ஷ்வார்ஸ்வால்டில் தண்ணீரைத் தேடி

அர்ச்சனா விழித்துக் கொண்டாள்.   நேரம் என்ன என்று பார்த்தாள். ஃப்ராங்க்ஃபர்ட் (Frankfurt) சேர இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. விமானத்தின் சீரான ஓசையில் மாறு பாடு இல்லை. விழிப்பிற்கு அது காரணம் இல்லை. அருகில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். மெலிதான சூட்டுடன் உணவு மணம் வந்தது. விமான பணியாளர்கள் காலை உணவை சுட வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன உணவு என்று விளங்காமல் ஒரு வாசனை. என்னவாவது இருந்து போகட்டும். சேமியா உப்புமா மாதிரி ஏதாவதும் சுருட்டி வைத்த காய்ந்த சப்பாத்தியும் ரப்பர் மாதிரியான பன்னீரும் கொடுப்பார்கள். அது சரிப்பட்டு வராது. எல்லாவற்றுக்கும் மேலாக  எப்போது சமையல் செய்து  எவ்வளவு நேரம் குளிரூட்டப்பட்டு இப்போது சுட வைக்கிறார்களோ , சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது. வீட்டிலிருந்து அம்மா செய்து கொடுத்த  மிளகாய்ப்பொடி போட்ட இட்லி இருக்கிறது. சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் ஷ்வார்ஸ்வால்டு (Schwarzwald) போய்ச் சேரும் வரை பசிக்காது. தேவையானால் வாழைப்பழம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

அர்ச்சனாவுக்குத் தாகமாக இருந்தது. வைத்திருந்த பாட்டில் காலி. தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இல்லா விட்டால் ஈரப்பதம் இல்லாத காற்றில் கை,கால் எல்லாம் அரிக்கும் என்று  எழுந்து விமானத்தின் பின் பகுதிக்கு சென்றாள். உணவு சுட வைத்துக் கொண்டிருந்த பகுதி திரை போட்டிருந்தது. திரையை விலக்கினவுடன், ஒரு கணம் தயங்கினாள். ஒரு ஸ்டூவார்ட் இன்னொருவளிடம் பேசிக் கொண்டிருந்தான். அவன் அவளிடம் மிகையாகச் சிரித்து, போலிப் பணிவுடன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.  அவளும் ஒரு கையால் தலையைக் கோதிக்கொண்டு சாய்ந்து சிரித்தாள். அர்ச்சனாவைப் பார்த்தவுடன் இருவரும்  விலகினார்கள்.  அர்ச்சனாவுக்கு எரிச்சலாக இருந்தது.

கைகளை சானிடைசர் போட்டு துடைத்து, தண்ணீர் குடித்து விட்டு, கூடவே ஒரு பாட்டிலையும் கேட்டு எடுத்துக் கொண்டு இருக்கைக்கு வந்தாள். விமானத்தில் காலை உணவு கொடுப்பதற்குள் கொண்டு வந்ததை சாப்பிட்டு முடித்து விட வேண்டும் என்று இரண்டு ப்ளாஸ்டிக் உறைகளுக்குள் பத்திரமாக இருந்த பொட்டலத்தை எடுத்தாள்.  மிளகாய்ப்பொடியும் நல்லெண்ணையும் ஊறிய இட்லி நல்ல ருசியாக இருந்தது. அம்மா இன்னும்  வீட்டில்தான் மாவு அரைப்பாள், கடையிலிருந்து அரைத்த மாவு வாங்க மாட்டாள். ஒரு வேளை அதுதான் தனி ருசியோ என்று அர்ச்சனாவுக்குத் தோன்றியது. சாப்பிட்டு முடித்து ரத்த அழுத்தம் மற்றும் மல்டி வைடமின் மாத்திரைகளை விழுங்கினாள். வயது இப்போது முப்பத்து நான்குதான், ஆனாலும் சில வருடங்களாக ரத்த அழுத்தம். 

அம்மா “ நீ ஒரு கல்யாணம் செஞ்சிட்டு ஒரு குழந்தையும்  பெத்துக்கிட்டிருந்தா , இப்படி தினமும் மாத்திரை விழுங்க தேவை இருந்திருக்காது. ” என்று சொல்லுவாள். 

அதற்கு அர்ச்சனா “ அம்மா, எனக்கு கல்யாணம் செஞ்சிட்டிருந்தா ஹார்ட் அட்டாகும் வந்திருக்கும்.” என்பாள். 

“ நீ காலேஜ் படிச்சவுடனேயே கல்யாணத்தை முடிச்சிருக்க வேண்டும். வேலைக்கு சேர்ந்த பின் உனக்கு அதுவே முக்கியமாயிடுச்சு. எத்தனை பேர் பெண் கேட்டாங்க , நீ சரிப்பட்டு வராது அப்படின்னு  சொல்லிட்ட, நாங்களும் விட்டுட்டோம்.”

“அம்மா , கல்யாணப் பேச்சை நிறுத்தறயா ? எனக்கும் வயசாயிடுச்சு,” என்று கோபமாகச் சொன்னாலும் நிறுத்த மாட்டாள்.

“ வயசு என்ன, இப்போதுகூட ஆடிட்டர் ரவி அவர் மகனுக்கு கேட்டார், உன்னை மாதிரி ஐ டி கம்பெனியில்தான் இருக்கிறான். நீ சரின்னு சொன்னால் முடிச்சிடலாம்.”

அர்ச்சனா எங்கோ பார்த்துக் கொண்டிருப்பாள்.

“ ஏண்டீ பதிலே சொல்லாமல் இருக்கிற ?  காலேஜ் படிக்கும்போது உன் பின்னால் சுத்துவானே, அவன் என்ன ஆனான் ? அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ? “ அப்போது அர்ச்சனா பதில் சொல்லியே ஆக வேண்டும்.

“ எவனைச் சொல்லற ? எனக்கு ஒருத்தனையும் தெரியாது.”

அர்ச்சனா எழுந்து போவாள். இந்த மாதிரி உரையாடல் சென்ற வாரம்கூட நடந்தது.

அந்தப் பக்கத்து இருக்கையில் இருந்தவன் ஜெர்மன் போலதான் இருந்தான், அவன் தள்ளிதான் இருந்தாலும் அவன் போட்டுக் கொண்டிருந்த கோலோன் மணம் லேசாக வந்தது அர்ச்சனாவுக்கு தொந்தரவாக இருந்தது. தலைவலி வந்து விடும் போல இருந்தது.

முன் இருக்கையில் இருந்த பெண் ஒருத்தி மொபைல் காமிராவில் பார்த்து முகம் திருத்திக் கொண்டிருந்தாள். அவள் லிப்ஸ்டிக் தடவிக் கொண்டு உதட்டை மடித்து சரி செய்து கொண்ட போது அர்ச்சனாவும் உதட்டைச் சுழித்தாள். 

விமானம் தரையைத் தொட்டது. உடனேயே நிறைய பேர் மொபைலை எடுத்து வந்திருந்த செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அர்ச்சனாவுக்கு அந்த மாதிரி அவசரம் எதுவும் இல்லை. 

விமானம் முழுதாக நின்ற பிறகு பார்த்தாள். அம்மாதான் நிறைய செய்திகள் அனுப்பி இருந்தாள். “விமானம் சரியாகப் போய் சேர்ந்ததா ?” “ இட்லி  நன்றாக இருந்ததா ?” “ வாழைப்பழம் தோலி கருப்பானாலும் உள்ளே நன்றாகத்தான் இருக்கும் மறக்காமல் சாப்பிடு, இல்லா விட்டால் உனக்கு…” இந்த மாதிரி செய்திகளும், கூடவே வாய்ஸ் மெசேஜில் “ அர்ச்சனா, இன்று ஹனுமார் கோயிலில் மதுரை அத்தையின் மருமகளைப் பார்த்தேன் அவள் உனக்கு கல்யாணத்துக்கு பார்க்கிறோமா என விசாரித்தாள்,  திருமணஞ்சேரி கோவிலில் வேண்டுதல் செய்து கொள்ளச் சொன்னாள்.”  என்றும் அனுப்பி இருந்தாள். 

அர்ச்சனாவுக்கு செய்தி அனுப்ப வேறு யாரும் நண்பர்கள் இல்லை, அவள் குழுமங்களிலும் இல்லை. அலுவலக மின்னஞ்சலைத் திறக்கலாம், ஆனால் திறந்தால் மூடுவது கடினம். எல்லாவற்றுக்கும் பதில் அனுப்பாமல் அர்ச்சனாவுக்கு வேறு வேலை முடியாது. ஷ்வார்ட்ஸ்வால்டு போன பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்.

மறுநாள் திங்கள் காலை வருடாந்திர பிஸினஸ் ப்ளான் மீட்டிங் ஆரம்பிக்கிறது. இந்த வருடம் பெரிய யு எஸ் ப்ராஜெக்டுகள் அதிகம் இல்லை. ஏஐ ஆட்டோமேஷன் என்று அவர்களே ஆள் குறைப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். விசா தொல்லை வேறு.  வளர்ச்சி வேண்டுமானால் ஐரோப்பாவில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று ஸி இ ஓ முடிவு செய்திருக்கிறார். அதை எப்படி செய்யலாம் என்பதற்குதான் இங்கே ஜெர்மனியில் இரண்டு நாட்களுக்கு கூட்டம். இந்த முறை வைஸ் ப்ரெசிடென்ட்கள் மட்டும் இல்லை, கூடவே அர்ச்சனா மாதிரி  சில இளையவர்களையும்  அழைத்திருந்தார்கள். ஜெர்மனியிலிருந்து யாரோ ஒரு பெரிய கன்சல்டன்ட்  வருவதாக சொல்லி இருந்தார்கள். அவர்தான் கூட்டத்தை ஜெர்மனியின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் புரிந்து கொள்ள ஷ்வார்ட்ஸ்வால்டு – ப்ளாக்ஃபாரெஸ்டில் (Blackforest) நடத்த வேண்டும் என்று சொல்லி இருந்தாராம். 

அர்ச்சனா நிறைய முறை கஸ்டமர்களை சந்திக்க ஜெர்மனி வந்திருந்தாலும், ஷ்வார்ஸ்வால்ட் சென்றதில்லை. அதைப் பற்றி கிளம்புவதற்கு முன்பே படித்துக் கொண்டிருந்தாள். ஷ்வார்ஸ்வால்ட் என்றால் கருமையான காடு. ஊசியிலைக் காட்டின் கரும்பச்சை மரங்களும், ஓளி புகாத அடர்ந்த காடுகளும்  நிறைந்த இடம் ஆதலால் அப்படி பெயர். ஆங்கிலத்தில் ப்ளாக்ஃபாரெஸ்ட். அந்த பிரதேசத்தில் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட கேக்தான் இன்று ப்ளாக்ஃபாரெஸ்ட் கேக் என உலகம் முழுவதும் புகழ் பெற்ற கேக். தவிர, குக்கூ க்ளாக் எனப்படும் கடிகாரங்கள் பாரம்பரியமாக கைவினைத் தொழிலாக இன்றும் செய்கிறார்களாம். மெக்கானிகல் கடிகாரங்கள் வருடக்கணக்காக வினாடி தவறாமல் ஓடுமாம். இப்போது எலக்ட்ரானிக் ஆகவும் செய்கிறார்களாம். ஆனால் மெக்கானிகல் கடிகாரம் வாங்கலாம் என்று அர்ச்சனாவுக்கு ஆசையாக இருந்தது. எத்தனை வயதானாலும் நேரம் தவறாமல் கடமையை செய்யும் எந்திரம், கட்டாயம் வாங்க வேண்டும் என்று குறித்துக் கொண்டாள்.

அர்ச்சனா விமானத்திலிருந்து இறங்கினாள். அவளுடைய நிறுவனத்திலிருந்து, அதே கூட்டத்துக்கு வருபவர்கள் ஐந்து பேர் இருந்தார்கள். அவர்களில் அருண் புதியவன். அவன்  இப்போதுதான்  சேர்ந்திருக்கிறான். அவன் எல்லோரிடமும் உற்சாகமாக இமிக்ரேஷன் முடித்து காஃபி குடிக்கலாமா என்று கேட்டான். அர்ச்சனாவுக்கு ஆயாசமாக இருந்தது. நேராக தங்கும் விடுதிக்கு போய் குளித்து சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. மற்றவர்கள் அவனுடன் செல்ல உடன்பாடாக இருந்தார்கள். 

அர்ச்சனா “ எனக்கு சற்று தலை வலி மாதிரி இருக்கிறது, நீங்கள் செல்லுங்கள், நான் நேராக விடுதிக்கு போய் ஓய்வெடுத்துக் கொள்ளுகிறேன்.” என்றாள்.

அருண் விடுவதாக இல்லை. எல்லோரும் இமிக்ரேஷன் வரிசையில் ஒன்றாக நின்றிருந்தார்கள்.

“ கமான் அர்ச்சனா, நாளைக்குதான் மீட்டிங், ஒரு காஃபி குடித்து விட்டு சற்று நேரம் பேசி விட்டு போகலாமே .. நான் இந்த கம்பெனிக்கு புதியவன், உங்களுடன் எல்லாம் பழக வேண்டும்.“ என்றான்.

கூட வந்திருந்த ஷீலா , “ அரூண், நாம் போகலாம், அவள் வர மாட்டாள்.” என்று சிரித்தாள். ஷீலா சேல்ஸில் இருக்கிறாள். 

அர்ச்சனா, எனக்கு எதற்கு உன்னைத் தெரிந்து கொள்ள வேண்டும், தவிர ஷீலா மாதிரி பல்லை இளித்துக் கொண்டு வர உனக்கு நிறைய பேர் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டாள். ஒரு வறட்டுப் புன்னகையுடன் “ சாரி, நான் வாடகை கார் முன்பே பதிவு செய்திருக்கிறேன், நேரத்துக்கு போகா விட்டால் எனக்குத் தேவையான கார் கிடைக்காது. “ என்று சற்று தள்ளி நின்று கொண்டாள்.

இம்மிக்ரேஷனில் ஒரு இளம் பெண் இருந்தாள். புதியவள் போல, நல்ல உயரமும் உடல்கட்டுமாக சீருடையில் இருந்த ஒருவன் இரண்டு பான்ட் பாக்கெட்களிலும் கட்டை விரலை செருகிக் கொண்டு அருகில் நின்றிருந்தான்.  அவ்வப்போது நடுவே அவளுக்கு மெல்லிய குரலில் நடுவே ஏதோ சொன்னான்.

அர்ச்சனா அவளுடைய முறை வந்ததும் மஞ்சள் கோட்டைத் தாண்டி அருகில் சென்று, வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் “ ஹலோ, குட்டன் டாக்” என்றாள். 

உள்ளே இருந்தவள் உற்சாகத்துடன் “ குடன் டாக், ஸ்ப்ரெஹென் ஸீ டாய்ச் ? “  ( நல்ல நாள் ஆகட்டும், நீங்கள் ஜெர்மன் மொழி பேசுவீர்களா ? ) என்று தொடர்ந்து  வேகமாக ஏதோ கேட்டாள்.

அர்ச்சனாவுக்கு புரியவில்லை, ஜெர்மனில் முகமன் சொல்லும் முதல் சொற்களைத் தவிர கழிவறை எங்கே இருக்கிறது என்று கேட்கத் தெரியும், அவ்வளவுதான்.

அவள் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு ஆங்கிலத்தில், “ உங்கள் பயணத்தின் காரணம் என்ன ? ” என்று கேட்டாள். 

அர்ச்சனா விளக்கினாள். அந்த இம்மிக்ரேஷன் பெண் திருப்தி ஆகாமல், யார் அழைத்திருகிறார்கள், திரும்பச் செல்ல டிக்கெட் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டாள். அர்ச்சனாவுக்கு எரிச்சலாக வந்தது. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் ஆகிறது. சென்ற முறை ஷீலாவுடன் வந்த போது, அவளை ஒரு கேள்வியும் கேட்காமல் விட்டு விட்டார்கள். அர்ச்சனாவுக்கு மட்டும் இதே மாதிரி கேள்விகளுக்கு பதிலும் டாக்குமெண்ட்களும் கொடுக்க வேண்டி இருந்தது. 

அடுத்து நின்று கொண்டிருந்த அருண் “ ஏதாவது ப்ராப்ளமா ?, என்று முன்னே வந்தான். 

இம்மிக்ரேஷன் பெண் சுட்டு விரலால் அவனை பின்செல்லச் சொன்னாள். 

அர்ச்சனாவிடம் “ அவர் உன்னுடன் வந்திருக்கிறாரா ? “ என்று கேட்டாள்.

அர்ச்சனா அவசரமாக “ இல்லை” என்றாள்.

அவள் விடுவதாக இல்லை, மற்ற நான்கு பேரையும் பார்த்து விட்டு 

“நீங்கள் எல்லோரும் ஒரே கம்பெனியா, ஒன்றாக வந்திருக்கிறீர்களா ? என்றாள்.

அர்ச்சனா பதில் சொல்லாமல்,  டிக்கெட்டை காண்பித்து “ நான் இந்த வாரமே திரும்புகிறேன். “ என்றாள். இம்மிக்ரேஷன் ஆள் குனிந்து அந்தப் பெண்ணிடம் ஏதோ சொல்ல, அவள் ஸ்டாம்ப் செய்து போகச் சொன்னாள். 

சிறு கதவு திறந்து வெளியே வந்த பிறகும் அர்ச்சனாவுக்கு படபடப்பாக இருந்தது. கர்சீஃப் எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டாள். விமானத்திலிருந்து எடுத்து வந்திருந்த பாட்டிலிலிருந்து தண்ணீர் குடித்தாள்.

அதற்குள் அருண் வந்து விட்டான்.  அருகில் வந்து “ அர்ச்சனா, எப்படி இருக்கிறாய் ? தலைவலியுடன் எப்படி ஷ்வார்ட்ஸ்வார்ல்டுக்கு கார் ஓட்டிக் கொண்டு தனியாகப் போகப் போகிறாய் ? நான் கூட வரட்டுமா ?”

அர்ச்சனாவுக்கு முகம் சிவந்தது, “ நன்றி , நான் பார்த்துக் கொள்ளுகிறேன். உங்களுக்கு எதற்கு தொந்தரவு ? ” என்றாள்.

“ ஷ்யூர் ? அர்ச்சனா, எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை, உன்னுடன் வருவது எனக்கு மகிழ்ச்சிதான்.” என்று அவளுடைய கைப்பெட்டியை பிடித்துக் கொண்டான்.

அர்ச்சனா படபடப்பாக பெட்டியை தன் பக்கம் இழுத்துக் கொண்டு, “ நன்றி, நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.” என்று சற்று கடுமையாக சொல்லி விட்டு கிளம்பினாள்.

அருண் “  மூன்று மணி நேரம் ஆகும், வழியில் உதவி தேவைப் பட்டால் என்னை தயங்காமல் கூப்பிடுங்கள். போய் சேர்ந்தவுடன் எனக்கு ஒரு மெசேஜ் போடுங்கள்.” என்று  அவளிடம் சொன்னான்.

அர்ச்சனா மீண்டும் ஒரு வறட்டுப் புன்னகையுடன் கிளம்பினாள். 

“ நீ என்ன அம்மா மாதிரி கரிசனத்துடன் கேட்கிறாய்” என்று  சொல்லிக்கொண்டாள். 

பெட்டியை இழுத்துக் கொண்டு எஸ்கலேட்டர் ஏறி, லிஃப்ட்டில் இறங்குவதற்குள் தலைவலி இன்னும் சற்று அதிகமாக ஆகிய மாதிரி இருந்தது. 

முன்பதிவு செய்து சரியான நேரத்துக்கும் வந்ததால் அவள் கேட்ட வோல்வோ கார் இருந்தது. அர்ச்சனாவின் கணிப்பில் வோல்வோதான் பாதுகாப்பான கார். விபத்து ஆனாலும் ஓட்டுபவர் உயிருக்கு ஆபத்து குறைவு, மற்ற எல்லா கார்களையும் விட பாதுகாப்பு அதிகம் என்று ரிப்போர்ட் படித்திருந்தாள். 

சாவியை வாங்கிக் கொண்டு பெட்டியை ட்ரங்கில் போட்டு விட்டு, கைப்பையை பக்கத்தில் வைக்கும் போதுதான் தண்ணீர் பாட்டில் வாங்க மறந்து போனது நினைவுக்கு வந்தது. எல்லாம் அருண் செய்த தொந்தரவால்தான். இல்லா விட்டால் அவள் விமான நிலையத்திலேயே இருங்கும் சூப்பர்மார்கெட்டில் தண்ணீர் வாங்கிக் கொண்டிருப்பாள். மூன்று மணி நேரம் கார் ஓட்ட வேண்டும், சிறிய பாட்டிலில் முக்கால் இருந்தது. வழியில் நிறுத்த அவளுக்கு விருப்பம் இல்லை.  நேராக ஹோட்டலுக்கு போய் குளித்து விட்டு படுக்கையில் விழ வேண்டும்போல இருந்தது. பரவாயில்லை என்று கிளம்பி விட்டாள்.

அக்டோபர் மாதம்,  சாம்பல் வானமும் குளிருமாக இருந்தது. மரங்களில் இலைகள் உதிர்ந்து விட்டன, அதுவும் ஒரு வித அழகாக இருந்தது. அர்ச்சனா எதையும் பார்க்கவில்லை, போகும் வழியில் கவனமாக இருந்தாள். மன்ஹைம் (Maanheim) அருகில் எப்போதும் சாலையில் பழுது பார்க்கும் வேலை நடந்து கொண்டிருக்கும்.  சாலை ஒரு பக்கம் மூடி இருக்கும் , சுற்றி கிராமத்து சாலையில் போக வேண்டி இருக்கும்.  நேரம் அதிகம் ஆகலாம்,  வழியில் அதிகம் தாகம் இல்லை, தண்ணீர் அப்போதைக்கு போதும் என்று சொல்லிக் கொண்டாள். ஃப்ரைபுர்க் (Freiburg) தாண்டி சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக போகும் டிட்டிஸே (Titisee) ஏரியை சுற்றிக் கொண்டு இல்லாமல், மலை மேல் செல்ல வேண்டி இருந்தது. 

ஹோட்டல் மலைச் சரிவில் அழகான  காட்சிகளை காணும்படியான இடத்தில் இருந்தது. அர்ச்சனா எதையும் கவனிக்கவில்லை. காரை நிறுத்திப் பெட்டியை இழுத்துக் கொண்டு, இன்னொரு கையில் கைப்பையுடனும் அணிந்த கனமான மேலங்கியுடன்  நடப்பதே பெரும் சுமையாக இருந்தது. 

ரிசப்ஷனில் இருந்த இளைஞன் உற்சாகமாக விருப்பத்துடன் ஆங்கிலம் பேசினான். அர்ச்சனாவுக்கு அது ஆசுவாசமாக இருந்தது. அவள் முதலிலேயே எப்படிப்பட்ட அறை வேண்டும் என்று கேட்டிருந்தாள். அதேமாதிரி கிடைத்தது.

 அர்ச்சனா குளித்து விட்டு அம்மா கொடுத்திருந்த புளி சாதம் பொட்டலத்தை எடுத்து மதிய உணவாக சாப்பிட்டுவிட்டு படுக்க தயாரானாள். தலையில் இடிப்பது போல வலி. மொபைல் எடுத்து செய்திகளை பார்த்தாள். அம்மாவுக்கு ஹோட்டல் சேர்ந்து விட்டேன் என்று பதில் போட்டாள். 

தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அர்ச்சனா அவற்றை எடுக்க மாட்டாள். உடனே வாட்ஸப்பில் “ அர்ச்சனா, பத்திரமாக ஹோட்டல் சேர்ந்தாயா ? “ என்று அருண் கேட்டான். அவன்தான் அழைத்தான் போல என்று வேண்டா வெறுப்பாக “ நன்றி, வந்து சேர்ந்தேன். “ என்று பதில் போட்டாள்.  

அவன் “ நாங்கள் காஃபி குடித்து விட்டு தாமதமாக கிளம்பினோம், வழியில் லஞ்ச் சாப்பிடுவோம், நீ சாப்பிட்டாயா ?”

“ எல்லாம் ஆயிற்று, எனக்கு இன்னும் தலை வலி, தூங்கப் போகிறேன். “ என்று முடித்தாள்.  அருண் திரும்ப அழைக்கலாம் , ஃபோனை அணைத்து விட்டு படுத்தாள்.

அர்ச்சனா எழுந்த போது மாலை ஆறரை ஆகி இருந்தது. முழு இருட்டாக இருந்தது.  அவ்வளவு நேரம் தூக்கம் என்று திட்டமிடவில்லை. தலைவலி  குறைந்திருந்தது. ஒரு காஃபி குடித்தால் மெயில் எல்லாம் பார்க்கலாம், ஆனால் ஹோட்டலில் வைத்திருக்கும் இன்ஸ்டன்ட் காபி அர்ச்சனாவுக்கு பிடிக்காது. கீழே ரெஸ்டாரண்டில் காஃபி கிடைக்கும், ஆனால் ஆறி இருக்கும் பால் கலந்து காஃபி குடிப்பது  அவளுக்கு சரிப்பட்டு வராது. எப்படி இருக்கிறாய் என்று அருண் செய்தி அனுப்பி இருந்தான். பதில் அனுப்ப அர்ச்சனாவுக்கு விருப்பம் இல்லை.

கொண்டு வந்த தண்ணிர் மட்டும் குடித்து விட்டு மெயில் எல்லாம் பார்த்து பதில் எழுதி முடிக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆயிற்று. இரவு தூக்கம் வருமா என்று சந்தேகமாக இருந்தது. இவ்வளவு தூங்கி இருக்கக் கூடாது. அம்மா இரவு உணவுக்கு சப்பாத்தி அனுப்பி இருந்தாள். சாப்பிட  அமர்ந்தபோதுதான் அர்ச்சனா கவனித்தாள், ஹோட்டல் அறையில் வைத்திருந்த தண்ணீர் சோடா வகை. பெரும்பாலும் ஜெர்மனியில்  வாயு நிரப்பிய சோடாதான் குடிப்பார்கள். அர்ச்சனாவுக்கு அது பிடிக்காது. குடித்து முடித்த பிறகு ஏப்பம் வரும், ரிசப்ஷனில்தான் சாதாரண தண்ணீர் கேட்க வேண்டும். அதற்கு “ஸ்டில்லஸ் வாஸர்” ( Stilles wasser) என்று பெயர் பார்த்துக் கொண்டாள். அறையில் ஃபோன் எதுவும் இல்லை. 

அர்ச்சனா கலவரத்துடன் ஆடை மாற்றிக் கொண்டு, ஷூ அணிந்து கொண்டு கீழே சென்றாள்.  வந்த போது இருந்த இளைஞன் இல்லை, இப்போது சற்று நடு வயது ஆள் ஒருவர் இருந்தார். 

“ஹலோ, வாஸ் கான் இஹ் ஃப்யூர் ஸி தூன் ?” என்று ஆரம்பித்தார். 

அர்ச்சனா ஆங்கிலத்தில்“ எனக்கு குடிக்க சாதாரண தண்ணீர் வேண்டும், சோடா தண்ணீர் வேண்டாம்.” என்றாள்.

அவர் “அறையிலேயே பாட்டிலில் தண்ணீர் இருக்கிறது.” என்றார். அவர் ஆங்கிலம் சற்று தடுமாறி வந்தது.

அர்ச்சனா மறுபடியும் “ எனக்கு சோடா தண்ணீர் வேண்டாம், சாதாரண தண்ணீர் – ஸ்டில்லஸ் வாஸர் (Stilles wasser) வேண்டும். “ என்றாள்.

அவர் இருக்கிறதா என்று பார்ப்பதாக சொன்னார். உள்ளே சென்று வந்து

“இல்லை, மன்னிக்க வேண்டும்.” என்று தோளைக் குலுக்கினார்.

அர்ச்சனாவுக்கு பதற்றம் அதிகமானது.

அவர், “ அப்படி தேவையானால்,  நீங்கள் குழாயில் வரும் தண்ணீரைக் குடிக்கலாம்.” என்று சொன்னார்.

அர்ச்சனா பயணம் செய்யும் போது எப்போதுமே கவனமாக இருப்பாள். பாட்டில் நீர்தான் வாங்கி குடிப்பாள். பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை குழாய் நீரைக் குடித்து விட்டு அவளுக்கு வயிறு கெட்டு இரண்டு நாட்களுக்கு   நர்ஸிங் ஹோமில் ட்ரிப்ஸ் கொடுத்து, மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அதற்குப் பிறகு எந்த நாட்டுக்கு சென்றாலும் மினரல் நீர்தான்.

“ இல்லை, குழாய் நீர் எனக்கு ஒத்துக் கொள்ளாது.” என்றாள்.

“ நீங்கள் தைரியமாக குடிக்கலாம், ஜெர்மனியில் குழாய்  நீர் மிகத் தூய்மையானது.”  என்று புன்னகைத்தார். அர்ச்சனாவுக்கு அவன் ஒரு வேளை உங்கள் நாட்டை விட நல்ல தண்ணீர்தான் என்று சொல்லுகிறாரோ என்று தோன்றியது. 

“இல்லை எனக்கு பாட்டில் நீர்தான் வேண்டும்.”

“மன்னிக்க வேண்டும்,  நாளை காலை ஏற்பாடு செய்கிறேன். இங்கே ஷ்வார்ட்ஸ்வால்டு மலை நீரூற்றுகளில் வரும் தண்ணீர் அப்படியே பாட்டிலில் அடைக்கப் பட்டு மினரல் வாட்டராக விற்கப் படுகிறது. ஐரோப்பா முழுவதும் அனுப்பப் படுகிறது. அதேதான் குழாயில் வருவதும். நீங்கள் தைரியமாக குடிக்கலாம்.”

அர்ச்சனா  கேட்பதாக இல்லை. 

“ இங்கே பக்கத்தில் சூப்பர் மார்கெட் இருக்கிறதா ? “

“ இருக்கிறது, ஆனால் இப்போது மூடி இருப்பார்கள். “ என்றார் கடிகாரத்தைப் பார்த்து விட்டு. 

பெரிய நகரங்களிலேயே ஏழு எட்டு மணிக்குள் எல்லா கடைகளையும் மூடி விடுவார்கள். ரயில் நிலையங்களில் இருக்கும் சிறிய கடைகள் மட்டும் திறந்து இருக்கும் என்று அர்ச்சனாவுக்கு நினைவுக்கு வந்தது.

“ இங்கே பக்கத்தில் ரயில் நிலையம் எங்கே இருக்கிறது ?”

“ ஃப்ரைபுர்க் தான் போக வேண்டும். “

“ அங்கே கடை திறந்திருக்குமா ?”

“ இருக்கலாம், தெரியவில்லை, மன்னிக்கவும்.” 

அர்ச்சனா கோபத்துடன் வேகமாக அறைக்கு வந்து கார் சாவியையும் மேலங்கியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். 

ஃப்ரைபுர்க் நாற்பது கிலோமீட்டர், முக்கால் மணி நேரம் காட்டியது. நன்றாக இருட்டி இருந்தது. அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்று யோசித்தாள். வேறு வழி இல்லை,  தண்ணீர் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். எப்படி குழாய் தண்ணீரைக் குடிக்க முடியும், மறு நாள் முக்கியமான கூட்டம், உடம்பு சரி இல்லாமல் போனால், பயணமே வீண் என்று தோன்றியது.

மொபைலில் அழைப்பு, இருந்த பதற்றத்தில், கவனிக்காமல் எடுத்து விட்டாள். அருண்தான்.

 “ அர்ச்சனா , டின்னருக்கு என்ன ப்ளான் ? நாங்கள் இங்கே ரெஸ்டாரண்டில் சந்திக்கப் போகிறோம். “

“ இல்லை, நான் சாப்பிட்டாகி விட்டது, நன்றி.”

“தலைவலி சரி ஆனதா ? எப்படி இருக்கிறாய் ?”

“ இப்போது பரவாயில்லை.” என்றாள். ஒரு கணம் அவனிடம் சொல்லலாமா என்று தோன்றியது, அவனே போய் எப்படியாவது தண்ணீர் வாங்கி வந்து விடுவான். இல்லை, அவனிடம் கேட்கக் கூடாது என்று முடிவு செய்தாள். 

அவளுடைய மவுனம் , அவனுக்கு என்ன தோன்றியதோ “வேறு ஏதாவது தேவையா ?” என்றான். 

“இல்லை, நன்றி.”

“ குட் நைட், நாளை காலை ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு எட்டு மணிக்கு போகலாமா ?”

அவசரமாக “ இல்லை , நான் இன்னும் சீக்கிரமே போவேன். குட் நைட்” என்று துண்டித்தாள்.

ஃபோனில்  நிலப்படத்தில் பக்கத்தில் ஏதாவது சூப்பர் மார்கெட் திறந்து இருக்கிறதா என்று பார்த்தாள். டிட்டிசே பக்கத்தில் ஒரு ஸ்டோர் திறந்து இருந்தது. அது ஆடோமாடிக் வெண்டிங் மெஷின் போல, காசு போட்டால் பொருளைத் தரக்கூடியது. அங்கே தண்ணீர் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கிளம்பினாள்.  பத்து  நிமிடம்தான், ஆனால், இருளில், மலைப்பகுதியில் தனியாக செல்வது பயமாக இருந்தது. அது திறந்திருக்கா விட்டால் நாற்பது கிலோமீட்டர் போக வேண்டும். அர்ச்சனாவுக்கு  தொண்டை வரண்டது. இன்னும் தாகம் எடுத்தது.

அந்த ஸ்டோர் நல்ல வேளையாக திறந்து இருந்தது. வரிசையாக நிறைய வெண்டிங் மெஷின்கள். காக்லேட், சிப்ஸ், குளிர் பானங்கள், சீஸ் கேக் என்று இருந்தன, கூடவே சோடா இல்லாத தண்ணீரும் இருந்தது. 

அர்ச்சனாவுக்கு நிம்மதியாக இருந்தது. கையில் இருந்த காசுகளை எண்ணித் துளையில் போட்டு எண்ணை அழுத்தினாள். தண்ணீர் பாட்டில் விழவில்லை. இரண்டுமுறை அதன் கைப் பிடியை உலுக்கினாள். மெஷினைத் தட்டினாள். எதுவும் ஆகவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தாள், கேட்கக்கூட யாரும் இல்லை. மெஷின் வேலை செய்யா விட்டால் அழைக்க எண் இருந்தது. அழைத்தால் யாரும் எடுக்கவில்லை. ஏதோ பதிவான செய்தி வந்தது. கோபமாக அந்த மெஷினை காலால் உதைத்தாள். விரக்தியுடன் காரை ஓட்டிக் கொண்டு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தாள். வந்து சேரும்போது கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

இன்று குழாய்த் தண்ணீர்தான், பாதுகாப்புக்காக ஏதாவது ஆன்டி ப்யாடிக் சாப்பிட்டு வைக்கலாம் என்று யோசித்தாள்.  ஆனால் கொண்டு வந்திருந்தது தொண்டை, இருமலுக்கு மருந்து, வயிற்றுக்கு இல்லை. இத்தனை நேரம் தண்ணீர் குடிக்காமல் , கார் ஓட்டி சென்று வந்தது, எல்லாம் சேர்ந்து தாகம் அதிகமாக எடுத்தது. வேறு வழியே இல்லை என்று ஒரு டம்ளரில் குழாய்த் தண்ணீரை பிடித்து,  விளக்கின் அடியில் வைத்துப் பார்த்தாள். சுத்தமாகத்தான் இருந்தது. கண்களை மூடிக் கொண்டு குடித்தாள். சுவையில் எதுவும் தவறாகத் தோன்றவில்லை. இன்னும் ஒரு டம்ளர் எடுத்து குடித்தாள். மறு நாள் எதுவும் ஆகக் கூடாது என்று பிள்ளையாருக்கு வேண்டிக் கொண்டாள். எதற்கும் பக்கத்தில் ஆஸ்பத்திரி இருக்கிறதா என்று பார்த்து வைத்துக் கொண்டாள். 

அர்ச்சனாவுக்கு தூக்கம் உடனே வரவில்லை. அவளுக்கு டீவி, சீரியல் எதுவும் பார்க்கும் வழக்கம் இல்லை. சரி ஏஐ இல் என்ன புதிதாக இந்த வாரம் என்று படிக்க ஆரம்பித்தாள். வெகு  நேரம் கழித்து அப்படியே லாப்டாப்பை நகர்த்தி தூங்கி விட்டாள். 

காலை அர்ச்சனா எழுந்த போது மணி ஏழு. அலாரம் இல்லாமலேயே ஐந்துக்கு எழுபவள், அதுவும் ஜெட் லாக்கில் முன்பே எழுந்திருக்க வேண்டும், நன்றாக தூங்கி விட்டாள். 

அப்போதுதான் இரவு குழாய் தண்ணீர் குடித்தது நினைவுக்கு வந்தது. வயிறு ஒன்றும் ஓசை எழுப்பவில்லை, வலி இல்லை. வாந்தி எதுவும் வரவில்லை. அர்ச்சனாவுக்கு இன்னும் சந்தேகமாக இருந்தது. ஆச்சரியமாக இருந்தது.

பல் விளக்கி விட்டு மொபைல் ஃபோனை எடுத்து செய்திகளைப் பார்க்க ஆரம்பித்தாள். அம்மாதான் வழக்கம் போல இரவு நன்றாக தூங்கினாயா, கொண்டு போன சாப்பாடு எப்படி இருந்தது என்று கேட்டிருந்தாள். 

அருண் செய்தி அனுப்பி இருந்தான். “குட்மார்னிங் அர்ச்சனா, நன்றாகத் தூங்கினாயா ?”

அம்மாவுக்கு மட்டும் பதில் அனுப்பினாள். குழாய் தண்ணீரை எடுத்து குடித்தாள். இப்போது விளக்குக்கு அடியில் வைத்துப் பார்க்கவில்லை.

அருணிடமிருந்து அடுத்த செய்தி “ எட்டு மணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு சந்திக்கலாமா ?” 

ஃபோனை மூடி வைத்து விட்டு குளிக்கச் சென்றாள். 

மலைத் தண்ணீரில் குளியல் புத்துணர்ச்சியாக இருந்ததது. அன்று அர்ச்சனா  அவளுடைய வழக்கத்துக்கு மாறாக சில செய்தாள். 

பதினொன்று நிமிடங்களுக்கு பதில் அன்று இருபது நிமிடங்களுக்கும் மேலாக ஷவரில் இருந்தாள். 

ஷவரிலிருந்து கொட்டும் தண்ணீரை வாயைத் திறந்து குடித்தாள். 

வழக்கமாக குளித்து வந்தவுடன் கண்மூடி சில தோத்திரங்களை சொல்லுவாள். அன்றைக்கு வெளியே வந்தவுடன் அவசரமாக ஃபோனை எடுத்துப் பார்த்தாள். நல்ல வேளையாக, மிஸ்டு கால் எதுவும் இல்லை. 

அர்ச்சனா அழைப்புக்குக் காத்திருந்தாள்.


Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

4 Replies to “ஷ்வார்ஸ்வால்டில் தண்ணீரைத் தேடி”

  1. Enjoyed reading the story. I liked the last line. It conveys a lot. What makes Archana interesting is how she has traditional tastes yet she is bold enough to drive by herself in another country…small details that make reading engaging. Arun is definitely going to break her heart🤣

  2. கதையின் களம் புதிது. புறத்திலும் அகத்திலும். ஆகாய விமானத்தில் அறிமுகமாகும் பெண்ணின் உளப்பாங்கு ஒரு குமிழில்லாத தண்ணீர் குப்பியை பிடிவாதமாக தேடிச்செல்லும் தருணம் பெரிதாக விரிவடைகிறது… அதில் ஒரு தெளிவும் தீர்வும்… களத்தை கண் முன்னே தெள்ளென நிறுத்திவிடும் பாங்கு தருணாதித்தனுக்கே உரித்தது. அருமை அருமை.

  3. Sriki, I have tried reading stories but I have not been able to complete even one short story for the last five years or so. For the first time your story gripped me till the last sentence and what a sentence that was . Now I am confident I can start reading stories again. Thank you so much .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.