பழையவரால் என்ன பயன்?

இது கவிஞர் இசையின் குறிப்பிடத்தக்க கட்டுரை ஒன்றின் தலைப்பு இதுவே, அவர் விளக்குகிற சொக்கநாதப் புலவரின் அபாரமான வெண்பாவின் ஈற்றடி. பலவிதமான எதிரொலிகளை எழுப்பக் கூடிய இந்த வரியை, அந்தக் கவிதையிலிருந்து பிரித்து, முற்றிலும் வேறுபட்ட ஒரு விசாரத்துக்கு ஆரம்பப் புள்ளியாக எடுத்துக் கொள்கிறேன். தமிழ்க் கவிதை ரசனையை, அதன் தளத்தை விரிவுபடுத்திக் கொடுத்த பல பழையவர்களின் மீது மறதித் திரை விழுந்து விட்டிருப்பதை உணர முடிகிறது. எடுத்துக் காட்டாக, 1965-66 ஆண்டுகளில் கல்கத்தா பாரதி தமிழ்ச்சங்க வெள்ளிவிழா ஆண்டு வெளியீடாக இரண்டு பாகங்களில் வெளிவந்த பேராசிரியர் ரா.ஶ்ரீ தேசிகனின் ‘கவிதைக் கலை’  நூல் வாசக மறதியின் கிடங்கினுள் அமிழ்ந்து போய் விட்டது. “பழையவரால் என்ன பயன்?”என்ற அடியைக் கழிவிரக்கத்துடன் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கவிதை குறித்துப் பிளேடோவில் தொடங்கி, ஆடன் வரை ஏறத்தாழ எழுபது கவிஞர்கள், விமர்சகர்களின் கருத்துகளைச் சிறிய கட்டுரைகளாக இந்த இரண்டு புத்தகங்களிலும் அளித்திருக்கிறார்  பேராசிரியர். இது ஒரு பெரிய பிரயாணம் தான்.(சமஸ்கிருதத்திலுள்ள கவிதைக் கோட்பாடுகளையும் இது போல் ஒரு நூலாகக் கொண்டுவர வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் முன்னுரையில் தெரிவித்திருக்கிறார். அதற்குள் அவரது மறைவு நிகழ்ந்து விட்டிருக்கிறது.) கல்விப் புலச் சாயலும், உணர்ச்சிவயமான மொழியும் கொண்டவை தாம் இந்தக் கட்டுரைகள். ஆனால் தமிழ் மட்டுமே தெரிந்த வாசகனுக்கு, மேலை நாட்டுக் கவிஞர்களின் கவிதைக் கலை பற்றிய அபிப்பிராயங்களைத் தொகுத்துப் பார்த்துக் கொள்ளப் பெரிதும் உதவக் கூடியவை. அறுபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்ச்சூழலில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாகத் தான் இந்தக் கட்டுரைகளைக் கொள்ள வேண்டும்.

‘கவியின் காரியம் கவிதை’ என்பதிலிருந்து தொடங்கி, ‘கவிதை என்பது நம்முடைய சுய ரூபத்துக்கு உருக்கொடுப்பது அன்று; அதிலிருந்து விலகி நிற்பதே’; ‘கவிதை என்பது உணர்ச்சியை வெளிப்படுத்துவது அன்று அதைத் தாண்டி நிற்பதே’ என்ற டி.எஸ். எலியட் கோட்பாடு வரை விளக்கியிருக்கிறார்.

இந்த விளக்கத்தைப் பல இடங்களில் தமிழ்க் கவிதையோடு இணைத்தும் செய்கிறார் பேராசிரியர். தேசிகன். லான்ஜைனஸின் “வான் உணர்வு’ பற்றிச் சொல்லும் போது, “பொலிக பொலிக பொலிக / போயிற்று வல்லுயிர்ச் சாபம்” என்ற திருவாய்மொழி அடிகள், வான் உணர்வின் வெள்ளத்திலிருந்து வழிந்தவையே என்று குறிப்பிடுகிறார். கவிதையின் இசையும் பொருளும் பற்றி ஆபர் கிராம்பியின்    அவதானிப்பை விளக்கும் போது கம்ப ராமாயணக் கவிதை இயல்பாகவே இடம் பெற்று விடுகிறது. சீர் சந்தம் குறித்து விளக்கம் அளிக்கையில் தமிழ், ஆங்கில யாப்பமைப்பு பற்றி விரிவாகவும், தெளிவாகவும் எழுதிச் செல்கிறார் பேராசிரியர், அதே சமயம் செய்யுளில் அமைக்கப்பட்ட எல்லாவற்றையும் கவிதையாகக் கொள்ளமுடியாது என்ற ஆபர்கிராம்பியின் கருத்தையும் எடுத்துச் சொல்ல மறப்பதில்லை. பைபிளில் சித்திரிக்கப்பட்டிருக்கும் ஜோபின் சம்பவங்கள் உரைநடையில் இருந்தாலும் அவை கவிதையே என்று விளக்குகிறார். உணர்வுச் சாயமேறிய சொற்களைப் பற்றிக் குறிப்பிடும் போது பாரதியாரின் ‘கண்ணன் பாட்டு’ வரிகளே பெருக்கெடுத்து வருகின்றன. ஒரு எளிய தமிழ்க் கவிதை வாசகளையும் எட்ட வேண்டும் என்ற கரிசனமே மேலோங்கி நிற்கிறது.

வாழ்க்கையின் விமரிசனம் கவிதை என்பதிலிருந்து அது ஒரு தரிசனம் என்பது வரை பல்வேறு கருத்துகளும் நிரல்பட வைக்கப்படுகின்றன.  அறிவின் விழிப்பு நிலையில் கவிதை, கணிதம், இசை – ஆகிய மூன்றும் ஒரே இனத்தைச் சேர்ந்தவையே என்ற எட்கர் ஆலன் போவின் கோட்பாடு. போதலேர், மல்லார்மே, பால் வெலேரி – போன்ற பிரெஞ்சுக் கவிஞர்களை பாதித்த விதம் தெளிவாகச் சொல்லப்படுகிறது. நவீன கவிதை பற்றி 1912ஆம் ஆண்டு  எஸ்ரா பவுண்ட் செய்த பிரகடனம் அதன் ஒவ்வொரு பிரிவுடனும் வாசகன் முன் வைக்கப்படுகிறது. சம்பிரதாயத்தை உடைத்தெறிய வேண்டும் என்றும், விளங்குகிற எழுத்தெல்லாம் பத்திரிகை இனத்தைச் சேர்ந்தது, விளங்காத கவிதை தான் உண்மைக் கவிதை என்றும் கலகக்குரல் எழுப்பி 1936ல் வெளிப்பட்ட டாடாயிஸமும் வாசகனுக்கு விளக்கப்படுகிறது. வாசகன் கொள்ளும் அளவு தகவல்கள். மொழி பற்றிய ஆரவாரமான ஒலிகள் மலிந்திருந்த கால கட்டத்தில், தமிழில் கவிதை பற்றி அடக்கமான தொண்டினைச் செய்துவிட்டு மறைந்திருக்கிறார் பேராசிரியர் தேசிகன், “பழையவரால் என்ன பயன்?” என்பதைச் சாதாரணமான கேள்வியாக வைத்துப் பார்த்தால், அதற்கு பதில் போல் அமைபவை பேராசிரியரின் ‘கவிதைக் கலை’ தொகுதிகள் இரண்டும்.

(தொடரும்.)

தமிழ்க் கவிதை சில குறிப்புகள் - ந.ஜயபாஸ்கரன்

தமிழ்க் கவிதை சில குறிப்புகள் மயக்கமும் பித்தமும் கொண்டார்

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.