எஸ் எல் பைரப்பாவின் படைப்புகள் கன்னட நவீன இலக்கியத்தின் கரு, கட்டமைப்பு, சமூகத்தின் விமர்சனப் பார்வை போன்ற கூறுகளை உள்ளடக்கியவை எனலாம். இவரது புதினங்கள், குறிப்பாக ‘கிருகபங்க’(1972), ‘தாட்டு’(1973), ‘ஆவரணா’(2007), சார்தா போன்றவை, பெரும் சமூக சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் உள்ளானவை. சாகித்திய அகாதமி விருது(1975), சரஸ்வதி சம்மான் விருது(2010), பத்ம பூஷன் விருது(2023) ஆகிய விருதுகளால் கெளரவிக்கப்பட்டவர் பைரப்பா.
“நான் சோஷலிஸ்ட் அணுகுமுறை உடையவன். பைரப்பா மரபு வழி அணுகுமுறை உடையவர். இந்த இரு முனைகளும் மோதி உரையாடியதின் விளைவே கன்னடத்தில் சிறந்த படைப்புச் சூழல் உருவாயிற்று. எனது எதிர் முனையான அவரே நான் கன்னடத்தில் மிக மதிக்கும் படைப்பாளி” எனக் கூறும் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் பார்வை கவனிக்கத்தக்கது.

ಕವಲು ( Kavalu ) என்று கன்னடத்தில் எஸ்.எல்.பைரப்பா 2010ல் எழுதிய நாவல் ‘பிளவு’ என்னும் பெயரில் தமிழில் ஜெயா வெங்கட்ராமனால் (உதவி எல்.ராமகிருஷ்ணன்) மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ‘கவலு’ என்பதன் நேரடிப் பொருள் Cross Roads என்று இருந்தாலும், தமிழில் ‘பிளவு’ என்கிற பெயரில் உள்ளது பொருத்தமாகவே உள்ளது. ஏனெனில், நாவலின் கரு கணவன் மனைவி உறவில் ஏற்படும் பிளவுகளைப் பற்றி அலசுகிறது. பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்கள் சுதந்திரத்தையும், ஆண்களின் மேலாதிக்க அணுகுமுறைகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
“பிளவு”, பாரம்பரிய கலாச்சார மரபுகளை நவீன மற்றும் மேற்கத்திய சிந்தனைகள் எப்படி அசைத்துப்பார்க்கின்றன என்பதை, குடும்பம், கணவன் மனைவி உறவு, பிறழ்வான பாலியல் உறவுகள், பெண்ணுரிமை, அதற்கான ஒருதலைப்பட்சமான சட்டங்கள், போலி பெண்ணியம், கலைந்துபோகும் மனித உறவுகள் போன்ற இன்றைய தவிர்க்கமுடியாத வாழ்க்கை முரண்களைக் கொண்டு விவரிக்கிறது. பழமைக்கும், புதிய நவீன முறை வாழ்க்கைக்கும் இடையே கிடந்து, சிக்கிச் சீரழியும் சமூக அவலங்களைச் சாடுகிறது. ஒருவேளை இதுவே இன்றைய சமூகத்தின் எதிர்கால உருமாற்றமாக இருக்குமோ என்ற கேள்வியை நம்மிடையே எழுப்புகின்றது. இந்த விவாதங்களை முற்றாக ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியும்; ஆனால் எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்குகிறது.
ஒரு ஃபேக்டரியை உருவாக்கி, நல்ல முறையில் நடத்திவரும் ஜெயகுமார், வைஜெயந்தி தம்பதிகள் – எதிர்பாராத சாலை விபத்தில் வைஜெயந்தி இறக்கிறாள். அவர்கள் குழந்தை மூளையில் சிறு காயம்பட்டு, பேச்சித்திறமை இழக்கிறாள். வைஜெயந்தியின் பிஏ மங்களாவிடம், அவள் அனுமதியுடன் தன்னை இழக்கும் ஜெயகுமார், அவள் கர்ப்பத்துக்குப் பொறுப்பேற்று அவளைப் பதிவுத் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறான்.. இதற்கு தேசிய மஹிளா சங்கம், ஹைகோர்ட் வக்கீல், எகனாமிக்ஸ் ப்ரொஃபசர், ஒரு டாக்டர், டிராவல் ஏஜண்ட், காலேஜ் கேர்ள்ஸ் 100 பேர் என வந்து, சட்டம், மெடிகல் சம்பந்தமான காரணங்களைக் கூறி ஜெயகுமாரைப் பணிய வைக்கின்றனர். அதற்குப் பின்னால் எழும் மன உளைச்சல், பொருளாதார இழப்பு, குடும்பத்தில் அமைதியின்மை என குடும்பம் தடம் புரள்கிறது.
மங்களாவின் கல்லூரி நாட்களில் அவளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், மாணவ, மாணவிகளின் சுதந்திரம் மற்றும் நடத்தை, ஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிடியில் படித்த ஆசிரியர் இலாவின் போதனைகள் (“மேலை நாடுகளில், தவறுதலாக ஒரு பெண் கர்ப்பிணியானால், நம்மைப் போல மூடி மறைத்து அதைத் திருட்டு கர்ப்பம் என்கிற உணர்வை ஏற்படுத்துவதில்லை. திருமணம் செய்துகொண்ட பெண்ணிற்குக் கொடுக்கும் கெளரவம், திருமணம் ஆகாத தாய்க்கும் உண்டு. சமூகம் அதை ஒப்புக்கொள்கிறது. பெண் உரிமையில் இது ஒரு முக்கியமான மைல் கல்”) என அவளின் பிரச்சனைகளின் மூலத்தைச் சொல்கின்றன.
ஜெயகுமாருடன் மனமுறிவு, மங்களாவைக் கல்லூரிக்கால நட்பு, பிரபாகருடன் கள்ளத் தொடர்பு கொள்ள வைக்கிறது. தன் ஆண்மையைக் குறைகூறும் மங்களாவினால், வேசிகளிடம் செல்லும் ஜெயகுமார், கைதாகி ஜெயிலுக்குச் செல்வதும் நடக்கிறது.
மங்களாவின் வாழ்க்கைக்கு இணையாக சொல்லப்படுகின்றது இலா மேடத்தின் திருமண வாழ்க்கை. தன் சுய கெளரவம், பெண்ணுரிமை போன்றவற்றால், கணவனுக்கு கிடைக்கும் பதவி உயர்வு, டெல்லிக்கு மாற்றம் என எதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் இலா, யுனிவர்சிடி வேலையை விடாமல், மகளுடன் பெங்களூரிலேயே தங்கிவிடுகிறாள். அதனால் ஏற்படும் மன முறிவுகள், முரண்கள் என வாழ்க்கை செல்கிறது. அரசியல்வாதி ஒருவருடன் கள்ளத் தொடர்பு, அதனால் வரும் அவமானங்கள் என அமைதியற்ற வாழ்க்கை.
ஜெயகுமாரின் கஸின் நஸிகேத்தின் வாழ்க்கையிலும், டைவர்ஸ், லிவிங் டுகெதர் போன்றவை எப்படி அவனது வாழ்க்கையைக் கலைத்துப் போட்டு, சட்டத்தின் உதவியுடன் பொருளாதார நிலையையும் குலைத்துவிடுகிறது – இது நடப்பது அமெரிக்காவில் – என்பது அடுத்த தலைமுறை எதிர்கொள்ளும் பிரச்சனை.
பெண்ணுரிமைக்குக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர், பத்து நிமிடம் மங்களாவுடன் பேச, 5000 ரூபாய் ஃபீஸ் வாங்குகிறாள்! பெண்கள் முன்னேற்ற மாநாட்டிற்கு வந்த சராப் மேடம், மங்களாவைப் பாராட்டி, தன் அறையில் முறை தவறி நடக்கிறாள். (“நாங்கள் பெண்ணுரிமைக்காக வேலை செய்யறவங்க. பெண்கள் ரொம்பக் கம்மியா ஒயின் மட்டும்தான் சாப்பிடணும், ஆண்களுக்குத்தான் ஸ்ட்ராங்கான சரக்கு, அப்படீன்னு ஒத்துக்கிட்டா, பேசிக்காவே அவங்க பலமானவங்க, நாம் பலவீனமானவங்கன்னு ஆகிடும். அதனால நீ ஏன் ஸ்காட்ச்சை ட்ரை பண்ணக் கூடாது?”).
கணவன் மனைவி முரண்களில், குழந்தைகள் நிலை பரிதாபமானது. நாவலில் வரும் குழந்தைகள், தந்தையைச் சார்ந்தே இருப்பது, பொருளாதாரம் சார்ந்ததா? பாசம் சார்ந்ததா? பெண்ணுரிமையில் தாய்மை உணர்வு அற்றுப்போய்விடுமோ என நினைக்கத் தோன்றுகிறது.
நாவலின் முடிவில் அடுத்த தலைமுறையினர் பாரம்பரிய முறையில் வாழ்ந்து, மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் – இது நாவலாசிரியரின் எதிர்பார்ப்பு அல்லது விருப்பமாக இருக்கலாம். நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகின்றது.
இன்றைய ஆண், பெண் உறவுப் பிரச்சனைகளையும், முரண்களையும் விவரிக்கும் ஆசிரியர், அதற்கு ஒரு தீர்வினைத் தராமல் இருப்பது பிரச்சனையின் தீவிரத்தைக் காட்டுவதோடல்லாமல், இடது, வலது சாரி சிந்தனைகளுக்கும், விவாதங்களுக்கும் ஆன சாளரத்தைத் திறக்கிறது. இணையத்தில் கிடைக்கும் ‘பிளவு’ பற்றிய இரண்டு பத்திகளே இதற்கு சாட்சி.
மரபார்ந்த பழங்கதைகளை ஆதரித்துப் பேசுகிறது போலத் தோன்றினாலும், பைரப்பாவின் ‘பிளவு’ நாவல், ஆண், பெண் இருபாலாருக்கும் உள்ள சமூக, தார்மீகக் கடமைகளை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது.
புத்தக விவரம்:
பிளவு- நாவல்
எஸ். எல். பைரப்பா
தமிழாக்கம்: ஜெயா வெங்கட்ராமன் / எல் ராமகிருஷ்ணன்
பிரசுரகர்: சுவாசம் பதிப்பகம்
சென்னை:600127 ( swasam.publications@gmail.com)
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
