“ஏழு மணிக்குத்தானே ஆடப் போறாங்க. வெயில் பாழாப் போகக் கூடாதுன்னு எதுக்கு இப்படி நாலு மணி நேரம் முன்னாடியே கிளம்பற?” என்று என்னை மெட்ரோ நிலையத்தில் இறக்கி விடக் கிளம்பிய அண்ணன் கேட்டார். அவரிடம் நான் வெறும் கால்பந்து ஆட்டத்தைப் பார்க்கப் போகவில்லை என்பதை என்ன சொல்லி விளக்க?
கிரிக்கெட், பேஸ்பால், பாஸ்கெட்பால், டென்னிஸ் என எத்தனையோ விளையாட்டுகளை நேரில் பார்த்திருந்தாலும் உலகக் கோப்பைக் கால்பந்தாட்டப் போட்டி ஒன்றினை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைவேறாமலேயே இருந்தது. இந்த வருடம் கனடா மெக்ஸிகோவுடன் இணைந்து அமெரிக்கா இப்போட்டிகளை நடத்தப் போகிறது எனத் தெரிந்த உடன் எப்படியாவது ஒரு போட்டியையாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.
தீவிர ஆராய்ச்சிக்குப் பின் மூன்று மணி நேரத் தொலைவில் இருக்கும் ஹூஸ்டன் நகரில் கேப் வெர்டே (Cape Verde) அணிக்கும் சௌதி அரேபிய அணிக்கும் நடக்க இருக்கும் போட்டிக்குப் போகலாம் என முடிவு செய்தேன். பிரேசில், அர்ஜெண்டினா, ஸ்பெயின் என பெரிய அணிகள் விளையாடும் போட்டிகளைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்தான். ஆனால் நுழைவுச்சீட்டு விலைகளை எல்லாம் பார்க்கும் பொழுது அந்தப் போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து விட்டேன். இவ்விரு அணிகளும் சுமாரான அணிகள்தாம், அதனால் இந்தப் போட்டிக்கான விலை நமக்குக் கட்டுப்படி ஆகும் என்ற என் நினைப்பு உண்மையானது.
ஆனால் நாம் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்றை நினைக்கும் என்று சொல்வதைப் போல கேப் வெர்டே அணியினர் தமது முதலிரண்டு போட்டிகளில் அந்தக் குழுமத்தில் இருக்கும் இரண்டு பெரிய அணியினரான ஸ்பெயினோடும் உருகுவேயோடும் மிகக் கடுமையாகப் போராடி சமன் செய்து விட்டனர். அவ்விரு அணியினரோடு ஏற்கனவே தோற்ற சௌதி அணியினரோடு இந்தப் போட்டி. இதில் தோற்காமல் இருந்து, உருகுவேயுடனான போட்டியில் ஸ்பெயினும் தோற்காமல் இருந்துவிட்டால், இவர்கள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடுவார்கள்.
கேப் வெர்டே என்ற நாடு எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாத நிலை மாறி, உலகமே இவர்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டு இருக்கிறது. ஒன்றுமில்லாத போட்டி என நினைத்த ஒன்று மிக முக்கியமான போட்டியாக மாறி இருந்தது.
மெட்ரோ நிலையத்தில் இருந்து வெளியே வந்த பொழுது பிரம்மாண்டமான ஸ்டேடியம்தான் என் கண்ணில் முதலில் பட்டது. ஆனால் அது நான் வழக்கமாகப் பார்க்கும் என் ஆர் ஜி (NRG Stadium) இல்லை. பிபா (FIFA) தனது வணிகப் பங்காளிகள் அல்லாதவர்களின் பெயர் இருக்கக்கூடாது என ஸ்டேடியத்தின் பெயரையே ஹூஸ்டன் ஸ்டேடியம் என மாற்றி விட்டனர். இதே போல மற்ற நகரங்களிலும் ஸ்டேடியங்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஜில்லட் (Gillette), லீவைஸ் (Levi’s) போன்ற நிறுவனங்கள் இதைத் தமக்குச் சாதகமாகக் கொண்டு செய்த விளம்பரங்கள் அவர்கள் பெயர்கள் தந்திருக்கும் விளம்பரத்தைக் காட்டிலும் பல மடங்கு விளம்பரத்தைப் பெற்றுத் தந்தது. மறைக்கப்பட்டவை தரும் கிளர்ச்சி வெளிப்படையாகத் தெரிவதைக் காட்டிலும் கூடுதல்தானே.
மெட்ரோ நிலையத்தில் இருந்து ஸ்டேடியத்தை நோக்கி நடக்கும் வழி முழுவது தன்னார்வலர் நிரம்பி இருந்தனர். கேள்விகளுக்குப் பதில் சொல்வது, தகவல் அட்டைகளைப் பிடித்தபடி நிற்பது, தண்ணீர் பந்தல் வைத்துத் தண்ணீர் வழங்குவது, வாருங்கள் வாருங்கள் என முகம் மலர அழைப்பது என்று அவர்கள் செய்வதைப் பார்த்த பொழுது எதோ சொந்தக்கார வீட்டுக் கல்யாணத்திற்குப் போவது போல் இருந்தது. பன்னீர் தெளித்துச் சந்தனக் கும்பாவை நீட்டவில்லை. அவ்வளவுதான்.
அத்தனை சீக்கிரம் சென்றிருந்தாலும் எனக்கும் முன்பே அங்கு பல ஆயிரம் பேர் வந்திருந்தனர். கழியை ஊன்று மெதுவாக நடந்து செல்லும் பெரியவர்கள், கொடிகளைப் போர்த்திக் கொண்டு செல்லும் சிறுவர்கள், சின்னஞ்சிறுக் குழந்தைகளுக்கு கால்பந்து அணிகளின் ஆடைகளை அணிவித்து வண்டிகளில் தள்ளிச் செல்லும் பெற்றோர்கள், விதவிதமான அலங்காரங்களில் வலம் வரும் யுவதிகள் இளைஞர்கள், பாடல்களைப் பாடி ஆடும் குழுவினர், ஓரமாய் நின்று அவர்களை வேடிக்கை பார்ப்பவர்கள் என விதவிதமான மக்களைப் பார்க்கும் பொழுதே நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. மெக்ஸிகோ, அர்ஜெண்டினா, இங்கிலாந்தின் பிரீமியர் லீக் அணியினர் என்று அன்றைக்கு விளையாடாத அணிகளின் சட்டைகளைப் போட்டுக் கொண்டு திரிந்தனர் பலர். எத்தனையோ மொழிகள், எத்தனையோ நிறங்கள். உலகமே அங்கே கூடியிருந்தது போல இருந்தது.
அரங்கிற்கு வெளியே ரசிகர்கள் கொண்டாட்டத்திற்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மெய்நிகர் விளையாட்டுகள், விளையாட்டு வீரர்கள் கையெழுத்திட்டச் சட்டைகளோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு, உலகக் கோப்பைக்காகத் தயாரிக்கப்பட்ட பந்தோடு படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு, அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியோடு மெய்நிகர் வகையில் விளையாடக் கூடிய வாய்ப்பு என விதவிதமான நிகழ்ச்சிகள். பல இடங்களில் பரிசுப் பொருட்கள் வேறு தந்தார்கள். ஓவ்வொரு இடத்திலும் நின்ற வரிசைதான் அத்தனை நீளம். இருக்கும் மூன்று மணி நேரத்தில் அத்தனையும் பார்த்து முடிப்பது என்பது சவால்தான். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என முடிந்த வரை எல்லாவற்றையும் செய்யப் பார்த்தேன்.
அதற்கு முட்டுக்கட்டையாய் இருந்தது டெக்ஸாஸ் வெயில்தான். மண்டையைப் பிளந்து விட்டது. வியர்வை ஆறாக ஓட எதையாவது குடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போலத் தாகம். ஆனால் வழியில் இருந்தத் தண்ணீர் பந்தல்களை இங்கு காணோம். குளிர்பானங்களும் உணவும் விற்கும் கடைகள் நிறைந்து இருந்ததும், அவற்றின் முன் வரிசைகள் நீண்டு இருந்ததும் தற்செயல் என்றாச் சொல்ல முடியும்!

இந்த வெயிலில் மூன்று மணி நேரம் சுற்றிய பின் குளிரூட்டப்பட்ட அரங்கினுள் நுழையும் பொழுது தேவலோகத்திற்குள் நுழைந்தாற் போல இருந்தது. நிழலின் அருமை! அரங்கில் கிட்டத்தட்ட 69,000 பேர் இருந்ததாகச் சொன்னார்கள். அதில் 60,000 பேராவது கேப் வெர்டே அணிக்கு ஆதரவாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். காபோ வெர்டே காபோ வெர்டே (Cabo Verde) என்ற முழக்கம் விடாது கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த ரசிகர்கள் நடுவேதான் என் இருக்கை இருந்தது.
என் அருகே அமர்ந்திருந்தவரோடுப் பேச்சுக் கொடுத்தேன். தன் பெற்றோர் கேப் வெர்டே நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்று சொன்னவர், தன் நாடு உலகக் கோப்பையில் விளையாடும், அதைப் பார்க்கும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என்றெல்லாம் நினைத்துப் பார்த்ததே இல்லை என்று உணர்ச்சிவயப்பட்டார். எங்களுக்குப் பின் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி ஆட்டம் முழுவதும் கேப் வெர்டே அணியினருக்கு அறிவுரை கூறியபடியே இருந்தார். அந்த இரைச்சலில் இவர் சொல்வது வீரர்களுக்குக் கேட்கப் போகிறதா என்ற கவலை எல்லாம் அவருக்குக் கிஞ்சித்தும் இல்லை. ஒவ்வொரு முறை அந்த அணியினர் ஏதேனும் தவறு செய்யும் பொழுது இவருக்கு அத்தனை கோபம் வந்தது. தன் மகனே ஆடுவது போல அத்தனை கவலைப்பட்டார். இப்படி எல்லாம் உணர்ச்சிப்பெருக்கைத் தருவதுதானே உலகக்கோப்பை என்பதைப் பூரணமாக உணர முடிந்தது.
இரு அணிகளும் சம பலத்தோடு களமிறங்கினர். ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் விளையாடினர். இந்த ஆட்டதின் முடிவு எப்படி தங்கள் எதிர்காலத்தையே மாற்றக் கூடும் என்பதை உணர்ந்து தம் வித்தைகளை எல்லாம் காட்டினர். தம்மால் அணிக்குப் பிரச்னை வரக்கூடாது என்று ஒவ்வொருவரும் மிகக் கவனத்தோடு விளையாடினர். இவர்கள் ஆடிக் கொண்டிருக்கும் பொழுதே அரங்கில் இருந்த பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒரு தகவல் வெளியானது. உருகுவேயுடனான ஆட்டத்தில் ஸ்பெயின் ஒரு கோல் போட்டுவிட்டார்கள் என்பதுதான் அது.
அப்படியென்றால் இந்த ஆட்டத்தை சமன் செய்தால் போதும் கேப் வெர்டே அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும் என்பதை உணர்ந்த கூட்டம் ஆர்பரிக்கத் தொடங்கியது. என் மணிக்கட்டில் இருந்த ஆப்பிள் வாட்ச், இத்தனைச் சத்தத்திற்கு நடுவே இருந்தால் காது கேட்காது போய்விடும் என்று எச்சரிக்கத் தொடங்கியது. பல நூறு மைல்களுக்கு அப்பால் நடக்கும் போட்டியில் நடந்ததற்கு இங்கு அத்தனை ஆரவாரம். அது ஸ்பெயினுக்கான ஆரவாரமில்லை, அது கேப் வெர்டேவுக்கானது.
எங்கிருக்கிறது என்று கூடத் தெரியாத நாட்டுக்கு இன்றைக்கு அத்தனை ஆதரவு. அதற்கு முக்கியக் காரணம் பிபா இந்தப் போட்டியில் செய்த மாற்றங்கள்தாம். எட்டு குழுக்கள், ஒவ்வொன்றிலும் நான்கு அணிகள். முதல் சுற்றில் அவர்களுக்குள் ஆட வேண்டும். அதில் முதல் இரு நிலைகளில் இருக்கும் பதினாறு அணிகள் அடுத்த சுற்றுக்குப் போகும் என்ற வழக்கத்தை மாற்றி பன்னிரெண்டு குழுக்கள், நாற்பத்தெட்டு அணிகள். இதில் முதல் இரண்டு நிலைகளில் இருக்கும் இருபத்து நான்கு அணிகளோடு மூன்றாமிடத்தில் இருக்கும் அணிகளில் சிறந்த அணிகள் எட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு முப்பத்திரெண்டு அணிகள் தேர்வாகும். அதிலிருந்து பதினாறு அணிகள் அதற்கும் அடுத்த சுற்றுக்குப் போகும் என விதிமுறைகளை மாற்றி இருக்கின்றனர்.
இத்தனை அணிகள் தேவையா? அத்தனை அணிகளும் சம பலத்தோடு ஆடக் கூடியவையா என்ற கேள்விகளும் அதிகப் போட்டிகள் என்றால் அதிகப் பணம் என்பதால் இந்த மாற்றம் என்ற விமர்சனங்களும் எழுந்தாலும் கூட இந்த விரிவாக்கம் நடக்கவில்லை என்றால் குரசாவோ, போஸ்னியா ஹெர்சகோவினா, கேப் வெர்டே போன்ற சிறு அணிகளுக்கு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்புதான் கிடைத்திருக்குமா? என் அருகே அமர்ந்திருந்தவர் சொன்னது போல அவர்களின் கனவுதான் நனவாகிருக்குமா? அந்த விதத்தில் இந்த விரிவாக்கம் நல்லதுதான் என்று சொல்பவர்கள் பக்கம் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
ஆசியாவிலும் இதே கதைதான். இந்த விரிவாக்கத்தினால் ஆசியாவிற்கு எட்டு இடங்கள். வழக்கம் போல ஜப்பான், தென்கொரியா, ஈராக் போன்ற அணிகள் தம் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டாலும் ஜோர்டன், உஸ்பெக்கிஸ்தான் போன்ற அணிகளுக்கு உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்ததற்கு இந்த விரிவாக்கம்தான் காரணம் என்பதில் சந்தேகமில்லை. இத்தனை நடந்தாலும் இந்தியாவிற்கு மட்டும்தான் இன்னும் விடிவுகாலமில்லை. பொருளாதார உதவி இல்லாமை, விளையாட்டில் அரசியல் எனக் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அரசியல் இந்தியாவில் மட்டுமா? அமெரிக்காவும் ஈரானும் மத்திய கிழக்கில் முட்டிக் கொண்டு இருக்கும் பொழுது ஈரான் அணி அமெரிக்காவில் விளையாட வேண்டும். தங்களுக்கு தேவையில்லாத அழுத்தங்கள், தொந்தரவுகள் வருவதாக அந்த அணியினர் புலம்புகின்றனர். ஈராக்கிற்கும் அதே கதிதான். விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் இந்தப் பிரச்னை இல்லை. ஒரு நடுவருக்குக் கூட விசா கிடைக்காமல் போனது பெரிய பிரச்னையானது. விளையாட்டில் அரசியல் கூடாது என்பதெல்லாம் சொல்ல அழகாக இருந்தாலும் செயல்முறையில் எல்லாம் பின்னிப் பிணைந்துதான் இருக்கிறது.
ஆனால் அரங்கினுள் நுழைந்துவிட்டால் அரசியலுக்கெல்லாம் இடமில்லை. எல்லாருக்கும் கேளிக்கைதான், கொண்டாட்டம்தான். ஆனால் அந்தக் கொண்டாட்டத்திற்குத் தரும் விலைதான் எவ்வளவு. வெயிலில் வாடிக்கொண்டிருப்பவர்கள் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்க வேண்டுமானால் விலை ஆறு டாலர். அதுவே ஒரு பாட்டில் பியர் என்றால் பதினெட்டு டாலர். வெளிய இருக்கும் விலைக்கும் அரங்கினுள் இருக்கும் விலைக்கும் சம்பந்தமே கிடையாது. பிபா பெயர் போட்ட சட்டை, பந்து, தொப்பி, பொம்மைகள் என்று விற்கும் கடையிலும் இதே போல பகற்கொள்ளைதான். ஆனால் அதற்கு எல்லாம் அசராமல் வரிசையில் நின்று வாங்கிக் குவிக்கின்றனர் ரசிகர்கள். என்றோ ஒரு முறை வரும் உலகக்கோப்பை ஆட்டம், அதில் விலையை எல்லாம் பார்த்தால் எப்படி, அனுபவம்தான் முக்கியம் என்று வேண்டுமென்றோ வழியில்லாமலோ வாங்கத்தான் செய்கிறார்கள்.
அவர்கள் எதிர்பார்ப்புக்குத் தீனி போடுவது போல ஆட்டமும் இருந்தது. முடிவைப் பார்த்தால் 0-0 என வெற்றி தோல்வி இல்லாமல் சப்பென முடிந்த ஆட்டம் போலத்தான் தெரியும். ஆனால் தொண்ணூறு நிமிடங்களும் உயிரைக் கொடுத்து விளையாடினர். இரு அணிகளுக்கும் கோல் போட சில வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்கவில்லை என்பது போல வாய்ப்புகள் கிடைத்தாலும் கோல் மட்டும் விழவே இல்லை. ஆனாலும் என்ன, சமன் செய்ததால் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர் கேப் வெர்டே அணியினர்.
இங்குதான் ஒன்று நடந்தது. 60,000 ரசிகர்கள் ஆர்பரித்துக் கொண்டிருந்த பொழுதும் கூட அவர்கள் தங்கள் உலகக்கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்த வருத்தத்தில் தரையில் விழுந்து கிடந்த சௌதி அணியினரிடம் சென்று அவர்களைக் கட்டி அணைத்து ஆறுதல் சொல்லித் தேற்றிய பின்னர்தான் தங்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினர். அந்த ஒரு நிகழ்வு எதற்காக உலகக் கோப்பை என்ற கேள்விக்குப் பதிலாக இருந்தது. இது ஓர் அணியினரின் வெற்றி இல்லை, ஒரு போட்டியின் வெற்றி இல்லை, இது மானுடத்தின் வெற்றி.
காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று ஒரு திரைப்படப் பாடல் தொடங்கும். அது போல ஒன்றுமில்லாத ஆட்டம் என்று நினைத்து நுழைவுச் சீட்டு வாங்கினேன். இந்த உலகக் கோப்பையின் தலைசிறந்த கதைகளில் ஒன்றை வாங்கி வந்தேன்.
Discover more from சொல்வனம் | இதழ் 373 | 23 ஆக 2026
Subscribe to get the latest posts sent to your email.
