- ஜெய் ஜகந்நாத்!
- கல்வெட்டுகள்
- ஈரநிலம்
அந்தப் பாலம் பூரி நகரின் ஒரு சந்தடி மிகுந்தப் பகுதியில் இருக்கிறது. அதன் பெயர் அதாராநல்லா. ஆகாயத்தாமரைகள் படர்ந்து இருக்கும் மதுபூர் சிற்றோடையின் மேல், பதினெட்டு வளைவுகள் தாங்கி நிற்க, முதுகு சற்றே வளைந்து, சிவப்பு கற்களால் கட்டப்பட்டப் பாலம். புராணங்கள், மஹாபாரதக் காலத்தில் வாழ்ந்த மன்னன் இந்திரத்யும்னன் தான் அதை முதலில் கட்டினான் என்கின்றன. பிற்காலத்தில் கலிங்கத்தை ஆண்ட பல வம்சத்து மன்னர்கள் அதை சீர் செய்திருக்கின்றனர். இப்பொழுது இருக்கும் பாலம் பதினெட்டாம் நூற்றாண்டு மராட்டியர்களின் கைங்கரியம்.
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பாலத்தின் மீதிருந்து தான், வங்கத்தில் இருந்து வந்த சைதன்ய மகாபிரபு, பூரி ஜகந்நாதர் கோவில் கோபுரத்தை முதன்முறையாகக் கண்டு ‘கண்களி கூர நுண் துளி அரும்ப’ பரவசப்பட்டார் என்கின்றன கதைகள். ஆனால், இப்பொழுது அதற்கு வாய்ப்பில்லை. அலைபேசி டவர்களும், டீம்டீ முறுக்கு கம்பிகளின் விளம்பரப் பதாகைகளும், அழுக்கான கான்க்ரீட் கட்டிடங்களும் பாலத்தை சூழ்ந்திருக்கின்றன. ஆகவே, நம்மைப் போன்ற நவீன சுற்றுலா பயணிகளுக்கு பூரி ஜகந்நாதர் கோவிலின் கோபுரத்தின் முதல் தரிசனம் புவனேஸ்வரையும் பூரியையும் இணைக்கும் NH 316 நெடுஞ்சாலையிலிருந்து தான்.
போக்குவரத்து அதிகம் இல்லாத இந்தப் பாட்டையில் இருந்து நம் கண்களுக்கு முதலில் தென்படுவது கோபுரத்தின் உச்சியில் வீற்றிருக்கும் நீலச்சக்கரம். எட்டு வகையான உலோகங்களால் செய்யப்பட்ட இந்தச் சக்கரம், தொடுவானை நோக்கி சரிந்து கொண்டிருக்கும் கதிரவன் ஒளி பட்டு, பொன்னிறத்தில் ஒளிர்ந்து, கலங்கரை விளக்கம் போல் நம்மை அழைக்கிறது. இது வெறும் உருவகம் மட்டும் அல்ல. பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவின் கிழக்குக் கடற்கரை ஒட்டிய வங்கக் கடல் பயணங்களை வழி நடத்துவதில் பூரி ஜகந்நாதர் ஆலய கோபுரம் ஒரு முக்கிய அடையாளாச் சின்னமாக இருந்திருக்கிறது.
குன்றுகள், பெரும் மணற் குவியல்கள் ஏதுமின்றி சீராக இருக்கும் பூரியின் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் இந்தக் கோபுரம் முன் காலத்தில் கடலில் இருந்து மிகத் தெளிவாகத் தெரிந்ததாக பல ஐரோப்பிய மாலுமிகள் குறித்து வைத்திருக்கிறார்கள். நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோபுரம் முழுதும் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு வெண்மையாக ஒளிர்ந்தது. இப்பொழுது கோபுரத்தின் உச்சியில் சிமிழின் மூடி போல் இருக்கும் மஸ்தகம் என்றழைக்கப்படும் சிகரம் மட்டும் தான் வெள்ளையாக இருக்கிறது.
அடிக்கடி புயல்கள் கடைந்தெடுக்கும் இந்தக் கடல் பிரதேசத்தில் பெரும் வெள்ளைத் தூண் போல் கரையில் நின்றிருந்த இந்த ‘ஜகர்ணாட்’ (Jagarnaut) கோபுரம் அக்காலத்து மாலுமிகள் பலருக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் தான் தோன்றி இருக்கும். ‘வெள்ளைப் பகோடா’ (White Pagoda) என்றே இந்தக் கோபுரத்தை அவர்கள் பெயரிட்டு அழைத்தார்கள்.
ஐரோப்பியர்கள் இந்தியாவின் கிழக்குக் கடல் பகுதிகளில் உலா வருவதற்கு சில நூற்றாண்டுகள் முன்பே, அதாவது பதினோராம் நூற்றாண்டில், கங்க வம்சத்து மன்னன் அனந்தவர்மன் சோடகங்கன் இந்தக் கோபுரத்தை எழுப்பியதாக வரலாறு சொல்கிறது.
தெற்கில் கோதாவரி முதல் வடக்கே கங்கை நதி வரை விரிந்திருந்தது இவரின் ராஜ்யம். அனந்தவர்மன் அன்னையின் வழியில் சோழ வம்சத்தை சேர்ந்தவர். ராஜேந்திர சோழனின் பேத்தி தான் இவருடைய அன்னை. இந்த உறவினாலா அல்லது மற்றொரு சோழ மன்னனான குலோத்துங்கனிடம் போரில் தோற்று அவமானப்பட்டதாலா என்று தெரியாது, ஆனால் இவர் எழுப்பிய இந்த ஜகந்நாதரின் கோபுரம் சோழர்கள் எழுப்பிய தஞ்சை பிருஹதீஸ்வரர் விமானத்தின் உயரத்திற்கு ஒப்பானது; 215 அடி. இதுவும் ஒரு விதத்தில் பெரிய கோவில் தான்.
என் பெயர் மஹாபாத்ரா. நான் கோவிலை சேர்ந்தவன்’ என்று சொல்லி கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் அடையாள அட்டையைக் காண்பித்தார். அவரின் புகைப்படத்திற்கு அடியே ஒரிய எழுத்துக்கள் அட்டையின் பிளாஸ்டிக் மடிப்புகளில் சிக்கி இன்னும் வளைந்து இருந்தன.
‘கோவிலுக்கு உள்ள மொபைல் அனுமதி இல்ல. இங்க வச்சுடுங்க’ என்றார். சிறு துணிப் பையில் சுற்றி, முன்காலத்தில் பயணத்திற்கு எடுத்து போகும் பளபளக்கும் தகரப் பெட்டி ஒன்றில் வைத்து பூட்டி ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டார் கடைக்காரர்.
‘வாங்க, டைம் ஆயிடுச்சு’ என்று சொல்லி கையைப் பிடித்து விடு விடுவென்று இழுத்து சென்றார்.
‘சிகரெட், மாவா எதுவும் உள்ள எடுத்துக்கிட்டு போகக் கூடாது’ மஹாபாத்ராவின் வெற்றிலைக் காவிப் பற்களின் கோணல் சிரிப்பு அப்படியெல்லாம் உங்களிடம் ஒன்றும் இருக்காதென்று தெரியும், இருந்தாலும்…
‘என்னிடம் இல்லை’ என்றேன். பாதுகாப்பு சோதனை செய்யும் இடத்தில் ஒரு கூடை நிறைய பல வண்ணங்களில் புகையிலை மற்றும் லாகிரி வஸ்து பொட்டலங்கள் நிறைந்திருந்தன. அனைத்தும் கோவிலுக்கு உள்ளே செல்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை.
கோபுரவாயிலின் இரு புறமும் சிங்கத்தின் சிற்பம் வடிக்கப்பட்ட சிம்ம துவாரம் என்று அழைக்கப்படும் கிழக்கு வாசல் வழியே ஜகந்நாதரின் கோவிலின் உள்ளே நுழைந்தோம்.
நீரில் நனைந்தக் கருந் தரை, மெல்லிய திரை சீலை போல் காற்றில் ஆடும் புகை, அதில் கப்பல்கள் போல் மிதக்கும் வெளிர் சிவப்பு நிற மண்டபங்கள், அவற்றின் தூண்களில், பொருள் விளங்காக் கனவுத் துண்டுகள் போல், புகை மறைத்த சிற்பங்கள்; தலம் தொன்மையானது என்று மனதில் எங்கோ மின்னல் வெட்டியது. ஆனால், சில கணங்களுக்குள்ளாகவே இரும்பு தடுப்புகளும், குழந்தைகளின் குரலும், பெரியவர்களின் மிரட்டல்களும், ஒரிய மொழி பதாகைகளும் நம்மை இருபத்தோராம் நூற்றாண்டிற்கு இழுத்து வந்துவிட்டன.

ஜகந்நாதர் கொலுவிருக்கும் சந்நிதி மேல் தான் பிரதான கோபுரம் அமைந்துள்ளது. கலிங்கத்து கட்டடப்பாணியில் இந்தக் கோபுரத்தின் அமைப்பு ரேகா த்யூலா என்று அறியப்படுகிறது. நீண்ட வளைகோடுளால் உள்ளடக்கப்பட்ட விமானம் என்று இதை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். தூரத்தில் இருந்து பெரும் கல் தூண் போல் தெரிந்த கோபுரம் அருகாமையில் அடுக்குகளும், வளைவுகளும், சிற்பங்களும் கொண்ட தேர் போல் உயர்ந்து நிற்கிறது. கோபுரத்தின் உயர் அடுக்குகளில் சிறு பரண்களிலிருந்து சிம்மங்களும், கருட சிற்பங்களும் நம்மை நோட்டம் விடுகின்றன.
கோபுரத்திற்கு முன்னால் வெள்ளைப் படிக்கட்டுகளால் ஆன பிரமிட் வடிவ விதானங்களோடு மக்கள் நிற்க ஜக்மோகன மண்டபம், நாட்டிய மண்டபம், நிவேதனங்களை படைக்க போக் மண்டபம் ஆகியவை ஒன்றோடொன்று ஒட்டியிருந்தன.
துடுப்புப் படகில் மிதந்து போகும் கலிங்கத்து மன்னர், அவரை மகிழ்விக்க நாட்டியமாடும் தேவதாசிகள், கிருஷ்ணர், நடனமாடும் சிவன் என்று கலிங்க சிற்பக்கலையின் எழிலை வெளிப்படுத்தும் பல சிற்பங்கள் இந்த மண்டபங்களின் உள்ளே உண்டு என்று கேள்வி. ஆனால், மஹாபத்ராவின் இலக்கு இவையெல்லாம் அல்ல.
‘தரிசனம் டைம் ஆயிடிச்சு. சீக்கிரம் வாங்க கூட்டம் வந்துரும்’ என்று சட்டென்று வேகமெடுக்கும் என்ஜின் ரயில் பெட்டிகளை ஒரு குலுக்கலோடு இழுப்பதைப் போல் இழுத்துக் கொண்டு சென்றார். இரும்புக் கம்பித் தடுப்புகளை நகர்த்தி, ஏதோ ஒரு சிறு வாசல் வழியே சந்நிதியின் முன்னே உள்ள மண்டபத்திற்குள் நுழைந்து ‘எதுவும் கொடுக்க வேண்டாம், எதுவும் வாங்கவும் வேண்டாம்’ என்று ரகசியமாகக் காதில் கிசு கிசுத்து விட்டு வேறொரு வாசல் வழியாக விரைந்து சென்று விட்டார் மஹாபாத்ரா.
சந்நிதி முன் இருந்த கூட்டம் சிறு குளத்தில் எழும் அலைகள் போல் அசைந்து கொண்டிருந்தது. எந்த விதமான சுய பிரயத்தனம் இல்லாமலேயே நாங்கள் அந்த அலையில் நகர்த்தி செல்லப்பட்டோம். தெலுங்கு, ஒரியா, ஹிந்தி என்று பல மொழிகளில் குரல்கள் அந்த மண்டபத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இந்த மனித அலைகள் தழுவி செல்லும் சிறு தீவுகள் போல் ஆங்காங்கே சிலர் நின்று கொண்டு ஸ்படிக மாலை, விக்கிரகங்கள் போன்றவற்றை வைத்த தட்டுகளை நீட்டிய வண்ணம் இருந்தனர். மற்றொரு கையில் இருந்த தட்டில் ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்தன. மாலைகளெல்லாம் விற்பனைக்கா என்ற கேள்வி எழு முன் கூட்டம் எங்களை நகர்த்தியது. வாயிலின் இரு புறமும் இருந்த திண்ணைகளில் கையில் சிறு கழியுடன் சிலர் கூட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்தனர். யார் இவர்கள் என்று யோசிக்கும் முன்னரே தாழ்வாரம் போல் இருந்த ஒரு பகுதிக்குள் தள்ளப்பட்டோம்.
எங்களுக்கு முன்னே சுமார் முப்பது அடி தூரத்தில் கர்பக்கிருகத்தின் உள்ளே ரத்தின வேடி என்று அழைக்கப்படும் மேடையில் மூன்று விக்கிரகங்கள் மினுமினுக்கும் விளக்கொளியில் காட்சி கொடுத்தன. ஜகந்நாதருக்கும் அவரது சகோதருரமான பாலபத்ரருக்கும் இடையே அவர்களின் சகோதரியான சுபத்திரா.
விஷ்ணுவின் வடிவங்களிலேயே மிகப் பிரத்யேகமாகத் தோன்றுவது பூரி ஜகந்நாதரின் உருவம் தான். மரத்தில் செதுக்கப்பட்ட இந்த மூல மூர்த்திகள் வட்டமான கண்களும், இரு கிளைகள் போல் நீட்டி கொண்டிருக்கும் கைகள் மட்டுமே கொண்டவை. வேறு எந்த விதமான அங்க அடையாளங்களும் அவற்றில் இல்லை.
மன்னன் திருஷ்டத்யும்னனின் பொறுமையின்மையே இதற்கு காரணம் என்கின்றன தொன்மக் கதைகள். கனவு ஒன்று வழிகாட்ட, கடலில் மிதந்து வந்த வேப்ப மரம் ஒன்றை சிலையாய் வடித்து பிரதிட்டை செய்ய விரும்பினான் திருஷ்டத்யும்னன். அதை செய்ய தேவ சிற்பி விஸ்வகர்மா முன் வந்தார். சிலை செய்து முடிக்கும் வரை அதை யாரும் பார்க்கக் கூடாது என்ற நிபந்தனை ஒன்றையும் முன் வைத்தார். நாட்கள் உருண்டோட திருஷ்டத்யும்னன் பொறுமை இழந்தான். சிலை வடிக்கும் இடத்தின் கதவுகளை திறந்து உள்ளே சென்றான். விஸ்வகர்மா சிலை வடிப்பதை நிறுத்தி விட்டு மறைந்து விட்டார். முழுதும் செதுக்கப்படாத சிலைகளே மன்னனுக்கு எஞ்சின.
இது ஒரு புறம் இருக்க, மரக் கம்பங்களை நட்டு, அவற்றை தெய்வமாகப் பாவித்து, அந்தத் தெய்வங்களைச் சுற்றி ஒரு சிறு சந்நிதியை நிறுவி வழிபடுவது என்பது இந்தப் பிராந்தியத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தொல்குடிகளின் மரபு என்கின்றனர் சரித்திர ஆய்வாளர்கள். ஸ்தம்பேஷ்வரி (ஸ்தம்பம் – கம்பம்) காந்துணிதேவி என்று பல பெயர்கள் கொண்டுள்ள இந்த மூர்த்தங்கள் இன்றும் வழிபாட்டில் உள்ளன. இப்படி நெடுங்காலமாக திரண்டு வரும் நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு தான் பூரி ஜகந்நாதரின் அமைப்பு என்பது ஆய்வாளர்களின் பார்வை.
ஆனால், சந்நிதியில் இந்த வியாக்கியானங்கள் எதுவும் நம் மனதில் தோன்றுவதில்லை. ஜகந்நாதரின் பெரும் வட்டக் கண்கள் நம் அகத்தின் ஆழத்தை ஊடுருவி அங்கே புதைந்திருக்கும் எதையோ தட்டி எழுப்புவது போல் தோன்றுகிறது. இந்த அனுபவம் சில வினாடிகளுக்கு தான். சந்நிதிக்கு முன்னர் பெருக்கெடுத்து ஓடும் மனித நீரோடைகள் நம்மை புற உலகத்திற்கு நகர்த்தி, சந்நிதியிலிருந்து வெளியேற்றுகின்றன.
வெளியே பக்தர்களின் வரிசை மேலும் வளர்ந்திருந்தது. விநாயகர், சூரியன், நரசிம்மர் என்று கோவிலின் உள்ளே அமையப் பெற்றிருக்கும் பல சந்நிதிகளின் முன்னே வால் போல் கூட்டம் நீண்டு, வளைந்து பல திசைகளிலும் வியாபித்திருந்தது. இந்த மனிதத் திரளின் நடுவே ஊர்ந்து பிரகாரத்தின் ஒரு வாயில் வழியாக வெளியேறி ‘மஹாப்ரசாத்’ என்று அறியப்படும் நிவேதனம் விற்கப்படும் இடத்தை அடைந்தோம். கோவிலின் உள்ளே ரோஸாகர் என்னும் சமையலறையில் தினப்படி 56 வகையான பதார்த்தங்களை தயார் செய்து தெய்வங்களுக்கு படைக்கப்பட்டு பின்பு நிவேதனமாக இங்கு விற்கப்படுகிறது
தாழ்வாரம் போன்ற இடத்தில் சிறு முக்காலிகளில் பலர் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் முன்னே கிச்சிடி, தால், சாதம், சர்க்கரை அன்னம், கடுகு அரைத்து பல காய்களுடன் சேர்த்து செய்யப்பட்ட பேசரா என்ற கூட்டு என்று பல விதமான உணவு வகைகள் மண் பானைகளில் நிரம்பியிருந்ததன. நூறு ரூபாய்க்கு ஒரு பெரிய பாக்கு மட்டை தட்டில் அகப்பை நிறைய அள்ளி நிறைத்து கொடுக்கின்றனர். சர்க்கரை பாகில் முக்கிய கஜா போன்ற இனிப்பு வாயில் இட்டவுடன் கரைந்து விடுகின்றது. ஆனால், காரசாரமான சாம்பாருக்கு பழக்கப்பட்ட நாக்குகளுக்கு கிச்சடி, பேசரா போன்றவற்றின் சுவை சற்று ‘வித்தியாசமாகத்’ தான் இருக்கும். நல்ல பசி இருந்தால் தட்டு முழுவதையும் உண்டு விடலாம்.
ஏறக்குறைய ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் பல முக்கியமான இடங்கள் உள்ளன. சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படும் விமலா தேவி ஆலயம், கல்பவிருக்ஷம் என்று அறியப்படும் புராதான ஆலமரம், தங்க சிம்மாசனங்களும், நகைகளும், வெள்ளி ஆபரணங்களும் நிறைந்திருக்கும் ரகசிய பொக்கிஷ அறை (ரத்ன பண்டார்) என்று பலவும் உண்டு. ஆனால், இவற்றில் என்னை மிகவும் ஈர்த்தது கோவிலின் ஒரு மூலையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய நந்தவனம். இதன் பெயர் கோலி பைக்குண்டா. இங்கே மரங்களுக்கு நடுவே வற்றிய குளம் போல் உள்ள பகுதியில் மலர்கள் தூவப்பட்டிருந்தன. கோவிலின் பிற பகுதிகளில் போல் இல்லாமல் பெரும் அமைதி இங்கே சூழ்ந்திருந்தது. நந்தவனத்தை வலம் வருபவர்கள் கூட மெதுவாக, ஓசைப்படாமல் தான் நடந்தார்கள். இங்கே உறங்குபவைகளை தொந்தரவு செய்யக் கூடாது என்ற பாவனை அவர்கள் முகத்தில் குடி கொண்டிருப்பது போல் பட்டது. அது உண்மையாக கூட இருக்கலாம். ஏனென்றால் கோலி பைக்குண்டாவில் தான் கடவுள்களின் ‘பழைய உடல்கள்’ புதைக்கப்படுகின்றன.
கருவறையில் இருக்கும் ஜகந்நாதரின் மூர்த்தம் மரத்தால் ஆனதால் எட்டு அல்லது பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. புதிய உடல் தரித்தல் அல்லது நவகளேபரா (நவ – புதிய, களேபரா – உடல்) என்று அறியப்படும் இந்த முக்கிய சடங்கு காலங் காலமாக நடந்து வருகிறது. கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு இது நடந்தேறியது. இந்தச் சடங்கின் முதல் கட்டம் கடவுள் குடி கொள்ளவிருக்கும் புதிய உடலை தேடிச் செல்வது. அதாவது ஒரு மரத்தை.
கடவுளின் சிலை வடிக்கப்படவிருக்கும் வேப்ப மரத்தைத் தேடுவது பெரும் பணி. மரத்தின் வடிவம், அது வளர்ந்து நிற்கும் பகுதி, அதைச் சுற்றி அமைந்திருக்கும் சூழல் போன்றவற்றைப் பற்றி பல நிபந்தனைகள் உண்டு. அடிமரம் ஆழ் சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். நிலத்தில் இருந்து சுமார் பதினோரு அடி உயரத்திற்கு மரம் நேராக வளர்ந்திருக்க வேண்டும். நான்கு கிளைகளாவது கொண்டிருக்க வேண்டும். குளம் அல்லது நதிக்கரையில் இந்த மரம் நிற்க வேண்டும். சிவாலயம், எறும்புப் புற்று ஆகியவற்றிற்கு அருகில் இருப்பது உத்தமம். இவற்றையெல்லாம் தாண்டி மரத்தின் பட்டையில் சங்கு சக்கர முத்திரைகள் காணப்படவேண்டும். இத்தகைய குணாதிசயங்களைக் கொண்ட மரத்திலிருந்து தான் ஜகந்நாதரின் சிலை செதுக்கப்படுகிறது.
இந்தப் புனருத்தாரணத்தின் மற்றொரு முக்கிய அங்கம் ‘பிரம்மபதார்த்தம்’ என்ற பொருள் பழைய சிலையில் இருந்து எடுக்கப்பட்டு புதிதாக வடிக்கப்பட்ட சிலையில் வைக்கப்படுகிறது. இந்த ரகசியப் பொருளைப் பற்றி பல கதைகள் உலவுகின்றன. பிரம்மபதார்த்தம் என்பது கிருஷ்ணரின் இதயம், புத்தரின் பல், மதிப்பிடமுடியா நீல மணி என்று பல விளக்கங்கள் இணையத்தில் உலவுகின்றன. அவரவரின் நம்பிக்கைகள், அவரவரின் விளக்கங்கள். ஆனால், ரகசியம் என்னவோ இன்னும் பரம ரகசியமாகத் தான் இருக்கிறது.
இந்தச் சடங்கிற்கு பிறகு பழைய தெய்வ மூர்த்தங்கள் கோலி பைக்குண்டாவிற்கு கொண்டு வரப்பட்டு மண்ணில் புதைக்கப்படுகின்றன. இவற்றோடு சந்நிதியில் தெய்வங்களோடு இருந்த பிற பொருட்கள்; மரக் குதிரைகள், தேர்கள், அலங்காரப் பொருட்களும் சேர்த்தே பூமியில் இடப்படுகின்றன.
தெய்வங்கள் உறங்கும் இடத்தை அமைதியாக வலம் வந்து வெளியே வந்தவுடன் மஹாபாத்ரா மீண்டும் சேர்ந்து கொண்டார்.
‘தரிசனம் பிரமாதமா கிடைச்சுதா? நீங்க அதிர்ஷ்டசாலிங்க. இவ்வளவு சீக்கிரம் புருஷோத்தமனோட தரிசனம் கிடைப்பது கஷ்டம் ’ என்று சொல்லி சிரித்தார். பலரிடம் இதையே சொல்வார் என்று தோன்றியது.
‘கொடி மாற்றப் போறாங்க, சீக்கிரம் வாங்க’ என்று மீண்டும் எங்களை இழுத்து கொண்டு விரைந்தார். டிஸ்னி கேலிச்சித்திரங்களில் வரும் ரோட்ரன்னர் பறவையின் ஞாபகம் வந்தது. கோவிலுக்குள்ளே ஒரு கட்டிடத்தின் மேல் மாடிக்கு கூட்டிச் சென்றார். மாலை வெயிலின் வெப்பம் தாங்கிய சிமெண்ட் தரையில் காய்ந்த அரச மர இலைகளும், இலை தட்டுகளும் காற்றில் இங்குமங்கும் தரையோடு உரசிச் சென்றன.
‘இங்க உட்கார்ந்து பாருங்க’ என்று சொல்லி விட்டு, வேறென்ன, விரைந்து கீழே சென்று விட்டார்.
நாங்கள் நிற்கும் இடம் போலவே கோவில் வளாகத்தில் உள்ள பிற கட்டிடங்களின் மாடிகளிலும் மக்கள் நிறைந்திருந்தனர். எங்கள் முன்னே கோபுரம் வானை மறைத்து கொண்டு செங்குத்தாக நின்று கொண்டிருந்தது. நீல சக்கரத்தில் மேல் இருந்த காவிக் கொடி காற்றில் அலைந்தாடியது. வெயில், மழை போன்ற எல்லா தடைகளையும் மீறி தினமும் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கொடி மாற்றப்படுகிறது.
நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, கச்சம் வைத்து வேட்டி கட்டிய நால்வர், கோபுரத்தின் அடி பாகத்தில் குழுமினர். எங்களை சூழ்ந்திருக்கும் கூட்டத்தில் சிறு சலசலப்பு எழுந்தது. மேலங்கி எதுவும் அணியாத அந்த நால்வரின் இடுப்பில் இருந்து பந்து போல் சுருட்டிக் கட்டிய வெள்ளை மற்றும் காவி கொடிகளின் சிறு மூட்டை தொங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்து விட்டு கற் பலகைகள் போல் இருந்த கோபுர அடுக்குகளில் உள்ளங்கைகளையும், பாதங்களையும் லாவகமாக பதித்து சர சரவென்று ஏறத் தொடங்கினர்.
எந்தக் கல்லில் கால் அழுத்தலாம், எந்தப் பரணில் பிடி கிடைக்கும் என்பதை மிக நிச்சயமாக அறிந்தவர்கள் என்று அவர்களது துரித ஏற்றம் கூறியது. பாதுகாப்பு கயிறுகள் ஏதுமின்றி ‘free solo’ மலை ஏறும் வீரர்கள் போல் நால்வரும் ஏறுவதை பார்த்து நமக்கு தான் படபடத்தது. சில நிமிடங்களில் கோபுரத்தின் உச்சியை அடைந்து விட்டனர்.
கோபுரத்தின் உச்சியில் வெள்ளை சிகரத்தை அணைத்து கொண்டு நிற்கும் நால்வரும் விட்டத்தில் ஒட்டியிருக்கும் பல்லிகள் போல் மெதுவாக ஊர்ந்து, காற்றில் படபடக்கும் கொடியை இறக்கி, புதுக் கொடியை கட்டி, கிணற்றில் தண்ணீர் இழுப்பது போல், கயிற்றை இழுத்து நீல சக்கரத்தின் மேல் ஏற்றினர். துவண்டிருந்த கொடி காற்றால் உசுப்பப்பட்டு, சிலிர்த்து, புது உத்வேகத்துடன் தன் காவி சிறகு விரித்து, நீலக் கடலை நோக்கி உடலசைத்தது.
‘ஜெய் ஜகந்நாத்’ என்ற கோஷம் கோவில் வளாகம் முழுதும் ஒலித்து வானில் சிதறி, கோபுரத்தைச் சுற்றி பறந்து கொண்டிருக்கும் உழவாரன் பறவைகள், போல் பல திசைகளுக்கு பரவியது.
(கலிங்கம் தொடரும்…)
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
