- தமிழ்க் கவிதை சில குறிப்புகள்
- பழையவரால் என்ன பயன்?
- மயக்கமும் பித்தமும் கொண்டார்
- காலைப் பூசல்
- கவிதையில் உறைந்திருக்கும் சிந்தாத கண்ணீர்
- நீளமான கவிதை வடிவத்திலும் கலை ஒருமையைச் சாதிக்குமா
- எழுது சித்திரம்
- வரலாற்றுவமைக்குப் பரணர்
- மருதத் திணை
- கவிதையில் வரலாற்றுணர்வு
“மூடை மூடையாய் அபூர்வமான கற்கள் வைத்திருக்கும் ஒரு வியாபாரி ஒரு பிடி எடுத்துக் காட்டி நிறுத்திக் கொண்டது போலவே இருந்தது அவள் பேசி முடித்தது’ என்ற சுந்தர ராமசாமியின் ‘திரைகள் ஆயிரம்’ குறுநாவல் வரியைப் படித்த போது, குறுந்தொகைப் பாடல்களும் எமிலியின் கவிதைகளுமே நினைவுக்கு வந்தன. காட்டாமல் நிறுத்தப்படுவதும் சொல்லாமல் விடப்படுவதும் எப்படிக் கவிதையாக உருக்கொள்கின்றன என்பதை உணர முடிந்த கணம் அது. அதனாலேயே நீண்ட கவிதை என்று சொன்னால் அது பொருளற்ற தொடராகி விடுகிறது என்ற எட்கர் ஆலன் போவின் கருதுகோள் ஈர்ப்புடையதாக இருந்தது. அதே சமயம் சற்று நீளமான கவிதை வடிவத்திலும் கலை ஒருமையைச் சாதிக்க முடியும் என்பதைக் கீட்ஸின் கிரேக்கத் தாழிக்கான கவிதையும், இலையுதிர் காலத்துக் கவிதையும், போந்தைப் பசலையாரின் 25 அடி அகநானூற்றுக் கவிதையும் உணர்த்தின. (இவை ஒன்றுக்கொன்று சம்பந்தமற்றவை என்ற போதிலும்)
இது போந்தைப் பசலையாரின் கவிதை:
அன்னை அறியினும் அறிக; அலர்வாய்
அம் மென் சேரி கேட்பினும் கேட்க;
பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி,
கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி,
கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல் 5
2
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்,
சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும்,
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது
இருந்தனமாக, எய்த வந்து,
3
”தட மென் பணைத் தோள் மட நல்லீரே! 10
எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்;
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும் இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?”
என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு,
4
இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி, 15
”இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த
கொழு மீன் வல்சி” என்றனம், இழுமென.
5
”நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ?” எனக் காலின் சிதையா,
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் 20
என்னே குறித்த நோக்கமொடு, ”நன்னுதால்!
ஒழிகோ யான்?” என அழிதகக் கூறி,
யான் ”பெயர்க” என்ன, நோக்கி, தான் தன்
நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி
நின்றோன் போலும் இன்றும் என் கட்கே. 25
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது.
போந்தைப் பசலையார்
ஒருமுறைக்கு இருமுறை படித்தால் விளங்கிவிடக் கூடிய இந்தப் பாடலின் பொருளை இப்படித் தொகுத்துக் கூறலாம் :
ஒருநாள் ஊர்ப்பெண்கள் எல்லோரும் கூடிக் கடற்கரைக்குச் சென்றோம். கடல் நீரில் ஆடித் திளைத்தோம். மணல் வீடு கட்டிச் சிறுசோறு ஆக்கினோம். பின் ஆடிய களைப்புத் தீர சோலை நிழலில் தங்கினோம். அப்பொழுது அங்கு வந்த ஓர் இளைஞன் எங்களை அணுகி,”பெண்களே! பொழுது சாய்ந்து விட்டது. எனக்கும் தளர்ச்சியாக இருக்கிறது, எனவே நீங்கள் ஆக்கிய இச் சோற்றினை உண்டு, இந்துச் சிறிய குடிலில் இரவு தங்கிச் செல்ல விருப்புகிறேன். உங்களுக்கு ஒன்றும் தடை இல்லையே?” என்று வினவினான். அவனைக் கண்டு ஒருவர் உடலில் ஒருவர் மறைந்து கொண்ட நாங்கள், “புலால் நாறும்
இந்த மீன் உணவு உமக்கு ஆகாது” என்று மெலிதாக மறுத்துச் சொன்னோம். “கடலில் கப்பல் தோன்றுகிறது; காண வாருங்கள்.” என்று கூவிக் கொண்டே, சிற்றிலையும் சிதைத்து விட்டுப் பெண்கள் அனைவரும் ஓடி விட்டார்கள். நான் மட்டும் சற்றே நின்றேன். நின்ற என்னைச் சிறிது நேரம் உற்று நோக்கி விட்டு, “நான் போகவா?” என்றான். “செல்க” என்றேன் நானும். நான் அவ்வாறு கூறிய பின்னும் போகாமல் அவன் தன்னுடைய தேர்க் கொடிஞ்சியைப் பற்றிக் கொண்டு நின்றான். இந்தக் காட்சி இன்றும் என் கண்முன் நிற்கிறது. இது தான் உண்மையில் நிகழ்ந்தது. இது தவிர வேறு ஒன்றும் அறியேன், கடவுள் மீது வேண்டுமேனும் ஆணையிட்டுக் கூறுகிறேன்.
தோழி செவிலிக்கு அறத்தோடு நிற்கும் துறையில் அமைந்த இந்த அகநானூற்றுப் பாடல், ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ப்ரௌணிங்கின் நாடகிய தனிமொழி போன்ற அமைப்புடையது, ஒருநாள் கடற்கரையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சில நுட்பமான தகவல்களுடன், தனக்கு வேண்டிய அளவில், வேண்டிய வகையில் தெரிவிக்கிறாள் தோழி.

அக இலக்கியத்தில் தோழியும் செவிலியும் உயிர்ப்புள்ள பாத்திரங்கள். தலைவியின் மனத்தின் குரல் என்றே தோழியை அடையாளப்படுத்திவிடலாம். ஒரு புள்ளியில் இருவரும் ஒன்றாகவே இணைந்து தோன்றுகிறார்கள். தலைவியின் காதலைச் செவிலிக்கு உணர்த்த ஒரு விரிவான உரையாடலைத் தோழி தொடங்குகிறாள். தெய்வத்தின் மீது சூள் வைத்து, அன்று நடந்தது இது தான் என்று நாடகியமாகத் தெரிவிக்கிறாள். சில தகவல்களை நடப்பியல் பாணியில் இணைக்கவும் செய்கிறாள்.
புதிய இளைஞனைக் கண்ட பெண்கள் ஒருவர் புறத்தே ஒருவர் மறைந்து கொள்வது; உணவு வேறுபாடு உறவுக்குத் தடையாகலாம் என்பதை உணர்த்துவது; கடலில் தோன்றும் நாவாயைக் காண்போம் என்று கூவிக்கொண்டே தாங்கள் மணலில் எழுப்பிய சிற்றிலைச் சிதைத்தவாறு அந்த இடத்தை விட்டு அகல்வது; தனித்து விடப்பட்ட தலைவன் தலைவியரின் ஒரு சொல் உரையாடல்; செல்லாமல் தேரின் கொடிஞ்சியைப் பற்றி நிற்கும் தலைவன் என்று சில சிறிய தகவல்களை அளிப்பதன் வாயிலாக ஒரு நவீன கவிதையை உருவாக்கி விடுகிறாள் தோழி.
(தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
