தமயந்தி சொன்னாள்: இந்த ரத ஓசை என் மனதை கிளறச் செய்யுமானல் அது நளனுடையதாகத் தான் இருக்கும். இன்று என் மனோரதம் நிறைவேறும், நிலவின் ஒளி போன்ற என் நாயகனின் முகத்தைக் காண்பேன். என் கணவனாக வந்து என்னை அணைத்து ஆறுதல் சொல்ல வராவிட்டால் உயிர் வாழ்ந்து தான் என்ன பயன். உடனே மடிவேன், இன்று நான் நிஷத ராஜனின் இடி முழக்கம் போன்ற குரலைக் கேட்காவிடில் பொன் நிற தீயின் ஜுவாலையில் வீழ்ந்து மடிவேன். மனிதருள் சிங்கம் போன்ற பீடுடைய நடை அவனது. பட்டத்து யானையின் கம்பீரமான உடலமைப்பு அவனுடையது. இன்று அவனைக் காணாவிடில் நான் வாழ்ந்து தான் என்ன பயன். எவருக்கும் எந்த சிறு தீங்கும் செய்யதவன், யாரையும் மனம் நோக பேசாதவன், நான் மட்டுமே அறிந்த பல நல்ல குணங்கள் உடையவன். விளையாட்டாக கூட, பரிகாசமாகவோ பேசினால் கூட தவறான சொல் அவன் வாயில் வராது. மணமான பின் என்னை தவிர மற்றொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்த்ததில்லை. அந்த அளவு உண்மையான கணவன் என்று தானே பெருமிதமாக எண்ணிக் கொண்டபடி நடந்தாள். இவ்வாறு மனதுள் சொல்லிக் கொண்டே மாளிகையின் உப்பரிகையில் வந்து நின்றாள். ருது பர்ண அரசன் இறங்கினான். வார்ஷ்னேயன் இறங்கினான், அடுத்து வாஹுகன் குதிரைகளை அவிழ்த்து அதன் இடத்தில் கட்டிவைத்து விட்டு, ரதத்தையும் ஒரு ஓரத்தில் நிறுத்தினான்.
ருது பர்ணனை வரவேற்ற அரசன் பீமன், இருவருமாக அரண்மனைக்குள் நுழைந்தனர். பீம ராஜாவின் மனதில் எதற்கு வந்திருக்கிறான் என்ற கேள்வி, ருது பர்ணனுக்கோ சுயம்வரம் என்ற ஏற்பாடுகளே இல்லையே, என்ன காரணம் சொல்வோம் என்ற கவலை.
ராஜா பீமன், ருது பர்ணனுக்கு அரசனுக்குரிய மரியாதைகளைச் செய்து உள்ளே அழைத்துச் சென்ற பின் வந்த காரணத்தை வினவினார். மிகவும் வினயமாக என்ன விசேஷம் இந்த வரவினால் என்னை கௌரவிக்க – என்றார்.
சுற்று முற்றும் பார்த்த ருது பர்ணன் புரிந்து கொண்டான். வேறு வெளியார் யாரும் வரவும் இல்லை. பொது மக்களும் காண வரவில்லை. சுயம் வரம் என்றால் இந்த அளவு அமைதியாகவா இருக்கும்.
கோசல தேசத்து அரசன், ருது பர்ணன். எதுவும் காரணம் இல்லை. ஏதோ தோன்றியது உங்களை வணங்கிச் செல்ல வந்தேன். பல மைல்கள் தொலைவு வேகமாக கடந்து வந்தவன் என்னைக் காண மட்டுமா வந்திருப்பான்
பின்னால் தானாகத் தெரிகிறது. உண்மையான காரணம் என்ன என்பது. . இவ்வாறு நினைத்தபடி அரசனை உள்ளறைக்கு அழைத்துச் சென்றார். பணியாட்கள் வந்து அயோத்தி அரசனுக்கு தங்கும் இடம் ஒழுங்கு செய்து விட்டதைச் சொல்லவும் அந்த அறையில் சென்று தங்கினான்.
வார்ஷ்னேயனும் வாஹுகனுமாக குதிரைகளை கொட்டிலில் அடைத்து விட்டு அமர்ந்தனர்.
தான் நினைத்த படி நளன் வரவில்லை என்பதில் தமயந்தி வாட்டமடைந்தாள். ருது பர்ணனும் நல்ல அறிவாளி. வார்ஷ்னேயன் சிறந்த சாரதி. அவர்களும் ரதம் ஓட்டுவதில் தேர்ச்சி பெற்றிருக்கலாம். ரதத்தின் ஒசை மட்டுமே கேட்டு நான் எப்படி தீர்மானித்தேன். ஒரு பணிப் பெண்ணை விவரங்கள் அறிந்து வர அனுப்பினாள்.
கேசினி! நீ போய் யார் அந்த ரத சாரதி, குட்டை கைகளும், அழகற்றவனாக இருந்தும் திறமையுள்ளவனாகத் தெரிகிறான். அருகில் சென்று மரியாதையாக விசாரி. யாரோ வந்திருக்கிறார்கள் என்றாலும் அரண்மனை வழக்கம் அவர்களுக்கு வேண்டியதைச் செய்வது தானே. நயமாக பேசி வந்த காரணமும் தெரிந்து கொள். எதற்கு இந்த அளவு வினயமாக பேசச் சொல்கிறேன் என்றால், என் உள் மனதின் சந்தேகம், இந்த அளவு அஸ்வ வித்தை அறிந்தவன் நளன் மட்டுமே, இவன் யார் எப்படி அறிந்தான் என்பது தெரிய வேண்டும். அவ்வளவே. பர்ணாதா என்பவனை பேச்சு வாக்கில் குறிப்பிடு. அவன் என்ன பதில் சொல்கிறான் என்பதை அப்படியே வந்து என்னிடம் சொல். என்றாள். நான் உப்பரிகையிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், சைகை காட்டு, இறங்கி வருவேன், என்றாள்.
கேசினி அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த இடம் சென்றாள். தான் தமயந்தியின் அருகில் சேவை செய்யும் பணிப் பெண் என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். பிரயாணம் வசதியாக இருந்ததா என்று விசாரிக்கச் சொன்னாள். ஊரை விட்டு கிளம்பி வெகு நாட்களாக ஆகி விட்டனவோ என்று கேட்டாள். வந்த காரியம் என்னவொ என்றும் விசாரிக்கச் சொன்னாள்.
வாஹுகன் பதில் சொன்னான். எங்கள் அரசனிடம் ஒரு அந்தணன் வந்து சுயம்வரம் என்று சொன்னான். தமயந்தி மறு மணம் செய்து கொள்ளப் போவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தான். அது தான் வந்தோம். நூறு யோஜனை தூரம் வாயு வேகத்தில் வந்தோம். நான் அரசனின் சாரதி என்றான்.
ருது பர்ணன் அயோத்தி அரசன், நீங்கள் வாகுகன்,. இவர் யார்? இவர் நள மகா ராஜாவிடம் சாரதியாக இருந்தவர். பெயர் வார்ஷ்னேயர். நளன் வனம் சென்ற பின் இவர் அங்கு வந்தார். எனக்கு அஸ்வ வித்தை- குதிரை பற்றிய விவரங்கள் தெரியும். இவர் சாரதி. ருது பர்ண ராஜா என்னை சமையல் செய்ய நியமித்தார். அவருக்கு மிகவும் பிடித்து போகவே என்னை அவருடைய பிரத்யேகமான குதிரைகளை பரிபாலிக்கவும் வைத்துக் கொண்டார்.
வார்ஷ்னேயருக்குத் தெரியுமா நள மகா ராஜா எங்கு இருக்கிறார் என்று.
தெரியாது. அவர் நளனுடைய குழந்தைகளைக் கொண்டு வந்து இங்கு விட்ட பின், தான் அயோத்தி அரசனிடம் வேலைக்கு சேர்ந்து கொண்டு விட்டார். உங்களில் யாருக்காவது தெரியுமா? நளனை நளன் மட்டுமே அறிவான். வேறு உடல் அடையாளங்களோ, சின்னங்களோ அவனிடம் இல்லை.
கேசினி, இந்த செய்தியை அறிவீர்களா என்று சொல்லி தமயந்தி சொல்லி அனுப்பிய வாசகங்களைச் சொன்னாள். ஸூதாட்டக் காரே! எங்கு சென்றீர்கள். நடுக் காட்டில் தன் மனைவியின் சேலையை கிழித்து எடுத்துக் கொண்டு, அவள் தூங்கும் பொழுது எங்கோ விரைந்து சென்று விட்டீர்களே. எப்படியும் வருவேன், காத்திரு என்று சொன்னதை நம்பி இன்னமும் அவள் காத்திருக்கிறாள். அந்த பாதி சேலைத் துண்டு இன்னமும் உள்ளது. – இதைக் கேட்டீர்களே, அவளுக்கு சரியான பதிலை இன்னமும் சொல்லவில்லை. இப்பொழுது கூட அவள் கேட்கச் தயாராக இருக்கிறாள்.
நளன் இதைக் கேட்டு தாங்க மாட்டாமல் கண்களில் நீர் வழிய தழதழத்த குரலில் பதில் சொன்னான். ‘கற்புக்கரசியே! என்ன கஷ்டம் வந்தாலும் நல்லவர்கள் மனம் உடைந்து போக மாட்டார்கள். மேலும் முன் சொன்ன சொற்களையே சொன்னான்.’ கேசினி திரும்பிச் சென்று தமயந்தியிடம் நடந்தை சொல்லி விட்டு வாகுகன் என்பவன் மேலும் வருந்துவதையும் சொன்னாள்.
இவைகளைக் கேட்ட பின் தமயந்தி மேலும் குழம்பினாள். துக்கம் தொண்டையை அடைத்தது. அவன் நளன் தான் என்ற எண்ணம் வலுப் பெற்றது. கேசினியை திருப்பி அனுப்பினாள்.
கேசினி, நீ அவர்களின் அருகிலேயே.இரு. என்ன செய்கிறார் என்பதை அவர்கள் அறியாமல் கவனி. வழக்கமான செயல்கள் தவிர எது வித்தியாசமாக செய்தாலும் என்னிடம் வந்து சொல். தண்ணீரே, நெருப்போ கேட்டால் உடனே கொடுத்து விடாதே. தாமதம் செய். அவர்களுடைய எதிர் வினை என்னவாக இருந்தாலும் என்னிடம் வந்து சொல். வாஹுகனை கண் காணித்துக் கொண்டே, என்ன செய்கிறான், என்ன பேசுகிறார் என்பதை குறித்துக் கொள். அமானுஷ்யமாக எதோ செய்வான் என்று எனக்குத் தோன்றுகிறது. அதைக் கண்டால் வந்து சொல்.
கேசினி வந்தாள். அம்மா, அவன் அஸ்வ வித்தை தெரிந்தவன் போலத் தெரிகிறான். குதிரைகளை அன்புடன் தட்டிக் கொடுத்து அவைகளுடன் பேசுகிறான்.
மேலும் அருகில் இருந்து பார்த்து விட்டு வந்தாள். அம்மா, அவனுக்கு ஏதோ சக்தி இருக்கிறது. பள்ளத்தின் அருகில் சென்றால், பூமி அவன் கால்களுக்கு அடியில் வருகிறது. குறுகிய இடம் என்றால் தானே வழித்தடம் விசாலமாகி விடுகிறது. தானே சமைத்து ருது பர்ணனுக்கு கொடுத்தான். தேவையான பொருட்களை அரசன் பீமன் அனுப்பி இருந்தார். மாமிசங்களை கழுவ பாத்திரங்கள் வரை கேட்டு வாங்கிக் கொண்டான். அந்த பாத்திரங்களைக் கண்ணால் கண்டே, நீரால் நிரப்பி விட்டான். கை நிறைய பசும் புல்லை எடுத்து வெய்யிலில் வைத்தான். அதில் நெருப்பு வந்து விட்டது. இதெல்லாம் போதாது என்று இன்னொரு அதிசயம் கண்டேன். கை வைத்த இடத்தில் வந்த நெருப்பு பற்றிக் கொண்டது என்று சொன்னேனே, அது அவனை சுடவில்லை. எங்கிருந்தோ அருவியாக நீர் கொட்டியது அதில் மலர்களை கழுவினான். தண்ணிரில் போட்ட மலர்கள் எப்படி இருக்கும். சுருங்கி போகாதா, இந்த மலர்கள் மேலும் மலர்ந்து அதிக மணம் வீசின. நான் ஓடோடியும் வந்தேன் உங்களிடம் இந்த அதிசயங்களைச் சொல்ல. .
இந்த செய்திகள் அவளுக்கு வாஹுக வேத்தில் இருப்பது நளனே என்று ஐயமறத் தெரிந்து விட்டது. இப்பொழுது என்ன செய்வது? எப்படி வெளியில் அவனை கொணருவது. அவள் அழுகையின் ஊடே கேசினியிடம் சொன்னாள். கேசினி வாஹுகன் கையால் சமைத்த உணவில் சிறு துண்டு எடுத்துக் கொண்டு வருகிறாயா. கேசினி, திரும்பிப் போனாள். அவன். சமைத்த உணவில் ஒரு கை எடுத்துக் கொண்டு வந்தாள்.
அதை வாயில் போட்டு ருசி பார்த்த தமயந்திக்கு சந்தேகமே இல்லை. அவன் தான் நளன் என்பது நிச்சயமாகி விட்டது. மனதுக்கு தெரிந்ததை எப்படி நிரூபிப்பாள்.
அடுத்து தன் குழந்தைகளை கேசினியுடன் வாஹுகனைக் காண அனுப்பினாள். குழந்தைகளைக் கண்டவுடன் இருவரையும் வேகமாக அருகில் சென்று அணைத்துக் கொண்டான். இருவரையும் மடியில் இருத்திக் கொண்டு ஓவென்று கதறி அழுதான். கேசினியிடம், கேசினி, இந்த இருவரும் என் குழந்தைகள் போலவே உள்ளனர். கேசினி, இப்படி நீ அடிக்கடி வந்தால், வேற்று தேசத்திலிருந்து வந்தவர்கள் நாங்கள். மக்கள் சந்தேகப் படுவார்கள். அழைத்து போ.
நளனுடைய அனுபவமும், நேர்மையும் அவர்களை திருப்பி அனுப்பி விட்டாலும், மனம் வாடியது. தன் குழந்தைகளைப் பார்த்த பின்னும் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. கேசினி தமயந்தியிடம் விவரங்களைச் சொன்னாள். தமயந்தி தன் தாயாரை அனுப்பினாள்.. மகா ராணி தானே வாஹுகனைத் தேடி வந்தாள். அம்மா, என மனதுக்கு தெரிகிறது அவன் நளன் தான் என்று. இந்த உருவம் எப்படி வந்த து? அதனால் தான் குழம்புகிறேன். நீயே போய் பார். என்ன தோன்றுகிறதோ, அதன் படி செய். என்று அனுப்பினாள்.
அம்மா, அரண்மனைக்குள் அழைத்து வா. அல்லது என்னை அனுமதி. நளனை சந்தித்து பேசுகிறேன். உன் விருப்பம். அப்பாவிடம் சொல்வாயோ, மாட்டாயோ. அவள் தாயார் உடனே அரசன் பீமனிடம் தங்கள் மகளின் சந்தேகத்தையும், இந்த உடல் மாற்றம் பற்றிய கேள்வியால் நேரடியாக நளன் தான் என்று உறுதி செய்து கொள்ள முடியாமல் இருப்பதையும் சொன்னாள். அவரும் சம்மதித்த பின் நளனைக் காணச் சென்றாள்.
அவள் தாயார் சென்று பேசி எப்படியோ அவனை அரண்மனைக்குள் வரச் செய்தாள். நேருக்கு நேர் சந்தித்தவுடன் வாஹுகனாக இருந்த நளன் கட்டுக்கடங்காத துக்கத்துடன் விசித்து அழுதான். அவளால் முடிந்தவரை அனுதாபமாக பேசி தமயந்தி சமாதானப் படுத்தினாள். தமயந்தியும் தான் அணிந்திருந்த சிவப்பு வஸ்திரம், நளன் கிழித்த மீதி அதைக் காட்டினாள். வாஹுகனே, நீ கண்டோ கேட்டதோ உண்டா. எந்த மனிதனாவது நடுக் காட்டில் அயர்ந்து உறங்கும் மனைவியை விட்டுச் செல்வானா? அதுவும் அவள் சேலையின் ஒரு பகுதியை வெட்டி தான் உடுத்திக் கொண்டு சென்றவனைக் கேட்டிருக்கிறாயா? அவள் என்ன தவறு செய்தாள் என்று இந்த தண்டனை அளித்தான்? அந்த நளனை இளம் வயதில் அறிந்து, அன்புடன் மனைவியாக வாழ்ந்து, இரு செல்வங்களையும் பெற்றவள், ஏன் இந்த தண்டனையை அடைய வேண்டும்.
தேவ லோக வாசிகளே வந்து வேண்டியும் அவர்களை புறக்கணித்து, இவன் மனிதருள் மாணிக்கம் போன்றவன் என்று சொல்லி மண மாலையை அவன் கழுத்தில் போட்டு, கை பிடித்தேனே, அதற்கு தண்டனையா? அக்னி சாட்சியாக என்னை மணந்தவன். வாழ் நாள் பூராவும் கை விட மாட்டேன், கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொண்டு வாழ்வோம் என்று சபதம் செய்வன் தானே, அந்த நளன். அதை எப்படி மறந்தான். யார் நீ, வாஹுகா? உண்மையைச் சொல்.
கண்ணீர் பெருக அமர்ந்திருந்தவன், பதில் சொன்னான். ஓ தமயந்தி, என் ராஜ்யத்தை இழந்ததோ, உன்னை விட்டு விலகியதோ, என் சுய புத்தியுடன் செய்ததல்ல. நற்குணங்களே உருவான நீ இப்படி கண்ணிர் உகுக்க நான் பார்த்துக் கோண்டிருக்கிறேனே, என் கையாலாகாத தன்மை என்னை வாட்டுகிறது. இரவும் பகலும் உன்னை நினைத்து நான் அழாத நாளே கிடையாது. நான் உன்னை விட்டுப் பிரிந்த நாள், நீ கலியை சபித்தாய். அதனால் துரத்தப் பட்டு அவன் என் உடலிலேயே புகுந்து கொண்டான். அவனும் வெந்தான் என்னையும் வாட்டினான். (கார்கோடகன் என்ற பாம்பு கலியைத் துரத்திச் சென்றதாக முன் கலி சொன்னான்)
தற்சமயம் நான் இங்கு வந்தது உன்னைக் காணவே. அதில் சந்தேகப் படாதே. இந்த துன்பங்களில் இருந்து விடுபட என்ன வழி? என்று அல்லும் பகலும் யோசித்து தவம் இருந்தேன். கலி விலகி விட்டான்.
எந்த பெண்ணாவது கணவன் விட்டுப் பிரிந்து விட்டான் என்று மறுமணம், அதற்கு இரண்டாவது சுயம் வரம் ஏற்பாடு செய்வாளா? அரசன் சொன்னதாக செய்தி அறிவிப்பாளர்கள் உலகமெங்கும் இந்த செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பீம ராஜாவின் மகள், தன்னிச்சைப்படி, இரண்டாவது சுயம் வரம் ஏற்பாடு செய்திருக்கிறாள், தன் விருப்பம் போல இரண்டாவது கணவனை தேர்ந்தெடுக்கப் போகிறாள்’ என்றனர். இதைக் கேட்டவுடன் பங்காசுரனின் மகன் ருது பர்ணன் கிளம்பி வந்திருக்கிறான். சுயம்வரத்தில் பங்கேற்க..
தமயந்தி சொன்னாள்: எப்படி கண்டு பிடிப்பேன் என்று நானும் யோசித்து யோசித்து, ரகசியமாக செய்ய வேண்டும், பங்காளிகளுக்குத் தெரியக் கூடாது என்ற கட்டுப்பாடுகளுடன் நான் உங்களைக் கண்டு பிடிக்கவே இந்த ஏற்பாடு செய்தேன். என்னை குற்றம் சொல்ல வேண்டாம். ஏதோ ஒரு விதத்தில் உயிருடன் இருப்பதை தெரியப் படுத்தி இருந்தால் கூட நான் காத்திருந்திருப்பேன். என் தந்தை அனுப்பிய அந்தணர்களும் போர் வீரர்களும் இதே காரியமாக நாடு முழுவதும் சுற்றி அலைந்திருக்கிறார்கள். வெளிப்படையாக சொல்ல முடியாமல் பாடலாக பாடிக் கொண்டு சென்றனர். நளன் காதில் விழுந்தால் அவன் மட்டும் புரிந்து கொள்வான் என்று நம்பினோம். பர்னாதா என்ற பெரியவர், கண்டு வந்து சொன்னார். கோசல தேசத்தில் இருப்பதாக. இந்த செய்தி கோசல தேசத்தில் மட்டும், நீங்கள் இருந்த அரண்மனை வளாகத்தில் இருந்த உங்கள் காதில் விழுந்திருக்கிறது. அதன் பின் தான் இந்த யோசனை செய்தேன். வந்திருப்பது ருது பர்ணன் மட்டுமே என்பதில் தெரியவில்லையா? ஊர் உலகம் அறிய இதை தம்பட்டம் அடித்து சொல்லவில்லை என்பது.
நூறு யோஜனை தூரம் ஒரு நாளில் கடந்து வரும் திறமை , வேறு யாருக்கு உண்டு. அஸ்வ வித்தை அறிந்தவர் என்பதால் உங்களைத் தான் எதிர்பார்த்தேன். அரசனுடைய ஊழியனாக இல்லை. இதில் என் தவறோ, என் குணக் குறைவோ, அரச குமாரி என்ற கர்வமோ இருந்தால், எங்கும் பரவியிருக்கும் வாயு தேவன் இந்த நிமிடமே என் உயிரை பறிக்கட்டும். வானத்தில் உலவும் ஸூரிய தேவன் என் ஆயுளை முடிக்கட்டும். அனைத்துக்கும் சாட்சியாக மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கும் நிலவு என் வாழ்வை முடிக்கட்டும். மூவுலகையும் படைத்தும், காத்தும், மறைக்கும் தேவ தேவன், முழு முதற் பொருள் அறிவானாக, நான் குற்றமற்றவள், நான் தேடியது என் கை பற்றியவனை, என் குழந்தைகளின் தந்தையைத் தவிர மாற்று எண்ணம் எதுவும் இல்லை என்பதற்கு சாட்சியாக இருக்கட்டும்.
இப்படி அவள் மனம் அதிர்ந்து சொன்ன சொல்லைக் கேட்டவுடன் வாயு தேவன் அசரீரியாக சொன்னான். ‘ஓ நளனே! அவள் ஒரு தவறும் செய்யவில்லை. அரசனே, அவள் உன்னையோ, உன் உறவு மக்களையோ, குற்றம் சொல்லவும் இல்லை, எதையும் விட்டுக் கொடுக்கவும் இல்லை. மூன்று ஆண்டுகளாக உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறாள். யோசித்து யோசித்து உன்னை உசுப்பி எழுப்பவே இப்படி ஒரு செய்தி உன் காதில் விழச் சொல்லியிருக்கிறாள். நாங்கள் சாட்சி. அவள் அறிவாள், ஒரு நாளில் நூறு யோஜனை தூரம் குதிரை பூட்டிய ரதத்தில் பயணம் செய்து வந்து சேருவது உன்னால் மட்டுமே முடிந்த செயல். அதனால் கண்டு கொண்டாள். துன்பங்கள் எல்லாம் நீங்கி விட்டன, இனி எல்லாம் நன்மையே தான். இனி என்றும் மகிழ்ச்சியோடு வாழ ஆசிகள் அளிக்கிறோம். நள மகாராஜா! பீமராஜனின் மகள், தமயந்தியை குறைச் சொல்லாதே. அவள் உன் நலம் விரும்பி, உனக்காகவே, இந்த கஷ்டங்களிலும் உயிர் தரித்து இருந்திருக்கிறாள். வாயு தேவன் சொல்லி முடிக்கவும் வானிலிருந்து பூ மாரி பொழிந்தது. துந்துபி முழங்கியது. தென்றல் போல காற்று மென்மையாக வீசியது. பூமியின் நாயகன், அரசனான நளன், நாக ராஜனுக்கு கொடுத்த வாக்கை நினைவில் கொண்டு, அவன் கொடுத்த புத்தாடையை அணிந்தான். உடனே தன் சுய ரூபம் கிடைக்கப் பெற்று தமயந்தியின் முன் வந்தான்.தமயந்தியோ இது வரை அடக்கி வைத்திருந்த தன் துக்கத்தை வெளிப்படுத்துபவள் போல கதறி அழுதாள். அவளை அணைத்து சமாதானம் செய்தான் நளன்.

குழந்தைகளும் அருகில் வந்தன. அவர்கள் இருவரையும் மகிழ்ச்சியுடன் பார்த்த தமயந்தியின் தாய், அரசன் பீமனிடம் சென்று, அவர் அறியாமல் தானும் தமயந்தியும் மட்டுமாக பேசிக் கொண்டு செய்ததை விவரித்தாள். மகாராஜா பீமன், பெரிய இடர் தீர்ந்த மன நிறைவை அடைந்தார். இன்று அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கண்டு கொண்டார்களே, அதுவே போதும். நான் நாளை சந்திக்கிறேன், என்றார். .
அன்று இருவரும் காட்டில் பிரிந்த பின் இருவரும் வாழ்க்கையில் அனுபவித்த இன்னல்களையும், மீண்டு வந்ததையும் சொல்லி தங்கள் அனுபவங்களை பரிமாறிக் கொண்டனர்.
நள மகா ராஜாவாக இருந்தவன், தன் நாட்டை இழந்த பின் அது நாலாவது ஆண்டு. தமயந்தியும் புத்துயிர் பெற்றவளாக, தன் கணவன், குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் நிலவை ஒத்த முகப் பொலிவை திரும்ப பெற்றாள்.
மறு நாள் விடிந்ததும், நளன் தமயந்தி அளித்த நல்லாடைகளையும் நகைகளையும் அணிந்து கொண்டு அவளும் உடன் வர, அரசன் பீமனை சந்தித்தான். தன் செயலை எண்ணி வெட்கமும், தமயந்தியை திரும்ப கண்டு கொண்டதால் மகிழ்ச்சியும் வெளிப்பட, மாமனாரை வணங்கினான். பீம ராஜா, இதுவரை தன் மனதின் தான் பட்ட கவலை தீர்ந்த நிம்மதியுடன் வரவேற்று உபசரித்தார். அன்புடன் பேசி, சமாதானம் செய்தார். இருவரையும் அருகில் இருத்திக் கொண்டு, நடந்த விஷயங்களை அவர்களே சொல்லக் கேட்டறிந்தார். நளனும் இயல்பான தன் ராஜ கம்பீரத்தைப் பெற்றவனாக, அவரிடம் தன் நாடு செல்ல அனுமதி கோரினான்.
நாட்டு மக்கள் மகிழ்ந்தனர். அரசன் ஆணையின் படி, தெருக்கள் அலங்கரிக்கப் பட்டன. பல அலங்கார வளைவுகளும், தோரணங்களும் கட்டப் பட்டன. ருது பர்ணனுக்கு அனைத்து விவரங்களும் சொல்லி பீம ராஜா, அவன் கைகளை பற்றி உணர்ச்சி வசப்பட்டவராக நன்றியைத் தெரிவித்தார். வாஹுகன், உண்மையில் நளன், தமயந்தி அவன் மனைவி என்பதையும் அறிந்த ருது பர்ணன் திகைத்தான். இதற்குள் வாஹுகனின் திறமைகளை அறிந்திருந்தவன் ஆனதால், நண்பனாக அவனை மதித்து வந்தவன், விவரங்கள் தெரிந்தவுடன், திகைத்தான். தன் நண்பன் இழந்த நல் வாழ்வை திரும்பப் பெற்றதில் மகிழ்ந்தான்.
ருது பர்ணன் நளனிடம், தனக்கு பணி புரிய வைத்த செயலுக்கு மன்னிப்பு கேட்டான். அதே போல நளனும் தேவையான நேரத்தில் கை கொடுத்த அவன் நல்ல குணத்தை பாராட்டி, சொல்லாமல் மறைத்த தன் செயலுக்கு மன்னிப்பை வேண்டினான். நளன் தன் வாழ்வில் நடந்த துன்பங்களுக்கு காரணமே ஸூதாட்ட மோகம் தான் என்பதை ஒப்புக் கொண்டான். ருதுபர்ணன் சொன்னான் ‘ ஓ நள மகராஜாவே, உங்கள் மனைவி குழந்தைகளுடன் உங்களை காண மிக்க மகிழ்ச்சி. நைஷதரே, என் வீட்டில் இருந்த சமயம் நான் கடுமையாக எதேனும் சொல்லியிருந்தாலும், தெரிந்து செய்யவில்லை என்பதைச் சொல்லிக் கொள்கிறேன் என்றான்.
நளன் சொன்னான்: அரசனே! உங்கள் வீட்டில் இருந்த சமயம் என்னை அலட்சியப் படுத்தியதாகவோ, கடும் சொல் சொன்னதாகவோ, நான் அணுவளவும் நினைக்கவில்லை. . இனியும் நாம் வேற்று மனிதர்கள் அல்ல. உடன் பிறந்த சகோதரர்களுக்கும் மேல் உற்ற உறவினரானோம். சிறந்த நண்பனாக உங்கள் அன்பையும், வரும் காலத்திலும் உங்கள் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். உங்களிடம் இருந்த சமயம் நான் மகிழ்ச்சியுடன் இருந்தேன். என் வீட்டில் கூட நினைத்ததை செய்ய முடிந்ததில்லை. என்றென்றும் மறக்க மாட்டேன். உங்களுடைய அருமையான சேமிப்புகள், உயர் தர குதிரைகள், அவைகளை என்னை நம்பி ஒப்படைத்தீர்களே, அதற்கு நன்றி. தேவையான பொழுது என்னிடம் எந்த உதவியானாலும் கேளுங்கள். கண்டிப்பாக செய்வேன், என்றான்.
அதன் பின் அதற்கான வழி முறைகள், மந்திரங்கள் இவைகளைச் சொல்லிக் கொடுத்து, அந்த அஸ்வ வித்தையை ருது பர்ண அரசனுக்கு அளித்தான். அரசனுக்குரிய மரியாதைகளுடன் ருது பர்ணனை வழி அனுப்பி விட்டு, நளன், மனைவி குழந்தைகளுடன் குண்டின புரத்தில் ஒரு மாதம் தங்கினான்.
அதன் பின், தான் தனியாக ஒரு ரதத்தில் தன் ராஜ்யம் செல்ல கிளம்பினான். பீம ராஜா, பொறுக்கி எடுத்த சில வீரர்களை நளனுக்கு உதவியாக பின் தொடர்ந்து செல்லப் பணித்தார். சில வெண் நிற குதிரைகள், பதினாறு யானைகள், அறுநூறு போர் வீரர்கள், பின் சென்றனர். பூமி அதிர அந்த படை நிஷத ராஜ்யத்தில் நுழைந்தது.
சகோதரன் புஷ்கரனிடன் நேரடியாக சென்று, வா, இப்பொழுது அதே ஸூதாட்டத்தை விளையாடலாம். என்னிடம் செல்வம் நிறைந்துள்ளது. ராஜ்யம் இல்லையே என்று தட்டிக் கழிக்காதே. என் பின்னால் எனக்கு ஆதரவாக பலர் இருக்கின்றனர். புஷ்கரா! நீ உன் ராஜ்யத்தை வை. மற்றவன் சொத்தை அநியாயமாக தட்டி பறித்தால், இது தான் இழந்தவன் அதை மீட்கும் வழி என்று ஆட்சிக்கான வரை முறைகள் சொல்கின்றன. இந்த ஸூதாட்டம் வேண்டாம் என்றால் வாளை எடு. போர் தான் வழி. நமது ஆயுதங்கள் முடிவெடுக்கட்டும். என் ராஜ்யம், இதை மீட்பது என் கடமை. என் தேவையல்ல. இது பரம்பரையாக எனக்கு வந்தது. என் முன்னோர்கள் எனக்கு அளித்த உரிமை, அவர்களுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். இந்த வம்சத்தின் தொடர் அழியாமல் என் மகனுக்கு இதில் உரிமை உள்ளது. அதனால் எந்த நிலையிலும், போரோ, வேறு என்ன வழியோ, மீட்டு என் முன்னோர்களின் முன் தலை வணங்கி ஒப்படைக்க வேண்டும். வா, வா. ஸூதாட்டக் காய்களா, போர்க் கருவிகளா, எதை தேர்ந்தெடுக்கிறாய், என்று கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான்.
புஷ்கரன் சிரித்தான். தன் நம்பிக்கையுடன் பழைய ஆட்டத்தையே தேர்ந்தெடுத்தான். ‘நைஷதனே!, ஏதோ சிறிதளவு செல்வம் சேர்ந்து விட்ட திமிரில் வந்திருக்கிறாய். நானே காத்திருக்கிறேன். என் தகுதிக்கு குறைவானவர்களுடன் நான் விளையாடவும் மாட்டேன். இதில் நீ தோற்று, தமயந்தியை என்னிடம் ஒப்படைக்கப் போகிறாய், அதுவே எனக்கு உத்சாகத்தை அளிக்கிறது. ஆ அந்த உலக அழகி என்னவள் ஆகப் போகிறாள். ‘ என்று பிதற்றினான். என் உயிரையே பணயம் வைக்கிறேன், வா என்றான்.
நளன் தன்னை அடக்கிக் கொண்டான். ஏன் வீண் பேச்சு பேசுகிறாய். செயலில் காட்டு. ஒரு முறை ஜயித்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றா நினைக்கிறாய்.
விளையாட்டு தொடங்கியது. ஒரே ஆட்டத்தில் நளன் அவனைத் தோற்கடித்தான். தன் பொக்கிஷங்கள், செல்வங்களுடன், புஷ்கரன், அதீதமான தன்னம்பிக்கையுடன் தன் உயிரையே பணயம் வைத்தானே, அதுவும் நளன் கைக்கு வந்தது.
மெள்ள சிரித்த படி, நளன் புஷ்கரனிடம் சொன்னான். ‘இந்த ராஜ்யத்தை மீட்டுக் கொண்டேன். புல் பூண்டு முதல் எனது. விதர்ப அரசனின் மகள் முகத்தைக் கூட உன்னால் காண முடியாது. உன் குடும்பத்தோடு நீ, உன் அடியார்கள் யாவரும் அவளுக்கு அடிமையாக சேவகம் செய்யப் போகிறீர்கள். முன்னால் நீ ஜயித்தது உன் திறமையாலா, இல்லையே. உனக்கு என்ன தெரியும் கலியின் வேலை. அவன் பின்னின்று இயக்கினான்.
அதனால் என் துயர்களுக்கு உன்னை முழுவதும் காரணமாக சொல்லவும் இல்லை. போ. எங்கு வேண்டுமானாலும் போ. உன்னை கருவியாக வைத்து கலி என்னை படுத்தினான். ராஜ்யத்தில் சிறு பங்கு தருகிறேன் உடன் பிறந்த கடமைக்காக. என் எதிரில் வராதே. அது போதும். புஷ்கரா, நீண்ட ஆயுளோடு நலமாக இரு. ‘ புஷ்கரன் செய்வதறியாது திகைத்தான். உண்மை தெரிந்தவுடன், தன் தவறும் தான் பேசிய பேச்சுக்களின் விபரீதமும் புரிந்தது. தமையன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.
கை கூப்பி வணங்கினான். பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்வாயாக. உன் நீதியும், நியமமும், சத்யத்தில் உன் நம்பிக்கையும் உன்னை காத்தன. நளன் அளித்த போர் வீரர்கள், செல்வங்களுடன், தன் குடும்பத்தினருடன் விலகிச் சென்றான். நளன் தன் மாளிகைக்குள் சென்றான். அங்கிருந்து தன் பிரஜைகளிடம் பேசினான்., அவர்களும் நளன் திரும்பி வந்ததில் மகிழ்ந்தனர். நூறு யாகங்கள் செய்து இந்திரனாக ஆனவன் போல் ஆகி விட்டாய். உன்னைக் கண்டு மகிழ்கிறோம்.
நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று, தன் வரவைச் சொல்லி, தேவையான வசதிகளையோ, அவர்கள் வேண்டியவைகளையோ செய்து கொடுத்து விட்டு நளன் குண்டின புரம் சென்றான். தமயந்தியின் தகப்பனார், தமயந்தியையும், குழந்தைகளையும் அவனிடம் ஒப்படைத்து, நிறைவான மனதுடன் ஆசிர்வதித்து அனுப்பினார். தன் மகளின் பொறுமையிலும், அந்த அளவு பெரிய துயரிலும், தன்னை சமாளித்துக் கொண்டு தன் உரிமையை நிலை நாட்டிக் கொண்டாள் என்று பெருமையே அடைந்தார்.
அதன் பின் நளன் ஜம்பு த்வீபத்தின் பெருமை மிக்க அரசர்களுள் ஒருவனாக ஆனான். அவன் புகழ் உலகெங்கும் பரவியது. பல யாகங்கள் செய்வித்தான்., அதனுடன் பல தான தர்மங்கள் செய்தான். நாட்டில் ஒவ்வொருவரும் நன்மை பெறும்படி ஆண்டான்.
இந்த கதையை யுதிஷ்டிருக்குச் சொன்ன ரிஷி, அவனுக்கு சமாதானம் வரும் படி ஆறுதல் சொன்னார். உனக்கு சகோதரர்கள் பலசாலிகள், வீரர்கள், இந்த துன்பத்தை கடந்து வந்து விடுவீர்கள். தைரியத்தை இழக்காதே. தனி மனிதனாக நளன் போராடி இழந்ததை திரும்பப் பெற்ற செய்தி உனக்கும் பாடமாக இருக்கட்டும். உனக்கு ஸ்ரீ க்ருஷ்ணனின் அருகாமையும் நல்ல பலமும், எதுவானால் என்ன, வருவதை எதிர் கொள்ள மனதில் திடம் இருந்தால், செய்வதில் ஊக்கமும் வரும்., திறமையும் கூடும். கவலை படாதே. அந்தணர்கள் ஓதும் வேதமும், உன் நலம் விரும்பிகளான பிரஜைகளின் வேண்டுதல்களும் உனக்கு நன்மையை செய்யட்டும்.
கார்கோடகன், தமயந்தி, நளன், ருதுபர்ண இவர்கள் பெயரை சொன்னாலே கலி அருகில் வரமாட்டான் என்று பலன் சொல்லி முடிக்கிறார்.
யுதிஷ்டிர், ப்ருஹதஸ்வா என்ற அந்த ரிஷியிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தான். அறிவிற் சிறந்த ரிஷியே, நளனுக்கு ருது பர்ணன் கற்றுக் கொடுத்த அக்ஷ வித்தை- கணிதம், ஸூதாட்டத்தின் பல வழி முறைகள், இவைகளை எனக்கும் அருள வேண்டும் என்றான். அவரும் சிரித்துக் கொண்டே அந்த கலைகளை கற்பித்து விட்டு தன் வழி சென்றார்.
(முற்றும்)
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
