தமயந்தியை விட்டுப் பிரிந்த நள மகாராஜா காட்டில் பெரும் காட்டுத் தீ, ஜுவாலை வீச எரிந்து கொண்டிருந்தைக் கண்டான். அதனுள் அகப்பட்டுக் கொண்ட ஏதோ ஒரு ஜீவன், பரிதாபமாக அலறுவதைக் கேட்டான். அதுவோ, அவனை பெயர் சொல்லி அழித்தது..

‘ , நளனே! நீ நல்லவன் என்று அறிவேன். இங்கு வா ‘ என்றது. அதைக் கேட்டு, பயப்படாதே என்று சொல்லி அந்த ஜுவாலைக்குள் புகுந்து அதில் அகப்பட்டுக் கொண்டிருந்த பெரிய பாம்பை வெளிக் கொணர்ந்தான். அதுவும் உருவம் எடுத்துக் கொண்டு கை கூப்பியபடி, தன் நடுங்கும் குரலில் பேசியது.
“அரசனே! நான் கார்கோடகன் என்ற பாம்பரசன். நாரதர் என்ற மகரிஷியை ஒரு முறை ஏமாற்றினேன். மகான் அவர். துறவி, நல்ல குணவான். வரும் காலத்தை கணித்து சொல்வதில் வல்லவர்.
அவரோ ‘இங்கு இரு. அசையாத பாம்பாக கிட. நளன் என்ற அரசன் இங்கு வருவான். அவன் உன்னை காப்பாற்றி எங்கு அழைத்துச் செல்கிறானோ, உடனே இந்த சாபத்திலிருந்து விடுபடுவாய். ‘ என்றார். அதன் காரணமாக நான் அசையாமல் கிடந்தேன் , இயல்பான என் அசைவும் நின்றது. நான் சொல்வதைக் கேள். உன் நன்மைக்குத்தான் என்று நம்பி ஏற்றுக் கொள். எனக்கு சமமான மற்றொரு பாம்பு கிடையாது. உன் கையில் ஒளியாக நான் இருப்பேன். நீ கை வைத்த இடந்தில் நீ விரும்பிய வண்ணம் வருவேன். என்னை எடுத்துக் கொண்டு சுகமாக உன் வீட்டுக்குப் போ.
அந்த பெரிய பாம்பு கட்டை விரல் அளவு ஆகி அவனிடம் தஞ்சம் புகுந்தது. அந்த தீயின் ஜுவாலைகள் எட்டாத வசதியான இடம் வந்ததும் நளன் கார்கோடகனை விடுவிக்க நினைத்தான். ஆனால் அதுவோ, ‘நிஷத ராஜனே! நீ போகும் இடங்களில் எல்லாம் சில காலடிகள் பின் தங்கி நான் வருவேன். என்னை நம்பு. உனக்கு காவலாக, உன் நன்மைக்குத்தான் சொல்கிறேன். என்றது
நளனும் நடந்தான். ஆனால் பத்தாவது காலடியில் அந்த நாகம் அவனைக் கொட்டியது. உடனே நளனுடைய உருவம் மெள்ள மெள்ள மாறியது. அந்த நாகம் தன் இயல்பான உருவை எடுத்துக் கொண்டது, ஆனால் நளன் தன் இயல்பான உருவை இழந்தான். கார்கோடகன் சொன்னது: நள மகாராஜா, உன் அழகை தான் இழந்தாய். வருத்தப் படாதே. அந்த கொடியவர்கள் உன்னை அடையாளம் காண முடியாது. உன்னை ஏமாற்றியவர்கள் இன்னமும் உன்னைத் தேடுகிறார்கள். உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த உன் உடலில் உள்ளவனை என் விஷம் தாக்கி வருத்தும். அதனால் அவன் வருந்தி வருந்தி என்னை உதறவும் முடியாமல் அனுபவிக்கட்டும். உன் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் என் விஷம் பரவி இருக்கிறது. அவனால் ஒளிந்து கொள்ளவும் முடியாது. என்னால் செய்ய முடிந்த பிரதி உபகாரம் இது. ஓ அரசனே! பொல்லாத கலி உன் உடலில் புகுந்திருக்கிறானே, காரணம் இன்றி உன்னை எதிரியாக பாவித்தவன் அவன். உன்னை வெறுத்தான். உன் அழிவுக்கு வழி வகுத்தவனும் அவனே. படட்டும்.
அரசனே, உன் உலகில் வீரனாக, புலி போல பயமின்றி உன் நேர்மையே கவசமாக நிமிர்ந்து நடந்து கொண்டிருந்தவன் நீ. நான் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன். எந்த மிருகமோ, எதிரியோ, உன்னை எதுவும் செய்ய முடியாது. என் விஷம் அளிக்கும் வலியை பொறுத்துக் கொள். உடல் வலிமையும், மன வலிமையும் இழக்காமல் அது உன்னை பலப்படுத்தும். இன்னும் பல போர்க் களங்களை சந்திப்பாய். வெற்றி வீரனாக கொண்டாடப் படுவாய். அரசர்களுள் மாணிக்கமாக போற்றப் படுவாய்.
நீ இன்றே, அயோத்திக்குச் செல். அழகிய ஊர் அது. அந்த நாட்டு அரசன் ருது பர்ணன் என்பவன். அவனும் ஸூதாட்டத்தை விரும்புபவன். வாகுகன் என்ற பெயரை ச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள். ரத சாரதி நான், அஸ்வ வேதம் அறிவேன் என்று சொல்லிக் கொள். அவனிடம் இந்த விளையாட்டின் பல வழிகளையும், வெற்றி பெறத் தேவையான கணித அறிவும் அவனிடம் பெறுவாய். அவனும் உன்னிடம் குதிரைகளை பராமரிப்பது பற்றி தெரிந்து கொள்வான். இக்ஷ்வாகு வம்சத்தில் வந்தவன். செல்வம் கொழிக்கும் அரசு அவனுடையது. அவன் உனக்கு நண்பனாக இருப்பான். உன்னைப் போலவே விளையாட்டாக அந்த ஸூதாட்டத்தை அறிந்தவன், பல விதமாகவும் அந்த அறிவை வைத்து விளையாடுவதோடு நிறுத்திக் கொண்டு விட்டவன். தானும் ஏமாற்ற மாட்டான், தானே ஏமாறவும் மாட்டான். உன் வீழ்ச்சிக்கு காரணமான இதே ஆட்டம், உன்னை ராஜ்யத்தை திரும்பப் பெறுவதிலும், பழைய நிலைக்கு திரும்பவும் பயன் படும்.
அரசனே! வருந்தாதே. விரைவில் உன் மனைவி, குழந்தைகளை, நாட்டை திரும்பப் பெறுவாய். என்னை நம்பு. உன் மனதில் சென்ற காலத்தின் சுவடே இருக்க வேண்டாம். வரும் காலத்தை நினைத்து உன்னை மேம்படுத்திக் கொள். இதோ இந்த ஆடை. இதை உடுத்திக் கொள். இது உன்னை எந்த ஆபத்தும் தொடராமல் காக்கும். என்னை நினைவுறுத்திக் கொண்டே இருக்கும். சரியான சமயத்தில் உன் பழைய உருவம் பெறுவாய்.
இவ்வாறு சொல்லிக் கொண்டே, மேலாடை, இடையில் அணிய ஒன்று என்று தனித் தனியாக இரண்டு ஆடைகள் கச்சிதமாக அவன் உடலுடன் பொருந்துவதாக அளித்தான்.
அதன் படியே, அரசன் நளன் அயோத்தி சென்றான். ருது பர்ண ராஜாவிடம் தன்னை வாகுகன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான். உலகத்திலேயே எனக்கு இணையாக குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்து ஓட்டுவதில் எவரும் இல்லை என்றான். எனக்கு பல விஷயங்களில் தேர்ச்சி உண்டு. நன்றாக சமைப்பேன். அதையும் ஒரு கலையாக பயின்றவன் நான். உலகத்தில் உள்ள கலைகள் அனைத்திலும் எனக்கு பரிச்சயம் உண்டு, என்னை சோதித்து பார்த்துக் கொள் என்றான். என்னை அருகில் வைத்துக் கொள்வதில் உனக்கு நன்மையே.
ருதுபர்ணன் உடனே சம்மதித்தான். என்னுடன் இரு. உனக்கு நன்மை உண்டாகட்டும். எந்த கலை உனக்கு விருப்பமோ செய்து பழகிக் கொள். எனக்கும் வேகமாக குதிரைகள் பூட்டிய ரதத்தை ஓட்டிச் செல்வதில் ஆசை உண்டு. என் குதிரை லாயத்தை பார். பலவித உயர் ஜாதி குதிரைகளை சேமித்து வைத்திருக்கிறேன். நூறாயிரம் பொற்காசுகள் உனக்கு ஊதியமாக தருகிறேன். என்னிடம் உள்ள வார்ஷ்னேயனும், ஜீவாலா என்பவனும் உனக்கு அடங்கி செயல் படுவார்கள். வாகுகா! என்னுடன் இரு, என்றான்.
நளன், அரசனின் மெய்க் காவலனாக அந்த நாட்டில் இருந்தான். வார்ஷ்னேயனும், ஜீவலனும் அவனிடம் மரியாதையாக இருந்தனர். தினமும் ஒரு பாடலைப் பாடுவான். ‘எங்கு சென்றாளோ என்ன செய்கிறாளோ, பசி தாகம் வாட்டுமே, நைந்து போன உடையில் திரிகிறாளோ, அவள் மனதில் இன்னமும் அந்த பொறுப்பற்ற ஏமாந்து தோற்ற கணவனே தானே இருப்பான். அவளை யார் காப்பாற்றுவார்கள், யார் புகலிடம் கொடுத்தார்களோ’
ஒரு இரவு ஜிவாலா அவனிடம் கேட்டான். யாரை நினைத்து இந்த பாடலைப் பாடுகிறாய். ‘வாகுகா, யாரை நினைத்து தினமும் இப்படி வருந்துகிறாய். யாருடைய மனைவி அவள்? ஏன் அவளை நினைத்து வாடுகிறாய்?’
‘ஒரு அசட்டு மனிதன் சுய புத்தியில்லாதவன் அவள் கணவன். அவளை பலரும் அறிவர். அந்த மனிதன் அளித்த வாக்குறுதிகளை அந்த பெண் அப்படியே நம்பினாள். அந்த அசட்டு மனிதன் அவளை கை விட்டு பிரிந்தான். பிரிந்தானே தவிர, அந்த மனிதன் அவளை நினைக்காத நேரமில்லை. எங்கெல்லாமோ சுற்றி அலைந்தாலும் அவள் நினைவாகவே இருக்கிறான். இரவானால் அவளை நினைத்து தான் இந்த பாடலைப் பாடுகிறேன்.’ என்றான். உலகத்தில் அவன் சுற்றாத இடமில்லை. பல விதமான அனுபவங்களைப் பெற்றான். பட்ட கஷ்டங்களுக்கு அளவில்லை. இயற்கையில் நல்லதோ, பொல்லாதோ, ஒரு முடிவு உண்டு தானே. எனக்கும் கடைசியில் ஒரு இடத்தில் அடைக்கலம் கிடைத்தது. நாட்டை விட்டு விரட்டப் பட்டு காடுகளில் தஞ்சம் அடைந்த பொழுதும் உடன் வந்தாளே அந்த உத்தமியான மனைவி, ஏன் அப்படித் தோன்றியது தெரியவில்லை, நான் விலகினால், அவள் நலமாக இருப்பாள் என்று எப்படி நினைத்தேன். ஆண் மகன் என்னாலேயே பசி தாகம் பொறுக்க முடியவில்லை. கையேந்தவும் மனமின்றி கிடைத்த இடத்தில் நீர் மட்டுமே ஆகாரமாக வாழ முடிந்தது. அவள் என்ன செய்திருப்பாள்? வன மிருகங்களுக்கு உணவாக ஆகி இருப்பாளா? அறிவில்லாத கணவன் ஏமாந்தால் அவள் ஏன் அதன் பலனை அனுபவிக்க வேண்டும்.
ருது பர்ண அரசனிடம் வேலை செய்வதில் ஈடுபாட்டுடன் செய்தான். அரசனின் மதிப்புக்கு ஆளானான்.
நடந்ததை அறிந்த விதர்ப ராஜன், பீமன், நளனைத் தேட நால் திசைகளிலும் ஆட்களை அனுப்பினான். அந்தணர்கள் ஒரு புறம் சென்றனர், படை வீரர்கள் ஒரு புறம் சென்றனர். தன் மகளை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும் என்று நிறைய வசதிகள் செய்து கொடுத்து ஆட்களை பல தேசங்களுக்கும் அனுப்பினான். கண்டு சொல்பவர்களுக்கு பரிசுகள் அறிவித்தான். ஆயிரம் வராகன், நிலம், வீடுகள் எதுவானாலும் கேட்டதைத் தருவேன். என் மகளை கண்டு பிடித்து அழைத்து வாருங்கள் என்று கண்ணிர் மல்க வேண்டிக் கொண்டான்.
விதர்ப தேசத்து பிரஜைகள் தாங்களே அவளிடம் கொண்ட அன்பினால் தேடக் கிளம்பினார்கள். அரசனின் பரி தவிப்பை உணர்ந்த அருகில் இருந்த அரசு அதிகாரிகளும் வேகமாக செயல் பட்டனர்.
அந்த நாட்களில் சேதி என்ற நாடு மிக்க வளம் உடையதாக புகழ் பெற்றிருந்தது. தலை நகரம் மிக அழகாக அலங்கரிக்கப் பட்டு விளங்கியது. சுதேவர் என்ற ஒரு அந்தணர், அந்த நாட்டு அரசனின் அழைப்பை ஏற்று அவருடைய அரண்மனைக்கு மற்றவர்களுடன் ஏதோ பூஜைகள். மற்றும் தெய்வ காரியங்களைச் செய்ய சென்றிருந்தார். சுனந்தா என்ற ஒரு பெண் அரசனுடன் அமர்ந்து இருப்பதைக் கண்டார். ஏனோ அவர் கவனம் அவளிடம் சென்றது. அவள் அருகில் இருந்தவள் விதர்ப தேசத்து ராஜ குமாரி தமயந்தியோ, என்ற சந்தேகம் வந்தது. புகை முடிய தீபத்தின் ஒளி போலவும், நலிந்த அடைகளில் தன் அழகை மறைக்க முடியாத எளிமையான பெண் அரச மண்டபத்தில் எப்படி வருவாள் என்றும் சந்தேகம் வர, தமயந்தி தான் என்று அவளுடைய விசாலமான கண்களை வைத்து அறிந்து கொண்டார். தான் வந்த காரியத்தில் கவனமாக இருந்தார். நடு நடுவில் அவள் இருப்பதை கவனித்துக் கொண்டார்.
லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம் போன்ற அருள் சுரக்கும் விழிகள். இளமையின் அழகு, பூர்ண சந்திரன் போன்ற முகப் பொலிவு. அவள் இருக்கும் இடமே வெளிச்சம் போட்டது போல பிரகாசமாக ஆகி விட்டிருக்கிறது. காம தேவனின் ரதி போல இருக்கிறாள். ஏதோ காரணமாக கமல வனத்தில் இருந்து பிடுங்கி, வறண்ட நிலத்தில் பயிரிட்டது போல வாடி இருக்கிறாள். யாராக இருக்கும்? தமயந்தி தான் என்று தானே தீர்மானித்துக் கொண்டார். முகம் வாடி இருக்கிறது. ராகு பீடித்த சந்திரன் போல. வற்றிய ஜீவ நதி போல. யானை கலக்கிய குட்டை போல, கலங்கி இருக்கிறாள். தன் வேலையை செய்து கொண்டே கிடைத்த இடைவெளியில் அவள் இருக்கும் இடம் எதேச்சையாக பார்ப்பது போல கண் காணித்துக் கொண்டே இருந்தார். நளனையும் இடையிடையே நினைத்துக் கொண்டார். அரிய பொருளை அடைபவன் அதை பாதுகாக்கவும் வேண்டும். இப்படியா தவிக்க விடுவான் என்றும் நினைத்தார். நகையெல்லாமா பெண்களுக்கு அழகு, கணவனின் அருகாமை இருந்தால் இவள் முகம் எப்படி மலர்ந்து இருக்கும், வாய் பேசாமல் இப்படி அமர்ந்திருப்பாளா? அவள் இருக்கும் இடம் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் தோழிகளுடன் பேசி சிரித்து ஆரவாரமாக இருக்குமே. கறுத்த குழல்களும், பத்ம பத்ரங்கள் போன்ற கண்களும் என்று நிமிர்ந்து பார்த்த நேரங்களில் கண்ணில் பட்டதை மனதினுள் வர்ணித்து தற்சமய இயலாமையால் இருப்பவளை கண்டு தானும் வருந்தினார். ரோஹிணி, சந்திரனுடன் சேர்ந்தது போல இவளும் விரைவில் கணவனை அடைய வேண்டும் என்று ஆசி அளித்தார். நிஷத ராஜாவின் சகோதரர்களும், மந்திரி அரச சபையினரும் அவன் திரும்பி வந்து ராஜ்ய பொறுப்பை ஏற்கும் நாளில் எப்படி மகிழ்வார்கள்.
ஒருவருக்கொருவர் பொருத்தமான தம்பதிகள். யார் கண் பட்டதோ. அருகில் சென்று விசாரிக்கலாமா? வேண்டாம், நான் அவளை அறிவேன் அவளுக்கு என்னை தெரிந்திருக்காது. ஆனாலும் பூஜைகள் முடிந்தவுடன் அவர் தமயந்தியின் அருகில் சென்றார். பேச்சு கொடுத்தார்.
‘நீ விதர்ப தேசத்து அரச குமாரி தானே. நான் சுதேவன் என்ற அந்தணன். உங்கள் சகோதரர்களை அறிவேன். நாங்கள் நண்பர்கள். .உங்கள் தந்தை நாட்டில் அறிவித்திருக்கிறார். யார் கண்டாலும் சொல்லுங்கள் என்று பறையடித்து சொல்லி இருக்கிறார். உங்கள் மகனும், மகளும் நலமாக இருக்கட்டும். நீண்ட ஆயுளும், கல்வியும், பலவிதமான நன்மைகளையும் பெற்றவர்களாக வாழ ஆசீர்வதிக்கிறேன். உங்கள் உறவினர்களும் ஆயிரக் கணக்கான அந்தணர்கள் என்னை போலவே பல இடங்களுக்கும் செல்பவர்கள், உங்களைத் தேடிக் கொண்டு இருக்கிறோம்.
தமயந்தி அவரை அடையாளம் கண்டு கொண்டாள். தன் சகோதரர்கள், உறவினர்களை பெயர் சொல்லி விசாரித்தாள். அவர்கள் நலமே என்று ஆறுதல் சொன்னாலும், அவள் கண்ணீரை அடக்க முடியாமல் விம்மலானாள். சுனந்தா என்ற அந்த சிறுமி, இவர்கள் இருவரும் தனிமையில் பேசுவதையும், தமயந்தி அழுவதையும் தன் தாயிடம் சொன்னாள். ‘அம்மா சைரந்திரி அழுகிறாள். அந்த அந்தணன் என்ன சொன்னான் என்பது தெரியவில்லை’ என்றாள். அதைக் கேட்டு சேதி ராஜனின் தாயார் அங்கு வந்தாள்.
சுதேவா என்று பெயர் சொல்லி அழைத்து என்ன விஷயம்? ஏன் இந்த பெண் வருந்துகிறாள், என்றாள். யார் இவள்? இந்த அழகிய பெண் யாருடைய மனைவி? யாருடைய குல விளக்காக பிறந்தவள்? இந்த அழகிய கண்களே வசீகரமாக இருக்கின்றனவே. இவள் உறவினர்கள் எங்கே? யாரை நினைத்து அழுகிறாள்? உனக்கு உறவினளா? சுதேவா, விவரமாகச் சொல். என்றாள்.
அவரும், அமர்ந்து கொண்டு விரிவாக அவள் நிலையை எடுத்துச் சொன்னார்.
விதர்ப என்ற தேசம் அதன் அரசன் பீமன் என்பவன். மிக சிறந்த அரசு என்று புகழ் பெற்றது. அவன் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். இந்த பெண், அவனுக்கு மகளாக பிறந்த பாக்கியசாலி. தமயந்தி என்று பெயர்.. நிஷத தேசத்து அரசன் நளனை மணந்தாள். நளன் வீர சேனர் என்பவரின் மகன். நேர்மையே உருவான, ஆற்றல் மிகுந்த நல்ல அரசன் நளன். பிரஜைகளை கண்ணும் கருத்துமாக பாலித்தான். அவன் ஆட்சியில் மக்கள் அனைத்து நலன்களும் பெற்று வளமாக வாழ்ந்தனர். பயிர்கள் செழித்தன, செல்வம் கொழித்தது. அவன் சகோதரனே புஷ்கரன் என்பவன் ஸுதாட்டத்தில் அவனை தோற்கடித்து, ராஜ்யத்தை கைப் பற்றினான். ஒருவரும் அறியாமல் நாட்டை விட்டே வெளியேறினான். தமயந்தியும் பின் தொடர்ந்தாள்.
சில நாட்களாக நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் தமயந்தியைத் தேடுகிறோம். இன்று தான் உங்கள் மகன் வீட்டில் அவளை நான் கண்டு கொண்டேன். அவளுக்கு சமமான மற்றொரு அழகிய பெண்ணை காணவே முடியாது. அவளை அருகில் இருந்து பாருங்கள். இரு புருவங்களுக்கும் இடையில் தாமரை மலரின் வடிவில் ஒரு அடையாளம் இருக்கும். நாங்கள் முன் ஒரு சமயம் பார்த்த பொழுது இதைக் கண்டு இருக்கிறோம். தற்சமயம் அவள் முகத்தை திரையிட்டு மறைத்துக் கொண்டிருக்கிறாள். படைத்தவனே, இந்த அடையாளமிட்டு, இவள் சென்ற இடமெல்லாம் சிறப்பு பெறுவாள் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் போலும். முதல் நாள் பிறை சந்திரன் போன்று இருக்கும். அது தெரியாமல் மறைந்து கூட போய் இருக்கலாம். அவள் தன்னை பேணிக் கொள்வதில்லை என்பது மலினமான உடல் காட்டுகிறது. தெய்வீகமான அழகுடைய இந்த பெண்ணை பார்த்த விநாடியே அடையாளம் காட்ட அவள் மேனி அழகுடன், இந்த அடையாளமும் போதும். நெருப்பின் அருகாமையை அதன் ஸூட்டினால் நாம் அறிந்து கொள்வதைப் போல. நான் அறிந்து கொண்டேன்.
சுனந்தா கேட்டாள். அந்தணரே! நான் அருகில் சென்று பார்க்கிறேன், என்று சொல்லிக் கொண்டே தமயந்தியின் அருகில் சென்று முகத் திரையை விலக்கி, புருவங்களின் மத்தியில் இருந்த அடையாளத்தைக் கண்டாள். சுனந்தாவும் அவள் தாயாரும் அழ ஆரம்பித்து விட்டனர். தமயந்தி அமைதியாக இருந்தாள். ராஜ மாதா, அவளை அணைத்துக் கொண்டு அழுதபடி, இந்த அடையாளத்தினால் நீ என் உடன் பிறந்த சகோதரியின் மகள் என்பதை அறிந்து கொண்டேன். மகளே, உன் தாயும் நானும், சுதாமன் என்ற அரசனின் பெண் மகவுகள். தசார்ண என்ற தேசத்து அரசன் எங்கள் தந்தை. அவள் விதர்ப தேசத்து அரசன் பீமனுக்கு வாழ்க்கைப் பட்டாள், நான் இந்த நாட்டு வீரபாஹு என்பவரை மணந்தேன். நீ பிறந்த பொழுது தந்தை வீட்டில் நானும் இருந்தேன். தசார்ணத்தின் அரண்மனையில் தான் பிறந்தாய். மகளே, இதுவும் உனக்கு பிறந்தகமே. இதன் செல்வங்களும் என் போன்றே உனக்கும் உரியது என்று உரிமையோடு ஏற்றுக் கொள்.
யார் என்று தெரிந்தவுடன், தமயந்தி தாயின் சகோதரியை, காலில் விழுந்து வணங்கினாள். சற்று மனம் தெளிந்து அவளிடம் பேசினாள்.
‘தாயே! தெரியாமலே நான் இந்த வீட்டில் உரிமையோடு மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன். நீங்கள் எனக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தீர்கள். இங்கு கால் வைத்த நேரம், என் வாழ்வில் மேலும் நன்மைகள் கிடைக்கப் பெறுவேன் என்ற நம்பிக்கை வருகிறது. வெகு நாட்களாக மறைந்து இருந்திருக்கிறேன். என் குழந்தைகள் என் தந்தையிடம் வளருகின்றனர். தாய் தந்தையாக நாங்கள் இருவருமே அருகில் இன்றி வளர்ந்து விட்டார்கள். பல நாட்கள் நகர்ந்து விட்டன. எனக்கு அனுமதி கொடுங்கள். நான் விதர்ப தேசம் போகிறேன். எனக்கு ஒரு வாகனம் தயார் செய்து கொடுங்கள். யாரும் அறியும் முன் நான் விதர்ப தேசம் போய் சேருகிறேன்.
அந்த ராஜ மாதா, தன் மகனிடம் சொல்லி, வசதியான பல்லக்கும், அதை தூக்கும் நம்பகமான ஆட்களுமாக தமயந்தியை விதர்ப தேசத்துக்கு அனுப்பி வைத்தாள். நல்ல ஆடைகளும், ஆபரணங்களும், கொடுத்து அனுப்பினாள். வழி நடையில் உணவும், குடி நீரும் கிடைக்க ஏற்பாடு செய்தாள். விரைவில் அவர்கள் விதர்ப தேசம் சென்றடைந்தனர். ஊர் மக்களும் அரச குடும்பத்தினரும் வந்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.
தன் பெற்றோர், தன் குழந்தைகள், உற்றார் உறவினர், பழைய அணுக்கத் தாதிகளும், பணிப்பெண்களும் என்ற அந்த ஸூழ்நிலையில் அவள் மனம் மகிழ்ந்தது. அவன் தந்தை பீமன் மற்றும் அரச குலத்தவர், அவளை கண்டு கொண்ட சுதேவருக்கு வாக்களித்தபடி ஆயிரம் வராகன் கொடுத்தும், ஒரு கிராமத்தையே அன்பளிப்பாகவும் கொடுத்து மரியாதை செய்தனர்.
மறு நாள், தன் தாயிடம் தமயந்தி சொன்னாள்; அம்மா, குழந்தைகளின் தந்தை நளனை கண்டு பிடிக்க ஏற்பாடு செய்யுங்கள். நடந்த விவரங்களைக் கேட்டபின் அவர்கள் அனைவரும் மிகவும் வருந்தி ஒரு நல்ல மனிதனுக்கு ஏன் இந்த சோதனை என்று வாய் விட்டு அழுதனர். அரசன் பீமன் வந்தவுடன், மகா ராணி, தமயந்தியின் தாய் அவரிடம் தமயந்தியின் வேண்டுகோளைத் தெரிவித்தாள். மகளின் வருத்தம் அவரையும் வாட்டியது. எனவே நளனை தேடி கண்டு பிடிக்க ஆட்களை ஏவினார். தன்னளவில் நளனின் நேர்மையை அறிந்தவர், எதனால் புத்தி தடுமாறி ஸூதாட்டத்தில் ஈடுபட்டான் என்று வியந்தார். புரிந்து கொள்ள முடியாமல் மகளுக்காக தேடலில் முழு மூச்சுடன் ஏற்பாடுகளைச் செய்தார். முன் போலவே போர் வீரர்கள், நளனை அறிந்தவர்கள், பல இடங்களுக்கும் செல்லும் அந்தணர்கள் தேடலில் ஈடு படுத்தப் பட்டனர். கிளம்பும் முன் சில பெரியவர்கள், தமயந்தியிடம் வந்து எங்கு இருக்கக் கூடும் என்பதற்கான ஏதோ ஒரு குறிப்பைத் தரும் படி வேண்டினர். அவள் தான் கடைசியாக கண்டவள், பிரியும் சமயம் அவன் மன நிலை எப்படி இருந்தது என்ற விவரங்களை கேட்டறிந்தனர்.
அவள் சொன்னாள். ‘என் சொல்லாகவே இந்த செய்தியை பரப்புங்கள். “ஓ ஸூதாட்டக்காரரே! ஆடையில் பாதியை வெட்டி எடுத்துக் கொண்டு மறைந்த வீரனே! உனக்காகவே வாழும் உன் உயிர்த் தோழியை, நடுக் காட்டில் தூங்கிக் கொண்டிருந்தவளை தனியே விட்டு விட்டு ஓடிய வீரனே! அந்தப் பெண் பாவம், இன்னமும் உனக்காக அழுது கொண்டிருக்கிறாள். வருவாய் என்று எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள். மீட்பேன் என்று ஸூளுரைத்தாயே, அவளோ, வீரனாக நீ சொன்ன சொற்களை நம்பி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அதே பாதி ஆடை, மற்றவர்கள் கிடக்கட்டும். உன்னையே நம்பிய இந்த அபலையான பெண்ணுக்கு இரங்கி அவளைத் தேற்ற வாருங்கள். அவள் கண்ணீர் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டாமா, பதில் சொல்லுங்கள்.” இந்த வாசகங்களை தேடும் இடங்களில் பலரும் கேட்கச் சொல்லுங்கள்.
இதன் பின் நீங்களாக சொல்லுங்கள். வாயு தேவன் உதவியுடன் அக்னி காட்டையே அழிக்கும்.
இதைச் சொன்ன பின், மனைவியை எந்த ஆபத்தும் வராமல் காப்பது தானே உலகில் கணவன்மார் செய்வது. அது முதல் கடமை அல்லவா.- இதையும் சொல்லுங்கள். நேர்மையானவன், கடமையை தவறாது செய்பவன் என்று பெயர் பெற்றவன், அறிவுடையவன் என்றும் பண்பாளன் என்றும் அனைவரும் போற்ற வாழ்ந்தவன், இப்படி தலை மறைவாக இருக்கலாமா.? நற் குடியில் பிறந்தவன், இயல்பாகவே கருணை உள்ளம் கொண்டவர்கள் பெரியவர்கள். யாருடைய விதி அல்லது வினைப் பயன்? முன் வினைப் பயன் என்று வைத்துக் கொண்டாலும், காட்டில் மிருக ராஜன் போல நாட்டில் வளைய வரும் மனிதனே! கருணை காட்டு. காளை போல வீர நடை போடுபவன், அன்பை மீறிய தர்மம் எதுவுமில்லை என்று எனக்கு உபதேசித்தாயே.
இதைக் கேட்டு எவராவது வந்தால், யார் அது என்று விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். அவன் நளனை அறிந்தவனா, எங்கிருந்து வருகிறான் என்ற விவரங்களைத் தெரிந்து கொண்ட பின் அவன் சொல்லும் சொற்களை அப்படியே என்னிடம் சொல்லுங்கள். அதிலிருந்து நான் அறிந்து கொள்வேன், உண்மை தானா என்பதையும், அவன் எதிரியின் ஒற்றனா, நம் நலன் விரும்பியா என்பதை.
மிகவும் கவனமாக இருங்கள். நான் சொல்லி சொல்வதாக எந்த இடத்திலும் வெளிப் படுத்திக் கொள்ள வேண்டாம். உடனே என்னை தொடர்பு கொள்ளவும் வேண்டாம். சொல்பவன் யார் என்பதை அவன் நடவடிக்கை, செல்வ நிலை, அல்லது யாருக்காகவோ ஊழியம் செய்பவனா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
(வளரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
