ஒரு காலத்தில் தங்க ரதம் வந்தது வீதியிலே. இன்று வழிபாட்டுப் பிரகாரங்களுடன் தங்க ரத ஊர்வலம் நின்றுவிடுகிறது. பொன் மஞ்சள் நிறத்தில், மினுமினுப்போடு, என்றும் உடலிற்கு அழகையும், மெருகையும் தரும் தங்கம், செல்வச் செழிப்பின் அடையாளம் என்று பார்க்கப்பட்டது- இன்றும் அப்படித்தான். அதுவும் அந்த உலோகம் இந்தியர்களின் தோல் நிறத்தில் ஒன்றி இசைவது அருமை. தங்கப் பொடியை அளவாக உணவுடன் அல்லது நீருடன்/ பாலுடன் எடுத்துக் கொண்ட சென்ற தலைமுறை நடிகர்களை நாம் அறிவோம். சில ஆயுர்வேத மருந்துகளில் இன்றும் கூட சில உலோகக் கலவைகளில் தங்கம் சிறிதளவு உண்டு. ஒரு காலத்தில் பட்டுப் புடவைகளில் தங்கமும், வெள்ளியும் இழைத்து ஜரிகை செய்து நெசவுடன் இணைப்பார்கள். புடவை பழசானவுடன் அந்த பார்டரையும், தலைப்பையும் உருக்கி தங்கம், வெள்ளியை எடுப்பார்கள். இப்போது பெரும்பாலும் செயற்கை ஜரிகைதான்.
ஃப்ரான்ஸ் அரசு அமெரிக்காவில் தான் வைத்திருந்த தங்கத்தை அங்கேயே விற்றுவிட்டு, யூரோப்பில் தங்கத்தை வாங்கி அதில் இலாபமும் பார்த்ததுதான் தற்சமயம் பேசுபொருளாகியுள்ளது. 1960களிலேசார்லஸ் டி கோல் இதைச் செய்திருந்தார் அதைப்பற்றி பார்ப்பதற்கு முன்னால், சிறிது வரலாறு.
பண்ட மாற்றில், பொருளுக்குப் பொருள் என்ற முறை முதலில் பின்பற்றப்பட்டது. காலப் போக்கில் தங்கம் என்பது முதலீடாகவும், நாணய முறையிலும் பயன்பட்டது. தங்க மதிப்பை அடிப்படையெனக் கொண்டு உலக வர்த்தகப் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்பட்டது. தங்கம் கொடுத்து பொருள் வாங்குவதும், விற்பதும் அகில உலக சந்தைகளிலும், உள்ளூர் சந்தைகளிலும் வழக்கமானது. தங்கம் மட்டுமல்ல, வெள்ளி, செம்பு போன்ற உலோகங்களும் வாணிப நாணயங்களாகின. ஆனால், அகில உலக வர்த்தகங்கள் தங்கத்தில் நிர்ணயிக்கப்பட்டன. ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பு நேரடியாக தங்கத்துடன் இணைக்கப்பட்டது. காகித நாணயங்களை, தங்கத்தின் விலையுடன் இணைக்க நாடுகள் முன்வந்தன. ஆயினும், இந்த பொன் தர நிலை (Gold Standard) சற்று இறுக்கமாக இருந்தது.
ப்ரேட்டன் உட்ஸ் கூடுகை (1944-71) (Bretton Woods Conference)
இரண்டாம் உலகப் போருக்குப் பின், 44 தேசங்கள் பிரேட்டன் உட்ஸ்சில் கூடி, அகில உலக வாணிபத்தின் நாணய மாற்று இயக்கம் (International Exchange System) சற்று நெகிழ்வாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அதில் இவ்விதம் புரிந்துணர்தலும், ஏற்பும் நடை பெற்றன.
- ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு அமெரிக்க டாலர் மதிப்பு $35 என்று நிர்ணயிக்கப்பட்டது.
- மற்ற தேசங்களின் நாணயங்கள், டாலர் மதிப்பீட்டின் கீழ் வந்தன.
- ஒவ்வொரு தேசத்தின் மத்திய வங்கிகள், அமெரிக்காவிலோ அல்லது அகில உலக தங்கச் சந்தைகளிலோ, தங்கள் டாலர்களை பொன்னாக மாற்றிக் கொள்ளலாம்.
- இவ்வாறாக உலகின் முதன்மை கரன்ஸியாக டாலர் உருவெடுத்தது.
இந்த அமைப்பும் கைவிடப்பட்டது. 1960களில் இதன் போதாமைகள் அதிகமாயின; அது உலகப் பொருளாதாரத்தை பாதித்தது.
- ட்ரிஃபினின் சங்கடம்: (Triffin Dilemma) வர்த்தகத்திற்குத் தேவையான நீர்மைத்தன்மைக்காக, (Liquidity)அமெரிக்கா, தன் செலுத்து நிலையை, (Balance of Payments) பற்றாக்குறையிலேயே (Deficit) வைத்திருக்க நேர்ந்தது. அது நிறைய இறக்குமதி செய்து, குறைந்த ஏற்றுமதி செய்தது. அந்தப் பற்றாக்குறையை அது வைத்திருக்காவிட்டால், உலக வர்த்தகம் ஸ்தம்பித்துவிடும். உலகெங்கும் அமெரிக்க டாலரிருக்க, மற்றும் ஒவ்வொறு தேசத்தின் மத்திய வங்கிகளும் அமெரிக்க கருவூலத்தில் டாலரை இருப்பில் வைத்திருக்க அதற்கேற்ற பொன் அங்கே இருந்ததா என்ற உறுதியான ஐயம் பல தேசங்களுக்கு எழுந்தது.1960களின் இறுதியில் “நம் இருப்புக்கள் டாலரில் அங்கே இருக்க, அமெரிக்காவிடம் இவற்றிற்கு ஈடான பொன் இருக்குமா?” என்று ஃப்ரான்சின் சார்ல் டி கோல் (Charles de Gaulle) சிந்தித்து உடனே செயல்பட்டார். அதற்கு இரகசியமாக ‘வீட் கோஸெ’ (Vide-Gousset – வெற்றுப் பை) என்று பெயரிட்டார்கள். 3313 டன் பொன், 129 விமானப் பயணங்கள், 44 கப்பல் பயணங்கள்! இன்று மேக்ரான் அதையே செய்திருக்கிறார் 129 டன் தங்கத்தை அமெரிக்காவில் விற்று விட்டு, அதே அளவில் யூரோப்பாவில் தங்கம் வாங்கி அதை பாரிசுக்கு கொண்டு வந்துவிட்டார். நிகர இலாபம் €8.1 பில்லியன்!
- பணவீக்கமும், செலவுகளும்: வியட்நாம் போர், ஈரான்- அமெரிக்க போர், ‘க்ரேட் சொஸைடி’ (Great Society) போன்றவை உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கி வருகின்றன. அது போரைப்பற்றியதல்ல, மனித உயிர்களைப் பற்றியதல்ல, சுற்றுச் சூழல் நாசமடைவதைப் பற்றியல்ல, போரால் சிதிலமடைந்த குடும்பங்களைப் பற்றியதல்ல, தங்கள் டாலர் இருப்பின் சரியும் மதிப்பைப் பற்றிய ஒன்று.
- பொன் ஓட்டம்: (Gold Runs) ஃப்ரான்ஸ், தனது தங்கத்தைத் தாயகம் கொண்டுவர ஆரம்பித்தது. (சார்ல் டி கோல்) இதனால், அமெரிக்க தங்க இருப்பு வெகுவாகக் குறைந்தது.
நிக்ஸன் தந்த அதிர்ச்சியும், தங்கத்தின் முடிவும்

டாலர்- தங்க மாற்று: நமது 25து சுதந்திர தினத்தன்று (15/08/1971) நேரடியான டாலர்- தங்க மாற்றை நிக்ஸன் அகற்றினார். அதாவது, மற்ற தேசங்களின் மத்திய வங்கிகள் அமெரிக்காவில் வைத்துள்ள டாலர்களை, பொன்னாக மாற்ற முடியாது.
மிதக்கும் மாற்று விகிதம்: (Floating Exchange Rate) இதுகாறும் தங்கத்தில் நங்கூரமிட்டிருந்த மாற்று விகிதம், தள்ளாட்டம் கண்டது. தேவைக்கும், அளிப்பதற்குமான நிலை, (Demand & Supply Position) சந்தையில் நாணய மாற்று விகிதத்தை நிர்ணயித்தது. மிதக்கும் மாற்று நடைமுறையானது.
அதிர்ச்சியின் அதிர்வு: உலகப் பொருளாதாரம், “ஆணைப் பணமுறை” (Fiat Currency System) என்று மாறியது. ஒவ்வொரு நாட்டின் அரசும், தங்கள் நாணயத்தின் மதிப்பு என்று ஒன்றைச் சொல்ல, அதை அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளும் ஏற்க, ஒரு பொருண்மையான பொருளின்றி, அதாவது, தங்கம் போன்ற ஒரு அடிதாங்கியின்றி, நாணய மாற்று விகிதம் உருப்பெற்றது. நாணயக் கொள்கையின் மூலம் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய வங்கிகளுக்குத் தேவையான நீர்மையை இது வழங்கினாலும், தங்கம் முன்பு விதித்திருந்த கட்டுப்பாடான ‘நாணய வழங்கல்’ (Money Supply) இல்லாமல் போய், நாடுகள் அதிக நாணயங்களை அச்சிடத் தொடங்கின.
1960களின் மத்தியில் லிண்டன் பி ஜான்சன் (Lyndon B. Johnson) ‘உன்னத சமூகம்’ என்ற பெயரில் உள்நாட்டுக் கொள்கைகளைச் சீரமைத்தார். வறுமை ஒழிப்பு, சமத்துவம், குற்றக் குறைப்பு ஆகியன முக்கிய குறிக்கோள்கள். கிட்டத்தட்ட 200 சட்டங்கள் வந்தன. உடல் நலம், மருத்துவக் காப்பீடு, சமத்துவ குடிமகன், வாக்குரிமை, அடிப்படைக் கல்வி, வேலைவாய்ப்பு என்று மக்கள் நலத் திட்டங்கள் அவரது கொடை.
அமெரிக்காவின் நடவடிக்கைகள், அவர்கள் ஈடுபடும் போர் இவற்றைக் கணக்கில் கொண்டு, மேலை நாடுகள், டாலரை மட்டும் நம்புவது அமைப்பு சார் பலவீனம், அது அரசியல் சதுரங்க ஆட்டம் மற்றும் அது ஒரு அச்சுறுத்தும் தாக்கும் கருவி என்று உணரத் தொடங்கின. தென்னுலகம், பெட்ரோ- டாலரால் கடன் வலையில் விழுந்தது; தன் குடிமக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்ய முடியாமல், டாலரில், இருப்பை வைக்க வேண்டிய கட்டாயத்திலும் இருந்தது.
டாலரை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படக்கூடாதென்ற முடிவிற்கு மேலை நாடுகள் வந்ததன் காரணங்கள் என்னென்ன?
அது ஒரு ஆயுதம்: 2022ல் ரஷ்ய-உக்ரெய்ன் போரினால், அமெரிக்கா, ரஷ்ய மைய வங்கியின் டாலர் இருப்பை, சொத்துக்களை முடக்கியது. யூரோப் முதலான தேசங்கள், தங்கள் இருப்பை டாலரில்/ தங்கத்தில் வைத்திருப்பதன் மூலம் தாங்கள், தங்கள் சொத்தை அமெரிக்கா முடக்க வழிவகை செய்கிறோம் என்று அஞ்சினார்கள். அமெரிக்காவின் சட்டம் International Emergency Economic Powers Act (IEEPA) -1977 நிச்சயமாக அதற்கு சாதகமாக இருக்கிறது. இந்தச் சட்டத்தின் படி, அமெரிக்க அதிபர், தன் நாட்டிற்கு அச்சுறுத்தல் என்றும், அதன் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக என்றும் சொல்லி, பிற தேசத்து சொத்துக்களை முடக்கலாம். தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் அன்னிய அரசாங்கம் மற்றும் தனி நபர் சொத்துக்களை முடக்கலாம். இந்தச் சட்டமே அதன் வீங்கிய அகங்காரத்தைக் காட்டுகிறதென்றால், ரிபோ சட்டம் (2024-26) இன்னமும் தவறான ஒன்று. முன்னராவது சொத்துக்களை முடக்கலாம்; இந்த ரிபோவின் மூலம் சொத்துக்களை கையகப்படுத்தலாம்; பெரிய அண்ணாவை யார் கேள்வி கேட்பார்கள்?
இவை அனைத்துமே பல நாடுகளுக்கு அச்சம் தந்தன.
மேலும் அமெரிக்காவின் தேசியக் கடன் 2026ல் ஏறத்தாழ $40 ட்ரில்லியன். வட்டி கட்டுவதற்கே அமெரிக்கா அதிக கரன்சிகளை அச்சடிக்க வேண்டும்- அது டாலரின் மதிப்பை மேலும் குறைக்கும்.
அசலுக்கு ஆபத்து வருமென்றால், நாம் வட்டிக்கு ஆசைப்படமாட்டோம் அல்லவா? அதையேதான் இத்தாலி, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, நாடுகள் செய்தன. தங்கள் தங்க இருப்புகளை, ந்யூயார்க்கிலிருந்தும், லண்டனிலிலிருந்தும் இந்த நாடுகள், தங்கள் நாட்டிற்குக் கொண்டு வந்தன. போலந்து இன்று உலக அளவில் அதிகமாக தங்கம் வாங்குகிறது; அது, தனது இருப்பில் 30% வரை பொன்னாக வைத்திருக்கிறது அமெரிக்காவின் மீது மேலை நாடுகளுக்கு நம்பிக்கை குறைந்து வருவதை இது காட்டுகிறது.
Banque de France, ந்யூயார்க்கில் தான் வைத்திருந்த பழைய தங்கத்தை விற்றுவிட்டு, லண்டன் சந்தையில் புதிய தங்கக்கட்டிகளை வாங்கி அதில் நல்ல ஆதாயம் அடைந்தது. தன் பொருள் தன்னிடம் இருப்பது நன்று.
இன்றைய புரிதல்
| அம்சம் | பெட்ரோ- டாலர் காலம் (1974–2022) | பல்துருவ நாணயக் காலம்(2025+) |
|---|---|---|
| சொத்துக்கள் | அமெரிக்க கருவூல சேமிப்பு, பத்திரங்கள்.எண்ணெய் வளம் | தங்கம், பல நாட்டு நாணயக்கூடை |
| முதன்மை அபாயங்கள் | ஏறும் வட்டி விகிதம் குறிப்பாக தென்னுலகம் சந்திக்கும் நிதிஅழுத்தம் | தடைகள், கையகப்படுத்துதல் |
| நம்பத் தகுந்தவை | புது உலகப் பொது நாணயம் | சொத்து நம்முடையது, நம்மிடம் இருக்கட்டும் |
| மேலைச் சிந்தனை | டாலரே மேன்மை; (இன்று அப்படிஇல்லை) | கடன் வலையில் விழமாட்டோம் |
2013-17 களில் ஜெர்மனியின் Bundesbank, ந்யூயார்க்கிலிருந்து தனது இருப்பான 300 டன்னையும், பாரிசிலிருந்து 374 டன்னையும், தனது நகரான ஃப்ரேங்க்பர்ட்டிற்கு கொண்டு வந்தது. லண்டனில், பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் 12-13% தங்கத்தை அது வைத்திருக்கிறது. ஏதேனும் அவசரத் தேவை என்றால், அந்தப் பொன்னை சர்வதேச வணிகப் பொன் சந்தையான லண்டனில் எளிதில் விற்க முடியும். அது சரி, ஜெர்மனிக்கு எப்படி இவ்வளவு தங்கம்? 1960 களில், தன் இயந்திரங்களையும், மகிழுந்துகளையும் அதிக அளவில் அமெரிக்காவிற்கு விற்று அதில் கிடைத்த டாலர்களை தங்கமாக மாற்றி, அங்கேயே ஜெர்மனி அதை சேமித்து வைத்தது. இன்று அதே தங்கத்தை தாயகத்திற்கு திருப்பிக் கொண்டு வந்துவிட்டது. ஒரு அவுன்ஸ் $35 என்று வாங்கி, ஒரு அவுன்ஸ் $4600 என்று விற்றால், எவ்வளவு இலாபம் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! Marie-Agnes Strack-Zimmermann போன்ற ஜெர்மானிய அரசியல்வாதிகள் 2026ன் தொடக்கத்திலிருந்தே, ந்யூயார்க்கிலிருக்கும் மீதமுள்ள 1236 டன்னையும் நாட்டிற்குக் கொண்டுவரும்படி குரலெழுப்புகிறார்கள்.
2026ன் தொடக்கத்தில் பல தேச மத்திய வங்கிகள் மற்றும் அகில உலக நிறுவனங்கள் 6330டன் அளவில் தங்கத்தை ந்யூயார்க் ஃபெடரல் பாதுகாப்பில் வைத்துள்ளன.
நியூயார்க்கில் உள்ள அன்னிய தேசத்தின் தங்கம்
| தேசம் | பாதுகாப்பில் உள்ள தங்கம் (டன்) | மொத்த தங்கம் | அமெரிக்காவில் வைத்துள்ள சதவீதம் |
|---|---|---|---|
| ஜெர்மனி | ~1,236 | 3,352 | ~37% |
| இத்தாலி | ~1,100 | 2,452 | ~45% |
| நெதர்லாந்து | ~190 | 612 | ~31% |
| ஜப்பான் | ~80 | 846 | ~9% |
| ஸ்விட்சர்லாந்து | ~50 | 1,040 | ~5% |
| இந்தியா | ~40 | 882 | ~5% |
| ஐக்கிய அரசு | மிகக் குறைவு | 310 | குறைந்த ஒன்று |
| சீனா | விவரம் தரப்படவில்லை | 2,306 | கணித்தல் இயலாது |
ரஷ்யாவும், சீனாவும் தங்கள் நாட்டிலேயே அல்லது மேலை நாடுகளைத் தவிர்த்த மற்ற நாடுகளில் தங்கள் தங்கத்தை பாதுகாப்பில் வைக்கின்றன.
இப்படி தொகுத்துக் கொள்ளலாம்
தங்கத்தை தாயகம் கொண்டுவருவதில் நன்மை அதிகமா அல்லது ஆபத்து அதிகமா?
| இழப்பு | நன்மை |
|---|---|
| கொணரும் செலவுகள் அதிகம்- காப்பீடு, கப்பல் மற்றும் துறைமுகப் பாதுகாப்பு | என் சொத்து, யாரும் முடக்க முடியாது |
| உடனடி விற்பனை கடினம் | தங்கத்தை அமெரிக்கா போன்ற நாடுகளால் ஒரு ஆயுதத்தைப் போல் கையாள முடியாது |
| தங்கத்தின் மூலம் கிடைத்த வட்டி குறையும் | நம் நாட்டு நாணயத்தின் மீது மதிப்பும், நம்பிக்கையும் வரும் |
| அரசியல் செய்ய வாய்ப்புள்ள களம் | அமெரிக்காவின் உள்நாட்டு நிலைகுலைவு மற்ற நாடுகளை பாதிக்காது |
துருக்கியின் மைய வங்கி சமீபத்தில் 50 டன் தங்கத்தை சந்தையில் விற்றுள்ளது. தங்கம், அதன் பொருளாதாரக் கொள்கையின் ஒரு கிளை. அந்த நாடும் இந்த நடவடிக்கைக்கான தகவல்களைத் தராத ஒன்றுதான்.
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘இருப்பு மேலாண்மை’ அறிக்கையை வெளியிடுகிறது உலக வங்கி .2025 ஆண்டு அறிக்கை இவ்விதம் சொல்கிறது:
டாலர் 64%, யூரோ 24% இருப்பாக இருக்க மைய வங்கிகள் மற்றும் அரசுகள் விரும்புகின்றன. இருந்தும் டாலருக்கு மாற்றாக சில சேமிப்புகளையும் நாடுகள் விழைகின்றன. குறிப்பாக, தங்கம், பண வீக்கத்திற்கும், போர் கலவரங்களுக்கும் ஒரு வேலியாகச் செயல்படும் என்ற எண்ணம் மேலை நாடுகளிலும், சில தென் உலகிலும் நிலவுகிறது.
இந்த நிலை 2026 ல் என்ன வடிவெடுக்கும்?
| நாடு | செயல்திட்டம் | முக்கிய ஆபத்து |
|---|---|---|
| இந்தியா | டாலருக்கு சிறிது சிறிதாக மாற்று கொணர்தல் | அமெரிக்கா அதிக வரி விதிக்கும். தடைகள் கொண்டு வரும் |
| துருக்கி | அருகாமை நாடுகளின் சில கொள்கைகளை எதிர்த்தல் | பணவீக்கம், மேலை நாடுகளின் தொழில் நுட்பம் இல்லாமலாகும் |
| NATO கூட்டுறவுகள் | தருணம் பார்த்து நடந்து கொள்வது | அமெரிக்க பாதுகாப்பு இல்லாமல் போகும் |
| அமெரிக்கா | நிதியை ஆயுதமாக்குதல் | உலகை தங்கத்தை நோக்கி ஓடச் செய்தல், மாற்று கரன்சிகளை தேட வைத்தல் |
தங்கம் இப்படி அவரவர் தாயகத்திற்கு திரும்புவதை அமெரிக்கா, எப்படிப் பார்க்கிறது?
- வங்கிக் கணக்கு வைத்திருப்பவர், தன் கணக்கிலிருந்து பணம் எடுப்பதைப் போல, நாடுகள் தங்கள் தங்கத்தை எடுத்துச் செல்கிறார்கள். இது எந்த விதத்திலும் டாலரின் மேன்மையையும், ந்யூயார்க் ஃபெட்டின் நிலைமையையும் கேள்விகளுக்கு உட்படுத்தவில்லை. ஆனாலும், தங்கத்தை நோக்கி செல்லும் நாடுகள், அதாவது அதை இருப்பாகக் கொள்ளும் நாடுகளைப் பற்றி அதற்கு ஒரு உள்நடுக்கம் இருக்கிறது.
- 2026 தொடக்கத்தில் முதன் முதலாக உலக மைய வங்கிகளின் தங்க இருப்பு $4 ட்ரில்லியனாக இருக்க, அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் $3.9 ட்ரில்லியனாக இருப்பது அதற்கு கவலை தருகிறது.
இந்தியா
தன் பொருளாதாரம் எப்படிச் செயல்படவேண்டுமென்ற ஒரு சுதந்திரத் தன்மை இந்தியாவிடம் இருக்கிறது. டாலர் தன்னை தீய்க்காத வண்ணம் அது டாலருக்கு மாற்று வழி காண்கிறது. ப்ரிக்ஸ் + 20, ஐக்கிய அமீரகத்துடன், ரஷ்யாவுடன் நடக்கும் வணிகத்தில் அந்தந்த நாட்டு நாணயங்களில் பரிவர்த்தனை என்று ஒரு வியூகம் வகுத்துக் கொண்டு செயல்படுகிறது. சிறு முயற்சி, நிச்சயம் நல்ல பலன் கிட்டும்.
லண்டனில் வைத்திருந்த தங்கத்தில் பாதிக்கு மேல் (100 டன்) எடுத்து வந்து இங்கே ரிசர்வ் வங்கியின் கருவூல அறைகளில் அந்தப் பொன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
Special Rupee Vostro Account (SRVA)
இது ஒரு சீர்படுத்தப்பட்ட நல்ல முறையில் செயற்படும் ஒன்று. அயல் நாட்டு வங்கிகள் இந்திய ரூபாயை, இந்திய வர்த்தகத்திற்காக வைத்திருக்கலாம் என்பதன் மூலம் அமெரிக்கா இந்தத் தொகையை முடக்க முடியாது என்பது திண்ணமாகிறது.
ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்னரே வேதங்கள் தங்கத்தைப் பற்றிச் சொல்கின்றன. ‘ஹிரண்ய, சொர்ண’ என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை –லண்டன் ஸ்வாமிநாதன்
ரிக் வேதம் தங்கத்தையும், இரத்தினக் கற்களையும் பற்றி பாடுகிறது. அதர்வண வேதம் 44 வது செய்யும் இப்படிச் சொல்கிறது:
“எந்த பூமியானது பல ரஹசிய இடங்களில் செல்வத்தை மறைத்து வைத்திருக்கிறதோ அந்த பூமா தேவியானவள் தங்கத்தையும் ரத்தினைக் கற்களையும் பிற செல்வங்களையும் எனக்கு அளிக்கட்டும். தயாள குணமுள்ள அவள் அன்புடனும் கருணையுடனும் எங்களுக்குச் செல்வத்தை அளிப்பாள் ஆகுக.-44”
சங்கப் பாடல் (பதிற்றுப்பத்து):
“…இழை அணிப் பொலம் தொடிப் படு வண் தாரோய்…”
(பதிற்றுப்பத்து – 67: 10)
பொருள்:
பொன்னால் செய்த வளம் மிக்க மாலையை அணிந்தவனே (சேர மன்னனைப் பாடியது).
இனி, திருநாட்களில் தங்கம் வாங்குவதைத் துச்சமாகக் கருதாமல் பார்க்கலாம். ஆனால் நகைகளாகத் தங்கம் வாங்குவது அத்தனை உபயோகமான செயல் அல்ல.
புல்லியன் டீலர்ஸ்கள் தங்கப்பாளங்களை வாங்கலாம். மினரல்ஸ் & மெட்டல் டிரேடிங் கார்போரேஷன் இதை நிர்வகிக்கிறது.
புல்லியன் டீலர்ஸ் அதை நகைகள் செய்யும் பெரு நிறுவனத்திற்கு விற்பார்கள். இந்தப் பாளங்களை அந்தந்த உற்பத்திச் சாலைகளில் பாதுகாத்து, உற்பத்தியின் போது அளவாகத் தருவார்கள்.
பொது மக்களும் உரிய முறையில் விண்ணப்பித்து தங்கக் கட்டிகள் வாங்கலாம். அவர்களில் பேங்க் லாக்கர்களில் வைத்துக் கொள்வார்கள் ஆனால், பெரும்பான்மையினர், தங்கக் காசுகளை வாங்குவார்கள்.
பின்னர் கல்யாணம் போன்ற சமயங்களில் அதை உருக்கி நகைகள் செய்து கொள்வார்கள் அவை சுத்த 24 கேரட் தங்கம். நகை என வரும் போது 22 கேரட் ஆகத்தான் குறைக்கப்படும், சுத்தத் தங்கத்தில் உறுதியான நகைகள் கிட்டாது என்பதால் இப்படி ஆகிறது. கலப்பு உலோகம் சேரச் சேர நகைகளை மீண்டும் தங்கமாக விற்கையில் சேதாரம் என்று விலை குறைத்தே விற்க முடியும்.
ஆக, தனி நபர் அளவில் தங்கம் வாங்கி, எதிர்காலப் பொருளாதாரச் சரிவுக்கு மாற்றான காப்புறுதி பெறுவது என்பது அத்தனை எளிதும் அல்ல, லாபகரமான வழியும் அல்ல என்று தோன்றுகிறது.
***
உசாவிகள்:
- பதிற்றுப்பத்து
- அதர்வண வேதம்
- ஜெமினி செ நு (சில தரவுகள், தகவல்கள்)
- https://news.ycombinator.com/item?id=47658146
UBS article dt 02/04/26
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
