மருதத் திணை

வெளிறிய வர்ணங்களுக்கு நடுவில் அழுத்தமான வர்ணத்துளி போவவும், அடங்கிய உரையாடலுக்கு மத்தியில் துடுக்கான கலகக் குரல் போலவும் அமைபவை, பரத்தையர் கூற்றாக வரும் அகக் கவிதைகள். பரத்தையர் பிரிவு, பரத்தையர் சேரி, இற்பரத்தை, சேரிப் பரத்தை – போன்ற சொல்லாடல்கள், உலகின் முதுபெரும் தொழில் செழித்திருந்த மருதத் திணையை வாசகர் முன் விரித்துக் காட்டுகின்றன. திருக்கோவையார் உரையில் பேராசிரியர், ‘பரத்தையர் பிரிவென்பது தலைமகளை வரைந்தெய்திய பின்னர் வைகலும் பாலே நுகர்வான் ஒருவன் இடையே பனங்காடியும் நுகர்வது போல’ என்று சமாதானம் சொல்கிறார். இதற்கு எதிரான ஒழுக்கக் குரல் சில நூற்றாண்டுகளுக்குப் பின்,

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று

என்ற திருவள்ளுவரின் அதிர வைக்கும் உவமையில் ஒலிக்கிறது. 

சங்கக் கவிதையில் வரும் பரத்தையர், ஹாலனின் “காதா சப்த சதீ” பிராகிருதக் கவிதைகளில் போல, முற்றிலும் மனத்தடைகளற்ற குரலில் பேசுவதில்லை. ஆனால் தன்னம்பிக்கையும், சிறிது செருக்கும், கற்பனையும் உடைய குரல் அவர்களுடையது. பலரும் அறிந்த   ஆலங்குடி வங்கனாரின் குறுத்தொகைக் கவிதையில் காதற் பரத்தை எள்ளலுடன் பேசுகிறாள்: 

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.

கழனி மாம்பழத்தைப் பொய்கை வாளை எளிதில் கவ்வுமாறு அது அங்கே வீழ்ந்தது என்று பொருள்படும் முதல் இரண்டு அடிகள் உள்ளுறையாகத் தலைவன் காதற்பரத்தையிடம் தானே வந்து வீழ்ந்ததைக் குறிப்பிடுகின்றன. ‘அத்தகையவன் எம் வீட்டில் இருந்தால் பெரிதாக ஓங்கிப் பேசுவான். ஆனால் தன் வீட்டுக்குப் போனாலோ நாம் நம் கையையும் காலையும் தூக்கத் தானும் அது போலவே தூக்கும், கண்ணாடியில் தெரியும் நிழற்பாவை போல மனைவி விரும்பியபடியெல்லாம் ஆடுவான்’ என்று எள்ளலும் எரிச்சலும் கலந்த தொனியில் பேசுகிறாள் பரத்தை. “மனைவி” என்று குறிப்பிடாமல் ‘தன் புதல்வன் தாய்’ என்று சொல்வது, பல்வேறு உணர்ச்சிகளைத் திரையிட்டுச் சொல்வதாக அமைகிறது. உரையாசிரியர் விளக்குவது போல, ‘அவளே மகப்பேறு உற்றுக் குடியை வளர்க்கும்  உரிமையுடையவள் ஆதலின் தலைவன் அவளுக்கு அஞ்சுகிறான்.   அச்சிறப்பு எம்மிடம் இன்மையின் இன்பம் நுகர்தலே அன்றி எம்பால் உரிமையுடன் கூடிய அன்பு செலுத்துகின்றான் அல்லன்’ என்ற வியங்கியப் பொருளைப் பரத்தை ‘புதல்வன் தாய்’ என்ற தொடரில் வெளிப்படுத்தி விடுகிறாள். இரண்டு சொற்களில் தொனிக்கும் கசப்பு, பரத்தையின் பிரதிபா சக்திக்குச் சான்று.

உரிமைக்கு அப்பால் தலைவனிடம் தமக்கு இருக்கும் செல்வாக்கைப் பரத்தை பெருமிதத்துடன் வெளிப்படுத்தும் அகக் கவிதைகளும் இருந்கின்றன. ‘ஆம்பல் மலர்களைச் சூடிக் கொண்டு தலைவனுடன் புனல் விளையாட்டு ஆடச் சென்று கொண்டிருக்கிறோம். அதையறிந்து தலைவி அஞ்சினாள் என்றால், வெம் போர் முனையில் எழினி நன் ஆநிரைக் கூட்டத்தைக் காத்துக் கொண்டது போலத் தன் தலைவனின் மார்பைச் சுற்றத்தாரோடும் வந்து காத்துக் கொள்ளட்டும்’ என்று பரத்தை, தலைமகளுக்குப் பாங்காயினார் கேட்பச் சொன்னதாக அவ்வையாரின் பாடல் அமைகிறது. ‘கிளையொடும் காக்க கொழுநன்  மார்பே’ என்ற பரத்தையின் சொற்களில் தொனிக்கும் செருக்கு வசீகரமானதாக இருக்கிறது.

அவ்வையாரின் இன்னொரு குறுந்தொகைப் பாடலில் பரத்தை தலைவன் மீதான தன்னுடைய இறுக்கமான பிடி பற்றிய நம்பிக்கையில் இவ்வாது பேசுகிறாள்: ‘தலைவனை நான் கவர்ந்து கொண்டதாகப் புறம் கூறும் தலைவி, மகளிர் ஆடும் துணங்கைக் கூத்துக்கு வந்து பார்க்கட்டும். தலைக்கை எனக்குத் தந்து தலைவன் ஆடும் போது, யார் யாரை விரும்புகிறார்கள் என்பது தெரிந்து விடும்.’ 

‘காமம் செப்பல் ஆண் மகற்கு அமையும்; பெண் மகட்கு அமையாது’ என்ற தலைவியின் நிலைப்பாட்டை மனத்தில் கொண்டால், பரத்தையின் வெளிப்படையான சொல்லாடலின் வசீகரம் புரியக் கூடும். பரத்தை கூற்றாய் வரும் குறுந்தொகைக் கவிதைகளின் சிகரம் என்று வில்லக விரலினாரின் கவிதையைச் சொல்லி விடலாம்:

பொய்கை யாம்ப லணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்குந் தண்டுறை யூரனொடு
இருப்பி னிருமருங் கினமே கிடப்பின்
வில்லக விரலிற் பொருந்தியவன்
நல்லகஞ் சேரி னொருமருங் கினமே.

ஐந்து அடிகளில் ஒரு முழுமையான அனுபவமும், ஒரு அபாரமான உவமையும், அதையே பெயராக ஏற்றுக் கொண்டுவிட்ட ஒரு கவிஞரும் – என்று ஒரு விசித்திர உலகம் வாசகன் முன் விரிகிறது.

வில்லக விரலினார் என்ற குறுந்தொகைப் புலவரின் நிஜப் பெயரை அறிய ஆவலாக இருக்கிறது என்கிறார் சுஜாதா. பரத்தைக்கும் தலைவனுக்கும் உள்ள நெருக்கத்தைப் போர்வீரனின் வில் பிடித்த கைவிரல்களின் இறுக்கத்தோடு ஒப்பிட்டுப் பேசும் பெயர் தெரியாத கவிஞரின் கற்பனைத் திறன் வாசகனைப் பிரமிக்க வைக்கிறது. அவர் சித்திரிக்கும் பரத்தையின் கலவிநுட்பம், திருவள்ளுவர் கடிந்து சொல்லும் பொருட் பெண்டிரின் பொய் முயக்கத்திலிருந்து வேறுபட்டது. ‘தலைவன் அருகில் இருந்தால் இரண்டு உடல்களை உடையவர்களாக இருக்கிறோம், அவனோடு கூடும் போதோ, வில்லை

இறுகப் பற்றிய விரல்கன் போல அவனுடன் இரண்டறக் கலந்து போகிறேன். அதே சமயம் அவன் என்னைப் பிரித்து தன்னகம்   சென்றால், பிரியவிட்டுத் தனித்திருந்து வருந்துவேன்’ என்று மன முதிர்ச்சியுடன் பேசும் பரத்தை, ஆக்கிரமிப்பற்ற அன்பையே வெளிப்படுத்துகிறாள். கவிதையின் இறுதி அடியை உரையாசிரியர்கள் இருவிதமாகப் பொருள் கொள்கிறார்கள். எப்படிக் கொண்டாலும், இந்தக் கவிதை ஆங்கிலக் கவிஞர் ஜான் டண்ணின் பரவசக் காதல் கவிதை அளிக்கும் அகக் கிளர்ச்சியையே வாசகனிடம் உண்டு பண்ணுகிறது.

(தொடரும்)

தமிழ்க் கவிதை சில குறிப்புகள் - ந.ஜயபாஸ்கரன்

வரலாற்றுவமைக்குப் பரணர் கவிதையில் வரலாற்றுணர்வு

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.