அதிஜனநாயகம் -2

This entry is part 2 of 2 in the series அதிஜனநாயகம்

நாங்கள் இறங்கிய அறை முதலில் சிறிய ஒற்றையடிப் பாதை போலத் தெரிந்தது. நொடியில் கருகிய நெகிழியின் மணம் மூக்கைத் துளைத்தது. வேகமாக அந்தப் பாதையைக் கடந்து வலது மூலையில் திரும்பியதும் மிகப்பெரிய அறையின் மத்தியில் நின்றிருந்ததை உணர்ந்தேன். மிக மிகப் பெரிய அறை. கிட்டத்தட்ட கால்பந்து மைதானம் அளவு இருந்தது. தூரத்தில் தெரிந்த கதவு கிட்டத்தட்ட ஒரு புள்ளியைப் போல ஒளிர்ந்தது. மேடான மையப்பகுதியில் இருந்த நான்கு நாற்காலிகளில் உயரமான நான்கு நபர்கள் உட்கார்ந்திருந்தனர்.

எங்களுடன் வந்த ஆபிசர், “நீதிபதிகளுக்கு உங்கள் வணக்கங்களைத் தெரிவியுங்கள்” என்றார்.

கைகூப்பி வணங்கியபோது மரி மட்டும் கை உயர்த்தி சல்யூட் செய்ததை கவனித்தேன். நர்சுக்கு மிலிட்டரி சல்யூட் எப்படித் தெரியும் என்பதைப் பின்னர் கேட்க வேண்டும் எனக்குறித்துக்கொண்டேன்.

“நீதிபதி அவர்களே, வந்திருக்கும் மூவருக்கு உங்கள் பதில் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டு ஜனத்திரளுடன் சென்று அமர வேண்டுகிறேன்” என ஆபிசர் கூறினார்.

அவர்கள் சென்ற திசையில் வந்த வெளிச்சத்தில் நூற்றுக்கணக்கான நாற்காலிகளில் மக்கள் திரளாக உட்கார்ந்திருந்ததை அப்போதுதான் கவனித்துத் திடுக்கிட்டேன். நாங்கள் மூவரும் நின்றிருந்த இடத்தைச் சுற்றி வட்ட வடிவ மைதானம் முழுவதும் மக்கள். அவர்களது கண்களில் தெரிந்த பளபளப்பை இப்போது தான் என்னால் பார்க்க முடிந்தது. நாங்கள் வந்த வழியில் அவர்களைக் கடந்து வந்திருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்ந்தேன். எப்படி சத்தமிடாமல் அவர்களால் உட்கார்ந்திருக்க முடிந்தது?

ஆபிசர் கையை உயர்த்தியதும் எங்கள் மீதிருந்த வெளிச்சம் குறைந்து அறையின் கோடியில் இருந்த ஒரு கேப்சூல் மீது மெல்லப் படர்ந்தது. பாலே நடனக்காரியைத் துரத்தும் வட்ட வடிவ வெளிச்சம் போல அறை முழுவதும் சுற்றித் திரிந்த அந்த நீலவெளிச்சம் அந்த கூடாரத்தின் மீது நின்றது.

“வந்திருக்கும் புது நீதிபதிகளுக்கு எங்கள் வணக்கங்கள். உங்கள் வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது அதிஜனநாயகக்கூட்டத்தின் நான்காவது மண்டலத்தின் முன்னூறாவது கூட்டம். ஒருவிதத்தில் எங்கள் குழுவினருக்கு விசேடமானது. புதிய நீதிபதிகளுக்காக ஒரு முறை இந்த மண்டலத்தின் வரலாற்றைக் கூறலாம் என நினைக்கிறேன்.

முதல் கோவிட் காலகட்டத்தின் நூறாவது நினைவை கொண்டாடியிருக்கிறோம். இந்த நூறு ஆண்டுகளில் எத்தனை வரலாற்று காலகட்டங்கள் வந்துவிட்டன?! ஆச்சர்யமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு செழுமையாக இருந்த அதே காலகட்டத்தில் சீனாவிலும் ஆசியாவிலும் பஞ்சம். ரஷ்யாவின் மீது அணு ஆயுதத் தாக்குதல். தென் அமெரிக்க நாடான பெருவில் லட்சக்கணக்கான மக்களை அழித்த நிலப்பிளவு. கண்டங்கள் பிரிவதும், புது தீவுகள் முளைப்பதும், தெற்காசியாவில் ஐந்து பெரிய சுனாமிகள் வருவதும் என நம் கண்முன்னே எத்தனை அழிவுகள். இதற்கெல்லாம் தொடக்கம் உலகளாவிய கோவிட் காலகட்டம் தான்.

இத்தனை பேரழிவுகளுக்கிடையே நம் சிந்தனையாளர்களும், உலக ஒருங்கிணைவு அரசு இயந்திரங்களும் பண்டைய காலகட்டத்தின் அரசு மற்றும் மக்கள் இயக்கத்தின் புதியவடிவங்களை சோதித்தபடி இருந்தனர். அரசர்களின் காலகட்டம், ஜனநாயக காலம், கம்யூனிச காலம், நிதி மைய அரசுகள் என ஒரு நூற்றாண்டுக்குள் மனிதர்களுக்கு எத்தனை அவசரம். ஜனநாயகத்தின் சுவையை ருசிப்பதற்கு முன்னர் அதன் அழிவை தனக்குள் கொண்டு வந்த நிதி மைய பேராசை பிடித்த அரசுகள், பயங்கரவாதத்தை ஊக்குவித்த பேரரசுகள் என சகலமும் அழிவுப்பாதைக்கே இட்டுச்சென்றன. இந்தியாவின் கணிகா செயற்கை நுண்ணறிவு கூட்டமைப்பு மையங்கள் உருவாக்கிய அதிஜனநாயகா அமைப்பு சோதனைகளில் வெற்றி பெறும் வரை எத்தனை விதங்களில் அரசமைப்பு மாடல்களை நாம் சோதித்துவிட்டோம். எல்லா வகை அரசுகளும் அழிவையும் தோல்வியையும் நோக்கியே நம்மைச் செலுத்தின. உலகளாவிய இணைப்புகளைக் கொண்டு கணிகா செய்த சோதனையின் விளைவு தான் நாம் இங்கு நின்று கொண்டிருக்கிறோம்”

ஒலிபெருக்கியிலிருந்து வந்த குரல் மெளனமானது. அங்கிருந்த கூட்டத்தினர் மீது நீல வெளிச்சம் படர்ந்தது. அவர்களது முகங்களில் பரவசம். அடுத்து வரப்போகும் நிகழ்வுகளை எதிர்பார்த்திருந்த கண்கள்.

“ஒரு பெருந்திரளுக்காக சட்டங்களையும் நடைமுறை செயல்திட்டங்களையும் வகுத்து வந்த அரசமைப்பை தகவல்களாகக் கொண்டு கணிகா வரலாற்றை அலசத்தொடங்கியது. கிரேக்க நாகரிகம் தொடங்கி, எகிப்து, ரோமப் பேரரசுகள், சீன, இந்திய, மத்திய கிழக்கு அரசமைப்புகள் எனக் கோர்வையாக அரசு இயந்திரங்கள் செயல்பட்ட விதங்களையும் அவற்றைப் பின்னிருந்து இயக்கிய சட்டங்கள், அற விழுமியங்களையும் அவற்றின் விளைவுகளையும் சமூகத்தின் ஆய்வறிக்கைத் தகவல்களை பல சாத்தியங்களோடு கணிகா அலசியது. உதாரணத்துக்கு ரோமப் பேரரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் மிக எளிமையான சூத்திரமாக வகுத்திருந்த வரலாற்றியலை கேள்வி கேட்கத் தொடங்கியது. ரோமப்பேரரசுக்கு முன்னும்பின்னும் இருந்த அமைப்புகளும் அவற்றினால் மனிதர்கள் மீது ஏவப்பட்ட சட்டங்களையும் அதன் விளைவுகளையும் கணிகா மாடல்களாக மாற்றியது. எப்பேர்ப்பட்ட தகவலாய்வு என்பதை உங்களால் உணர முடிகிறதா எனத் தெரியவில்லை. ஒவ்வொரு வரலாற்று காலகட்டத்தையும் அப்படி அலசத்தொடங்கிய போது கணிகா ஒரு முக்கியமான முட்டுச்சந்தில் தனது எரிசக்தி முழுவதையும் செலவழிக்கத் தொடங்கியது”.

என் அருகில் நின்றிருந்த கமால் உணர்ச்சிவசப்பட்டார். “ என் ஆரம்பகால கணினி ஆய்வு வேலையில் கணிகா பிராஜெக்டில் இருந்தேன். எனக்குள் இருந்த பழைய குழப்பங்களை யாரோ என் மூளைக்குள் மீண்டும் திணிப்பதுபோல உணர்கிறேன்.” அவர் கண்கள் யாரையும் பார்க்காமல் கூட்டத்தின் இருளை நோக்கி இருந்தன. கால்விரல்களை தரையில் தேய்த்தபடி நின்றிருந்தார்.

“இப்படிப்பட்ட பேரரசுகள் மெல்லிய விழுமியங்கள் மற்றும் அரசின் சட்டங்கள் மீது மட்டுமே கட்டப்பட்டவை அல்ல. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் சிந்தித்து வந்த நியாய அநியாயங்கள் மீதும் அவற்றின் மீது அரசின் உதாசீனங்கள் மீதும் கட்டப்பட்டவை. கணிகாவின் மாடல்கள் இதை ஊர்ஜிதம் செய்ததும், நம் பேரரசு அவற்றை சட்டங்களாக அமலாக்கத் தொடங்கின. அப்போது நீங்கள் யாருமே பிறந்திருக்க வாய்ப்பில்லை.”

கூட்டத்தில் சிறு முணுமுணுப்பு கேட்டது. தூரத்தில் தெரிந்த திரையில் மெல்ல சில உருவங்கள் துலங்கத் தொடங்கின. ஒன்றிரண்டு தலைகள் தெரியத் தொடங்கியதும் மெல்ல அந்த இடம் எதுவென எனக்குப் புரிந்தது. மொர்ரீஸியஸ் இந்தியாவுடன் சேர்ந்த பின்னர், பலவருடங்களாக ஆழ்கடல் நகரம் ஒன்றை சீனாவுடன் சேர்ந்து கட்டிக்கொண்டிருந்தனர். மிதவை நகரம் என அறியப்பட்ட அட்லாண்டிஸோனியா மின் தொழில்நுட்பத்துக்கு மிதவை நகர்களான க்ரீன் சோன் தீவுகளை நம்பி இருந்தது. கடலடியில் இருந்த செயற்கைப் பவளப்பாறைகள் புதுவித தீவுவாசிகளின் சரணாலயம் ஆனது. ஆஸ்திரேலியாவிலிருந்து தொரெசு நீரிணைத் தீவுவாசிகள் கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன் இங்கு புதுச் சூழலுக்கு இடம் பெயர்ந்தனர். ஆஸ்திரேலிய நியூகினி பவளப்பாறைகள் அழிந்ததும் அவர்களது இடப்பெயர்வுக்கு ஒரு காரணம்.” அக்குரலில் ஒருவித ஒட்டுதலின்மை தெரிந்தது.

அவர் பேசும்போது எனக்கு ஞாபகம் வந்தது. இத்தீவின் தொழில்நுட்பப்பிரிவில் பணி செய்ய எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் கூடிய விரைவில் அப்பணியை மிகவும் பாதுகாப்புமிக்க அரசு ஊழியர்களிடம் கொடுத்துவிட்டனர்.

அட்லாண்டிஸொனியாவின் ஒரு பகுதி அத்திரையில் தெரிந்தது. நூறு வயதைக் கடந்த முதியவர்களுக்கான நிலமாக அது மாறிக்கொண்டிருந்தது. திரையில் தெரிந்த பகுதியில் ஆயிரக்கணக்கான முதியவர்கள் செயற்கை விவசாயத்திலும், உடல் உறுப்பு மறு சீரமைப்பு ஆய்விலும் ஈடுபடும் படங்கள் தெரிந்தன.

“இக்காலத்தில் வாழும் நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. காலகாலமாக மக்களின் விதியை முடிவு செய்திருந்த அரசு அமைப்புகள் கடந்த இருபது வருடங்களாக அதிஜனநாயக சட்டத்தை ஆசியப்பகுதிகளில் அமல்படுத்தி வருகிறது. சில குறிப்பிட்ட முடிவுகளை மக்களின் சில பிரதிநிதிகள் எடுக்க முடியும். அவர்களுடன் சேர்ந்து பார்வையாளர்களாகிய நீங்கள் அம்முடிவுக்கு ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கலாம். இதோ உங்கள் முன் மூன்று நீதிபதிகள்”

எங்கள் மீது நீல வெளிச்சம் கவிழ்ந்தது.

“கமால், ரேவா, மரி”

கைத்தட்டல்களும் விசில் சத்தமும் அந்த அரங்கை அதிரச் செய்தன. அவை எதுவும் மக்களின் சத்தமல்ல, பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பும் சத்தம் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.

“உங்கள் முன் இருக்கும் மூன்று நீதிபதிகள் – மன்னிக்கவும் – இன்றைக்கு அவர்கள் மூவரும் ராஜா, ராணி, பிரதமர், அண்டத்தின் அரசர்கள், சொல்லப்போனால் பலரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் கடவுளர். சில மணித்துளி கடவுளர்”

கூட்டத்தினரிடமிருந்து சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் கைகளில் இருந்த சிறு ஒளிக்குழுமி விரல்களில் ஒளிர்ந்தன.

“உங்கள் பதில்களை எதிர்பார்க்கும் ஒளிக்குழுமிகள் இயங்கத்தொடங்கிவிட்டன, மக்களே. இப்போது இன்றைய புதிய சட்டத்தையும் அதன் தேவையையும் குறித்து செங்கோலன் பேசுவார்”

குள்ளமான உருவம் கொண்டு ஒருவர் மேடை மீது ஏறினார். வயோதிகம் அவரை மெல்ல நகரச் செய்தது. தன் முன்னே தெரிந்த கூட்டத்தினரைப் பார்த்தபடி ஒரு சிறு திரையை சொடுக்கினார். திரையிலிருந்து வந்த வெளிச்சம் வரிகளாக அவரது முகத்தில் பரவின.

“வணக்கம். ஆசிய கண்டத்தின் எழுபதாவது அதிஜனநாயகக்கூட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நீதிபதிகள் மூவர் முன்னிலும் இருக்கும் திரையில் இன்றைய பிரச்சனைக்கான சுருக்க வடிவம் காணக்கிடைக்கும். அட்லாண்டிஸோனியாவில் இருக்கும் எண்பதாயிரம் உருப்படிகளுக்கான எதிர்காலம் குறித்த ஆவணம்..”

“அவர்கள் பிரஜைகள். மண்ணின் உயரிய உயிரான மனிதர்களை பிரஜைகள் என்றழைப்பதே சரி” என் முதல் திருத்தத்தைக் கூறினேன்.

“இடையீடு வேண்டாம். இந்த முறை மட்டும் அனுமதிக்கிறேன். பிரஜைகள் என கோப்பு முழுவதும் திருத்திக்கொள்ளலாம். “ கணினி சுயமாகத் திருத்துவதற்காக செங்கோலன் சிறிது நொடிகள் காத்திருந்தார்.

“எண்பதாயிரம் பிரஜைகளின் உழைப்பு விகிதம் 150 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. இதுவே அவர்களைத் தேர்வு செய்ய முதல் காரணம். உயிரியல் கோப்பாக அவர்களது உடலின் 50 சதவிகிதம் மாற்றப்பட்டுவிட்டது. இது ரெண்டாவது காரணம். மூன்றாவது மிக முக்கியமான காரணம் – அவர்களது இயற்கை வயது 175க்கும் அதிகமாக உள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் காத்திருக்கும் அடுத்த இருபதாயிரம் பிரஜைகளுக்கு ஓய்வு இருப்பிடம் தேவை. இந்த எண்பதாயிரம் பிரஜைகளின் இடங்களை புதியவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. “

அவர் சொல்லவருவதை நாங்கள் மூவரும் உணர்ந்திருந்தோம். இந்த சட்டத்தை அமல்படுத்தினால், ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஐம்பதாயிரம் பிரஜைகளை பலவந்தமாக அழிக்க வேண்டும். அவர்களிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டபின் தேவையற்றை உயிரை என்ன செய்வது?

“இது மனிதக்குலத்துக்கே கேடு விளைவிக்கும் பெரிய அழிவுத் திட்டமாக இருக்கிறதே! இதை ஏன் நாங்கள் மூவர் மட்டுமே முடிவு எடுக்க வேண்டும்?”

“இரண்டாம் முறை இடையீடு செய்கிறீர்கள். இது நீங்கள் மூவர் மட்டும் எடுக்கும் முடிவல்ல. உங்கள் தலைமையில் இங்கிருக்கும் ஆயிரத்து ஐந்து மக்களும் சேர்ந்து எடுக்கும் முடிவு”

“இப்படிப்பட்ட ஜூரிக்களில் உங்களுக்கு சாதகமானவர்களைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டீர்களா?”

“ரேவா, இந்த கூட்டம் அதன் தேர்வு, சட்ட அலசலுக்கான தகவல்கள் என அனைத்தையும் அளித்தது கணிகா எனும் சூப்பர் கணினி வலையமைப்பு என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். அதை கேள்வி கேட்கும் உரிமை ஆசியாவுக்கு இன்னும் அளிக்கப்படவில்லை.”

“மிகவும் கீழ்த்தரமான மூளை உள்ளவரால் மட்டுமே என்னை இதற்குத் தீர்ப்பு சொல்ல அழைக்க முடியும். தினந்தோறும் செவிலியாக உழைத்துப் பல உயிர்களைக் காப்பாற்றி வருகிறேன். எந்த நிலையிலும் அவர்களது தேவை என்ன என்பதைப் பொறுத்து என் சேவை இருந்ததில்லை “ முதல் முறையாக மரி பேசினார். அவரது வாயிலிருந்து வார்த்தைகள் உடைந்து விழுந்தன. அடி ஆழத்திலிருந்து வருவது போல ஒவ்வொரு வார்த்தையையும் எண்ணி எண்ணிப் பேசினார்.

“இங்கு பேசப்படும் ஒவ்வொரு சொல்லும் வெளியே ஆயிரம் கதைகளாக சிறு வயதிலிருந்து கேட்டு வந்திருக்கிறேன். ஆனால் இப்போது உண்மையாக மாறி என் முன்னே வந்து நிற்கும்போது கைகால்கள் நடுங்குகின்றன”

“அதிஜனநாயகத்தின் அடிப்படையும் அதுதான் மரி. மானுட சமுதாயத்துக்கான பிரிதிநிதியாக சில முடிவுகளை எடுக்கும்போது எப்படி முழுமையான நீதி என ஒன்று இல்லையோ அது போல அரசுக்கென ஒரு தனி மனசாட்சி கிடையாது என்பதை உணர்வீர்கள். ராட்சஸ கையாக நீண்டிருக்கும் அரச சட்டங்களோடு இந்த இருக்கைகளில் உட்கார்ந்திருக்கும் ஒவ்வொருவரின் மனசாட்சியும் இங்கு எடுக்கப்படும் முடிவுகளில் பங்கு பெறுகின்றது. எங்களுக்கு எதுவும் தெரியாது; அரசு அல்லது ராஜா எடுத்த முடிவு என இனி எவரும் தப்பிக்க முடியாது. இங்கு வெறும் பார்வையாளன் என யாருமில்லை.”

குரல் கேட்கக்கேட்க என் முகத்தருகே எதோ கரிய அமிலம் படர்வதைப் போல உணர்ந்தேன். முகத்தில் வியர்வை கொட்டியது. என் கதையில் எழுதியது போல வான்குடியினராக இவர்கள் இருக்கக்கூடாதா என ஒரு கணம் எண்ணினேன். அப்படியிருந்தால் இவர்களை நாம் அழித்திருப்போம். மனிதர்களுக்கு என முடிவெடுக்க ஒரு பேரரசு அமைந்திருக்கும். அவர்கள் சொல்வதைக் கேட்டு நாம் நடக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் நமக்கு இல்லாதது எத்தனை பெரிய விடுதலை. அப்பா கூறியதை நினைத்துப்பார்த்தேன். முன்னோர்கள் போல விதி மேல் பாரத்தைப் போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம்.

“முடிவெடுக்கத் தேவைப்படாத சமூகமாக எங்களை எப்போது மாற்றுவீர்கள்?” காற்று வந்த திசையைப் பார்த்து என்னால் முடிந்தளவு கத்தினேன்.

சிரிக்கும் அசரீரிக்குரல் கேட்டது. எங்களைச் சுற்றியிருந்த மனிதர்களிடம் சிறு சலசலப்பு கேட்டது.

“அது ருசியற்ற சமூகம் இல்லையா?”

“இல்லை. இப்படி ஆயிரக்கணக்கான வயதானவர்களை…என் தாத்தா கூட அதில் இருக்கக்கூடும். ஆயிரக்கணக்கானவர்களை கொல்லும் அதிகாரம் தான் குரூர ருசி”  என்னுடன் சேர்ந்து மரி கத்தினாள் “நான் உயிர்களைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் பிறந்தவள். அதனால் தான் செவிலி வேலையை விரும்பி எடுத்துக்கொண்டேன்”

“அதனால் தான் உன்னைத் தேர்ந்தெடுத்தோம் எனச் சொன்னால் நம்புவதற்குக் கடினமாக இருக்குமோ?” என்ற செங்கோலனின் எதிர் குரல் கேட்டது.

எல்லாரும் அமைதியாக இருந்தனர்.

“நாம் முன்னைப் போல ஒரு தாய் தந்தையினரின் கூடுகையிலிருந்து மட்டும் நமது அடையாளங்களைப் பெற்றுக்கொள்பவர்கள் அல்ல. அந்த மனித இனம் ஆயிரம் வருடங்களாக மாற்றம் அடைந்துவிட்டது. நாம் ஒரு பெரிய மென்பொருளுக்கு உள்ளே இருக்கிறோம் என நம்பிய காலமும் காலாவதியாகிவிட்டது. நாம் மட்டுமே நிஜம். ரோபாட்களோடு இணைந்தும் பிரிந்தும் உருவான சுயம்கள் எப்போதோ கரைந்துவிட்டன. மனிதன் தனித்துவமானவன் என்பதை ஒவ்வொரு யுகத்திலும் பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் எங்கோ ஒரு தப்பு நடந்துவிட்டது. ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் நம்மைச் சுற்றி நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கடப்பவர்களாகிவிட்டோம். மீண்டும் மீண்டும் மனிதர்கள் இந்த கடல்,வானம்,காடு, மலை போன்றவற்றை உருவாக்கி களித்துச் செல்பவர்களாக மாறிவிட்டோம். அழிவின் கங்கு அணைவதற்கு முன் ஏதேனும் புதியதாக எதையாவது பற்றிக்கொண்டு உயிர் திளைக்கிறோம். மீண்டும் பெரிய குழுவாக உருவாகி வாழ்ந்து கழிக்கிறோம். இங்கு நம்மைச் சுற்றி இருக்கும் உலகம் தான் உண்மையானது. மற்றவை எல்லாமே போலி. அதைக் காப்பது மட்டுமே நம் ஒரே குறிக்கோள். நம் இருப்புக்கான அடிப்படையும் இதுதான். இன்று நீங்கள் தீர்ப்பு சொல்லும்போது அந்த குறிக்கோளை அடைவதற்கான தராசின் ஒரு பக்கத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த கூட்டுத் தீர்ப்பு நம் இருப்புக்கான நியாயத்தை அளித்துவிடும்”

“இது கூட்டாக எடுக்கும் தீர்ப்பு அல்ல. குற்ற உணர்ச்சியை எங்களுக்குப் பங்கு கொடுக்கும் சாமர்த்தியம்; முழுமுற்றான தீர்ப்பை எடுக்கப் பயப்படும் கோழைத்தனம்”  என் குரலின் வேகம் குறைந்திருந்தது.

“இருக்கலாம். ஆனால் நம் இருப்புக்கான அடிப்படையை ஸ்திரப்படுத்தும் வகையில் இந்த அதிஜனநாயக முறை நம்மை பலப்படுத்தும். பெரிய நலனுக்காக தைரியமாக முடிவெடுக்கும் குணத்தை மக்களுக்குக் கொடுக்கும். இது நீண்ட கால அடிப்படையிலான மாற்றத்தை அளிக்கும். எத்தனை கஷ்டம் வந்தாலும் உயிரும் மனிதர்களும் தப்பிப் பிழைத்துவிடுவர். அதாவது இந்த இயற்கையை அழிக்காதவரையில். அந்த தராசு முழுவதுமாக ஒரு பக்கம் சாயாத வரை”

சுற்றி இருந்தவர்கள் கைகளில் மின்குமிழி மீண்டும் ஒளிர்ந்தது.

“மக்களே, நாம் ஒன்றாகப் பயணிப்போம்.”

கண்முன்னே என் கதையில் வருவதைப் போல வான்குடிகள் அழிந்து மண்குடிகள் மீண்டுவருவது போன்ற காட்சி தோன்றியது. மண்ணுடன் பிணைப்பு இருக்கும்வரை அவர்களில் ஒருவரேனும் மீண்டு வந்து புது குல நிரையை உருவாக்கிவிட முடியும் எனும் நம்பிக்கை அவர்களிடம் இறுகியது போலத் தோன்றியது. ஏதோ ஒரு வகையில் இது ஒரு சுழற்சி.

“தீர்ப்புக்கான வந்தனங்கள்” கூட்டத்தில் யாரோ சத்தமிட்டனர்.

“தீர்ப்புக்கான வந்தனங்கள்” என மைதானம் முழுவதும் முழங்கின.

எல்லாம் முடிவடைந்தது என நினைத்த நேரத்தில் புதிதாகச் சிலதும் தோன்றின.

அதிஜனநாயகம்

அதிஜனநாயகம்- 1

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.