ஒளிரும் ஒரு நதி

ஒரு வீணை
தன் அலங்காரங்களை
அவிழ்த்து வைத்து விட்டு
ஒற்றை உடையில்
நீராட
கிளம்பிவிட்டதைப்போல.

பூஜை அறையின்
இடப்புற மூலையில்.
அன்று போலவே
சுவரில் சாய்ந்து நிற்கிறது
பளபளக்கும்
தேகம் கொண்ட
தம்பூரா.

செவ்வந்தி மாலை
அணிவித்த படத்தில்
தன் மடியில்
வீணையை ஏந்திக்கொண்டிருக்கும்
சரஸ்வதியின் வசீகரத்திற்கு அருகில்.

அதிர்ந்து எழுகிறது
முதல் அலை.
ஒருகாலத்தில்
எனக்கே சொந்தமானது என்பதை
நான் மறந்துவிட்ட ஒரு வீட்டின் கதவு
மெல்ல திறப்பதைப் போல.
மெல்லிய ஒரு ஒலிநூல்
அறையிலிருந்து வெளியேறி வந்து
என்னை கடந்து நீள்கிறது.
ஆண்டுகளைக் கடந்து.
அளக்கக் கற்றுக்கொள்ளாத
தூரங்களை கடந்து.

ஒரு நொடியில்
திடீரென
பெயரிட முடியாத
பல விஷயங்களால் நிரம்புகிறது
என் அருகாமை.
அந்த இழையின் பின்னால்
நீண்டு செல்லும் மினுமினுப்பு.
ஒன்றாகி விட்ட சுவாசங்களின் உள்ளே
எழுந்து அடங்கி தோன்றி மறையும்
ஒளித்துகள்கள்.
அது எனக்கு மாலை நேர
ஆற்றின் கரையை நினைவூட்டுகிறது.
சிறிய அசைவினால்
ஒரே பிரதிபலிப்பு
நீர்ப்பரப்பின் மேல்
பலவாறாக மாறுவதை
பார்த்துக்கொண்டு இருப்பதைப் போல.

நான் ஒரு மீட்டலை கேட்கிறேன்.
அதன் உள்ளே ஒளிந்து மறைந்து எழும்
இன்னொரு ஸ்வரம்.
அதன் உள்ளே இன்னொன்று,
மேலும் ஒன்று.
அந்த ஒலி ஒருபோதும்
அசைவற்றது அல்ல.
அது நடுங்குகிறது, அலைகிறது.
திரும்பி வருகிறது.
நான் சுவாசத்துடன் இருப்பது
எவ்வளவு நிச்சயமோ
அதைப்போல.
மூன்று புள்ளிக்குள்
மடக்கி வைக்கப்பட்ட
முழு வானம் ஒன்று
விரிகிறது என் முன்.
எவ்வளவு விசித்திரம் –
இவ்வுலகில் ஒன்று
தன்னை சாஸ்வதமாக்கி கொள்வது
ஒலிப்பதன் மூலம் அல்ல,
நீடித்திருப்பதன் மூலம்.

தம்பூரா
ஒரு கதையை சொல்வதில்லை.
அது ஒரு இடத்தை உருவாக்குகிறது.
அதன் இனிமையில் மயங்கி
பாடல்கள்
தங்களையே
நினைவுகூரத் தொடங்குகின்றன.

இடைவிடாத அதன் அதிர்வில்
பூஜை பொருள்களின்
மணத்தை கேட்கிறேன்.
மௌனமடைந்த குரல்களைக் கேட்கிறேன்.
செவ்வந்தி மாலை அணிவித்த
படத்திலிருந்து வெளியேறி வந்து
சற்றுமுன் பூத்த வியர்வையுடன்
கற்பூரம் ஏற்றிய தட்டை நீட்டும்
உன் கைகளை பார்க்கிறேன்.
அந்த பின் மதியத்தின் கூடலில்
அத்வைத மோட்சம் அடைந்த
நம் இருவரின் பொருட்டும்,
மொட்டை மாடி நிழலில்
கரையும் காகங்களின் குரலில்
வெயிலை கேட்கிறேன்.

ஏக்கம் துயரமாக மாறுவதற்கு முன்
அதன் வடிவத்தைக் கேட்கிறேன்.
வருகைகளின் வெம்மையைக் கேட்கிறேன்.
பிரிவுகளின் வலியைக் கேட்கிறேன்.
அமைதி மௌனமாக மாறுவதற்கு முன்
அதன் முகத்தைக் கேட்கிறேன்.
இன்பத்தின் மெல்லிய வாதை ஒன்று
எனை எங்கோ இழுத்துச்செல்கிறது.
மேலும் எங்கோ
சுற்றிச் சுழன்று
ஒத்திசையும் அலைகளின் நடுவே,
தொலைதூர நட்சத்திரங்களைப் போல
உயர்ந்து தாழும் அவற்றின் இடையில்,
நான் என்னைக் கண்டுகொள்கிறேன்.
இசையை விடவும்
மேலான ஒன்றை
கேட்டுக்கொண்டிருப்பவனாக.
ஒரு கணம்,
உலகம் தன் திண்மைகளை
எல்லாம் இழந்து
மேலும் ஒளிர்வாதாகவும் தோன்றுகிறது.
என்னை சூழ்ந்திருக்கும் சகலமும்
வெள்ளத்தின் பெருக்கில்
அடித்துச்செல்லப்படும்போது –

நான் அறிவதும்
அறியப்படுவதும்
அனுபவமும்
அனுபவம் என்று ஆவதும்
அனைத்தும் ஒருமித்து
ஒன்றாகிய
ஒன்றேயென,

என்னையும்
எல்லாவற்றையும்
தன் முதுகில் ஏற்றி கொண்டு,
நீண்டு
முடிவற்று
பிரம்மாண்டமாய்
நெளிந்து செல்லும்,

ஒளிரும்
ஒரு நதி.


Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.