முதற்பனி

This entry is part 13 of 11 in the series ஹைக்கூ

முதற்பனி
பேரரளி இலை
வளையும் வரை

கவிஞர்: மட்சுவோ பாஷோ (1644 – 1694)

ஹட்சுயுகியா
சுயிசென்னொஹானொ
தவமுமதெ

初雪や
水仙の葉の
たわむまで

சித்திரம் வர்த்தமான்

ஜப்பானிய வனத்தில் பேரராளி மலர்கள் பூத்திருக்கின்றன. மஞ்சள் நிற இதழ்களை விரித்துப் பூத்திருக்கும் அவற்றைச் சுற்றி மண்ணில் செருகிவைக்கப்பட்ட ஈட்டிகளின் வடிவில் நீண்ட பச்சை நிற இலைகள் நிறைந்திருக்கின்றன. ‘ஃபுயு’ என்னும் குளிர்காலத்தின் தொடக்கத்தில் பொழியும் ‘முதற்பனி’ பொழிகிறது. வனத்தின் மீது மெல்லிய போர்வையாகப் படர்கிறது. மலர்களின் மீதும் வானத்தை நோக்கி நிற்கும் பேரரளி இலைகளின் மீதும் படர்கிறது. பாஷோவின் பார்வை இலைகளின் மீது குவிகிறது. படர்கின்ற பனியின் கனம் தாங்காமல் இலை வளைகிறது. காற்றுக்குத் தலைசாயும் நாணலைத் தமிழ்க் கவிஞர்கள் காட்சிப்படுத்தியதைப் போல், பனியின் பாரத்தைத் தாங்க இயலாமல் இலைகள் தலை சாய்வதை பாஷோ காட்சிப்படுத்துகிறார்.

முன்பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே!
விழுகிறதே! உயிர் நனைகிறதே!

= கவிஞர் பழனிபாரதி

முதல் கவிதை, முதல் வெற்றி, என அனைத்து முதல் உணர்வுகளும் மறக்கமுடியாதவை. முதற்காதலும் அப்படித்தான். பழனிபாரதி எழுதிய இத்திரைப் பாடலில் முதல் மழையுடன் காதலை ஒப்பிட்டு, அதிகாலையில் பனிபொழியும் முன்பனிக்காலத்தையும் துணைக்கு அழைத்து உயிரை நனைக்கும் காதலை வெளிப்படுத்தினார். பனிக்காலத்தை இரண்டாகப் பிரித்து முன் பனி, பின் பனி எனப் பெயரிட்டு, மார்கழி தை என்றும், மாசி பங்குனி என்றும் தனித்தனியாக அடையாளப்படுத்திய தமிழ் மரபு இயல்பாகப் பாடலின் முதல் வார்த்தையில் அமைந்தது.

முன் பனி, பின் பனி எனப் பருவகாலங்களைப் பிரித்து அழைத்ததைப் போல ஜப்பானிய மொழியிலும் பனி பொழியும் ஃபுயு (冬 – ふゆ) பருவகாலத்தின் தொடக்கத்தில் பெய்யும் முதல் பனிப்பொழிவு அதையே ‘ஹட்சுயுகி’ எனத் தன் சிறப்புப் பெயராகக் கொண்டது.

முதல் மழையை எப்படித் தமிழ்க் கவிஞர் காதல் கொள்வதுடன் இணைத்தாரோ அதைப் போலவே ஜப்பானிய மொழியிலும் ஹட்சுயுகி கவித்துவமாக இணைகிறது. புதிய தொடக்கத்தைக் கவித்துவமாகக் குறிப்பிடும் வார்த்தையாக மொழியிலும், கடந்த கால நிகழ்வுகளுக்கு மன்னிப்புக்கேட்டுப் புதிதாகத் தொடங்குவதற்கு ஏற்ற பருவகாலமாகக் கலாசாரத்திலும் ஹட்சுயுகி என்னும் முதல் பனிப் பனிப்பொழிவு இணைகிறது. ஹைக்கூவின் முதல் அடி பருவகாலத்தின் முதற்பனியை மட்டும் குறிப்பிடாமல் உள்ளுறையாக ஒரு புதிய தொடக்கத்தைச் சொல்வதாகவும் பார்க்கப்படுகிறது.

ஹட்சு யுகி இரண்டு காஞ்சி வரிவடிவங்களைக் கொண்டது. முதல் காஞ்சி 初 ஹட்சு, தொடக்கத்தைக் குறிக்கும். は ஹ, つ ட்சு என்னும் இரண்டு ஹிராகனா வடிவங்களின் கூட்டு 初 ஹட்சு. முதன் முதலாக யாரையெனும் சந்திக்கும்போது சொல்லப்படும் ஜப்பானிய வாக்கியம் ‘ஹஜிமேமாஷிதா’, சந்திப்பதில் மகிழ்ச்சி என்பது இதற்கு இணையான மொழிபெயர்ப்பாக சொல்லப்படுவதை ஏற்கிறோம், ஆனாலும், ஹஜிமேமாஷிதாவில் ஹஜிமெ என்னும் வார்த்தையில் உள்ள முதல் காஞ்சி 初. இதுதான் ஹட்சுவாகவும் ஒலிக்கும், ‘முதலாம்’ என்பதைச் சொல்லும் எண்ணிக்கைக்காக ஹஜி 初 எழுதப்படுகையில் ஹட்சு எனவும் ஒலிக்கும்.

雪 ゆ யு, き கி, யுகி, பனி. இந்த காஞ்சியின் பாதி வடிவம் 雨 அமெ あめ மழையைக் குறிப்பிடும். மொழிவதைக் குறிப்பிட மழையின் காஞ்சி பனியில் இணைகிறது.

கவிதையின் முதல் அடி: முதற்பனி. 初雪や – はつゆきや – ஹட்சுயுகியா. இந்த ஹைக்கூவில் யா や அசைச்சொல்லாகவும் சிலிர்ப்பின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

水仙の葉の – சுயிசென்னொஹானொ. சுயிசென் – பேரரளி மலர், ஆங்கிலத்தில் Daffodil. காஞ்சி அமைப்பு இரண்டு வடிவங்களைக் கொண்டது 水 => す சு, い யி சுயி + 仙 => せ செ, んன் சென். இவை தனித்தனியாக எழுதப்பட்டால் முறையே நீரையும் மாயாவியையும் குறிப்பிடுகின்றன. இணைந்த காஞ்சியில் வடிவத்தால் நீர் மாயாவி என்னும் காட்சியில், ‘சுயிசென்’ என்னும் சொல் பேரரளி மலரைக் குறிப்பிடுகிறது. 葉 காஞ்சியின் ஒலிப்பு ஹ, ஹிராகனாவில் は, பொருள் – இலை. の னொ ஹிராகனா எழுத்து தமிழில் ஐந்தாம் வேற்றுமை ‘இன்’ ஆகும். இரண்டாவதா இடம்பெறும் の னொ, இல் எனப் பொருள்படும்.

சுயிசென் – பேரரளி மலர், னொ – இன். சுயினென்னொ => பேரராளி மலரின்.

ஹா – இலை, னொ – இன். ஹானொ => இலையில்.

கவிதையின் இரண்டாம் அடி: பேரரளி இலையில். 水仙の葉の – すいせんのはの – சுயிசென்னொஹானொ.

たわむまで – த வ மு ம தெ. வளைதலைக் குறிப்பிடும் ஜப்பானியச் சொல் தவமு. இதற்கென 撓 தவ + む மு என ஒரு தனிக் காஞ்சி வரிவடிவம் இருப்பினும், இச்சொல் பெரும்பாலும் ஹிராகனாக்களால் மட்டும் たわむ ‘தவமு’ என எழுதப்படுவது வழக்கம். அதனால், இந்த ஹைக்கூவின் ஜப்பானிய வடிவத்திலும் தவமுவின் காஞ்சி வடிவம் இருக்காது. அது ஹிராகனாவில் எழுதப்படும். ま ம, で தெ, மதெ – வரையில்.

கவிதையின் மூன்றாம் அடி: வளையும் வரையில். たわむまで – தவமுமதெ.

வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கமாக ஹைக்கூவை எழுதினால்,

முதற்பனி
பேரரளி மலரின் இலையில்
வளையும் வரையில்

அதனை உள்வாங்கி மொழிமாற்றினால்,

(1)
முதற்பனி
பேரரளி இலை
வளையும் வரை

(2)
முதற்பனியில்
பேரரளி இலை
வளைந்தது

(3)
முதற்பனி
பேரராளி இலையை
வளைத்தது

என அந்த நேரத்துப் பார்வைக்கு ஏற்றபடி சிறிய வேறுபாட்டைக் காட்சியில் கொண்டுவரலாம்.

ஹைக்கூ

பிள்ளையின்மை

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.