வேட்கை மனது எல்லைகளற்றது. எல்லாவற்றையும் அடைய நினைக்கும் கடிவாளமற்ற மனம் எங்கு தன்னிறைவு அடையும் என்பது பதிலற்ற கேள்வியாகவே நிற்கும். முதலாளித்துவம் சுரண்டலின் பாற்பட்டே பார்க்கப்பட்ட படைப்புகளின் இடையே முதலாளித்துவ மனநிலையில் அலைவுறும் தனிமையைப் பேசும் படைப்புகள் தனித்துவமாக தெரிகின்றன. இது ஆபத்தான மையமும் கூட. பாட்டாளி மக்களின் வாழ்க்கைக்கும் முதலாளித்துவ வாழ்க்கைக்குமான பாரதூர வேறுபாட்டை தத்துவார்த்த அளவில் விவாதிக்கும் இடமாகவும் இந்த்த தனிமை அமைகிறது. அப்படியான படைப்பு அருண் ஜோஷி எழுதிய ஆங்கில நாவல் “கடைசி புதிர்ப்பாதை”. தமிழில் ஜி.குப்புசாமி மொழிபெயர்த்துள்ளார். இந்த நாவல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சோம் பாஸ்கர் பெரும் வணிகன். நெகிழித் தொழிற்சாலையை நிர்வகிப்பவன். சிறு சிறு நிறுவனங்களை வாங்கி தன்னுடைய நிறுவனக் குடையின் கீழ் கொண்டு வருவதில் கை தேர்ந்தவன். உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகத்தில் கற்றவன். அறிவும் ஆற்றலும் அவனுக்கு அடுக்கடுக்கான வெற்றிகளை அளித்திருக்கிறது. ஆனாலும் மனதில் எப்போதும் “எனக்கு வேண்டும் எனக்கு வேண்டும்” எனும் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தன்னுடைய வேட்கைக்கு ஈடாக பனாரஸில் இருக்கும் சிறு நிறுவனத்தை தன்வயமாக்க செல்கிறான். அந்த பயணம் அவனுடைய பொருளியல் தேடலுக்கானதாய் அல்லாமல் தத்துவார்த்த தேடலுக்கான பயணமாக அமைகிறது.
நாவல் மிகச் சிறிய எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களால் ஆனது. ஆனால் ஒவ்வொருவருக்குமான தனித்துவ குணங்கள் சோம் பாஸ்கருடன் ஒப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாயகனுக்கு கடவுள் பக்தி இல்லை. அவனுடைய அம்மா மரணப்படுக்கையில் இருக்கும்போது மருந்துகளை எடுக்க மறுத்துவிட்டாள். கடவுள் கிருஷ்ணர் தன்னைக் காப்பாற்றுவார் எனும் நம்பிக்கையில் இருந்து இறந்தவர். அதன் தாக்கம் நாயகனிடம் பக்தி என்பது வெறுமையின் பூரண வடிவமாக நிலைப்பெறுகிறது. வெறுமையிலிருந்து தப்பித்து ஓடுவதே அவனுக்கான வாடிக்கை. செல்வமும் புகழும் வெறுமையை நிறைக்க உதவுகிறது. ஒவ்வொரு மனிதனுள் இருக்கும் வெறுமையையும் அடையாளாம் காண இந்த பக்தியே அவனுக்கான அளவுகோலாக இருக்கிறது.
பனாரஸ் பயணத்திலும் அவை வெளிப்படுகின்றன. அல்தாஃப் மற்றும் அனுராதா என்பவர்களை சந்திக்கிறான். அல்தாஃபிடம் பேசி அவனுடைய நிறுவனத்தை அபகரிப்பதே பயணத்தின் நோக்கம். ஆனால் அனுராதாவின் அழகு அவனை ஆட்கொள்கிறது. விவரிக்க இயலாத புதிர் தன்மையான ரசனையை அடுக்கடுக்காக உணர்கிறான். பனாரஸ் நகரில் ஹவேலி எனும் கட்டடக் கலை நுணுக்கங்கள் விரிவாக சொல்லப்படுகிறது. அல்தாஃபின் வீடு அப்படியான பாணியில் கட்டப்பட்டது. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்வதே புதிர்ப்பாதையின் வடிவத்தில் அமைந்திருக்கிறது. வசீகரிக்கும் அழகும், பனாராஸ் நகரமும் அந்த ஹவேலியும் நாயகனை மயக்குகிறது. பனாரஸ் நகரத்தை சுற்றி பயணிக்கின்றனர். அங்கிருக்கும் புராதன தர்க்காக்களுக்கும், காசியின் நதி தீரத்திற்கும், அங்கு எரியும் பிணங்களையும் பார்க்கின்றனர். அனைத்தும் வெறுமையின் வேறு வேறு வடிவங்களாக அவனுக்கு காட்சி தருகின்றன. அல்தாஃப் வரலாற்று புரிதலுள்ளவன். வரலாற்றின் அர்த்தங்களுடன் காணும் இடங்களை அனுபவங்களாக புரிந்துகொள்கிறான். நாயகனுக்கு வரலாற்றின் மீது மதிப்பில்லை. புகழ் எப்படி நிகழ்காலம் சம்மந்தப்பட்டதோ அதையே தன் விழுமியமாகவும் கொள்கிறான். வரலாற்றின் மீது பிடிப்பு கொள்பபவர்கள் அதன் கனவை சுமக்கின்றனர். தனக்கு வரலாற்றின் மீது பிடிப்பு இல்லாததனால் செல்வத்தின் மீதும் வணிகத்தின் மீதும் புகழின் மீதும் பித்து கொண்டவனாக இருக்கிறான். மேலும் வணிகம் வளர வளர ஓர் எல்லையை வகுக்க வேண்டும் எனும் எண்ணம் அவனுள் முளைக்க மறுக்கிறது. எல்லையற்ற வேட்கையின் விளைவே அவனது வாழ்க்கையாகவும் வாடிக்கையாகவும் மாறுகிறது.
அனுராதா மட்டுமே அவனுக்கான கடிவாளமாகிறாள். அவளுடனான உரையாடலும் பொழுதும் முறையற்ற உறவின் சாயலை பூசிக்கொள்கின்றன. அவன் மனதுள் குமையும் கேள்விகளை அறிந்தவளாக இருக்கிறாள். தன்னிறைவிற்கான அர்த்தத்தை அறியாதவர்கள் தொடர் வேட்கையில் பயணிக்கிறார்கள். நாயகன் சோம் பாஸ்கருக்கு உடலளவிலும் அதுவே நிகழ்கிறது. கீதாவுடனான திருமணம், லீலா எனும் தத்துவ அறிஞருடனான உறவு மற்றும் அனுராதா. இதில் கீதா நாயகனின் உடைமையாக இடம்பெறுகிறாள். லீலாவிடம் தத்துவார்த்த உரையாடல்கள் அமைகின்றன. மேலும் லீலாவுடனான உரையாடல் சுய பரிசீலனையாகவும் அமைகின்றன. உலகியல் விஷயங்கள் அனைத்தையும் காரண காரியத்துடன் இணைக்கும் குணத்தை அவனுடைய நோயாக எடுத்துரைக்கிறாள். லீலா அதீதமான கருத்தியல் வேட்கை கொண்டவள். தத்துவ விசாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவள். தொடர்ந்து அது சார்ந்த தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே இருப்பவள். அவளுடனான உரையாடல்கள் யூங், தெக்கார்த்தே என்று தத்துவவியலாளர்களின் மெய்யறிவுத் தேடல்கள் குறித்தும் அது அவ்விருவரின் வாழ்க்கையில் எப்படி இடம் பெறுகிறது என்பதாகவும் நகரும். வாசிக்கையில் சோம் பாஸ்கருடன் பழகுகையில் சிந்தனை அளவில் லீலாவின் உரையாடல்கள் அவனை சாதாரணன் ஆக்குகிறது. பொருளியல் வேட்கை கொண்ட சராசரி மனிதனாக கீழிறக்குகிறது. அதனாலேயே லீலாவை அடைய வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு மேலிடுவதில்லை.
அனுராதா நாயகனின் வீழ்ச்சிக்கான அடையாளமாக மாறுகிறாள். அனுராதாவிற்கும் அல்தாஃபிற்குமான உறவு நிலைப்பெற்றதாக குறிப்பிடப்படவில்லை. அனுராதா குறித்த விவரணைகள் நாவலின் வேறு வேறு இடங்களில் தனித்தனியே கொடுக்கப்படுகின்றன. அவையும் சிதிலங்களாக அமைகிறது. சிதிலம் எனும் சொற்பிரயோகம் மிக முக்கியமானது. இலங்கையில் அனுராதபுரத்தின் நினைவு அனுராதாவைப் பார்க்கும் முதல் நொடி நாயகனுக்கு ஏற்படுகிறது. சிதிலங்களின் வடிவாக இருக்கிறாள். ஆனால் பேரழகு. அர்த்தப்படுத்திக்கொள்ள இயலாத, உடைமை ஆக்கிக் கொள்ள முடியாத, முழுதும் அறிய முடியாத புதிராக அனுராதா கதாபாத்திரம் வார்க்கப்பட்டிருக்கிறது. சோம் பாஸ்கருக்கு இணையான அறிவு அவளிடம் புலப்படுகிறது. இருவருக்குமான உறவு ரகசியமாக வளர்கிறது. அதை நீடித்த உறவாக மாற்ற அவள் விரும்பவில்லை. எப்படியேனும் அவளை அடைந்துவிட வேண்டும் எனும் வேட்கை பாஸ்கருக்கு நீள்கிறது.
நாயகனுக்கு ஏற்படும் இருதயச் சிக்கலில் நாவல் அதன் மூலத்தை நோக்கி நகர்கிறது. மனைவியிடம் அனுராதாவுடனான உறவைச் சொல்கிறான். அனுராதாவுடனான உறவு முறிகிறது. மனைவி வழியாகவே சொல்லப்படுகிறது. அதை தாங்கிக் கொள்ள இயலாத சோம் பாஸ்கர் பழிவாங்க அல்தாஃபின் நிறுவனத்தை வாங்கியே தீர வேண்டும் என்று முனைப்புடன் இறங்குகிறான். அவனுக்கு தொழில் நிமித்தமாகவும் தனிப்பட்ட நண்பராகவும் இருக்கும் மருத்துவர் கே அனுராதாவையும் அறிந்தவராக இருக்கிறார். தொடக்கம் முதலே அனுராதாவுடனான உறவை எச்சரிக்கிறார். அல்தாஃபின் நிறுவனமும் சிறந்த நிறுவனம் அல்ல அதை வாங்க முற்படுவதன் வழியே நம்முடைய வணிகம் சீரழியும் என்று எச்சரிக்கிறார். ஆனால் வேட்கையின் அர்த்தமற்ற பயணம் நாயகனையும் சோம் பாஸ்கரையும் எங்கெங்கோ அழைத்து செல்கிறது.
பக்தி நாவலின் முக்கிய புள்ளியாகிறது. கலை வெளிப்பாடுகளின் வழியே, பண்பாட்டு நிகழ்வுகள் வழியே பக்தியை காணும்போது அவற்றை அர்த்தமற்றவையாகவே நாயகன் கருதிக் கொள்கிறான். அஸீசுன் எனும் சிறிய கதாபாத்திரம் இடம் பெறுகிறது. அவர்கள் தங்களை மறந்து, பசியில் நடனமாடுகிறார்கள். நடனத்தின் வழியே ஒரு உன்மத்த நிலையை அடைய முயற்சிக்கிறார்கள். முதலாளித்துவ பார்வையில் தேவைகளை செல்வத்தின் மூலம் நிரப்பி விட முடியும். ஆழ்மன ஆசைகளையும் வேட்கைகளையும் செல்வத்தின் வழி நிறைவேற்றிவிட முடியும் எனும் போது செல்வமற்றவர்கள் எதைக் கொண்டு தங்களின் ஆழ்மனத் தேவைகளை நிறைவேற்றுகிறார்கள் ? நடனத்தின் வழியே எந்த இடைவெளியை அவர்கள் நிரப்ப முனைகிறார்கள் என்று சிந்திக்கிறான். அஸீசுன் மட்டுமின்றி நாவலில் இடம்பெறும் சிறு சிறு கதாபாத்திரங்களையும், அவர்களின் தேடல்களையும் அர்த்தமற்றவையாக அவனுள் பதிவாகிறது. அறிவின் பீடமாக தன்னையே கருதும் நாயகனுக்கு அனைவரையும் தன்னுடன் ஒப்பிட்டே புரிந்துகொள்கிறான்.
எல்லாம் வேண்டும் என்று நினைப்பவன் எதையும் விட்டுத்தர, தியாகிக்க விரும்புவதில்லை. பற்றை விட மனமில்லாதவனுக்கு அனைத்தும் கிடைப்பதில்லை. இந்த முரண் பக்திக்கான இலக்கணமாகிறது. தன் மீதிருக்கும் சுயபற்றை கைவிடும் தருணத்திலேயே ஆன்மீகம் சாத்தியமாகிறது. பொருளியல் ரீதியான வாழ்க்கையும் தேடலும் சுயபற்றை மேலும் இறுக்குகிறது. தாயின் பக்தியும், கீதாவிற்கு கடவுளின் மீதிருக்கும் நம்பிக்கையும், பேரழகியான அனுராதாவிற்கு இருக்கும் மருகும் கடவுள் பக்தியும் நாயகனின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது. காரண காரியத்துடன் மட்டுமே வாழ்க்கையை இணைத்து புரிந்து கொள்ளும் நாயகன் காரண காரியமற்ற விஷயங்களை எப்போதும் கேள்விகளின் வழியே காயப்படுத்துகிறான். பற்றறுத்தல் மீதிருக்கும் அவநம்பிக்கை ஓர் உவமையுடன் நவாலில் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. அல்தாஃபுடன் நாயகன் சதுரங்கம் ஆடுகிறான். போட்டின் விதிமுறைகளின் படி வெற்றியை அடைவதும் வெற்றியை கையளிப்பதும் ஒரே இடத்தில் நிகழ்கிறது. சதுரங்கத்தின் உரையாடல் அனுராதா குறித்த உரையாடலாக, பற்றுக்கும் துறவுக்குமான உரையாடலாக பரிணமிக்கிறது. அந்த குறிப்பிட்ட அத்தியாயம் நிறைவான சிறுகதையாகவும் கருதலாம்.
நாயகனின் தாத்தா பக்திக்கு எதிரானவராக இருந்திருக்கிறார். நாயகனின் தந்தை ஒரு அறிவியலாளர். காரண காரியத்தின் மீதான பித்து அவரை வழி நடத்தியிருக்கிறது. நாயகன் இரண்டின் கலவையுமாக இருப்பது நாவலின் ஒவ்வொரு பகுதியிலும் பிரதிபலிக்கிறது. அடங்காத வேட்கையின் விளைவாக அந்த நிறுவனத்தை வாங்குகிறான். ஆனால் அதன் ஒரு பங்கு கோயிலிடம் இருக்கிறது என்பதை அறிகிறான். அந்த கோயிலுக்கு சென்று தன்னுடைய வேட்கையை, பழிதீர்த்தலை நிகழ்த்த முயல்கிறான். அவையே நாவலின் கடைசி பகுதியாக அமைகிறது.
நாவலின் ஆகச் சிறந்த பகுதியாகவும் அதுவே அமைகிறது. புத்தர் ஓர் அரசர். அவர் பயணப்படும் வழியில் சந்திக்கும் வாழ்வின் இருண்ட பகுதிகள் அவருடைய அறிவில் சலனத்தை ஏற்படுத்துகிறது. அதுவே இங்கும் நாயகனுக்கு நிகழ்கிறது. கடினமான மலைப்பாதையில் ரோகிகளையும், பக்திமான்களையும், தந்தையின் மரணத்தை நேரில் காணும் மகனையும் சந்திக்கிறான். அந்த பயணமே அவனிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வேட்கை மனம் என்ன ஆகிறது, எல்லாவற்றையும் அடைய நினைக்கும் குணத்திற்கு அந்த பயணம் என்ன மாதிரியான வடிவத்தை நல்குகிறது முதலிய கேள்விகளுக்கு அப்பகுதி விடையளிக்கிறது.
கதையைப் பின்தொடந்து முடிவை எட்டினாலும் வாசகர்களுக்குள் உருவாக்கும் சலனங்கள் பதிலற்று நிச்சயம் கிடக்கும். நவீன இலக்கிய வரலாற்றில் எழுதப்பட்ட செறிவான ஆன்மீக நாவல் என்று இந்த நாவலைக் குறிப்பிடலாம். முதலாளி வர்க்கத்தை சேர்ந்த நாயகன் எனினும் மற்றமைகளை அவதானிக்கும் தத்துவார்த்த புள்ளிகள் எல்லோரிடமும் இருக்கும் கீழ்மையையே எடுத்துரைக்கிறது. செல்வத்தை சேர்க்கவும், அதன் வழி உருவாகும் அகந்தையை தக்க வைக்கவும் முனையும் மனதிற்கு எல்லையை யார் வகுப்பது ? கடவுளின் தேவை என்ன? எல்லைகள் வகுப்பது தான் கடவுளின் நோக்கமா ? துறவே வாழ்வின் எல்லையெனில் துய்ப்பதன் அர்த்தம் என்ன ? பற்று அர்த்தமற்றதா ? வாழ்வெனும் புதிர்ப்பாதையின் கடைசியில் இருப்பது என்ன ?முதலிய எண்ணற்ற கேள்விகளை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. மொழி வளமும் அதன் வழி நிகழும் உரையாடல்களும் இதை சாத்தியப்படுத்துகின்றன. மொழிபெயர்ப்பிலும் இதை உணர்வது பாராட்டுதலுக்குரியது.
தனி மனித அடையாளச் சிக்கலை ஆன்மீக அனுபவமாக மாற்றும் ஆகச் சிறந்த நாவலாக மிளிர்கிறது “கடைசி புதிர்ப்பாதை”
***
புத்தக விவரங்கள்
கடைசி புதிர்ப்பாதை ( நாவல்)
இங்கிலிஷ் மூலம்: அருண் ஜோஷி
தமிழில்: ஜி.குப்புசாமி
சாகித்ய அகாதெமி பிரசுரம்
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
