ஜோஸ் முஜிகா – எளிய வாழ்க்கையின்  ஒரு குறியீடு  

ஆடம்பர வாழ்விற்கு ஆசைப்பட்டு மேன்மேலும் பணம் வேண்டி அலைபவர்களே ஏழைகள்’ -ஜோஸ் முஜிகா*

எளிய வாழ்க்கையில் நாகரிகம் மிளிர்வதாகக் கண்டார் அண்ணல் காந்தி. எளிமையே பொதுமையின் அடிப்படை என்றுணர்த்தினார். மக்களுக்குத் தலைமையேற்க வருபவர்கள், மக்களிடமிருந்து தங்களை  அன்னியப்படுத்திக் கொள்ளாது, தன்னை அவர்களில் ஒருவராகப் பாவிக்கும் நிலையில்தான் மக்கள் மனங்களில் இடம் பெற முடியும். விவசாயிகளின் நாடாக இருந்த இந்தியாவில், அவர்களின்  ஏழ்மைநிலை மகாத்மா காந்தியை மிகவும் பாதித்தது. ஏழை விவசாயியின் எளிய ஆடைக்குத்  தன்னை மாற்றிக்  கொண்டு பாமர  இந்தியானோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு வாழ்நாள்  முழுவதும் அதனையே அணிந்தார். எளிமையில் உயரிய  வாழ்வு கண்டு, மக்கள் நெஞ்சங்களில் மகாத்மாவாக இடம் பெற்றார். தேவைகளின் சுருக்கத்தில் தான்  அகிலம் அமைதியில் திழைக்க இயலும் என்றே எண்ணினார்.  தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவனும் ‘திருடனே’ என்றே அண்ணல் குறிப்பிட்டார். மிகை நுகர்வு மிகவும் ஆபத்தானது என்று அவர் உணர்த்தினார். அண்ணல் அறிவுறுத்திய எளிமை வாழ்க்கையினை  தென் அமெரிக்காவில் அதிபர் ஒருவரே வாழ்ந்து வரலாறு படைத்துள்ளார்.

பொதுவாக, உலக நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் தங்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்தவர்களின் வாழ்க்கை  தரத்திலிருந்து பெரிதும் விலகிச் சென்று,  ஆடம்பரமான அரசு பங்களாவில், அரசு பணத்தைக் கோடிக்கணக்காகச் செலவு செய்து சுகபோகமாக வாழ்வதே இயல்பாக உள்ளது.  இந்நிலைக்கு மாறாக,  தனது வாழ்க்கை தரத்தை  பிற நாடுகளின்  அதிபர்களுடைய வாழ்க்கைத்  தரத்தோடு எவ்விதத்திலும் ஒப்பிட முடியாத அளவிற்கு, எளிய வாழ்வை இன்முகத்துடன் ஏற்றுத் தனது நாட்டின் சாதாரண மக்களைப் போன்று வாழ்ந்து வழிகாட்டியவர் ஜோஸ் முஜிகா. இலத்தீன் அமெரிக்காவின் நடுப் பகுதியில்  அமைந்துள்ள சிறிய நாடான உருகுவேயின் 40ஆவது குடியரசு தலைவராக 2010 முதல் 2015 வரை பொறுப்பில் இருந்தவர். ‘உலகின் ஏழை அதிபர்’ என்று அவரை ஊடகங்கள் குறிப்பிட்டபோது, நான் ஏழை அல்ல; நான் எளிய வாழ்க்கைமுறையைக் கொண்டிருக்கின்றேன்;1 எனது தேவைக்கு அதிகமாகவே நான் ஈட்டுகிறேன்” என்று பணிவோடு அவர் மறுதலித்தார். ஜோஸ் முஜீகா என்று சுருக்கமாக அழைக்கப்பெறும் அல்பெர்டோ பெபி முஜிகா  கர்னாடோ அதிபராக இருந்த போதும் சாதாரண மக்களுடன்  இரண்டறக் கலந்து  தனது எளிமையான  வாழ்க்கையை  வாழ்வாங்கு வாழ்ந்த மாமனிதர் அவர். ‘மேதகு’(His Excellency), ‘திருவாளர் அதிபர்’(Mr.President), ‘அய்யா’(sir) என்ற மரியாதை குறித்த அழைப்புச் சொற்களையெல்லாம் விடுத்து  உருகுவே நாட்டு  மக்கள், அவரது  புனைபெயரான ‘பெப்பே’ என்று தான் அவரை அழைப்பது வழக்கம்.2 பதவி அவரை ஆட்கொள்ளவில்லை. நுகர்வெனும் மாக்கடலில் அவர் வீழ்ந்துவிடவில்லை. அடிப்படை தேவைகளின் பூர்த்தியில் மனநிறைவு பெற்றார். எளிமையில் உலக அரசியல் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக உயர்ந்து நின்றார்.

இளமை வாழ்வு 

1935 மே  20ஆம் நாள் உருகுவே நாட்டில் மாண்டிவீடியோ நகரில் டெமெற்ரோ முஜிகா- லூசி கார்டனோ தம்பதியரின் மகனாக அல்பெர்டோ பெபி முஜிகா  கர்னாடோ பிறந்தார். முஜிகாவின் இளமை  வாழ்க்கை துன்பங்கள் சூழ்ந்தது. சிறுவனாய் இருந்த போது சிறுவிவசாயியான அவரது தந்தை தான் வாங்கிய கடனுக்காகத்  தனது நிலத்தை இழந்ததுடன், அந்தக் கவலையிலேயே முஜிகாவின் ஐந்தாவது வயதில் இறந்து போனார். ஏழ்மை அவரை வாட்டியது. அருகாமையில் உள்ள அடுமனைக்குப் பொருட்களை எடுத்துச் செல்லும் பணி செய்தார். அம்மா வழி தத்தா வீட்டில் வளர்ந்தார். ஏழை விவசாயியான அவரால் முஜிகாவை  கவனித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, தாத்தாவின் நிலத்தில் வேலை செய்தது போக,  பிறர்  நிலத்திலும் வேலை செய்தார். விவசாயத் தொழிலில் தேர்ச்சிப் பெற்று விளங்கினார். பள்ளிக் கல்வியை அவரால் முடிக்க இயலவில்லை. சைக்கிள் ஓட்டுவதை மிகவும் விரும்பினார். 13 வயது முதல்  17 வயது வரை பல சைக்கிள் கிளப்களுக்காக போட்டிகளில் கலந்து கொண்டார். உருகுவேயின் தேசிய கட்சி(வெள்ளை கட்சி)யின் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றார். 

அரசியல் பயணம் 

கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் நடந்த புரட்சியின் தாக்கம் தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் உணரப்பெற்றது. உருகுவேயில் பல இளைஞர்கள் இடதுசாரி சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு கொரில்லா போராளிகளாக மாறினர். அவர்களில் முஜிகாவும் ஒருவர். 1960ஆம் ஆண்டு டுபமரோஸ் என்ற கொரில்லா இயக்கத்தில் அவர் தன்னை இணைத்துக்கொன்டார்.3 ராபின்ஹூட் போன்று கொள்ளையடிப்பது, ஆட்களைக் கடத்துவது, கிடைக்கின்ற பணத்தை ஏழைகளுக்கு வழங்கி உதவுவது என்று அவ்வியக்கத்தினர் செயல்பட்டனர்.4 தங்கள் நடவடிக்கைகளினால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டனர். 1969ஆம் ஆண்டு தலைநகர் மாண்டிவீடியோ அருகில் உள்ள பாண்டோ நகரத்தை கைப்பற்றும் போராட்டத்தில் முஜிகோ முக்கியப் பங்கு வகித்தார். ஆனால், அந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. அவர் கைது செய்யப்பட்டு இராணுவ சிறையில் அடைக்கப்பட்டார். தப்பித்துச் செல்ல முயற்சிக்க, 1970ஆம் ஆண்டு காவல் துறையினரால் ஆறு முறை சுடப்பட்டார். மரணத்தின் வாசலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் 1971ஆம் ஆண்டு புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக மீண்டும் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து தப்பவே, மீண்டும் கைது செய்யப்பட்டுச் சிறையில்  அடைக்கப்பட்டார். ஆனால் மறு ஆண்டே மீண்டும் அங்கிருந்து தப்பினார். மீண்டும் கைது செய்யப்பட்டு 1985 வரை 13 ஆண்டுகள் சிறைவாசம் பெற்றார். அடக்குமுறை சட்டங்களின் மூலம் பல்வேறு கடுமையான தண்டனைகளைச் சிறையில் அனுபவித்தார்.

1985ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானபோது

தனிமை சிறையில் மட்டுமன்றி  சூரிய ஒளி கிடைக்காதபடி உலோகத் தகடால் மூடப்பட்ட ஆழ்குழியில் அடைக்கப்பட்டுக் கொடுமைபடுத்தப்பட்டார்.   தவளைகளும் எலிகளுமே அவருக்குத்  துணையாயின.5 சித்திரவதை செய்வது, பட்டினி போடுவது, ஈக்களை அல்லது சோப்பை சாப்பிட வைப்பது, மெல்லப்பட்ட எலும்புகளை அவர் மீது எறிவது எனப் படை அதிகாரிகளின் கொடுமைக்குள்ளானார்.6 சிறையில் ஓராண்டிற்கும் மேலாக அவரைக் குளிப்பதற்குக் கூட அனுமதிக்கவில்லை. எட்டு ஆண்டுகள் எதையும் படிப்பதற்குகூட அனுமதிக்கப்படவில்லை. சிறை கொடுமைகள் வாழ்க்கையில் எண்ணிலா பாடங்களை அவருக்குப் புகட்டின. ‘சிறை வாழ்க்கைதான், தன்னை மிகவும் பக்குவப்படுத்தியதாக’ பின்னாளில் குறிப்பிட்டார் ஜோஸ் முஜிகா. சிறையில் இருந்தவாறு மக்களாட்சியை வென்றெடுக்கப் போராடும் டுபாமராஸ் கட்சிக்கு ஆலோசனைகள் வழங்கினார். 1985ஆம் ஆண்டு ஒரு பொது மன்னிப்பு சட்டத்தின் கீழ் விடுதலையானார். அதே ஆண்டு உருகுவேயில் மக்களாட்சியும் மலர்ந்தது. 

டுபமரோஸ் அமைப்பினை சட்டபூர்வமான அரசியல் கட்சியாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தார். மக்களாட்சிக்கு வலுசேர்க்கும்  விதமாக உருகுவேயின் அனைத்து ஜனநாயக கட்சிகளையும் இடதுசாரி கட்சிகளையும் ஒன்றிணைத்து, பொதுமக்கள் பங்கேற்பு இயக்கம் என்ற பெயரில் ஒரு கட்சியினை ஏற்படுத்தினார். அதன் சார்பாக முஜிகா போட்டியிட்டார். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சட்டமன்றத்திற்கும் 1999 மற்றும்  2004ஆம் ஆண்டுகலீல்  செனட்டுக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது விவாதங்கள் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட வழிவகுத்தன. 2005 மார்ச் 1ஆம் நாள் அதிபர் தபர் வெஸ்குஸ் கால்நடை, விவசாயம் மற்றும் மீன்வள துறை அமைச்சராக அவரை நியமித்தார்.7 2008ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்து  விவசாய வளர்ச்சி மற்றும்  விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகளில் ஆர்வம் காட்டினார். உற்பத்தி அதிகரித்தது. ஜோஸுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும் பெருகியது. அடுத்து  2009 அக்டோபர் மாதம்  நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு, 48 சதவிதங்கள் வாக்குகள் பெற்று,  2010 மார்ச் 1ஆம் நாள்  உருகுவே குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.  நாட்டின் முதல் குடிமகனும்  சாதாரண குடிமக்களுள் ஒருவரே என்பதை தன் எளிய வாழ்க்கை மூலம் நிருபித்தார்.

மனைவியுடன்

2005ஆம் ஆண்டு முஜிகா, முன்னாள் டுபமரோஸ் உறுப்பினரும் மான்டிவீடியோ சட்டமன்ற உறுப்பினருமான லூசியா டோபோலன்ஸ்கி என்பாரை பல ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தபின்

திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. 2009 தேர்தலில் லூசியா செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். 

எளிமை 

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், அதிபர் பதவியின் வசதிகளை ஏற்க மறுத்தார். உருகுவே அரசாங்கம் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அனைத்து வசதிகளும் கொண்ட ஆடம்பர மாளிகையை உதறித் தள்ளிவிட்டு தலைநகர் மாண்டிவீடியோவிற்கு வெளியே உள்ள  ஒரு சிறிய கிராமத்தில்,. புழுதி படிந்த  மண்சாலையின் ஓரம் அமைந்துள்ள தனது மனைவி லூசியா டொபொலன்ஸ்கிக்கு சொந்தமான  விவசாய நிலத்தில்    இரண்டு அறைகள் உள்ள எளிய  வீட்டில் தனது மனைவியுடன் ஜோஸ் முஜீகா வாழ்ந்து வந்தார். 20 நிமிடம் தனது காரில் பயணித்து மாண்டிவீடியோவில் உள்ள அதிபர் அலுவலகம் சென்று பணியாற்றி வருவதை  வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் வாழ்ந்த வீடு ஆடம்பரம் எதுவுமின்றி, அடிப்படை தேவைகளை மட்டும் நிறைவு செய்யும் விதத்தில் எளிமையானதாகக் காட்சி தந்தது.8 

‘சலவை செய்த துணிகள் உலர்வதற்காக வீட்டிற்கு வெளியே கயிற்றில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. வீட்டிற்கு வேண்டிய நீர் முற்றத்திலுள்ள கிணற்றிலிருந்து கொண்டுவரப்படுகிறது. சுற்றிலும் செடிகளும், கோரைப் புற்களும் பெரிதாக வளர்ந்து காணப்படுகின்றன. திறந்த வெளியில், தன்னந்தனியாக நிற்கிறது தகர மேற்கூரை வேய்ந்த  கொட்டகை போன்ற சாதாரண வீடு, வீட்டுக்கு முன்னால் மூன்று கால்கள் மட்டுமே உள்ள மனுலா  என்ற நாய் ஒன்று திரிந்துகொண்டிருக்கிறது. இரண்டு காவல் அலுவலர்கள் சீருடையில் நில்லாது சாதாரண உடையில் அந்த வீட்டுக்கு முன் காவலுக்கு நிற்கின்றனர். இதுவே உலகின் பிற தலைவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு, எளிய வாழ்க்கையின் அடையாளமாக விளங்கும் உருகுவே நாட்டு குடியரசு தலைவராக இருந்த ஜோஸ் முஜீகாவின் வீடு.9 

அதிபராக இருந்த போதும் அவரும்  அவரது மனைவியும் தங்கள் வீட்டிற்குப் பின்புறம் உள்ள நிலத்தில்  தாங்களே விவசாய வேலை செய்து மலர் சாகுபடி  செய்வதைத்   தொழிலாகக் கொண்டிருந்தனர். மற்ற நேரங்களில் அதிபராக அரசுப்பணிகளை மேற்கொண்டார். தனது காரில் சென்று வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வருவதும், தாங்கள் உற்பத்தி செய்த செவ்வந்தி பூக்களை விற்பனைக்குக் கொண்டு செல்வதும் அவரது அன்றாடப் பணிகளாயின.  மலர் விற்பனையில்  கிடைக்கும்  வருமானத்தைக் கொண்டு அவர்கள் தங்கள் குடும்பச் செலவுகளை மேற்  கொண்டனர். 

முஜிகா, மிகவும் எளிமையான மனிதர். ‘எளிமையைத் தனது சிறை வாழ்க்கை கற்று கொடுத்தது’. என்று பின்னாளில் அவர்  கூறினார். ஆடம்பரமாக உடை அணிவதிலோ, பங்களாவில் வசிப்பதிலோ  சிறிதும் நாட்டம் இல்லாதவர். அதிபராக இருந்தபோது கூட, தனது மாதாந்திர ஊதியமான $12,000 தொகையில்  90 சதவீதத்தை அறக்கட்டளைகளுக்கு (பெரும்பாலும் மணமாகாத தாய்மார்களுக்கு உதவிடும் அமைப்புகளுக்கு) நன்கொடையாக வழங்கி விட்டு, உருகுவே குடிமக்களின் சராசரி வருவாயான  775 டாலர்களை மட்டும்  வைத்துக்கொண்டு தனது குடும்பச் செலவுகளை மேற்கொண்டார். இதுபற்றி அவரிடம் கேட்கப்படும்போதெல்லாம், “இதனை வைத்துக் கொண்டே என்னால் நன்றாக வாழ்ந்து விட முடிகிறது”10 என்று மகிழ்ச்சியோடு கூறினார். அவரது எளிமையைக் கண்டு பெரும்பாலோர் வியந்து நின்ற அதே வேளையில் ‘பைத்தியக்காரத்தனம்’ என்றும் சிலர் கிண்டல் செய்தனர்.  அவர்களுக்கு ஜோஸ் முஜிகா “உங்களுக்கு நான் ஒரு பைத்தியக்காரக் கிழவனாகத் தெரியலாம் ஆனால் இது என்னுடைய  சுயவிருப்பத்தின் அடிப்படையில் நான் தேர்வு செய்த வாழ்க்கை முறை. என்னுடைய வாழ்வின் பெரும்பாலான பகுதியை நான் இப்படித்தான் வாழ்ந்தேன்” என்று பதில்  சொன்னார். இருப்பதைக் கொண்டு  சிறப்புடன்  வாழ்ந்த இயல்பு கொண்ட அவர், வலிந்தேற்ற எளிய வாழ்க்கையைத்  தான் மேற்கொண்டிருந்தபோதிலும் பிறர் அங்ஙனம் வாழ வேண்டும் என்று ஒருபோதும் யாரையும்  நிர்பந்தித்ததில்லை.11 ‘நான் வாழ்வதைப் போன்று வாழவேண்டும் என்று மக்களைக் கேட்டால் என்னைக் கொன்று விடுவார்கள்’ என்று ஒருமுறை அவரே  வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.12 ஆனால், தன் வாழ்க்கையை ஒரு செய்தியாக்கி, அதன் மூலம் பிறரையும் எளிய வாழ்வு வாழ அறிவுறுத்தினார். 

அலுவலகத்திற்குச் செல்லும்போது மட்டும் அதிபருக்கான உடையை அணிந்து, தன்னுடைய காரை தானே ஓட்டிச் செல்வதும். மற்ற நேரங்களில் சாதாரண உடையில் காணப்படுவதும் வழக்கமாகக் கொண்டிருந்தார். உதவிக்கென்று வீட்டில் பணியாட்கள் யாரும் கிடையாது. அவரது எளிய வாழ்க்கை பற்றி உலகம் முழுவதுமுள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு அவரது பெருமை பேசின. “எனக்கேற்பட்ட காயங்களின் விளைவே எனது எளிய வாழ்க்கைமுறை; வரலாற்றின் புதல்வனே நான்; ஒரு மெத்தை கிடைத்தாலே மகிழ்ச்சி என்ற ஒரு காலம் எனக்கிருந்தது” என்று நினைவு கூர்ந்தார்.13 அவர் உலக மக்களுக்கு விடுத்த அழைப்பு என்னவெனில், “பணத்தை மிகுதியாக விரும்புபவர்களை மக்கள் அரசியலிலிருந்து தூக்கி எறிய வேண்டும்”14 என்பதே.

ஒரு விடுமுறை நாளில் அதிபரும் அவரது மனைவியும் ஒரு சாலையோர உணவகத்தில் எவ்வித வேறுபாடுமின்றி மக்களோடு மக்களாக எவ்வித சிறப்புப் பாதுகாப்புமின்றி,  உணவு உண்பதை பார்த்த ஓர் இளைஞர் அது குறித்துத் தனது முகநூலில் செய்தி வெளியிட, அதனைப் படித்த ஒருவர், “உலகிலேயே ஒரு நாட்டின் அதிபரும் அவரது மனைவியும் எவ்வித பாதுகாப்பு அலுவலர்களின்றி ஒரு சாதாரண உணவகத்தில் உணவு உண்பது உருகுவே நாட்டில் மட்டும் தான்” என்று பதிவு செய்தார்.15   

அரசு நிகழ்ச்சிகளுக்குக் கூட சாதாரணச் செருப்பு அணிந்துசெல்வதையே  வழக்கமாகக் கொண்டிருந்தார்; நுகர்வியத்தின் அடையாளமாகக் கழுத்துப் பட்டையை அவர் கருதியதால் அதனையும் அணிய மறுத்தார். அவர் ஒரு சைவ உணவினர். அனைவருடனும் இயல்பாகப் பழகக்கூடிய முஜிகா, தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தில், நாட்டைப் பொருளாதார வளர்ச்சியடையச் செய்தார். தனது சொந்த வாழ்வில் மிகவும் எளிமையைக் கடைப்பிடித்தார்.  “என்னை ‘மிகவும் ஏழ்மையான அதிபர்’ என்று அழைக்கிறார்கள், ஆனால் நான் என்னை ஏழையாக உணர்வதில்லை. ஆடம்பரமான வாழ்க்கை முறையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டுமே உழைத்து, எப்போதும் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு மேலும் மேலும்  வேண்டும் வேண்டும் என்று ஆசையுடன்  அலைந்து திரிபவர்கள் தான் ஏழைகள்’ என்று கூறினார் ஜோஸ் முஜீகா. பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த   பேட்டி ஒன்றில், “என்னை மிகவும் ஏழை  அதிபர் என்று அழைக்கின்றனர்; ஆனால், ஏழை என்ற எண்ணம் எனக்குச் சிறிதேனும் இல்லை ஏழைகள் என்பவர்கள் மிக அதிகமாகச் செலவு செய்வதற்கு இடைவிடாது வேலை செய்பவர்களே; அவர்களின் தேவைகள் ஒரு நாளும் முடியப் போவதில்லை. மேன்மேலும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்”. “இது தனிமனித விடுதலையைப் பொறுத்த ஒரு விஷயம். பல உடைமைகளுக்கு நீங்கள் ஆசைப்படாதபோது, அவற்றை அடைய ஒரு அடிமையைப் போன்று வாழ்க்கை முழுவதும் உழைக்க  வேண்டிய தேவை ஏற்படாது” என்று கூறினார். 

உருகுவேயில் பதவியில் இருப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள்  சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என்பது சட்டம். 2010ஆம் ஆண்டு அவரது  சொத்தின்  மதிப்பு 1800 டாலர்களாகத் தான் இருந்தது. இது அவருக்குச் சொந்தமான 1987ஆம் ஆண்டு வெளிவந்த வொல்ஸ்வாகன் பீடில் காருடைய மதிப்பாகும்.16 2011மதிப்பீட்டின்படி, தன் மனைவிக்குச் சொந்தமான நிலம், டிராக்டர், வீடு என்பனவற்றில் பாதியை அவர் தனது சொத்தாகக் காட்டினார். ஆக, அவருடைய சொத்துமதிப்பு இரண்டு லட்சத்துப் பதினையாயிரம் டாலர்களாக இருந்தது.17

மிகை நுகர்வு ஆபத்தானது 

காந்தியடிகளைப் போன்று தேவைக்கு அதிகமான நுகர்வை ஜோஸ் முஜீகா முற்றிலும் நிராகரித்தார். ரியோ +20 உச்சி மாநாட்டில் பேசும்போதும் அவர் இதனையே வலியுறுத்தினார்: “பெருவாரியான மக்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க, நாம் ஒருங்கிணைந்த வளர்ச்சி பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்;  ஆனால், நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்? பணக்கார நாடுகளின் வளர்ச்சியையும் நுகர்வையும் மாதிரியாக எடுத்துக்கொள்ள விரும்புகிறோமா? நான் உங்களை ஒன்று கேட்கிறேன்; இந்திய மக்கள்  தங்கள் குடும்பங்களுக்கு ஜெர்மானியர்களின்  அளவிற்கு வாகனங்களை வைத்துக் கொள்வார்களே ஆனால், இந்தப் பூமி கிரகத்தில் என்ன நடக்கும்? எவ்வளவு ஆக்சிஜனை நாம்  இங்கு விட்டு வைத்துள்ளோம்? இக்கிரகத்தில் வாழும் எட்டு பில்லியன் மக்களும் பணக்கார சமூகங்களில் காணப்படும் நுகர்வை கொண்டிருக்கவும் அதனால் ஏற்படும்  கழிவை அகற்றவும்  தேவையான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளனவா? இந்தளவு  உயர் நுகர்வு இருக்குமேயானால்  நமது கிரகத்திற்கே அது மிகுதியான தீங்கினை ஏற்படுத்திவிடும்”.18

நுகர்வுடன் கூடிய வளர்ச்சியைப் பற்றிப் பிடிவாதமாகப் பேசிவரும் உலகத் தலைவர்களைக் குறை கூறிய அவர், இந்நிலை நீடிக்குமேயானால் உலகம் முடிவை அடைந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். “நான் மிகை நுகர்வின் எதிரி. ஏனெனில், இந்த  மிகை நுகர்வின் காரணமாக நமது அடிப்படை விஷயங்களை நாம் மறந்து விடுகின்றோம். மனித ஆற்றலை சிறிதளவு மகிழ்ச்சி தரக்கூடிய அற்ப விஷயங்களில் விரையம் செய்து வருகின்றோம்”.19 “நுகர்வு நம்மைப் பொருளாதாரத்திலும். ஆன்மீக உணர்விலும் ஏழையாக்குகிறது” என்று  வாதிட்டார்.

அதிபர்

‘ஒரு குடியரசுத் தலைவர் என்பவர் ஒரு குறிப்பிட்ட செயலாற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகின்ற ஓர் உயர்மட்ட அலுவலர்; அவர் ஓர் அரசரோ, கடவுளோ அல்லர்;  அவர் ஒரு குடியின் எல்லாம் அறிந்த சூனிய மருத்துவரும் அல்லர்; அவர் ஒரு குடிமுறை ஆட்சிப்பணியாளர்; யாரை பிரதிநிதித்துவம் செய்கின்றோமோ. யாருக்கு பணியாற்ற உள்ளோமோ அவர்களுள் பெரும்பான்மை மக்களைப் போன்று அவர் வாழ்வதே சிறந்த வழியாகும்’ என்று முஜிகா கருதினார். 

நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும்  கல்வியும் கணினியும் இலவசமாக்கினார். தொலைத்தொடர்பு துறையில் இருந்து எரிசக்தி வரை மனித வாழ்விற்கு இன்றியமையானவை யாவையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அவர் கொண்டு வந்தார். பல்லாயிரக்கணக்கான  மைல்கள் தொலைவில் உள்ள  இந்தியாவே அமெரிக்காவின் கலாச்சாரத்தால் தாக்குண்டு இருக்கும் போது, அருகாமையில் உள்ள  உருகுவேயை தன் பண்பாட்டில் இருந்து நழுவவிடாமல் பார்த்துக் கொண்டார். அரசு நிர்வாகத்தில் ஊழல் என்பதே   இல்லை எனும் நிலையை ஏற்படுத்தினார். அவர் அதிபர் பதவியில் இருந்து செல்கையில் நாடு விவசாயத் தொழில் வளர்ச்சி மூலம்  பொருளாதார ஏற்றம் கண்டிருந்தது. பத்து ஆண்டுகளில் வறுமை 40 விழுக்காட்டில் இருந்து  12 விழுக்காடாகக் குறைந்திருந்தது. குறைந்தபட்ச ஊதியம் 50 விழுக்காடு அதிகரித்திருந்தது.20 நாட்டு மக்களிடையே  செல்வ இடைவெளி குறைந்திருந்தது. சமூக நல திட்டங்களுக்கும் கல்வி வளர்ச்சிக்கும் அதிகம் செலவு செய்யப்பட்டது. 

அவரது  பதவி காலத்தின் கடைசியில் உருகுவே ஒருபால் சேர்க்கையை  அங்கிகரித்தது.(உலகில்  ஒரு பால் சேர்க்கையை அங்கீகரித்த 12ஆவது நாடு உருகுவே). கரு உருவாகி 12 வாரங்கள் வரையிலோ அல்லது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 14 வாரங்கள் வரையிலோ அதனைக் கலைப்பதை  ஏற்றுக்கொண்டது, போதைப்பொருளை அரசே  விற்கும் என்று மாற்றம் கொண்டு வந்தது என அவர் மேற்கொண்ட  மூன்று முடிவுகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்  விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும்  உள்ளாயின. போதைப் பொருள் விற்பவர்கள் பணத்திற்காக மட்டும் விற்பதில்லை; மாறாக குற்றச் செயல் புரிய நிர்பந்தித்து, அதைச் செய்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கின்றனர். அதனால் தான் அரசே அதை விற்கும் நிலைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜோஸ் முஜிகோ  முதலில் இளைஞர்களைப் போதைப் பொருள் கடத்தி, விற்பவர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். பின்னர் போதை பொருட்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது நமக்கு மிக எளிதாகி விடும்”21 என்று கூறினார்.ஆனால் அதை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், இந்த எதிர்ப்புகள் பற்றி எல்லாம் அவர் கவலைப் படவில்லை. புகையிலை வழக்கத்தைத் தீவிரமாக எதிர்த்தார். அதனை ‘ஒரு கொலையாளி’22 என்றே கடுமையாகக் கூறினார். புகை பிடிப்பதை ‘கொலை’ என்றார். போர்களை வெறுத்து அன்பின் வழி ஆட்சி செய்ய அழைப்பு விடுத்தார்.

உருகுவே நாட்டின் சட்டத்தின்படி, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக யாரும் அதிபர் தேர்தலில் போட்டியிட  முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 2015 மார்ச்  1ஆம் நாள் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த ஜோஸ் முஜிகா  தனது வீட்டிற்குத் திரும்பிய போது, ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அவருக்குப் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.வயதான ஓய்வூதியதாரராக ஒரு மூலையில் அமர்ந்து, நான் ஓய்வெடுக்கப் போவதில்லை என்று அவர் கூடியிருந்தவர்களிடம் கூறினார். பதவிக் காலத்திற்குப் பின் 40 ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக ஜோஸ் முஜிகா விருந்து நிகழ்ச்சியொன்றில் அறிவித்தார். ”அவர்களுக்கு விவசாயத்தையும் வாழ்க்கையையும் கற்றுத்தரப் போகிறேன். எனது கடைசி காலத்தை அவர்களுடனே செலவழிப்பேன்”23 என்று குறிப்பிட்டார். 

சிந்தனைகள் 

“உலகத்திற்கு எப்பொதுமே புரட்சி தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். புரட்சி என்பது துப்பாக்கிகளும் வன்முறைகளும் அல்ல. புரட்சி என்பது உங்கள் சிந்தனையை மாற்றுவது. கன்பூசியசமும் கிறிஸ்துவமும் கூட புரட்சி தான்”24 என்கிற அவரது புகழ்பெற்ற வாசகம்  அவரைப் பற்றி அறிந்த ஒவ்வொரு  இளைஞனையும் மாற்றத்தை நோக்கி நகர்த்தியது.

மனிதன் குகைகளுக்குத் திரும்பிட வேண்டும் என்றோ, பனை ஓலையின் கீழ் வாழ வேண்டுமென்றோ, ஏழ்மையே ஏற்ற வாழ்க்கை என்றோ நான் என்றும் வாதிடவில்லை. மனித மகிழ்ச்சி என்பது பிற மனிதர்களுடனான உறவு என்பதை நினைவிற்கொண்டு சிறிது உடமைகளுடன், வாழ்வதற்குப் போதிய நேரம் கொண்டு வாழ்ந்திட வேண்டும். மனிதன் என்பவன் ஒரு பருப்பொருள் அல்ல, அவனை வாங்கவோ விற்கவோ முடியாது.25 

“பணம் வைத்திருப்பவர்களுக்கும், பணத்தை விரும்புவர்களுக்கும், பணத்தின்மீது பைத்தியமாய் இருப்பவர்களுக்கும் நான் எதிரி அல்ல; ஆனால், அத்தகையோரை அரசியலில் இருந்து தனிமை படுத்திட வேண்டும்’ பணத்தின் மீது வெறிகொண்டு அலைபவர்களை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஏனெனில், அரசியலில் அவர்கள் அபாயகரமானவர்கள்…பணத்தை நேசிப்பவர்கள் தங்கள் பணத்தைப் பெருக்கிட, ஏதேனும் தொழில்,  வாணிபம் இவற்றில் தங்களை அர்பணித்துக் கொள்ளலாம். ஆனால், அரசியல் அனைவரது மகிழ்ச்சிக்குரிய ஒரு களம்’.26 

அடையாளம் 

2014 நவம்பர் மாதம் புஸ்குட என்ற உருகுவே நாளிதழில்  வெளியான ஒரு செய்தியில் அவரது எளிய வாழ்க்கையின் அடையாளமாகத் திகழும் வோல்ஸ்வோகன் காரை ஒரு மில்லியன் டாலருக்கு வாங்க விரும்புவதாக அரேபிய ஷேக் ஒருவர்  அறிவித்தார். எனினும் அந்த காரும் மூன்று கால் மனுலா(நாய்)வும் அவரிடம் இருந்து பிரிக்க முடியாதவையாகும். அவை தான் அவரின் சொத்து. ‘மனிதனுக்குச் சிறிய பொருட்கள் கூட அன்பின் அடையாளங்களாக இருப்பது இயல்பு. தனது தந்தையின் நினைவாக அவர் பயன்படுத்திய ஒரு சுத்தியலையும் சால்வையையும் அவர் பாதுகாத்து வந்தார். அதுபோன்று, “என் வாழ்வின் அடையாளங்களாக இந்த காரும் மனுலாவும் இருக்கிறது’ என்று கூறினார்.27 

பொருளற்ற பொருள்  

“சொத்து வைத்திருப்பது குற்றமல்ல; தேவைக்கதிகமான சொத்தை வைத்திருப்பவர்களுக்கு அவற்றைத் தக்கவைத்துக்கொள்ள ஏற்படுகின்ற கவலையும் அழுத்தமும் மனதில் சுமையாக அழுத்திக்கொண்டேயிருக்கும். தேவைக்கு அதிகமாக நிலங்கள் இருப்பின் அவற்றைப் பாதுகாக்கவும், கார்கள் இருப்பின் அவற்றைப் பராமரிக்கவும், முதலீடுகள் இருப்பின் வரி செலுத்த வேண்டிய பொறுப்பேற்கவும்  நம்மை உறுத்திக்கொன்டேயிருக்கும். இவை யாவும் நம் மனதை விடுதலையில் கொண்டு செல்வதற்கு மாறாக, சிறை செய்து விடும். நம் விடுதலையை, நாம் விரும்பியவற்றை அனுபவிக்கும் நேரத்தை, உலகத்துடன் நமது அனுபவங்களைப் பகிர்வதை என்று எல்லாவற்றையும் அது அபகரித்துவிடும்”28 

ஐநா சபையில் உரையாற்றுகையில்,  “நம் பண்டைய ஆவி கடவுள்களையெல்லாம் நாம் தியாகம் செய்துவிட்டோம்; சந்தை கடவுளின் ஆலயத்துள் குடியேறியுள்ளோம்; நமது பொருளாதாரத்தை, நமது அரசியலை, நமது பழக்கவழக்கங்களை, நமது வாழ்க்கையை அதுவே நிர்ணயிக்கின்றது; மதிப்பு விகிதங்களையும்  அதுவே அளிக்கிறது; கடன் அட்டைகளைக் கொடுத்துள்ளது; மகிழ்ச்சிக்கான தோற்றத்தையும் அதுவே வழங்குகிறது”. இது எதனைக் காட்டுகின்றது என்றால், நாம் நுகர்வதர்காகவே பிறந்துள்ளோம், நுகர முடியாத நிலை ஏற்படும்போது, ஒரு விரக்தி மனநிலை ஏற்படுகின்றது; வறுமையில் துன்பமுறுகின்றோம்; இயல்பாகவே ஓரங்கட்டபடுகின்றோம் என்பதையே.29  

2013 செப்டம்பர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 68ஆவது கூட்டத்தில்    பருவநிலை மாறுதல் குறித்து உரையாற்றுகையில், வருங்காலச் சந்ததியினருக்கு பூமியை பாதுகாத்து அளிப்பதான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பன்னாட்டுச் சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார். இன்று அறிவியல் சாதனைகளைப் போற்றும் வகையிலான   விதிமுறைகளுக்காக உலகம் ஏங்கி கொண்டிருக்கிறது. அறிவும் கூட்டு முயற்சியும் இருந்தால் பிற கண்டுபிடிப்புகளுடன், மனிதன் பாலைவனத்தைப் பசுமையாக்கலாம். கடல் நீரில் வேளாண்மை செய்யலாம்; நல்ல மனிதர்களைக் கொண்ட ஓர் உலகம் உருவாக்கலாம். ஆனால், இன்றைய நிலையில் உயிர்களைப் பாதுகாப்பதே தலையாயக் கடமையாக உள்ளது.  சாதாரண மக்கள் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நிதி அமைப்புகளின் அதிகாரம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி குறித்து அவர் சுட்டிக் காட்டினார். பொருளாதாரம், சந்தை என்றெல்லாம் சிக்குண்டு இராது,  எளிமையுடன், மனித உறவுகளுக்கு மதிப்பளித்து, அன்பு, நட்புறவு, தீரம், ஒருமைப்பாடு, குடும்பம் இவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.30 பொருளற்ற பொருள் மீதான வெறியை அகற்றி எளிமை வழிகண்டுய்யுமாறு  உலகிற்கு  அழைப்பு விடுத்தார்.

ரியோ +20 உச்சி மாநாட்டில்  சுற்றுச் சூழல் பாதுகாப்பு அடிப்படையில் கொள்கைகள் வகுக்கப்படவும் நுகர்வை கட்டுப்படுத்தவும் வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். தனது உரையில், “நாம் எல்லாவற்றையும் மறு சுழற்சி முறையில் கொண்டுவர வேண்டும். நாம் விவேகமான வழிமுறைகளுடன்  வாழ்ந்தோமேயானால், உலகில் உள்ள ஏழு பில்லியன் மக்களும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற முடியும். உலக அரசியல் இந்த இலக்கை நோக்கி நகர்த்தப்பட வேண்டும்”31 என்று குறிப்பிட்டார்.

முஜிகாவின் சமய நம்பிக்கைகள் பத்திரிகைகளின் ஆர்வத்திற்கும் ஊகத்திற்கும் உள்ளாயின.  2012 நவம்பர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், அவர், “எனக்கு மதம் இல்லை, ஆனால் நான்ஓரளவு  சர்வ கடவுள்  நம்பிக்கை கொண்டவன்; நான் இயற்கையை ரசிக்கிறேன்” என்று கூறினார்.

ஜோஸ் முஜிகோ உலக வரலாற்றில்  மிகவும் ஏழையான, எளிமையான அதிபராக அறியப்படுகிறார். ஸ்விஸ் வங்கிக் கணக்கு இல்லாத அரசியல் தலைவர்களே இல்லை என்று சொல்லப்படுகிற இந்தக் காலத்தில் சாதாரண வங்கிக் கணக்குக் கூட இல்லாத எளிய அதிபராக இருந்தவர். தனக்குக் கடனுமில்லை, சொத்துமில்லை, கவலையுமில்லை என்று மன நிறைவோடு கூறினார். மிகை நுகர்வு மகிழ்ச்சியைச் சுரண்ட வல்லது; எளிமையே என்றும் இனிமை பயப்பது என்று அவரது வாழ்வே உலகிற்கு ஒரு பாடமாக விளங்குகிறது.   “குறைவான அளவே  நிறைவு, குறைவான அளவே சுதந்திரம்”(Less is More, Less is Freedom) என்ற ஆழமான கருத்தினை மனித இனம் மகிழ்ச்சியாக வாழவும் உலகம்  அமைதியில் திழைக்கவும் ஜோஸ் முஜிகோ அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். 

2020ஆம் ஆண்டு  முஜிகா அரசியலில் இருந்து ஓய்வு பெற்றபோதிலும், உருகுவேயில் ஒரு முக்கிய நபராகத் தொடர்ந்து விளங்கினார். 2024 ஏப்ரல் மாதம் உடல் பரிசோதனையின் போது முஜிகாவுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 2025 ஜனவரி மாதம்  புற்றுநோய் கல்லீரலுக்குப் பரவிவிட்டது. தான் மெல்ல மெல்ல இறந்துகொண்டிருப்பதாக  அவர் உணர்ந்தார். அவர் மேலதிக சிகிச்சையைத் தவிர்த்தார். மே 12 முதல்  “இறுதிக்கட்ட நோயால்” பாதிக்கப்பட்டு, அவர் இறுதிக்காலப் பராமரிப்பில் வைக்கப்பட்டார். தனது 90வது பிறந்தநாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, 2025 மே 13 அன்று, தனது பண்ணை வீட்டில் அவர் இறந்தார். முந்தைய ஆண்டு நவம்பரில் பிபிசிக்கு அவர் அளித்த கடைசிப் பேட்டியில், “மரணம் தவிர்க்க முடியாதது என்பது அனைவருக்கும் தெரியும். ஒருவேளை அது வாழ்க்கையின் உப்பைப் போன்றது” என்று கூறியிருந்தார்.

அடிக்குறிப்புகள் 

1Carlos Gabetta,’An Interview with Uruguay’s José Mujica: From Armed Struggle to the Presidency’, March 24, 2015, upsidedownworld.org 

2Nina Porzucki ‘Perhaps the world’s most humble leader -humbly steps down’, PRI’s The World, March 02, 2015

3Lorena O’Neil, ‘Jose Mujica, Guerrilla Turned Gardener’,  The Daily Dose, Jan 27 2014 

4Jane Louise Kandur,’President of Uruguay Jose Mujica’s revolutionary approach’,

Daily Sabah, September 27, 2014, www.dailysabah.com

5Katie Rucke,Does The World Need More “Poor Presidents” Like Uruguay’s Mujica?’, mintpressnews, June 4, 2014

6Jonathan Gilbert,‘Uruguay’s most unexpected champion of capitalism’, fortune.comJanuary 23, 2015

7Jane Louise Kandur, loc.cit.

8Vladimir Hernandez, ‘Jose Mujica: The world’s ‘poorest’ president’, BBC News,15 November 2012

9‘Uruguay’s Jose Mujica, the poorest president in the world’, BBC News,Youtube, Dec 9, 2013 

10Eve Fairbanks,’Jose Mujica Was Every Liberal’s Dream President. He Was Too Good to Be True’, February 6, 2015, https://newrepublic.com

11John,‘Jose Mujica Quotes To Change Your Views On Politics’, all-that-is-interesting.com

12Jonathan Watts, ‘ Meet Uruguay’s president José Mujica: A human leader in a world ruled by psychopaths’,The Guardian, 14 Dec 2013

13 John Haltiwanger, ‘5 Quotes From The World’s Poorest President Show It Pays To Be Humble’, elitedaily.com

14Roque Planas,  ‘World’s Poorest President’ Explains Why We Should Kick Rich People Out Of Politics’, Huffington Post, OccupyWallStreet.net

15 ‘Jose Mujica, The Poorest President in the World’, ww.mkgandhi.org

16Vladimir Hernandez, loc cit..

17மேலது 

18Human happiness and the environment – Address by Uruguayan president Jose Mujica at Rio +20 Summit,20 June 2012, thewanderlife.com

19Roque Planas, ‘World’s Poorest President’ Explains Why We Should Kick Rich People Out Of Politics’, Huffington Post, OccupyWallStreet.net

20John,José Mujica, Uruguay’s Anti-Politician’, all-that-is-interesting.com. December 16, 2014

21 Donna Bowater,’Legalising cannabis: Uruguay’s president Jose Mujica asks world for support’, The Telegraph, 31 Mar 2014

22‘Uruguay’s Mujica to Obama: Tobacco is ‘murder’, The Tico Times News, May 12, 2014

23Jonathan Watts,  Uruguay’s president José Mujica plans adoptions to teach children farming’, theguardian,16 December 2013

24Jonathan Watts, ‘Uruguay’s president José Mujica: no palace, no motorcade, no frills’, theguardian,13 December 2013

25Granma, José Mujica speaks at Casa de las Americas, January 26, 2016, internet@granma.cu, February 8, 2016 

26Roque Planas,  ‘World’s Poorest President’ Explains Why We Should Kick Rich People Out Of Politics’, Huffington Post, OccupyWallStreet.net 

27Uruguayan president Jose Mujica receives $1m offer for his blue Beetle’, theguardian, 7 November 2014   

28Uruguayan President focuses on climate change, environment in UN Assembly speech, UN Newscentre, http://www.un.org

29Eve Fairbanks,’Jose Mujica Was Every Liberal’s Dream President. He Was Too Good to Be True’, February 6, 2015, https://newrepublic.com

30Uruguayan President focuses on climate change, environment in UN Assembly speech, UN Newscentre, http://www.un.org 

31Giles Tremlett, ‘José Mujica: is this the world’s most radical president?’, theguardian, 18 September 2014

*மேனாள் முதல்வர், காமராஜர் அரசு கலைக் கல்லூரி, சுரண்டை, தென்காசி மாவட்டம் 


Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.