ஹாரிசன் போர்ட் நடித்த Raiders of the Lost Ark பட வரிசையில் ஜெர்மனிய, அதுவும் குறிப்பாக நாஜி, அகழ்வாராய்ச்சியாளர்களே பெரும்பாலும் வில்லன்களாக இருப்பார்கள். திபெத்திலிருந்து தென் அமெரிக்கா வரை போர்ட், அதாவது இன்டியானா ஜோன்ஸ், உலக மேப்பின் மேல் சிவப்பு கோடிட்டு கொண்டே, அவ்விடங்களுக்கு செல்வதற்கு முன்னதாகவே, தமது பரிவாரங்களுடன் சென்று அந்த பழம் நாகரீகங்களின் பொருட்களை அகழ்ந்தெடுத்து, அழகாக பார்சல் செய்து அவற்றை பெர்லினுக்கு அனுப்ப தயாராக இருப்பார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். வழக்கம் போல போர்ட் அங்கே வந்து சாட்டையை சுழற்றி அவற்றை ஆட்டை போட்டு விடுவார். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இதில் கொஞ்சம் உண்மை உண்டு. இதை நான் அறிந்து கொண்டது ஆதிச்சநல்லூரில் தான்.
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர், நவ திருப்பதி க்ஷேத்திரங்கள், பாபநாசம் என்று பல முறை சென்று வந்திருந்தாலும், போகின்ற வழியில் ஸ்டேட் ஹைவே 109ற்கு அருகே, பாதையோரத்தில் இரும்பு கிராதிகள் அணிவகுத்து நிற்க, பெரும் பதாகை ஒன்று இது தான் ஆதிச்சநல்லூர் என்று உரக்க கூவும் இடத்திற்குள் நுழைந்ததே இல்லை. நம்மை போன்ற சாமானியர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது என்ற ஒரு அசட்டு கற்பனை ஒரு காரணம். மற்றபடி கோவில் நடை சாத்தி விடுவார்கள், வெயில் அதிகம், சாப்பாட்டிற்கு நேரம் ஆகி விட்டது என்று பொதுவாகப் பயணங்களை துரிதப்படுத்தும் காரணங்களும் உண்டு. இம்முறை இவற்றையெல்லாம் உதறி விட்டு உள்ளே நுழைந்து விட்டேன்.
**
கண்ணாடித் தரையின் அடியில் பல விதமான மண்பானைகள் தென்பட்டன. விரிசல்கள் ஏதுமின்றி, இப்பொழுது தான் செய்து மண்ணிற்கு அடியில் புதைத்தது போல் சில. உடைந்து நொறுங்கி சில்லுகளாக குவிக்கப்பட்ட பானைகள் ஓர் இடத்தில். சில பானைகள் அண்டா போல் பெருத்து இருக்க மற்றவை நம் வீடுகளில் நீர் பிடித்து வைக்கும் பாத்திரம் அளவு மட்டுமே. சிலவற்றின் மீது கூம்பு வடிவ மூடிகள். மற்றவை மூடிகள் ஏதுமின்றி மண்ணால் நிறைந்திருந்தன. ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்தவைகளை அங்கேயே பார்வையிட அமைக்கப்பட்டிருந்த சிறு அருங்காட்சியகத்தில் நின்று கொண்டிருந்தேன்.
ஓர் இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை, வேறேதோ இடத்தில் காட்சிப்படுத்தும் அருங்காட்சியங்கள் ஒரு வகை. அங்கே உள்ள பொருட்கள் சொல்லும் கதைகள் சுவாரஸ்யமாக இருந்தாலும் சற்று தட்டையாக இருப்பது போல் எனக்கு படும். வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் கூண்டுகளில் வங்காளத்திலிருந்து வந்த வெள்ளைப் புலியையும், ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மனிதக் குரங்கையும் பார்ப்பது போல் தான் அந்த அனுபவம்.
மற்றொரு வகை அருங்காட்சியகம், அகழ் ஆராய்ச்சி செய்த பகுதிகளை, அங்கே கண்டெடுத்த பொருட்களை, அதன் அமைப்பு மாறாதவாறு அப்படியே பராமரித்து, அங்கேயே சென்று பார்வையிட ஏது செய்யும் ‘In situ museum’ கள். இங்கே இருக்கும் பொருட்கள் சொல்லும் கதைகளில் ‘நேட்டிவிட்டி’ சற்று அதிகம் உள்ளதாக எனக்கு தோன்றும். சரணாலயத்திலோ, காடுகளிலோ நாம் எதேச்சையாக காணும் மிருகங்கள் போல்.
ஆதிச்சநல்லூரில் இருந்த சிறு அருங்காட்சியகம் இரண்டாம் வகை. நிலத்திற்கு அடியே உள்ள பாறைகளை குடைந்து, மண்ணை அகழ்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மண்பானைகளை சுற்றி வந்து பார்வையிட மர சட்டங்களால் ஆன பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. விட்டத்தில் பொருத்தப்பட்ட குவி விளக்குகளின் வெளிச்சத்தில் நாம் நடக்கும் பாதைக்கு அடியே இருந்த இந்தப் பானைகள் வெண்மை, நீலம், கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மெளனமாக மிளிர்ந்தன. இவை யாவும் முதுமக்கள் தாழி என்றழைக்கப்படும் ஈமத்தாழிகள் (Burial urns). அதாவது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் மண் கலன்கள்.
ரத்தமும், சதையும், மகிழ்ச்சியும், சிரிப்பும், காதலும், ஏக்கமும் கொண்ட மனிதர்கள் இறந்து, புதைந்த இடத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு பின் வந்த நான் என் அலைபேசியில் அடைத்துக் கொண்டேன்.
**

இறந்தவர்கள் மறைந்து விடுவதில்லை. அவர்கள் எங்கோ, ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கிறார்கள் என்பது மானுடத்தின் வேர்களில் இருந்தே கிளைத்து வந்த நம்பிக்கை. பூமிக்கு அடியில் கற் பலகைகளால் ஆன சிறு அறையில் சடலத்தை கிடத்துவது. அல்லது மண் தாழிகளில் இறந்தவர்களை இட்டு புதைப்பது என்பது சீனா முதல் ஐரோப்பா கண்டம் வரை பல தொல் சமூகங்களில் காணப்பட்ட ஒரு பழக்கம்.
இறந்தவர்களை தாழிகளில் புதைப்பதைப் பற்றி சங்க இலக்கியங்களில் கூட குறிப்புக்கள் உண்டு. உதாரணத்திற்கு, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புலவர் ஐயூர் முடவனார் ஒரு குயவனை பார்த்து பாடும் பாடல் ஒன்றுள்ளது. அவரின் புரவலரான சோழ மன்னன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வானுலகம் எய்தி விட்டான் என்றும் அவன் உடலை அடக்கம் செய்ய வேண்டுமென்றால் பூமியை சக்கரமாக்கி மேருவை மண்ணாக்கி செய்த தாழியில் தான் அது முடியும் என்றும் அத்தகைய ஈமத்தாழியை அந்தக் குயவனால் செய்ய முடியுமா என்று கேட்பதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.
இறந்தவர்கள் புதைக்கப்பட்ட இவ்விடங்களின் மேல் பல விதமான ஈமச் சின்னங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக பெருங்கற்காலத்தில் (Megalithic age), அதாவது சுமார் 3000 கி. மு முதல் 100 கி. பி வரை, இறந்தவர்களை அமரர்களாக்கும் இத்தகைய சின்னங்கள் பல வடிவங்களில் எழுப்பப்பட்டன. குத்துக்கல் (Menhir), கல்திட்டை (Dolmen), குடைக்கல் (Hood stones), கல்வட்டம் (Cairn circle) என்று அவை பல நிலப்பரப்புகளில் இன்றும் காணப்படுகிறது.
இந்தியாவில் காஷ்மீர் தொடங்கி கர்நாடகா வரை ஈமச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. நமது அண்டை மாநிலமான கேரளாவில், திருச்சூருக்கு அருகே குடக்கல்லு பறம்பு என்ற இடத்தில், ஏறக்குறைய ஒரு ஏக்கர் பரப்பில், நான்காயிரம் ஆண்டுகள் பழமையான 69 கற்சின்னங்களை இன்றும் கூட காணலாம். தமிழகத்திலும் இவை உண்டு. தேனி, திருச்சி, கோவை, செங்கல்பட்டு என்று பல இடங்களில் பெருங்கற்கால சின்னங்களை காணலாம்.
இந்த வரிசையில் ஆதிச்சநல்லூர் மிகப் பிரசித்தம். ஆனால், பிற இடங்களை போல் நிலத்தின் மேலே நட்டு வைத்த கற்சின்னங்கள் இங்கு கிடையாது. ஆதிச்சநல்லூரில் காணப்படுவது நிலத்திற்கு அடியே புதைந்து கிடக்கும் முதுமக்கள் தாழிகள் மட்டுமே. அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழிகள் இங்கே உண்டு என்று கூறப்படுகிறது.
ஆதிச்சநல்லூர் என்பது ஏதோ ஒரு சிலர் மட்டும் புதைக்கப்பட்ட இடம் அல்ல. பல நூற்றாண்டுகளாக, பல தலைமுறைகள் மண்ணில் இடப்பட்ட இடம். இன்று, செயற்கை குவி விளக்குகளின் ஒளியில் தோண்டப்பட்ட சில குழிகளில், நம் கண்களுக்கு ஒரு சில முதுமக்கள் தாழிகள் தான் தென்பட்டாலும், தாமிரபரணியின் கரையின் மேட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூர் ஒரு பெரும் தாழிக்காடு.
அது மட்டும் அல்ல, ஏறக்குறைய 114 ஏக்கர்கள் விஸ்தீரணம் உடைய இந்தப் பகுதி சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரும் சமூகத்தின் மையமாகவும் இருந்ததற்கான சான்றுகள் இங்குண்டு. இந்தப் பகுதியில் இத்தகைய ஒரு பெரும் கலாச்சாரம் இருந்தது என்பதை நாம் அறிந்து கொண்டது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தான். அதற்கு காரணம் ஒரு ஜெர்மானியர்.
**
பெர்லினில் மிகப் பிரபலமான தங்கும் விடுதிக்கு அதிபராக இருந்தவர் பெடோர் ஜாகோர் (Fedor Jagor). ஆதலால், செல்வத்திற்கு குறைவில்லை. அதை வைத்து கொண்டு அவர் மிக சொகுசாக வாழ்ந்திருக்கலாம் தான். ஆனால், ஜாகோருக்கு தன்னை சுற்றி விரிந்திருக்கும் உலகை பற்றி அறிந்து கொள்ள பெரும் ஆவல் இருந்தது. அதை பற்றி அறியும் பொருட்டு தன் செல்வத்தை செலவழிப்பதற்கும் தயாராக இருந்தார். இந்தத் தேடல் தான் 1850 களில் அவரை உலகின் பல நாடுகளுக்கு இட்டு சென்றது.
ஜாகோர் மேற்கொண்ட பயணம் வெறும் சுற்றுலாவாக இருக்கவில்லை. உலகின், குறிப்பாக கிழக்கு ஆசிய, மக்களை பற்றிய ஒரு புரிதலை உருவாக்க தரவுகள் சேகரிக்கும் ஒரு பயணமாகத் தான் அதை அவர் வடிவமைத்தார். சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், இந்தோனேசிய தீவுகள் ஆகிய இடங்களில் பல ஆண்டுகள் வசித்தார். அங்கே வாழும் மக்களின் கலாச்சாரம், கடல் வளம், எரிமலைகள் என்று பலவற்றையும் ஆவணப்படுத்தினார். இவர் எடுத்த புகைப்படங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கிழக்கு ஆசிய மக்களின் வாழ்க்கை முறை, வாழும் இடங்கள், இயற்கை காட்சிகள் ஆகியவற்றை பற்றிய ஒரு சிறந்த ஆவணத் தொகுப்பாக இன்று வரை திகழ்கிறது.
ஜாகோர் வரலாற்றிலும் ஆர்வம் கொண்டவர். அவர் இந்தியாவிற்கு எப்போது வந்தார், எங்கெல்லாம் சென்றார் என்பதை பற்றிய விவரங்கள் அவ்வளவாகத் தெரியவில்லை. ஆனால், பீஹாரிலும், வங்காளத்திலும் இருந்து இவர் எடுத்து வந்த கற் சிலைகள் பெர்லின் அருங்காட்சியகத்தில் உள்ளன. தெற்கு ஆசியாவை தவிர்த்து, பிரிட்டிஷ் அருங்காட்சியத்திற்கு அடுத்ததாக, பெர்லின் அருங்காட்சியகத்தில் தான் இத்தகைய சிலைகளின் எண்ணிக்கை அதிகம் என்று இவரை பற்றி எழுதிய ஆராய்ச்சியாளர் ஜோக்கிம் பாட்ஸ் கூறியிருக்கிறார்.
ஆதிச்சநல்லூரை பற்றி ஜாகோர் எங்கே கேள்விப்பட்டார் என்று தெரியவில்லை. இருப்பினும், 1876 ஆம் ஆண்டு அவர் ஆதிச்சநல்லூரில், தாமிரபரணியின் கரையில் உள்ள மேடுகளை முதன் முதலாக அகழ்ந்தெடுத்தார் என்பது மட்டும் ஆங்கிலேயர்களின் அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது. ஜாகோர் தோண்டியது ஆதிச்சநல்லூரின் ஒரு மிகச் சிறிய பகுதி மட்டுமே. சுமார் 250 சதுர அடிகள்.
இத்தனை சிறிய இடத்தில் கூட பல வகையான பொருட்கள் கிடைத்தன என்பது தான் ஆச்சரியம். ஏறக்குறைய ஐம்பது வகையான தாழிகள், சிறு ஆயுதங்கள், தானியங்கள் என்று தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருந்தன. ஆதிச்சநல்லூரில் தோண்டியெடுக்கப்பட்ட மண் பாண்டங்களின் தரம், இப்பொழுது பஜார்களில் கிடைக்கும், பாண்டங்களை விட உயர்ந்ததாக இருக்கிறது என்று இந்த அகழ்வில் ஜாகோரோடு சென்ற திருநெல்வேலி ஆங்கிலேய ஆட்சியாளர் ஸ்டூவர்ட் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜாகோர் ஜெர்மன் நாட்டு விசுவாசி. தான் தோண்டியெடுத்த அத்தனை பொருட்களையுமே பெர்லின் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விட்டார். மெட்ராஸ் அருங்காட்சியத்திற்கு ஒரு பானையின் சில்லைக் கூட அனுப்பவில்லை. இந்தியாவில் அன்று இண்டியானா ஜோன்ஸ் போன்று யாரும் இல்லாததால் தோண்டியெடுத்த நம் நாட்டு கலாச்சார சின்னங்களை சுலபமாக ஜெர்மனிக்கு கப்பலேற்ற முடிந்தது என்று வேண்டுமானால் தமாஷாக கற்பனை செய்து கொண்டு நம்மை நாமே தேற்றிக் கொள்ளலாம். ஆனால், போனது என்னவோ போனது தான்.
இதற்கு பின்னர் பல ஆண்டுகள் கழித்து, 1899 ஆண்டு முதல் 1905 ஆம் ஆண்டு வரை, அக்காலத்தில் தென் இந்திய தொல்லியல் துறையின் தலைவராக இருந்த அலெக்சாண்டர் ரியாவின் தலைமையில் ஆதிச்சநல்லூர் மீண்டும் கவனம் பெற்றது. அதற்கு பின்னர் பல்வேறு காலகட்டங்களில் ஆதிச்சநல்லூர் ஆராயப்பட்டு அதன் நீண்ட வரலாற்றின் சில பக்கங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
**
அருங்காட்சியத்திற்கு வெளியே, சற்று தூரத்தில், நிலத்தில் கம்புகள் நட்டு, கூரை வேயப்பட்ட இடம் ஒன்று தென்பட்டது. அதை நோக்கி, சரளை கற்களும், செம்மண்ணும் விரவிக் கிடந்த சரிவில், ஏறி சென்றோம்.
அங்கே நாங்கள் கண்டது ஒரு தற்காலிக கட்டமைப்பு தான். மழை, வெயில் போன்றவற்றிலிருந்து உள்ளே இருப்பவைகளை, ஏதோ முடிந்த வரை, தடுக்க அமைக்கப்பட்ட ஒரு கொட்டகை மட்டுமே. சுவர்களுக்கு பதிலாக இருந்த பிளாஸ்டிக் திரைகளை விலக்கி விட்டு உள்ளே நுழைந்தோம். உள்ளே நடுநாயகமாக நாற்காலியில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அலைபேசியில் ஒலித்துக் கொண்டிருந்த ஏதோ காரசாரமான விவாதத்தை மௌனமாக்கி விட்டு தலை உயர்த்தி எங்களை பார்த்தார். அவர் உட்கார்ந்திருக்கும் இடத்தை சுற்றி, தரையெங்கும் சதுரங்கப் பலகை போல் வெவ்வேறு ஆழங்களில் தோண்டப்பட்டப் பள்ளங்கள்.
‘இங்க சுத்தி பாக்கலாமா’ என்று கேட்டேன். மெளனமாக தலையசைத்து விட்டு அவர் முன் இருந்த மேஜையில் இருந்த கையேட்டில் எங்கள் விவரங்களை பதிக்கச் சொன்னார்.
‘மெட்ராஸிலுருந்து வாரியளா? கோயிலெல்லாம் பாத்துட்டியளா?’ என்றார் நாங்கள் எழுதிய விவரங்களை படித்த படி. மெளனமாக தலையசைத்தோம்.
அவரை சுற்றி இருந்த பள்ளங்கள் எல்லாவற்றிலும், ஏதோ தொல் மிருகத்தின் பெரும் முட்டைகள் போல், முதுமக்கள் தாழிகள் நிலத்தில் பொதிந்திருந்தன.
‘நாலஞ்சி வருசத்துக்கு மொதல்ல தானாக்கும் இத தோண்டுனாக’ என்றார் மேஜையில் இருந்த கையேட்டை மூடியபடி.
பள்ளங்களின் விளிம்பில் நடந்தோம். சில குழிகளுக்கருகே, அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களின் பட்டியல் வைக்கப்பட்டிருந்தது. ஒரு குழிக்குள்ளே இத்தனை பொருட்களா என்று ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. சிவப்பு பூச்சு பானைகள், கொப்பரைக்கிண்ணம், கோப்பைகள், கூம்பு வடிவ மூடிகள், வெண்கல வளையல்கள், வெண்கல விலங்கு கைப்பிடி கொண்ட மூடி, உளி, மண் வெட்டி, இரும்பு குறுவாள் என்று பட்டியல் நீள்கிறது.
‘தங்கதுல கூட சில சாமான்கள் கெடந்துச்சு, அதெல்லாம் ம்யுசியத்துக்கு கொண்டு போயிட்டாக’ என்றார் நாற்காலி மனிதர்.
கூரை இடுக்குகள் வழியே வெளிச்சக் கோடுகள் பள்ளங்களில் விழுந்து தாழிகளின் சொரசொரப்பான பூச்சில் கோலமிட்டன. காற்று பிளாஸ்டிக் திரைகளை விலகிக் கொண்டு, உள்ளே வட்டமிட்டு, தூசியை சிறு சுழல்களாக மேலெழுப்பி, பல புகை வடிவங்களை கொட்டகையின் மங்கிய வெளிச்சத்தில் உலவ விட்டது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் நம்மிடம் அவர்கள் கதையை சொல்ல நினைக்கிறார்களோ? அபத்தமான கற்பனை தான். இருந்தாலும் நின்றிருக்கும் இடத்தின் கனம் அதில் ஒரு துளியாவது உண்மை இருக்கக் கூடும் என்று உணர்த்தியது.
**
உலகெங்கும் தோன்றிய பழம் பெரும் நாகரீகங்களின் வரிசையில் பொருநை (தாமிரபரணி) நதி கரைகளில் உதித்த நகரங்களும் அடங்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலத்தில் வலுப்பெற்றிருக்கிறது. அதற்கு காரணங்கள் உண்டு.
இங்கே வாழ்ந்த மக்கள், எகிப்தியர்களை போல் பிரமிடுகளை அமைக்கவில்லை, தென் அமெரிக்க நாகரீகங்களை போல் பெரும் கோவில்களை எழுப்பவில்லை, இருந்தாலும், ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்த இவர்கள் பல துறைகளில் அசாத்திய பாய்ச்சல்களை செய்து காட்டியிருக்கின்றனர்.
இரும்பு ஆயுதங்கள் முதல் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட வெண்கல மற்றும் தங்க உபகரணங்கள் வரை செய்ய உதவிய உலோகவியல் நுட்பம்; காலத்தை வென்று நிற்கும் திடமான மண் பாண்டங்கள் உருவாக்குவதற்கான தொழில்நுட்பம்; திட்டமிட்ட நகரங்களை அமைப்பதற்கான திறன்; உலகின் பல பகுதிகளோடு உருவான கடல் கடந்த தொடர்புகள்; செழிப்பான விவசாய பின்புலம் என்று பல துறைகளில் இந்த நாகரீகம் தன் முத்திரையை பதித்துவிட்டு சென்றிருக்கிறது.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த பானை சில்லுகள், எலும்புகள், தானிய துகள்கள், உலோக வஸ்துக்கள் போன்றவை நமக்கு பல கதைகளை சொல்கின்றன.
உதாரணத்திற்கு, ‘கா ரி அ ரா வா [நா] டா’ என்ற எழுத்துக்கள் இங்கே அகழ்ந்தெடுத்த ஒரு தாழியின் உள்ளே பொறிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் ப்ராஹ்மியின் ஒரு வடிவம் போல உள்ள இந்த எழுத்துக்கள் பானை செய்தவரின் பெயரையோ அல்லது அதில் அடக்கம் செய்யப்பட்டவரின் பெயரையோ குறிப்பதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இங்கே வாழ்ந்தவர்கள் பெண் தெய்வங்களை வணங்கினார்கள் என்பதற்கு சான்றாக வெண்கலத்தில் வடிக்கப்பட்ட பெண் தெய்வத்தின் சிறு சிலை கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. விரிந்த இடையில் ஒட்டியானமும், காதுகளில் பாம்படம் போன்ற ஆபரணத்தையும் அணிந்திருக்கும் இந்த சிலையை இன்றும் கூட சென்னை அருங்காட்சியகத்தில் காணலாம். சமீபத்தில், கொற்றவையின் முன்னோடி போல் இருக்கும் ஒரு பெண் தெய்வத்தின் உருவமும், அவளை சுற்றி சில மிருகங்களும் பொறிக்கப்பட்ட பானை சில்லு ஒன்றின் கண்டெடுப்பு பெண் தெய்வ வழிபாடு என்ற கருதுகோளுக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த மனித எலும்புகள் வேறொரு சுவாரஸ்யான கதையை சொல்கின்றன. இறந்தவர்களில் ஆப்ரிக்கா (Negroid), ஐரோப்பா மற்றும் மெடிட்டெரேனியன் (Caucasoid), கிழக்கு ஆசியா (Mongoloid) போன்ற பகுதிகளில் இருந்து வந்தவர்களின் எலும்புகளும் கிடைத்துள்ளன.
இந்த எலும்புகளின் கலவை சொல்வது என்னவென்றால் சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆதிச்சநல்லூர் ஒரு ‘காஸ்மோபாலிடன்’ நகராக இருந்திருக்கிறது. இதற்கு அருகில் இருக்கும் கொற்கை ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அந்நாட்களில் கொற்கை ஒரு பரபரப்பான துறைமுகம். அங்கிருந்து முத்து, பருத்தி, வாசனை திரவியங்கள் போன்றவற்றை கிரேக்கம் முதல் சீனா வரை சென்றன. பல நாட்டு வணிகர்களும், மாலுமிகளும் வந்து குழுமும் இடமாகவும் அது இருந்தது. இவர்களில் பலர் ஆதிச்சநல்லூருக்கு வந்திருக்கக் கூடும். இன்று சென்னை விமான நிலையத்திலோ, துறைமுகத்திலோ நாம் காணும் பல தேசத்து முகங்கள் எப்படி நமக்கு பழகிவிட்டனவோ அவ்வாறே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆதிச்சநல்லூர்வாசிகளுக்கும் இந்த அந்நிய முகங்கள் பழகியிருக்கலாம்.
ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் அதிக அளவு கிடைப்பதால் அது வெறும் இறந்தவர்களை புதைக்கும் இடம் என்ற ஓர் எண்ணம் உண்டு. அது உண்மை அல்ல. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் கோட்டை சுவர்கள், குயவர்களின் சூளை, தாமிரம், தங்கம் போன்றவற்றை வெட்டி எடுத்தற்கான சான்றாக சுரங்கங்கள் என்று மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே ஒரு தொழிற்சாலை நகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்ததை நமக்கு காண்பிக்கிறது.
**
கொட்டகைக்கு சற்று தள்ளி இருந்த சாலையில் பஸ்களும், கார்களும் விரைந்து கொண்டிருந்தன. தொடுவானில் மின்சாரக் கம்பிகளும், அலைபேசி கோபுரங்களும் நிழல் கோடுகளாக நின்றிருந்தன. ‘வி ஹவ் கம் சோ பார், இல்ல’ என்று சொல்லி விட்டு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு இருந்தவர்களுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை சுட்டும் வகையில் ‘மெட்டா, டெல் மீ சம்திங் அபவுட் ஆதிச்சநல்லூர் எக்ஸ்கவேஷன்ஸ்’ என்று அவன் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை வருடினான் நண்பன்.
அருகில் இருந்த அய்யனார் கோவிலுக்கு அருகே ஒரு குடும்பம் படையலுக்காக பானையில் பொங்கல் கிண்டிக் கொண்டிருந்தனர். ‘வெளியூர்காரருங்களா? வாங்க! பூஜை இப்ப முடிஞ்சிரும். ஒரு வாய் பொங்கல் திண்டுட்டு போங்க’ என்றாள் பொங்கலை கிளறிக் கொண்டிருந்த ஒரு கிழவி. அவள் காதுகளில் பாம்படம் ஆடியது. ‘ஐ டோன்ட் திங்க் வி ஹவ் கம் வெரி பார்’ என்றேன் நண்பனிடம்.
Discover more from சொல்வனம் | இதழ் 370 | 12 ஜூலை 2026
Subscribe to get the latest posts sent to your email.
