“உடைமை வாழ்வியல் ” மற்றும் “இருப்பு வாழ்வியல்” முறைகள் – எரிக்ஃப்ரமின் விமர்சன நோக்கு

அறிமுகம்

விமர்சனச் சிந்தனையாளர் எரிக் ஃப்ரம்மின்  To Have or to Be? என்ற நூலில் ‘உடைமை வாழ்வியல்’ (Having Mode of Life) மற்றும் ‘இருப்பு வாழ்வியல்’ (Being Mode of Life) என இரண்டு வகையான வாழ்க்கை முறைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் நவீன நுகர்வுச் சமூகத்தை விமர்சிக்கும் முக்கியமான கருத்துகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகின்றது. இந்த நூலில் எரிக் ஃப்ரம் மனித வாழ்க்கை இரண்டு அடிப்படையான முற்றிலும் வேறுபட்ட நோக்குகளின் அடிப்படையில் அமைக்கப்படலாம் என்று வாதிடுகிறார். உடைமை வாழ்வியல் என்பது பொருட்களை சேர்த்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மனித அடையாளத்தை வரையறுக்கிறது. அதே நேரத்தில் இருப்பு வாழ்வியல் செயற்பாடு, படைப்பாற்றல் மற்றும் உலகத்துடன் உண்மையான தொடர்பை வலியுறுத்துகிறது. இந்த வேறுபாட்டின் ஊடாக நவீன நாகரிகத்தில் ஒரு ஆழமான நெருக்கடி நிலவுகிறது என்று குறிப்பிடப்படுகின்றது. அதாவது மனித வாழ்க்கை மனித திறன்களின் வளர்ச்சியை கவனத்தில் கொள்வதைவிட உடைமை கொண்டிருத்தல் மற்றும் நுகர்வு செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அதிகமாக அமைந்து வருகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஃப்ரமின் பகுப்பாய்வு வெறுமனே பொருளாதார  வாதத்திற்கு எதிரான ஒழுக்கவியல் விமர்சனமாக மட்டும் அல்லாது நவீன சமூகத்தின் உளவியல் மற்றும் சமூகக் குணாதிசயத்தை விளக்கும் ஒரு விரிவான விளக்கமாக அமைந்துள்ளது. அவரின் கருத்துப்படி உடைமை வாழ்வியல் ஆதிக்கம் செலுத்தும் போது மனிதர்கள் தங்களை தாம் வைத்திருக்கும் பொருட்களின் அடிப்படையில் வரையறுக்கத் தொடங்குகிறார்கள்; இதன் விளைவாக பாதுகாப்பின்மை, போட்டி மற்றும் அந்நியமாதல் (Alienation) ஆகியவை உருவாகின்றன. இதற்கு மாறாக இருப்பு வாழ்வியல் உற்பத்திசார்ந்த செயற்பாடு, புரிதல் மற்றும் உண்மையான மனித உறவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தனித்துவமான வாழ்வியல் வடிவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இந்த வேறுபாடு கருத்தியல் ரீதியாக எளிமையானதாகத் தோன்றினாலும் அது பல்வேறு தனித்த, சிக்கலான அறிவுசார் மரபுகளின் ஒருங்கிணைப்பில் இருந்து உருவாகியுள்ளது. நவீன நுகர்வுச் சமூகத்தை விமர்சிப்பதற்காக ஃப்ரம் மார்க்சிய சமூகக் கோட்பாடு, உளவியல் பகுப்பாய்வு, மத மற்றும் தத்துவ மரபுகள் ஆகியவற்றிலிருந்து கருத்துக்களை எடுத்துக்கொள்கிறார். ஆகவே, இந்தக் கட்டுரையின் நோக்கம் To Have or to Be? என்ற நூலை ஆய்வு செய்வதன் மூலம் அதில் முன்வைக்கப்பட்டிருக்கும் உடைமை கொண்டிருத்தல் மற்றும் இருப்பு கொண்டு செயற்படுதல் கோட்பாட்டை விளக்குவதாக உள்ளது. அதன் ஊடாக சமகால வாழ்க்கையில்  மனிதர்கள் தங்களது வாழ்வியலை சரியாக அமைத்துக் கொள்வதற்குரிய உள்ளுணர்வுகளை ஏற்படுத்துவதாக உள்ளது.  

உடைமை வாழ்வியல் தொடர்பான புரிதல்கள்

உடைமை வாழ்வியல் என்பது நவீன சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ள ஒரு வாழ்க்கை முறையாக உள்ளது. இதில் மனிதர்கள் தங்களுடைய அடையாளத்தையும் மதிப்பையும் தாங்கள் கொண்டிருக்கின்ற உடைமை, சொத்து மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கிறார்கள். இவ்வாறு மனிதன் தன் அடையாளத்தை அமைத்துக்கொள்ளத் தொடங்கும்போது வாழ்க்கை வெளிப்புற பொருட்களின்மீது சார்ந்ததாக ஆகிவிடுகிறது. ஒருவரின் ‘நான்’ என்ற உணர்வு அவரிடம் உள்ள பொருட்கள், செல்வம், அதிகாரம் அல்லது சமூக நிலை போன்றவற்றால் நிர்ணயிக்கப்படும்போது, அந்த அடையாளம் இயல்பாகவே நிலையானதல்ல. ஏனெனில் அவை அனைத்தும் இழக்கப்படக்கூடியவை. எனவே உடைமையின் மீது அமைந்த அடையாளம் உண்மையான பாதுகாப்பை வழங்காமல் நிரந்தரமான அச்சத்தையும், போட்டியையும் உருவாக்குகிறது. 

தொழில்துறை சமூகம் மனிதர்களை வெறும் பொருளாதார அமைப்பின் உறுப்பினர்களாக மட்டுமல்லாமல், உடைமையை விரும்பும் மனப்பாங்குடையவர்களாகவும் உருவாக்குகிறது. அதிகம் வைத்திருக்க வேண்டும், வளர்ச்சியடைய வேண்டும், லாபம் பெற வேண்டும் என்ற எண்ணம் சமூகத்தின் சாதாரண நெறிமுறையாக மாறுகிறது. இதனால் மனிதர்கள் தங்களிடம் உண்மையில் அதிகமான சொத்துகள் இல்லாவிட்டாலும் கூட, மனதளவில் உடைமையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை நோக்கை ஏற்றுக்கொள்கிறார்கள். இதன் மூலம் சமூக அமைப்புகள் மனித குணாதிசயங்களை உருவாக்குகின்றன என்பது தெளிவாகின்றது. உடைமைக்கான இந்த மனப்பாங்கு வெளிப்புற பொருட்களிலேயே மட்டும் நிலைத்திருக்கவில்லை. அது மனிதன் சுயத்தையும் பொருளாகக் கருதச் செய்கிறது. அறிவு, அனுபவம், நினைவுகள், தோற்றம், திறன்கள் போன்றவை கூட ‘என்னுடையவை’ என்று கருதப்படுகின்றன. இதனால் மனிதன் தன்னை ஒரு உயிருள்ள செயல்முறையாக அல்லாமல், காக்க வேண்டிய ஒரு பொருளாகவே உணரத் தொடங்குகிறான். இதன் இதன் விளைவாக மனித இருப்பு ஒரு உயிருள்ள அனுபவமாக இல்லாமல், குவித்து வைத்திருக்க வேண்டிய பொருட்களின் தொகுப்பாக மாறுகிறது. 

நவீன நுகர்வு கலாசாரம் வாழ்க்கையை தொடர்ச்சியான வாங்குதல் மற்றும் கைவிடுதல் என்ற செயல்முறையாக மாற்றுகிறது. பொருட்கள் நீண்டகால பயன்பாட்டிற்காக அல்லாமல், குறுகிய கால சுகத்தை அளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மனிதன் உண்மையான திருப்தியை அனுபவிப்பதற்குப் பதிலாக தற்காலிக தூண்டுதல்களின் பின்னால் ஓடுகிறான். இத்தகைய நுகர்வுச் செயற்பாடு மனித வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை மாற்றி உடனடியாக கிடைக்கக்கூடிய அனுபவங்களின் தொடர்ச்சியாக வாழ்க்கையை மாற்றுகிறது. இதன் உச்ச நிலையில் உடைமை மனப்பாங்கு மனித உறவுகளிலும் ஊடுருவுகிறது. ஒருவர் “என் பிள்ளைகள்” “என் தொழிலாளர்” “என் மனைவி” என்று கூறும்போது அந்த உறவுகள் கூட ஒரு வகையான சொத்துத் தொடர்பாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. இத்தகைய அணுகுமுறையில் மனிதர்கள் தனித்துவமான உயிர்களாக அல்லாமல், கட்டுப்படுத்தப்பட வேண்டிய பொருள்களாக மாறுகின்றனர். இதன் மூலம் உண்மையான மனித உறவுகள் பலவீனமடைகின்றன. 

உடைமை என்ற எண்ணமே ஒரு சிக்கல்நிலை என்பதை இக்கருத்துகள் உணர்த்துகின்றன. உடைமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் மனப்பாங்கு இயல்பாகவே அதிகாரத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் வழிவகுக்கிறது. ஒருவர் மகிழ்ச்சியை உடைமையில் காண்கிறாரானால், அதை பெறவும், காக்கவும் சக்தி தேவைப்படுகிறது. இதனால் போட்டி, ஆதிக்கம் மற்றும் ஒடுக்குமுறை உருவாகின்றன. சமூகத்தில் காணப்படும் பல அதிகார அமைப்புகளின் பின்னணியில் இந்த உடைமை விருப்பமே செயல்படுகிறது. கலாசாரமும் இந்த உடைமை மனப்பாங்கை வலுப்படுத்துகின்றது. உடைமையின் மூலம் ஒரு வகையான நிரந்தரத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறான். செல்வம், புகழ், நினைவுச் சின்னங்கள் அல்லது வாரிசு ஆகியவற்றின் மூலம் தன்னுடைய இருப்பு மரணத்திற்குப் பிறகும் தொடரும் என்ற எண்ணம் உருவாகிறது. இவ்வாறு உடைமை மனிதனின் மரண அச்சத்திற்கு ஒரு உளப்பூர்வ பாதுகாப்பு பொறிமுறையாக செயல்படுகிறது. 

அதே நேரத்தில் மனித வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வைத்திருப்பது தவறானது அல்ல. ஆனால் பிரச்சினை உருவாகுவது உடைமை மனித அடையாளத்தின் அடிப்படையாக மாறும்போதுதான். வாழ்வதற்கான சாதனங்கள் வாழ்க்கையின் நோக்கமாகவும், அடையாளமாகவும் மாறும்போது, மனிதன் உண்மையான வாழ்க்கை அனுபவத்திலிருந்து விலகுகிறான். எனவே உடைமையை மையமாகக் கொண்ட வாழ்க்கை மனிதனை பாதுகாப்பாக அல்ல, மாறாக அச்சத்துடனும் போட்டியுடனும் செயற்பட நிர்ப்பந்தித்துள்ளது. பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் மனிதன் வாழ்க்கையின் அர்த்தத்தை அடைய முடியாது. உண்மையான மனித வாழ்வு பொருட்களை வைத்திருப்பதில் அல்ல, உயிருள்ள அனுபவங்களிலும் உறவுகளிலும் தன்னை வெளிப்படுத்துவதிலேயே இருக்கிறது (Fromm, 1976: 57-70).

இருப்பு வாழ்வியல், தொடர்பான புரிதல்கள்

இருப்பு வாழ்வியல் மனித வாழ்வின் உயிருள்ள செயல்முறைகளைப் பற்றியதாக உள்ளது. அது மனித வாழ்வின் செயல்படும் அனுபவத்தைக் குறிக்கிறது. மனித வாழ்க்கையின் முழுமையான அர்த்தம் பொருட்களை வைத்திருப்பதில் இல்லை. வாழ்வை செயற்பாடான அனுபவமாக உணர்வதில் இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கை “என்னிடம் என்ன உள்ளது” என்பதனால் வரையறுக்கப்படும்போது அவர் தனது இருப்பை வெளிப்புற பொருட்களின் மூலம் அளக்கிறார். ஆனால் உண்மையான மனித வாழ்வு “நான் எவ்வாறு வாழ்கிறேன்” என்பதில் வெளிப்படுகிறது. சிந்தித்தல், புத்தாக்கம் செய்தல், அன்பு செலுத்துதல், புரிதல் ஆகிய உயிரோட்டமான செயல்களில் பங்கேற்பதில்தான் வாழ்க்கையின் உண்மையான மதிப்பு இருக்கிறது. 

இருப்பு என்ற அனுபவம் நிலையான வரையறைகளால் முழுமையாக விளக்கப்பட முடியாது. மனித வாழ்க்கை நிலையாக நிற்கும் ஒன்றல்ல. அது தொடர்ந்து மாற்றம் அடையும் ஒரு செயல்முறை. ஆகவே மனித இருப்பை ஒரு நிலையான பொருளாகப் புரிந்துகொள்வது தவறு. தத்துவ ரீதியாக மனிதன் “உள்ளவன்” அல்ல. மாறாக அவர் எப்போதும் உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு செயல்முறையில் இருப்பவன். இருப்பு நிலை உருவாகுவதற்கு மனிதனுக்கு உள்ளார்ந்த சுதந்திரமும் தன்னிச்சையும் அவசியம். ஒருவர் தனது பாதுகாப்பையும் அடையாளத்தையும் பொருட்கள், அதிகாரம் அல்லது சமூக அங்கீகாரம் போன்றவற்றின் மீது வைத்திருப்பாரானால் அவர் உண்மையான வாழ்க்கை அனுபவத்தை அடைய முடியாது. உண்மையான வாழ்வு வெளிப்புற ஆதாரங்களிலிருந்து அல்ல, உள்ளார்ந்த விழிப்புணர்வு மற்றும் சுதந்திரத்திலிருந்தே உருவாகிறது. 

நவீன உலகத்தில் காணப்படும் பல செயல்கள் உண்மையான செயற்பாடுகள் அல்ல. பலர் வேலை செய்கிறார்கள், ஓடுகிறார்கள், உழைக்கிறார்கள்; ஆனால் அந்த செயற்பாடுகள் அவர்களின் உள்ளார்ந்த சுதந்திரத்திலிருந்து வருவதில்லை. அது வெளிப்புற அழுத்தங்கள் அல்லது சமூக எதிர்பார்ப்புகளின் விளைவுகளேயாகும். உண்மையான செயற்பாடு என்பது மனிதன் தன் செயல்களின் மூல காரணமாக தன்னை உணரும் நிலை ஆகும். அப்போது செயலும் மனிதனும் ஒன்றிணைந்த அனுபவமாக மாறுகிறது. உண்மையான படைப்பாற்றல் மனிதனின் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்துகிறது. இங்கு “உற்பத்தி” என்றால் பொருட்களை அதிகமாக உருவாக்குவது அல்ல. மனிதனின் அறிவு, உணர்ச்சி மற்றும் கற்பனை ஆகியவை உயிரோட்டமாக வெளிப்படுவது. மனிதன் தனது உள்ளார்ந்த திறன்களை வெளிப்படுத்தும்போது மட்டுமே அவன் முழுமையான திருப்தியை அனுபவிக்கிறான்.  

சுதந்திரம் மற்றும் பகுத்தறிவு உண்மையான செயற்பாட்டின் அடிப்படை. மனிதன் தெளிவான புரிதலுடன் செயல்படும்போது தான் அவன் உண்மையான செயற்பாட்டாளராக இருக்கிறான். ஆனால் அவன் செயல்கள் கட்டுப்படுத்தப்படாத ஆசைகள் அல்லது அறியாமையான உந்துதல்களால் நடத்தப்படும்போது அவன் உண்மையில் சுதந்திரமற்றவனாக மாறுகிறான். இதனால் மனநலமும் சுதந்திரமும் மனிதன் எவ்வளவு விழிப்புணர்வுடன் வாழ்கிறான் என்பதுடன் தொடர்புடையவை. மனித நடத்தைகளை வெளிப்புறத்தில் காணப்படும் தோற்றங்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. மனிதர்களின் செயல்களின் பின்னால் ஆழமான மனப்பாங்குகளும் குணாதிசயங்களும் இருக்கின்றன. ஆகவே உண்மையான அறிவு என்பது வெளிப்புற தோற்றங்களைப் பார்க்காமல், அவற்றின் பின்னால் இருக்கும் ஆழமான உண்மைகளை கண்டுபிடிப்பதில் உள்ளது. 

மனிதர்கள் பல சமயங்களில் உண்மையை அறிந்திருந்தாலும் அதை மறைக்க முயல்கிறார்கள். ஏனெனில் உண்மையை எதிர்கொள்வது அவர்களின் பழக்கமான நம்பிக்கைகளையும் பாதுகாப்பையும் சவாலுக்கு உட்படுத்தலாம். எனவே உண்மையைத் தேடுவது அறிவாற்றல் மட்டுமல்ல துணிச்சலையும் அவசியப்படுத்துகின்றது. இருப்பு நோக்குடைய வாழ்க்கையில் பகிர்வு, தியாகம் மற்றும் அன்பு போன்றவை முக்கியமானவை. இத்தகைய உறவுகளில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சொத்தாகப் பார்க்கவில்லை. மாறாக பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் தொடர்பு கொள்ளுகிறார்கள். கொடுப்பது இங்கு இழப்பு அல்ல. அது உள்ளார்ந்த வளத்தின் வெளிப்பாடாக அமைகின்றது.  

மனித இயல்பில் இந்த இரண்டில் எந்த மனப்பாங்கு வளர்ச்சியடைகிறது என்பதை சமூக சூழல் தீர்மானிக்கிறது. போட்டி, லாபம் மற்றும் சொத்து சேர்த்தல் முக்கியமானதாக இருக்கும் சமூகங்களில் உடைமை மனப்பாங்கு வலுப்பெறும்; ஒத்துழைப்பு மற்றும் படைப்பாற்றலை மதிக்கும் சமூகங்களில் இருத்தல் மனப்பாங்கு வளர்ச்சி அடையும். நவீன சமூகம் மனிதர்கள் பொருளாதார ஊக்கங்களால் மட்டுமே செயல்படுவார்கள் என்று கருதுகிறது. ஆனால் மனித வரலாறு காட்டுவது வேறு உண்மையாக உள்ளது. மனிதர்கள் அர்த்தம், நம்பிக்கை, அன்பு, சமூக பொறுப்பு போன்ற ஆழமான காரணங்களுக்காகவும் செயல்படுகிறார்கள். இத்தகைய உந்துதல்களை ஊக்குவிக்கும் சமூக அமைப்புகள் மனிதர்களை மேலும் மனிதநேயமான வாழ்க்கைக்குத் தள்ளும். 

இவ்விடயங்களை அறிந்துகொள்கின்றபோது, பொருட்களை வைத்திருப்பதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தம் கிடைக்காது. உண்மையான நிறைவு மனிதன் தனது உள்ளார்ந்த திறன்களை உணர்ந்து, பிறருடன் உயிருள்ள உறவுகளை உருவாக்கி, உலகத்துடன் ஆழமான தொடர்பில் வாழும்போது மட்டுமே கிடைக்கிறது. அதுவே இருப்பு நிலை வாழ்க்கையாகும் (Fromm, 1976: 71-87).

அறிவும், உடைமை மனப்பாங்கும்

உடைமை நிலையில் கற்றுக்கொள்பவர்கள், புலமையாளர்கள் அறிவை தங்களிடம் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு பொருளாகப் பார்க்கிறார்கள். அவர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்கும்போது முக்கியமாக சொற்களை கவனமாகக் கேட்டு முடிந்தவரை அனைத்தையும் தங்களுடைய குறிப்பேடுகளில் எழுத முயற்சிக்கிறார்கள். அவர்களின் முக்கிய இலக்கு தகவல்களைத் துல்லியமாக பதிவு செய்து பின்னர் அதை மனப்பாடம் செய்து பிறிதொரு இடத்தில் அவற்;றை வெளிப்படுத்தி தங்களது திறனை நிரூபிப்பதாகவே உள்ளது. ஆனால் அவர்கள் கற்றுக்கொள்ளும் கருத்துக்கள் அவர்களின் சொந்த சிந்தனையின் ஒரு பகுதியாக மாறுவதில்லை. அதற்கு பதிலாக அந்த அறிவு அவர்களிடம் வெளிப்புறமாகவே இருந்து விடுகிறது. அது ஆசிரியர்கள் அல்லது புத்தகங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருத்துக்களின் ஒரு தொகுப்பாக மட்டுமே இருக்கும். இவ்வாறு கற்றுக்கொள்தல் மனிதர்களை சிந்தித்து ஈடுபடுபவர்களாக மாற்றாமல் தகவல்களின் உரிமையாளர்களாக மாற்றுகின்றது.

இந்த நிலையில், கற்றலின் முக்கிய நோக்கம் கற்றவற்றை தக்க வைத்துக்கொள்வதாகும். கற்பவர்கள் தகவல்களை மனப்பாடம் செய்வதன் மூலம் அல்லது தங்களுடைய குறிப்புகளை கவனமாக பாதுகாப்பதன் மூலம் அதை நிலைநிறுத்த முயல்கிறார்கள். புதிய கருத்துகளை உருவாக்குதல் அல்லது தங்களுடைய சொந்த விளக்கங்களை வளர்த்தல் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இல்லை. உண்மையில், புதிய சிந்தனைகள் அவர்களை சற்றே அசௌகரியப்படுத்தக்கூடும், ஏனெனில் அவை அவர்கள் ஏற்கனவே வைத்திருக்கும் நிலையான தகவல் தொகுப்பை சந்தேகத்திற்கு உள்ளாக்கக்கூடும். அறிவுடன் கொண்டிருக்கும் உறவு “உடைமை” என்ற அடிப்படையில் அமைந்தவர்களுக்கு மாற்றமடையும் அல்லது வளர்ச்சியடையும் கருத்துக்கள் நிச்சயமற்றதும் அச்சமூட்டுவதுமானதாகத் தோன்றுகின்றன.

இருப்பு நிலையில், கற்றல் முற்றிலும் வேறுபட்ட தன்மையைக் கொண்டதாக இருக்கும். அவர்கள் ஒரு சொற்பொழிவுக்குக் கூட வெறுமையான மனதுடன் வருவதில்லை. மாறாக, அவர்கள் அந்தப் பாடம் தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே சிந்தித்திருப்பார்கள்; தங்களுடைய சொந்த கேள்விகளும் சந்தேகங்களும் அவர்களிடம் இருக்கும். அவர்கள் அந்த விடயத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் அதில் அவர்களுக்கு உண்மையான ஆர்வம் உள்ளது. அதனால் அவர்கள் சொற்களை வெறுமனே பதிவு செய்வதற்காகக் கேட்பதில்லை. அவர்கள் சிந்தித்துக் கேட்கிறார்கள், புரிந்துகொள்கிறார்கள், மேலும் கேட்டதைத் தங்களுடைய சிந்தனையுடன் தொடர்புபடுத்தி செயல்படுகிறார்கள்.

இருப்பு நிலைமையில் உள்ளவர்களுக்கு கற்றல் ஒரு செயற்பாட்டு மற்றும் படைப்பாற்றலான செயலாக மாறுகிறது. புதிய கருத்துக்களை அவர்கள் கேட்கும்போது, அவர்களுடைய மனதில் புதிய கேள்விகள், புதிய விளக்கங்கள் மற்றும் புதிய பார்வைகள் உருவாகின்றன. சொற்பொழிவு அவர்களுடைய சிந்தனையைத் தூண்டுகிறது, மேலும் இந்த சிந்தனைச் செயல்முறையின் மூலம் அவர்களின் புரிதல் வளர்ச்சி பெறுகிறது. இதன் விளைவாக கற்றல் ஒரு மாற்றமளிக்கும் அனுபவமாகிறது. சொற்பொழிவு முடிந்தபின் அவர்கள் முன்பிருந்தவர்களாகவே இருப்பதில்லை. அவர்களின் சிந்தனை விரிவடைந்து, விடயங்களை  மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர் (Fromm, 1976: 33-36).

அன்பும், உடைமை மனப்பாங்கும்

அன்பு இரண்டு விதமாகப் புரிந்துகொள்ளப்படலாம். உடைமைநிலை அல்லது இருப்புநிலை என்ற கோணத்தில் பேசப்படுவதைக் கொண்டே அதன் அர்த்தம் மாறுகிறது. பலர் அன்பை ஒருவர் பெற்றுக் கொள்ளக்கூடிய அல்லது உடையதாக வைத்திருக்கக்கூடிய ஒன்றாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அன்பு என்பது ஒருவர் வைத்திருக்கும் ஒரு பொருள் அல்ல. அது சேமித்து வைக்கக்கூடிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பொருளும் அல்ல. உண்மையில் அன்பு என்பது ஒரு செயற்பாடாக மட்டுமே உள்ளது. அன்பு செய்வது என்பது ஒருவரைப் பராமரிப்பதும் அவரைப் புரிந்துகொள்வதும், அவருடைய தேவைகளுக்கு பதிலளிப்பதும், அவரின் இருப்பை உறுதிப்படுத்தி மகிழ்வதும் ஆகும். எனவே அன்பு என்பது உயிருள்ள, உற்பத்தித்திறன் கொண்ட ஒரு செயல்முறை. அது அன்பு செய்பவருக்கும் அன்பைப் பெறுபவருக்கும் வளர்ச்சியையும் உயிர்ச்சக்தியையும் வழங்குகிறது.

அன்பு “உடைமை நிலையில்”; அனுபவிக்கப்படும் போது அது பெரும்பாலும் உடைமையாக்கமும் கட்டுப்பாடுமாக மாறுகிறது. ஒருவர் தாம் அன்பு செய்கிறதாகக் கூறும் நபரை கட்டுப்படுத்தவும் அடக்கவும் முயற்சிக்கலாம். வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் வழங்குவதற்குப் பதிலாக, இப்படியான அன்பு கட்டுப்படுத்தும் மற்றும் மூச்சுத்திணறச் செய்யும் தன்மையை எடுக்கக்கூடும். பல சமயங்களில் மக்கள் “அன்பு” என்று அழைப்பது உண்மையான அக்கறையும் பரிவும் இல்லாததை மறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகவே இருக்கும். இதனால் மனித உறவுகளில் உண்மையான அன்பு எவ்வளவு அளவில் உள்ளது என்பது குறித்து முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

இந்தப் பிரச்சினையை குடும்ப வாழ்க்கையிலும் திருமணத்திலும் காண முடியும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை அன்பு செய்கிறார்கள் என்று பொதுவாகக் கூறினாலும், வரலாற்றில் குழந்தைகள் மீது அலட்சியம், கடுமையான கட்டுப்பாடு, மேலும் கொடுமை கூட நிகழ்ந்ததாக பல உதாரணங்கள் உள்ளன. இந்த உண்மைகள் உண்மையான பெற்றோர் அன்பு பொதுவாக நினைப்பதற்குப் போல அதிகமாக இருக்காது என்பதை சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல் பல திருமணங்களும் உண்மையான அன்பின் அடிப்படையில் அல்லாமல் சமூக எதிர்பார்ப்புகள், பொருளாதார பாதுகாப்பு, பழக்கம், அல்லது பரஸ்பர சார்பு போன்ற காரணங்களின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். இப்படியான உறவுகளும் “அன்பு” என அழைக்கப்படலாம்; ஆனால் உண்மை வேறுபட்டதாக இருக்கக்கூடும்.

நவீன சமூகம் இவ்விடயத்தில் ஒரு அளவு நிஜநிலையை உணரத் தொடங்கியுள்ளது. பலர் இப்போது பாலியல் ஈர்ப்பு அன்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், நண்பத்துவ அடிப்படையிலான ஒரு உறவு ஆழமான அன்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் புரிந்துகொள்கிறார்கள். இந்த விழிப்புணர்வு உறவுகளில் அதிக நேர்மையை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் இது துணை மாற்றங்கள் அதிகமாக நிகழ்வதற்கும் வழிவகுத்துள்ளது. இருப்பினும் துணையை மாற்றுவது உண்மையான அன்பின் அதிகரிப்பை கட்டாயமாக ஏற்படுத்தாது.

அன்பு உடைமையாக மாறும் இந்த மாற்றம் பெரும்பாலும் காதல் உறவுகளின் வளர்ச்சியில் தெளிவாகக் காணப்படுகிறது. காதலில் முதன்முதலில் விழும் ஆரம்ப நிலையில், இருவரும் உயிர்ப்புடனும் கவனத்துடனும் ஒருவரை ஒருவர் கவர முயற்சிப்பவர்களாக இருப்பார்கள். ஒவ்வொருவரும் மற்றவருக்கு கொடுக்கவும் பராமரிக்கவும் அவரை ஊக்குவிக்கவும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அல்லது நீண்டகால உறவின் பின்னர் நிலைமை மாறக்கூடும். ஒவ்வொருவரும் மற்றவரை தங்களிடம் ஏற்கனவே “உள்ளவர்” என்று உணரும்போது, அன்பாக இருக்க முயற்சிக்கும் முயற்சி குறையலாம். இதன் விளைவாக உறவு மெல்ல மெல்ல சலிப்பானதாகவும் ஏமாற்றமளிப்பதாகவும் மாறக்கூடும்.

இத்தகைய சூழலில், தம்பதிகள் ஒருவரை ஒருவர் அன்பு செய்வதை விட அவர்கள் சேர்ந்து வைத்திருக்கும் பொருட்களை—பணம், சமூக நிலை, வீடு, குழந்தைகள் போன்றவற்றை—பாதுகாப்பதிலேயே அதிக கவனம் செலுத்த ஆரம்பிக்கலாம். இதனால் அந்த உறவு உயிருள்ள அன்பின் வெளிப்பாடாக இல்லாமல், பகிர்ந்த உடைமைகளை நிர்வகிக்கும் ஒரு கூட்டாண்மை போல மாறக்கூடும். சிலர் இந்த ஏமாற்றத்தை தாண்ட புதிய துணையைத் தேட முயற்சிக்கிறார்கள்; புதிய உறவு அன்பின் உணர்வை மீண்டும் உருவாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அன்பு ஒருவரை மாற்றுவதால் மட்டுமே கிடைப்பதில்லை. அது அன்பு செய்யும் திறனிலிருந்து உருவாக வேண்டிய ஒன்று.

எனவே பிரச்சினை திருமணத்தில் இல்லை. உண்மையான அன்பின் அடிப்படையில் அமைந்தால் திருமணம் அர்த்தமுள்ளதுமாகவும் நிறைவை வழங்குவதுமாகவும் இருக்க முடியும். ஆனால் உண்மையான சிக்கல் மனிதர்கள் தங்கள் உறவுகளுக்குள் கொண்டு வரும் உடைமையாக்கும் மனப்பாங்கிலும், மேலும் அன்பை வாழ்ந்து காட்ட வேண்டிய செயற்பாடாக அல்லாமல் உடையதாகக் கொள்ள வேண்டிய ஒன்றாகக் கருதச் செய்யும் சமூக அமைப்பிலும் இருக்கிறது (Fromm, 1976: 37-39).

உடைமை மனப்பாங்கும், அதிகார பிரயோகமும்

இவ்விரண்டு வாழ்வியல்களில் அடிப்படையில் அதிகாரம் இரண்டு முறைகளில் வெளிப்படுகிறது. ஒன்று “அதிகாரத்தை உடைமை கொண்டிருத்தல்” மற்றொன்று “அதிகாரமாக இருத்தல். இந்த இரண்டிற்கும் இடையிலான வேறுபாடே மனித சமுதாயத்தில் அதிகாரத்தின் இயல்பை புரிந்துகொள்வதற்கான தத்துவ அடிப்படையாக உள்ளது.

உடைமை நிலை”யில் அதிகாரம் ஒரு உடைமையாக கருதப்படுகிறது. ஒருவர் ஒரு பதவி, பட்டம் அல்லது சமூக நிலை மூலம் அதிகாரத்தைப் பெறுகிறார். இந்நிலையில் அதிகாரம் ஒருவரிடம் இருக்கும் சொத்து போன்றதாக மாறுகிறது. அதாவது அதிகாரம் ஒரு நபரின் தனிப்பட்ட திறமை அல்லது ஞானத்தின் அடிப்படையில் அல்லாமல், வெளிப்புற அமைப்புகள் வழங்கும் பதவி அல்லது அதிகாரச் சின்னங்களின் அடிப்படையில் உருவாகிறது. இதனால் அதிகாரம் பெரும்பாலும் கட்டுப்பாடு மற்றும் ஆட்சி செய்யும் சக்தியாக செயல்படுகிறது. இந்த நிலைமையில் அதிகாரம் கொண்டவர் மற்றவர்களிடம் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார்; அதற்கு அடிப்படையாக இருப்பது அறிவோ திறமையோ அல்ல, சமூக அமைப்பின் கட்டமைப்பாகும்.

இதற்கு மாறாக “இருப்பு நிலை”யில் அதிகாரம் முற்றிலும் வேறுபட்டதாக விளங்குகிறது. இங்கு அதிகாரம் ஒரு உடைமையாக இல்லாமல், ஒரு மனித குணநிலையாக வெளிப்படுகிறது. ஒருவர் உண்மையான அறிவு, அனுபவம், திறமை மற்றும் நெறிமுறைத் தன்மை ஆகியவற்றின் மூலம் மற்றவர்களுக்கு வழிகாட்டக்கூடியவராக மாறும்போது அவர் “அதிகாரமாக” இருப்பவர் எனக் கருதப்படுகிறார். இந்த வகையான அதிகாரம் கட்டாயப்படுத்துவதில்லை. அது இயல்பாகவே மற்றவர்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் ஈர்க்கிறது. இவ்வாறு இருக்கும் அதிகாரம் ஆட்சி செய்யும் சக்தியாக அல்ல, வழிகாட்டும் சக்தியாக செயல்படுகிறது.

இந்த தத்துவ வேறுபாடு மேலும் “நியாயமான அதிகாரம்” (Rational Authority) மற்றும் “அநியாயமான அதிகாரம்” (Irrational Authority) என்ற கருத்துகளின் மூலம் விளக்கப்படுகிறது. நியாயமான அதிகாரம் திறமை மற்றும் அறிவின் அடிப்படையில் உருவாகிறது. அது நிரந்தரமானதாக இல்லை. அது ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒருவரின் திறமை தேவையான வரை மட்டுமே நிலைத்திருக்கும். அந்த சூழ்நிலை இல்லாதபோது அந்த அதிகாரமும் மறைந்து விடுகிறது. ஆனால் அநியாயமான அதிகாரம் அதிகாரத்தை ஒரு நிலையான கட்டமைப்பாக மாற்றுகிறது. அது அறிவோ திறமையோ இல்லாமல் கூட பதவி, அதிகாரச் சின்னங்கள் அல்லது சமூக அமைப்பு மூலம் நிலைத்திருக்கும்.

இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ள ஆரம்ப மனித சமூகங்கள் எடுத்துக்காட்டாக குறிப்பிடப்படுகின்றன. சிறிய சமூகங்களில் அதிகாரம் பெரும்பாலும் ஒரு நபரின் உண்மையான திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. குறிப்பிட்ட சூழலில் திறமை கொண்டவர்கள் மட்டுமே மற்றவர்களை வழிநடத்தினர். இத்தகைய சமூகங்களில் அதிகாரம் நிலையான அமைப்பாக இல்லாமல் சூழ்நிலை சார்ந்ததாக இருந்தது. ஆனால் சமூகம் பெரிதாகவும் சிக்கலாகவும் மாறியபோது அதிகாரத்தின் இயல்பும் மாறியது. திறமை மற்றும் அதிகாரம் இடையிலான உறவு குறைந்து, அதன் இடத்தில் சமூக நிலை மற்றும் பதவி முக்கியமாகியது. இவ்வாறு அதிகாரம் ஒருவரின் உண்மையான திறமையை விட, அவர் அணியும் சீருடை, அவர் வகிக்கும் பதவி, அல்லது அவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம் ஆகியவற்றின் மூலம் அடையாளப்படுத்தப்படத் தொடங்கியது. இதன் விளைவாக அதிகாரம் உண்மையான திறமையிலிருந்து பிரிந்து, சமூக நம்பிக்கையின் மூலம் நிலைநிறுத்தப்படும் ஒரு அமைப்பாக மாறியது.

ஆனால் உண்மையில், அதிகாரத்தின் உண்மையான நோக்கம் மற்றவர்களை அடக்குவதற்காக அல்ல. மாறாக அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக இருக்க வேண்டும். இதனால் அதிகாரத்தின் உயர்ந்த வடிவம் கட்டளைகளிலும் தண்டனைகளிலும் இல்லாமல், மனித குணநலனின் ஆழத்தில் இருக்கிறது. உண்மையான அதிகாரம் கட்டாயப்படுத்தாமல் வழிகாட்டுகிறது. அது பயத்தை உருவாக்காமல் நம்பிக்கையை உருவாக்குகிறது.

இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, மனித சமுதாயத்தின் முக்கிய பிரச்சினை அதிகாரத்தை முழுமையாக நீக்குவது அல்ல. மாறாக அதிகாரத்தின் அடிப்படையை மாற்ற வேண்டும். அதிகாரம் சொத்து மற்றும் சக்தி அடிப்படையில் அமைந்திருக்காமல், அறிவு, திறமை, நேர்மை மற்றும் மனித வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். இவ்வாறு மாற்றப்படும் போது மட்டுமே அதிகாரம் மனித சுதந்திரத்தையும் சமூக முன்னேற்றத்தையும் ஆதரிக்கும் சக்தியாக மாறும் (Fromm, 1976: 30-33).

சமூக மாற்றமும்,நாகரிகத் தேர்வும்

நவீன சமுதாயத்தில் மனித வாழ்க்கை பெரும்பாலும் “உடைமை கொண்டிருக்கும் நிலை” என்ற மனப்பாங்கால் ஆளப்படுகிறது. இதன் விளைவாக மனித வாழ்க்கை உண்மையான மனித அனுபவத்திலிருந்து விலகி பொருட்களுக்கு அடிமைப்பட்டதாக மாறுகிறது. எனவே சமுதாயத்தில் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமெனில், பொருளாதார அல்லது அரசியல் மாற்றம் மட்டும் போதாது. மாறாக மனித குணநிலையின் அடிப்படை மாற்றம் அவசியமாகிறது. இந்த மாற்றம் மனிதனை உடைமை நிலைமையிலிருந்து இருக்கும் நிலை நோக்கி மாற்ற வேண்டும். 

இந்த மாற்றத்தின் தத்துவ அடிப்படை மனித துயரத்தை உணர்வதிலிருந்து தொடங்குகிறது. மனிதர்கள் பெரும்பாலும் அச்சம், திருப்தியின்மை, தனிமை மற்றும் வெறுமை போன்ற உணர்வுகளை அனுபவிக்கிறார்கள். ஆனால் இந்த துயரத்தின் உண்மையான காரணத்தை அவர்கள் தெளிவாக உணரவில்லை. துயரத்தை உணர்வதே மாற்றத்தின் முதல் படியாகும். ஏனெனில் அது மனிதர்களை தற்போதைய வாழ்க்கை முறை இயல்பானது அல்லது மாற்றமற்றது என்ற மாயையை உடைக்க உதவுகிறது. துயரத்தை உணர்வது என்பது மனித வாழ்க்கை மற்றும் சமூக அமைப்பில் ஏதோ அடிப்படையான குறைபாடு இருப்பதை உணர்வதாகும். 

அடுத்த முக்கியமான கருத்து மனித துயரத்தின் காரணங்களை புரிந்துகொள்வது ஆகும். மனிதர்களின் மனஅமைதியின்மை தனிப்பட்ட குறைகளால் மட்டுமல்ல. அது சமூக அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. நவீன பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அமைப்புகள் மனிதனை ஒரு உயிருள்ள நபராக அல்லாமல் உற்பத்தி மற்றும் நுகர்வு இயந்திரத்தின் ஒரு பகுதியாக மாற்றுகின்றன. இதன் விளைவாக மனிதர்கள் தங்கள் உழைப்பிலிருந்தும், பிற மனிதர்களிலிருந்தும் இயற்கையிலிருந்தும் மேலும் தங்களுடைய உண்மையான தன்மையிலிருந்தும் பிரிந்து போகிறார்கள். இந்த நிலை மனிதனை அந்நியமாக்கப்பட்ட வாழ்க்கைக்குள் தள்ளுகிறது. எனவே மனித துயரத்தின் உண்மையான காரணத்தை புரிந்துகொள்வது சமூக மாற்றத்திற்கான அடிப்படையாகிறது. மற்றொரு முக்கியமான கருத்து அறிவு மட்டும் மாற்றத்தை உருவாக்காது. மனிதர்கள் தங்களுடைய துயரத்தையும் அதன் காரணங்களையும் அறிவுசார் முறையில் புரிந்துகொண்டாலும், அது மட்டும் வாழ்க்கையை மாற்றுவதற்கு போதுமானதல்ல. உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமெனில், மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கை நடைமுறையையே மாற்ற வேண்டும். அறிவும் செயல்பாடும் ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டும். மனிதர்கள் தங்களது அன்றாட பழக்கவழக்கங்களை மாற்றாமல் இருந்தால் அவர்கள் பெற்றுள்ள அறிவு எந்தவிதமான ஆழமான மாற்றத்தையும் உருவாக்காது. 

இந்த சூழலில் “புதிய மனிதன்” என்ற கருத்து அறிமுகப்படுத்தப்படுகிறது. இது உயிரியல் ரீதியாக வேறுபட்ட மனிதனை குறிக்கவில்லை. மாறாக புதிய வாழ்க்கை நோக்கத்தை கொண்ட மனிதனை குறிக்கிறது. இந்த மனிதன் தனது அடையாளத்தை உடைமை அல்லது அதிகாரத்தின் மூலம் வரையறுக்காமல், தனது வாழ்வின் செயற்பாடு மற்றும் மனித உறவுகளின் மூலம் வெளிப்படுத்துகிறான். அதாவது, மனித வாழ்க்கையின் அர்த்தம் “என்ன வைத்திருக்கிறேன்?” என்ற கேள்வியில் இல்லாமல் “எப்படி வாழ்கிறேன்?” என்ற கேள்வியில் உள்ளது. இந்த மாற்றப்பட்ட மனித குணநிலை பல தத்துவ மற்றும் ஒழுக்க அடிப்படைகளைக் கொண்டுள்ளது. முதலில் இந்த மனிதன் உடைமை பற்றிய ஆசையிலிருந்து விடுபடுகிறான். பாதுகாப்பு மற்றும் அடையாளத்தை சொத்து அல்லது அதிகாரத்தின் மூலம் தேடுவதற்குப் பதிலாக, மனித உறவுகள், அன்பு மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றின் மூலம் அவன் தனது வாழ்க்கைக்கு அர்த்தத்தை காண்கிறான். இதனால் பாதுகாப்பு என்பது பொருட்களை கட்டுப்படுத்துவதிலிருந்து அல்ல. மாறாக உலகத்துடன் கொண்டுள்ள உறவிலிருந்து உருவாகிறது. 

இரண்டாவது புதிய மனிதன் அன்பு பரிவு மற்றும் பகிர்வு ஆகியவற்றின் மூலம் வாழ்கிறான். மனித வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சி சேர்த்தலிலிருந்து அல்ல மாறாக மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ்வதில் இருந்து வருகிறது. இந்த நிலை மனித மகிழ்ச்சியின் பொருளை மாற்றுகிறது. மகிழ்ச்சி என்பது உடைமை அல்ல மாறாக வாழ்க்கையின் வளர்ச்சியில் பங்கேற்பதே ஆகும். இந்த மாற்றம் இயற்கையின் மீதான மரியாதை மற்றும் வாழ்க்கையின் புனிதத்தன்மையை உணர்வதையும் உள்ளடக்கியது. மனிதர்கள் இயற்கையை வெறும் பயன்பாட்டு பொருளாகக் கருதுவதை நிறுத்தி தாங்கள் ஒரு பெரிய உயிரியல் அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதை உணரத் தொடங்குகிறார்கள். இந்த புரிதல் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான உறவை புதிய தத்துவ அடிப்படையில் அமைக்கிறது. 

உண்மையான மகிழ்ச்சியானது வளர்ச்சி மற்றும் உயிர்ப்புடன் வாழும் செயல்முறையிலிருந்து உருவாகிறது. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை படைப்பாற்றல், அன்பு மற்றும் அர்த்தமுள்ள உறவுகளின் அடிப்படையில் அமைத்துக்கொண்டால் அவர்கள் வெளிப்புற வெற்றிகளுக்கு சார்ந்திராத ஆழமான நலத்தை அனுபவிக்க முடியும். மொத்தத்தில், நவீன சமுதாயத்தின் பிரச்சினைகளை தீர்க்க பொருளாதார மாற்றம் மட்டும் போதாது. உண்மையான மாற்றம் மனிதன் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் முறையிலேயே இருக்க வேண்டும். இவ்வாறு உடைமை நிலைமையிலிருந்து இருப்பு நிலைக்கான மாற்றம் என்பது மனித வாழ்வின் புதிய தத்துவத்தை உருவாக்கும் ஒரு முக்கியமான படியாகும். 

இருப்பு வாழ்விற்கான ஒழுக்கவியல் நோக்கு

நவீன தொழில்துறை சமூகம் தனது அமைப்புகளையும் மதிப்புகளையும் பெரும்பாலும் உடைமை, லாபம் மற்றும் நுகர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அமைத்துள்ளது. இதனால் மனித வாழ்க்கையின் நோக்கம் மனித வளர்ச்சியாக இல்லாமல், பொருளாதார வளர்ச்சியாக மாறிவிட்டது. இந்த அமைப்பில் மனிதன் தன் வாழ்க்கையின் நோக்கத்தை உருவாக்குபவராக இல்லாமல், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளின் கருவியாக மாறுகிறான். 

சமகால நாகரிகத்தின் பிரச்சினைகளை தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் மட்டுமே தீர்க்க முடியாது. உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் சமூகம் மனிதனை மையமாகக் கொண்ட புதிய அமைப்பாக மறுசீரமைக்கப்பட வேண்டும். அதாவது பொருளாதார அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் மனித நலனை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். அவை மனித வாழ்க்கையின் நோக்கமாக மாறக்கூடாது. இவ்வாறு மனித நலனை மையமாகக் கொண்ட சமூகமே புதிய சமூகம் எனப்படும். 

லாபத்திற்கான உற்பத்தி” என்ற பொருளாதார அமைப்பு கவனத்திற்குரியதாகின்றது. நவீன பொருளாதார அமைப்பில் உற்பத்தி பெரும்பாலும் லாபத்தை அதிகரிப்பதற்காக நடைபெறுகிறது. இதனால் முடிவில்லாத வளர்ச்சி, அதிக நுகர்வு மற்றும் சந்தை விரிவாக்கம் போன்றவை ஊக்குவிக்கப்படுகின்றன. ஆனால் இந்த அமைப்பு மனித நலனையும் இயற்கை சமநிலையையும் பாதிக்கிறது. உற்பத்தி லாபத்திற்காக அல்ல, மனித தேவைகளுக்காக நடைபெற வேண்டும். பொருளாதார செயல்பாடுகளின் மதிப்பு, அவை மனித வாழ்க்கையின் தரத்தை உயர்த்துகிறதா என்பதன் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். 

நவீன சமூகம் மனிதர்களை தொடர்ந்து பொருட்களை வாங்கவும் பயன்படுத்தவும் தூண்டுகிறது. இந்த நிலை மனித மகிழ்ச்சியை பொருட்களின் சேர்த்தலுடன் இணைக்கிறது. ஆனால் இத்தகைய நுகர்வு மனிதனை உண்மையான மகிழ்ச்சிக்கு கொண்டு செல்லாது. மாறாக அது மனஅமைதியின்மை, வெறுமை மற்றும் சார்பு உணர்வுகளை உருவாக்குகிறது. எனவே புதிய சமூகத்தில் நுகர்வு மனித வளர்ச்சிக்கும் படைப்பாற்றலுக்கும் உதவும் வகையில் மாற்றப்பட வேண்டும். 

நவீன சமுதாயங்களில் அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகள் பெரும்பாலும் பெரிய நிறுவனங்களின் மற்றும் அதிகார அமைப்புகளின் கைகளில் உள்ளது. பொதுமக்கள் அரசியல் வாழ்க்கையில் மிகவும் குறைந்த அளவிலேயே பங்கேற்கிறார்கள். இதனால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளில் உண்மையான கட்டுப்பாட்டை இழக்கிறார்கள். புதிய சமூகத்தில் மனிதர்கள் சமூக முடிவுகளில் நேரடியாக பங்கேற்கும் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த பங்கேற்பு மனிதனை அரசியல் வாழ்க்கையில் செயலற்ற பார்வையாளராக அல்ல, செயலில் ஈடுபடும் குடிமகனாக மாற்றுகிறது. 

அலுவலக அமைப்புகள் பொதுவாக விதிகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் செயல்படுகின்றன. இத்தகைய அமைப்புகளில் தனிநபரின் பொறுப்பு உணர்வு குறைகிறது, ஏனெனில் ஒவ்வொருவரும் தாங்கள் விதிகளை மட்டுமே பின்பற்றுகிறோம் என்று கருதுகிறார்கள். இதன் விளைவாக மனிதர்கள் தங்கள் செயல்களின் ஒழுக்க விளைவுகளை உணராமல் செயல்படலாம். ஏனெனில் தார்மீக பொறுப்பு எந்த அமைப்பிற்கும் ஒப்படைக்கப்பட முடியாதது. அது மனிதர்களின் தனிப்பட்ட விழிப்புணர்வில் இருக்க வேண்டும்.  

நவீன உலகில் செல்வந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே பாரிய பொருளாதார இடைவெளி உள்ளது. இந்த சமநிலையின்மை அரசியல் பதற்றத்தையும் சமூக அநீதியையும் உருவாக்குகிறது. புதிய சமூகம் இந்த இடைவெளியை குறைக்கும் நோக்கத்தில் உலகளாவிய பொருளாதார அமைப்பை மறுசீரமைக்க வேண்டும். மனித வளர்ச்சி உலகளாவிய ஒற்றுமையுடன் மட்டுமே சாத்தியம் என்பது உணர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.

தனிநபர் சுதந்திரம் என்பது மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் கிடைக்காது. மனித வாழ்க்கையின் வளர்ச்சி சமூக உறவுகளுடனும் பரஸ்பர ஆதரவுடனும் தொடர்புடையது. எனவே புதிய சமூகத்தில் ஒத்துழைப்பு, பரிவு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை முக்கியமான மதிப்புகளாக இருக்க வேண்டும். 

தொழில்நுட்ப முன்னேற்றம் மனித வாழ்க்கைக்கு பல வாய்ப்புகளை உருவாக்கியிருந்தாலும், அது மனித மதிப்புகளுடன் இணைக்கப்படாவிட்டால் ஆபத்தானதாக மாறலாம். தொழில்நுட்பம் மனிதனை கட்டுப்படுத்தும் சக்தியாக மாறாமல், மனித வாழ்க்கையை மேம்படுத்தும் கருவியாக இருக்க வேண்டும். 

பலர் தற்போதைய சமூக அமைப்பை விமர்சிக்க முடியாமல் அதனை இயல்பானதாக ஏற்றுக்கொள்கிறார்கள். இது பழக்கவழக்கம், பயம் மற்றும் மாற்றம் சாத்தியமில்லை என்ற நம்பிக்கை ஆகியவற்றால் ஏற்படுகிறது. இந்த மனநிலையை கடக்க விமர்சன விழிப்புணர்வும் நெறிமுறை தைரியமும் அவசியமாகிறது. மனிதர்கள் தற்போதைய அமைப்பின் வரம்புகளை உணரும்போது மட்டுமே மாற்றம் தொடங்க முடியும். புதிய சமூகத்தின் அடித்தளம் மனித மரியாதை, உண்மை மற்றும் வாழ்க்கையின் மதிப்பு ஆகியவற்றில் இருக்க வேண்டும். இது பாரம்பரிய மத அமைப்புகளுடன் கட்டாயமாக தொடர்புடையதாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் அது மனித வாழ்க்கையை புனிதமாக மதிக்கும் ஆழமான ஆன்மீக உணர்வை கொண்டிருக்க வேண்டும்.

மொத்தத்தில் மனித சமுதாயத்தின் எதிர்காலம் உடைமை, போட்டி மற்றும் நுகர்வு ஆகியவற்றின் மதிப்புகளை விட்டு விலகி, பங்கேற்பு, பொறுப்பு, ஒற்றுமை மற்றும் மனித வளர்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட புதிய சமூக அமைப்பை உருவாக்குவதில் உள்ளது. இந்த “புதிய சமூகம்” என்பது வெறும் அரசியல் திட்டமாக இல்லாமல் மனித வாழ்க்கையின் அடிப்படை நோக்கத்தை மறுபரிசீலனை செய்யும் ஒரு ஆழமான தத்துவ மாற்றமாகும்.

உசாத்துணை

Fromm, E. (1976). To Have or to Be? New York: Harper & Row.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.