“இன்னும் எவ்வளோ தூரம் நடக்கணும்” என்று மனு கேட்டதும் “இன்னும் ஒரு தட்டு கூட ஏறணும். அது பொறவு கரிமல டாப் வந்திடும். இன்னைக்கு ராத்திரி அங்க விரியில தங்கிட்டு நாளைக்குக் காலையில கிளம்பலாம்” என்று சொல்லிக் கொண்டே தலையிலிருந்த இருமுடியை ஒரு கையால் தூக்கி அடியிலிருந்த பெட்ஷீட்டை மறு கையால் சரி செய்து வைத்த பின் மீண்டும் இருமுடியைத் தலையில் வைத்து விட்டு வேகமாக நடக்கத் தொடங்கினேன். எங்களுக்கு முன்னால் சென்ற சுதிஷும், சஜித்தும், சதீஷ் அண்ணனும் இந்நேரம் கரிமலையின் மேல் பகுதியை நெருங்கியிருப்பார்கள் என்று மனதில் தோன்றியக் கணம் பின்னால் ஆமை வேகத்தில் நடந்து வரும் திலீப் அண்ணனிடமும், நிஷாந்திடமும் மனம் சென்றது. எப்போதும் போல கூட வந்த அனைவரையும் முன்னால் நடந்து போகச் சொல்லி விட்டு அவர்கள் இருவரும் எல்லாருக்கும் பின்னால் நடந்து வந்துக் கொண்டிருப்பார்கள். ஏன் இவ்வளவு மெதுவாக நடக்கிறீர்கள் என்று கேட்டால் உங்கள் அனைவரையும் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வேண்டியது எங்களது கடமை என்று குரு தத்துவம் பேசுவார்கள். உண்மையில் அவர்களால் மற்றவர்களோடு போட்டி போட்டுக்கொண்டு வேகமாக நடக்க இயலாது. அது வெளியில் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக யார் கேட்டாலும் இப்படியொரு பதிலைச் சொல்வார்கள். இவர்களால் தான் இந்த தடவை தாமதித்தோம். இல்லையென்றால் இப்போதெல்லாம் கரிமலையின் உச்சிக்கு சென்று சேர்ந்திருப்போம். இன்னும் அரை மணி நேரத்தில் அடுத்தக் கேட்டைப் பூட்டி விடுவார்கள். மீண்டும் நாளை காலை ஆறு மணிக்கு தான் திறப்பார்கள். அதுவரை அந்த நுழைவாயில் ஓரமாக இருக்கும் விரியில் தான் தங்க வேண்டி வரும். ஆனால் கூட வந்த பாதிப் பேரும் கரிமலை டாப்பிற்கு அருகே சென்று விட்டதால் அவர்களோடு இணைந்து கொள்வதே நன்றாக இருக்கும். இல்லையென்றால் பாதிப் பேர் அங்கும் நாங்கள் கொஞ்சம் பேர் இங்குமாக மாட்டிக் கொள்வோம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே பின்னால் வந்த தீலீப் அண்ணனையும், நிஷாந்தையும் அழைத்துக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினேன்.
பெரும் காட்டிற்கே உரிய காற்றின் ஓசை அங்கே சுழன்றுக் கொண்டிருந்தது. நெடு நீண்ட மரங்களின் இலைகளுக்குள் வெயில் சுருண்டு கிடந்தது. அழுதா மலை உச்சியில் கண்ட வெயில் கரிமலை அடிவாரத்தை அடைந்த போது முற்றிலும் மறைந்து ஒரு துண்டு வெளிச்சமாக மாறிபோனது. அடர்ந்த வனத்தை முற்றிலும் இருள் சூழும் முன்னம் கரிமலை உச்சியை அடைவது எங்களது இலக்காக இருந்தது. எல்லா தடவையும் மாலை ஆறு மணிக்குள்ளாகவே கரிமலை உச்சியை அடைந்து விடுவோம். இந்த தடவை அழுதா நதிக்கு அருகில் இருந்த விரியில் அதிகாலையில் வந்து சற்று ஓய்வெடுக்க நினைத்துப் படுத்தப்போது களைப்பு மிகுதியில் அனைவரும் தூங்கியதால் நன்றாக விடிந்த பிறகே அங்கிருந்து புறப்படும்படி நேர்ந்தது. இல்லையென்றால் இந்நேரம் கரிமலை உச்சிக்கு சென்று சேர்ந்திருப்போம். மேலும் எங்களுக்கு பின்னால் நடந்து வருபவர்களின் ஆமை வேகம் எங்களையும் சற்று சோர்வுற செய்ததால் குறித்த நேரத்தில் எங்களால் சென்றுச் சேர முடியாமல் போனது.
மூச்சு முட்ட நடந்து கொண்டிருந்த திலீப் அண்ணன் முன்னால் இருந்த ஓர் விரியில் சென்று அமர்ந்து கொண்டான். கரிமலை உச்சியை நாளைக்கு ஏறிக் கொள்ளலாம் என்று அநேகம் பேர் அந்த விரிக்குள் வந்து படுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டதும் “நமக்கும் இன்னைக்கு இங்க கிடப்போமா” என்றான் திலீப் அண்ணன். “இதுக்கு தான் அங்க அங்க இருக்காதென்னு சொன்னேன் கேட்டியா, ஓரே இத நடந்தா இப்படி அங்கங்க இருக்க தோணுமா. விருதம் சரியில்ல அதான் இப்படி இழுக்குது உனக்கு” என்று நான் சொன்னதும் “ஒன்னாம் தேதியே விருதம் எடுக்கத் தொடங்கியவன் இந்த திலீப், இங்க ஒரு சோடா அடிச்சிட்டு போலாம் ன்னு நினச்சேன். இனி சோடாவும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம். லே நிசாந்து வா எழும்பு கிளம்புவோம். எனக்க விருதத்த இனி தான் நீ பாக்க போற. வா! போவாம்” என்று சொல்லிக் கொண்டே இருமுடியைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினான். அவன் பின்னால் நிஷாந்தும் நிஷாந்தின் பின்னால் நானுமாக வரிசையாக நடக்கத் தொடங்கினோம். எங்கள் பின்னால் ஒன்றிரண்டு பேர் வந்ததும் கரிமலை தாவளத்தில் இருந்த கேட் அந்த விரியில் வேலைச் செய்து கொண்டிருந்த ஒருவரால் பூட்டப்பட்டது. அதைக் கண்ட நான் திலீப் அண்ணனைப் பார்த்து உரத்த குரலில் சொன்னேன் “கொஞ்ச நேரம் கூட அங்க இருந்து மெதுவா சோட குடிச்சிட்டு எல்லாம் வந்திருந்தோம்ன்ன இந்நேரம் அங்கேயே படுத்து தூங்கியிருக்கலாம் ன்னு” நான் சொன்னதைக் கேட்டதும் பதிலிற்கு எதுவும் சொல்லாமல் “சாமியே…..! என்று சரணகோஷம் முழங்கியபடி வேகமாக முன்னோக்கி நடந்து கொண்டான். அப்போது தலையில் கேஸ் சிலிண்டரை தூக்கிக் கொண்டு மூச்சிரைக்க இரண்டு பேர் எங்களைக் கடந்து நடந்து சென்று கொண்டிருந்தனர்.
ஒரு பெரும் மரம் வழியில் முறிந்து கிடந்தது. அம்மரத்திற்கு கிட்டத்தட்ட நூறு வயதிருக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் சொன்னான் நிஷாந்து. அம்மரத்தை மொத்தமாக முறிக்காமல் பாதையில் இடையூறாக இருக்கும் பாகத்தை மட்டும் அருகில் முறித்து போட்டிருந்தனர். அதைக் கண்ட திலீப் அண்ணன் “பாத்திய இந்த மரத்த மொத்தமா வெட்டக்கூட நம்மாளுங்களால முடியல, அவ்ளோ பெரிய மரம்” என்று சொல்லிக் கொண்டே முழு மரத்தின் நீளத்தையும் தன் கண்ணால் ஒருமுறை அளந்தான். அவ்வளவு பெரிய மரத்தை அப்பெரும் காட்டிலிருந்து முழுவதுமாக அகற்றுவதென்பது பெரும் சிரமத்திற்குரிய வேலை என்பதால் அந்த மரம் வாழ்ந்த காட்டிலேயே அதை அப்படியே விட்டுவிட்டு பாதைக்கு இடையூறான அதன் பாகத்தை மட்டும் வெட்டி அப்புறப்படுத்தியிருந்தனர். அது மட்டுமல்லாமல் அது பாதுகாக்கப்பட்ட வனமானதால் சீசன் காலகட்டத்தில் மட்டுமே அதற்குள் செல்ல அனுமதியுண்டு. நெடுநீண்டு புரண்டு கிடக்கும் அம்மரத்தையும், அதன் வெட்டப்பட்ட அடிபாகத்தின் வட்டத்தையும் பார்த்தவாறே அம்மரத்தை கடந்து நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். எங்களை பின்தொடர்ந்து பலர் வரிசையாக அம்மரம் வழியே நடந்து வந்துக் கொண்டிருந்தனர். அது பார்ப்பதற்கு அம்மரத்தின் வயிற்றைக் கிழித்து வருவது போல் இருந்தது.
ஆண்டாண்டுக் காலமாக மண்மீது பரவிக்கிடந்த வேர்களைப் படிக்கட்டுகளாக்கி பக்தர்கள் அங்கு நடந்து கொண்டிருந்தனர். கரிமலையின் ஒவ்வொரு அடுக்கிலும் ஏராளமான வேர்கள் இப்போது படிக்கட்டுக்களாகவே மாறி போயிருந்தன. வரிசையாக இருந்த அவ்வேர்களைப் பார்க்கும் போது மரக்கட்டைகளை அடுக்கி வைப்பது போல் இருந்தது. புழுதிப் படர்ந்திருந்த ஒவ்வொரு வேர்களிலும் பதிந்திருந்த மனிதக் கால்தடத்தின் மீது வரிசையாக வேறுவேறு கால்தடங்கள் பதியப்பதிய அவ்வேர்கள் வழவழப்பாக மாறிக் கொண்டிருந்தன. அவசரமாக நடந்த திலீப் அண்ணன் ஓர் வேரின் மீது வேகமாகக் கால்களை எடுத்து வைத்தப் போது தடுக்கி விழப் போனான். நல்லவேளை அருகில் நின்ற மரத்தைப் பிடித்து விழாமல் பார்த்துக் கொண்டான். அதன்பின் அவனுடைய வேகம் தானாகக் குறைந்துக் கொள்ள அதைப் பார்த்து எங்களது கால்களும் ஒவ்வொரு அடியாக மெதுவாக எட்டி வைத்துக் கொண்டன.
ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் சரணகோஷம் காட்டிற்குள் ரீங்காரித்துக் கொண்டிருந்தது. முதுகுத் தண்டு வடம் வளைய வளையச் சரண கோஷத்துடன் எங்கள் மூச்சும் ஆவேசமடையத் தொடங்கியது. என்னால் முடியாத சந்தர்ப்பத்தில் தண்டு வடம் நிமிர எழுந்து நின்று ஒருகணம் மூச்சு வாங்கிக் கொண்டேன். அப்போது ஏறி வந்த மலைப்பாதையை ஒருமுறை பின்னால் திரும்பி பார்த்தேன். ஆழமானப் பள்ளதாக்கு போல இருந்த அந்தக் காட்சி என்னை ஒருகணம் தலைச் சுற்ற வைத்தது. அப்போது நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஒரு பெரிய சாக்குப் பையைத் தலையில் ஏந்திக் கொண்டு மூச்சிரைக்க மலை உச்சியை நோக்கி ஏறி கொண்டிருந்தார். அவரது கண்ணிலிருந்து வடிந்த வியர்வை மண்ணெங்கும் சிந்திக் கொண்டே சென்றது.
இனி என்னால் முடியாது என்று மலை உச்சிக்கு சற்று கீழிருந்த ஒரு விரிக்குள் சென்று உட்கார்ந்து கொண்டான் திலீப் அண்ணன். எழுந்து வா போகலாமென்று அவனைத் திட்டிக் கொண்டிருந்த நிஷாந்து பின்னால் இருந்து மூச்சிரைக்க வந்த என்னைக் கண்டதும் சற்று ஓய்வெடுத்துச் செல்லலாமென்று திலீப் அண்ணன் அருகில் உட்கார்ந்து கொண்டான். அவர்களது பக்கத்தில் நானும் வந்து உட்கார்ந்து கொண்டேன். அப்போது செல்போன் ஓசைக் கேட்கத் தோள் பையிலிருந்து எடுத்து ஸ்பீக்கரில் போட்டு “ஹாலோ” என்றேன். மறுமுனையில் பேசிய சுதீஷ் “நாங்க எல்லாரும் கரிமல டாப்புக்கு வந்திட்டோம்” என்று கூறினான். “மனு கூட இருக்கிறானா” என்று நான் கேட்டபோது “மனுவும், சதீஷ் அண்ணனும் கூட இருக்கிறாங்க. தங்குடு அண்ணன், சரத் அண்ணன், சரவணன் அண்ணன் இன்னும் வரல” என்றான். இதைக் கேட்ட திலீப் அண்ணன் “அவனுவக் கொஞ்சம் முன்னாடி தான் இங்க இருந்து போனானுவ” என்றான். செல்போனைக் கட் செய்து விட்டு தோள் பைக்குள் வைத்தேன். அப்போது விரிக்கு முன்பாக இருந்தக் கடைக்குள் நின்ற அண்ணன் சோடா மேக்கரில் மூன்று டம்ளர் சோடா அடித்து எங்களிடம் கொண்டு வந்து தந்தார். “நான் தான் சொன்னேன் வாங்கி குடி” என்றான் திலீப் அண்ணன். சோடாவை வாங்கி மடக்கு மடக்காகப் பருகியதும் திடிரென்று வீசிய ஓர் பெரும் காற்றால் கடைக்கு மேலே கட்டியிருந்த பச்சை நிற தார்ப்பாய் படாரென்று அடித்தது. சோடா உள்ளுக்குள் சென்றதால் ஏற்பட்ட சிலிர்ப்போடு அந்தக் காற்றும் அதுவரை இருந்த களைப்பைச் சற்று போக்கியது.
வழிநெடுகிலும் யானையின் பச்சை சாணம் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. அந்தக் காடு அவர்களது கோட்டை என்பதற்கான அடையாளமாகக் கிடந்த அச்சாணத்தை பலர் மிதித்துக் குலைத்து நடந்துள்ளதன் சான்று அச்சாணத்தின் மீது அப்பியிருந்தது. திலீப் அண்ணன் அச்சாணத்தை தெரியாமல் மிதிக்கக் கால் எடுத்து வைத்தப் போது எங்களுக்காக அங்கு தூரத்தில் காத்து நின்ற சரவணன் “திலீப் அண்ணா யானக் குந்தம்! யானக் குந்தம் ன்னு” உரக்கக் கூவி அவனுக்கு முன்னறிவிப்பு செய்தான். அதனால் விழித்துக் கொண்ட திலீப் அண்ணனிற்கு பலரின் கால்தடம் பதிந்த அச்சாணம் மீது தன்னுடைய கால்தடத்தையும் பதிக்கும் பாக்கியம் கிடைக்காமல் போனது. அப்போது தூரத்தில் ஒரு வெடி வெடிக்கும் சத்தம் கேட்க நடந்து கொண்டிருந்த அனைவரும் ஒரு கணம் அப்படியே நின்று அச்சத்தம் கேட்ட திசையைப் பார்த்து வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினர். மீண்டும் வெடி சத்தம் கேட்குமா என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. “எங்கேயோ யானய விரட்டுறாங்க” என்று திலீப் அண்ணன் சொன்னதும். “இன்னைக்கு ராத்திரி கரிமல உச்சியில யான வந்தா எப்படி இருக்கும்” என்று திலீப் அண்ணனைப் பார்த்துக் கேட்டான் நிஷாந்து. “ஆமா! இன்னைக்கு ராத்திரி அரிக்கொம்பன் வந்து நம்ம தண்டவாளத்துக்க மொவனச் சவுட்டிக் கொல்லட்டும்” என்று திலீப் அண்ணன் சொன்னதும் பதில் பேசத் தொடங்கிய நிஷாந்தின் பேச்சைக் குறுக்கிட்டு நான் திலீப் அண்ணனிடம் “தண்டவாளம் யாருன்ன” என்று கேட்டேன். அதற்கு “உங்க சித்தப்பாக்க வட்ட பேரு டே” என்றான் திலீப் அண்ணன். அப்போது நிஷாந்து குறுக்கிட்டு “தீ கொளுத்தி ரெஞ்சனப் பத்திச் சொல்லட்டா மச்சான்” என்றதும் அமைதியானான் திலீப் அண்ணன்.

கூன் நடையோடு மூச்சிரைக்கச் சற்று ஓய்வுக் கொண்ட போது தூரத்தில் கரிமலை டாப் என்று ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதப்பட்டிருந்த பச்சை நிற பலகை எங்கள் கண்களுக்கு ஓர் பெரும் குளிர்ச்சியை தந்தது. அந்தக் குளிர்ச்சியை கால்களுக்கும் கடத்திக் கொண்டு வேகமாக உச்சியைப் பார்த்து நடக்கத் தொடங்கினோம். அனைவரும் உச்சியின் மீது ஏறிக் கொண்டதும் நான் பின்னால் திரும்பி கால்கடுக்க ஏறி வந்த அப்பெரும் மலையேற்றத்தை கண்டு ஒரு கணம் அப்படியே நின்றேன். எங்களைப் போல் பலர் அங்கு மூச்சிரைக்க நடந்து வந்து கொண்டிருந்தனர். இது தான் காலச்சுழற்சியோ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட போது கரிமலை உச்சியில் இருந்த கோட்டை நாயகி கோவிலிலிருந்து எங்களை கைதட்டி அழைத்தான் சுதீஷ்.
கோட்டை நாயகி கோவிலைக் கடந்ததும் ஏராளமான விரிகள் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டிப் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு விரிக்குள்ளும் ஒரு ஹோட்டல் இயங்கிக் கொண்டிருந்தது. இரவிற்கான உணவு பதார்த்தங்களைச் செய்வதில் ஒவ்வொரு சமையல் கலைஞர்களும் அங்கு வெந்து உருகிக் கொண்டிருந்தனர். நாங்கள் இரண்டாவதாக இருந்த ஒரு விரிக்குள் சென்று எங்கள் இரு முடிகளை இறக்கி வைத்தோம். அங்கு போடப்பட்டிருந்த பாயினைக் கண்டதும் கூட்டத்தில் பாதிப்பேர் அதில் மல்லாந்துக் கொண்டனர். அனைத்து இருமுடிகளையும் சேர்த்து வைத்து ஒரு பெட்ஷீட்டால் மூடியப்பின் அவர்களோடு நானும் சென்று அதில் படுத்துக் கொண்டேன். அநேகம் பேர் பயன்படுத்தியத் தடம் அப்பாய் முழுவதும் தென்பட்டது. அழுக்கு நிறைந்திருந்தாலும் அந்நேரம் அதுவே எங்கள் களைப்பைப் போக்குவதற்கு ஏதுவாகியது. நீல நிற தார்ப்பாயால் அவ்விரி கட்டப்பட்டிருந்ததால் அதன் நீல வெளிச்சம் விரிக்குள் வானத்திற்குள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அந்த நீலவானத்தைப் பார்த்தவாறே இன்று நடந்த முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை நினைத்துக் கொண்டேன். மலைமுகடுகளையும், நீரோடைகளையும், மணல் குன்றுகளையும், அலாதிக் காடுகளையும் கடந்து வந்த சஞ்சாரத்தை திரும்பி நினைத்துப் பார்த்தப் போது மூச்சிரைக்க இவ்வளவு வேகமாக நடந்து வந்தது இன்று இந்த உச்சியில் படுத்துத் தூங்குவதற்கு தான். ஆனால் இங்கு படுத்தப்போது இது உச்சியாகத் தோன்றததும் சமவெளியாக இருப்பதும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது என்று யோசித்தப்படியே சற்று கண்ணயர்ந்தேன்.
சட்டென்று என்னை யாரோ தட்டி உணர்த்துவது போல தோன்றியது. களைப்பு மிகுதியால் எழுந்துக் கொள்ள சிரமப்பட்டப் போது “டே கண்ணா! கண்ணா! எழும்பு” என்று திலீப் அண்ணன் உரக்கக் கத்தும் குரல் கேட்டது. கண்களைத் திருமிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தேன். என் முன்னால் கையில் ஒரு பில் புத்தகத்துடன் ஒரு நபர் நின்றுக் கொண்டிருந்தார். “விரி ஒரு ஆளுன்னு 120 சாமி” என்றார். நான், போன வருடம் ஐம்பதாகத் தானே இருந்தது என்று அவரிடம் சொன்னப் போது “இல்ல சாமி! இந்த தடவ 120, இருக்கீறிங்கன்ன இருங்க இல்லன்ன கரிமல அடிவாரத்துக்கு போயிடுங்க” என்று பாதி மலையாளத்திலும் எங்களுக்குப் புரிவதற்காக அவருக்கு தெரிந்த தமிழிலுமாகச் சொல்லிக் கொண்டார். அவர் சொல்லி முடித்தக் கணம் நீல நிற தார்ப்பாயின் மேலே மளமளவென மழைத்துளிகள் வந்து மோதும் சத்தம் கேட்டது. இனி வேறு வழியில்லை இவரிடம் பேசியும் பலனில்லை என்று அவர் சொன்னத் தொகையைக் கொடுத்து ரசீது வாங்கிக் கொண்டேன். அப்போது சரவணன் அந்த நபரிடம் “அண்ணா ஒரு அஞ்சு சாய” என்றதும் சுதீஷூம், சதீஷூம் தங்களுக்கும் வேண்டும் என்றனர். “மொத்தமா ஒரு ஒன்பது சாய அடிங்க அண்ணா” என்று எல்லாருக்குமாக நான் சொல்லிக் கொண்டதும். அந்த நபர் ஒரு பத்து மினிட் என்று சொல்லிக் கொண்டு நேராக டீ மாஸ்டரை பார்த்து நடந்தார்.
“டபுள்ளா பணத்த கூட்டிடாங்கன்ன” என்று திலிப் அண்ணனைப் பார்த்து நான் சொன்னதும். அவன் “அவுங்க என்ன பண்ணுவாங்க. நம்மளால சும்ம இந்த மலைய ஏறதுக்கே கழியல. அதுக இவ்வளவு தூரம் சாதனத்த தல சொமட தூக்கிட்டு வராண்டமா” என்றான். “அடுத்தத் தடவ இருநூறு ஆவும்” என்று நிஷாந்து கூறியதும் “அப்போ நம்ம பங்கும் நாலாயிரம் ஆவும்” என்று சொல்லிக் கொண்டே மல்லாந்து படுத்தான் தங்குடு. அப்போது சதீஷ் அண்ணன் ஒரு மூவ் பாட்டிலோடு யாருக்கெல்லாம் மசாஜ் பண்ணனும்? யாருக்கெல்லாம் மசாஜ் பண்ணனும்? என்று கேட்டுக் கொண்டே படுத்திருந்த அனைவர் முன்பாக அங்குமிங்குமாக நடக்கத் தொடங்கினான். எனக்கு பண்ணு அண்ணா, லே சதீஷ் எனக்கு பண்ணுலே என்று கூட்டத்திலிருந்து மாறி மாறி குரல் ஒலிக்க தொடங்கியதும் “எல்லாருக்கும் பண்றேன் எல்லாரும் சேர்ந்து எனக்கு இன்னைக்கு ராத்திரி சாப்பாடு வாங்கி தாங்கன்னு” சதீஷ் அண்ணன் சொன்னதும் எனக்கு பண்ணுங்க எனக்கு பண்ணுலே என்று சொன்னவர்கள் அனைவரும் அமைதியாகிக் கொண்டனர். அதைக் கண்ட சதீஷ் அண்ணன் “ஒரு நேர சாப்பாட்டுக்கு உங்களுக்கு போக்கில்லையாலே” என்று எல்லாரையும் பார்த்துக் கேட்க அனைவரும் கோரஸாக “நீ ஒரு நேரம் திங்கிறதே மூணு நேரம் திங்கிற மாதிரியில்ல சதீஷ்…” என்று அவனை நக்கலடித்துக் கொண்டனர். டீ இன்னும் வந்து சேராததையடுத்து நான் எழுந்து அந்த நபரை தேடினேன். நாங்கள் அங்கு வந்து சேர்ந்த போது இருந்த கூட்டத்தை விட ஏராளமான பக்தர்கள் அந்த விரி முழுவதும் நிறைந்தொழுகினர். அந்த விரி தொடங்கும் இடத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த அந்த நபரை “சேட்டா” என்று நான் உரக்க அழைத்தேன். கூட்ட மிகுதியால் நான் அவரை அழைத்தது அவரது காதில் விழவில்லை என்று நான் புரிந்து கொண்டதும் நேராக அவரை நோக்கி நடந்தேன். அங்கு நின்றுக் கொண்டிருந்த சில பக்தர்களிடம் விரித் தொகையை வசூலித்திக் கொண்டிருந்த அவரிடம் “சாய இன்னும் வரல சேட்டா” என்று சொன்னேன். அவர் சுற்றி முற்றி பார்த்து விட்டு “டா மது டா மது” என்று யாரையோ அழைத்தார். தோசைக் கல்லில் மாவு ஊற்றிக் கொண்டிருந்த மாஸ்டரிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு நபர் வேகமாக எங்களிடம் ஓடி வந்தார். வழுக்கைத் தலையோடும், நரைத்த சட்டையோடும், அழுக்கு வேட்டியோடும், தோளில் சிவப்பு நிற டவ்வலோடும் வந்து நின்ற அந்த நபரிடம் “மது இவருக்கு ஒரு ஒன்பது சாயா கொண்டு கொடுத்தேக்கு” என்றார் அந்த பில் போட்டுக் கொண்டிருந்த நபர். உடனே அவர் “சேட்டா நிங்களு போய் இருக்கு, ஞான் கொண்டு தந்னேக்கும். வேற எந்தெங்கிலும் வேணுமெங்கில் மது ன்னு விளிச்சு பறஞ்சா மதி” என்று என்னிடம் சொல்லிக் கொண்டு வேகமாக டீ மாஸ்டரைப் பார்த்து நடந்தார் மது.
மேடு பள்ளமாக இருந்த அந்த விரிக்குள் வலது பக்கம் கடைசி பகுதியில் தான் நாங்கள் வந்து படுத்துக் கொண்டோம். நான் நடந்து அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த அடுத்த நிமிடம் அண்டா மூடியில் ஒன்பது கண்ணாடி டம்ளர்களை வட்டமாக அடுக்கி வைத்து டீ ஊற்றி கொண்டு வந்து தந்தார் மது. நான் அவரிடமிருந்து ஒவ்வொரு டீ யாக எடுத்து அனைவருக்கும் கொடுத்தப்பின் “மது அண்ணா சாப்பாட்டுன்னு என்ன இருக்கு” என்று கேட்டேன். உடனே “புட்டு – பழம், தோச – சம்மந்தி, சப்பாத்தி-பூரி- கடல, கப்ப – கஞ்சி – பப்படம், புரோட்டா – தக்காளி கறி” என்று வேகமாகச் சொன்னார். மேலும் “எந்து வேணுமோ மது ன்றெடுத்து பறஞ்ச மதி கேட்டோ. இவிட வேணுமெங்கில் இவிட கொண்டு தராம்” நான் “இல்ல வேண்டாம் இங்க கொண்டு தராண்டாம். நாங்க சாப்பிட இடத்தில வந்து சாப்பிட்டுக்கிறோம்” என்றேன். “ஷெரி சாய குடிச்சிட்டு மதுவே ன்னு விளிச்சா மதி. கிளாசு வன்னு எடுக்காம்” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் தோசைக் கல்லைப் பார்த்து நடந்தார் மது அண்ணன்.
அவர் நடந்து சென்ற பின் நான் திரும்பி எங்கள் கூட்டத்தினரைப் பார்த்தேன் வீட்டிலிருந்து வரும் போதே முருகேசன் அண்ணனிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்த வறுத்த மாவினை ஆளுக்கொரு கைப்பிடி எடுத்துச் சாப்பிட்டு கொண்டே அனைவரும் வட்டமாக அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருந்தனர். நானும் அவர்களோடு சென்று இணைந்துக் கொண்டதும் மீண்டும் மளமளவென தார்ப்பாயில் மழைக் கொட்டும் சத்தம் அங்கு கேட்கத் தொடங்கியது. “கொடுங்காட்டுக்குள்ள மல உச்சியில மழயோட இப்படி சாயக் குடிக்க சுகமே வேற இல்ல” என்று தங்குடு சொல்லும் போது “சாய ஒன்னு கூட சொல்லுவோமா” என்று கேட்டான் சரவணன். உடனே தாமதிக்காமல் “மது அண்ணா மது அண்ணா என்று உரக்கக் கத்தினான் மனு” எங்கிருந்தோ ஆவேசமாக ஓடி வந்த மது அண்னன் நேராக எங்கள் அருகே வந்து “குடிச்சு தீந்னோ” என்று கேட்டார். “ஒரு சாய கூட எல்லாருக்கும் வேணும் அண்ணா” என்றான் சரவணன். “ஓ! இப்போ கொண்டு வராம்” என்று ஒன்பது டம்ளர்களையும் பாதிப்பாதியாக அடுக்கி இரண்டு கைகளிலுமாக தூக்கிக் கொண்டு நேராக டீ மாஸ்டரை நோக்கி ஓடினார். அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் ஒன்பது டம்ளர்களில் டீக்களைக் கொண்டு வந்து தந்தார் மது அண்ணன். அப்போது நான் என்னுடையச் செல்போனையும் சார்ஜரையும் தூக்கிக் கொண்டு “சார்ஜ் போட முடியுமா” என்று மது அண்ணனிடம் கேட்டேன். அதற்கு “ஓ பின்னே! நம்மளிடத்து இடம் உண்டல்லோ” என்று சொல்லிக் கொண்டே என்னை அழைத்துக் கொண்டு கல்லாப் பெட்டியைப் பார்த்து நடந்தார். அங்கு இருந்த நபர் கையில் செல்போனுடன் வரும் என்னைக் கண்டதும் “இங்க புள்ளாச்சு சாமி” என்று மேசையின் கீழாக இருந்த சுவிட்ச் போர்டைக் கை நீட்டிக் காட்டினார். அங்கு அத்தனைப் பிளக் பாயின்டும் சார்ஜர்களால் மறைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு திரும்பி நடந்த என்னைக் “குஞ்ஞே…” என்று அழைத்தார் மது அண்ணன். “வா ஞங்கள்ட துணி வைக்குன்ன புரையில் ஒரு கரண்டு உண்டு அவிட இடமுண்டோன்னு நோக்கட்டு” என்று சொல்லிக் கொண்டே கழிவறைக்கு போகிற வழியைப் பார்த்து நடந்தார். இதைக் கண்ட நான் சற்று தயங்கி அங்கேயே நிற்க “ஒன்னும் பேடிக்கண்ட ஆரும் எடுக்கூல” என்று என்னைப் பார்த்துச் சொன்னார் மது அண்ணன். கழிவறைக்கு வலது பக்க ஓரமாக கட்டிப்போட்டிருந்த ஒரு மூங்கில் கம்பில் ஏராளமானத் துணிகள் தொங்கிக் கொண்டு கிடந்தன. அத்துணிகளை ஒதுக்கிக் கொண்டே “ஞங்கள துணிகளா” என்று சொன்னார் மது அண்ணன். துணிகள் தொங்க விடப்பட்டிருந்த கம்பிற்கு மறுபுறம் ஒரு சுவிட்ச் போர்டு தொங்க விடப்பட்டிருந்தது. அதில் சார்ஜ் போடுமாறு என்னிடம் சொல்லி விட்டு “ஆரும் எடுக்கூல பேடிக்கண்ட கேட்டா” என்றார். நான் அங்கு சார்ஜரைக் குத்தி விட்டு அருகில் கிடந்த ஒரு சட்டைப் பாக்கெட்டுக்குள் செல்போனைப் போட்டு விட்டு தெய்வமே யாரும் எடுக்கக் கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே வெளியில் வந்தேன். அப்போது திலீப் அண்ணன் என்னைப் பார்த்து உரக்கக் கத்தினான். அனைவரும் அங்கு சாப்பிட நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தனர்.
“மது அண்ணா! மது அண்ணா!” என்று திலீப் அண்ணன் கத்திக் கொண்டதும் அவர் எங்கிருந்தோ எங்களிடம் ஓடி வந்தார். தோளில் கிடந்த தனது டவ்வலை எடுத்து நாங்கள் அமர்ந்திருந்த டேபிளைச் சுத்தம் செய்து விட்டு யார் யாருக்கு என்னவெல்லாம் வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஒவ்வொருவரும் விதவிதமாகச் சொன்னதை மனதில் குறித்துக் கொண்டு நேராக அடுமனையை நோக்கி ஓடினார். முதலில் கஞ்சி சொன்னவர்களுக்கு கஞ்சி, கப்ப, பப்படம் என்று பரிமாறிக் கொண்டார். பிறகு தோசை சொன்னவர்களுக்கு அதைக் கொண்டு வந்து கொடுத்தார். அப்போது நான் புட்டு வர நேரமாகுமா என்று கேட்டேன். அதற்கு “குஞ்ஞே… ஒரு பத்து நிமிஷம். ஆவி வன்னதும் கொண்டு தராம்” என்று சொல்லிக் கொண்டே புரோட்டா எடுக்க ஓடினார். அதற்குள்ளாகத் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் சாப்பிட்டு முடித்துக் கைகளை நக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் மேலும் தோசை வேண்டுமென்று சொல்ல “ராஜா தோச இட்டோ” என்று மாஸ்டரைப் பார்த்து உரக்கக் கத்தினார் மது அண்ணன். கல்லைச் சுத்தம் செய்து விட்டு மாவினை ஊற்றிக் கொண்டே “தா இப்போ தராம்” என்றார் ராஜன். “குஞ்ஞே…இப்போ தராம்” என்று சொல்லிக் கொண்டே பதிமுகம் பொடி போட்ட வெந்நீரை டம்ளர் நிறைய அனைவருக்கும் ஊற்றிக் கொடுத்தார். அப்போது அடுமனைக்குள் இருந்து “புட்டுன்னு ஆவி வன்னு” என்று உரத்தக் குரல் கேட்கத் தண்ணீர் ஜாடியை மேசை மீது வைத்து விட்டு நேராக அதை எடுத்துக் கொண்டு வர ஓடினார். ஆவி பறந்த புட்டை என் தட்டில் வைத்து விட்டு கல்லாப் பெட்டியருகே தொங்கிக் கொண்டு கிடந்த ஏத்தன் பழத்தில் இரண்டை இழுத்து எடுத்து ஓடிக் கொண்டு வந்து என் தட்டில் வைத்தார். அப்போது கல்லாப் பெட்டியில் இருந்த நபர் அவரை உரக்க அழைக்க “இப்போ வராம் குஞ்ஞே…” என்று எங்களைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே கல்லாப்பெட்டிக்காரைப் பார்த்து நடையைக் கட்டினார். அவர் அவருக்கு வேறு ஏதோ வேலையைக் கொடுத்ததும் எங்கள் அருகே வந்து “அய்யாள் ஒரு பணி தன்னிற்றுண்டு ஞான் அது செய்திட்டு வராம். நிங்கள்க்கு வல்லம் வேணுமெங்கில் ராஜென்றெடுத்து பறஞ்சோ. அவன் கொண்டு வன்னு தரும்” என்று சொல்லிக் கொண்டே சமையற்கட்டின் பின்பக்கமாகச் சென்றார்.
வயிறு நிறையச் சாப்பிட்டு முடித்ததும் ஒவ்வொருவராக எழுந்து கைகழுவச் சென்றோம். நான் கைகழுவி விட்டு நேராக சார்ஜரில் போட்டிருந்த செல்போனை எடுக்க நடந்தேன். அப்போது கைகழுவும் இடத்திற்கு பின்பக்கமாக மது அண்ணல் குரல் கேட்டது. அவரிடம் ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டு எடுக்கலாமென்று அவரது குரல் கேட்ட திசையைப் பார்த்து நடக்கத் தொடங்கினேன். சாப்பிட்டவர்கள் கைகழுவிய கழிவு நீர் வழிந்தோட அங்கு ஒரு பாத்தி வெட்டி வைக்கப்பட்டிருந்தது. நான் அந்த கழிவுநீரில் கால்படாமல் இருக்க வரப்பு வழியே மெதுவாக நடந்து மது அண்ணின் குரல் கேட்ட இடத்தை அடைந்தேன். அவர் வழிந்தோடும் கழிவு நீருக்கு மேல் வெறும் காலில் குந்தி அமர்ந்துக் கொண்டு பாத்திரம் கழிவுக் கொண்டிருந்தார். அவரைப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. அந்த பரிதவிப்புடன் மது அண்ணா என்று அழைத்தேன். உடனே “ஆ… குஞ்ஞே இவிட எந்தினு வன்னு” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நான் செல்போன் எடுக்கும் விவரத்தை அவரிடம் சொன்னதும். பாத்திரம் கழுவ இருந்த நீரில் கையையும், காலையும் கழுவிக் கொண்டு அவரே வந்து செல்போனையும், சார்ஜரையும் எடுத்து என்னிடம் கொண்டு வந்து தந்தார். நான் அவருக்கு நன்றி என்று ஆங்கிலத்தில் சொன்னதும் “ஆம் தேங்ஸ் குஞ்ஞே…” என்று அதை எனக்கே திருப்பிச் சொல்லிவிட்டு மீண்டும் பாத்திரம் கழுவச் சென்றார். நான் அவர் என் கண்ணிலிருந்து மறையும் வரை அப்படியே அவரை ஒருமுறை பார்த்து நின்று விட்டு எங்கள் இடத்திற்கு திரும்பினேன்.
அங்கு சதீஷ் அண்ணன் திலீப் அண்ணனிற்கு மசாஜ் செய்து கொண்டிருந்தான். திலீப் அண்ணனின் தொடையில் சதீஷ் அண்ணன் கைகளால் மசாஜ் செய்யச் செய்ய திலீப் அண்ணன் ககக்க ககக்க ககக்க என்று வாய் திறந்து சிரித்துக் கொண்டான். “எதுக்கு லே மச்சான் சும்மா கிடந்து சிரிக்க” என்று நிஷாந்து கேட்டப் போது “போல மச்சான் கிச்சலம் வருது. கிச்சலம் வருதுன்னு” சொன்னான் திலீப் அண்ணன். கையிலிருந்த மூவினை கால்களிலும், கைகளிலும் நன்றாகப் புரட்டி மசாஜ் செய்து கொண்டிருந்தான் சதீஷ் அண்ணன். இதைக் கண்ட மற்றவர்களும் தங்களுக்கும் மசாஜ் வேண்டும் என்று சதீஷ் அண்ணனிடம் விண்ணப்பித்துக் கொள்ள “ஒவ்வொருவருத்தன வாரேன் சாமி. அவசரப்படாதீங்கோ” என்று கூறினான். அப்போது அங்கு வந்த மது அண்ணன் தன்னிடம் ஒரு மூலிகைத் தைலம் இருக்கிறதென்றும் அதைப் போட்டால் உடம்பு வலி பறந்து போகுமென்றுச் சொல்லி எங்களிடம் “குஞ்ஞே கொண்டு வரட்டே …” என்று கேட்டார். நாங்களும் கொண்டு வாங்க அண்ணா என்று கோரஸாகச் சொல்ல அவர் உடனே ஓடிச் சென்று அந்த மூலிகைத் தைலத்தை எடுத்துக் கொண்டு வந்து தந்தார். “இது அடிபொழியானு” என்று அந்த தைலத்தைப் பற்றி எங்களிடம் அவர் பேசத் தொடங்கியதும் கல்லாப்பெட்டிக்காரர் “மதுவே…” என்று உரக்க அழைத்தார். “தைலமிட்டோ நல்லாதா” என்று சொல்லிக் கொண்டே அடுத்த வேலையைப் பார்க்க ஓடினார். சதீஷ் அண்ணன் அந்த தைலப்புட்டியைத் திறந்து அதிலிருந்து சிறு துளியாக எல்லோரது உடம்பிலும் ஊற்றி நன்றாக தேய்த்து மசாஜ் செய்யத் தொடங்கினான். அத்தனை நேரம் இருந்த களைப்பு கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரது உடம்பிலுமிருந்து மெதுவாக இறங்கத் தொடங்கியது. களைப்பு இறங்கும் அந்த சுகத்திலே யானை ஏதாவது வருமா என்று சரவணன் கேட்டான். அதற்கு திலீப் அண்ணன் “இங்க யான ஒன்னும் வராது லே” என்று சொல்ல “அப்போ வழில யானக் குந்தம் கிடந்தது நீ பாக்கலய” என்றான் தங்குடு. “அது கீழ லே இங்க ஒன்னும் யான வராது” என்று திலீப் அண்ணன் சொல்ல யானை வரும் வராது என்று கூட்டத்தில் மாறிமாறி பேச்சுக்கள் எழுந்தன. விவாதப் போர் முற்றியப் போது “சரி நம்ம மது அண்ணன் கிட்ட கேப்போமென்னு” சதீஷ் அண்ணன் சொல்ல உடனே “மது அண்ணோ! மது அண்ணோ!” என்று உரக்கக் கத்தினான் திலீப் அண்ணன். எங்களுடைய அழைப்பைக் கேட்டு எங்கிருந்தோ ஓடி வந்தார் மது அண்ணன். எங்கள் அருகே வந்ததும் “எந்தோ வேணும் குஞ்ஞே…” என்றார். உடனே திலீப் அண்ணன் “மது அண்ணா உங்க கிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும் அதான் கூப்பிட்டேன்” என்று சொல்லிக் கொண்டு “இங்க யான வரும” என்று கேட்டான். “கரிமல தாவளத்தின்ற அடுத்து வரும். பின்ன வலியான வட்டத்திலு இவிட வரில குஞ்ஞே. அதவா வன்ன நிங்கள்க்கு ஞான் இருக்குன்னு பேடிக் கண்ட கேட்டோ, ஷெரி வரட்டே ஜோலி செய்திலெங்கில் மொதலாளி பறையும்” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து வேகமாக ஓடினார் மது அண்ணன். அவர் சென்றதும் விவாதத்தில் தான் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை அங்கு பிரகடனப்படுத்தினான் திலீப் அண்ணன். நான் மூங்கில் கம்புகளில் கட்டி வைத்திருந்த நீல நிற தார்ப்பாயைப் பார்த்தவாறே மது அண்ணன் சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தேன். அப்போது நேரமாகி விட்டது என்று சொல்லி அனைத்து டியூப் லைட்களையும் அணைத்தார் கல்லாப்பெட்டிக்காரர். விரிக்குள் இருள் சூழ்ந்ததும் ஒருமுறை தலை உயர்த்தி விரி முழுவதும் பார்த்துக் கொண்டேன். அடுப்பில் எரிந்துக் கொண்டிருந்த நெருப்பு அடுமனைக்குள் நிற்கும் மது அண்ணனை வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்த இருட்டில் நிற்கும் அவரைப் பார்த்தவாறே கண்ணயர்ந்துக் கொண்டேன்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த என்னை வயிற்றுக் கோளாறு மெல்லத் தட்டி எழுப்பியது. வயிறு கலங்க கலங்க தூக்கம் எங்கோ களைந்து போனது. செல்போனை எடுத்து டார்ச் லைட்டைப் போட்டு பக்கத்தில் படுத்திருந்த அனைவரையும் பார்த்தேன். அவர்களது குறட்டை ஒலியில் இவர்கள் யாரும் கூட வரமாட்டார்கள் நாம் தனியே தான் செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு எழுந்து நடக்கத் தொடங்கினேன். செல்போன் வெளிச்சத்தில் தட்டு தடுமாறிக் கழிவறைக்கு வந்து பார்த்தேன். அங்கு தண்ணீர் இல்லாமல் இருந்ததையடுத்து என்ன செய்யலாமென்று யோசித்துக் கொண்டே கழிவறைக்குளிருந்து வெளியில் வந்தேன். அப்போது அடுப்பில் எரிந்த தீ வெளிச்சம் என் கண்களில் வந்து விழுந்தது. அவ்வெளிச்சத்தைக் கண்டு மது அண்ணனின் ஞாபகம் வர நேராக அவரைத் தேடி நடந்தேன். செல்போன் டார்ச் வெளிச்சத்தை வைத்து விரி முழுவதும் படுத்திருந்த பக்தர்களை மிதிக்காமல் மெதுவாக அடுப்புப் பகுதிக்கு வந்து சேர்ந்தேன். தீ வெளிச்சத்தில் அடுமனைச் சுற்றித் தேடிப்பார்த்தேன். அங்கு மது அண்ணனைக் காணததால் ஏமாற்றம் கொண்டு திரும்பி நடக்கத் தொடங்கினேன். அப்போது சற்று தூரத்தில் இருந்து கையில் சாப்பாட்டு தட்டுடன் “குஞ்ஞே…” என்று அழைத்துக் கொண்டே மது அண்ணன் என்னருகில் ஓடி வந்தார். அடுப்பின் வெளிச்சம் எங்கள் இருவரது முகத்தையும் நன்றாகக் காட்டியது. அவரது கையில் இருந்த தட்டில் மீதம் சாப்பிட வேண்டிய உணவு அப்படியே இருந்தது. நான் அதைக் கவனித்துக் கொண்டே “பாத்ரும்ல தண்ணி இல்ல அதான் தண்ணி கிடைக்குமான்னு” கேட்டதும் சாப்பிட்டத் தட்டை அப்படியே வைத்து விட்டு “வா குஞ்ஞே…” என்று என்னை அழைத்தார். நான் “இல்ல நீங்க சாப்பிட்டுட்டு வந்தா போதும்ன்னு” எவ்வளவோச் சொல்லியும் கேட்காமல் வலுக்கட்டாயமாக என்னை அழைத்துக் கொண்டு வந்தார். “குஞ்ஞே..நீ போய் இரிக்கு ஞான் வெள்ளம் கொண்டு வராமென்று” சொல்லிக் கொண்டே அடுமனைக்குள் இருந்து ஒரு குடம் எடுத்துக் கொண்டு எங்கோ சென்றார். நான் கழிவறைக்குள் சென்று தார்ப்பாய் கதவைப் பிடித்துக் கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தில் “குஞ்ஞே வெள்ளம் கொண்டு வச்சிற்றுண்டு. வேணுமெங்கில் பற கேட்டா” என்று சொல்லிக் கொண்டு சென்றார். நான் அந்த தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்த அவசரத்தை முடித்துக் கொண்டேன். கதவாகத் தொங்கவிடப்பட்டிருந்த தார்ப்பாயை விலக்கி வெளியில் வந்தேன். தூரத்தில் மது அண்ணன் அங்கேயே நின்று கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்ததும் “அய்யோ நீங்க சாப்பிட போய்ந்திருக்கலாமே” என்று சொல்ல “இல்ல குஞ்ஞினு வெள்ளம் வேணுமெங்கில் அதோன்ட இவிட நின்ன” என்று சொல்லி விட்டு “வெள்ளம் மதியோ” என்றார். நான் “ஆம் தண்ணி போதும் போதும்” என்று உரக்கக் தலையாட்டினேன். உடனே அவர் “ஆம் அப்போ வரட்டே” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார். அந்த பாவத்தை சாப்பிட விடாமல் செய்த என்னை நானே திட்டிக் கொண்டு நேராக வந்து படுத்தேன். நீண்ட நேரம் கண்களில் தூக்கம் வரவே இல்லை. திலீப் அண்ணின் குறட்டை ஒலியும் அதற்கு போட்டியாக சரவணனின் குறட்டை ஒலியும் அங்கு கேட்டு கொண்டே இருந்தது. ஏதோ ஒரு சிந்தனை என்னைப் பற்றிக் கொண்டது. உண்மையில் மனிதர்கள் யார். ஒரு மனிதனை எந்த வகையில் மனிதர் என்று அடையாளப்படுத்திக் கொள்வது. மனித இனம் என்பதால் அனைவரும் மனிதராவோமா ? ஏன் நான் கூட என்னை ஒரு மனிதன் என்று சொல்ல முடியுமா ? இப்படி என் சுயபரிசோதனைக்கானக் கேள்விகள் என் சுயத்தையே என்னை திருப்பி பார்க்க வைத்தது. புரண்டு படுத்தும், நிமிர்ந்து படுத்தும் என்னை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் இது சாமானியனின் சக்திக்கு எட்டாத தத்துவோமோ ? என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆனால் மது அண்ணன் வெறும் ஒரு சாமானியன் இல்லையென்று மட்டும் புரிந்துக் கொண்டேன்.
எப்போது தூங்கினேன் என்று அறியவில்லை. திலீப் அண்ணன் என்னைத் தட்டி எழுப்பிய பிறகே விழித்துக் கொண்டேன். நீல நிற தார்ப்பாயின் வெளிச்சம் பளிச்சென்று என் கண்களில் வந்து விழுந்தது. திலீப் அண்ணன் “போகாண்டமா மணி எட்டாவுது” என்றான். எழுந்து பார்த்தப் போது விரி காலியாக இருந்தது. அனைத்து பக்தர்களும் விடியற்காலையிலையே புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் நாம் தான் ரொம்ப தாமதித்து விட்டோம் என்றும் நிஷாந்து சொன்னான். நான் விரி முழுவதும் மது அண்ணனைத் தேடிப்பார்த்தேன் அவரை அங்கு காணவில்லை. பாத்திரம் கழுவும் பக்கமும் சென்று பார்த்தேன் அங்கும் அவரைக் காணவில்லை. அப்போது திலீப் அண்ணன் “வா கிளம்பலாமென்று” என்னைப் பார்த்து உரக்கக் கத்திக் கொள்ள ஓடிச் சென்று என் பெட்ஷீட்டையும் இரு முடியையும் வாங்கிக் கொண்டேன். கூட்டத்தினர் அனைவரது இரு முடியையும் எடுத்துக் கொடுத்தப் பின் தன்னுடைய இரு முடியையும் எடுத்துக் கொண்டு சரணகோஷம் முழங்கினான் திலீப் அண்ணன். அக்கோஷத்தை எழுப்பியவாறே அவன் முன் நடக்க மற்றவர்கள் அவனைப் பின் தொடர்ந்து நடக்கத் தொடங்கினர். நான் ஒரு முறை கூட விரி முழுவதும் மது அண்ணனைத் தேடினேன். ஆனால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அவர எங்கும் தென்படவில்லை. கடைசியாக ஒருமுறை அவரைப் பார்க்க முடியவில்லையே என்ற வருத்ததுடனே அவரது நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டு கரிமலையை இறங்கத் தொடங்கினேன்.
நேற்று வடிந்த அச்சிறு இரவிற்குள்ளாக ஒரு மனிதர் நம் மனதிற்குள் நீங்காத ஓர் இடத்தைப் பிடித்துள்ளார் என்றால் அதற்கு சக மனிதர் மேல் அம்மனிதர் காட்டிய கரிசனம் தான் காரணமாக இருக்க முடியும் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன். அவருக்கு வேண்டுமானால் தான் வாங்கும் கூலிக்கு குறைவாகவே வேலை செய்து கொள்ள முடியும். அதை விடுத்து, எங்களை அத்தனை அன்போடும், நாங்கள் கேட்ட எல்லாவற்றையும் உடனுக்குடன் தந்து உதவியும் ஓரு விருந்தாளி போல அவர் பார்த்துக் கொண்ட விதம் உண்மையில் அவர் மேல் ஒரு மரியாதையை எங்களுக்குள் உருவாக்கியது. கடைசியாக அவரைப் பார்த்து ஒரு நன்றி கூற கூட முடியவில்லையே என்று நினைத்து மெதுவாக நடந்து கொண்டிருந்த என்னை பார்த்துக் “கொஞ்சம் ஸ்பீடா வா டே” என்று கத்தினான் திலீப் அண்ணன். மற்றவர்கள் அனைவரும் முன்னால் சென்று விட்டதை உணர்ந்த நான் சற்று வேகம் கூட்டி நடந்து திலீப் அண்ணோடு சென்று சேர்ந்துக் கொண்டேன். அப்போது திலீப் அண்ணன் “என்ன யோசித்திட்டு நடக்க” என்று கேட்டான். “நம்ம மது அண்ணனப் பத்தி தான்” என்று நான் சொன்னதும் “ஆமா பாத்தியா, அவர காலைல அங்க பாக்கவே இல்ல. ஒன்னு பாத்து போயிட்டு வாரோம் அண்ணான்னு சொல்லியிருக்கலாம்” என்றான் திலீப் அண்ணன். அதற்கு நான் “நான் காலைல அங்க மொத்தம் தேடிப்பார்த்தேன் ஆள காணல” என்றேன். “ஒருவேள வேல முடிஞ்சு போயிருக்கலாம்” என்று திலீப் அண்ணன் சொன்னப் போது “எங்க போவ சீசன் மொத்தம் இங்க தான் தங்குவாங்க” என்று கூறினேன். “சரி விடு அடுத்தத் தடவ வரும் போது பார்த்துக்கலாம்” என்று திலீப் அண்ணன் சொன்ன மறு கணம். தூரத்தில் ஒரு நபர் பெரிய சாக்கு பையைத் தலையில் வைத்துக் கஷ்டப்பட்டு சுமந்து கொண்டு மூச்சிரைக்க கரிமலை ஏற்றத்தை நடந்து வந்துக் கொண்டிருந்தார். அவரைக் காண்பதற்கு மது அண்ணன் போல் இல்லையா என்று திலீப் அண்ணனிடம் சொல்ல அவனும் அதை உறுதிப்படுத்திக் கொண்டான். உடனே நாங்கள் இருமுடியை பிடித்துக் கொண்டு வேகமாக கீழிறங்கி மது அண்ணன் நடந்து வரும் இடத்திற்கு சென்று நின்றோம். எங்களைக் கண்டதும் மது அண்ணன் அந்த சுமடோடு தலையை சற்று உயர்த்தி பார்த்து விட்டு “குஞ்ஞே…” என்று அழைத்துக்கொண்டு சாக்கு பையைத் தூக்கி கீழே இறக்கி வைத்தார். “காலத்தே மல இறங்கியோ” என்று அவர் கேட்டதும், நான் “உங்க கிட்ட கிளம்புறோம்ன்னு ஒன்னு சொல்ல விரி மொத்தம் தேடினேன் எங்கையும் காணல” என்றேன். “அது வலியான வட்டத்திலு லோடு எடுக்கான் போயி. இது மூனாமத்த லோடு” என்று அவர் சொல்லும் போதே நான் இடைமறித்து “என்னது மூனாத்த லோட” என்றேன். “ஓ..குஞ்ஞே…இனியும் ஒன்னு இருக்கனு” என்று அசால்ட்டாக கூறினார். “எப்படி இப்படி லோடு வச்சிட்டு மல ஏறுறீங்க. எங்களால சும்மா நடக்கவே முடியல” என்று திலீப் அண்ணன் சொன்னதும் “ஆ.. அது ஞான் ஒருபாடு வர்ஷமா செய்யுன்னதல்லே. கண்ட என்ற தல வர பாறையாயி” என்று தலையைக் குனிந்து காட்டி சிரித்துக் கொண்டார் மது அண்ணன். “ஷெரி குஞ்ஞே…. நடக்கட்டா மொதலாளி தேடும்” என்று அவர் சொன்னதும் நான் “அண்ணா ஒரு மினிட்” என்று சொல்லி தோள் பைக்குள் இருந்து ஒரு புது கருப்பு நிற வேட்டி ஒன்றை எடுத்து அவர் கையில் கொடுத்தேன். முதலில் “அய்யோ குஞ்ஞே வேண்ட” என்று சொல்லி வாங்க மறுத்தவர் கடைசியில் எங்கள் நிர்ப்பந்ததிற்கு இணங்கி வாங்கிக் கொண்டார். இரு கைகளையும் ஏந்தி நான் கொடுத்த வேட்டியை வாங்கிக் கொண்டவர் அதை அப்படியே தன்னுடைய கண்களில் வைத்து வணங்கி விட்டு “வளர நன்னி குஞ்ஞே…” என்று கூறிக் கொண்டார். பிறகு அவ்வேட்டியை தன்னுடைய தலையில் எடுத்து வைத்து விட்டு அதன் மேல் அந்த சாக்கு பையைத் தூக்கி வைத்துக் கொண்டு எங்களிடமிருந்து விடைப் பெற்று மலை உச்சியைப் பார்த்து நடந்தார். அவர் எங்கள் கண்ணிலிருந்து மறையும் வரை அவரைப் பார்த்து அப்படியே நின்றோம். பின்பு திலீப் அண்ணன் அழைக்கப் பம்பையைப் பார்த்து நடக்கத் தொடங்கினோம்.
கரிமலை அடிவாரத்தை அடைந்ததும் நான் திரும்பி கண்ணுக்கெட்டும் தூரம் வரை இருந்த மலை உச்சியை ஒருமுறை பார்த்துக் கொண்டேன். தூரத்தில் மலை உச்சி முகடின் மேல் மது அண்ணன் நிற்பதாக ஒரு கணம் எனக்கு தோன்றியது. மனித உயரம் என்பது பண்பால் வருவதே ஒழிய பணத்தால் இல்லை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பம்பையை நோக்கி நடந்தேன். பம்பைக்கு வந்து சேர்ந்ததும் இரு முடியை ஒரு இடத்தில் வைத்து விட்டு அனைவரும் குளிக்கச் சென்றோம். நதிக்குள் அவிழ்த்துப் போடப்பட்டிருந்த வேட்டிகள் அனைத்தும் அங்கிருந்து எடுத்து பம்பை ஆற்றின் கரையோரம் குவித்து போடப்பட்டிருந்தது. மேல்மட்டத்தில் கிடந்த அந்த அத்தனை வேட்டிகளும் கறுப்பு நிறமாகவே இருந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
