ஆர். சூடாமணியின் ‘தனிமைத் தளிர் – தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ தொகுப்பை முன்வைத்து…
கடந்த ஆறு நாட்களாக ‘தனிமைத் தளிர்’-ல், சூடாமணியின் சிறுகதை உலகிற்குள் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். அபாரமான வாசிப்பனுபவம். சிறந்த தொகுப்பு. தொகுப்பாசிரியர்களுக்கும், வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி. சூடாமணி எனும் ஆளுமையை அவரின் எழுத்தை அண்மையாய் அறிந்து கொண்டதில் திருப்தியும், இனிய உணர்வும் மேலோங்கியது. நூலைப் படிக்கும் போதே சிறுகதைகளின் உலகையும், அது சுட்டும் உண்மைகளையும், ஒட்டுமொத்தமாக ஓர் உள்ளார்ந்த தரிசனம் நோக்கி அவை மேலெழும் தருணங்களையும் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டிருந்தேன். என்ன ஆச்சர்யம்! குறிப்புகளே பல பக்கங்கள் நீண்டிருந்தன. எல்லாவற்றையும் எழுதினால் சூடாமணியின் படைப்புலகம் குறித்து பல கட்டுரைகள் எழுத முடியும். எத்தனை விதமான பாத்திரங்கள்/மனங்கள்/பிரபஞ்சங்கள்!. நூலை வாசிக்க ஆரம்பித்து ஐந்தாறு சிறுகதைகளுக்குள் அந்த உலகம் என்னை உள்ளிழுத்துக் கொண்டது. லட்டு…அதற்கடுத்து இன்னொரு லட்டு…ஒன்றிற்கு மேல் ஒன்றாக அந்த இனிப்பு மனமெங்கும் தித்தித்தது. அடுத்து…அடுத்து என்று ஆர்வமாய் வெவ்வேறு தளங்களை/மனிதர்களை/உணர்வுகளை தரிசிக்கச் செய்தது. காட்சிகளை கண்முன் உலவவிட்டது.
‘தனிமைத் தளிர்’ தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பில், தொகுப்பாசிரியர்களான சீதா ரவியும், கே. பாரதியும், 1954-லிலிருந்து 2003 வரையிலான சூடாமணியின் சிறுகதைகளில், 63 சிறுகதைகளைத் தேர்வு செய்து, வெளியான இதழ், வருடம், மாதம் ஆகிய தகவல்களுடன், காலவாரியாகத் தொகுத்தளித்திருக்கிறார்கள். சூடாமணியின் முதல் சிறுகதை ‘பரிசு விமர்சனம்’ 1954-ல் வெளிவந்திருக்கிறது. 2004 வரை தொடர்ந்து எழுதியிருக்கிறார். மொத்தம் 574 சிறுகதைகள் இதழ்களில் பிரசுரமாகியிருந்திருக்கின்றன. நேர்காணல், பேட்டி என்று எந்த ஊடகத்திலும் வெளிப்படாத அவர், அவரது கதைகளை 2003-ல் ஆய்வு செய்த எம்.ஃபில் மாணவி மா. மங்கையர் திலகத்திற்கு அளித்த எழுத்து மூலமான பேட்டி பின்னிணைப்பாக நூலில் தரப்பட்டிருகிறது.
சூடாமணி சென்னையில் 1931-ம் ஆண்டில் பிறந்தவர். அப்பா ராகவன், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியா மதராஸ் மாகாணத்தின் தலைமைச் செயலாளராக இருந்தார். அம்மா கனகவல்லி சிற்பம், ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவர். சூடாமணிக்கு ஐந்து வயதில் அம்மை நோய் தாக்க, பல கட்ட மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பின் மரணத்தின் வாசலிலிருந்து திரும்பினார். இதனால் இயல்பான உடல் வளர்ச்சி தடைப்பட்டு, பள்ளி செல்லாமல் வீட்டிலேயே கல்வி கற்றார். தாயிடமிருந்து ஓவியக் கலையைப் பயின்றார். வீட்டு நூலகத்திலேயே படித்தார். சூடாமணி திருமணம் புரிந்துகொள்ளவில்லை. கலைமகள், சுதேசமித்திரன், ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர், தீபம், அமுதசுரபி, சதங்கை, கணையாழி போன்ற இதழ்களில் 1954 முதல் தொடர்ந்து கதைகள் எழுதினார். 1957-ல் அவரின் ‘காவேரி’ சிறுகதை கலைமகள் இதழின் வெள்ளி விழா பரிசு பெற்றது. 1959-ல் அவரது ‘மனதுக்கினியவள்’ நாவல் கலைமகள் ஸ்ரீநாராயணசாமி ஐயர் விருது பெற்றது. ‘நான்காவது ஆசிரமம்’ சிறுகதைக்காக இலக்கியச் சிந்தனை விருது பெற்றிருக்கிறார். சூடாமணி 2010-ஆம் ஆண்டு காலமானார். அவர் எழுதி வைத்த உயிலின்படி சுமார் பதினோரு கோடிக்கும் மேலான அவரது சொத்துக்கள் பல தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டன.

தொகுப்பாசிரியர்களில் ஒருவரான சீதா ரவி கல்கி பத்திரிகையின் ஆசிரியராக சுமார் பதினெட்டு வருடங்கள் பணிபுரிந்தவர். அமரர் கல்கி அறக்கட்டளையின் அறங்காவலர். கே. பாரதி, கல்கி இதழில் உதவியாளராகப் பணியைத் தொடங்கி பின்பு இலட்சியப் பெண், மகளிர் சிந்தனை ஆகிய பெண்கள் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அமரர் ஆர். சூடாமணியின் அந்திமக் கால உயிலைச் செயல்படுத்தியவர். ஆர். சூடாமணி பெயரில் இயங்கும் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர்.
குழந்தைகளின் உலகமும் தாய்மையின் பரிமாணங்களும் சூடாமணியின் பல கதைகளில் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கணவனின் முதல் தாரத்துக் குழந்தைகள், அக்குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் இடையிலான உணர்வுகள், முதல் தாரத்துக் குழந்தைகளுக்கும் இரண்டாம் தாரத்துக் குழந்தைகளுக்கும் இடையிலான உறவுகள் பற்றி அறுபதுகளில் சூடாமணி எழுதிய பல கதைகள் தொகுப்பிலிருந்தன.
சதாசிவனின் முதல் மனைவி இறந்த போது ராமன் இரண்டு மாதக் குழந்தை. ராமனுக்கு ஒரு வயதாகும்போது அம்மா என்று அவன் அழைத்தது பாரதியைத்தான். பாரதி சதாசிவனின் இரண்டாவது மனைவி. பாரதிக்கு மூத்தாள் குழந்தை ராமனின் மேல் மிகுந்த அன்பு. பாரதி இல்லாமல் ராமன் கஷ்டப்படுவான் என்பதால், பிரசவத்திற்காக பாரதி பிறந்த வீட்டிற்குப் போகும்போது நான்கு வயதுக் குழந்தையான ராமனையும் உடன் அழைத்துச் செல்கிறாள். பாரதியின் அம்மா ஜானகிக்கு, வாயும் வயிறுமாக இருக்கும் தன் மகளை ராமன் ஷண நேரம் கூட ஓய்வெடுக்க விடாமல்/பிரியாமல் தன் ஒவ்வொரு செயலுக்கும் பாரதியைத் தொந்தரவு செய்து கண்டு மனதிற்குள் பொறுமுகிறாள். ராமனின் மனதில் ஜானகி விதைக்கும் நஞ்சை பாரதி எப்படி சாதுர்யமாக நீக்குகிறாள் என்பதை ‘அன்பு உள்ளம்’ என்ற கதை சொல்கிறது (1954, ஆனந்த விகடன்).
பல சிறுகதைகள் குறுநாவலுக்கான செறிவைக் கொண்டிருந்தன. அனைத்துக் கதைகளிலும் அடிநாதமாக அன்பின்/கருணையின் இழை ஓடிக்கொண்டிருந்ததை தரிசிக்க முடிந்தது.
ஐம்பது வயதான செல்லம் அம்மாளின் மகன், மருமகள், குழந்தைகள் கொண்ட குடித்தன வீட்டில் சமையல் வேலைக்குச் சேர்கிறாள் பாகீரதி அம்மாள். சுறுசுறுப்பாக வேலை செய்யும் பாகீரதியை அந்த வீட்டில் அனைவருக்கும் பிடித்துப் போகிறது. பாகீரதி நன்றாகப் பேசவும் செய்வாள். பாகீரதி தன் சம்பளப் பணத்தை செல்லம் அம்மாளிடம் கொடுத்துதான் பாங்க் அக்கவுண்டில் போட்டுக் கொண்டிருந்தாள். பாகீரதி தனிக்கட்டை என்று செல்லம் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒருநாள் தன் இரண்டு மகன்களுக்கு கடிதம் எழுதித் தரச்சொல்லி செல்லம் அம்மாளிடம் பாகீரதி கேட்கும்போதுதான் அவளுக்கு
மகன்கள் இருக்கும் விஷயம் செல்லத்திற்கு தெரிய வருகிறது. இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. இருவரும் அம்மா போடும் கடிதங்களுக்கு பதில் போடுவதில்லை. அம்மாவையும் எப்போதும் வந்து பார்த்ததில்லை. ஒருமுறை பாகீரதிக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போது செல்லமும், அவளது மகனும், மருமகளும் தான் அவளைப் பார்த்துக் கொண்டனர். செல்லத்திற்கு, பாகீரதியின் மகன்கள் மேல் மிகுந்த மனக் கசப்பு. இந்நிலையில் பாகீரதியின் இரண்டாவது மகன் கணேசன் பணத் தேவைக்காக அம்மா பாகீரதியைத் தேடி வருகிறான். கோபம் கொள்ளும் செல்லம் அதிர்ச்சியும், மனத் திறப்பும் கொள்ளும் வகையில் ஒரு செயல் செய்கிறாள் பாகீரதி (யோகம், கலைமகள்,1963).
விமலாவிற்கு பிறந்த வீட்டுடன் தொடர்பு அறுந்து பதினேழு வருடங்களாயிற்று. கணவன் கதிரேசனின் விதவைத் தாயாரின் சர்வாதிகாரத்தைப் பற்றி விமலாவின் அப்பா ஏதோ சொல்லிவிட, வெகுண்டழுந்த கதிரேசன் தன் மனைவியிடம் இனிமேல் பிறந்த வீட்டை திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாதென்றும், பிறந்து வீட்டு மனிதர்களைப் பற்றிப் பேசக் கூடாதென்றும், சம்மதமென்றால் தன்னுடம் வாழும்படியும் இல்லையென்றால் பிறந்த வீட்டிற்குச் சென்று விடும் படியும் கூறிவிடுகிறார். அன்றிலிருந்து இன்று வரை தன் பிறந்தகம் பற்றி வாய் திறந்ததில்லை விமலா. விமலாவின் தம்பி வேல் முருகன் இளைஞனானதும் இந்திய ராணுவத்தில் சேர்ந்ததும், சமீபத்தில் பாகிஸ்தானுடன் நடந்த சண்டையில் அவன் இறந்து விட்டதும் நண்பர்கள் மூலமாக கதிரேசனுக்குத் தெரிய வருகிறது. விமலாவின் காதிற்கும் அச்செய்தி போயிருக்கிறது. ஆனால் கதிரேசனிடம் விமலா தம்பியைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. தான் எத்தகைய ஒரு மாபெரும் இழப்புக்கு ஆளானவர் என்பதை முதன்முதலாக கதிரேசன் தவிப்புடன் உணர்கிறார் (‘பெருமையின் முடிவில்’, கல்கி தீபாவளி மலர், 1972).
மேலும் பல சிறுகதைகள் அதன் கருவாலும். அவை எழுதப்பட்ட காலத்தாலும் ஆச்சர்யப்படுத்தின. இன்ஃபேச்சுவேஷன் பற்றி 1966-லியே ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் (‘இரண்டின் இடையில்’, கற்பனை இதழ்). இன்னொரு கதையில், இருபத்தி ஐந்து வயதான தன் மனைவி சரளாவின் மீது பி.எஸ்.ஸி இரண்டாமாண்டு படிக்கும் மூன்றாம் வீட்டுப் பையன் பதினெட்டு வயது பிரகாஷ் கொண்டிருக்கும் இன்ஃபேச்சுவேஷனை மெசூர்டாகக் கையாள்கிறான் ராஜன் (‘உதய படிவம்’,சௌராஷ்டிர மணி தீபாவளி மலர், 1974). ஆந்திர சிற்றூர் ஒன்றின் ரயில்வே காலனியில் நடக்கும் கதையில், ரேணுவின் பாட்டி, ரேணுவிற்கு காதல் கடிதம் தரும் ரயில்வே மருத்துவரின் மகன் கோபியை சமயோஜிதமாகக் கையாள்கிறார் (‘கடிதம் வந்தது’,கலைமகள், 1970). ‘நான்காம் ஆசிரமம்’ (கணையாழி, 1972) எனும் சிறுகதையில் சங்கரி கதாபாத்திரத்தை ஒரு அபாரமான சைகலாஜிகல் கேரக்டர் ஸ்கெட்ச்சுடன் வடிவமைத்திருந்தார் சூடாமணி.
தன் இரண்டாவது மனைவியான இளம்பெண் சுகந்தி, வீட்டிற்கு விருந்தினர்களாக வேதாசலம்-கமலா தம்பதியுடன் உடன் வரும் வேதாசலத்தின் தங்கை மகன் இளைஞன் செந்திலுடன் தயக்கம் உதறி புது உற்சாகத்துடன் நடந்து கொண்டு, உபசரித்து, தனக்கிருக்கும் பாடும் திறனை வெளிப்படுத்தி, செந்திலிடம் பாராட்டு பெற்று மனம் நிறைவதைக் காண்கிறார் எஞ்சினியர் நடேசன். விருந்தினர்கள் சென்றதும் ஏனோ குற்ற உணர்வு கொள்ளும் சுகந்தி கணவன் நடேசனின் தோளில் சாய்ந்து விம்முகிறாள். நடேசன் சுகந்தியின் தலை வருடி “அழாதே சுகி, தப்பு உன்னோடதில்ல…அழாதே” என்று தேற்றுகிறார் (விருந்தினர்களில் ஒருவன்’, கலைமகள், 1977).
அம்மா மரணப் படுக்கையில் மருத்துவமனையில் கண்மூடிப் படுத்திருக்கிறாள். கேசவன் குழந்தையாக இருந்தபோதே அப்பா இறந்துவிட்டார். அம்மா தான் அவனை வளர்த்தாள். கேசவனுக்கு எட்டு வயதாக இருக்கும்போது அம்மா அவனிடம் கேட்டாள் “செல்லப்பா அங்கிளை உனக்குப் பிடிச்சிருக்குதா கேசவா?” என்று. அவன் பிடித்திருக்கிறதென்று தலையாட்டுகிறான். “எனக்கும் பிடிச்சிருக்கு” என்று சொல்லும் அம்மா சிறிது தயக்கத்துடன் அவனிடம் அனுமதி கேட்கும் தொனியில் “செல்லப்பாவை அப்பாவா நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடலாமா கேசவ்?” என்று கேட்கிறாள். எட்டு வயது சிறுவனான கேசவன் அப்போது என்ன நினைத்தானோ, வேண்டாம் என்று மறுத்து விடுகிறான். அம்மா அந்த ஆசையை மனதிற்குள் பூட்டி மறந்து விடுகிறாள். செல்லப்பா டிரான்ஸ்ஃப்ராகி வடமாநிலம் சென்று விடுகிறார். இப்போது கேசவனுக்கு திருமணமாகி, குழந்தைகளான பின் தான் குழந்தையாக இருந்தபோது அம்மாவிற்குச் செய்த தீங்கு புரிந்து குற்ற உணர்வு கொள்கிறான். செல்லப்பா மறுபடியும் சென்னை வந்ததை அறியும் கேசவன் சாகக் கிடக்கும் அம்மாவை வந்து பார்க்கும்படி ஐம்பத்தைந்து வயதான செல்லப்பாவிற்கு கடிதம் எழுதுகிறான் (‘இறுக மூடிய கதவுகள்’, கல்கி, 1988).
அகிலாவிற்கு தன் மகன் பனிரெண்டு வயது பாலுவின் மேல் தனக்குத்தான் அதீத உரிமை இருப்பதாக ஒருவித மன எண்ணம். தன் அம்மா, தங்கை ஜெயந்தி, தம்பி ரகு யாரும் அவன் மேல் உரிமை எடுத்துக்கொண்டு அவனை அதட்டக்கூடாது/அவனுக்கு உதவவும் கூடாது. பாலுவிற்கு எது செய்தாலும் அவள் தான் செய்ய வேண்டும் என்ற எண்னம். நாளடைவில் அது ஒரு அப்ஸெஸனாக மாறுகிறது (‘உரிமைப் பொருள்’, கதம்பம் இதழ், 1967).
நிதர்சனம் உணர்ந்து மனைவியின் விருப்பப்படி தரையில் கால் பதிக்கும் சமஸ்கிருத பண்டிட் சர்மா (‘நீலத் தாமரை’, கல்கி, 1970), கணவனை பதினெட்டு வயதில் இழந்து, மகனைப் பிரிய முடியாத தன் சுயநலத்திற்காக, மகனுக்கு திருமணம் ஆனால் தன் மேலிருக்கும் பாசம் குறைந்து விடுமோ என அஞ்சி, மகன் மணிக்கு அவனின் நாற்பத்தியிரண்டு வயது வரை திருமணம் செய்து வைக்காமல், வாழ்க்கையையே ஒரு வேஷமாக, வசனம் பேசும் நாடக மேடையாக அமைத்துக் கொண்டுவிட்ட அறுபது வயது அம்மா காயத்ரி (‘அன்னையின் முகத்துப் புன்னகை’, கலைமகள் தீபாவளி மலர், 1971), இறந்து போன தன் மனைவி மைதிலியின் இறுதிச் சடங்கில் அவளிடம் மன்னிப்பு கேட்க வாய்ப்பு கிடைக்காமல் உள்ளுக்குள் அழும் கணவன் நாணு (‘மன்னிப்புக்காக’, கலைமகள், 1972), சென்னை திருவல்லிக்கேணி ‘சாரதா சங்கீத சபா’ வைரவிழா மலருக்காக முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இறந்து போன கணவன் கர்நாடக சங்கீத வித்வான் பஞ்சநதம் பற்றி பேட்டி எடுக்க வந்தவர்களிடம் அழுத்தமாய், விட்டேற்றியாகப் பேசும் அறுபது வயது கௌரியம்மாள் (‘மேதையின் மனைவி’, சுதேசமித்திரன் தீபாவளி மலர், 1973), புகுந்த வீட்டிற்கு வந்து தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் மனதிற்குள் புதைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகி மனநல மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியபின் மனைவி பவானியைப் புரிந்து கொண்டு பரிவுடன் அவளை அரவணைக்கும் கணவன் ரமணன் (‘வீடு திரும்பினாள்’,சௌராஷ்ட்ர மணி தீபாவளி மலர், 1973), தன் வகுப்புத் தோழி மாதுரி மேல் படிப்பு படித்து டாக்டரேட் செய்யப் போவதைக் கண்டு மனதில் பொறாமை கொண்டு, மாதுரியை பேச்சில் மட்டம் தட்டப் பார்க்கும் கல்யாணமாகி, கணவன், குழந்தைகள் என்று செட்டிலாகிவிட்ட நீலா (‘வாழ்த்துக்கள்’, இதயம் பேசுகிறது, 1982)… இப்படி எத்தனையோ பாத்திரங்களை சூடாமணியின் உலகில் சந்தித்தேன்.
வாழ்வின் இறுதி உண்மையை, தத்துவத் தேடலை, வாழ்விலிருந்து மேலெழும் தரிசனங்களையும் சில கதைகளில் அவதானிக்க முடிந்தது.
துளசி இளம் விதவை. துளசியின் அப்பா ஸ்ரீநிவாசன் திருச்சி கோவில் ஒன்றில் உதவி பட்டாச்சார்யராக இருந்தார். அப்போது அவர்கள் வீடு மேலச் சிந்தாமணியில் இருந்தது. மகள் விதவையானதும் ஊரிலிருக்கப் பிடிக்காமல் ஸ்ரீநிவாசன் மகள் துளசியைக் கூட்டிக்கொண்டு சென்னை வந்து விடுகிறார். பெற்றோரில்லாத குப்பத்துச் சிறுவனான ஏழு வயது ‘வெள்ளை’-யை தத்தெடுத்துக் கொள்ள வேண்டுமென்று துளசி விரும்புகிறாள். அப்பா ஸ்ரீநிவாசனுக்குத் தயக்கம். மகளின் அன்றாடச் சோர்விலிருந்து அவள் மனதை திசை திருப்ப, கோவிலுக்கு வரும்படி அழைப்பது அவர் வழக்கம். ஆனால் கோவிலில் செய்யப்படும் ‘திருமஞ்சனம்’ போன்ற சடங்குகள் துளசிக்கு குழந்தைத்தனமாகப் படுகின்றன. அப்பாவோடு துளசி அதுபற்றி விவாதித்திருக்கிறாள். \\ஏம்ப்பா, தெய்வம்னு ஒரு மகத்துவத்தை நாம் நம்பினால், நம்மையே அந்த தெய்வத்துலே பார்க்கறதுதான் சிறப்பா? தெய்வத்தை அல்லவா நம்மில் பார்க்கக் கத்துக்கணும்?.// ஸ்ரீநிவாசனுக்கு அவரை யாரோ பிடித்து உலுக்கிய மாதிரி இருக்கிறது. ஒரு திடீர் ஒளியின் திகைப்போடும், அதிர்ச்சியோடும் அச்சத்தோடும் துளசியைப் பார்க்கிறார் (‘திருமஞ்சனம்’, கலைமகள் தீபாவளி மலர், 1970).
இத்தொகுப்பில் பல கதைகள் மனதை நெகிழ வைத்து கண்கள் நிறைத்தன. அவர் ஒரு ஏழை கோவில் அர்ச்சகர்/குருக்கள். மகன் திருமணமாகிய சில வருடங்களிலேயே இளம் வயதில் இறந்து விடுகிறான். மருமகள் இரண்டு குழந்தைகளுடன், இங்கு புக்ககத்தில் தான் வசிக்கிறாள். பேரக் குழந்தைகளுக்கு தாத்தாவின் மேல் மிகப் பிரியம். மகள் முக்தா திருச்சி கணவன் வீட்டிலிருந்து சில நாட்கள் முன்பு தான் இங்கு வந்திருக்கிறாள். கொஞ்ச நாள் தங்கிவிட்டு திரும்பிப் போகிறாளா? என்ன விஷயம் என்று முழுதாகத் தெரியவில்லை. ஆனால் திருமணத்திற்கு முன்பு முக்தாவிடம் இருந்த கலகலப்பும், உற்சாகமும் இப்போது இல்லை. குருக்களுக்கு சமீப காலமாக மனதில் சஞ்சலமும், கேள்விகளும், நாத்திக எண்ணங்களும் தலைதூக்குகின்றன. அந்த உணர்வுடன் கோவிலில் இறை உருவத்தின் முன் நிற்க அவர் மனம் கூசுகிறது. முக்தா மூலமாக அவள் புகுந்த வீட்டில் அவளுக்கு நடக்கும் வரதட்சணைக் கொடுமைகள் பற்றி தெரிய வந்து அவர் அதிர்ந்து போகிறார். முக்தாவிடம் புகுந்த வீட்டிற்குப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு கோவில் தர்மகர்த்தாவைப் பார்த்து தான் குருக்கள் வேலையிலிருந்து விலகிக் கொள்வதாகச் சொல்கிறார் (‘வெறுமையின் இழைகள்’,’தீபம்’, 1976). இக்கதையில் இரவில் வீட்டுத் திண்ணையில் குருக்களுக்கும், மகள் முக்தாவிற்கும் நடக்கும் உரையாடல்கள் மனதைப் பிசைந்தது.
தொகுப்பில் ‘நாமாவளி’ (கல்கி பொன்விழா மலர், 1992), ‘புவனாவும் வியாழக் கிரகமும்’ (புதிய பார்வை, 1992), ‘அடிக்கடி வருகிறான்’ (இந்தியா டுடே, 1997), ‘சாம்பலுக்குள்’ (தினமணி மகளிர் மலர், 1997) கதைகளும் மிகப் பிடித்திருந்தன.
‘ஒரு கூட்டுக் கடிதம்’ என்றொரு கதை. லா.ச.ரா-வின் ‘பாற்கடல்’ சிறுகதையைப் போல முற்றிலும் கடித வடிவிலான கதை. 1976-ல் கலைமகள் இதழில் பிரசுரமாகியிருந்திருக்கிறது. தங்கம்மாவிற்கு வயிற்றில் கேன்சர். கணவன் இறந்து விட்டார். மகன் ராஜகோபாலன் பம்பாயில் வேலை செய்கிறான். அவனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது, சாரதா (சாரு) என்றொரு மகள், சென்னை மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை செய்கிறாள். சாருவிற்கு இன்னும் திருமணமாகவில்லை. சாருதான் அம்மாவைக் கவனித்துக் கொள்கிறாள். வாரவாரம் மகன் ராஜகோபாலனுக்கு கடிதம் எழுதுவது தங்கம்மாவின் வழக்கம். அன்றும் மகனுக்கு கடிதம் எழுதத் துவங்குகிறாள்…\\அன்புள்ள சிரஞ்சீவி ராஜகோபாலுனுக்கு, அம்மாவின் ஆசீர்வாதம். ‘சிரஞ்சீவி’ என்று எழுதும்போது இன்று ஒன்று தோன்றுகிறது. உலகத்தில் யார்தான் சிரஞ்சீவி? அன்றாடம் மனிதர்கள் இறப்பதைப் பார்க்கிறோம். மகாபாரதத்தில் தர்மர் சொன்னதை நான் இங்கு சொல்ல வரவில்லை. என்னை அவ்வளவு உயர்ந்தவளாக நான் கருதிக் கொள்ளவில்லை. ஆனாலும் அவருக்கு எழுந்த சிந்தனையைப் போல் யாருக்கும் ஏதாவது ஒரு சமயமாவது தோன்றக் கூடாதா என்ன? தினம் மரணங்களைப் பார்த்து வந்தும், ஏன் இந்த உடலையே மரணத்தின் வித்து ஊன்றி வளரும் ஒரு மரமாகச் சுமந்துகொண்டிருந்துங்கூட இன்னொருவரைச் சிரஞ்சீவி என்று சொல்ல முடிகிறதென்றால் அது விசித்திரமாக இல்லையா? ஆனாலும் அது பொய்யாக ஒலிக்கவில்லையே? அப்படியானால் ‘சிரஞ்சீவி’ என்பது நாம் பார்க்கும் வாழ்வையும், மரணத்தையும் கடந்த ஏதோ ஒரு நித்தியத்தைக் குறிக்கிறதென்று நினைக்கிறேன். அந்தப் பெரியதையே ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்கு ஆசீர்வதிக்கிறாள் போலும்.// இப்படி ஆரம்பிக்கும் கடிதம் தன் சிகிச்சைகள் பற்றி, சாரு பற்றி, தன் வலிகள் பற்றி தொடர்கிறது. கணவனின் சகோதரி சுலோசனா பல வருடங்கள் கழித்து வீட்டிற்கு வந்ததையும் கடிதத்தில் எழுதுகிறாள் தங்கம்மா. வலியினால் கடிதத்தை தொடர முடியாமல் போக, மகள் சாரு கடிதத்தை தொடர்கிறாள். சுலோசனா அத்தை வீட்டிற்கு வந்தது சாருவிற்குப் பிடிக்கவில்லை. அம்மா (தங்கம்மா) புக்ககம் வந்தபோது அத்தை செய்த கொடுமைகளையும், தங்கம்மாவைப் பற்றி இல்லாத பொல்லாததுகள் சகோதரிடனிடம் சொல்லி அம்மாவின் திருமண வாழ்க்கைக்கே உலை வைக்க இருந்ததையும் சாரு அறிவாள். அப்படிப்பட்டவள் இத்தனை வருடங்கள் கழித்து எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த வீட்டிற்குள் வந்திருக்கிறாள் என்று சாருவிற்கு ஆச்சரியம். ஆனால் அம்மா, சுலோசனா அத்தையின் இன்றைய நிலை கண்டு அவள் மேல் காட்டிய பரிவும், இன்சொற்களும் சாருவிற்கு அம்மாவின் மேல் இருந்த மதிப்பை பன்மடங்கு உயர்த்தியதாக சாரு கடிதத்தில் எழுதுகிறாள்.
மாணிக்கத்திற்கு ஓவியனாக ஆசை. ஆனால் அவன் ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். தங்கை வள்ளிக்கு ஒரு காலில் சிறிய ஊனம். சிறிய நொண்டலுடன் தான் நடப்பாள். அப்பா இறந்தபிறகு அம்மா பென்சனில் குடும்பத்தை நடத்த முடியாமல் அவன் குமாஸ்தா வேலைக்குப் போகும்படி ஆயிற்று. அம்மாவும், காய்ச்சலில் உயிர் விடும்போது தங்கை வள்ளியைப் பார்த்துக் கொள்ளச் சொல்கிறாள் மாணிக்கத்திடம். தங்கை வள்ளி, மாணிக்கத்திற்கு சுமையாகத் தெரிகிறாள். அதை உணர்ந்த வள்ளி தன் பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டுப் போகிறாள். பல வருடங்கள் கழித்து தன் நாற்பதாவது வயதில், நாற்பத்தி ஐந்து வயதாகும், ஒவியப் பணியினால் வாழ்வில் தோல்வியுற்ற அண்ணன் மாணிக்கத்தைப் பார்க்க ஒரு மழை நாளில் வள்ளி, மாணிக்கத்தின் ஒற்றை முறிக்கு வருகிறாள் (‘ஓவியனும் ஓவியமும், கதிர்’, 1965).
சூடாமணியின் உலகிலிருந்து வெளிவர இன்னும் பல நாட்களாகும் என்றுதான் தோன்றுகிறது. இத்தொகுப்பைப் படித்ததன் மூலம் சூடாமணி எனும் எழுத்தாளுமையை இன்னும் அணுகி அறிந்துகொண்ட திருப்தி மனதில் எழுகிறது. அவரின் ‘மனதிற்கினியவள்’ நாவலை வாசிக்க பெரு விருப்பு தோன்றுகிறது.
சீதா ரவி, கே. பாரதி இருவருக்கும், வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்திற்கும் நன்றியும், அன்பும்.
‘தனிமைத் தளிர்’ (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்) – ஆர். சூடாமணி
தேர்வும், தொகுப்பும்: சீதா ரவி, கே. பாரதி
காலச்சுவடு பதிப்பகம்
முதல் பதிப்பு: செப்டம்பர், 2013.
648 பக்கங்கள்
Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
