மேற்காணும் தலைப்பிலமைந்த வோர்ட்ஸ்வொர்த்தின் ஆங்கிலக் கவிதை ஒன்று, வெகு அழகானது; சிந்திக்கவைப்பது, சிந்தையில் பல எண்ணங்களத் தோற்றுவிப்பது. கவிதையாளன், உளவியல் சிந்தனையாளன், தாய்தந்தையர் எனப் பலரின் நோக்கிலும் இதனை ஆராயப் புகலாம். ‘குழந்தையே மனிதனின் தந்தை’ எனும் சொற்றொடரை உளவியல் ஆய்வுக்குரிய சிந்தனையாக்கிவிட்ட இந்தக் கவிதையைப் படித்தால் உள்ளத்தின் ஆழத்தில் பதிந்து அமர்ந்து கொள்ளும் தன்மையானது. அப்படி என்னதான் சொல்கிறார் வோர்ட்ஸ்வொர்த் இந்தக் கவிதையில்?
எனது உள்ளம் துள்ளுகின்றது:
எனது உள்ளம் துள்ளுகின்றது நான்
வானவில்லை ஆகாயத்தில் காணும்பொழுது;
எனது வாழ்க்கை தொடங்கியபோதும் அவ்விதமே இருந்தது;
நான் இப்போது வளர்ந்தபோதும் அப்படியே உள்ளது;
என் முதுமையிலும் அது அவ்வண்ணமே இருக்கும்;
இல்லாவிடின் நான் இறக்க வேண்டும்!
குழந்தையே மனிதனின் தந்தை;
நானும் எனது நாட்கள் ஒன்றோடொன்று புனிதமான
அன்பில் பிணைந்திருக்க வேண்டுமென விழைகிறேன்.
இதனை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் குழந்தையாயிருந்தபோது வானவில்லைக்கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொண்ட அந்த உணர்வு, பெரியவனான போதும், முதுமையிலும் இருக்கவேண்டும் எனக் கவிஞன் விழைவதாகக் கூறுகிறது. இளமையின் அதிசயமும் ஆச்சரியமும் கலந்த உணர்வுகள் மாறாதிருக்க வேண்டும் எனும் உள்ளத்து விழைவைச் சித்தரிக்கும் கவிதையாகவே மட்டும் இதனைக் காண்கிறோம்.
இந்தச் சொற்றொடரைக்கொண்டு இலக்கியத்திலும் உளவியலிலும் பலப்பல ஆராய்ச்சிகள் நடந்துள்ளன என்றால் வியப்பாக இல்லை?
“இளமையில் கல்,” என்றார் ஔவையார். சிறுவயதில் கற்ற எதுவுமே மறக்காது. மேலும் அந்த நல்ல / கெட்ட பழக்கங்கள் நம்மைவிட்டு எளிதில் விலகவும் செய்யாது. அது வளரும்போதும், வளர்ந்தபின்னும், முதுமையிலும் நம்மோடு இணைபிரியாதிருக்கும். இதுவே இளமையில் நாம் கடைப்பிடிப்பன, நாம் வளர்ந்தபின்னும் நம்முடன் இருக்கும் பழக்க வழக்கங்கள், செயல்பாடுகள் எனும் கூற்றின் அடிப்படை எனலாம். ஒருவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதனை அவருடைய சிறு வயது / குழந்தைப் பருவச் செயல்களே நிர்ணயிக்கின்றன என்பது உளவியல் தத்துவம். இதனால்தான் குழந்தைப் பருவத்தின் அதிசயமும் ஆச்சரியமும் எப்போதும் தன்னோடு இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் தான் (ஒருவன்) இறந்துவிடுவதே மேல் என்கிறார் வோர்ட்ஸ்வொர்த். இந்தச் சொற்றொடரே மானிட சமுதாயத்தில் முக்கியமான கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றது.
அறிவியல் ரீதியாக இதனைக் காணப்புகுந்தால் இருவிதங்களில் இவற்றைப் பிரிக்கலாம்; ஒன்று, வளர்ப்பில், இன்னொன்று, நமது உடலின் மூலக்கூறுகளில் (Genes); இரட்டையர்களாகப் பிறக்கும் குழந்தைகளைப் பிரித்து வளர்க்கும்போதும் சில செயல்கள் ஒத்தே இருப்பது அவர்களின் மூலக்கூறுகளால் எனக் கண்டறிந்துள்ளனர். இருப்பினும் வளரும் சூழல் (environment) ஒரு குழந்தை எதிர்காலத்தில் எவ்வாறு இருப்பான் என்பதனை நிர்ணயிப்பதில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றது.
இதைத்தான் ஃப்ராய்ட் (Freud) எனும் மனோதத்துவ ஆராய்ச்சி நிபுணரும் கூறுகிறார்: வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளே, அழியாத பிம்பங்களை மூளையில் உண்டுபண்ணுகின்றன என்கிறார். பெரியவர்களின் செயல்பாடுகள் அவர்கள் சிறுவயதில் எதிர்கொண்ட அனுபவங்களிலிருந்தே பிறக்கின்றன; ஆகவே (கடந்தகால) குழந்தையே (எதிர்கால) மனிதனைப் பாதிக்கிறான் என்பது அவர் கூற்று.
வோர்ட்ஸ்வொர்த்தின் கூற்றின்படி, இளவயதில் நாம் ரசித்தவை நமக்கு வயதானாலும் நமது ரசனையை விட்டு மறைவதில்லை. உதாரணமாக, வானவில்லின் அழகை இன்றும் தாத்தா பாட்டியாகி விட்டாலும் நம் பேரக்குழந்தைகளுடன் சேர்ந்து ரசித்து மகிழ்கிறோம். அழகான மலரும் மணமும் நமது ரசனைக்குத் தப்புவதில்லை. இசையும் கூட அப்படியே! இவற்றையெல்லாம் ரசிக்க முடியாவிட்டால் இருந்து என்ன பிரயோசனம் என்ற கேள்வியையும் எழுப்புகிறார் வோர்ட்ஸ்வொர்த். முதிய பிராயத்தில் ரசனை என்பது குழந்தைப்பருவத்தில் இருந்ததனைவிட உயர்வாக, பரந்ததொரு பரிமாணத்தை உடையதாக இருக்கும் அல்லவா? அதுவே மனமுதிர்ச்சியின், உள வளர்ச்சியின் அடையாளம். ஒன்றை இழப்பதல்ல, அதனை இன்னும் சீராகப் பல்வேறு கோணங்களில் ரசிப்பதே, பார்ப்பதே முதிர்ச்சியின் அடையாளம்.
இதனால்தான் குழந்தைப்பருவத்தில் பார்ப்பதும், கேட்பதும், கற்றுக் கொள்வதும் நாம் வளர்ந்தபின்பு மற்ற உறவுகளையும், தொடர்புகளையும், உலகசம்பந்தமான பார்வைகளையும் பாதிக்கின்றது. இதுவே ஒருவருடைய குணாதிசயங்களை, செய்கைகளை வரையறுக்கின்றது.
ஆபிரஹாம் லிங்கனைப் பற்றிக் கூறும்போது அவருடைய சிறுவயது வறுமையும் துயரங்களும் மற்றோரின் துயரங்களை மதிக்கும், உணரும் ஆற்றலை, உணர்வுகளை அவரில் விதைத்தன எனலாம். இதுவே அவர் அமெரிக்க ஜனாதிபதியானதும் அடிமைகளின் அவலவாழ்வை ஒழிக்க முன்னின்று பாடுபட்டதற்கு உதவின.
காந்திஜியின் சிறுவயது அனுபவங்கள், எவ்வாறு அவர் தாழ்த்தப்பட்ட சாதியினருக்காக வாதாடி, அவர்களைக் கோயிலுள் அனுமதிக்கச் செய்யும்வரை சென்றார் எனக் காண்பிக்கிறது.
இதனை உணர்ந்து செயல்பட்டால், நமது சிறுவயதில் கற்றவைகளின் துணையால், எதிர்காலத்தை, சிறப்பாக, நிறைவாக அமைத்துக்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தாகூரின் கவிதைகள் பலவும்கூட இத்துடன் தொடர்பான அருமையான கருத்துக்களின் பிரதிபலிப்பைத் தம்முள் அடக்கிக்கொண்டு பொலிகின்றன. பிறைநிலா (Crescent Moon) எனும் குழந்தைகள் பற்றிய கவிதைத்தொகுப்பு மிகுதியாக இப்படிப்பட்ட கவிதைகளைக் கொண்டுள்ளது. சிலவற்றை நாம் முன்பு கண்டிருக்கிறோம். இன்னும் ஒன்றைக் காணலாமா?
தாகூரைப் போன்ற ஒரு கவிஞர் கவிதைகளை இயற்றும்போது இவ்வாறான உளவியல் கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்க்கக் கருதி முயற்சிசெய்து இக்கவிதைகளை இயற்றவில்லை. அவர்களது ஆழ்மனத்து எண்ணப்பதிவுகளும் பிள்ளைப்பருவத்து அனுபவங்களும் சேர்ந்ததன் வெளிப்பாடாகவே இக்கவிதைகள் உருப்பெற்றன எனக் கருதலாம். இவற்றினை ஆய்வு செய்த பலரும் இக்கருத்தையே பிரதிபலிக்கின்றனர்.
தொடக்கம் (Beginning)
வங்கமொழி மூலம் / ஆங்கிலம் : ரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம் : மீனாக்ஷி பாலகணேஷ்
“நான் எங்கிருந்து வந்தேன், நீ எங்கே என்னைக் கண்டெடுத்தாய்?” குழந்தை தன் தாயைக் கேட்டது.
பாதி அழுகையினூடும், பாதி சிரிப்பினோடும், அக்குழந்தையை மார்போடு அணைத்தபடி அவள் மறுமொழி சொன்னாள்: “என் கண்ணே, நீ எனது இதயத்தில் அதன் விருப்பமாக ஒளிந்து கொண்டிருந்தாய்.
எனது குழந்தைப்பருவத்தில் என்னுடைய சிறுபிள்ளை விளையாட்டுகளில், என் பொம்மைகளில் நீ இருந்தாய்; களிமண்ணால் எனது கடவுளின் வடிவை ஒவ்வொரு காலையிலும் செய்தபோது, உன்னை நான் செய்தேன்; அழித்தேன்.
நமது இல்லத்தின் வழிபடும் கடவுளுடன் நீ இருந்தாய், அவருக்கான பூஜையில் நான் உன்னையும் வழிபட்டேன்.
எனது எல்லா நம்பிக்கைகளிலும், எனது அன்பிலும், என் வாழ்விலும், என் தாயின் வாழ்விலும் நீ வாழ்ந்திருந்தாய்.
நமது இல்லத்தை ஆளும் இறப்பற்ற ஆத்மாவின் மடியில் நீ காலகாலங்களாக சீராட்டப் பட்டிருக்கிறாய்.
பெண்ணாக எனது இதயம் அதன் இதழ்களை விரித்தபோது, நீ அதில் கமழும் நறுமணமாகத் திகழ்ந்தாய்.
சூரிய உதயத்திற்கு முன்பான ஆகாயத்தின் ஒளிவீச்சு போல, உனது மிருதுவான மென்மை எனது இளமையான கைகால்களில் மலர்ந்து விரிந்தது.
சுவர்க்கத்தின் முதல் கண்ணே, காலை ஒளியில் இருமுறை பிறப்பவனே, நீ உலக வாழ்வின் புனலில் மிதந்து வந்தாய், கடைசியில் எனது இதயத்தில் சேர்க்கப்பட்டாய்.
நான் உனது முகத்தை உற்று நோக்கும்போது, மாயை என்னை ஆட்கொள்கிறது; எல்லாருக்கும் சொந்தமான நீ என்னுடையதாகி விட்டாய்.
நான் உன்னை இழந்து விடுவேனோ என்று பயந்தபடி உன்னை எனது மார்போடு இறுக அணைத்துக் கொள்கிறேன். என்ன மாயம் இது உலகின் பெரும் பொக்கிஷத்தைப் பறித்தெடுத்து எனது மெல்லிய கைகளில் சேர்த்திருக்கிறது?”
எப்படிப்பட்டதொரு ஆழமான கருத்துச் செறிவு (profound) இது? அடிமனதை உலுக்கிவிடுகிறது. இதன் பின்புலத்தில் குழந்தை, குழந்தைத்தன்மை என்பது நமது வாழ்க்கையில், உள்ளங்களில், ஆன்மாவில், சிந்தனையில், செயல்களில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தும் ஒரு பொருளாக உள்ளது என்பது பெரும் வியப்பைத்தான் தருகிறது.

தாகூரின் ‘சிசு போலாநாத்’ (Shishu Bholanath) எனும் தொகுப்பும் இப்படிப்பட்டதே. இது குழந்தைகளின் கற்பனை செறிந்த, தைரியம் மிகுந்த, கள்ளமேயில்லாத உலகைக் கண்முன் விரிக்கின்றது. குழந்தைமையின் இந்தக் குணாதியங்களுடன் உலகை, இயற்கையை, தெய்வத்தை, எல்லையற்ற சுதந்திரத்தை, அதன் செயல்பாடுகளை விவரிக்கிறது. குழந்தைகளின் உலகம் சின்னச்சின்ன விஷயங்களில் (வானவில், தென்னைமரம், ஆற்றுமணல்) ஆர்வம் கொள்வது, தற்பெருமை இல்லாதது; தனது உலகைத் தானே சிருஷ்டித்துக் கொள்வது. இந்தக் கவிதையில் தாயின் அருகாமையை, அவளைத் தொடும் உணர்வை, அவள் முகத்தை ஆவலாக எதிர்பார்க்கிறது குழந்தை. பெரியவர்களின் சிந்தனைகளால் பாதிக்கப்படாத குழந்தையுள்ளம் மிகவும் இனிமையானது.
ஒரு கவிதையைப் பார்ப்போம்.
என் தாயை எனக்கு நினைவில்லை
என் தாயை எனக்கு நினைவில்லை.
எனது தொட்டிலை ஆட்டியவண்ணம்
அவள் பாடும் ஏதோ ஒரு பாடலின் இசை,
சில பொழுதுகளில் மட்டும் எனது விளையாட்டின் இடையே
ராகமென எனது விளையாட்டுப் பொருள்களினூடே இழையும்.
என் தாயை எனக்கு நினைவில்லை.
ஆனால் இலையுதிர்காலத்து காலைப்பொழுதுகளில்
ஷியுலி மலர்களின் நறுமணம் காற்றில் மிதந்து வரும்போது,
காலை நேரத்துக் கோவில் பூசையின் வாசம்,
என் தாயின் வாசமாக என்னிடம் வருகின்றது.
என் தாயை எனக்கு நினைவில்லை.
எனது படுக்கையறை ஜன்னலின் வழியாக எனது கண்களை
தொலைதூரத்து நீலவானில் செலுத்தும்போது
என் முகத்தின்மீது படர்ந்திருக்கும் என் தாயின் நிலைத்த பார்வை
வானம் முழுமையும் படர்ந்திருப்பதனை உணர்கிறேன்.
தாயின் இருப்பை ஒரு அழகான ராகமாக, இனிய நறுமணமாக, அரவணைக்கும், காக்கும் பார்வையாக உணரும் குழந்தையின் எண்ணச் சிதறல்கள் இவை! சிறு வயதில் தாயை இழந்த குழந்தையின் எண்ண ஓட்டங்களை ஆழமாகப் பதிவு செய்து வைத்துள்ள பாடல் இது. இந்தக் குழந்தைகள் பொறுப்பானவர்களாகவும், தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் திறமையுடையவர்களாகவும் வளர்கின்றனர். ஆயினும் இழந்துவிட்ட தாயின் அரவணைப்பு இதயத்தோடு இணைந்துவிட்ட, தசையும் குருதியுமாகிவிட்ட ஒன்றாகி விடுகிறது. அது மட்டுமல்ல, இச்சிறு குழந்தைகள் சந்தர்ப்ப சூழ்நிலையினால் அவர்கள் போக்கில் அல்லாமல் வெகு சீக்கிரமே வளர்ந்து விடச் செய்யும் சூழ்நிலைகள் இவை என அழுத்தந் திருத்தமாக விளக்குகிறது இக்கவிதை!
இக்குழந்தைகள் உலகை நோக்குவதே அன்னை வடிவமாகத்தானோ என்னவோ!
தாகூர் என்னவொரு மாயம் செய்துள்ளார் இக்கவிதையில்: கள்ளமற்ற குழந்தையின் வியப்பினையும், ஆழ்ந்ததொரு தத்துவத்தையும் ஒன்றாக வடித்துள்ளார். எல்லையற்ற ஆகாயமும், காற்றினால் உணர்ந்துகொள்ளும் உள்ளத்து எண்ணங்களும் ஆழ்ந்த தத்துவங்களாகக் கவிதையில் பரிணமித்துள்ளன.
உளவியல் மூலமாக இவற்றை ஆய்ந்தோமானால் ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும் குழந்தையைக் காணலாம்: கள்ளமற்ற தன்மை; பயமற்ற தன்மை (இங்கு என்னவோ எனக்கு திடீரென்று ஆலிவர் ட்விஸ்டின் கதை நினைவுக்கு வருகிறது: கள்ளமின்றி, தைரியமாக, குழந்தை மனதோடு, “எனக்கு இன்னும் கொஞ்சம் கஞ்சி வேண்டும்,” எனக்கேட்டான் அல்லவா அக்குழந்தைச் சிறுவன்!)
வளர்ந்தபின்னும் இந்தத் தன்மைகளை நாம் கொண்டிருக்க வேண்டும் என்னும் செய்திகளைக் கூறுகிறது. ஆனால் உலகம் நம்மை அப்படியே இருக்க விட்டு விடுகிறதா?
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே – அவர்
நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே,” என்று பாடினார் கவிஞர் புலமைப்பித்தன். தாயின் வளர்ப்பும் சிறு வயது அனுபவம் தானே! இங்கு நாம் மதாலஸா எனும் புராணகாலத் தாயின், அவள் தன் குழந்தைகளுக்குப் பாடிய தாலாட்டின் அற்புதமான போதனைகளைப் பார்க்க வேண்டும் (சொல்வனம், 2024) கண்கள் பனித்துவிடும்.
இன்றும்கூட அன்னை என் சிறுவயதில் எனக்குத் தலைவாரிப் பின்னிவிட்ட நினைவுகளும் அவளுடைய கை ஸ்பரிசமும் என் நினைவுக்கு வந்து என்னை நெகிழச் செய்கின்றன. நான் செய்யும் பல செயல்களும் எனது எண்ண ஓட்டங்களும் அவரைப் பல பொழுதுகளில் நினைவு படுத்துகின்றன.
~oOo~
பிள்ளைத்தமிழ் என்னும் தமிழ்மொழியின் அற்புதமானதோர் சிற்றிலக்கியத்தின் பாடல்களை ஆழ்ந்து சிந்தித்தால் இத்தகையதொரு உளவியல் / அறிவியல் கருத்தை மறைமுகமாக எடுத்துரைக்கிறது என எண்ணத் தோன்றுகிறது. இலக்கணப்படி இதனை சாமானியக் குழந்தைகள் மீது பாடமாட்டார்கள்; மேலும் குழந்தை (தெய்வமோ, அரசனோ) வளர்ந்து பெரியவனான (பெரியவளான) நிலையில் அவர்களைப் போற்றும்விதத்தில் அவர்களது வீரம், ஆற்றல், கொடை, அருள், திருவிளையாடல்கள் (தெய்வங்களானால்) ஆகியவற்றை பிள்ளைப்பருவச் செய்கைகளுடனும், வளர்ச்சியுடனும் பொருத்தி, அழகான கற்பிதங்களைச் செய்து உயர்வுநவிற்சியாகப் பாடுவன பிள்ளைத்தமிழ் செய்யுள்கள். மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடலைக் காண்போம். பிள்ளைத்தமிழ் இலக்கணத்தை இங்கு விளக்கப் போவதில்லை. வேண்டுவோர் திரு. நாஞ்சில்நாடன் அவர்களின் ‘சிற்றிலக்கியச் செல்வங்கள்’ (சொல்வனம்,2011) எனும் தொடரைப் படித்து அறிந்துகொள்ளலாம்.
இந்தப்பாடலின் பொழிப்புரையைத் தந்து பாடலையும் அதன் நயத்திற்காகவும் கருத்திற்காகவும் முழுமையாகத் தருகிறேன்.
சூழ்ந்திருக்கின்ற நெடிய சக்கரவாள மலையாகிய சுவருக்குப் பொருத்தமாக நான்கு சுவர்களாக எட்டு மலைகளைக் கால்களாக நிறுத்திவைத்தாய்; மேருமலையாகிய தூணை நடுவில் நிலைபெற நிறுத்தினாய்; ஆகாயமாகிய உச்சியை மூடி, சூரியன் சந்திரன் ஆகிய இரண்டினையும் ஒளிவிளக்குகளாக அமைத்தாய்; எப்போதும் மோதி மோதி ஊழி வெள்ளத்தால் கழுவப்படுகின்ற புவனங்களாகிய பழைய பாத்திரங்களை வரிசையாக அடுக்கிவைத்தும், புதிய உணவாகிய இனிய அமுதத்தையும் சமைத்தாய்; உலகுக்கே தாயாகிய நீ இவ்வண்ணம் பலமுறைகள் செய்து வருகிறாய்; ஒரு முற்ற வெளியாகிய சிதம்பரத்தில் திரிகின்ற ஊமத்தம்பூவை அணிந்துள்ள பித்தனாகிய சிவபெருமான் அவைகளை அடிக்கடி அழித்துவிடுகிறான்; போதாக்குறைக்கு அவன் உனது முன்னிலையில் நின்று உன்மத்த நிலையில் கூத்தாடவும் செய்கிறான்; நீயோ அவனை இதற்காக வெறுக்காமல் நாள்தோறும் அவற்றை மீண்டும் வரிசையாக அமைத்துப் பெரிய பழைய அண்டத்தை (உலக வீட்டை) மூடுகின்றதாகிய விளையாட்டை விளையாடுகின்றாய். இவ்வாறு சிறுவீடு கட்டி விளையாடும் இளமையுடன் கூடிய பச்சைப் பெண்பிள்ளையே! செங்கீரை ஆடியருள், தென்னனாகிய பாண்டியனுக்கும் அம்பொன்மலை மன்னனான இமவானுக்கும் ஒரு மகளானவளே! செங்கீரைஆடியருள்.
சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசையஎட்டுச்
சுவர்க்கால் நிறுத்திமேருத்
தூணொன்று நடுநட்டு வெளிமுகடுமூடியிரு
சுடர்விளக் கிட்டுமுற்ற
எற்றுபுன லிற்கழுவு புவனப்பழங்கலம்
எடுத்தடுக் கிப்புதுக்கூழ்
இன்னமுத முஞ்சமைத் தன்னைநீபன்முறை
இழைத்திட அழித்தழித்தோர்
முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
முன்னின்று தொந்த மிடவும்
முனியாது வைகலும் எடுத்தடுக்கிப்பெரிய
மூதண்ட கூடமூடும்
சிற்றில்விளை யாடுமொருபச்சிளம் பெண்பிள்ளை
செங்கீரை ஆடியருளே
தென்னற்கும் அம்பொன்மலைமன்னற்கும் ஒருசெல்வி
செங்கீரை ஆடியருளே.
(மீ. பி. த. குமரகுருபரனார்; செங்கீரைப்பருவம். பாடல் எண் 4.)
அருமையான கருத்துச் செறிவுகொண்ட பாடல். ஒரு சிறுபெண்குழந்தை செப்புகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாக வீடு கட்டுகிறது. லெகோ (Lego blocks) பிளாக்ஸ் என வைத்துக் கொள்ளலாம். அழகாகக் கட்டிமுடித்து, சமையல் செய்கிறது. (குழந்தையின் எண்ணப்படி) அவை விதவிதமான ருசிகரமான உணவுவகைகள். இப்போது ஒரு விஷமக்காரச் சிறுவன் ஓடோடி வருகிறான். இவளுடைய வீட்டைப் பார்த்து காலால் எற்றி உதைத்து உடைக்கிறான். பிறகு தன்னுடைய செயலின் பெருமிதத்தில் குதித்து ஆடிப் பெண்குழந்தையைச் சீண்டுகிறான். அவளுக்கோ மகாபொறுமை. சலிக்காமல், கோபம் கொள்ளாமல், அவன் அங்கிருந்து நீங்கிப்போகும்வரை காத்திருந்து, பிறகு அவற்றை எடுத்துக் கழுவி, அடுக்கி, வீட்டினைக் கட்டி, திரும்பவும் சமையல் வேலைகளைச் செய்கிறாள். இந்தச் செய்கைகள் விடாமல் ஒரு சக்கரவட்டமாகத் தொடர்கின்றன.
இந்தக்குழந்தை சிறுவயதிலிருந்தே இச்செய்கைகளை எதிர்கொண்டு அவற்றை எவ்வாறு கையாளவேண்டும் என்று தனக்கென ஒரு வழியை ஏற்படுத்திக் கொண்டவள். ஆகவே, அந்தப் பொறுமையும், விடாமுயற்சியும் இடைவிடாமல் தொடர்கின்றன. சிறுவனோ, விஷமங்கள் செய்தே வளர்ந்தவன். ஆகவே மற்றவர்களது பொருள்களை நாசம் செய்வதே அவன் குறிக்கோள். பொருள் இவ்வளவுதான். இதற்கு சமய, ஆன்மீக விளக்கங்களைப் பொருத்தியோ பொருத்தாமலோ பொருள்கொள்வதை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்.
சிறுவயதில் செய்யும் செயல்கள், கற்கும் குணங்கள் நம்மோடு தொடர்ந்து வரும் என்பதற்கு இலக்கியங்களிலும் எடுத்துக்காட்டுகள் உண்டு என்பதற்காக இதைப் பகிர்ந்து கொண்டேன்.
இதற்கு மரபணுக்கள் முக்கியம் என்றாலும், குழந்தை வளரும் சூழ்நிலையும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கண்டோம்.
பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியம் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி எனும் கட்டமைப்புக்குள் அறிவியல் சார்ந்து அமைந்த இலக்கியம். வளர்ந்த ஆணையோ பெண்ணையோ அவர்களுடைய செய்கைகளை குழந்தைப் பருவத்திற்குப் பொருத்திப் பாடுவதனால் இது அத்தனை சிற்றிலக்கியங்களிலும் சிறந்து விளங்குகிறது.
ஆகவே ‘குழந்தையே மனிதனின் தகப்பன்’ எனும் சொற்றொடரை இன்னும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
