இரானியத் திரைப்படம் ‘காப்பே’ பற்றி
இரானின் தென்மேற்கில் உள்ளொடுங்கிய மலைப் பிரதேசம் ஒன்றில், துவைப்பதற்காகவும், தண்ணீர் எடுத்துச் செல்லவும் ஒரு முதியவர், அவர் மனைவியோடு வீடருகில் இருக்கும் நீர்ச் சுனைக்கு வருகிறார். வயதான அவர் மனைவி காப்பே(Gabbeh)யை சுருட்டி தோள் மேல் வைத்து எடுத்து வருகிறார். காப்பே என்பது செம்மறி ஆடுகளின் ரோமம் நூலாகத் திரிக்கப்பட்டு, பலவித நிறம் கொண்ட பூக்களை தனித்தனியே காய்ச்சி வடிகட்டிய சாயங்களில் நிறமேற்றிய பலவண்ண நூற்கண்டுகளைக் கொண்டு வீடுகளில் கைகளால் பின்னப்படும் ஒருவித கம்பளம். பெரும்பாலும் கேஷ்கொய்(Qashqai) இனப் பெண்களும், தென்மேற்கைச் சேர்ந்த சில நாடோடிக் குழுக்களின் பெண்களும் இக் கலைப்பொருளைப் பின்னுகிறார்கள். அக்குழுக்களின் திருமண நிகழ்வுகளின்போது இரு குடும்பத்தினரும் காப்பெயை பரிசளித்துக் கொள்வது வழக்கம் குறிப்பாக, மணப்பெண் கணவன் வீட்டிற்கு வரும்போது பிறந்த வீட்டிலிருந்து காப்பேயை கொண்டு வருவது அவர்களின் ஒரு சடங்கு.

முதிய பெண்மணிக்கு அவளின் காப்பேயின் மேல் மிகுந்த பிரியமுண்டு. அது அவளின் இளமைப் பருவத்தின், காதலின் ஒரு அடையாளம். காப்பேயில் ஒரு இளைஞன் இளம்பெண்ணுடன் குதிரையில் செல்லும் படம் பின்னப்பட்டிருக்கிறது. முதிய பெண்மணி, விரித்த காப்பேயை கைகளால் வருடும்போது அதிலிருந்து ஓர் அழகான இளம்பெண் வெளிப்படுகிறான் (கதையின் சில நிகழ்வுகளைச் சொல்வதால், படத்தை முதலில் பார்ப்பவர்கள்,மக்மல்பஃபின் மேதமையைப் புரிந்து கொண்டு, படத்தை மேலும் ரசிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதால் குறிப்பிடுகின்றேன். இயக்குநர் மக்மல்பஃப், காப்பேயை குறியீடாகப் பயன்படுத்துகிறார். படத்தில், முதிய பெண்மணியும் காப்பே போலத்தான்; அதிலிருந்து தோன்றும் இளம்பெண்ணும் காப்பேதான். மூன்றாவதாக, இரானின் தொல் சடங்குகளுக்கும்/நம்பிக்கைகளுக்கும்/கலாச்சார சாரத்திற்கும் காப்பே குறியீடாகிறது).
முதிய பெண்மணி, இளம்பெண்ணிடம் “நீ யார்?. உன் பெயர் என்ன?” என்று கேட்கிறார். இளம்பெண் தன் பெயர் காப்பே என்றும், நாடோடிகள் இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லிவிட்டு தூரத்தில் மலைப்பாதையில் செம்மறி/வெள்ளாடுகள்/கழுதைகள் மந்தையுடன் செல்லும் தன் குடும்பத்தைக் காட்டுகிறாள். (முதிய பெண்ணின் இளமைப் பருவம்தான் இளம் காப்பே. இறந்தகால நிகழ்வுகளும், நிகழ்கால நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் நடக்கின்றன. “எங்கள் குடும்பம் ஒரே இடத்தில் தங்குவதில்லை. இடம் விட்டு இடம் மாறிக்கொண்டேயிருப்போம். எங்கள் அப்பா மிகவும் கண்டிப்பானவர். என் அம்மாவின் பெயர் சகினே. நான்தான் அவர்களின் மூத்த பெண். எனக்கு இரண்டு தம்பிகள்; நான்கு தங்கைகள் (எட்டாவதாக ஒரு குழந்தை அம்மாவின் வயிற்றில்). ஒருமுறை குதிரைக்கார இளைஞன் ஒருவன்மீது நான் காதல் கொண்டேன். அவனுக்கும் என்மேல் காதல். எங்கள் குடும்பம் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் அப்பாவிற்குத் தெரியாமல் பின் தொடர்ந்து வருவான் என்னைக் கூட்டிச்செல்ல. அப்பாவிற்குத் தெரிந்தால் கொன்றுவிடுவார் என்ற பயத்தால் நான் வீட்டைவிட்டு அவனுடன் ஓடிப் போகாமலிருந்தேன்” என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறாள் இளம்பெண் காப்பே.

“வீட்டில் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை. தூரத்தில் நகரத்திலிருக்கும் அப்பாஸ் சித்தப்பா திரும்பி வந்தபின்தான் அவரை மருத்துவமனைக்குக் கூட்டிப் போகவேண்டும் என்று அப்பா சொன்னார். அதன்பின்தான் எனக்கும் திருமணம் செய்யவேண்டும் என்பது அப்பாவின் திட்டம். வசந்தகாலம் வந்துவிட்டது. இன்னும் அப்பாஸ் சித்தப்பா வரவில்லை. வசந்த காலத்தில், எங்கள் இனத்தின் மற்ற மந்தைக் குழுக்கள் அவர்களின் கூடாரங்களைக் காலிசெய்து வேறிடத்திற்கு கிளம்பிவிட்டார்கள். உடல்நலமில்லாத பாட்டியை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல, அப்பா, சித்தாப்பாவின் வருகைக்காக காத்திருந்தார். காப்பே தன் கதையை தொடர்கிறாள்.
“பாட்டிக்குச் சாக விருப்பமில்லை. சாவதற்கு முன் அப்பாஸ் சித்தப்பாவைப் பார்க்கவேண்டும் என்பது அவள் விருப்பம். அப்பாஸ் சித்தப்பாவின் திருமணத்திற்காக காப்பே ஒன்றைப் பின்னிக் கொண்டிருந்தாள். ஆனால் சித்தப்பா திரும்பி வருவதற்குள் பாட்டி இறந்துவிட்டாள். அப்பா, பாட்டியை ஒரு பசுமையான கல்லறையில் சிறப்பாக அடக்கம் செய்தார். அப்பாஸ் சித்தப்பாவிற்கு பாட்டியின் கூடாரத்தில் பாட்டி பின்னிக் கொண்டிருந்து முடிக்காமல் விட்ட பாதி காப்பேதான் பார்க்கக் கிடைத்தது. பாட்டியின் காப்பேயையாவது பார்க்க முடிந்ததே என்பதில் அவருக்கு ஒரு ஆசுவாசம். அப்பாஸ் சித்தப்பாவிற்கு கவிதைகளில் விருப்பம். அவருக்கு 57 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு முதலில் பெண் பார்த்துத் திருமணம் நடத்தி விட்டு அதற்குப் பிறகு என் திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று அப்பா சொல்லிவிட்டார். சித்தப்பாவிற்கு மணப்பெண் தேடத் தொடங்கினார். நீரூற்றுக்கருகில் இனிமையான குரலில் பாடும், கவிதைகள் எழுதும் பெண் தனக்கு மனைவியாகக் கிடைப்பாள் என்று சித்தப்பா நம்பினார். சித்தப்பாவிற்கு அவர் விரும்பியபடியே பெண் கிடைத்தாள். அவருக்கு திருமணம் நடந்தது. அவர்களை அங்கு விட்டுவிட்டு நாங்கள் குழுவாக வேறிடம் கிளம்பினோம்” என்று சொல்லி நிறுத்துகிறாள் Gabbeh.
“எப்போதுதான் நீ காதலனுடன் சேர்ந்தாய்?” என்று கேட்கிறார் முதியவர். சோகமாகும் காப்பே “ஒரு ஆற்றைக் கடந்துசெல்லும்போது அம்மாவிற்குப் பிரசவமானது. அப்பா, என் திருமணப் பேச்சை மறுபடியும் கொஞ்சநாள் போகட்டும் என்று தள்ளிவைத்தார்” என்கிறாள். காப்பேயின் குதிரைக் காதலன் பொறுமை இழக்கிறான். குழந்தை பிறந்த விசேஷத்திற்காக வீட்டிற்கு வந்த சித்தப்பா காப்பேயிடம் “உங்கள் அப்பாவை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ உன் காதலனோடு சென்று திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இரு” என்று சொல்கிறார். Gabbeh, தான் பின்னிய காப்பேயை எடுத்துக்கொண்டு, தன் குதிரைக் காதலனுடன் இரகசியமாகக் கிளம்புகிறாள். விஷயம் தெரிந்து, அப்பா அவர்களைக் கொல்வதற்காக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு விரட்டிச் செல்கிறார்.
***
“Gabbeh” எளிமையான, அழகான, அருமையான, அவசியம் காண வேண்டிய ஒரு படம். இயற்கையின் அழகை, வாழ்வின் அழகை, அதன் வண்ணங்களைக் கொண்டாடச் சொல்லும், ஒருவித ‘மாய யதார்த்த’ மொழியில் அமைந்த, மனதை வசப்படுத்தும் காட்சிகள் நிறைந்த ஒரு கவிதை.
நாடோடிகளின் வாழ்வியலில், அவர்கள் குடும்பத்தின் குழந்தை பிறப்பு, தற்காலிக கூடாரத்தில் அவர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் கல்விமுறை, இயற்கையின் பல்வேறு பருவங்களில் அவர்களின் பயணங்கள்/சந்திக்கும் சவால்கள், அவர்களின் திருமணச் சடங்குகள், மரணத்தை அவர்கள் எதிகொள்ளும் விதம், அப்பெண்கள் பல வண்ணங்களில் காப்பே பின்னும் அழகு… என அவர்கள் வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் தொட்டுக் கொண்டு நகர்கிறது படம்.
அகிரா குரோசாவாவின் “Dreams” (1990) படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, கண்களில் ஒற்றிக் கொள்ள வைத்த அதன் அத்தனை ஃப்ரேம்களையும் எப்படி மனது பெரிய திரையில் பார்க்க ஆசைப்பட்டதோ, அதே விருப்பம், ‘காப்பே’ பார்த்தபோதும் எழுந்தது. மிகச் சிறப்பான ஒளிப்பதிவு {Mahmoud Kalari). ஒளிப்பதிவாளர் மஹ்மத், அப்பாஸ், அஸ்கர், ஜாஃபர் போன்ற பிரபல இரான் இயக்குநர்களுடன் பணிபுரிந்தவர். விகசிப்பில் ஆழ்த்தும் இசை (இசையமைப்பாளர் மேஸ்ட்ரோ Hossein Alizadeh – மஜிதியின் “The Song of Sparrows” படத்திற்கு இசையமைத்தவர்). Hossein, Gabbeh-விற்கு இயற்கை ஒலிகளோடு நாட்டுப்புற இசைக்குறிப்புகள் கலந்து மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார். இரானில், புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில், ஒரு இரானிய சினிமாவில் பெண்குரல் பாடல் முதன்முதலில் இடம்பெற்றது காப்பே படத்தில்தான்.
காப்பே படம் வெளிவருவதற்கு முன்பு, நாடோடிக் குழுக்கள் மட்டுமே அறிந்த இக்கம்பளங்கள், இரானின் ஃப்ர்ஸ் மாகாணத்தின் தலைநகரான ஸிராஜ் ஊள்ளூர் சந்தைகளில் மட்டுமே மிகக் குறைவான வணிகத்தைப் பெற்றிருந்தது. ஆனால் காப்பே படம் வெளிவந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றபின், இக்கம்பளங்களுக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சந்தை அதிக அளவில் அதிகரித்திருக்கிறது. இப்போதெல்லாம் உயர்குடி சமுதாயத்தில், பங்களாக்களின் உள் வடிவமைப்புகளில், பண்பாட்டுச் சின்னமாக இக்கம்பளங்கள் இடம்பெறுவது வழக்கமாகியிருக்கிறது.

காப்பே சர்வதேச திரைவிழாக்களில் நான்கு விருதுகள் பெற்றிருக்கிறது. 1996-ல் முதலில் கேன் (Cannes) திரைவிழாவில் திரையிடப்பட்டது. சிறிது காலம் கழித்து, மத/அரசு-க்கெதிரான கருத்துக்களை படம் மறைமுகமாகத் தூண்டுவதாகச் சொல்லி (வழக்கம்போல) இரான் அரசு படத்தை தடை செய்திருக்கிறது.
‘காப்பே’ நல்ல சினிமாவின் தேடல் கொண்டவர்களுக்கு ஒரு அறுசுவை விருந்து.
***
பின்குறிப்பு: இலங்கையிலிருந்து வெளிவரும் “காட்சி மொழி” சினிமா காலாண்டிதழின் ஆசிரியர் மாரி மகேந்திரன் அவர்கள், படத்தைப் பார்க்கும்படி பரிந்துரைத்தார். அவருக்கு நன்றி.
“Gabbeh” (1996 Iranian film)
Language: Persian
Written, Directed & Edited by Mohsen Makhmalbaf
MUBI/Netflix/Apple/Google Play
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
