( திருவிளையாடல் திரைப்படம், திருவிளையாடற்புராணம் கூறும் செய்திகளை முன்வைத்து எழுதப்பட்டது)
வீட்டின் தொலைக்காட்சியில் சிவாஜிகணேசன் சிவபெருமானாக நடித்த திருவிளையாடல் படம் ஓடிக்கொண்டிருந்தது. பாண்டிய மன்னரின் அரசவையில் பரிசு மறுக்கப்பட்ட தருமியை அழைத்துக்கொண்டு சிவன் அரண்மனைக்குள் விரைகிறார்.சிவனுக்கும் தலைமைப் புலவரான நக்கீரருக்கும் சொற்போர் தொடங்குகிறது.சிவனின் பாடலில் பொருள்குற்றம் இருப்பதாக நக்கீரர் வாதிடுகிறார்.
வாதம் சூடு பிடிக்கிறது. சிவனது மறுப்பை நக்கீரர் ஏற்பதாக இல்லை. அப்போது சிவன், பாடலையும் பொருளையும் காட்டி தனது புலமையை நிறுவச் செய்யும் முயற்சி இனி பலிக்காது என்றதும் ‘ பாடலை எழுதியவரும், இங்கு நின்று பேசிக் கொண்டிருப்பவரும் நக்கீரர் நாளும் பொழுதும் நினைந்து வழிபடும் பரம்பொருளாகிய சிவனே என்பதை நக்கீரர் தெரிந்துகொள்ளத் தனது நெற்றிக்கண்ணைக் காட்டுகிறார்.ஆனால்,வந்திருப்பவர் சிவனே எனத் தெரிந்தும் நக்கீரர் தனது நிலையிலிருந்து மாற மறுக்கிறார்.
இந்த இடத்திலிருந்து தான் இக்கட்டுரையைப் பேச விரும்புகிறேன்.
சிவபெருமான் தனது கடைசி முயற்சியாகத் தம் நெற்றிக்கண்ணைக் காட்டியும், தன்னை அன்றாடம் வழிபடும் பக்தனான நக்கீரன் தனது நிலையில் உறுதியாக நிற்பதை அறிந்த சிவபெருமானுக்குக் கோபம் தலைக்கேறுகிறது.
மிகச் சராசரி மனிதர்கள், விவாதத்தில் தம் நிலையில் தவறு இருப்பது தெரிந்தும் எதிரில் உள்ளோரை இழிவுபடுத்தப் பயன்படுத்தும் ஆயுதம் சாதி. திரைப்படத்தில் வரும் சிவனும் இங்கு அதையே செய்து பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.
நக்கீரரை நோக்கி, ” அங்கம் புழுதிபட அரிவாளில் நெய்பூசி பங்கம் படவிரண்டு கால் பரப்பி சங்கதனைக் கீர்கீர் என அறுக்கும் நக்கீரரோ எம் கவியை ஆராய்ந்து சொல்லத்தக்கவன்’ என்று கூறுகிறார். சங்கறுத்தல் என்பது கடலில் விளையும் சங்குகளை அறுத்து வளையல் முதலான அழகுப் பொருள்களைச் செய்யும் தொழிலாகும்.
தருமியின் பாடலில் குற்றம் இருப்பதாகக் கூறிப் பரிசைத் தடுத்த, பாண்டிய மன்னருடைய அவைத் தலைமைப் புலவரான நக்கீரரின் குலத்தொழிலைக் கூறி, சங்கறுக்கும் நீ எப்படி எனது கவிதையை ஆராய்ந்து சொல்லமுடியும்? என இழித்துரைக்கிறார் சிவபெருமான். நாம் எழுதிய பாடலின் பொருளுக்கு நியாயம் கூற முடியாத நிலையில் அங்கே தனிமனிதத் தாக்குதல் நிகழ்கிறது.தம் கருத்தை முடிவாக
ஏற்க மறுத்த நக்கீரரின் குலத்தைக் கூறி அவனைச் சிறுமைப்படுத்தி தன் கருத்தை நிலைநாட்டச் செய்யும் முயற்சி அது. மிகக் கீழ்மையான செயலல்லவா?
சிவனை முதன்மைப்படுத்தி அவனது பெருமையைக் கூற வந்த படத்தில் சிவபெருமானை மிகத் தாழ்ந்த மனித குணம் கொண்டவனாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. இறைவனது பெருமையைச் சொல்ல வந்த இடத்தில் இந்த மனித இழிவு பொருத்தமானதா?
” சங்கறுப்பது எங்கள் குலம். சங்கரனார்க்கு ஏது குலம்.சங்கை அரிந்துண்டு வாழ்வோம். ஆனால் உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை”.
என்று தன் குலத்தைச் சொல்லி இழிவுபடுத்தியவன், தான் வழிபடும் பரம்பொருள் என்றாலும் விடமாட்டேன் என்கிற தொனியில் நக்கீரரும் சிவனை இழித்துரைக்கிறார்.” எனக்காவது ஏதேனும் ஒரு குலம் இருக்கிறது. உமக்கு அதுவுமில்லை என்கிறார் நக்கீரர். உழைத்து வாழ்வோமே தவிர உம்மைப்போல் பிச்சை எடுத்து வாழமாட்டோம் ” எனச் சரிக்குச்சரி மல்லுக்கு நிற்கிறார் நக்கீரர்.
1965 இல் வெளிவந்த திருவிளையாடல் திரைப்படத்திற்குக் கதை வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன். இறைவன் மனித உருவம் கொண்டு இருப்பதால் மனித குணங்களையும் கொண்டவனாகக் கருதி அவர் இந்த வசனங்களை எழுதியிருப்பாரோ? அல்லது பார்வையாளர்களை உற்சாகப்படுத்த இந்த உரையாடலை அவர் எழுதியிருப்பாரோ? என்ற எண்ணம் ஏற்படுகிறது.
“இத்திரைப்படம் திருவிளையாடல் புராணம் எனும் புகழ்பெற்ற சைவ இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது ” என திரைப்படத்தின் கதை குறித்து விக்கிபீடியா குறிப்பிடுகிறது. அப்படியானால் இந்த உரையாடலை ஏ.பி.நாகராஜன் திருவிளையாடல் புராணத்தில் இருந்துதான் எடுத்துப் பயன்படுத்தினாரா? என்ற கேள்வியும் எழுகிறது. அப்படியென்றால் கடவுளது பெருமையைப் பேச எழுதப்பட்ட நூல்களிலும் எழுதியவரின் பொதுப்புத்தி இறைவனுடைய குணமாகவும் காட்டப்பட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது.

திருவிளையாடற்புராண நூல்கள் பல உண்டு. அவற்றுள் ஏ.பி.நாகராஜன் எதை எடுத்துக்கொண்டார் எனத் தெரியவில்லை. திருவிளையாடற்புராண நூல்களில் காலத்தே பிற்பட்ட நூலான பரஞ்சோதி யாரின் திருவிளையாடற்புராணத்தில் ஐம்பத்து இரண்டாவது திருவிளையாடலாக ‘ தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்’ பாடப்பட்டுள்ளது. நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் இடையே நடக்கும் உரையாடல் , சிவபெருமான் நெற்றிக் கண்ணைக் காட்டுவது வரை திரைப்படத்திற்கும் இந்நூலுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
உரையாடலின் உச்சமாக நூல் குறிப்பிடுவது
கற்றைவார் சடையார் நெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்டப்
பற்றுவா னின்னும் அஞ்சான் உம்பரார் பதிபோல் ஆகம்
முற்றுநீர் கண்ஆ னாலு மொழிந்தநும் பாடல் குற்றம்
குற்றமே யென்றான் தன்பா லாகிய குற்றம் தேரான்
என்னும் பாடலைத்தான்.
(சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்ட , ஆகா! வந்திருப்பவர் சிவபெருமான் அல்லவா? என்ற ஒரு பற்றுதல் நக்கீரர் மனத்தில் ஏற்பட்டாலும் அஞ்சாதவராக, உம் பாடல் குற்றமே என்கிறார் நக்கீரர்)
அத்துடன் உரையாடல் முடிவுக்கு வந்துவிடுகிறது.
திரைப்படத்தில் தொடரும் குலம் குறித்த உரையாடல்களை இந்நூல் குறிப்பிடவில்லை. அப்படியானால் திரைப்படம் மட்டுந்தான் இந்த உரையாடல்களைக் கூறுகிறதோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
பரஞ்சோதியார், திருவிளையாடற் புராணம் இயற்றுவதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய நூல் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம். இந்நூல் ஆதி திருவிளையாடற்புராணம் என்றும் மதுரைத் தலபுராணம் எனவும் அழைக்கப்படுகிறது. அந்நூலில் பதினான்காவது திருவிளையாடலான
‘ கிழி அறுத்த திருவிளையாடல்’ என்னும் பகுதியில் சிவன் – நக்கீரர் உரையாடல் இடம்பெற்றுள்ளது. ஆனால், இதில்தான் திரைப்படத்தில் வரும் சாதி குறித்த பேச்சை ஒரு பாடல் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது.
“அங்கங் குலுங்க வரிவாளி னெய்யென்றோர்
பங்கக் கவிதை பரமன் சொலவிளிந்து
சங்கறுப்ப தெங்கள்குலந் தம்பிராற் கேதென்றார்
துங்க முறுங்கவிதை சொன்னா னெதிர் துணிந்து “
அதாவது, அங்கம் குலுங்க வரிவாளி நெய்யென்ற ஒரு குறைவு பட்ட கவிதையைப் பரமன் சொன்னதைக்கேட்டு, சங்கறுப்பது எங்கள் குலம் இறைவனான சங்கரனார்க்கு ஏது குலம்” என்ற கவிதையை நக்கீரன் துணிந்து சொன்னான் என்று பாடல் கூறுகிறது.
ஆக, திருவிளையாடல் படத்தில் வரும் குலம் குறித்த ஏச்சு ஏ.பி. நாகராஜனுடைய எண்ணமும் அல்ல ; அவருடைய வசனமும் அல்ல எனத் தெரிகிறது. உ.வே.சாமிநாதைய்யர் 1927 இல் பதிப்பித்த பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவாலவாயுடைய திருவிளையாடற் புராணத்தின் முகப்புப் பகுதியில் தனிப்பாடல்கள் எனும் தலைப்பில் ‘ பாடல்கள் – ஆக்கியோர் என்று ‘ அங்கங்குலுங்க – சோமசுந்தரக் கடவுள்’, ‘ சங்கறுப்பது – நக்கீரர்” என்ற குறிப்பும் உள்ளது.
‘கிழியறுத்த திருவிளையாடற்’ பகுதில், மேலே சொன்ன பாடலுக்குக் கீழே பாடல் குறிப்பிடும் இரண்டு வெண்பாக்கள் வருமாறு என்று ‘சங்கறுப்ப’ பாடலின் முதலிரண்டு வரிகள் உ.வே.சா-வால் குறிப்பிடப்பட்டுள்ளன. வெண்பாக்கள் முழுமையாகத் தரப்படவில்லை.
சோமசுந்தரக்கடவுள் நக்கீரரின் குலத்தை இழித்துரைப்பதும் பதிலுக்கு நக்கீரர் இறைவனை இழித்துரைப்பதும் திருவாலவாய திருவிளையாடற்புராணத்தில்தான் முதன்முதலில் காணப்படுகிறது என்பதைத் தெளிவாக அறிய முடியவில்லை. பிற்காலத்தில் எழுதப்பட்ட பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணத்தில் அப்பாடல்கள் பற்றிய குறிப்புகளோ அல்லது அது போன்ற பாடல்களோ எழுதப்படவில்லை. பல நூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருவாலவாயுடைய புராணம் சுட்டும் இப்பாடல்கள் பின்னர் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றது என்றால் இப்பாடல்கள் நாடக நிலைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்திருக்க வேண்டும். அவற்றையே
ஏ.பி.நாகராஜன் தன்னுடைய படத்தில் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் கருத வேண்டியிருக்கிறது.
ஆக, சிவபெருமான் – நக்கீரர் இடையே நடைபெறும் சாதி குறித்த உரையாடலுக்கு ஏ.பி.நாகராஜன் காரணமல்ல. எழுதப்பட்ட இலக்கியங்களே அதற்குக் காரணம் என்பது தெளிவாகிறது.
முடிவாக ஒன்று நம் மனத்தில் எழுகிறது.
இலக்கியமோ, திரைப்படமோ எப்பொருள் சார்ந்து ஒரு படைப்பு உருவாகிறதோ, அப்பொருளுக்கு நியாயம் செய்வதாக அப்படைப்பு அமைவதே சிறப்பாகும்.
உதவிய நூல்கள் :
1. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் – பெரும்பற்றப்புலியூர் நம்பி, பதிப்பித்தவர்: உ. வே.சாமிநாதய்யர், கேசரி அச்சுக்கூடம், சென்னை. ( உதவி : Tamil Digital Library)
2. பரஞ்சோதி முனிவர் அருளிச் செய்த திருவிளையாடற்புராணம், ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை, முல்லை நிலையம், சென்னை – 600017
3.பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், உரையாசிரியர் மு.அருணகிரி, அருணா வெளியீடு, சென்னை – 600049
Discover more from சொல்வனம் | இதழ் 374 | 13 செப் 2026
Subscribe to get the latest posts sent to your email.
