- ஜெய் ஜகந்நாத்!
- கல்வெட்டுகள்
- ஈரநிலம்
கூகிள் மேப்பில் நான் நிற்கும் இடம் ஒரு கரு நீலப் புள்ளியாகத் தோன்றி மென்மையாக அதிர்ந்து கொண்டிருந்தது. அலைபேசியில் மிளிர்ந்த வரைபடத்தில் என் பின்னே, காகிதத்தில் தெறித்து பரவிய நீல மை சொட்டு போல், ஒரு நீர் பரப்பு. புள்ளியாக உருவெடுத்திருக்கும் என் முன்னே நிலம் என்னும் அரணை ஒரு பகுதியில் உடைத்து, உள்நுழைந்து, சிறு குழந்தை ஒன்று புதிர் துண்டுகளை தரையெங்கும் விட்டெறிந்தது போல், பல தீவுகளை உருவாக்கி இருந்த கடல் தெரிந்தது.
அலைபேசியின் திரையைச் சுருக்கினேன். நான் நிற்கும் இடத்தின் விஸ்தீரணம் துலங்கியது. வங்கக் கடலும், பல சிறு நதிகளும் ஒன்று கூடி உருவாக்கிய, ஏறக்குறைய 1100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும், ஆசியாவிலேயே மிகப் பெரிய உவர் ஏரியான சிலிகாவின் கிழக்கு பகுதியில் நிற்கிறேன் என்று காட்டியது.
யானையின் காதில் ஊரும் எறும்பு போல் உணர்ந்தேன்.

~oOo~
படகுத் துறையில் உள்ள ஒரு சிறு கட்டிடத்திற்குள் அமர்ந்திருந்தவர் ஒரு லேமினேட் செய்யப்பட்ட அட்டையை என்னிடத்தில் நீட்டினார். அதில் சூரியன் அஸ்தமிக்கும் சிலிகா ஏரி, நீரில் மிதக்கும் பறவைகள், நண்டுகள் என்று பல புகைப்படங்கள் கண் கூசும் வண்ணத்தில் ஒளிர்ந்தன. படகு வாடகை, நேரம், சுற்றி வரும் இடங்கள் போன்றவை உள்ளடக்கிய பட்டியல் அவற்றின் மீது அச்சடிக்கப்பட்டிருந்தது. படகிற்கான வாடகையை கொடுத்தேன். அறையின் மூலையில் சிதறிக் கிடந்த லைப் ஜாக்கெட் குவியலை சுட்டினார். இருப்பதிலேயே சற்று கெட்டியான மிதவை சட்டையை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டேன். பட்டைகள் எந்தத் தகராறும் செய்யாமல் ஒன்றோடொன்று பொருந்திக் கொண்டன.
கட்டிடத்திற்கு வெளியே வந்த போது ‘ஏரிக்குள்ளாற தண்ணி கிடைக்காது’ என்று முரண் பொதிந்த வாக்கியங்களை கேட்டு திரும்பினேன். ஒரு சிறு பெட்டி கடைக்குள் நின்றிருந்தவர் சிரித்தபடியே தண்ணீர் குப்பியை நீட்டினார். இரண்டு குப்பிகளை வாங்கிக் கொண்டு படகுத் துறையை அடைந்தேன்.
நீரின் மேல் தட்டையான பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை சேர்த்து கட்டி உருவாக்கப்பட்ட அசையும் விரிப்பின் மேல், கயிற்றில் நடப்பவன் போல் கைகளை அகல விரித்து வந்து நீரில் தள்ளாடி நிற்கும் சிறு மரப் படகில் ஏறிக் கொண்டேன். வெயிலை தடுக்க முரட்டு துணி வேயப்பட்ட கூரையின் கீழ் அமர்வதற்கு மரப் பலகைகள். சுக்கானைக் கையில் பிடித்தபடி படகின் பின்புறம் நின்றிருந்தான் படகோட்டி இளைஞன். உள் உதட்டில் அதக்கி வைத்திருந்த மாவாவின் சாற்றை துப்பி விட்டு, நாங்கள் இருக்கும் படகை சுற்றி நின்றிருக்கும் படகுகளை லாவகமாக விலக்கி, என்ஜினைக் கிளப்பினான்.
மதிய வெயில் நீரில் தெறித்து, பகலிலேயே பல கோடி நட்சத்திரங்கள் மின்னும் சிலிகாவின் மீது பயணப்பட்டேன்.
~oOo~
இப்பொழுது கடற்கரைக்காயலாகி (Lagoon) இருக்கும் சிலிகா பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வங்கக் கடலின் ஒரு பகுதியாக இருந்தது. மகாநதி மற்றும் அதனுடைய பல கிளை நதிகள் கொண்டு சேர்த்த வண்டல் திட்டுகளாக வளர்ந்து, மேடிட்டு, கடல் நீரும், நல்நீரும் கலந்திருக்கும் உவர் ஏரியாக (Brackish Lake) மாறியது. இது நடந்தது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சிலிகாவின் நீள, அகலம் பெரிதாக இருந்தாலும் அதன் ஆழம் குறைவு. அதிகபட்சமாக நான்கு மீட்டர்கள். பல பகுதிகளில் கணுக்கால் நனையும் அளவு மட்டுமே நீர். பொதுவாகவே, காயல் பகுதிகளில் மீன் வளம் அதிகம். சிலிகா அதற்கு விலக்கல்ல. ஒடிஷாவின் மூன்று மாவட்டங்களை தொடும் இந்த ஏரியில் ஏறக்குறைய 130 மீனவ கிராமங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
நீரில் சவுக்கு அல்லது மூங்கில் கொம்புகளை நட்டு, வலை ஒன்றை சுற்றி அமைக்கப்பட்ட பல கூண்டுகள் ஏரியில் தென்பட்டன. ஜானோ என்று அறியப்படும் இந்த மீன் பிடிக்கும் முறை மிகவும் தொன்மையானது. சிலிக்காவை சுற்றி அமைந்திருக்கும் பல மீனவ சமூகங்கள் இன்றும் கூட இந்தப் பாணியை கடைபிடிக்கின்றன.
நீரின் மேல் மிதந்து கொண்டிருந்த நீர் காகம் ஒன்று கழுத்தை நீரிற்குள் விட்டு, பின்பு தனது உடலையும் உள்ளிழுத்து கொண்டு, சில வினாடிகள் நீரில் மறைந்து, மீண்டும் மேலெழுந்து வந்த போது, அதன் அலகில் மீன் ஒன்று அகப்பட்டிருந்தது. அதன் அலகுகளை ஊன் குச்சிகள் போல் லாவகமாக மேலும் கீழும் அசைத்து நெளியும் மீனை விழுங்கி ‘இப்படியும் மீன் பிடிக்கலாம்’ என்று சொல்வது போல் என்னை பார்த்தது. வலை கூண்டின் கொம்புகளில் மற்றொரு நீர் காகம், ஆற்றங்கரையில் வீசும் காற்றில் துணியை உலர்த்துவது போல், தனது கரு வண்ண இறக்கைகளை விரித்து மெளனமாக அமர்ந்திருந்தது.

சிலிகாவின் சலனமில்லா நீர் பரப்பு, மேகங்களற்ற நீல வானம், அமைதியாக பறந்து செல்லும் கொக்குகள் என்று கண் முன் விரியும் காட்சிகள் சாமானியர்களையே ஹைக்கூ பாட வைத்து விடும். கவிஞர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஓடியாவின் பெரும் கவியாக கருதப்படும் ராதாநாத் ராய் இந்த ஏரியின் அழகில் மயங்கி ‘சிலிகா’ என்ற ஒரு காவியத்தையே படைத்துள்ளார். ‘முத்து அணியாரம் போல் வெண் நீர் பறவைகளை அணிந்த சிலிகா உத்கல தேசத்தின் மகுடம்’ என்று இந்தப் பெரும் ஏரியை வர்ணித்திருக்கிறார்.
ஆனால், சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒடிஷாவின் இந்த நீர் மகுடம் நழுவும் நிலையில் இருந்தது. கவிகள் பாடிய சிலிகாவின் அழகு குலைந்து, அவள் அணிந்து வந்த ஆபரணங்களில் கோர்க்கப்பட்ட முத்துக்கள் சிதறின. அதற்கு பல காரணங்கள் உண்டு.
சிலிகா நீரில் வளரும் இறால்களுக்கு மவுசு அதிகம். எண்பதுகள் வரை சிலிக்காவில் வாழும் மீனவர்கள் மட்டுமே, பாரம்பரிய மீன்பிடி முறைகளில், இறால்களை பிடித்து வந்தனர். ஆனால், 1990 களில் பணம் மற்றும் அரசியல் பலம் கொண்ட பல வெளியாட்கள் இந்த ஏரி முழுதும் இறால் பண்ணைகள் அமைத்து பெரும் லாபம் சம்பாதிக்க ஆரம்பித்தனர். பல தலைமுறைகளாக மீன் பிடித்து வந்த சிலிகா ஏரி மீனவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். ஏரி முழுதும் aquaculture என்று அறியப்படும் நவீன மீன் பிடிப்பு யுக்திகள் பெருகின. இறால்களின் அறுவடை கட்டுக்கடங்காமல் பெருகியது. ஏற்றுமதி பன்மடங்கு உயர்ந்தது. ஆனால், இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு விலை கொடுத்தது என்னவோ சிலிகாவின் மீன்வளம் மற்றும் அதன் பல்லுயிரியம் (Biodiversity) தான்.
சிலிக்காவில் இருக்கும் இறால்கள் ஏரியில் இருந்து வங்கக் கடலுக்கு சென்று இனப்பெருக்கம் செய்யும். பின்னர், இறால் குஞ்சுகள் கடலில் இருந்து மீண்டும் ஏரிக்கு திரும்பி வரும். இந்த இரு வழி நீர் பாதையை இந்த எண்ணில்லா வலைப் பண்ணைகள் அணையிட்டு தடுத்தன. இந்தத் தடைகளை மீறி வரும் இறால் குஞ்சுகள் கூட வியாபாரிகளின் கண்களுக்கு லாபமாகவே தோன்றியது. இதன் காரணமாகப் பண்ணைகளுக்கு வெளியே இருக்கும் இறால்களின் எண்ணிக்கை தடாலடியாகக் குறைந்தது, அத்தோடு இவற்றை உணவாகக் கொள்ளும் மற்ற மீன்களின் எண்ணிக்கையும் இதனோடு சேர்ந்து விழுந்தது. இந்தச் சங்கிலி தொடரின் அடுத்த இணைப்பான பறவைகளின் எண்ணிக்கையும், வரவும் கூட சுருங்கின. எஞ்சி இருக்கும் பறவைகளும் வேட்டையாடப்பட்டு பல தட்டுகளில் ருசியான உணவாகப் பொரிந்து போனது.
இந்தச் சீர்கேடுகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, சிலிகா ஏரிக்கு நன்னீரை கொண்டு சேர்க்கும் ஏறக்குறைய ஐம்பதிற்கும் மேற்பட்ட நதிகளும், சிறு நதிகளும், நீரோடு வண்டலையும் அள்ளி வந்தன. இது காலங் காலமாக நடந்து வருவது தான் என்றாலும், அதிகப் படியான வண்டல் வருவதற்கு ஒரு முக்கிய காரணம், நதிகள் ஊர்ந்து வரும் நிலப்பரப்புகளில் காடுகள் காணாமல் போனது தான். மரங்களின் வேர்கள் மண்ணை இறுக்கிப் பிடித்து வைத்திருக்கும். அவை இல்லாமல் போனால் நீர் மண்ணை அள்ளிச் சென்று விடும். சிலிகாவில் நதிகள் கொண்டு சேர்த்த வண்டல், கடல் நீர் ஏரிக்குள் புகும் பகுதியை மேடிட்டு, ஏரிக்குள் வரும் உப்பு நீரின் அளவை குறைத்தது. இதனால் காயலின் அமைப்பும், நீரின் தன்மையும் மாறின. உவர் நீருக்கு தங்களை தகவமைத்துக் கொண்ட பல உயிரினங்களின் வாழ்வியல் முற்றிலும் தகர்ந்தது.
1983ஆம் ஆண்டு, சிலிகா ராம்சார் தளமாக (Ramsar site) அறிவிக்கப்பட்டது. அதாவது உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மட்டுமன்றி மானுடத்திற்கே அத்தியாவசியமாக கருதப்படும் ஈரநிலங்களில் (Wetlands) ஒன்றாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பத்தே ஆண்டுகளில், மேலே விவரித்த காரணங்களால், ‘அவசர சிகித்சை தேவை இல்லாவிட்டால் அதோ கதி தான்’ என்று எச்சரிக்கை விடும் மாண்ட்ரோ பட்டியலுக்குள் (Montreux record) இதன் பெயர் நுழைந்தது. இந்த எச்சரிக்கை மணியால் விழித்துக் கொண்ட அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் நிலைமையை சீர் செய்ய பல முயற்சிகள் மேற்கொண்டன.
கடலில் இருந்து நீர் வரும் பாதையை அகலப்படுத்தி, கணக்கே இல்லாது நடந்து வந்த மீன் பிடிப்பை மட்டுப்படுத்தி, பறவைகளை வேட்டையாடுவதை வரைமுறை படுத்தி, சிலிகாவை சுற்றியுள்ள மீனவ கிராமங்களை இந்த முயற்சிகளில் ஒன்றிணைத்து ஒரு வழியாக 2002 ஆம் ஆண்டு இகழ்தற்குரிய மாண்ட்ரோ பட்டியலில் இருந்து வெளி வந்தது சிலிகா. அலையாத்திக் காடுகளும், மடவை மீன்களும், பூநாரைகளும், அன்றில் பறவைகளும் மீண்டும் சிலிக்காவில் பெருகின.
~oOo~
‘சிகப்பு நண்டு பாக்கலாம்’ என்று சொல்லிவிட்டு படகை அருகில் சவுக்கு மரங்கள் நிறைந்த ஒரு மணற்திட்டை நோக்கி செலுத்தினார் படகோட்டி. தரையெங்கும் சிவப்பு மயில்கொன்றை பூக்கள் சிதறி இருப்பது போல் மணலெங்கும் சிவப்பு நண்டுகள் குவிந்திருக்கும் புகைப்படங்களை கண்டிருக்கிறேன். Red Ghost Crab என்று அறியப்படும் இந்த நண்டு வகையானது இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் சில பகுதிகளில் மட்டுமே அபரிமிதமாகக் காணப்படுகிறது. மணற்திட்டில் இறங்கி நோட்டம் விட்டேன். சில உடைந்த படகுகள், கிழிந்த மீன் வலைகளைத் தாண்டி மணலில் ஏதும் தென்படவில்லை. ‘சிவப்பு நண்டுகள் எங்கே’ என்றேன். அதோ என்று அருகில் இருக்கும் ஒரு சிறு குடிலை காண்பித்தான் படகோட்டி.
நான்கு சவுக்கு கம்பங்கள் நட்டு அதன் மேல் தென்னம் ஓலை தட்டிகளால் வேயப்பட்ட பந்தலில் அமர்ந்திருந்த வாலிபன் ஒருவன் படகை நோக்கி வந்தான். ஜீன்ஸ் பான்ட், மணிக்கட்டில் சுற்றப்பட்ட பல வண்ணச் சரடுகள், முழங்கை அருகே பெரிதும் சிறிதுமாக பச்சை குத்தப்பட்ட ஒரிய எழுத்துக்கள், காதில் துருத்திக் கொண்டிருந்த வெள்ளை நிற வயர்லெஸ் ஹெட் போன் என்று இந்தியாவின் பல சிறு நகர வீதிகளில் உலா வரும் ஒரு சராசரி இளைஞனின் இயல்புகள் கொண்ட ஒருவன் காயலில் மிதக்கும் ஒரு மணற்திட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்ற கேள்விக்கு சில நிமிடங்களில் பதில் கிடைத்தது.
அருகில் வந்தவன் அவன் கொண்டு வந்த இரண்டு பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் ஒன்றை என்னிடம் காண்பித்தான். அதன் வாயை சுற்றி வலை பின்னப்பட்டிருந்தது. உள்ளே இரண்டு சிவப்பு நண்டுகள் சாதுவாகக் கிடந்தன. பக்கெட்டை ஒரு தட்டு தட்டியவுடன் வேண்டா வெறுப்பாக கிடுக்கி போல் இருக்கும் கவ்விகளையும், கால்களையும் மெல்ல அசைத்து விட்டு மீண்டும் தூங்கச் சென்று விட்டன.
‘இந்த நண்டுங்க ரொம்ப ஸ்பெஷல். சிலிகால மட்டும் தான் இருக்கும். அசாத்திய சுவை’ என்று சிவப்பு நண்டுகளின் நற்பண்புகளை இந்தியில் ஒப்புவித்தான்.
‘தீவு பூரா நண்டா இருக்கும்னு சொன்னாங்களே’ என்றேன் உறங்கும் நண்டுகளை பார்த்தபடி.
‘அதெல்லாம் ரொம்ப தூரத்துல’ என்றான். அவன் கைகள் வங்கக் கடல் தாண்டி சுட்டின. என் பார்வை அந்தத் திசைக்கு போவதைப் பார்த்து மேலும் விவரம் கேட்பேனோ என்று எண்ணியவன் போல் ‘அதுவும் சீசன்ல தான்’ என்று என் அறிவு பசிக்கு அப்பொழுதே ஒரு முற்று புள்ளி வைத்தான் வயர்லெஸ் இளைஞன்.
படகில் மீண்டும் ஏறப் போன என்னை ‘கொஞ்சம் இருங்க’ என்று சொல்லி விட்டு அவனிடத்தில் இருந்த மற்றொரு பக்கெட்டை என்னிடம் நகர்த்தினான். அதன் உள்ளே தட்டு சிப்பிகள், சற்றே பெரிதான கூம்பு வடிவ கோபுர சிப்பிகள், வரி சிப்பிகள் சிதறிக் கிடந்தன.
‘எல்லாருக்கும் இத காமிக்க மாட்டேன், சில பேருக்கு தான், பிடிச்சிருந்தா வாங்கிக்குங்க’ என்று சொல்லிவிட்டு அர்த்தபுஷ்டியுடன் என்னை நோக்கினான். அவன் என்ன சொல்கிறான் என்பதை நான் அர்த்தப்படுத்திக் கொள்வதற்குள் பக்கெட்டில் இருந்த ஒரு தட்டை சிப்பியைக் கையில் எடுத்து ஒரு சிறு இரும்பு கழியால் அதைத் தட்டி உடைத்து, அதன் உள்ளிருந்து ஒழுகி வரும் ஜவ்வு போன்ற தசையில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து, அவன் உள்ளங்கைக்கு மாற்றி, என்னிடம் காட்டினான். சற்றே பருத்த க்ரோசின் மாத்திரை போல் ஒன்று அவன் உள்ளங்கையில் பளபளத்தது. அதை நீரில் கழுவி என் கையில் இட்டான்.
‘நல்முத்து. மார்க்கெட்ல இதோட விலை மூவாயிரத்து ஐநூறு ரூபா’.
முத்து, பவளம், தங்கம் போன்ற சமாச்சாரங்களைப் பற்றிய வணிக அறிவு எனக்கு மிகவும் குறைவு என்பதால் ஆச்சர்யத்தில் என் விழிகள் விரியவோ, அதிர்ச்சியில் என் உடல் பதறவோ இல்லை.
‘வியாபாரிகளுக்கு இத ரெண்டாயிரம் ரூபாய்க்கு விப்பேன். ஆனா, நீங்க டூரிஸ்ட், உங்களுக்கு ஐநூறு ரூவாய்க்கு தரேன்’ என்றான். ஒடிஷாவின் சுற்றுலாவை வளர்ப்பதில் ஏனோ அவனால் முடிந்த பங்கு என்பது போல் இருந்தது அவன் தொனி.
‘இல்லைங்க, எனக்கு வேண்டாம்’ என்று நழுவப் பார்த்தேன்.
’சரி இதப் பாருங்க’ என்று சொல்லி விட்டு இந்த முறை கோபுர சிப்பி ஒன்றை கையில் எடுத்தான். தூர நின்று அலைபேசியில் மும்முரமாக பேசிக் கொண்டிருந்த படகோட்டியை நோக்கி கை அசைத்தேன்.
அதற்குள் இரும்பு கழி கோபுர சிப்பியை உடைத்திருந்தது. அதன் உள்ளில் இருந்து நண்டு போன்ற ஏதோ ஒரு ஜீவராசி சூரியனில் பள பளக்கும் மஞ்சள் நிறக் கல் ஒன்றை அதன் துடிக்கும் கால்களால் நகர்த்திக் கொண்டிருந்தது. கல்லை, உடைந்த ஓட்டில் இருந்து, எடுத்து ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையே பிடித்து, சூரியனை நோக்கி காண்பித்து, ‘கலர் பாத்தீங்களா? புஷ்பராகக் கல். அதிர்ஷ்ட கல். மோதரம் செஞ்சு விரல்ல மாட்டுனீங்கன்னா மனசுக்கு ரொம்ப அமைதி கிடைக்கும். அவ்வளவு சக்தி’ என்று நிமிடத்தில் ஜோதிடராக உரு மாறினான் இளைஞன்.
நிலத்தில் தோண்டி எடுக்கப்படும் புஷ்பராகக் கற்களை சிப்பிக்குள் இருக்கும் நண்டு போன்ற ஜீவராசியின் படைப்பாக மாற்றிய இளைஞனை, இல்லை கலைஞனை, பார்த்து கை கூப்பி விட்டு படகில் ஏறினேன்.
‘கடைசி விலை ரெண்டும் சேத்து ரெண்டாயிரம் ரூபா. கூட ஒரு பவளமும் தரேன். ஜீ பே பண்ணலாம்’ என்று அவன் சொன்னதை கேட்டு சிரிப்பு வந்தது.
‘நீங்க வாங்கலியா, நெறய பேர் வாங்குவாங்க’ என்றான் படகோட்டி எஞ்சினை முடுக்கியபடி.
‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, நம் நாட்டிலே…’ என்று முணுமுணுப்பாகப் பாடினேன்.
‘க்யா?’ என்றான் படகோட்டி.
‘டால்பின்ஸ் பாக்க போலாமா’ என்றேன்.
இந்தியாவில் மிகச் சில இடங்களில் மட்டுமே ஐராவதி ஓங்கில்கள் (Irrawaddy Dolphins) காணக் கிடைக்கும். சிலிகா ஏரி அதில் ஒன்று. அருகிவரும் உயிரினங்கள் பட்டியலில் இருக்கும் இந்த ஓங்கில்களைக் காண்பது சற்று கடினம். ஆனால், சிலிகா ஏரியின் படகோட்டிகளுக்கு அவை தோன்றக்கூடிய இடங்களை பற்றிய நல்ல அறிதல் உள்ளது. ‘பவழத் தீவில்’ இருந்து ஒரு முப்பது நிமிட நேரத்தில், வங்க கடலும் ஏரியும் சங்கமிக்கும் இடத்திற்கு அருகே ஓங்கில்களைக் கண்டேன்.
படகிலிருந்து சற்று தொலைவில், அலையில்லா நீர் பரப்பில், சட்டென்று நுரை கொப்பளித்தது. மூன்று நீண்ட கரு வடிவங்கள், நீரிலிருந்து மேலேறி மீண்டும் மறைந்தன. சில வினாடிகள் மட்டும் தென்பட்ட அவற்றின் வளைந்த முதுகுகள் காற்றடைத்த லாரி ட்யூபுகள் போல் வெயிலில் பளபளத்தன. சிறு முக்கோண வடிவ முதுகுத் துடுப்பு நீரின் மேல் காகிதப் படகு போல் மிதந்து அமிழ்ந்தது. என் அலைபேசியை எடுத்து படம் பிடிக்கும் முன்னரே அவை மறைந்தன. ஓங்கில்கள் தோன்றின என்பதின் அடையாளமாக சிற்றலைகள் அங்கே நீரில் மலர்ந்து, வட்டமாக விரிந்து, கலைந்து போயின.
மற்ற ஓங்கில்கள் போல் ஐராவதிகளுக்கு நீண்ட மூக்கு கிடையாது. அவற்றின் முக அமைப்பு Beluga என்றழைக்கப்படும் வெள்ளை திமிங்கிலங்களைப் போல் உருண்ட முன்னந்தலைகள் உடையவை. இவை வேட்டையாடும் முறை மிகவும் வித்தியாசமானது. நீரை மீன்களின் மேல் பலமாகப் பீய்ச்சி அடித்து அவற்றை திக்குமுக்காடச் செய்து, கூட்டமாக ஓரிடத்தில் அவற்றை திரட்டி, சாவகாசமாக இரையைக் கபளீகரம் செய்யும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், உலகின் சில இடங்களில், இந்த ஓங்கில்கள் மீனவர்களோடு ஜோடி சேர்ந்து வேட்டையாடுவது தான்.
மியன்மாரில் உள்ள ஐராவதி நதியில் (இந்த நதியில் இவ்வகை ஓங்கில்கள் அதிகம் காணக் கிடைப்பதால் தான் இவற்றிற்கு ஐராவதி ஓங்கில்கள் என்ற பெயர் வந்தது) பல காலமாக மீனவர்களும் ஓங்கில்களும் கூட்டணி அமைத்து மீன் பிடித்து வருகின்றனர். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் பொழுது சில பிரத்யேக ஒலிகளை உண்டாக்கி ஓங்கில்களை அழைக்கின்றனர். இவை இரை மீன்களை ஒன்று திரட்டி மீன்பிடி படகின் அருகே ‘நகர்த்துகின்றன’. வலையில் சிக்கும் மீன்கள் மீனவர்களுக்கு, மற்றவை ஓங்கில்களுக்கு. Cooperative fishing என்ற இந்த முறை சிலிகா ஏரியிலும் உண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஏறக்குறைய நூற்றைம்பதிலிருந்து இருநூறு ஓங்கில்கள் சிலிக்காவில் உண்டு என்று கணக்கெடுப்பு கூறுகிறது. கடலை ஒட்டிய பகுதிகளில் மட்டும் அல்லாது, கடலில் இருந்து வெகு தூரம் தள்ளி கூட, அதாவது ஏரியின் உள்ளே கூட, இவை வலம் வரத் துவங்கியிருக்கின்றன. சிலிகா ஏரி மேம்பட ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி.

சூரியன் இறங்க ஆரம்பித்தது. ஏறக்குறைய நான்கு மணி நேரங்கள் ஏரியை சுற்றியாகி விட்டது. ஆனாலும், ஒரு மிகச் சிறிய பகுதியை தான் பார்த்திருப்பேன். படகுத்துறைக்கு செல்வதற்கு முன்னால் மற்றொரு சிறு மணற் தீவில் இறங்கினோம். இரு பக்கமும் சவுக்கு மரங்கள் காற்றில் ஆட பாதை ஒன்றின் முடிவில் தென்னம் ஓலையால் வேயப்பட்ட ஒரு தேநீர் கடை தெரிந்தது. கால்கள் மணலில் புதைய அங்கே நடந்து சென்றேன். அலுமினியம் பாத்திரங்களும், மேகி பொட்டலங்களும், நிழலில் உறங்கிக்கொண்டிருந்த இரண்டு நாய்களைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. ஒரு தேய்ந்த மரப் பலகையில் உட்கார்ந்து கொண்டேன். கண்ணாடிக் குவளையில் தேநீரை என்னிடத்தில் நீட்டினார் கடைக்காரர். என் வலது பக்கம் வங்க கடலின் அலைகள் கரையை வேகமாக வருடிச் சென்றன. என் இடது பக்கம், நடந்து வந்த பாதையின் துவக்கத்தில், என்னை சுமந்து வந்த படகு காயல் நீரில் ஆடாமல் நின்றிருந்தது. புகையோடிய டீ மிதமான சூட்டுடன் என் தொண்டையை நனைத்தது.
(கலிங்கம் முற்றியது)
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
