முடிவிலி

எலியாஸ் பெர்க் இளமையாக இருந்த அந்த நாட்களில், வரலாறு இன்னும் காகிதங்களின் ஆளுகைக்குள்தான் ஒடுங்கியிருந்தது.

உளுத்துப்போன கடிதங்களிலும், அடிக்குறிப்புகளிலும், இறந்துபோன மனிதர்கள் புத்தக ஓரங்களில் கிறுக்கிச் சென்ற குறிப்புகளிலும் அது உயிர்வாழ்ந்தது. பாசி தின்ற கல்வெட்டுகளிலும், ஆற்றுப்படுகைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழங்கால நாணயங்களிலும் அது உறைந்திருந்தது. காப்பகங்களை விட்டு வெளியேறிய பிறகும் நீண்ட நேரம் சட்டைக் கைகளில் ஒட்டிக்கொண்டிருக்குமே நூலகத் தூசியின் வாசனை, அதிலும் வரலாறு கலந்திருந்தது. அந்தத் தூசியை அவர் ஆழமாக நேசித்தார்; ஆனால், அந்தத் தீராப் பற்றை அவர் ஒருபோதும் வெளியில் ஒப்புக்கொண்டதில்லை. மனித வாழ்வின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்கு அந்தத் தூசியை விடப் பொருத்தமான சூழல் வேறொன்றும் இருக்க முடியாது என்றே அவருக்குத் தோன்றியது. அழிந்துபோன வாதங்கள், மறக்கப்பட்ட சடங்குகள், வரித் தகராறுகள், காதல் விவகாரங்கள், பஞ்சங்கள், பேரரசுகள்… மற்றும் பெயர் தெரியாத எழுத்தர்களின் ஆழமான பொறுமையின் மெல்லிய எஞ்சிய சாட்சியமாகவே அந்தத் தூசி அவருக்குக் காட்சியளித்தது.

 அதன் பிறகுதான் அந்த வரலாற்றுக் காப்பகம் கண்டறியப்பட்டது; வரலாறும் கண்ணுக்குப் புலப்படத் தொடங்கியது.ஆனால், அதை ஒரு அற்புதம் என்று யாரும் கொண்டாடவில்லை. அற்புதங்கள் எல்லாம் முந்தைய நூற்றாண்டோடு முடிந்துபோயிருந்தன. அதற்குப் பதிலாக, அவர்கள் அதை ஒரு புல நிகழ்வு, ஒரு தகவல் நிலைத்தன்மை,  எஞ்சிய பகுதி என்றெல்லாம் அழைத்தார்கள். இயற்பியலாளர்கள் தங்களுக்கு ஆறுதல் தரும் கலைச்சொற்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அரசாங்கங்களோ தங்களது நிதி ஆதாரங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் சொற்களைப் உபயோகித்தன. ஆனால் பொதுமக்களோ, தங்களுக்குள்ள அசாத்தியத் திறமையால் அந்தப் பயங்கரமான விஷயத்தை தங்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்றாக மாற்றிக்கொண்டு, அதற்கு எளிமையாக நினைவுகூருதல் என்று பெயரிட்டார்கள்.

சிலரால் மட்டும்தான் அதற்குள் நுழைய முடிந்தது. பெரும்பாலானோரின் மனங்கள் அந்தக் கருவிகளோடு இணைக்கப்பட்டபோது, வெறும் இரைச்சலைத் தவிர வேறொன்றையும் வெளிப்படுத்தவில்லை. சிறுவயது படுக்கை அறைகள், பழைய பாடல்கள், மனக்கவலைகள், அந்தரங்க நினைவுகள், விளம்பரங்கள், திரைப்படங்களின் துண்டுக் காட்சிகள்… அவ்வளவுதான். ஆனால் ஒருசில அபூர்வமான மனங்களால் மட்டும் அவை அசாத்தியக் கட்டுப்பாடானவையாகவோ அல்லது யாராலும் புரிந்துகொள்ள முடியாதபடி சிதைவுற்றவையாகவோ இருக்கலாம். தங்கள் சொந்த நினைவுகளைக் கடந்து சென்று, இதுவரை எந்தவொரு மனிதனும் நேரில் கண்டிராத வரலாற்று நிகழ்வுகளைச் சென்றடைய முடிந்தது. பிரபஞ்சம் எதையுமே முழுமையாகக் கைவிடுவதில்லை என்ற தகவல் அழியா விதியின் நுண்வடிவமே அது. ஒவ்வொரு ஒளிரும் கணமும், மனித அகத்தின் ஆழத்தில் நிகழும் ஒரு மெல்லிய அசைவும் கால-வெளிப் பெருக்கில் ஒருபோதும் அழியாத நுண்பதிவுகளை வடித்தபடியே இருக்கின்றன. அந்தக் கருவிகள் மனிதனைக் காலத்தின் பின்னோக்கித் தள்ளிவிடவில்லை; மாறாக, மூளையின் நரம்பியல் அலைவரிசையைப் பிரபஞ்சத்தின் ஆதி அதிர்வுகளுடன் ஒத்திசைய வைத்தன. ஒரு தொல்பழங்காலக் குவாண்டம் ஏற்பியைப் போல, எலியாஸின் அகம் மானுடப் பொது நினைவின் ஆழத்தில் இறங்கி, பிரபஞ்சத்தின் பெருநினைவிலிருந்து அந்தத் துளிகளைப் பிரித்தெடுத்தது.

அவர்கள் ஆதி நகரங்களை மேலிருந்து பார்த்தார்கள்; மறைந்துபோன சமவெளிகளில் விலங்கினங்கள் கூட்டமாக இடம்பெயர்வதைக் கண்டார்கள். பாம்பே நகரத்தின் இறுதிநாளை நெருப்பின்றிக் கண்டார்கள். அங்கே பால்கனிகளில் துணிகள் காய்ந்து கொண்டிருந்தன, ஒரு சிறுவன் தெருவில் ஒரு நாயைத் துரத்திக் கொண்டிருந்தான். அலைக்சாண்ட்ரியா நூலகம் எரிந்து சாம்பலாவதை அல்ல, அது இயங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். அந்த நூலகத்தில் களைப்படைந்த ஒரு அறிஞர் தன் கண்களைத் தேய்த்துக் கொண்டிருந்தார், ஓர் எழுத்தர் நாணல் பேனாவைச் சீவிக் கொண்டிருந்தார், ஒரு பெண் தவறாக நகலெடுக்கப்பட்ட வரிக்காக அவரிடம் விவாதித்துக் கொண்டிருந்தாள். அதற்குப் பிறகு, வரலாற்றாசிரியர்கள் ஒரே நேரத்தில் சக்தி வாய்ந்தவர்களாகவும், அதே சமயம் தேவையற்றவர்களாகவும் போனார்கள்.

அறுபத்தொன்பது வயதிலும், எலியாஸ் மனித தொல்பழங்காலத் துறையிலேயே  நீடித்திருந்தார்; இப்போது அந்தப் பெயரே ஒருவித சங்கடத்தைத் தருவதாக மாறியிருந்தாலும் கூட. இளவட்ட ஆராய்ச்சியாளர்கள் மொழிகளை ஆழமாகக் கற்றுக்கொள்ள முனையவில்லை; ஏனெனில், இலக்கணத்திற்கு முன்பாகவே மனிதர்களின் அக நோக்கத்தை அந்த வரலாற்றுக் காப்பகம் மொழிபெயர்த்துத் தந்துவிட்டது. அவர்கள் காலக்கணிப்பைப் பற்றி விவாதித்து மல்லுக்கட்டவில்லை; ஏனெனில், கருவிகளே நிகழ்வுகளின் வரிசையைத் துல்லியமாகக் காட்டிவிட்டன. அவர்களுக்குஅநிச்சயங்களின் மீது காதலோ ஈர்ப்போ இருக்கவில்லை; எலியாஸின் பார்வையில், அதுதான் அவர்களின் உண்மையான இழப்பு. இறந்தவர்கள் அனைவரும் ஏதோ தொழில்நுட்பக் கலைஞர்களுக்காகத்தான் இத்தனை காலம் பொறுமையுடன் காத்துக் கிடந்தது போல, கடந்த காலத்தை அவர்கள் எந்தவொரு கறையுமின்றி சுத்தமாக மீட்டெடுக்கவே விரும்பினார்கள்.இளவட்ட ஆய்வாளர்கள் அல்காரிதம்களைக் கொண்டு, மீட்டெடுக்கப்பட்ட நினைவுகளின் விளிம்புகளில் இருந்த மானுட நடுக்கங்களையும் இரைச்சல்களையும் துடைத்தெறிந்து வழவழப்பாக்கினார்கள். ஒரு போர்க்களத்து வீரனின் நினைவில் எஞ்சியிருக்கும் மரண பயத்தின் மங்கலான காட்சிகளை, செயற்கையான தரவுச் சீரமைப்பு மூலம் சீராக்கி, ஈட்டிகளைக் கூர்மைப்படுத்திக் காட்டினார்கள். அவர்களுக்கு அநிச்சயங்களற்ற, தெளிவான உயர்-வரையறையின் மூலம் கடந்த காலம் தேவைப்பட்டது. ஆனால் எலியாஸோ, அந்தத் தரவுச் சிதைவுகளிலும் பிழைகளிலும்தான் வரலாற்றின் அசல் முகவரி ஒளிந்திருக்கிறது என்பதைத் தெரிந்திருந்தார். எலியாஸ் இந்த மீட்டெடுப்பை சந்தேகக் கண் கொண்டே பார்த்தார்.

நினைவில் கொள்ளப்படும் ஒவ்வொரு விஷயமும், அது உண்மையாகவே இருக்கும் பட்சத்திலும் கூட, அதை நாம் நெருங்கி அணுகும் கணத்திலேயே தன் தன்மையில் சற்றே மாறிவிடுகிறது.

குளிர்கால மாலைப் பொழுதுகளில், மற்றவர்கள் அனைவரும் கிளம்பிய பிறகு, அவர் அந்த மீட்டெடுப்பு அறையில் தனியாக அமர்ந்து, இழந்துபோன காலத்தின் துண்டுகள் தன் இமைகளுக்குப் பின்னால் திரள்வதைக் கவனிப்பார். அவர் விடியற்கால பாபிலோனைப் பார்த்திருக்கிறார்; அப்போது பேரரசாக இல்லை, ஈாரமான செங்கற்களாக, சுடப்படும் ரொட்டியின் புகையாக, கழுதைகளாக, ஈக்களாக. அவர் ஒரு புதிய கற்காலக் குடிலுக்குள் நின்று, ஒரு குழந்தையின் காய்ச்சல் தகிக்கும் மூச்சுக்காற்றை உணர்ந்திருக்கிறார். குகை ஓவியன் ஒருவன் சுவற்றின் முன்னே கையை உயர்த்தியபடி, எந்த விலங்கை வரைவது என்று இன்னும் தீர்மானிக்க முடியாமல் ஒரு கணம் தயங்கி நிற்பதைக் கண்டிருக்கிறார். இத்தகைய தருணங்கள் போர்களை விடவும் அவரைப் பெருமளவில் உலுக்கின. போர்கள், ஒருமுறை நேரில் பார்த்துவிட்டால், மிக அருவருப்பானவையாகத் தோன்றிவிடுகின்றன. மனிதர்கள் எல்லா இடங்களிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான விஷயங்களைக் விவாதித்துக்கொண்டு மடிகிறார்கள். ஆனால், கலை பிறப்பதற்கு முன்னால் ஒரு கை தயங்கி நிற்கும் அந்தக் கணம் அதுதான் வரலாறு வரலாறாக மாறுவதற்கு முந்தைய உன்னத நிலை.

அவருடைய சக ஊழியர்கள் அவரை வியந்துதான் பார்த்தார்கள், ஆனால் அந்த வியப்பு, இனி இவரால் எந்தப் பயனும் இல்லை என்று ஒதுக்கி வைக்கப்படும் மனிதர்களுக்குக் கொடுக்கப்படும் ஒருவித எச்சரிக்கையான மரியாதையைப் போன்றது. அவர் துல்லியமானவர், சாதுவானவர், அதே சமயம் மற்றவர்களுக்கு அசெளகரியம் தருபவர். அவர்களின் மொழியை அவர் திருத்தினார். நாடகத்தனமான மறுஉருவாக்கங்களை அவர் எதிர்த்தார். காப்பகம் கடந்த காலத்தை சேமித்து வைக்கிறது என்று சொல்வதை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

“சேமிப்பு என்பது இயந்திரங்களுக்கானது,” என்பார் அவர்.

 “இந்தக் காப்பகம் ஒரு கிடங்கைப் போலச் செயல்படுவதில்லை, மாறாக அது ஒரு வடுவைப் போலச் செயல்படுகிறது.” என்றார்.

அவர் எதை உத்தேசித்து அப்படிச் சொன்னார் என்று யாருக்கும் புரியவில்லை, காலப்போக்கில் யாரும் அதைக் கேட்கவும் இல்லை.

முப்பத்தியோரு வருடங்களாக எலியாஸ் காலத்திற்குப் பின்னோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார்.

துவக்கத்தில் நாகரிகங்களின் வழியே, பளிங்குக்கற்கள் தோன்றுவதற்கு முந்தைய ரோம், பிரமிடுகள் எழுவதற்கு முந்தைய எகிப்து, அரசர்கள் உருவாவதற்கு முந்தைய நதிக்கரை குடியிருப்புகள். பின்னர், ஒட்டுமொத்த ஜீவராசிகளின் வழியே: வரலாற்றுக்கு முந்தைய வெப்பமான மழையில் மூச்சுவிடும் காடுகள், கடல் தளத்தைக் கிளறிக்கொண்டிருக்கும் ட்ரைலோபைட்டுகள், இளஞ்சூரியனின் கதிர்களுக்குக் கீழ் ஒளிரும் பாக்டீரியா படலங்கள். இறுதியாக அவர் உயிரியலையும் கடந்து, பிரம்மாண்டம் என்ற சொல்லே தன் பொருளை இழந்துபோகும் அளவிற்கான ஒரு எல்லையற்ற பேரண்டப் பெருவெளியில் நுழைந்தார். நட்சத்திரங்கள் சுடர்விடத் தொடங்கின. ஹைட்ரஜன் வாயுக்கள் திரண்டன. அந்தப் பேரிருளைக் கிழித்துக்கொண்டு ஆதி ஒளி பிரசவித்தது.

அவருடைய இந்தத் நிதானத்திற்காகவே அவர் புகழ்பெற்றார். மற்றவர்கள் அங்கிருந்து திரும்பும்போது அழுதுகொண்டோ, நடுங்கிக்கொண்டோ, ஏதோ தீர்க்கதரிசிகளைப் போலவோ வருவார்கள். எலியாஸோ, தன் குறிப்பேட்டோடு அமைதியாகத் திரும்பினார்.

ஆனால், அந்த வரலாற்றுக் காப்பகம் என்பது தங்களுக்குப் பின்னால் இருக்கும் ஒரு புள்ளி மட்டுமல்ல என்பதை அவர் தனிப்பட்ட முறையில் உணரத் தொடங்கியிருந்தார். அதற்கு ஒரு ஆழம் இருந்தது. அவர் தொட்ட ஒவ்வொரு தொடக்கமும், அதற்கு முந்தைய ஏதோவொன்றின் நடுக்கத்தைத் தன்னுள் கொண்டிருந்தது. அது காலத்தால் அல்ல, அதன் முக்கியத்துவத்தால். அந்த ஆதி நட்சத்திரங்கள் முதன்மையானவையாகத் தோன்றவில்லை. முதல் அணுக்கள், அவை ஏற்கனவே ஏதோவொரு நேர்த்தியான ஒழுங்கமைப்பில் இருந்து விடுபட்டதன் மிச்ச சுவைகளைத் தாங்கியிருந்தன. அந்தப் பேரண்டப் பின்னணி கூட ஒரு தொடக்கப் புள்ளியாகத் தெரியவில்லை; மாறாக, ஏற்கனவே காலி செய்யப்பட்ட ஒரு அறையிலிருந்து கசிந்து வரும் தேய்ந்துபோன எதிரொலியைப் போலவே இருந்தது.

அவருக்கு பிரபஞ்சத்தின் முதல் நினைவு தேவைப்பட்டது. ஏன் என்று சிலர் கேட்டபோது அவரிடம் மௌனமே எஞ்சியது. வார்த்தைப் பிரயோகம் அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாதது, ஆகவேதான் அதை அவரால் தவிர்க்கவும் முடியாததாக இருந்தது. பிரபஞ்சத்தின் முதல் நினைவு. நட்சத்திரங்களுக்கு முன்பு, பருப்பொருட்களுக்கு முன்பு, காலம் தன்னைத்தானே கணக்கிட்டுக் கொள்ளப் பழகிக் கொள்வதற்கும் முன்பு… அங்கே என்ன எஞ்சியிருக்க முடியும்?

 “ஒன்றுமில்லை” என்றனர் இயற்பியலாளர்கள். 

“வெறும் எல்லைக்கோடு” என்றனர் அண்டவியலாளர்கள். 

“முட்டாள்தனம்” என்றார் அந்தத் துறைத் தலைவர்; ஒரு காலத்தில் கற்பனை வளம் மிக்கவராக இருந்து, இப்போது பட்ஜெட்டுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டவர்.

இருப்பினும், எலியாஸ் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தார்.

அது இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது; பின்னர், ஒரு செனட்டரின் மகன் போதைப் பொருள் உட்கொண்டு மர்மமான இறப்பில், செய்தித்தாள்களுக்கு மக்களைத் திசைதிருப்ப வேறொரு அற்புதம் தேவைப்பட்ட போது அவருக்கு அனுமதி கிடைத்தது.

அந்தப் பரிசோதனை மார்ச் மாதத்து ஒரு வியாழக்கிழமைக்குக் குறிக்கப்பட்டது.  எலியாஸ் அதிகாலையிலேயே வந்துவிட்டார். தன் மனைவியினுடையதான ஒரு பழைய ஃபவுண்டன் பேனாவைத் தவிர, வேறு எந்தவொரு அதிர்ஷ்டப் பொருளையும் அவர் கையோடு கொண்டு வரவில்லை. மீரா படேல் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டாள்; சட்டப்பூர்வ அனுமதியுடன் தனிப்பட்ட நினைவுகளை மீட்டெடுக்கும் அளவுக்கு வரலாற்றுக் காப்பகம் நம்பகமானதாக மாறுவதற்கு முன்பே அவள் மறைந்திருந்தாள். அவர் ஒருபோதும் அவளது நினைவுகளுக்குள் நுழைந்ததில்லை. அதற்கான ஒப்புதல் படிவங்களில் கையெழுத்திட்டு, பின்னர் அவற்றைப் பூட்டி வைத்துவிட்டார்.

“மிகை உணர்ச்சி என்பது அறிவியல் ஆகாது,” என்று அவர் ஒருமுறை சக ஊழியர்களிடம் சொல்லியிருந்தார்.

அன்று காலை, அது தனது விவேகமா அல்லது கோழைத்தனமா என்று அவர் தனக்குள்ளேயே வியந்து கொண்டார்.

அந்த மீட்டெடுப்பு அறை ஜன்னல்களற்ற, வெண்மையான, ஆக்ரோஷமான தூய்மையுடன் கூடிய ஒன்றாக இருந்தது. அவருக்கு அது பிடிக்கவில்லை. அவரது பார்வையில், தேடல்களுக்கு மூலைமுடுக்கள் இருக்க வேண்டும். அதில் மரம், தூசி, சற்றே தவறாக ஓடும் ஒரு கடிகாரம், பிற மனிதர்களின் உடல்களை நினைவில் வைத்திருக்கும் ஒரு நாற்காலி ஆகியவை இருக்க வேண்டும். ஆனால் அங்கோ கண்ணாடி கதவுகள் , மென்மையான கட்டுப்பாட்டுக் கட்டுகள் , நரம்பியல் பட்டைகள், குளிரூட்டும் குழாய்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கே உரிய, விலையுயர்ந்த ஆராய்ச்சிக் கூடங்களுக்கே உரிய அந்த லேசான கிருமிநாசினி வாசனை மட்டுமே வீசியது.

டாக்டர் லினா சோ அந்தப் நடைமுறைகளை மேற்பார்வையிட்டார். முப்பத்தேழு வயதான அவள் புத்திசாலி, பொறுமையற்றவள்; இன்னும் சிறந்த அளவீடுகளைத் தரும் ஒரு காலாவதியான கருவியின் மீது ஒருவருக்கு ஏற்படும் சலிப்புடன் கூடிய பாசத்தோடு அவள் எலியாஸை நேசித்தாள்.

“தூங்கினீர்களா?” என்று அவள் கேட்டாள்.

“இல்லை.”

“நல்லது. உங்களுடைய மிகச்சிறந்த அமர்வுகள் எப்போதும் தூக்கமின்மையைத் தொடர்ந்துதான் சாத்தியமாகியிருக்கின்றன.”

“அறிவியலுக்கு இது ஒரு ஆபத்தான அடிப்படை,” என்றார் எலியாஸ்.

“பெரும்பாலான அறிவியல் ஒரு குழப்பத்துடன்தான் அல்லது ஒரு சலனத்துடன்தான் தொடங்குகிறது.”

அவர் புன்னகைத்தார். அது முற்றிலும் உண்மைதான்.

நெற்றிப் பொட்டுகளைச் சுற்றி அந்தப் பட்டைகள் பொருத்தப்பட்டபோது, எலியாஸ் கண்காணிப்புக் கண்ணாடியை நோக்கிப் பார்த்தார். அதற்கப்பால் இயற்பியலாளர்கள், நரம்பியல் நிபுணர்கள், இரண்டு அரசுப் பார்வையாளர்கள், படம்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்ட ஒரு ஆவணப்படக் குழுவினர் மற்றும் வெற்றி அல்லது மரணம், இதில் எது நிகழ்ந்தாலும் அதற்கேற்ப தன் உரையை ஏற்கனவே தயாரித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் தீவிரமான முகபாவனையோடு அந்தத் துறைத் தலைவர் நின்றுகொண்டிருந்தார்.

“இலக்கு வரிசை எது?” லினா கேட்டாள்.

“மீட்டெடுக்கக்கூடிய பிரபஞ்சத்தின் மிக ஆதி நிகழ்வு.”

“இது முறையான வார்த்தைப் பிரயோகம்.”

“ஆம்.”

“முறையற்றது?”

எலியாஸ் தன் கண்களை மூடிக்கொண்டார்.

“தொடக்கப் புள்ளி.”

லினா அதற்குப் பதில் சொல்லவில்லை. அவள் அந்தக் கணினித் திரையின் கட்டுப்பாடுகளை மாற்றுவதை அவரால் கேட்க முடிந்தது. ஒரு கணத்திற்கு, இயந்திரங்களின் இரைச்சலுக்குக் கீழே, வெளியே பெய்து கொண்டிருக்கும் மழையின் சத்தம் கேட்டது. எண்ணற்ற சிறிய துகள்களாய் அது கூரையைத் தொட்டுக்கொண்டிருந்தது; ஒவ்வொன்றும் தோன்றி, மறைந்து, தோன்றி, மறைந்து கொண்டிருந்தது. தங்களின் முதல் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் மீரா மல்லிகைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தது அவருக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. தொட்டிகளிலிருந்து மண் வழிந்து தரையில் கறையாகும் வரை அவள் எப்போதும் அளவுக்கு அதிகமாகவே தண்ணீர் ஊற்றுவாள். அவர் அதைப் புகாராகச் சொன்னபோது, “அளவுக்கு அதிகமாகப் பெற்றுக்கொள்ளும் உரிமை தாவரங்களுக்கு உண்டு” என்று அவள் சொன்னாள்.

அவருக்கு லேசாகச் சிரிப்பு வந்தது.

அடுத்த கணம், அந்த அறை காணாமல் போனது.

ஆரம்பத்தில், தன் சுயத்தை இழக்கும் அந்தப் பழக்கப்பட்ட தளர்வு ஏற்பட்டது. நினைவு bபிரிந்து தனியே நகர்ந்தது. அவருடைய பெயர், வயது, தொழில், இடது முழங்காலில் இருக்கும் அந்த வலி, காபியின் சுவை, மழை பெய்கிறது என்ற அறிவு எல்லாமே மெல்லிய நூலிழைகளாகத் தேய்ந்து கரைந்தன. அவற்றை உடைக்காமல் அவர் அவற்றைக் கடந்து சென்றார்.

நகரங்கள், விலங்குகள், பெருங்கடல்கள், நெருப்பு, நட்சத்திரங்கள் என அந்தப் பழமையான கால வரிசையைத்தான் அவர் எதிர்பார்த்தார்.

ஆனால் அதற்குப் பதிலாக, அங்கே ஒரு பெரும் வேகம் மட்டுமே இருந்தது.

அது ஒரு அசைவு அல்ல; ஏனென்றால் அங்கே அசைவதற்கு உடல் ஏதுமில்லை. சொல்லப்போனால், அது வருகையின் தலைகீழ் இயக்கம். நிகழ்வுகள் அவனைத் தாண்டி ஓடின, ஆனால் பின்னோக்கி அல்ல. அவன் ரோம் நகரத்தைக் கண்டான், அடுத்த கணமே அது மறைந்தது; கடல்களைக் கண்டான், அவை மறைந்தன; நட்சத்திரங்களைக் கண்டான், அவை சாம்பலாகின. கேலக்ஸிகள் விரிந்து, மனிதப் பார்வை அதன் பிரம்மாண்டத்தைத் தாங்க முடியாமல் சரணடைந்து, ஒருவிதமான தத்தளிப்பாக  மாறியதை அவன் கண்டான்.

ஏதோ ஒன்று தவறாக இருந்தது.

அவன் தொடக்கத்தை நெருங்கவில்லை. அவன் வேறொரு திசையில் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தான். காலத்தை முன்னோக்கி.

அவன் மேற்பரப்பிற்கு வர முயன்றான், ஆனால் அந்த வரலாற்றுக் காப்பகம் அவனை விடவில்லை. தன் வாழ்நாளில் முதன்முறையாக, வரலாற்றிற்குள் நின்று கொண்டு எலியாஸ் அச்சத்தை உணர்ந்தான். அது மரண பயம் அல்ல, அது மிகச் சிறிய விஷயம். இது அண்டத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு, பிரபஞ்சத்தால் தான் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுவதைக் கண்டு உண்டான பயம்.

சூரியன் விரிவடைந்தது. பூமி எந்தவித சடங்குகளுமின்றி மறைந்தது. மனித மொழிகள் முடிவுக்கு வந்தன. அவற்றின் கடைசி வார்த்தைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை, ஏனெனில் அவற்றை உச்சரிக்க எஞ்சியிருந்த வாய்கள் அங்கே இல்லை. கிரகங்கள் குளிர்ந்தன, உடைந்தன, மிதந்தன. நட்சத்திரங்கள் தங்களை வருத்தித் தீர்ந்தன. தான் அறியாத நாகரிகங்கள் தங்களுக்குப் புரியாத வடிவங்களில் தோன்றி, நினைவுச் சின்னங்களை விட்டுச் செல்லாமல் மறைந்தன; நினைவுச்சின்னங்களுக்குத் துக்கம் தேவை, அநேகமாக அவர்கள் துக்கத்தையே தாண்டி வளர்ந்திருக்கலாம். கேலக்ஸிகள் மெலிந்தன. கருந்துளைகள் இருண்ட ரட்சகர்கள் போல நீடித்தன, பின்னர், நித்தியத்தையே ஒரு குறுகிய காலமாகக் காட்டக்கூடிய நீண்ட காலத்திற்குப் பிறகு, அவையும் கரைந்துபோயின.

புரோட்டான்கள் முற்றிலுமாகச் சிதைந்து, இறுதி இருள்சுடர்களும் குளிர்ந்து கரைந்த அந்தப் பரப்பில், வெளியின் வடிவியலே  தனக்குரிய அர்த்தங்களை இழந்து சரிந்தது. ஒளியின் திசைகளோ, ஈர்ப்பின் நங்கூரங்களோ அற்ற அந்தப் பாழில், திசைகளைத் தக்கவைத்துக் கொள்ள அவரது அகம் தவித்தது. மேடற்ற, பள்ளமற்ற, காலம் தன் அசைவை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டன. மரணமடைந்த நிகழ்தகவுகளின் பெருங்கடலில் அவர் தனித்து மிதந்தார். பிரபஞ்சத்தின் மாறிலிகள் அனைத்தும், விசை தீர்ந்த பழைய கடிகார முட்களைப் போல மெல்லத் தேய்ந்து செயலற்றுப் போயின.

அந்த முடிவில் எந்தவித நாடகமும் இல்லை.

அதுதான் தாங்கிக்கொள்ள முடியாத முதல் விஷயம்.

பிரபஞ்சம் ஏதோ ஒரு புனித நூல் போலவோ அல்லது ஒரு இசைக்கச்சேரி போலவோ முடியாமல், எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதே மறந்துபோன ஒரு அறையில், உரையாடல்கள் மெல்ல மெல்ல மறைவதைப் போல மறைந்தது. சங்கொலிகள் இல்லை, தீர்ப்பு இல்லை, வெளிப்பாடுகள் இல்லை. தூரம் அதிகரித்துக் கொண்டே சென்றது; அந்தத் தூரத்தைக் கவனிப்பதற்குக்கூட யாருமற்ற நிலை வரும் வரை. ஆற்றல் தளர்ந்தது. காலம் தன் அமைப்பை இழந்தது. பிரபஞ்சம் விரிந்த பரப்பாக இல்லாமல், வாக்கியத்தின் முடிவில் வரும் புள்ளி அளவிற்கு மாறியது.

பிறகு அங்கே ஒன்றுமே இல்லை.

கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை..

ஆம் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை..

எலியாஸ் இருளுக்காகக் காத்திருந்தான், ஆனால் இருளுக்கு மாறுபாடு தேவை. அவன் அமைதிக்காகக் காத்திருந்தான், ஆனால் அமைதிக்கு ஒலியின் நினைவு தேவை. எஞ்சியிருந்த அந்த நிலையை வெறுமை என்று அழைக்க முடியாது; ஏனென்றால், வெறுமை என்பது ஏதோ ஒன்று வந்து சேரக்கூடிய ஒரு இடம்.

இருந்தாலும், அந்தச் சாத்தியமற்ற எஞ்சிய பகுதிக்குள், ஒரு நினைவு இருந்தது. மிகச் சிறியது. நம்ப முடியாத அளவுக்குச் சிறியது. மேகத் திரைகளுக்குக் கீழே சுழன்று கொண்டிருக்கும் ஒரு நீல நிறக் கிரகம்.

முதலில் எலியாஸ் அதை விண்வெளியில் இருந்து பார்க்கப்படும் பூமியோ என்றுதான் நினைத்தார், மனிதப் பொதுப்புத்தியில் ஆழப் பதிந்துபோன அந்தப் பழைய பிம்பம். ஆனால், இது பாடப்புத்தகங்களிலும் சொற்பொழிவுகளிலும் காட்டப்படும் ஒரு அடையாள பூர்வமான பூமி அல்ல. இது மிகக் குறிப்பானது. அதற்கு ஒரு வானிலை இருந்தது. அட்லான்டிக் பெருங்கடலின் மேல் ஒரு புயல் திரண்டு கொண்டிருந்தது. வடக்கத்திய வயல்வெளியெங்கும் பனி படர்ந்திருந்தது. எங்கோ ஒரு சமையலறைக்குள் அதிகாலை விடிந்து கொண்டிருந்தது.

அவர் ஒரு நாளுக்குள் இருந்தார். முக்கியமான ஒரு நாளும் அல்ல அது.

ஒரு பெண் சமையலறை மடுவிற்கு அருகே நின்று தேநீர் கோப்பை ஒன்றைக் கழுவிக் கொண்டிருந்தாள். ஒரு குழந்தை மேசைக்கு அடியில் அமர்ந்து, உடைந்த கிரேயானால் தரையில் வட்டங்கள் வரைந்து கொண்டிருந்தது. வெளியே, ஒரு நாய் இரண்டு முறை குரைத்துவிட்டு, விசுவாசமான தன் கடமையைச் செய்து முடித்த திருப்தியோடு வெயில் படும் ஒரு இடத்தில் போய் படுத்துக்கொண்டது. ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரின் சத்தத்திற்குக் கீழே, ரேடியோவில் மிக மெலிதாக ஒரு பியானோ இசை ஒலித்துக்கொண்டிருந்தது,அநேகமாக அது ப்ரான்ஸ் ஸ்கூபர்ட் உடையதாக இருக்கலாம், எலியாஸால் அதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அந்தப் பெண் தன் வேலையைச் சற்று நிறுத்தினாள்; அந்த இசை ஏதோ பிரம்மாண்டமான அழகைக் கொண்டிருந்ததால் அல்ல, மாறாக அதன் ஒரு குறிப்பிட்ட நாதம், அந்தச் சாதாரணக் காற்றில் ஒரு மாயக் கதவைத் திறப்பது போல இருந்ததால்.

அவள் குழாயை மூடினாள்.

அந்தக் கோப்பையிலிருந்து தண்ணீர் இன்னும் வழுக்கிக் கொண்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தது.

குழந்தை நிமிர்ந்து பார்த்தது.

ஒரு சில நொடிகள் அந்தப் பெண்ணும் குழந்தையும் சேர்ந்து அந்த இசையைக் கவனித்தார்கள்.

அங்கே வேறு எதுவும் நடக்கவில்லை.

அந்த நினைவு, அவ்வளவுதான்.

பேரரசுகள் இல்லை. கண்டுபிடிப்புகள் இல்லை. பேரண்டத்தின் கம்பீரத்திற்காகப் பாதுகாத்து வைக்கப்பட்ட மனிதகுலத்தின் இறுதிப் பிரகடனம் எதுவும் அங்கே இல்லை. ஒரு சமையலறை, தண்ணீர், ஒரு குழந்தை, தரைவழியே சூரிய ஒளி நகர்வதைக் கவனித்தபடி, அரைகுறையாகக் கேட்கும் அந்த இசைக்குச் செவிமடுக்கும் ஒரு களைப்படைந்த பெண்.

எலியாஸுக்கு அது யாருடைய நினைவு என்று தெரிந்துகொள்ள வேண்டும் போலிருந்தது.

அந்தப் பெண்ணுடையதா? அந்தக் குழந்தையுடையதா? அந்த கிரகத்தினுடையதா? அல்லது எல்லாமே பறிக்கப்பட்ட பிறகு, பிரபஞ்சமே தன்னுள் பிரசவித்துக் கொண்ட ஒரு பேரன்பின் உன்னதக் கற்பனையா?

அந்தக் கேள்வியும் அங்கே கரைந்துபோனது.

நெருப்பிற்குப் பெயரிடுவதற்கு முன்பே அதன் வெம்மையை ஒருவன் உணர்வதைப் போல, அவர் அதைப் புரிந்துகொண்டார், ஆனால் அறிவாக அல்ல, கொள்கையாக அல்ல. வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த எதையுமே பிரபஞ்சம் பாதுகாத்து வைக்கவில்லை. மாறாக, எதற்கெல்லாம் ஒரு காலத்தில் எந்த ஒரு நியாயப்படுத்துதலும் தேவையற்று இருந்ததோ, அதை மட்டும்தான் அது பாதுகாத்திருந்தது.

அந்தக் கோப்பை. அந்தத் தண்ணீர். அந்தச் செவிமடுத்தல். மேசைக்கு அடியில் இருந்த அந்தக் குழந்தை. வெயிலில் தூங்கும் அந்த நாய். அனைத்துமே தாங்க முடியாத அளவுக்குப் பலவீனமானவை, ஆகவேதான் அவை அத்தனை துல்லியமானவையாக இருந்தன.

அடுத்த கணம், அவர் மீராவைப் பார்த்தார்.

ஒரு தரிசனமாக அல்ல, ஒரு நிழலாக அல்ல. அதே பாதுகாத்தல் விதியின் கீழ் அவள் அங்கே இயல்பாக இருந்தாள்: பல வருடங்களுக்கு முன்னால் ஒரு பால்கனியில் நின்றுகொண்டு, தண்ணீர் வழிந்து தரையைக் கறைபடுத்தும் வரை மல்லிகைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அவளது கூந்தல் ஒழுங்கற்று அள்ளி முடிக்கப்பட்டிருந்தது. எந்தவொரு ராகமும் இன்றி அவள் ஏதோவொரு மெட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவர் அப்போது இளைஞராக இருந்தார்; அந்தத் தண்ணீர் வீணாவதைக் கண்டும், அந்தச் சேற்றைக் கண்டும், குடும்ப வாழ்க்கைக்குள் அன்பு நுழையும்போது ஏற்படும் அந்த ஒழுங்கின்மையைக் கண்டும் எரிச்சலடைந்திருந்தார்.

“நீ எப்போதும் அவற்றுக்கு அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றி மூழ்கடிக்கிறாய்,” என்றார் அவர் அப்போது.

“அவை உயிருடன் இருக்கின்றன,” என்று அவள் பதிலளித்தாள். 

“அவை அளவுக்கு அதிகமாகவே பெற்றுக்கொள்ளட்டும்.”

அவர் அந்த வாக்கியத்தையே மறந்திருந்தார். அல்லது அதைவிடக் கொடுமையாக , ஆழமான விஷயங்கள் பல மூச்சுத்திணறி மடியுமே, அந்தத் தம்பதியரின் அற்பமான அன்றாட நினைவுகளுக்குள் அதைத் தூக்கிப் பூட்டி வைத்திருந்தார்.

இப்போது, காலத்தின் இறுதி எல்லையில், எல்லா நட்சத்திரங்களும் செத்து மடிந்த பிறகு, அவளது வார்த்தைகள் ஒரு நினைவாக அல்லாமல் ஒரு சாட்சியமாக அவரிடம் திரும்பி வந்தன.

அவை அளவுக்கு அதிகமாகவே பெற்றுக்கொள்ளட்டும்.

எலியாஸ் தன் கண்களைத் திறந்தபோது, அவர் அழுதுகொண்டிருந்தார்.

அது அந்த ஆராய்ச்சி அறையில் உடனடியாக ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அவர் அழுது யாரும் பார்த்ததில்லை. அந்தத் துறைத் தலைவர் முதலில் பதற்றமடைந்தார், பின்னர் எரிச்சலுற்றார். ஏனெனில், இந்த உணர்ச்சிவசப்படுதல் ஒருவேளை தங்களின் நிதி உதவிக்கான முறையை பாதித்து விடுமோ என்ற அச்சம் அவருக்கு. லினா எப்போதும் இல்லாத ஒரு மென்மையோடு அவரது நரம்பியல் பட்டைகளைக் கழற்றினாள். கண்ணாடிக்கப்பால் இருந்த யாரோ ஒருவர், “நமக்கு சிக்னல் கிடைத்ததா?” என்று கேட்டார். 

மற்றொருவர், “வெளிப்புறத் தொடர்புகள் எதுவும் இல்லை” என்றார்.

இன்னொரு குரல்: “முழுமையான தோல்வி” 

ஆவணப்படக் குழுவினர், அறநெறி ஒப்பந்தங்களால் தடுத்து நிறுத்தப்பட்ட கழுகுகளைப் போல ஆவலோடு முன்னோக்கிச் சாய்ந்தனர்.

லினா அவருக்கு மிக அருகில் குனிந்தாள்.

“எலியாஸ். நான் பேசுவது கேட்கிறதா?”

“ஆம்.”

“நீங்கள் என்ன பார்த்தீர்கள்?”

அவர் பதில் சொல்ல முயன்றார், ஆனால் இத்தனை காலமும் தனக்கு விசுவாசமாக இருந்த பழைய ஊழியனான அந்த மொழி, இப்போது அவரைக் கைவிட்டிருந்தது. அவர் கண்ட தரிசனம் மிகவும் சிக்கலானது என்பதால் அல்ல, மாறாக அது மிக மிக எளிமையாக இருந்ததால். அவரால் கருந்துளைள் ஆவியாதலைப் பற்றி விவரித்திருக்க முடியும். பேரண்டத்தின் வெப்ப மரணத்தைப் பற்றிப் சொற்பொழிவாற்றியிருக்க முடியும். அந்தப் பிரம்மாண்டத்தை அவரால் தாங்கியிருக்கவும் முடிந்திருக்கும். ஆனால், ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தின் இறுதி நினைவு என்பது, ஒரு சமையலறையில் இசைக்குச் செவிமடுக்கும் ஒரு பெண் மட்டும்தான் என்பதை அவர் எப்படி விவரிப்பார்?

“எவ்வளவு நேரம்?” அவர் கேட்டார்.

“நான்கு நிமிடங்கள்.”

அவர் மெதுவாக, ஒருமுறை மட்டும் சிரித்துக் கொண்டார்.

அந்தத் துறைத் தலைவர் ஒரு அசட்டுத்தனமான அடக்கத்தோடு அறைக்குள் நுழைந்தார்.

“எலியாஸ், உங்களால் அந்த இலக்கை அடைய முடிந்ததா?”

“இல்லை.”

அங்குள்ள அனைவரின் முகத்திலும் ஒரு ஏமாற்றம் படர்ந்தது, அதை அவர்கள் அக்கறையைப் போலக் காட்டிக்கொள்ள முயன்ற போதிலும்.

“என்ன நடந்தது?”

“நான் தவறான திசையில் சென்றுவிட்டேன்.”

“அதாவது?”

“நான் தொடக்கத்திற்குச் செல்லவில்லை.”

லினாவின் முகபாவனை மாறியது. மற்றவர்களுக்கு முன்பாகவே அவள் அதைப் புரிந்துகொண்டாள்.

“எதிர்காலமா?”

எலியாஸ் மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டார், ஆனால் அந்த அறை அதன் அனைத்துடனும் மீண்டும் திரும்பியிருந்தது: வெள்ளைச் சுவர்கள், கண்ணாடிகள், கருவிகள், மனிதர்களின் அவசரங்கள்.

“இறுதிப்புள்ளி,” என்றார் அவர்.

யாரும் பேசவில்லை.

அதன் பிறகு, இயற்பியலாளர்கள் தங்களைத் தாங்களே நியாயப்படுத்திக் கொண்டு தப்பிக்கத் தொடங்கினார்கள்.

சாத்தியமே இல்லை. இது ஒரு கற்பனைப் பிம்பம். நரம்பியல் குறைபாடு. அறிவாற்றல் சுமையால் ஏற்பட்ட காலத் தலைகீழ் மாற்றம். தனிப்பட்ட நினைவுகளின் கலப்பு. அடையாளச் சிதைவு. பிரபஞ்சத்தின் இறுதி எல்லையை இலக்காகக் கொண்டதால் தீவிர மரண பயத்தால் உண்டான மாயத்தோற்றம்… 

ஏற்கனவே தங்களால் காப்பாற்ற முடியாமல் போன ஒரு சடலத்தைச் சுற்றி மருத்துவர்கள் கூடிப் பேசுவதைப் போல, அந்தச் சொற்றொடர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டன.

அந்தத் துறைத் தலைவர், அவரிடம் இந்த அமர்வை மீண்டும் ஒருமுறை செய்ய முடியுமா என்று கேட்டார்.

“இல்லை.”

“உடல்நலக் குறைபாடு காரணமா?”

“ஏனென்றால், அது மிக அருவருப்பானதாக  இருக்கும்.”

அவர்கள் எதிர்பார்த்த பதில் அதுவல்ல. லினா லேசாகப் புன்னகைக்க முயன்று, பின்னர் தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக் கொள்வதை அவர் கண்டார்.

அடுத்தடுத்த வாரங்களில், எலியாஸ்  பெரும் பிரச்சினையாக மாறினார். அவரது கருவிகள் எந்தவொரு முறையான மீட்டெடுப்பு முறையையும்  பதிவு செய்திருக்கவில்லை. அரசாங்கத்தின் ஒரு சுற்றறிக்கை, ‘இந்த அமர்வு முட்டாள்தனத்தையே பிரசவித்திருக்கிறது’ என்று அதிகாரத்துவத் தொனியுடன் குறிப்பிட்டிருந்தது. ரகசியப் பரிசீலனைக்காக அவருடைய தனிப்பட்ட அனுபவத்தை ஒரு அறிக்கையாக எழுதிக் கொடுக்கும்படி அவரிடம் கேட்கப்பட்டது. அவர் மூன்று பக்கங்கள் எழுதினார், பின்னர் அவற்றை அழித்துவிட்டார். அவர் நேர்காணல்கள் அளிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டார்; மறுத்துவிட்டார். இறுதியாக, அவர் பணி ஓய்வு பெறும்படி அறிவுறுத்தப்பட்டார்.

அவர் எந்தவொரு எதிர்ப்புமின்றி அதை ஏற்றுக்கொண்டார்.

ஏப்ரல் மாதத்தில், அவர் தனது அடுக்குமாடி குடியிருப்புக்குத் திரும்பினார். அங்கிருந்து பார்த்தால் ஒரு குறுகிய தெருவும், கட்டிடக் கட்டுமானங்கள், நோய்த்தாக்குதல்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டி உயிர் பிழைத்திருந்த ஒரு மேப்பிள் மரமும் தெரிந்தன. அவரது புத்தகங்கள் இன்னும் ஒழுங்கற்ற கோபுரங்களாக அடுக்கப்பட்டிருந்தன. மீராவின் ஃபவுண்டன் பேனா மேசை மேல் கிடந்தது. பால்கனியில் இருந்த மல்லிகைத் தொட்டிகள் வெறிச்சோடிக்கிடந்தன; அவள் மறைவுக்குப் பிறகு தாவரங்களை உயிரோடு வைத்திருக்கும் துணிச்சல் அவருக்கு இருக்கவில்லை.

பல நாட்களாக அவர் பயனுள்ள காரியம் எதையும் செய்யவில்லை.

அவர் தேநீர் தயாரிப்பார், பின்னர் அது ஆறிப்போகும் வரை அப்படியே விட்டுவிடுவார். புத்தகங்களைத் திறப்பார், ஆனால் படிக்க மாட்டார். மனித இனமே முற்றிலுமாகத் துடைத்தழிக்கப்பட்டதைப் பார்த்துவிட்டு, இப்போது அவர்கள் மீண்டும் நம்ப முடியாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் உலா வருவதைக் காணும் ஒருவனின் திகைப்போடு, தெருவைக் கடக்கும் மனிதர்களை அவர் வேடிக்கை பார்த்தார்: போனில் கத்திக்கொண்டு விவாதிக்கும் ஒரு மனிதன், இயர்போனைப் பகிர்ந்துகொண்டிருக்கும் இரண்டு பள்ளி மாணவிகள், பாத்திரங்களைச் சமநிலைப்படுத்திக் கொண்டு செல்லும் ஒரு கூரியர் ஊழியன், அசாத்தியத் துல்லியத்தோடு டாக்ஸி டிரைவரைத் திட்டித் தீர்க்கும் ஒரு கிழவி.

ஒவ்வொரு அசைவும் அங்கே அளவுக்கு அதிகமானதாகத் தோன்றியது.

ஒவ்வொரு சாதாரண விஷயமும், தான் உயிர் பிழைத்திருக்கும் சங்கடத்தோடு ஒருவித ஒளியுடன் சுடர்விடத் தொடங்கியிருந்தது.

ஒரு நாள் மாலையில், மீண்டும் மழை வந்தது. அது எந்தவொரு நாடகத்தனமான மழையோ அல்லது கவிதை எழுத்துவதற்கான இலக்கிய நயமிக்க மழையோ அல்ல; நடைபாதைகளில் ஒரு லேசான உலோக வாசனையைக் கிளப்பும் சாதாரண நகரத்து மழை, அவ்வளவுதான். எலியாஸ் பால்கனிக்கு வெளியே வந்தார். அந்த வெற்றுத் தொட்டிகளில் பழுப்பு நிறத் தண்ணீர் நிரம்பியிருந்தது. அவற்றில் ஒன்றில், நம்ப முடியாத ஆச்சரியமாக, ஒரு பச்சைக் துளிர் தோன்றியிருந்தது; ஒரு குழந்தை வரைந்த கோட்டைப் போல மிக மெலிதாக இருந்தது அது.

அவர் நீண்ட நேரம் அதையே பார்த்துக் கொண்டு நின்றார்.

பின்னர் உள்ளே சென்று, சிங்க்கிற்கு அடியில் இருந்த பழைய பூவாளியைக் கண்டுபிடித்து, அதில் தண்ணீரை நிரப்பினார்.

அந்தச் செயல் முட்டாள்தனமானதுதான். மண் ஏற்கனவே ஈரமாக இருந்தது. அது ஒரு செடியாகவே இருந்தாலும் அல்லது தற்காலிகமாகக் முளைத்த ஏதோவொரு கலைச்செடியாகவே இருந்தாலும் அதை அப்படியே விட்டுவிடுவதுதான் முறை. அது அவருக்குத் தெரியும். ஆதாரங்களை மதிப்பதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தவர் அவர்.

இருந்தாலும், அவர் தண்ணீர் ஊற்றினார்.

தண்ணீர் மண்ணை ஈரமாக்கிக் கறையாக்கியது, தொட்டியின் விளிம்பு வரை உயர்ந்தது, பக்கவாட்டில் வழிந்து, பல வருடங்களுக்கு முன்னால் நடந்தது போலவே பால்கனியின் தரையில் ஓடியது.

பக்கத்து வீட்டிலிருந்து பியானோ இசை கேட்கத் தொடங்கியது. இந்த முறை அது ஷூபர்ட் உடையது அல்ல. ஒரு குழந்தை சுருதிப் பயிற்சிகளை மிக மோசமாக வாசித்துக் கொண்டிருந்தது; ஒரு குறிப்பிட்ட நாதத்தை மற்றவற்றை விடக் கடினமாக அழுத்தியும், நிறுத்தியும், மீண்டும் முதலிலிருந்து தொடங்கியும் அது வாசித்தது. அந்தச் சத்தம் முதலில் அவருக்கு எரிச்சலூட்டியது. பின்னர் அது மழையோடு கலந்தது. பிறகு அது, அந்த மாலையின் வெறுமைக்கு எதிரான பிடிவாதமான வாதத்தின் பகுதியாக மாறியது.

அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றப்பட்ட அந்தச் செடியின் அருகில் எலியாஸ் அமர்ந்தார்.

காலத்தின் இறுதியில் காத்துக்கொண்டிருக்கும் அந்த இறுதி நினைவைப் பற்றி அவர் சிந்தித்தார்; ஆனால் காத்துக்கொண்டிருப்பது என்பது தவறான வார்த்தை. அது ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. அது இன்னும் நிகழவில்லை. ஒருவேளை அது, மூடிய மொட்டுக்குள் இருக்கும் நறுமணத்தைப் போல, எப்போதும் பிரபஞ்சத்திற்குள் மடிந்து ஒளிந்திருந்திருக்கலாம்.

காப்பகம் என்பது ஒருபோதும் மறைந்துபோனவற்றின் பதிவு அல்ல என்பதை அவர் அப்போது புரிந்துகொண்டார். அது, எதையுமே முழுமையாக இழந்துவிட முடியாது என்பதற்கான ஒரு அளவீடு, அவ்வளவுதான்.

மறுநாள் காலை, லினா அவரைப் பார்க்க வந்தாள்.

பால்கனியில், காலடியில் அந்தச் செடி இருக்க, ஒரு பழைய புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த அவரை அவள் கண்டாள். தொட்டியைச் சுற்றி இருந்த ஈரமான கறையைப் பார்த்துவிட்டு அவள் தன் புருவங்களை உயர்த்தினாள்.

“நீங்கள் அதை மூழ்கடிக்கிறீர்கள்,” என்றாள் அவள்.

“ஆம்.”

“வேண்டுமென்றேவா?”

அவர் பொய் சொல்ல நினைத்தார், பின்னர் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்.

“வேண்டுமென்றேதான்.”

அவள் அவருக்கு எதிரே அமர்ந்தாள். சிறிது நேரம் இருவருமே பேசவில்லை. அவர்களுக்குக் கீழே, அந்த நகரம் தன் வழக்கமான, புரிந்துகொள்ள முடியாத கடமைகளைச் செய்துகொண்டிருந்தது. ஒரு பேருந்து நடைபாதையோரம் பெருமூச்சுடன் நின்றது. யாரோ ஒருவன் சத்தமாகச் சிரித்தான். ஒரு சைக்கிள் ஓட்டி சாபமிட்டான். ஒரு குழந்தை எதையோ கீழே போட்டுவிட்டு, பிரபஞ்சமே தன்னைத் தனிப்பட்ட முறையில் வஞ்சித்துவிட்டது போலக் கதறி அழுதது.

லினா ஒரு கோப்பை மேசை மீது வைத்தாள்.

“அவர்கள் உங்களிடமிருந்து ஒரு இறுதிப் பிரகடனத்தை எதிர்பார்க்கிறார்கள். பதிவுக்காக.”

“அங்கே எந்தப் பதிவும் இல்லை.”

“எப்போதும் ஒரு பதிவு இருக்கும். அதுதான் இந்த நிறுவனங்களின் நோய்,” என்றாள் அவள்.

அவர் அவளைப் பாராட்டுவது போல் பார்த்தார்.

“நீ மாறி வருகிறாய், பக்குவப்படுகிறாய்.”

அவள் புன்னகைத்தாள்.

“நான் அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும்?”

அந்தச் சிறிய செடியின் இலையில் நீர்த்துளி ஒன்று நடுங்குவதை எலியாஸ் கவனித்தார். அந்தத் துளி அந்தப் பனிமூட்டமான விடியலின் ஒளியைத் தன்னுள் திரட்டி, எல்லாவற்றையும் தலைகீழாகக் காட்டிக் கொண்டிருந்தது: பால்கனி, கைப்பிடிச் சுவர், லினாவின் முகம், அவருடைய வயதான கை, மேகமூட்டமான வானம். விரைவில் கீழே விழுந்து மறைந்துபோகக் கூடிய ஒரு சிறிய விஷயத்திற்குள், ஒட்டுமொத்த உலகமும் ஒரு கணத்திற்குள் அடங்கியிருந்தது.

“தொடக்கம் எங்கிருக்கிறது என்பதை என்னால் கண்டறிய முடியவில்லை என்று அவர்களிடம் சொல்லிவிடு,” என்றார் அவர்.

லினா காத்திருந்தாள்.

“அப்புறம்?”

அவர் தெருவை நோக்கிப் பார்த்தார். அங்கே சாதாரண மனிதர்கள் தங்களின் மிகச் சாதாரணமான அசைவுகள் நட்சத்திரங்களை விடவும் அதிக காலம் நீடித்திருக்கக் கூடியவை என்பதை அறியாமலேயே, அந்தச் சாதாரண வானிலைக்குள் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

“நாம் தேட வேண்டிய விஷயம் அதுவல்ல என்றும் சொல்லிவிடு.”

அவள் எதையும் குறித்துக் கொள்ளவில்லை.

பக்கத்து வீட்டுப் பிள்ளை மீண்டும் தன் சுருதிப் பயிற்சிகளைத் தொடங்கியது. இந்த முறை அந்தத் தவறான நாதம் சற்றே வேகமாக ஒலித்தது.

எலியாஸ் தன் கண்களை மூடிக்கொண்டு, அதைச் செவிமடுத்தார்.


Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.