1981 ம் ஆண்டின் டிசம்பர் மாதம். கனடாவின் கலாச்சார, வியாபார மையமான டொரண்டோ (Toronto) நகரம் குளிர் காலத்தின் பிடியில் இறுகத் தொடங்கி இருந்தது. மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். நகரின் கொண்டாட்டங்களுக்கு இடையே, நகரின் முக்கிய நவீன வணிக வளாகமாக இருந்த ஈடன் சென்டர் (Eaton Centre) இல் ஒரு பதட்டம் உருவாகிக் கொண்டிருந்தது.
ஈடன் சென்டரின் பிரதான முற்றத்தின் உயர்ந்த கண்ணாடிக் கூரையில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தன அந்தப் பறவைச் சிற்பங்கள். காற்றில் பறந்து கொண்டிருக்கும் ஒரு நாரைக்கூட்டம். இறக்கைகளைக் காற்றில் விரித்தபடி காற்றில் உறைந்திருந்தன.
ஈடன் சென்டரினுள் நுழைந்து பறந்து செல்லும் பறவைகள் போலத் தோற்றம் அளிக்கும் அந்தச் சிற்பங்கள் மக்களைக் பெரிதும் கவர்ந்தன. “Flight Stop “ என்று பெயரிடப்பட்ட அந்த நாரைக் கூட்டத்தின் சிற்பம் மைக்கேல் ஸ்னோ (Michael Snow ) என்ற சிற்பியின் படைப்பு. கிறிஸ்துமஸ் விடுமுறை வியாபார உத்திக்கும், சிற்பி மைக்கேல் ஸ்னோவின் படைப்புரிமைக்கும் மோதல் உருவானது.
மைக்கேல் ஸ்னோ கனடாவின் மிக முக்கிய கலைஞர். சர்வதேசப் புகழ் கொண்டவர். இவரது சிற்பங்கள் உலகெங்கும் இருக்கும் முக்கியமான கலைக்கூடங்களால் விரும்பி சேகரிக்கப்படுபவை. 1928 ல் பிறந்த ஸ்னோ, காலம் எப்படி கலையை வியாபாரப் பொருளாக மாற்றி வந்திருக்கிறது என்பதை தனது அனுபவத்தில் பார்த்தவர்.
ஈடன் சென்டர் விடுமுறையைச் செலவு செய்து கொண்டாடித் தீர்க்கும் மனிதர்களால் நிறைந்திருந்தது. நிறைந்த பைகளை இரு கைகளிலும், நிறையாத மனங்களை மனங்களிலும் சுமந்தபடி அவர்கள் ஈடன் சென்டரைச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். சரக்குகள் வந்திறங்கி இருந்த புதிய மரப்பெட்டிகளின் மணமும், அவற்றில் இருந்து பிரிக்கப்பட்ட பொருள்களும், புதிய பொருளுக்கு என்றே இருக்கும் விளக்க முடியாத மணமும் காற்றில் நிறைந்திருந்தது.
இவற்றுக்குச் சாட்சியாக மைக்கேல் ஸ்னோவின் பறக்கும் நாரைகள் மேலே பறந்து கொண்டிருந்தன.
அப்போதுதான் அந்தப் பறவைகளைத் தேடி வந்தன அந்த சிவப்பு ரிப்பன்கள்.

ஈடன் சென்டர் நிர்வாகம் கிறிஸ்துமஸ் அலங்காரங்களில் ஈடுபட்டிருந்தது. பறக்கும் நாரை ஒவ்வொன்றின் கழுத்திலும் சிவப்புப் பட்டை ஒன்று கட்டப்பட்டது. விழாக்கோலத்தைக் காட்டும் வெளிர் சிவப்பு.
பறைவைகள் கழுத்தில் ரிப்பன் கட்டப்பட்டதை மைக்கேல் ஸ்னோ விரும்பவில்லை.
அந்த ரிப்பன்களை நீக்கக் கோரி பலமுறை மைக்கேல் ஸ்னோ வைத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன.
ஈடன் சென்டர் நிர்வாகத்தைப் பொறுத்தவரை அவை அலங்கார ரிப்பன்கள். அவை பறவைகளை அழுகுபடுத்தவே கட்டப்பட்டன. அவற்றை நீக்குவதற்கு எந்தக் காரணமும் அவர்களுக்கு இருக்கவில்லை. குறிப்பாக, அந்த சிற்பத்தைப் பணம் பெற்றுக்கொண்டு வடிவமைத்ததோடு மைக்கேலின் வேலை முடிந்து விட்டது. ரிப்பனைக் காட்டுவதும் கட்டாமல் இருப்பதும் நிர்வாகத்தின் முடிவு என்று கருதினர்.
ரிப்பன் காட்டியவாறு பறந்து கொண்டிருந்த அந்தப் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மைக்கேல் மனம் கொந்தளித்தது. அந்த ரிப்பன்களை நீக்க மறுத்த நிர்வாகத்தின் செயல், தனது படைப்புரிமையின் மீது செலுத்தப்பட்ட அடக்குமுறை என்று நம்பினார் மைக்கேல் ஸ்னோ. தன்னிடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட அந்த ரிப்பன்கள், வியாபாரக் கவர்ச்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டவை என்பதும் அது தனது படைப்பின் ஆன்மாவைச் சிதைக்கும் செயல் என்பது சிற்பி ஸ்னோவின் பார்வை.
மைக்கேல் ஸ்னோ சட்டப் போராட்டத்தைக் கையில் எடுக்க முடிவு செய்தார். அவரது ஆயுதம், “தார்மீக உரிமை”. கலையின் மீது கலைஞனுக்கு உள்ள தார்மீக உரிமை. ஒரு படைப்பு பிறக்கும்போது படைப்பாளிக்கு அதன் மீதான தார்மீக உரிமையும் பிறந்துவிடுகிறது. என்றாலும் சட்டம் அதனை காலதாமதமாகவே ஏற்றுக்கொண்டது.
1982 ம் ஆண்டு. மைக்கேல் ஸ்னோ மற்றும் ஈடன் சென்டர் வழக்கு கனடாவின் அன்டாரியோ (Ontario) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு வெறும் நாரையின் கழுத்தில் ரிப்பன் கட்டுவது தொடர்பானது அல்ல என்பதை நகரம் புரிந்து கொண்டது. அந்த வழக்கு எழுப்பிய பொதுவான கேள்வி, “பொது இடங்களில் நிறுவப்படும் கலைப்படைப்புகளின் மீதான உரிமை யாருடையது?”
மைக்கேல் ஸ்னோ தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டன. சிற்பக் கலை நிபுணர்களின் சாட்சியங்கள் கோரப்பட்டன. அவை, சிவப்பு ரிப்பன்கள் எந்த வகையில் சிற்பியின் தார்மீக உரிமையை மறுத்தன என்பதை நீதிமன்றத்திற்கு விளங்கின.
ஈடன் சென்டர் வழக்கறிஞர்கள் தங்கள் எதிர் வாதங்களை வைத்தனர். வணிகவளாகத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் சட்டபூர்வ சொத்துரிமை மற்றும் கிறிஸ்துமஸ் காலங்களில் செய்யப்படும் அலங்காரங்களின் மரபு போன்றவை முன்வைத்தனர்.
ஆனால், வழக்கில் பேசப்பட்ட வாதங்கள் அன்று நீதிமன்றத்தில் பார்வையாளர்களாக இருந்தவர்களுக்கு பின்வரும் கருத்தை உணர்த்தியது.
‘ஒரு கலைப்படைப்பு அலங்கார வடிவங்களுக்கு அப்பாற்பட்டது. அது பார்வையாளனுடன் கலைஞன் நடத்தும் உரையாடல். காலத்தைக் கடந்தும் ஒலிக்கும் உரையாடல். எந்த ஒரு உரையாடலையும் போலவே, அந்த உரையாடலும் இரு தரப்பாலும் மதிக்கப்பட வேண்டும்.’
வழக்கின் முடிவில் மைக்கேல் ஸ்னோவிற்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது.
பறவைகள் கழுத்தில் கட்டப்பட்ட ரிப்பன்கள் மைக்கேல் ஸ்னோவின் படைப்பின் மாண்பைக் குறைக்கும் செயல் என்றும், அது மைக்கேல் ஸ்னோவின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கக் கூடிய செயல் என்றும், ஈடன் சென்டரின் செயல், கனடா நாட்டின் சட்ட வரையறைகளின்படி ‘தார்மீக உரிமை மீறல்’ என்றும் நீதிமன்றம் கருதியது.
மேலும், ரிப்பன்களை நீக்கவும், எதிர்வரும் காலங்களில் ஈடன் சென்டர், மைக்கேல் ஸ்னோவின் அனுமதி இல்லாமல் அந்த “Flight Stop “ சிற்பங்களில் எந்தவித மாற்றங்களும் செய்யக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு, கலைஞர்களின் படைப்புகள் மேல் அவர்களுக்கு இருக்கும் உணர்வுபூர்வமான உரிமை குறித்த சட்ட அங்கீகாரமாகவும், பார்வையார்களுக்கு, ஒரு படைப்பை புதிய கண்கள் கொண்டு பார்ப்பதற்கான அழைப்பாகவும் அமைந்தது.
மைக்கேல் ஸ்னோ, சிவப்பு ரிப்பன்கள் நீக்கப்பட்டு, ஆன்ம விடுதலை அடைந்து பறந்து கொண்டிருந்த அந்த பறவைகளைப் பார்த்தபோது, அந்த வெற்றி தனக்கானது மட்டுமல்ல, இனிவரும் காலங்களில் தோன்றும் எண்ணற்ற கலைஞர்களுக்கானதும் ஆகும் என்று எண்ணினார்.
இந்தக் வழக்கை நாம் மனதில் அசைபோடும் இதே நேரத்தில் மைக்கேல் ஸ்னோவின் பறவைகள் ஈடன் சென்டரைக் கடந்து, தார்மீக உரிமையுடன் வரலாற்று வானத்தில் பறந்து கொண்டிருக்கின்றன.
19 ம் நூற்றாண்டில் , கலைப்படைப்புகள் மீதான பெருமதிப்பை தனது கோட்பாடுகளில் ஒன்றாக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டில், தார்மீக உரிமை அல்லது “droit moral “ பற்றிய கருத்து விவாதமாக உருவெடுத்தது.
பிரான்சின் நாட்டின் சிந்தனையாளர்களும் கலைஞர்களும் படைப்புரிமை குறித்த விவாதங்களைத் தொடங்கி இருந்தனர். படைப்பின் மீது படைப்பாளிக்கு உள்ள உரிமை பொருளாதாரக் காரணங்களுக்கு அப்பாற்பட்டவை என்ற கருத்து அறிவுத்தளத்தில் பரவியது.
கலைஞர்களுக்கு தங்கள் படைப்புகள் மீது இருக்கும் உரிமையை வெறும் சொத்துரிமைச் சட்டமோ அல்லது சொத்துரிமை சட்டத்தின் பார்வையில் உருவாகும் காப்பிரைட் சட்டமோ வரையறுக்க முடியாது என்ற கருத்து பாரிஸ் நகரில் உருப்பெற்றது.. தார்மீக உரிமை அல்லது “droit moral “ கருத்து வடிவம் பெறத்தொடங்கியது.
பிரான்ஸ் காப்பிரைட் சட்டம் 1957:
நீண்ட காலமாகவே பிரான்சின் கலாச்சார உலகத்தாலும், பிரான்ஸின் நீதி மன்றங்களாலும் அங்கீகரிக்கப் பட்டு இருந்த தார்மீக உரிமை, 1957 ம் ஆண்டின் காப்பிரைட் சட்டத்தின் மூலம் சட்ட வடிவம் பெற்றது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் தார்மீக உரிமையின் நான்கு தூண்களை வரையறை செய்தது.
1. படைப்பின் வெளியீட்டைத் தீர்மானிக்கும் உரிமை (Right of disclosure) –
ஒரு படைப்பு எப்போது முழுமை அடைந்து, மக்களின் பார்வைக்குத் தயாராகிறது என்பதை முடிவு செய்யும் உரிமை. ஒரு ஓவியம் இன்னமும் இறுதி வடிவம் பெறவில்லை என்று ஒரு ஓவியன் கருதினால், அதுவே இறுதியானது.
2. படைப்பின் மீது படைப்பாளி கொள்ளும் உரிமை (Right of attribution ) –
ஒரு படைப்பின் மீதான காப்பிரைட் உரிமையை மற்றொருவருக்கு மாற்றி விட்டபின்னும்கூட , அந்தப் படைப்பின் படைப்பாளியாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் உரிமை.
3. படைப்பின் மாண்பினைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை (Right of integrity) –
படைப்பின் மாண்பு குறையும் வகையில் அதனை பிறர் மாற்றியமைப்பதையும், பயன்படுத்துவதையும் மறுக்கும் உரிமை. உதாரணமாக, ஒரு மது விளம்பரத்தில் தனது இசையைப் பயப்படுத்தக் கூடாது என்று சொல்லும் உரிமை ஒரு இசைக் கலைஞனுக்கு உண்டு.
4. படைப்பைத் திரும்பப் பெறும் உரிமை (Right of withdrawal ) – ஏற்கனவே வெளியிட்ட தனது படைப்பைத் திரும்பப் பெரும் உரிமை.
பிரான்சின் 1957 காப்பிரைட் சட்டம், இந்த நான்கு உரிமைகளையும் வரையறுத்ததோடு, இந்த உரிமைகள் நிரந்தரமானவை என்றும், சட்ட மறு வரையில் மூலம் மாற்ற முடியாதவை என்றும், படைப்பாளியே விரும்பினாலும் கூட, விட்டுக் கொடுக்க இயலாதவை என்றும் கூறியது.
ஒரு படைப்பாளி மறைந்த பின்னர் 50 வருடங்களுக்கு காப்பிரைட் உரிமை செல்லுபடியாகும் என்று வைத்துக் கொண்டால், அந்த 50 வருடங்கள் வரை படைப்பாளியின் வாரிசுகள் உரிமை கோரலாம். அந்த 50 வருடங்கள் முடிந்தபின்னர், அந்தப் படைப்பு காப்பிரைட் காலாவதி ஆகி, பொதுவுடைமை (public domain ) ஆகிவிடும். ஆனால் இந்த ‘தார்மீக உரிமை’ என்றைக்கும் நிரந்தரமானது.
பொதுவுடைமை ஆகிவிட்ட பாரதியின் கவிதைகளை யாரும் பயன்படுத்தலாம், ஆனால் பாரதியின் புகழுக்கோ, அவரது கவிதைகளுக்கோ களங்கம் ஏற்படும் வகையில் ஒருவர் பயன்படுத்துவதை இந்த தார்மீக உரிமைச் சட்டம் தடை செய்கிறது.
ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பாரதியின் வாரிசுகளுக்குப் பணம் கொடுத்து, அவர் கவிதைகளைப் பயன்படுத்தும் உரிமை பெற்றதோடு அதனை ‘பொதுவுடைமை’யும் ஆக்கினார் என்று சிறுவயதில் ஒருவர் சொல்லக் கேட்யிருக்கிறேன்.
இப்போதெல்லாம் யாரும் அப்படிச் சொல்வதில்லை. மாறாக ஒரு விழா எடுத்து அறிவிக்கிறார்கள்.
Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
