பரிவாதினி இசை மலர் தினமணி சிவகுமார் தொகுத்து வெளியாகி உள்ளது. பல நல்ல இசை ரசிகர்கள் எழுதிய கட்டுரைகள், அரிய புகைப்படங்கள், பழைய இசை கச்சேரி விளம்பரங்கள் என அழகாக வெளியாகி உள்ளது. மிகக் காத்திரமாக வந்துள்ளது. கவிதைகளுக்கு ‘கொங்குதேர் வாழ்க்கை’ தொகுப்பு ஒரு சுட்டு நூலாக இருப்பது போல இந்த நூலின் இரு பகுதியும் இசைக்கு அரிய ஒரு தொகுப்பு.
நம்முடைய சங்கீத மரபில் சங்கீதத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அந்த சங்கீதத்தை நமக்கு கொடுத்த சாஹித்யகர்தாக்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஒரு க்ருதியை ஒருவர் பாடிக்கேட்டால் நாம் கேட்கக்கூடிய ஒரு முக்கியமான கேள்வி, இது யாருடைய உருப்படி என்பதேயாகும். அந்த அளவிற்கு நாம் ஒரு க்ருதியை இயற்றியவரிடமும், அவர் கூறியுள்ள கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுக்கிறோம். ஆனால் பல சந்தர்பங்களில் அந்த வாக்கேயக்காரரை புகழ்ந்து கொண்டாடுகிறோமேயன்றி, அவரை அத்புதமான படைப்புகளை கொடுக்க வைத்த காரணிகளை கவனிக்க தவறி விடுகிறோம் என்பதே உண்மை. மேற்சொன்ன இந்த கருத்து இன்று ப்ரபலமான க்ருதிகர்தாக்களாக கருதப்படுபவர்களுக்கும் பொருந்தும். இந்த ப்ராபல்யமானது அவர்களையும், அவர் கருத்துக்களையும் பலருக்கும் கொண்டு செல்கிறதேயொழிய, அந்த உத்தமமான எண்ணங்களை அவருக்கு கொடுத்து, அவர்களை சன்மார்க வழியில் நடத்திச்சென்ற மஹனீயர்களைப்பற்றி அறிய விடுவதில்லை.
ஓரு மனிதர் குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குவதற்கு அவரின் குடும்பம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் அவருடைய தாய் தந்தையரின் பங்களிப்பு இன்றியமையாதது. தாயை போல பிள்ளை என்று சொன்னாலும், தந்தை வழி நடக்கும் தனயன் பலர் உண்டு. இப்படி ஒரு மகன் தந்தை வழி நடந்து, தன் தந்தையை விட பிரசித்தி அடைகையில், அந்த தகப்பனானவர் அவருடைய மகனின் ப்ரசித்தத்தில் மறைந்து விடுகிறார். தன்னுடைய மகனுக்கு உதாகரண புருஷனாய் வாழ்ந்து, அவனுடைய எண்ணத்தை சீராக வடிவைமைத்து, அவனுக்கு நீங்கா புகழையும் நல்வாழ்கையையும் அமைத்து கொடுத்தவர், தன்னுடைய பங்களிப்பை அவனுடைய வடிவில் இவ்வுலகிற்கு கொடுக்கிறார். அப்பேர்ப்பட்டவரை பற்றி சரித்திரம் திரிபன்றி கொடுத்தாலும், நாம் அதை கவனிக்க தவறிவிடுகிறோம்.
இதற்கு எடுத்துகாட்டாய் ஒரு உதாரணம். தனி மனித ஒழுக்கத்தை பற்றி பேசுகையில், நம் நினைவிற்கு முதலில் வருபவர் பகவான் ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி. அவரை சொன்ன சொல் தவராதவர், ராஜ்ய பரிபாலனத்தில் வல்லவர் என்று பலவாறாக புகழ்கிறோம். ஒரு நாட்டிற்கு அரசனானவன், ஸ்ரீ ராமரைப்போல் ‘ராம ராஜ்யம்’ என்று எதிர்பார்க்கிறோம். ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் பல க்ருதிகளில் ஸ்ரீ ராமருடைய திவ்ய குணங்களை வர்ணித்திருந்தாலும் ‘காரு பாரு’ என்ற முகாரி ராக கீர்த்தனத்தில் ராம ராஜ்யத்தின் பெருமைகளை எடுத்துரைத்திருக்கிறார். இப்படி ஸ்ரீ ராமரையும், அவருடைய அரசமைப்பையும் புகழும் நாம், அதற்கு காரணமான தஶரதரை நினைக்க தவறி விடுகிறோம். ஆதி கவி ஸ்ரீ வால்மீகி மஹரிஷி, தஶரதரின் ராஜ்யத்தைப் பற்றி சில அத்தியாயங்களையும் அர்ப்பணித்துள்ளார். அதில் இந்த ஶ்லோகமானது கவனத்திற்குறியது:
சொன்ன சொல் தவறாமல், தர்மத்தை அனுசரித்து ராஜ்ய பரிபாலனம் செய்து மிகவும் கீர்த்தி அடைந்த தஶரதன் மிகச்சிறந்த (அயோத்யா) புரியை, இந்திரன் அமராவதியை ஆட்சி புரிந்தது போல் ஆண்டான் என்கிறது இந்த ஶ்லோகம்.
இந்த ஶ்லோகம் ஒன்று மட்டுமே ஸ்ரீ ராமபிரானுடைய பெருமைக்கு காரணம் யாரென்று எடுத்துரைக்க போதுமானது.
இதைப்போன்ற உதாகரணங்கள் பல இதிஹாச புராணாதிகளிலிருந்து கொடுக்கலாம் என்றாலும், நம்முடைய சங்கீதத்தை பொக்கிஷமாக பாவித்த வாக்கேயக்காரர்களிலேயே இப்பேர்பட்ட ‘தந்தை – தனயன்’ உண்டு என்பதையும், எவ்வளவு தூரம் இந்த வாக்கேயக்காரர்களின் படைப்புகளில் அவர்களின் தந்தையின் தாக்கம் இருக்கிறது என்பதை காட்டும் முயற்சியே இந்த கட்டுரை.
ஸ்ரீ ராம பக்தி சாம்ராஜ்யம்
ஸ்ரீ ராம பக்த ஶிகாமணிகளில் நம் நினைவுக்கு வரும் முக்கியமான மஹான் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள். ஸ்ரீ ராமப்ரஹ்மம் – சீதம்மா தம்பதியினருக்கு 1767ம் ஆண்டு திருவாரூரில் பிறக்கிறார். இவர் வால்மீகி மஹரிஷியின் அம்சமாக போற்றப்படுபவர். தேவ ரிஷி நாரதரின் தரிசனம் பெற்றவர். ஒரு குழந்தையிடம் தாய் தந்தையரின் குண நலங்கள் காணப்படுவது இயற்கை. அந்த வம்சத்திற்கான இயல்புகள் காணப்படுவது வழக்கம். ஆனால், தந்தை – மகன் இருவருக்கும் இஷ்ட தெய்வம் ஒன்றாக இருப்பதென்பது அரிதானதொன்று. அப்பேர்பட்ட அரிதான விஷயம் ஒன்றை இங்கு காண முடிகிறது. ராம ப்ரஹ்மம் மற்றும் த்யாகராஜ ஸ்வாமிகள் இருவருக்கும் ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தியே இஷ்ட தெய்வம். வேறு விதமாக பார்த்தால் ராம ப்ரஹ்மம் ஸ்ரீ ராமருடன் ஒன்றியிருந்த வாழ்கை முறை கூட த்யாகராஜ ஸ்வாமிகளுக்கு ஸ்ரீ ராமனிடம் பக்தி ஏற்பட ஹேதுவாக இருந்தது எனவும் கருதலாம்.
ஸ்ரீ ராமப்ரஹ்மம் ஒழுக்க சீலர். ஶாஸ்த்ர சம்ப்ரதாயங்களை பின்பற்றி வாழ்கையை அமைத்து கொண்ட அந்தணோத்தமர். பஜன சம்ப்ரதாயத்தில் முக்கிய தொண்டாற்றிய மஹான்களில் ஒருவரான மருதாநல்லூர் ஸ்வாமிகளிடம் ஸ்ரீ ராம தாரக மந்த்ரோபதேசம் பெறும் பாக்கியத்தையுடையவர். அவருடைய தொழில் ஸ்ரீமத் ராமயண பாராயணம் செய்து, பகவத் கல்யாணகுணங்களை நாம பஜனம் செய்வது. அப்படி இருக்கையில் இவர் ஏதாவது கீர்த்தனங்கள் இயற்றினாரா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலவில்லை. இவருடைய மேன்மையை அறிந்து, அப்பொழுது தஞ்சையை ஆண்ட துளஜா மன்னன் அவருடைய ராஜ்ஜியத்திற்கு சொந்தமான ப்ரதாப ராமஸ்வாமி கோவிலில் தினமும் ராமயண பாரயணம் செய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்து சன்மானதையும் அளித்து கௌரவித்தார். இவ்விவரங்களை த்யாகராஜ ஸ்வாமிகளின் சிஷ்யரான வாலாஜாபேட்டை ஸ்ரீ க்ருஷ்ணஸ்வாமி பாகவதரின் எழுத்துக்களின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றாலும், ஸ்வாமிகளே அவருடைய தந்தையின் ஸ்திதியைப்பற்றி ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகளின் க்ருதிகள் தவிர சில நாடங்கள் இயற்றியிருக்கிறார். ‘ப்ரஹ்லாத பக்த விஜயம்’, ‘நௌகா சரித்ரமு’ என்று நமக்கு கிடைத்திருக்கும் இரண்டு நாடகங்களில், முதலாவதான ப்ரஹ்லாதனின் பக்தியை விவரிக்கும் நாடகத்தில், தன்னுடைய தகப்பனாரின் ராமபக்தியையும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக ஒரு நாடகத்தை ஆரம்பிப்பதற்கு முன் கடவுள் வணக்கம், குரு வணக்கம் என்று தொடங்குவது வழக்கம். இங்கு கடவுள் வணக்கமாக ஸ்ரீ ராமசந்த்ர மூர்தியையும், சரஸ்வதி தேவியையும் துதித்து விட்டு, அவருடைய குருவான நாரத ஸ்வாமியை வணங்குகிறார். பிறகு, பாகவத சம்ப்ரதாயத்தையொட்டி பரம பாகவதர்களாக விளங்கும் துளஸீதாசர், புரந்தரதாசர், ராமதாசர் போன்றோருக்கு வந்தனம் தெரிவித்து தன் தந்தைக்கு ஒரு ஶ்லோகத்தை அர்ப்பணிக்கிறார்:
“ஸ்ரீ மத்பஞ்சநதம்பனு பூமினி விலசில்லுனட்டி புரவரமுன ஸ்ரீ ராமஸ்வரூபுடனதகு ராம்ப்ரஹ்மார்ய சுதுட ராகரஹிதுடன்”
இதில் அவர் பூஜிக்கும் ஸ்ரீ ராம மூர்தியையும், அதற்கு காரணமான ஸ்ரீ ராம ப்ரஹ்மத்தையும் ஒன்றாகவே பாவித்திருக்கிறார் என்று தெரிகிறது. திருவையாறு என்ற ஸ்தலத்தில் ஸ்ரீ ராம ஸ்வரூபமாக இருப்பவரின் புத்திரன் தான் என்று ப்ரகடனப்படுத்துகிறார். ராம ப்ரஹ்மத்தை போன்ற ஒரு உத்தமருக்கு ஏத்ததொரு காணிக்கை என்று இதை கூறலாம். ஆனால் இந்த ஶ்லோகங்கள் ப்ரசித்தமடையாததால், இதைப்போன்ற ஸ்வாமிகளின் வாழ்க்கையை கூறும் முக்கிய செய்திகளும், அவருடைய க்ருதிகளின் உண்மையான மெட்டுகளைப்போன்றே வெளிவாராமல் போய்விட்டன!
ஒரு பரம ஸ்ரீ ராமதாசன் தனக்கு பிறகு ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்திக்கு பூஜை புரிய ஒரு பக்தனை கொடுத்து விட்டார். அவருடைய ராம பக்தியின், ஸ்ரீ ராம ப்ரஹ்மத்தின் ராமாயண பாராயணத்தின் பலங்கள் ஸ்வாமிகளின் க்ருதிகள் வழியாக இன்றளவும் நிலைத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
ஸ்வாமிகளுக்கு அவர் தந்தையே ஸ்ரீ ராம நாமத்தை உபதேசம் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளதென்பதை மறுக்க முடியாது. ஸ்ரீ ராம ப்ரஹ்மம் ஸ்வாமிகளின் சிறு வயதிலிருந்தே அவருக்கு ராம நாமத்தின் ருசியை உணர வைத்து விட்டார் என்பது நமக்கு நன்றாக புலனாகிறது. ஸ்வாமிகள் இந்த உண்மையை தன்னுடைய முதல் கீர்த்தனத்திலேயே சூசகமாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக மந்திரங்களை அதனை முறையாக குருவிடமிருந்து தெரிந்து கொள்ளாதவருக்கு உபதேசம் செய்வது கிடையாது. ஆனால், ஸ்வாமிகளின் பெரும்பாலான கீர்த்தனங்கள் அவர் ஸ்ரீ ராம பக்தியில், தன்னை மறந்த நிலையில் வெளிவந்தமையால், சில ரகசியங்கள் அவைகளில் பொதிந்திருக்கின்றன. இவ்வகை கீர்த்தனைகளிலும் பல தத்வார்த்தங்கள் எல்லோருக்கும் தெரியும் வண்ணம் இருப்பதில்லை. ஆனால், அவைகளை பாடுபவர்களுக்கு, சுக்ருதமும், ஸ்வாமிகளின் கடாக்ஷமும் இருந்தால், அந்த ரஹஸ்யார்த்தங்கள் ஓரளவுக்கு புரியும் என்பதிலும் ஐயமில்லை. அந்த வகை கீர்தனங்களில் இவருடைய முதல் கீர்த்தனமே அமைந்திருப்பது நாம் எண்ணி மகிழ வேண்டியதொன்று. ‘நமோ நமோ ராகவாய அநிஶம்’ என்கிற தேசிக தோடி ராகத்திலமைந்த திவ்ய நாம கீர்த்தனமே இவருடைய முதல் கீர்த்தனம் என்பது இவருடைய வாலாஜாபேட்டை சிஷ்ய பரம்பரையினரால் கூறப்படுகிறது. மிகவும் சுலபமாக, சங்கீதத்தில் பால பாடம் பயிலும் மாணாக்கரும் கற்றுக்கொள்ளக்கூடிய கீர்த்தனம் இது. ஆனால், பலரும் அறியாத விஷயம், இந்த க்ருதியின் ஆரம்ப வரிகளே ‘ஸ்ரீ ராம ஶடாக்ஷரி’ என்னும் மந்திரம் என்பதாம்! மிக சுலபமாக, வீர்யம் பொருந்திய ஒரு மந்திரத்தை, எல்லோரும் எளிதாக பாடும்படி அமைத்துள்ளார் என்பது அவரின் சாதுர்யத்தை மட்டும் காட்டவில்லை, அவரின் தந்தையார் கொடுத்த ‘ஸ்ரீ ராம பக்தி’ என்னும் பொக்கிஷத்தை சகல காலமும் தன்னுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ப்ரதிக்ஞையையும் காண்பிக்கிறது. ஸ்வாமிகளை பொருத்த வரை ஸ்ரீ ராமர் வேறு, அவர் தகப்பனார் வேறென்பது கிடையாது. ‘சீதம்ம மாயம்ம’ என்ற லலிதா ராக கீர்த்தனையில், அவர் தாய் தந்தையரை, சீதா – ராமருடன் சம்பந்தப்படுத்தி சிலேடையாக அமைத்திருப்பதே இதற்கு சான்று. சதா சர்வ காலமும் ராமயண பாராயணம் செய்தவருடன் உடன் இருந்ததால் ஏர்பட்ட தாக்கம் என்றும் இதை சொல்லலாம்.
ஸ்ரீ ராம ப்ரஹ்மத்திடமிருந்த ராம பக்தி ஸ்வாமிகளை எப்படி கவர்ந்தது என்று பார்த்தோம். ராம ப்ரஹ்மத்துடைய ராமயண பாராயணத்தின் தாக்கத்தை இப்பொழுது பார்க்கலாம். ராமயண பாராயணம் என்பது, பொதுவாக ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் படித்து முடிப்பது. ராமயண ப்ரவசனகாரர்கள், இதை படிப்பதோடு மட்டுமல்லாமல் அதன் ரஹஸ்யார்த்தங்களுக்கு பொழிப்புரையும் கொடுப்பர்கள். ஸ்ரீ மத் ராமாயணம் தர்மார்த்த காம மோக்ஷத்திற்கு வழி வகுக்கும் என்பதாலும், தர்ம ஶாஸ்த்ரத்தின் சாரம் என்பதாலும், அதன் உள்ளார்தங்களை தெறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஆகையால், ராமாயணத்தை விஸ்தாரமாக, பாமரனுக்கும் புரியும் வண்ணம் ப்ரவசனகர்தாக்கள் விளக்குவார்கள். இப்படி ஸ்ரீ ராம ப்ரஹ்மமும் அவர் காலம் பர்யந்தம் ராமாயண சொற்பொழிவாற்றியுள்ளார். அதனை ஸ்வாமிகளும் கேட்டிருப்பார். சிறு வயதிலேயே ராமாயணம் முழுவதையும் உள்வாங்க இது ஹேதுவாக இருந்துள்ளது. பலவிடங்களில் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை இவர் க்ருதிகளில் உபயோகப்படுத்தியுள்ளார். இதற்கு ஒரு உதாஹரணமாக வசந்தபைரவி ராகத்திலமைந்த ‘ரமா ரமண பாரமா’ என்ற க்ருதியை சொல்லலாம். இக்க்ருதியின் அனுபல்லவியைப் பார்த்தால் இது தெளிவாகும். ‘நீ ஆண்மகனா அல்லவா என்று தெரியப்படுத்துமய்யா’ என்று கேட்கும் அர்தத்துடன் ‘புமானுட3னி காத3னி நாதோ தெல்புமா நரோத்தம ஸமான ரஹித’ என்று அமைத்திருக்கிறார். இது சீதா தேவி ஸ்ரீ ராமரைப் பார்த்து சொன்ன வார்தைகள். வனவாசத்திற்க்கு ஸ்ரீ ராமர் தனியாகத்தான் போவேனென்று சொல்கையில் தேவியானவள் இந்த கேள்வியை கேட்கிறாள். வால்மீகி ராமாயணத்தில் வரும் ஶ்லோகமானது:
ஓ ராம! மிதிலைக்கு அதிபதியான என் தந்தை உன்னை மருமகனாக ஏற்றுக்கொண்டாரே, நீர் புருஷ வேடத்திலிருக்கும் ஒரு ஸ்த்ரீ என்று அவர் அப்பொழுது நினைத்திருப்பாரா? என்று கோபாவேசத்தில் கேட்ட கேள்வியை ஸ்வாமிகள் தன்னுடைய க்ருதியில் உபயோகப்படுத்தியுள்ளார்.
இன்னொரு இடத்தில் வால்மீகி ராமாயணத்திலுள்ள ஶ்லோகத்தை அப்படியே பயன்படுத்தியுள்ளார்.
யுத்த காண்டம் – 1 - 13
இந்த ஸமஸ்க்ருத ஶ்லோகத்தை ஸ்வாமிகள் அப்படியே தன்னுடைய ப்ரஹ்லாத ப்ஹக்த விஜயத்தில் உபயோகித்துள்ளார்.
இதைப் போல் பல உதாகரணங்கள் கொடுக்கலாமென்றாலும், நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, ஸ்வாமிகளின் கீர்த்தனங்களில் காணப்படும் ஸ்ரீ ராம ப்ரஹ்மத்தின் ராமயண படன ப்ரதிபலிப்பு . ஆகையால், ஸ்வாமிகளின் ஸ்ரீ ராம பக்திக்கும், அவரின் ராமாயண புலமைக்கும், பின்னாளில் அவருக்கு கிடைத்த மோக்ஷ பதவிக்கும், ஸ்ரீ ராம ப்ரஹ்மம் தான் தூண்டுகோல் என்பது தெளிவாகிறது.
வீர வசந்த த்யாகராஜர்
ஒரு ஆளுமையுடைய தந்தையால் தன் மகனின் எண்ணத்தை வசீகரித்து தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதற்கோர் உதாரணம் ஸ்ரீ ராம ப்ரஹ்மம். அவருடைய கருத்துகளும், ஸ்ரீ ராம த்யானமும் ஸ்வாமிகளின் க்ருதிகளில் ப்ரதானமாக ஒலித்ததை பார்த்தோம்.
எண்ணங்கள் என்று சொல்லும் பொழுது அதை கருத்து அல்லது தத்துவமாகவே நமது மனது ஏற்றுக்கொள்கிறது. ஆனால், சர்வ நிச்சயமாக எண்ணங்கள் ஒரு கருத்தின் வடிவமாகவே வெளிப்படவேண்டுமென்ற நிச்சயம் இல்லையே? கருத்துக்கள் பாடல் வழியாக, அதன் மெட்டு வழியாக, ஒரு ராகத்தை அணுகும் முறையாகவும் வெளிப்படலாம் அல்லவா? அதுவும் தாக்கத்தை ஏற்படுத்துபவரும், அந்த உந்துதலுக்கு உட்படுபவரும் சாதுர்யமான சாஹித்யகர்தாக்களாக இருந்து விட்டால் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இல்லையா? அப்பேர்ப்பட்ட ஒரு சேர்க்கையை தான் அடுத்து பார்க்கப்போகிறோம்.
ஸ்வாமிகள் பிறந்த அதே திருவாரூரில் 1735ம் வருடம் ஸ்ரீ ராமஸ்வாமி தீக்ஷிதர் சுப்பம்மா தம்பதியினருக்கு பிறந்தவர் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர். முருகப்பெருமானின் கடாக்ஷத்தைப் பெற்ற இவர் பல கீர்த்தனங்கள் இயற்றியுள்ளார்.
க்ருதிக்கு அழகு கூட்டும் மத்யம கால சாஹித்யம், தேவைக்கேற்றார்போல் அளவெடுத்து அமைத்த சிட்டைஸ்வரம், சமத்காரமாக சாஹித்யத்தில் நுழைக்கப்பட்ட ராக முத்திரைகள், எடுத்து கொண்ட ராகத்தின் பல்வேறு பரிணாமத்தை காட்டும் விதமாக உபயோகிக்கப்பட்ட ஸ்வரங்கள், க்ருதியில் அர்சிக்கப்படும் தெய்வம் அமைந்துள்ள ஸ்தலத்தின் புராண மஹிமைகள் என்று பல விஷயங்கள் தீக்ஷிதர் கீர்த்தனம் என்றதும் நம் நினைவுக்கு வருபவை. இவைகளை ரசிகாதவர் இல்லவே இல்லை என சொல்லலாம். இதை அனுபவித்த பலரும், முத்துஸ்வாமி தீக்ஷிதர் தான் இந்த அம்சங்களை புதிதாக கொண்டு வந்தார் என்று (தவறாக) உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், முத்துஸ்வாமி தீக்ஷிதரின் இந்த புகழுக்கும், அவருடைய கீர்தனங்களின் ஆகர்ஷணத்திற்கும் காரணம் ஸ்ரீ ராமஸ்வாமி தீக்ஷிதரின் தாக்கம் என தெளிவு படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
ஸ்ரீ ராம உபாசனை எப்படி த்யாகராஜ ஸ்வாமிகளுக்கு அவரின் தந்தையார் மூலம் வந்ததோ அதே போல் நாதோபாசனை முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு அவர் தந்தை கொடுத்த சொத்து என நம்பலாம். இந்த குடும்பத்தைப் பற்றியும் அவர்கள் இயற்றிய உருப்படிகளைப் பற்றியும் எந்த வித கலப்படமும் இல்லாமல் உண்மையை எடுத்துரைக்கும் படி ராமஸ்வாமி தீக்ஷிதரின் பேரன் ஸ்ரீ சுப்பராம தீக்ஷிதர் ‘சங்கீத சம்ப்ரதாய ப்ரதர்ஷினி’ என்னும் க்ரந்தத்தை எழுதியுள்ளார். அதில் ராமஸ்வாமி தீக்ஷிதரைப் பற்றி விவரிக்கையில் இயல்பாகவே குரல் வளம் நன்றாக இருந்ததேன்றும், இசைக் கலையின் இலக்கணங்களை தகுந்த குருவின் மூலமாக படித்துக் கரை கண்டவர் என்றும் குற்றிப்பிடுகிறார். ஆகையால், இளம் ப்ராயம் முதலே முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு சங்கீத்ததின் சம்பந்தம் அவர் தந்தையாரின் மூலம் அபரிமிதமாக கிடைத்துள்ளது எனக் கொள்ளளாம்.
ஒரு க்ருதியை எடுத்துகொண்டால், ப்ரதானமாக அதற்கு இரு பரிணாமங்கள் உண்டு – அதன் சாஹித்யம் மற்றும் சங்கீதம். இவ்விரண்டு பரிணாமங்களிலும் ராமஸ்வாமி தீக்ஷிதரின் தாக்கம் தெரிகிறது. முதலில் சாஹித்யம் சம்பந்தப்பட்டவைகளை காணலாம். க்ருதியை அழகுபடுத்துவதற்காக பல வித அணிகலங்களை சேர்க்கலாம். அவைகளில் சில மத்யம கால சாஹித்யம் மற்றும் சிட்டைஸ்வரம். ஒரு க்ருதி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என கொள்ளுவோம். திடீரென்று அதன் வேகம் கொஞ்சம் துரிதமானால் கேட்பதற்கு வித்யாசமாகவும்,ர ரசமாகவும் இருக்கும் இல்லையா? அதை கொடுப்பது தான் மத்யம கால சாஹித்யம். இங்கு க்ருதியின் சாஹித்யத்தில் இருக்கும் அக்ஷரங்கள் மட்டும் இரட்டிப்பாக்கப்படுகின்றன. எல்லோருக்கும் தெரிந்த ‘வாதாபி கணபதிம்’ என்ற ஹம்சத்வனி ராக க்ருதியிலேயே இதை காணலாம். அனுபல்லவியில் வரும் ‘பூத பௌதிக’ என்று ஆரம்பிக்கும் இடம் மத்யம கால சாஹித்யம். இதை நமக்கு தெரிந்தவரை முதன் முதலில் க்ருதிகளில் அறிமுகப்படுத்தியது ஸ்ரீ ராமஸ்வாமி தீக்ஷிதர். அவருடைய வேகவாஹினி ராக கீர்த்தனமான ‘இங்க தயராகுன்ன’ என்ற ஸ்ரீநிவாசரின் மீதமைந்த உருப்படியில் இதை காணலாம்.
அடுத்தது சிட்டைஸ்வரம். க்ருதியென்பது சாஹித்யம் மட்டுமே கொண்டிராமல் ஸ்வரங்களும் அதற்கு அமைப்பது என்பது அதை போஷிப்பதற்கு ஒரு முறை. ஸ்வரஜதி என்னும் இசை வடிவில் இது இருந்தாலும் க்ருதிகளில் இவைகளை ராமஸ்வாமி தீக்ஷிதர் புகுத்தியுள்ளார். முன்னர் சொன்ன வேகவாஹினி க்ருதி, ஆனந்தபைரவி ராகத்திலமைந்த ‘அம்பா நன்னு’ போன்ற கீர்த்தனைகளில் இதைக்காணலாம்.
கல்யாணி ராகத்திலமைந்த ‘கமலாம்பாம் பஜரே’ என்ற முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனம் மிகவும் ப்ரசித்தம். இது திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் கமலாம்பிகையின் மீது பாடப்பட்ட ஸ்ரீ வித்யை பரமான ஒரு கீர்த்தனம். நவாவர்ண கீர்த்தனைகள் என்னும் தொகுதியில் வரும் கீர்த்தனை இது. இந்த கீர்த்தனைக்கு ஒரு சிட்டைஸ்வரம் அமைத்துள்ளார் முத்துஸ்வாமி தீக்ஷிதர். ஸ்வாமிகளின் கீர்த்தனம் பல மாறினாற் போல் தீக்ஷிதர் கீர்த்தனங்களும் மாற்றப்பட்டிருக்கின்றன. அந்த சலனத்தில் இந்த சிட்டைஸ்வரம் பாடும் வழக்கம் அழிந்து போய் விட்டது. இந்த சிட்டைஸ்வரம் சுப்பராம தீக்ஷிதர் வழியாக மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது. இந்த சிட்டைஸ்வரத்தின் விஷேஶம் இந்தப்பகுதி ‘இரு வழியொக்கும் சொல்’ (palindrome) போன்று அமைக்கப்பட்டிருப்பதாம். திருஞானசம்பந்தரின் மாலை மாற்று பதிகம் போல எடுத்து கொள்ளலாம். முன்னிருந்து பின்னோக்கி படித்தாலும், பின்னிருந்து முன்னோக்கி படித்தாலும் ஒரே அக்ஷரங்களே இருக்கும். இங்கு இரு வழியிலும் ஒரே ஸ்வரங்களே அமைக்கப்பட்டிருக்கும். இதுவே நம்மை ஆசர்யப்படுதினாலும் இதே வழியில், ஆனால் இதை விட கடினமாக சில உருப்படிகள் ராமஸ்வாமி தீக்ஷிதரால் அமைக்கப்பட்டிருப்பது நம்மை மேலும் வியப்பில் ஆழ்த்துகிறது. இதில் குற்றிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது ‘கங்கா தரங்கிணி’ என்னும் ராகத்தில் அமைந்துள்ள ‘ஸாரஸனயனஸரஸா’ என்னும் தரு. இதில் ஸ்வரம் மற்றும் சாஹித்யம் இரண்டும் ‘இரு வழியொக்கும் சொல்’ போன்று அமைத்திருப்பது நம்மை ப்ரமிக்க வைக்கிறது. முத்துஸ்வாமி தீக்ஷிதர் இதை ஒரு வடிவமாக கொண்டே மேற்சொன்ன சிட்டைஸ்வரம் அமைத்திருப்பர் என நிச்சயமாக நம்பலாம்.
அடுத்ததாக முத்துஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனத்தில் நம்மை மெய் மறக்கும் விஷயம் அவர் ஒரு ஸ்தலத்தை பற்றி, அதில் உறையும் தெய்வத்தை பற்றி, அங்கிருக்கும் பழக்க வழக்கங்களை பற்றி விரிவாக எடுத்துரைத்திருப்பது. ‘ரங்கநாயகம்’ கீர்த்தனையில் ‘ரங்கநாயகி ஸமேதம்’ என்று வர்ணிப்பது, ஸ்ரீ வாஞ்சியத்தில் இருக்கும் ‘குப்த கங்கா’ என்னும் திருக்குளத்தை பற்றி ‘மங்களாம்பாயை நமஸ்தே’ என்ற கீர்த்தனத்தில் குறிப்பிடுவது, திருவாரூரில் நடக்கும் வருடாந்திர ப்ரஹ்மோத்சவத்தை ‘த்யாகராஜ மஹாத்வஜாரோஹ’ என்னும் கீர்த்தனம் வழியாக விளக்குவது என்று பலவற்றை எடுத்துக்காட்டலாம். மேற்காட்டிய தகவல்களை படித்த பிறகு, இந்த கலையையும் அவர் தந்தையிடமிருந்தே கற்றார் என்றால் அது பலருக்கும் ஆச்சர்யத்தை தராது. ராமஸ்வாமி தீக்ஷிதர் ஒரு புண்ய ஸ்தலத்தின் பெருமையை கூறும் விதமாக அந்த க்ஷேத்திரத்தில் இருக்கும் திருக்குளத்தின் பெயரிலேயே ஒரு கீர்த்தனத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த ஸ்தலம் ‘திருப்பதி’. சங்கராபரண ராகத்தில் அமைந்த இக்கீர்த்தனமானது ‘ ஸ்வாமி புஶ்கரணி தட நிவாஸா’ என்றே ஆரம்பிக்கிறது. ஸ்வாமி புஷ்கரணி என்பது திருப்பதி ஸ்ரீனிவாசர் கோவிலிலிருக்கும் புண்ய தீர்த்தம். இதே க்ருதியில் ‘அலமேலு மங்கா ஸஹசருடைன’ என்று அங்கிருக்கும் தாயாரின் பெயரையும் குறிப்பிடுகிறார். இதற்கும் மேலும் உதாஹரணங்கள் வேண்டுமா?
சில சொல்லாடல்களையும் இருவரின் க்ருதிகளிலும் பார்க்க முடிகிறது. அவற்றில் குற்றிப்பிட்டு சொல்ல வேண்டியது ‘வீர வசந்த த்யாகராஜ’ என்கிற பதம். ‘வசந்த த்யாகராஜர்’ என்று திருவாரூரில் இருக்கும் த்யாகராஜரை சில இலக்கியங்களில் குறிப்பிட்டிருப்பதை காண முடிகிறது. ஆனால், இசையை பொருத்த வரையில் இந்த பதத்தை, இந்த குடும்பத்தினரை தவிர யாரும் கையாண்டதாக தெரியவில்லை. ராமஸ்வாமி தீக்ஷிதர், அவருடைய மோஹன ராக வர்ணத்தில் இந்த பதத்தை உபயோகிக்கிறார். முத்துஸ்வாமி தீக்ஷிதர் ‘வீர வசந்த த்யாகராஜ’ என்றே ஒரு க்ருதி ‘வீர வசந்த’ என்னும் ராகத்தில் இயற்றியுள்ளார். சுப்பராம தீக்ஷிதரும் அவருடைய வர்ணம் ஒன்றில் இந்த பதத்தை ப்ரயோகப்படுதியுள்ளார்.
சாஹித்யம் என்று வருகையில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஒரு ராகத்தின் பெயரை க்ருதியின் வார்தைகளில் சாமர்த்யமாக கோர்ப்பதை பலரும் பேசி கேட்டிருக்கலாம். ஆனால், இதிலும் அவரது தகப்பனாரின் தாக்கம் இல்லாமல் இல்லை. ‘மங்களதேவதயா’ என்றொரு கீர்த்தனம் தன்யாசி ராகத்தில் உண்டு. இது மஹாலக்ஷ்மியை குறித்து முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றியது. இதில் ராகத்தின் பெயரை, ‘மூர்தன்யாஶிவ நிக்ரஹயா’ என்றவிடத்தில் கொடுத்திருப்பார். மிகவும் சமத்காரமான ப்ரயோகம். நாட, மோஹனம், வசந்த, லலிதா போன்ற பெயர்களை சுலபமாக சாஹித்யத்தில் புகுத்திவிடலாம். ஆனால், தன்யாசி போன்ற பெயர்களை சேர்ப்பதற்கு அபார ஞானம் வேண்டும். ஆனால், ராமஸ்வாமி தீக்ஷிதர் போன்ற தந்தை அமைகயில் என்ன கவலை? அவர் உபயோகப்படுதியத்தை தானும் உபயோகப்பதில் தவறில்லையே? ராமஸ்வாமி தீக்ஷிதர் ஒரு ராகமாலிகை அமைத்துள்ளார். மதுரை மீனாக்ஷி அம்பாளை குறித்துள்ள இக்க்ருதியில் தன்யாசி ராகத்தையும் இணைத்துள்ளார். அந்கு ராகத்தின் பெயர் வருவதற்காக ‘சுர மூர்தன்யாசி வேணி’ என்றே பதத்தை உபயோகித்துள்ளார்.
முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு அசாத்திய ஞானம் இருந்தது உண்மை. ஆனால், அதற்கு வித்திட்டது ராமஸ்வாமி தீக்ஷிதர் என்பதே இங்கு சொல்ல விழையும் விஷயம். இவையெல்லாம் பார்க்கையில் ராமஸ்வாமி தீக்ஷிதரை, அவருடைய வித்தையை முத்துஸ்வாமி தீக்ஷிதர் முதற்கொண்டு அந்த குடும்பத்தினர் சகலரும் பூஜித்திருக்க வேண்டும் என்று புலனாகிறது.
ராமஸ்வாமி தீக்ஷிதரின் தாக்கம் முதுஸ்வாமி தீக்ஷிதரின் சங்கீத்ததிலும் அபரிமிதமாக வெளிப்படுகிறது. பொதுவாக முதுஸ்வாமி தீக்ஷிதர் தான் ஹிந்துஸ்தானி ராகங்களான ஹமீர் கல்யாணி, யமுனா கல்யாணி போன்ற ராகங்களை கர்னாடக சங்கீதத்திற்கு அறிமுகப்படுத்தினார் என்ற கருத்து நிலவுகிறது. மேலும் அவர் காசி க்ஷேத்ரத்தில் சில காலங்கள் தங்கிருந்தமையால் ஹிந்துஸ்தானி ராகங்களின் பரிசயம் ஏற்பட்டிருக்கும் என்கிற கதையும் உலாவுகிறது. ஆனால், மேலே குறிப்பிட்ட ராகங்கள் மட்டுமல்லாது மாருவ, கௌரி, பைரவம் போன்ற வடக்கிந்தியாவிலிருந்து வந்த மற்ற பல ‘தேஶிய’ ராகங்களையும் ராமஸ்வாமி தீக்ஷிதர் கையாண்டுள்ளார் என்பதே உண்மை. ஆகையால் முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு சிறு வயதிலேயே, அவர் க்ருதிகள் இயற்ற ஆரம்பிக்கும் முன்பே இந்த ராகங்களை கேட்பதர்க்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பின்னாளில் தான் தந்தையிடமிருந்து கேட்டதை, கற்றுக்கொண்டதை விஸ்தாரமாக உபயோகித்துள்ளார்.
ராகங்களை பல வகைகளாக பிரிக்கலாம். அவற்றில் ஒரு வகை மேள ராகங்கள் மற்றும் ஜன்ய ராகங்கள். தற்காலத்தில் மேள ராகத்தை தாய் ராகமென்றும் அழைக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த மேள ராகங்களை சுப்பராம தீக்ஷிதர் ராகாங்க ராகம் என்று அழைக்கிறார். தனுகீர்தி, ஜங்காரப்ரமரி, சாமரம் போன்ற ராகாங்க ராகங்களை ராமஸ்வாமி தீக்ஷிதரின் ராகமாலிகைகளில் பார்க்க முடிகிறது. இந்த தூண்டுதலால் முத்துஸ்வாமி தீக்ஷிதர், 72 ஆக இருக்கும் ராகாங்க ராகங்களில் 68 ராகங்களில் க்ருதிகள் இயற்றியுள்ளார்.
ராகமாலிகைகள் இந்த குடும்பத்தினரிடமிருந்து நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ராமஸ்வாமி தீக்ஷிதரிலிருந்து சுப்பராம தீக்ஷிதர் வரை பல ராகமாலிகைகள் நமக்கு கொடுத்துள்ளார்கள். ஒவ்வொன்றும் ராகங்களை எப்படி அணுகுவது, ராக முத்திரைகளை எப்படி சாஹித்யத்தில் புகுத்துவது, மிகவும் குறைந்த அளவிலான ப்ரயோகங்களைக் கொண்டு ராக ஸ்வரூபத்தை எப்படி காண்பிப்பது போன்ற பல பல பாடங்களை கற்றுக் கொடுக்கும் ஆசான்கள். ராகமாலிகையில் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அடுக்கப்படும். இந்த ராகங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட ராகமாக இருக்கலாம் அல்லது சிரிதும் சம்பந்தப்படாத ராகமாகவும் இருக்கலாம். இதில், சம்பந்தப்பட்ட ராகங்களை, அதாவது ஒரே ஸ்வரத்தை எடுத்துக்கொள்ளும் ராகங்களை அடுத்தடுத்து உபயோகிப்பது என்பது தீக்ஷித குடும்பத்தின் தனிப்பட்ட அடையளாம். ஒரே ஸ்வரமுடைய ராகங்கள் மிகவும் நெருக்கமாக வருவதால் அதை வித்யாசப்படுத்திக் காண்பிக்க ப்ரயோகங்களே வழி. அதனால் அந்த ராகத்தை பளிச்சென்று, எந்த வித குழப்பமும் வராமல் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கத்தி மேல் நடப்பது போன்ற இந்த வித்தையில் கை தேர்ந்தவர்கள் தீக்ஷிதர்கள் என்பது அந்த ராகமாலிகைகளை கேட்டால் தெளிவாகும். இப்படி உபயோகிப்பதற்க்கும் முன்னோடி ராமஸ்வாமி தீக்ஷிதர். ‘சாமஜ கமன’ என்ற ராகமாலிகையில், மணிரங்கு, தர்பார், ஸ்ரீ ராகம், காபி என்று ஒரே மேளத்தில் பிறந்த ராகங்களை ஒன்றன் பின் ஒன்றாக உபயோகப்படுதியிருப்பார். இதை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு, ஒரு படி மேல் நகர்ந்திருப்பார் முத்துஸ்வாமி தீக்ஷிதர். ஒரு ராகமாலிகை முழுவதும் நெருக்கமான ராகங்களை கொண்டே அமைத்திருப்பார். ‘பூர்ண சந்த்ர’ என்ற ராகமாலிகையில் வரும் ராகங்கள் யாவும் சங்கராபஅரண மேள ஜன்யங்களே!
ஒன்றுக்கொன்று சம்பந்தப்படாத ராகங்களை தேர்வு செய்வதிலும் முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவரது தந்தையாரை பின்பற்றியிருக்கிறார். ஸ்ரீ விஶ்வனாதம் பஜேஹம்’ என்ற முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ராகமாலிகை ப்ரசித்தம். இதில் சரணத்தில் முதலில் வரும் ராகம் ‘சாமா’. அதற்கடுத்து வருவது ‘லலிதா’ என்ற ராகம். இரண்டும் சம்பந்தமே இல்லாத ராகங்கள். சர்க்கரையும் பாலும் போலுள்ள இவற்றை இணைத்து பார்க்க தூண்டியது ‘ஸாமஜ கமன’ என்ற ராகமாலிகையே. ராமஸ்வாமி தீக்ஷிதர் இந்த க்ருதியை சாமா ராகத்தில் ஆரம்பித்து லலிதாவை அடுத்து இணைத்திருப்பார்!
ஒரு ராகத்திற்கு ஆதாரம் அதிலிருக்கும் ஸ்வர சேர்க்கைகளே. ராகத்தை பூச்சரம் என்று எடுத்துக்கொண்டால், அந்த ராகத்திலுள்ள ப்ரயோகங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பூவோடு ஒப்பிடலாம். இதில் இந்த பூ தான் முதலில் வர வேண்டும் அல்லது கடைசியில் வர வேண்டும் என்ற கணக்கெல்லாம் கிடையாது. அந்தந்த வாகேயக்காரரின் மனோதர்மத்திற்கேற்றபடி இப்ப்ரயோகங்களை எங்கு வேண்டுமென்றாலும் உபயோகிக்கலாம். ஆனால், இங்கும் முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவர் தந்தையாரை பின் தொடர்ந்துள்ளார். வேகவாஹினி ராகத்தில் அமைந்துள்ள ‘வீணா புஸ்தக தாரிணி’ என்ற முத்துஸ்வாமி தீக்ஷிதர் மிகவும் ப்ரசித்தம். இதில் அனுபல்லவி ‘ஏணாங்கயுத’ என்று தொடங்கும். இதனுடைய மெட்டிற்கான அஸ்திவாரம் ராமஸ்வாமி தீக்ஷிதருடைய கீர்த்தனம் என்பது பல பேருக்கு தெரியாத விஷயம். இதே ராகத்திலமைந்த ராமஸ்வாமி தீக்ஷிதருடைய கீர்த்தனம் ‘இங்க தயராகுன்ன’ வென்று பார்த்தோம். இந்த வரிக்கான மெட்டும் ‘ஏணாங்கயுத’ என்ற வரிக்கான மெட்டும் ஒன்றே! நதோபாசனையில் கரை கண்ட முத்துஸ்வாமி தீக்ஷிதர் இது தெரிந்தே தான் பயன் படுத்தியிருப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இது ஒரு உதாகரணமே. இப்படி பல கீர்த்தனங்களில் பார்க்க முடிகிறது.
ராகங்களின் லக்ஷணத்திற்க்கும் ராமஸ்வாமி தீக்ஷிதரையே இந்த குடும்பம் பின்பற்றியிருக்கிறது எனவும் சொல்லலாம். இதற்கு மேற்கோளாக ‘குறிஞ்சி’ என்ற ராகத்தைப் பார்ப்போம். மிகவும் பரவலாக பாடப்படும் இந்த ராகம் சங்கராபரண ராகத்தின் சாயலை கொண்டிருக்கும். இந்த ராகத்தில் ‘ஸரிகம’ என்ற ப்ரயோகத்தை மட்டும் பார்க்கவே முடியாது. ஆனால் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ‘ஸ்ரீ வேணுகோபாலா’ என்ற க்ருதியில் இது காணப்படுகிறது. இதற்கான ப்ரமாணம் ராமஸ்வாமி தீக்ஷிதர் மட்டுமே பாரம்பரிய கீதங்களோ, ப்ரபந்தங்களோ இல்லை! அவருடைய ஒரு ராகமாலிகையில் இந்த ப்ரயோகத்தினை பார்க்க முடிகிறது. இந்த பாடங்களை நமக்கு புத்தக வடிவில் கொடுத்ததற்கு சுப்பராம தீக்ஷிதருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். இதை கவனிக்காமல் விட்டால், இந்த ப்ரயோகமே நாளடைவில் மறைந்து விடவும் வாய்ப்பு உள்ளது.