல்லிக் கொண்டிருந்த போது இச்செய்யுள் மனதிற்குள் திறந்தது. அப்போதும் புரிதல் மட்டும் தான் நிகழ்ந்தது. அதன் விஸ்வரூபத்தை/பிரம்மாண்டத்தை இன்னும் உள்ளுக்குள் உணரவில்லை; உணரும் அளவிற்கு தயாராகவில்லை அல்லது சக்தியில்லை. பாடலில் மற்ற வார்த்தைகள் அனைத்தும் கூட பரவாயில்லை, கிரஹிக்க முயற்சி செய்யலாம்; ஆனால் அந்த ‘இன்மையுமாய்…’ மட்டும் மனதில் பிடிபடாமல் விகாசத்தில்/வெட்ட வெளியில்/அந்தரத்தில் நிற்கிறது இன்னமும். அதை ஆன்மாவில் உணர்வதற்கு இந்த ஒரு ஜென்மம் போதுமோ அல்லது இன்னும் எத்தனை ஜென்மமோ?…
‘சித்தார்த்தன்’ (ஜெர்மானிய நாவல்)- ஹெர்மன் ஹெஸ்ஸெ
தமிழில்: திருலோக சீதாராம்
184 பக்கங்கள்
தமிழினி/சீர்மை/தேசாந்திரி பதிப்பகம்//தமிழ் வெளி
பாரதி புத்தகாலயம்/முயற்கூடுவளரி/அடையாளம் பதிப்பகம்
கலப்பை பதிப்பகம்/நேயர் விருப்பம்/ரிதம் வெளியீடு/மீ வெளியீடு
ஹெர்மன் ஹெஸ்ஸெ சொசைட்டி ஆஃப் இந்தியா
Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
