ஹோசோவில் வாழ்தல்

தெற்கு கலிஃபோர்னியாவின் பசிஃபிக் கடற்கரை நகரமான சான் டியாகோவில் வசிக்கிறது பென்னியின் குடும்பம். பென்னிக்கு பதினோரு வயது. அவனுக்கு அம்மாவிடம் ஒட்டுதல் அதிகம். பென்னியின் அம்மா ‘நவாஹோ’ வம்சாவழியைச் சேர்ந்தவர். அப்பா, இப்போதெல்லாம் வீட்டில் இருக்கும் நேரங்கள் குறைவு; சமயங்களில் இரவிலும் வீட்டிற்கு வருவதில்லை. பென்னிக்கு ‘ஃப்ளீட்வுட் மேக்’ ராக் இசைக் குழுவின் இசை பிடிக்கும். வீட்டில் அப்பா இல்லாத நேரங்களில், பாடகி ஸ்டீவி நிக்ஸ் மற்றும் ஃப்ளீட்வுட் இசைக்குழு போல் வேடமிட்டு பாடி ஆடி விளையாடுவது அவனுக்கும், அம்மாவிற்கும் பொழுதுபோக்கு. அவன் அப்பாவிற்கு பாடகி ஸ்டீவி நிக்ஸைப் பிடிக்காது. ஸ்டீவி ஒரு சூனியக்காரி, ஃப்ளீட்வுட் மேக்-கின் இசை ஒரு சைத்தானின் இசை என்பது அவரின் கருத்து. வரும் கோடை விடுமுறையில் ஸான் டியாகோவில் நடக்கவிருக்கும் ஃப்ளீட்வுட் மேக் இசைக் கச்சேரிக்குப் போக இப்போதிருந்தே பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறான் பென்னி. ஆனால் அப்பா, கோடை விடுமுறைக்கு, அரிசோனாவின் நவாஹோ தனிக்காப்புப் பகுதியிலிருக்கும் பாட்டி (அம்மம்மா) வீட்டிற்குச் செல்லுமாறு சொல்லிவிடுகிறார். பென்னியின் அம்மாவினால் மறுப்பேதும் சொல்லமுடியவில்லை. வேண்டாவெறுப்பாக பயணத்திற்குக் கிளம்புகிறான் பென்னி. சான் டியாகோவிலிருந்து அரிசோனாவிற்கு, தந்தை வழி பாட்டி இடா-வுடன் பஸ் பயணம். அரிசோனா பேருந்து நிறுத்தத்திலிருந்து பாட்டி (அம்மம்மா) வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போக சித்தி லூசி வருகிறாள்.

பாட்டி வீட்டில் பென்னி தங்கியிருக்கும் கோடை விடுமுறை நாட்கள்தான் படம். “Frybread Face and Me” – அவசியம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். எளிமையான, அழகான, அற்புதமான படம். கதை 1990-ஆம் ஆண்டு கோடையில் நிகழ்கிறது. படம் நெடுகிலும் பாவும் மெல்லிய நகைச்சுவை இழை ஒன்று படம் பார்த்து முடிக்கும் வரை நம்மை புன்னகையிலேயே வைத்திருக்கும். பரவசப்படுத்தும் பின்னணி இசை (Ryan Beveridge). அழகான ஒளிப்பதிவு (Peter Simonite).

அமெரிக்காவின் பூர்வகுடி இனங்களில் ஒன்றான ‘நவாஹோ’ மக்கள் தற்போது பெரும்பான்மையினர் வசிப்பது அதன் தென்மேற்கு மாநிலங்களான அரிசோனாவின் வடகிழக்கிலும், நியு மெக்ஸிகோவிலும்தான் (கொஞ்சமாக உடா-வில்). அவர்கள் பேசும் மொழி தென் அதபாஸ்கன் மொழியான நவாஹோ. சமீபத்திய இரண்டு தலைமுறைகள் காலனிய மொழியான ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டாலும், மூத்த தலைமுறயினர் அனைவரும் பேசும் மொழி நவாஹோதான். பென்னியின் பாட்டியும் ஆங்கிலம் கற்க மறுத்துவிட்டாள். பென்னியிடம் நவாஹோவில்தான் உரையாடுகிறாள். பென்னி கொஞ்சம் கொஞ்சமாக பாட்டியிடம் இருந்து நவாஹோ மொழியையும், நவாஹோ இனத்தின் பண்பாட்டு இழைகளையும் கற்றுக்கொள்கிறான்.

நவாஹோ மக்கள் தங்கள் நிலப்பரப்பை புனிதமானதொன்றாக கருதுகிறார்கள். அம்மண்ணின் இயற்கை வளங்களும், பண்பாடுகளும்  பெயர்பெற்றவை. நவாஹோ பகுதிக்குச் செல்லும் பார்வையாளர்கள், நவாஹோவின் நடைமுறைகளை மதிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்நிலத்தின் கலைப்பொருடகளை/கைவினைப் பொருட்களை வாங்குவதற்கும், சேகரிப்பதற்கும், விற்பபனை செய்வதற்கும் முறையான அனுமதி பெறவேண்டும். துப்பாக்கி, ஆல்கஹால் போன்றவை உபயோகிப்பதற்கான விதிமுறைகள் அங்குண்டு.

பென்னியின் பாட்டி வீடு அத்துவான பரந்த நிலப்பரப்பில் தன்னந்தனியே இருக்கிறது. பெரும்பாலும் பாலையின் காலநிலை நிலவும், வறள்நிலச்செடிகள் மட்டுமே கொண்ட, பரந்து விரிந்த வறண்ட நிலப்பரப்பு. வீட்டின் பக்கத்தில் கேரேஜ் போன்றதொரு தகர ஷெட்டில்தான் மாமா மார்வினின் இருப்பு. மார்வின் மாமா விண்ட்ஷீல்ட் இல்லாத பழைய கார் ஒன்று வைத்திருக்கிறார். சித்தி லூசி சுதந்திரமான உற்சாகமான பெண். இன்னும் வேலை எதற்கும் செல்லவில்லை. நவாஹோ ஆபரணப் பொருட்கள் செய்து விற்பனை செய்கிறாள். அவளுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். பென்னியை அவன் அம்மா ‘நன்றாகப் படி. இல்லையென்றால் லூசி சித்தி மாதிரி ஆகிவிடுவாய்’ என்று சொல்லியிருக்கிறாள். பாட்டி வீட்டில் மின்வசதி கிடையாது. அவசர உபயோகத்திற்கு ஒரு சிறிய ஜெனரேட்டர் இருக்கிறது. பாட்டி வீட்டில் அவன் வயதையொத்த கசின் “Dawn”-ஐச் சந்திக்கிறான் பென்னி. Dawn-ன் செல்லப் பெயர் “Firebread Face”. Dawn கொஞ்சம் குண்டான உடல்வாகு கொண்டவள். எண்ணெய் மினுக்கும் பன் கன்னங்கள். அவளுக்கும், பென்னிக்கும் ஆரம்பத்தில் முட்டிக்கொள்கிறது. நாட்கள் செல்லச்செல்ல இருவரும் நட்பாகிறார்கள். 

மாமா மார்வின் எப்போதும் கடுகடுப்பாக சிடுமூஞ்சியாகவே இருக்கிறார். மார்வின் ஹோசோவில் இல்லை என்று டான் பென்னியிடம் சொல்கிறாள். நவாஹோ மொழியில் ஹோசோ என்றால் ‘ஒருங்கிணைந்து இயல்பில் சமநிலையுடன் வாழ்தல்’ என்று பொருள். “நான் ஹோசோவில் இருக்கிறேனா?” என்று டான்-இடம் கேட்கிறான் பென்னி. டான் “இன்னும் இல்லை” என்கிறாள். பாட்டி வீட்டில் ஒரு செம்மறி ஆட்டு மந்தையும், ரீபா என்றொரு நாயும் இருக்கிறது.

பாட்டி, வீட்டில் செய்யும் கை நெசவை பென்னிக்கும், டான்-ற்கும் கற்றுத் தருகிறார். நவாஹோ நெசவின் ஆன்மீக அடிப்படைகளையும் விளக்குகிறார். இன்னொரு சித்தி ஷரோனும், மாமா ரோஜரும் தங்கள் கைக்குழந்தை மார்ஷல்-உடன் பாட்டி வீட்டிற்கு ஒருநாள் வருகிறார்கள். தன்னைத் தூக்கிய பென்னியைப் பார்த்து குழந்தை முதல்முறையாக சிரிக்கிறது. நவாஹோ பண்பாட்டில் குழந்தையின் முதல் சிரிப்பை விசேஷமாகக் கொண்டாடுவார்கள். (மார்வின் வைத்திருக்கும் டேப்ரிகார்டரில் நாட்டுப்புற இசையை ஒலிக்கவிட்டு பென்னியும், டான்-ம் நவாஹோ காலாச்சார உடையில் ஆடும் நடனக் காட்சி அபாரம்).

இறுதிக் காட்சியில், கோடை விடுமுறை முடியும் தருவாயில், சான் டியாகோவிற்கு திரும்ப கூட்டிச் செல்ல வந்திருக்கும் அம்மாவுடன் கிளம்புகிறான் பென்னி. கிளம்பும் சமயத்தில் கண்ணீருடன் விடை கொடுக்கும் டான்-இடம் கேட்கிறான் பென்னி “நான் இப்போதாவது ‘ஹோசோ’வை நெருங்கியிருக்கிறேனா?”. 

“ஆம்” என்கிறாள் டான்.

***    

“ஒருமுறை பாட்டி சொல்லியிருக்கிறார், ‘நவஹோ’ கதை சொல்லலில், நிகழ்வுகளை விட குறியீடுகள்தான் ஆழங்களை உணர்த்தி உயர்பொருளைத் தரும்; மேலும் ‘காலம்’ என்பதற்கு அதில்/அங்கு பொருள் எதுவும் கிடையாது” என்ற இயக்குநரின் குரலுடன்தான் படம் துவங்குகிறது. இயக்குநர் பில்லி லூதர் ஒரு நவாஹோ. அவரின் இப்படமும் நவாஹோவின் காட்சி மொழியில்தான் இருக்கிறது. படத்தில் நிகழ்வுகள் மிகக்குறைவு; ஆனால் அது உணர்த்தும் ஆழங்களும், அமைதியான / நிதானமான காட்சிகளால் உருவாக்கும் உணர்வுகளும், சுட்டிக்காட்ட / கற்க நினைக்கும் ஒரு தொல் பண்பாட்டின் வேர்களும்/மிச்சங்களும் மேன் பொருள் கொண்டவை.

ஆம், ‘ஹோசோ’வில் வாழ்தல் பெரும் பேறு.

“Frybread Face and Me”
(2023 American Coming-of-age Drama film)
Billy Luther
Netflix


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.