ஸ்விட்ச்

“நான் கூட எங்கே கால தாமதமாகிவிடுமோ என்று நினைத்தேன். இந்த சரக்கு  மட்டும் ஒரு வாரம் கழித்து வந்திருந்தால், நான் உணவின்றி இறந்தே போயிருப்பேன்” என்றான் ஸ்காட், ஜன்னல் வழியே செவ்வாய் கிரகத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஆராய்ச்சி நிலையத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் விநியோக விண்கலமான ஸ்னாக்கை (supply ship – SNAKK) பார்த்தபடி.

ஆமோதிப்பாய் தலையசைத்தபடி, நெருங்கிக்கொண்டிருக்கும் ஸ்னாக்கை இடைமறிக்கத் தயாராகிக்கொண்டிருந்தான் நியாலத்தே. Docking port தூண்டப்பட்டு இடைமறிக்க ஏதுவாக அதன்  முகப்புலறைகள் (Visors) விரிந்து, ‘நான் தயார்’ என்றது. 

அப்போது, 

“எச்சரிக்கை! எச்சரிக்கை! அடையாளம் தெரியாத பொருட்கள் விண்கலனை நெருங்கிக்கொண்டிருக்கின்றன” விண்கலத்தின் ஒலிப்பெருக்கி அலறியது.

ஸ்காட், மற்றும் நியாலத்தே அதிர்ச்சியுடன் கண்ணாடியாலான விமானி அறையிலிருந்து  (Glass Cockpit) பார்க்க, தொலைதூரத்தில் சில பொருட்கள் மின்னியபடி அவர்களின் விண்கலத்தை நெருங்கி வருவது தெரிந்தது. 

“Space Debris. விண்வெளிக் குப்பைகள்” என்று அலறியபடி தடுமாறினான் ஸ்காட். 

சுற்றுவட்டப்பாதைக்கான திரைகள், விண்வெளிக் குப்பைகளின் சுற்றுவட்டப்பாதையைக் கணித்து, அவைகள் ஸ்னாக் மீது மோதவே அதிக வாய்ப்பு என்றறிவித்தன.

“SNAKK, Space Debris! Space Debris! Abort docking! Abort docking! Divert to re-entry.” என்று கூவினான் ஸ்காட்.

ஸ்னாக் சுதாரித்து, விண்கலத்துடன் ஒன்றுவதைக் கைவிட்டு, அதன் உந்துவான்கள் (thrusters) வேகமாக உந்தித்தள்ள, அவசரமாக சுற்றுவட்டப்பாதையை விட்டு விலகியது. சற்றைக்கெல்லாம், ஆராய்ச்சி  நிலையத்திற்கும், ஸ்னாக்கிற்கும் இடையில், விண்வெளிக் குப்பைகள் மிதமிஞ்சிய வேகத்துடன் அவ்விடத்தைக் கடந்து போயின. எல்லாமும் கடந்து போய்விட்டது என்பதை ஊர்ஜிதம் செய்யும் ராடார் கருவி மற்றும் நட்சத்திரக் கண்காணிப்பான் (star trackers) இருளைத் துழாவிவிட்டு பச்சையில் ஒளிர்ந்தது. 

“SNAKK, that was a close call. ஹஹ” என்று சொல்லிச் சிரித்தான் ஸ்காட்.

“ஆமாம், இப்படி இருக்…….” 

சட்டென தொடர்பு அறுந்தது. ஸ்காட் கண்ணாடி வழியே பார்க்கையில் ஸ்னாக்கின் ஒரு ஓரத்தில் எதுவோ ஒன்று பயங்கரமாக மோதியிருப்பது தெரிந்தது.

மீண்டும் ஸ்னாக்குடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தான் ஸ்காட். ஸ்னாக் தொடர்பில் வரவில்லை. ஒரு மணி நேரம் மீண்டும் மீண்டும் முயற்சித்ததில் இறுதியில் தொடர்பு கொள்ள முடிந்தது.

“ஸ்காட், ஒரு கெட்ட செய்தி. ஸ்னாக்கை ஆராய்ச்சி விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் செயற்கை நுண்ணறிவுப் பகுதியின் நினைவுச் சில்லு (memory chip)  மீது ஒரு சிறிய ஸ்க்ரூ மோதியிருக்கிறது. அந்தச் சில்லின் ஒரு பகுதி சேதமாகிவிட்டது.” என்றான் ஆண்ட்ரூ ஸ்னாக் பக்கமிருந்து.

கையிலிருந்த மைக்கை தற்காலிகமாக அணைத்துவிட்டு,

“கைக்கு எட்டினது…” என்று சலித்தான் ஸ்காட்.

பிறகு, மைக்கை ஆன் செய்துவிட்டு,

“எங்களால் உணவில்லாமல் இனியும் இருக்க முடியாது.  ஏற்கனவே பல நாட்களாக முக்கால் பட்டினி. பூமிக்குத் தகவல் அனுப்பி உதவி கோருவது பயனற்றது. பூமிக்குத் தகவல் சென்று சேரவே அரை மணி நேரத்திற்கு மேல் ஆகும். அங்கிருந்து அவர்கள் பதில் தகவல் அனுப்ப இன்னுமொரு அரை மணி நேரம். அதற்கு மேல் வாய்ப்பில்லை. அதற்குள் ஏதாவது செய்யேன்” என்றான் ஸ்காட் கெஞ்சும் குரலில்.

“முயற்சிக்கிறேன் என்று சொல்ல விருப்பம் தான். ஆனால், டாக்கிங் செய்யாமல் உணவுப்பொருட்களை உங்களுக்குத் தருவதானால், பகுதி பகுதியாக விண்வெளியில் மிதந்து தான் செய்ய முடியும். ஆனால் அது  நேரமெடுக்கும். ஒவ்வொரு வேளையாகத்தான் தர முடியும். உங்கள் உணவில் பாதியை நானே காலி செய்ய வேண்டி வந்துவிடலாம். நாம் வேறொரு மார்க்கம் கண்டுபிடித்தாக வேண்டும். நான் யோசிக்கிறேன். நீயும் யோசி” என்றான் ஆண்ட்ரூ. இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

ஸ்காட்டும், நியாலத்தேவும் நிலைமையை விளக்கமாகச் சொல்லி, ஒரு ஒலி நாடாவைப் பதிவு செய்து பூமிக்கு அனுப்பினார்கள். 

நியாலத்தே எதையோ யோசித்துவிட்டு சிரிக்க,

“சிரிக்கும் நிலையிலா இருக்கிறோம்?” என்றான் ஸ்காட்.

“மனிதர்கள் நாம் இருக்கிறோம். பசியும் இருக்கிறது. உணவும் இருக்கிறது. ஆனால், இம்மூன்றையும் இணைக்க வேண்டியது ஒரு செயற்கை நுண்ணறிவின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் பிரச்சனையாகிறது. அந்த செயற்கை நுண்ணறிவை நாம் தான் படைத்தோம் என்பதுதான் வேடிக்கை” என்றான் நியாலத்தே.

“என்ன செய்வது? விண்வெளி ஏகும் செயல்பாடுகள் எல்லாமும் சிக்கலானவை. அதற்குத் தேவை, வேகமும் துல்லியமும். இரண்டுமே நம்மிடம் இல்லாதவைகளே” என்று சொல்லி கைவிரித்தான் ஸ்காட்.

சற்று நேரம் இருவருமே பேசிக்கொள்ளவில்லை.

“ஆண்ட்ரூ செய்துவிடுவானா?” என்றான் நியாலத்தே நம்பிக்கையில்லாமல்.

“அவன் செய்யவில்லையென்றால், நாம் இறக்க வேண்டியதுதான். ஏற்கனவே பல நாட்களாக நாம் ஒருவேளை தான் உண்டு மிகவும் பலவீனமாக இருக்கிறோம். இதற்கு மேல் தாங்காது” என்றான் ஸ்காட் கவலையுடன்.

“அப்படியானால் நாமும் ஏதேனும் யோசிப்போம்” என்றான் நியாலத்தே.

ஸ்காட் ஆமோதிப்பாய்த் தலையசைத்தான்.

“என்னத்தை யோசிப்பது? செயற்கை நுண்ணறிவுப்பகுதி பாழ். வெறும் கருவிகளை வைத்து என்ன செய்வது? டாக்கிங் (Docking) ஒரு சிக்கலான செயல்பாடு. துல்லியமாகவும், கவனமாகவும் நடைபெற வேண்டியது. அதை நாமாக செய்ய முடியாது. வேறெப்படி செய்வது?” என்று எதிர் கேள்வி கேட்டான் ஸ்காட்.

“எனக்கும் தெரியவில்லையே? இத்தனை விலைமதிப்புமிக்க விண்கலன் மற்றும் ஆராய்ச்சி விண்வெளி நிலையம். இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்களா என்ன? ஏதேனும் இருக்கும். கோப்புகளில் தேடிப்பார்க்கலாமா?” என்றான் நியாலத்தே.

அந்த யோசனை சரியானதாய்த் தோன்ற, ஸ்காட்டும் நியாலத்தேவும் கோப்புகளில் ஏதேனும் கிடைக்குமா என்று தேடலானார்கள். நொடிகள், நிமிடங்கள் ஆயின. நிமிடங்கள், மணித்தியாலங்களாயின. 

இதற்குள், பூமியிலிருந்து பதில் வந்திருந்தது. 

‘நினைவுச் சில்லு பாதிக்கப்பட்டிருப்பதால், அதில் பழைய மென்பொருளை நீக்கிவிட்டு, புதிய மென்பொருளை மீண்டும் நிறுவ வேண்டும்.  நாங்கள் மென்பொருளை அனுப்புகிறோம். ஆயினும் ஆராய்ச்சி விண்கலன், செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி எந்த இடத்தில் இருக்கிறது என்பது குறித்த தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டி இருக்கும்’

தொடர்ந்து, மென்பொருள் அனுப்பப்பட்டிருந்தது. ஸ்காட், புறக்கூடு உடை அணிந்து, விண்கலனுக்கு வெளியே சென்று, வெற்றிடத்தில் மிதந்தபடி, டாக்கிங் அறையின் கதவைத் திறந்து, நினைவுச்சில்லை நெகிழ்த்தி எடுத்துக்கொண்டு மீண்டும் விண்கலனுக்குள் வந்தான்.

பிறகு இருவருமாகச் சேர்ந்து, மென்பொருளைத் தரவிறக்கம் செய்துகொண்டார்கள். அதனுடன், செவ்வாயின் விண்வெளியில் ஆராய்ச்சி நிலையத்தின் இருப்பிடம் குறித்த தகவல்களை உள்ளீடு செய்தார்கள். அதன் மீது பாவனை நிரல் (simulation) ஓட்டப்பட்டது. பாவனை நிரல் வெற்றிகரமாக ஓடியது. அந்த மென்பொருளை, பழுதடைந்த நினைவுச்சில்லில் உள்ளீடு செய்ய முயன்றபோது, நினைவுச்சில்லு புதிய மென்பொருளை ஏற்க மறுத்தது. ஏன் ஏற்க மறுக்கிறது என்பதைப் பிராய்ந்துவிட்டு மீண்டும் பூமிக்கு செய்தி அனுப்பினார்கள்.

‘உங்கள் மென்பொருள் கிடைத்தது. டாக்கிங் செய்யத்தேவையான உபகரணங்களை காக்பிட்டில் கதிர்வீச்சு பட வாய்ப்பில்லாதபடி வையுங்கள் என்று எத்தனை முறை சொன்னேன்? யாராவது கேட்டீர்களா? modular approach என்று என் வாயை அடைத்துவிட்டு, டாக்கிங் கருவிகளுக்கு அருகில் வைத்தீர்களே. நினைவுச்சில்லை சோதிக்கும் பொருட்டு நாங்கள் தாய்ப்பலகையை (motherboard) விட்டு வெளியே எடுத்ததில், நினைவுச் சில்லின் ஒரு பகுதி கதிர்வீச்சில் பொரிந்துவிட்டது. எஞ்சிய பகுதியில் முழு மென்பொருளும் பதிவேற்றம் காண மறுக்கிறது. சரியான மென்பொருள் எங்களிடம் இருக்கிறது. அதனை, நினைவுச் சில்லில் நன்றாக வேலை செய்யும் எஞ்சிய பகுதிக்கேற்ப, மென்பொருளை சுருக்க வேண்டும். அதனை எங்களால் இங்கிருந்தே செய்ய முடியும். நாங்கள் முயல்கிறோம்’

மணித்தியாலங்கள் வேளைகளாயின. ஜன்னலுக்கு வெளியே பதினாறு விடியல்கள் கடந்திருந்தன. பசி வயிற்றைக் கிள்ளியது. உண்ண எதுவுமே இல்லாமல் மயக்கம் வருவது போல் இருந்தது இருவருக்கும்.

மென்பொருளை ஸ்காட்டும், நியாலத்தேவும் இணைந்து சுருக்கலானார்கள். சுருக்கப்பட்ட மென்பொருளை சான்ட்பாக்ஸில் (Sandbox) வைத்து சோதிக்க, பாரிய திரையில், புதிய மென்பொருள் கொண்ட செயற்கை நுண்ணறிவு, டாக்கிங் (Docking) செயல்பாட்டை மேற்கொள்ள, ஆராய்ச்சி நிலையத்தோடு மிதமான வேகத்தில் வந்து ஒன்றியிருக்க வேண்டிய விண்கலன், தேவைக்கும் அதிகமான வேகத்தில் வந்து ஆராய்ச்சி நிலையத்தோடு பயங்கரமாக மோதியது. பாவனை நிரலை உடனடியாக நிறுத்தினார்கள். 

“என்ன செய்து தொலைத்தாய்? பாவனை நிரலில் நன்றாகத்தானே வேலை செய்தது?”  இரைந்தான் ஸ்காட் பொறுமை இழந்தவனாய்.

“நான் என்ன செய்ய? சரியாய்த்தான் செய்திருக்கிறேன். ஆயினும்……” என்று இழுத்தவன் அதற்கு மேல் ஏதும் சொல்லத்தோன்றாதவனாய், சான்ட்பாக்ஸின் பதிவுகளை (logs) பீராயலானான்.

“ஒருவேளை, சாண்ட்பாக்ஸில் தான் பிரச்சனையோ என்னவோ? எதற்கும் டாக்கிங் மாட்யூலில் பொறுத்தி, ஒரு கற்பனையான புள்ளியை உருவகித்து, டாக்கிங்  முயற்சிக்கவா?” என்றான் நியாலத்தே.

“அதுவும் சரியாக வேலை செய்யவில்லை என்றால் மீண்டும் நினைவுச் சில்லை உறுவ வேண்டும். அப்போதும் ஒருமுறை சில்லு கதிர்வீச்சில் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. பொறு. வேறு ஏதேனும் யோசிப்போம்” என்றான் ஸ்காட்.

அதன் பிறகு வெகு நேரம் அவர்கள் கணினிக்கருகில் நிற்கும் படியாயிற்று. ஸ்காட் அடிக்கடி தனது வலது கை விரல்களால், தனது அழுந்த நீவிவி ட நேர்ந்தது. நியாலத்தே அவ்வப்போது ஆராய்ச்சி விண்கலத்தின் உலோகத் தரையில் உதைத்துக்கொண்டான். அவ்வப்போது இருவரும் தலையை இடமும், வலமுமாக அசைத்துக்கொண்டார்கள். தங்களுக்குள் மறுதலித்துக்கொண்டார்கள். இதற்குள் பூமியிலிருந்து தகவல் வந்திருந்தது.

‘எங்கள் பக்கமிருந்து நாங்களும் இங்கிருக்கும் ஆராய்ச்சி விண்கலன் மாதிரியில் சோதனைகள் செய்துபார்த்துக்கொண்டோம். மென்பொருள் வேலை செய்கிறதுதான்.  செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நீங்கள் இருக்கும் இடம் குறித்த தகவலை உள்ளீடு செய்வதில் தான் பிரச்சனை எழுகிறது என்று கணிக்கிறோம்’ என்றது செய்தி.

“செவ்வாயின் விண்வெளியில் ஆகாரம் இல்லாமல் சாவதை நினைத்தால் வெறுப்பாக இருக்கிறது” என்றான் ஸ்காட் விரக்தியுடன்.

“ஆகாரம் இல்லாததால் சாகவில்லை.  நாம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு எங்கே தவறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள நேரமின்மையால் சாக இருக்கிறோம்” திருத்தினான் நியாலத்தே.

“ஆம். வேடிக்கை தான் இல்லையா? நியாயமாகப்பார்த்தால், உண்ண உணவில்லையென்றால் மரிப்பவர்களாகத்தான் நாம் இருந்திருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவோ, பீராய தகவல்கள் இல்லாமையால் மரித்துப்போவதா இருந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் உயிர், அது பீராயும் தகவல்களைச் சார்ந்ததாகிவிட்டது. நம் உயிரை எடுக்கும் உரிமை கடவுளிடம் தானே விட்டு இருந்திருக்க வேண்டும்? அப்படிப் பார்த்தால், ஒருவகையில் இது தற்கொலை தான். அதாவது, கடவுளின் கையில் இருந்த ஸ்விட்சை எடுத்து செயற்கை  நுண்ணறிவின் கையில் கொடுத்தது போல”

“என்ன சொல்கிறாய்?”

“விஷம் உண்கிறாய். விஷம் உன்னைக் கொல்கிறது. நியாயமாகப் பார்த்தால், உன் மரணத்திற்குக் கடவுள் தானே காரணமாக இருந்திருக்க வேண்டும்? விஷத்தை வலிந்து உருவாக்கிவிட்டு, அதனிடம் உன் மரணத்தை ஒப்படைப்பது ஒரு வகையில் கடவுளின் கையிலிருந்த ஸ்விட்சை விஷத்திடம் ஒப்படைப்பது போலத்தானே”

“ம்ம்ம்ம்.. நீ சொல்வது சரிதான். விஷத்திற்கு அறிவு இல்லை. செயற்கை நுண்ணறிவுக்கு அப்படி இல்லையே”

“அதன் அறிவு என்பது நாம் வழங்கியது தானே”

தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்த நியாலத்தேவுக்கு சட்டென மூளைக்குள் விளக்கெரிந்தது. சாண்ட்பாக்ஸின் பதிவுகளைப் பரபரவென பீராய்ந்த நியாலத்தே, இறுதியில், ‘ஹுர்ரே’ என்று கத்தினான்.

‘என்ன?’ என்பதாய் ஸ்காட் நியாலத்தேவை ஆர்வமுடன் பார்க்க, 

“கண்டுபிடித்துவிட்டேன். செயற்கை நுண்ணறிவு எங்கே பிறழ்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்றான் நியாலத்தே.

“பிறழ்வா?” 

“ஆம்.  நாம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு  அடிப்படையில், ஒப்பீட்டுக்கு பிதகரஸ் தியரத்தைத்தான் பயன்படுத்துகிறது. இல்லையா?இதில் பிரச்சனை என்னவென்றால், டாக்கிங் செய்கையில், அந்த டாக்கிங் செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும்,  தன் சொந்த முடிவு எத்தனை தவறு என்பதைக் கணக்கிட இதே பிதகரஸ் தியரத்தைத்தான் பயன்படுத்துகிறது. அதில், தூரத்திற்கும், வேகத்திற்கும் சமமான முக்கியத்தைக் காட்ட இரண்டும் வெவ்வேறு அளவீடுகளில் இருத்தல் கூடாது. ஆனால், நாம் இப்போது அப்படித்தான் கொடுத்திருக்கிறோம்” என்றான் நியாலத்தே.

ஸ்காட், கணினியின் திரையைப் பார்க்க, அதில் தூரம் “நூறு மீட்டர்” என்றும் வேகம்  “நொடிக்கு இரண்டு மீட்டர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

“இதைச் சரிசெய்ய வேண்டுமானால், இரண்டையும் ஒரே அளவீடுகளில் கொண்டு வர வேண்டும்.” என்ற நியாலத்தே இரண்டையும் ஒரே மதிப்பில் கொண்டு வர, இப்போது சாண்ட்பாக்ஸ் சரியாக வேலை செய்து, டாக்கிங் முறையாக, வெற்றிகரமாக நடைபெற்றதாக அறிவித்தது. 

பிறகு, நியாலத்தே அந்தச் சில்லை மீண்டும் விண்கலனிற்கு வெளியே போய் அதனிடத்தில் அடைத்துவிட்டு, விண்கலனிற்குள் திரும்பி வந்தான். பிறகு அதை ஆண்ட்ரூவுடன் பகிர, ஆண்ட்ரூவும் சரியான தூரம், மற்றும் வேகம் மாறிலிக்களில் சரியான பொறுத்தமான மதிப்புகளுடன் இயக்க,  விநியோக விண்கலன் மெல்ல  நகர்ந்து வந்து, ஆராய்ச்சி விண்கலத்துடன் ஒன்றியது.

“சாதித்துவிட்டோம்!!” என்று சொல்லிக் குதூகலித்தான், நியாலத்தே.

“ஆனாலும், இன்னமும் மரணத்துக்கான கடவுளிடம் இருந்திருக்க வேண்டிய ஸ்விட்ச், செயற்கை நுண்ணறிவிடம் தானே இருக்கிறது” என்றான் ஸ்காட்.

“ஒன்று சொல்லட்டுமா?” என்றான் நியாலத்தே ஸ்காட்டை கண்களின் பார்த்தபடி.

“என்ன?” என்றான் ஸ்காட், புருவச்சுருக்கங்களுடன்.

“கடவுளிடம் இருந்திருக்க வேண்டிய ஸ்விட்ச் தான். செயற்கை நுண்ணறிவிடம் இருக்கிறதுதான். ஆனால், கடவுள் அழுத்தியிருக்கவேண்டிய தருணம் வரை, செயற்கை நுண்ணறிவு அழுத்திவிடாதபடி பார்த்துக்கொண்டால், அது கிட்டத்தட்ட கடவுளிடமே ஸ்விட்ச்சை விட்டு வைத்த கணக்கு தானே” என்றான் நியாலத்தே.

“ஆனால், கடவுள் எப்போது ஸ்விட்ச் அழுத்த வேண்டும் என்று எப்படித் தெரியும்? அது தெரிந்தால் தானே, அதுவரை செயற்கை நுண்ணறிவு அழுத்திவிடாதபடி பார்த்துக்கொள்ள முடியும்?”  என்றான் ஸ்காட் புரிந்துகொள்ள முயற்சிப்பவனாக.

“அது, மனித முயல்வு தானே ஸ்காட். பிழைத்திருத்தலின் மையமே அதுதானே. முடிந்தவரை முயற்சிப்பது. ‘முடிந்தவரை’ என்பதன் எல்லையை விஸ்தரித்துக்கொண்டே செல்வது. எந்தப் புள்ளியில் இதற்கு மேல் விஸ்தரிக்க முடியாதென்று வருகிறதோ அந்தப் புள்ளிதான் கடவுள் ஸ்விட்ச் அழுத்தும் புள்ளி என்று எடுத்துக்கொள்வது.” என்றான் நியாலத்தே சிரித்துக்கொண்டே.

ஸ்காட் புரிந்துகொள்ள இயலாதவனாய், தலையைச் சொறிய,

“பசிக்கிறது.. வா சாப்பிடலாம்” என்றான் நியாலத்தே, கதவு திறந்து  தவழ்ந்தபடி நுழையும் ஆண்ட்ரூவைப் பார்த்து சினேகமாகப் புன்னகைத்தபடி.


Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.