தனி மனிதனும் முழுப் படையும்

ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்த்தனா

தமிழாக்கம் : கார்த்திக்

பதிமூன்று வருட வனவாசத்திற்குப் பிறகு தங்கள் வேடங்களை களைந்து வெளிவந்த பாண்டவர்கள் மத்ஸ்ய தேசத்தில் தங்கி இருந்தனர். தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து மத்ஸ்ய தேசத்து இளவரசியான உத்தராவிற்கும் அபிமன்யுவிற்கும் திருமணத்தை நடத்தினர்.

திருமணம் முடிந்தபின் வந்திருந்த அரசர்கள் அனைவரும் அடுத்து செய்யவேண்டியதை பற்றி கலந்தாலோசிக்கத் துவங்கினர். அவர்கள் மத்தியில் ஸ்ரீகிருஷ்ணர் பேசத் துவங்கினார்.

“அன்பிற்குரிய அரசர்களே! நடந்து முடிந்த சூதாட்டத்தைப் பற்றியும், அதன்பிறகு பாண்டவர்கள் வனவாசம் சென்றதைப் பற்றியும் அங்கு அவர்கள் அனுபவித்த துன்பங்களைப் பற்றியும் நீங்கள் நன்கு அறிவீர்கள். அனைவரைது நலத்தை மனதில் வைத்தும், தர்மத்தின் பாதையைப் பின்பற்றியும் இனி நடக்க வேண்டிய விஷயங்கள் குறித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். யுதிஷ்டிரர் கௌரவர்களுடன் சமாதானமாகப் போகவே விரும்புகிறார். வீண் சண்டையை தவிர்க்கவே அவர் ஆசைப்படுகிறார். எனது கருத்தும் அதுவே ஆகும். நாம் துரியோதனனுக்கு தூது அனுப்பி அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் பாண்டவர்களுக்கு உரித்தான பங்கை வாங்க வேண்டும்.”

ஸ்ரீகிருஷ்ணர் அருகில் இருந்த பலராமர் எழுந்து ” இந்த விவகாரத்தை நாம் சமாதான நடவடிக்கைகள் மூலமே தீர்க்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளக்கூடிய, அவர்களை அமைதி தீர்வுக்கு ஒத்துக்கொள்ள வைக்கக்கூடிய ஒருவரை நாம் தூதுவராக அனுப்பவேண்டும். அப்படி தூதுவராக செல்பவர், துரியோதனனை சந்திக்கும் முன்பு பீஷ்மர், விதுரர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமன், முடிந்தால் ராதேயன் மற்றும் சகுனியையும் சந்தித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பலர் கூறிய அறிவுரைகளை மீறியே யுதிஷ்டிரர் சூதாட்டம் விளையாட சென்றார் என்பதை நாம் மறக்கக்கூடாது. தங்களின் தனிப்பட்ட விடுதலையை மட்டுமே இப்பொழுது பாண்டவர்கள் பெற்றுள்ளனர். தங்கள் ராஜ்யத்தை கொடுக்கவேண்டும் என்று அவர்களால் நிர்பந்திக்க இயலாது. தங்களுக்கு தேவையானதை யாசிக்க மட்டுமே அவர்களால் இயலும்” என்றுக் கூறி அமர்ந்தார்.

அவரைத் தொடர்ந்து பேச எழுந்த யாதவ வீரர் சாத்யகி மிகுந்த கோபத்துடன் “பலராமர் சொல்வதை என்னால் ஏற்க இயலாது. கௌரவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் மட்டுமே யுதிஷ்டிரர் சூதாட்டம் விளையாட ஒத்துக்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும், அந்த ஆட்டத்தில் திறமைசாலியான சகுனியை எதிர்த்து அவர் ஆடினார் என்பதை நாம் மறக்க இயலாது. துரியோதனன் தன் மாணவன் என்பது பலராமரின் பார்வையை மறைக்கிறது. இந்த சமாதான உடன்படிக்கைக்கு கௌரவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே. அதனால், நாம் யுத்தத்திற்கு தயாராவதே சிறந்தது ” எனக் கூறி அமர்ந்தான். அதன்பிறகு துருபதன் பேசத் துவங்கினார்.

“நான் சாத்யகி சொல்வதை முழுவதும் ஆதரிக்கிறேன். நாம் தயாராவதைத் தள்ளிப் போடவேண்டாம். நம் நண்பர்களுக்கு உடனடியாக ஆதரவுக் கேட்டு தூதர்களை அனுப்பத் துவங்குவோம். அதே சமயத்தில் , யுத்தத்தை தவிர்க்கும் வழிகளையும் தொடர்ந்து முயல்வோம். கற்றறிந்த சமயோசிதரான ஒரு பிராமணர் என் அவையில் இருக்கிறார். சமாதான முயற்சிக்கு தூது செல்ல மிக சரியான நபர் அவர்.”

அவர் கூறியதை சபையில் இருந்தோ அனைவரும் ஏற்றனர்.

“துருபர் சொல்வதில் உள்ள நியாயத்தை நான் முழுவதும் ஆதரிக்கிறேன். நானும், பலராமாரும் இரு தரப்புக்கும் சொந்தக்காரர்கள். எனவே , எந்த ஒரு முடிவெடுப்பதாக இருந்தாலும் பலவற்றையும் சீர்தூக்கி பார்த்தே முடிவெடுக்க வேண்டும். நீங்கள் அனைவரும் அனுபவசாலிகள் மட்டுமல்ல , அறிவிலும் சிறந்தவர்கள். யுத்தத்திற்கு தயாராவீர்களாக! துரியோதனனுக்கு கடைசி நேரத்தில் நல்புத்தி வந்தால் சமாதானத்திற்கு உடன்படுவான்” என்று கூறி அந்த ஆலோசனைக் கூட்டத்தை முடித்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

அந்த ஆலோசனைக் கூட்டம் நடந்ததை அறிந்த துரியோதனன், தன் தரப்பிற்கு வலு சேர்க்க அவனது நண்பர்களுக்கு தூது அனுப்பி போருக்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினான். அதே சமயத்தில் , துருபதன் தன் அவையில் இருந்த பிராமணரை யுத்தத்தை தவிர்க்கும் முயற்சியில் அமைதித் தூதுவராக அனுப்பினார். பரதக்கண்டத்தில் இருந்த அனைத்து அரசுகளும் யுத்தத்திற்கான முன்னேற்பாடுகளைத் துவங்கி இருந்தன.

தங்கள் தரப்பிற்கு ஸ்ரீகிருஷ்ணரின் ஆதரவைப் பெற துவாரகைக்கு அர்ஜுனன் சென்றான். அவன் சென்ற சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் உறங்கிக் கொண்டிருந்தார். ஸ்ரீகிருஷ்ணரின் நெருங்கிய தோழன் என்பதால் அவரது அந்தப்புரத்திற்கே சென்றான் அர்ஜுனன். அவனுக்கு முன்பே வந்திருந்த துரியோதனன் ஸ்ரீகிருஷ்ணரின் தலைப்பக்கம் அமர்ந்திருந்ததால் அர்ஜுனன் அவரின் கால்மாட்டில் அமர்ந்தான்.

சிறிது நேரம் கழிந்து உறக்கம் களைந்து எழுந்த ஸ்ரீகிருஷ்ணர், கால்மாட்டில் அமர்ந்திருந்த அர்ஜுனனையே முதலில் பார்த்தார். அவனை வரவேற்றப் பின்பே துரியனும் வந்திருப்பதை கண்டு அவனையும் வரவேற்றார். பின்பு இருவரையும் பார்த்து “இருவரும் ஒரே நேரத்துல துவாரகைக்கு வந்த நோக்கம் என்ன ” என்று விசாரித்தார்.

முதலில் பேசிய துரியன் ” எங்கள் இடையே யுத்தத்தை தவிர்க்க இயலாது போன்று தோன்றுகிறது. அப்படி யுத்தம் நிகழ்ந்தால், உங்களின் ஆதரவு எனக்கே வேண்டும் என்று கேட்கவே வந்துள்ளேன். இங்கு நானே முதலில் வந்தேன். எனவே , எனக்கே நீங்கள் முன்னுரிமை தரவேண்டும் ” என்று கோரிக்கை வைத்தான்.

“அன்பு துரியோதனா! நீ முதலில் வந்தாலும் , நான் அர்ஜுனனையே முதலில் பார்த்தேன். மேலும், உங்கள் இருவரில் அவனே இளையவன். அவனுக்கு முன்னுரிமை தருவதே நியாயம். என்னுடைய நாராயண சேனை ஒருபுறம் இருக்கும். மற்றொருபுறம், ஆயுதம் ஏந்தாமல் நான் இருப்பேன். இரண்டில் உங்களுக்கு யார் வேண்டும்? அர்ஜுனா , உன் விருப்பத்தை சொல்” என்று வினவினார் ஸ்ரீகிருஷ்ணர்.

நொடியும் தயங்காத அர்ஜுனன் “நீ எங்கள் பக்கம் இருந்தால் போதும் கிருஷ்ணா!” என்றான்.

அவன் பதிலை கேட்ட துரியோதனன் நாரயண சேனை முழுவதும் தனக்காக போரிடும் என எண்ணி மகிழ்ந்தான்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை

தொடரும் விதுர நீதி

Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.