மின்மினிகள்

விருத்தாசலம் ஸ்டேஷனில் கூட்டம் திபுதிபுவென்று ஏறியது. அவன் இப்படியொரு கும்பலை இன்றைக்கு எதிர்பார்க்கவில்லை.

“உள்ள நவுருங்கப்பா, வாசல்லியே நின்னுகிட்டிங்கன்னா, நாங்கள்ளாம் எப்படி ஏற்றது ?”

நசுக்கி உள்ளே தள்ளிய கும்பலுக்கு வழிவிடும் முயற்சியில், ரயில் பெட்டியின் சுவர் ஓரமாக ஒருக்களித்து நசுங்கினான்.

“எளவு, இன்னிக்கி லீவுநாள் தானேன்னு வந்தா, இன்னிக்கும் இவ்வளவு கும்பல். யாருய்யா அது, கதவ தொறந்தது ? இங்க ஆளு நிக்கறத்துக்குக்கூட எடத்தக் காணோம், இதுல மேல மேல ஆளு சேக்கிறீங்க உள்ள !” ரயில் பெட்டியின் உள்ளேயிருந்து முகமில்லாத குரல் ஒன்று, யாருக்கென்றும் இல்லாமல் பொதுவாக சத்தம் போட்டது.

புதுவையிலிருந்து அரியலூருக்குப் போய்வர இந்த ரயில்தான் வசதி. விழுப்புரத்திற்கு அதிகாலை பஸ்ஸில் வந்து திருச்சி போகும் இந்த ரயிலைப் பிடித்தால், அரியலூர் போய்விட்டு, இதே ரயிலில் இருட்டுவதற்குள் திரும்பி விடலாம். அதனால் நின்றுகொண்டே போக வேண்டிய கஷ்டத்தைக்கூட பெரிதாக நினைப்பதில்லை.ஆனால் இன்றைக்கு கும்பல் கொஞ்சம் அதிகம்தான்.போகும்போதுகூட இவ்வளவு இல்லை. இப்போது திரும்பும்போதுதான் ரொம்பவும் நெரிசலாக இருக்கிறது.

வண்டி நகர்ந்தது. விருத்தாசலத்தைவிட்டால் அடுத்தது விழுப்புரம்தான். இன்னும் ஒருமணி நேரப்பயணம்.

அப்படி, இப்படி நகர்ந்து கைகளை விடுவித்துக்கொண்டு கையில் சுருட்டிக் கிடந்த புத்தகத்தை பிரித்தான். ஐந்து நிமிடம் படித்திருப்பான். காலடியில் ஏதோ அன்னியப்பொருளாய் இடித்தது. குனிந்து பார்த்தான். வாசல் வழியாக வெளியில் பார்த்து, வெளிச்சத்திற்கு பழகியிருந்த கண்களுக்கு காலடியின் இருட்டு உடனடியாகத் தெளிவாகவில்லை. ஆனால் இருட்டுக்குள் இருந்து இரண்டு கண்கள் மட்டும் பளீரிட்டன. உற்றுப் பார்த்தான். ஒரு சின்னப்பெண் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆறேழு வயது இருக்கும். அழுக்கிற்கு நடுநடுவே சட்டையின் சிவப்பு நிறம் எட்டிப் பார்த்தது. கோரைப் புல்லாய் தலைமுடி. மொட்டையடித்து ஒரு மாதம் இருக்கலாம். கரேல் நிறம். இவையெல்லாவற்றுக்கும் நடுவே, பளீரென்று மின்னும் அந்த இரு விழிகள். அவன் பார்ப்பதை உணர்ந்ததும், மருளும் விழிகளை தாழ்த்திக் கொண்டது. கண்கள் கவிழ்ந்ததும் காலடியில் மீண்டும் அந்தகாரம். இருட்டுக்கே ஒளியூட்டியது அந்த இரண்டு விழிகள்தானோ என்கிற பிரமை. நெருக்கிக்கொண்டிருந்த ஆள்களுக்கு இடையில், அந்த குழந்தைக்கு எதிரே, கட்டம்போட்ட லுங்கியை இழுத்து கழுத்தோடு போர்த்தியபடி இன்னொரு ஆள் உட்கார்ந்து இருப்பது, வாசல் வழியாக நுழைந்த சிறு வெளிச்சத்தில் தெரிந்தது. கருப்பு உருவம். பெண்ணிற்கு அப்பாவாக இருக்குமோ? கோரைப்புல் முடி. ஒருமாதத் தாடி. கண்களில் ஏக்கமும் களைப்பும். நின்று கொண்டிருந்தவர்களின் கால்களுக்கு நடுவில், யார்மீதும் பட்டுவிடக்கூடாத முயற்சியில் அடங்கி, ஒடுங்கி எதிலும் சிரத்தையில்லாத தலைகுனிந்த முகம். பெண்மட்டும் அங்கும் இங்கும் கண்களை சுழல விட்டுக்கொண்டேயிருந்தது. அவ்வப்போது எதிரே இருந்த ஆளையும் திட்டுவானோ, அடிப்பானோ என்கிற அச்சப் பார்வையாய் பார்த்துக் கொண்டது.

கால்கள் அவர்களை இடித்துவிடாமல், நகர்த்திக்கொண்டு, படிப்பை தொடர்ந்தான். கொஞ்ச நேரத்திற்குமேல் படிப்பில் நாட்டம் இல்லை. கண்கள் மீண்டும் மீண்டும் காலடிக்குத் திரும்பின. மாலை நேரம். வெளியில் லேசாக குளிர் ஆரம்பித்திருந்தது. சரேல் சரேலென்று குளிர் காற்று, வாசல் வழியாக இடம் கிடைத்த சந்திலெல்லாம் நுழையப் பார்த்தது. இத்தனை கால்களின் போர்வைக்குள் அமர்ந்திருக்கும் பெண்ணிற்கு குளிரடிக்க வாய்ப்பில்லை. இப்போது சரி, இரவுக்கு என்ன செய்வார்கள் ? இந்த குளிருக்கு எங்கே முடங்குவார்கள் ? இவர்கள் யார் ? பிச்சைக்காரர்களா ? எங்காவது வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்புகிறவர்களா? அங்கும் இங்கும் விழிகளை சுழட்டுகின்ற இந்த குழந்தைக்கு போர்வை இருக்குமா ? இந்த குளிரில் எங்கே, எப்படி உறங்கும் ? அம்மாவின் மடியில் ஏறிக்கொண்டு, ‘நீ சொல்லு, சொல்லும்மா…’ என்று இழைகின்ற அவன் மகளின் ஞாபகம் வந்தது.இருந்தால் இந்த பெண்ணிற்கு, அவன் மகளைவிட மூன்று, நான்கு வயது அதிகமாக இருக்கலாம். இவளுடைய அப்பன், (அப்பன்தானா ?) எதிர்காலத்திற்குள் எந்த தைரியத்தில் இந்த பெண்ணை  அழைத்துச்செல்வான்! கவிழ்ந்து கிடக்கும் தலையும் முடங்கிக் கிடக்கும் உடம்பும் இவளை எப்படி காப்பாற்றும்! கால்களும் கைப்பிடித்துக் கூட்டிப்போக ஒரு ஆளும் மட்டும் போதுமா, காலத்தைக் கடந்துசெல்ல…?

தடார், தடாரென்று பாலத்தை ரயில் கடக்கிற சத்தம், எண்ணவோட்டத்தை தடுக்கி விட்டது. கால்களின் இடைவெளிக்குள் தலையை எக்கி, எக்கி ஆற்றை பார்க்க அந்த பெண் முயற்சி செய்தது. நிற்பவர்களும், இடம் கிடைத்து உட்கார்ந்தவர்களும் நிதானமாக, இருந்த இருக்கையிலேயே வெளியே வேடிக்கை பார்க்க முடிகிறபோது, இந்த குழந்தைக்கு மட்டும் எக்குகிற போராட்டம். கொஞ்சம் எழுந்தால் நன்றாகப் பார்க்கலாம். ஆனால் நிற்பவர்கள் மேல் இடிக்கும். இடித்தால்… கண்களில் பயம் தெரிந்தது.  அடிக்க ஓங்குகிற கைகளுக்குச் சட்டென்று பதுங்குகிற உஷார்நிலை கண்களில் ஆடியது. பார்க்கவும் ஆசை, எழவும் பயம். இரண்டிற்கும் நடுவே நாய்க் குந்தலாக மெல்ல எழும்பிப் பார்த்தது. 

அவனை நினைவுகள் பின்னோக்கி இழுத்தன.

அப்பொது அவனுக்கும் இதே வயதுதான் இருக்கும். “லாரி மாட்டிகிச்சிடா, டேய்!” சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்தவன் அவனை நோக்கிக் கத்திக்கொண்டே வடக்கே போனான். குடிசை வாசலில் நின்று வாய் கொப்பளித்துக் கொண்டிருந்த அவனுக்கு பொறுக்கவில்லை. உடனே போகத் துடித்தது. ஊரிலிருந்து தூரமாய் தள்ளிக்கிடந்த  அந்த குடிசை பகுதிக்கு ஒரு குதிரை வண்டி வந்துபோவதே அதிசயம். இப்போது, ஒரு லாரியே வந்து மாட்டிக்கொண்டால், அதைவிட விஷேஷம் வேறென்ன வேண்டும்! அவனுக்கு காலை கஞ்சிகூட தேவையிருக்கவில்லை. கிளம்பிவிட்டான். ஆர்வம் தூரத்தை மதிக்கவில்லை. நடந்தே, ஓடியே போய்ச் சேர்ந்தான்.

மஞ்சள் கலர் லாரி. வலப்பக்கத்து பின்சக்கரங்கள் இரண்டும், சுண்ணாம்புக்கல் வெட்டிய பள்ளத்திற்குள் நொடித்துப்போய் சாய்ந்துகொண்டு நின்றிருந்தது. இந்த பகுதியில் மாட்டுவண்டி ஓட்டுவதற்கே பெரும் திறமை வேண்டும். சுண்ணாம்பு கல்லுக்காக மூன்றடி ஆழத்திற்கு எங்கு பார்த்தாலும் பள்ளம், பள்ளமாக வெட்டிக் கிடக்கும். நடு, நடுவே ஒரு மாட்டுவண்டி போகிற அளவுக்கு சிறு பாட்டைதான் வளைந்து, வளைந்து போகும். இந்த பாட்டையில் மாட்டுவண்டி ஓட்டுவதே கம்பியில் நடப்பதைப்போல சிக்கலான சமாச்சாரம்.கொஞ்சம் அசந்தாலும் இந்த லாரியின் கதைதான். லாரியைச் சுற்றி வேடிக்கை பார்க்கிற கும்பலும், லாரியை வெளியேற்றுகிற வேலையில் மும்மரமாயிருகிறவர்களுமாக ஒரே சந்தடியாக இருந்தது. லாரிக்கு வேண்டியவர்கள், காரில் வந்திருந்தார்கள் போலிருந்தது. கொஞ்ச தூரம் தள்ளி, நொனா மரத்தடியில் அதை நிறுத்தியிருந்தது.

என்னென்னவோ யுக்தியெல்லாம் பண்ணியும், முன்னும் பின்னுமாக உறுமித் தள்ளியதே தவிர, லாரி ஒன்றும் வெளியேறுவதாகத் தெரியவில்லை. நேரம் ஆக ஆக வெயில்தான் ஏறிக்கொண்டிருந்தது. வேடிக்கை பார்க்க வந்த கும்பலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டிருந்தது. அவனுக்கும் மெள்ள பசி ஆரம்பித்திருந்தது. எவ்வளவு நேரம்தான் இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டிருக்கிற லாரியையே பார்த்துக்கொண்டிருப்பது ! திரும்பிப் போகவேண்டியதுதான். ஆனால் எப்படிப்போவது ? வரும்போது தெரியவில்லை, இப்போது நினைத்தால் மலைப்பாக இருந்தது. அவ்வளவு தூரத்திற்கு இந்த வெயிலில் திரும்பி நடந்து போவது முடியாத காரியமாக திகிலிட் டது. லாரியை கிளப்ப வந்தவர்களும் ஓய்ந்து விட்டார்கள்.

‘இது ஒன்றும் ஆகிற வேலையில்லை, திரும்பிப்போய் இன்னொரு லாரியில் ஆட்களை கொண்டு வந்தால்தான் முடியும்’ என்று பேசிக்கொண்டு அவர்களும் கிளம்ப எத்தனித்தார்கள். வேடிக்கை பார்க்க இப்போது யாரும் அங்கில்லை. காரில் வந்தவர்களும், காருக்குள் ஏறியாயிற்று. அவன் ஒருவன்தான் அரைக்கால் டவுசரில், பழுப்பேறிய, பொத்தான் உடைந்த சட்டையோடு, வெறுங்காலில் மிரட்சியாக நின்று கொண்டிருந்தான்.

“ஏண்டா அங்கியே நிக்கிற, ஊட்டுக்கு போவுல ?” காருக்கு உள்ளேயிருந்து ஒருவன் கூவினான்.

குபுக்கென்று கண்களில் கண்ணீர் நிரம்பியது. ‘இல்லை’ என்கிற வாகில் இப்படியும் அப்படியுமாக தலையை ஆட்டினான்.

“எங்க போவணும் நீ ?”

“கருப்பையா கோயிலுக்கிட்ட போவனும்.” தீனமாக வந்தது பதில்.

“அம்மாந்தூரமா ? எப்பிட்றா போவ ? சரி வா, காருக்குள்ள ஏறு.”

காருக்குள்ளேயா, நிஜமாகவா! அவனுக்கு நம்ப முடியவில்லை. காரை பார்ப்பதே அதிசயம். அதிலேயே சவாரி செய்வதென்றால், எவ்வளவு அதிர்ஷ்டம்! கண்களில் திரண்ட நீர், கண்களுக்குள்ளேயே நின்று     விட் ட து. ஓடிப்போய், திறந்திருந்த காருக்குள் ஏறினான். கார் நிரம்ப ஆட்கள். எங்கும் இடமில்லை. 

“கொஞ்சம் கால நவுத்துங்கப்பா, கீழ உக்காந்துக்கடா” என்று சொல்லிவிட்டு, காரின் கதவை ஒருவன் இழுத்து மூடினான்.

காரில் அமர்ந்து ராஜாவாக சவாரி போகிற கற்பனை அவனுக்குள் செத்து விழுந்தது. உடம்போடு மனமும் சேர்ந்து இடிபட, கால்களுக்கு நடுவில் நசுங்கிக் கொண்டு உட்கார்ந்தான். காரின் ஜன்னல் வழியே பார்த்தால் வானமும் மேகமும்தான் தெரிந்தன. பஸ்ஸில் போனால் ரோட்டோர மரங்களும் மக்களும் பின்நோக்கி வேகமாகப் போவார்களென்று கேட்டிருந்ததெல்லாம் ஞாபகம் வந்தது. எக்கினால் வெளியே பார்க்கலாம். ஆனால் உட்கார்ந்திருப்பவர்களின் முழங்கால்களை இடித்துக்கொண்டு எழுந்திருக்கவேண்டும். ‘உட்காரு, உட்காரு’ என்று முதுகில் அழுத்தி, கீழே மீண்டும் உட்கார்த்திவிட்டால் இன்னும் அவமானம். ‘நடந்தே வந்திருக்கலாம். கஷ்டம்தான், இருந்தாலும் இப்படி கூனி குறுகுவதற்கு அந்த கஷ்டமே பரவாயில்லை.’ குலுக்கலும், உதறலுமாக கால்களில் இடிபட்டு வானத்தையே அண்ணாந்தவனாக கார் பயணம் தொடர்ந்தது. இந்த உடல் வதையும் மன வதையும் எப்போது முடியும் என்றிருந்தது.

“நிறுத்துப்பா, இங்கதானாடா, பாரு”

கால்களுக்கடியில் சிக்கியிருந்தவனால் உடனே எழுந்திருக்க முடியவில்லை. கதவைத் திறந்து மற்றவர்கள் கால்களை நகர்த்த, முதுகை குனிந்தபடியே காரிலிருந்து தவழ்ந்து இறங்கினான். இறங்கி, ‘ஆமா, இந்த எடந்தான்’ என்று அவன் தலையை அசைப்பதற்குள், கரும்புகையை மேலே அடித்துவிட்டு விருட்டென்று போய்விட்டது கார்.

“கொஞ்சம் வழிவிடுங்க…”, அவனின் நினைவோட்டத்தை துண்டித்த குரலோடு ஒரு உருவம், இடித்து நசுக்கிக்கொண்டு, சற்று தள்ளியிருந்த கழிவறைக்கு முன்னேறியது. வழியில் உட்கார்ந்திருந்த பெண்ணின்மேல் கால் இடறியது,

“அடச்சே, இங்க காசு குடுத்து டிக்கட்டு வாங்கினவனுக்கே எடத்தக் காணோம். இதுல நீங்க வேற வந்து ஏன் இப்பிடி உயிர வாங்குறீங்க” என்று சலித்துக்கொண்டே உள்ளே நுழைந்து கதவை சாத்திக் கொண்டது.

கால் நசுக்கலின் வலி பெண்ணின் முகத்தில் தெரிந்தது. நாய்க்குந்தலை விட்டு, பழையபடி தரையில் உட்கார்ந்துகொண்டு இவனையே அடிக்கடி அண்ணாந்து பார்த்தது.

‘இந்த பெண்ணுக்கும் பசிக்குமே…, இவளுக்கு இரவு சாப்பாடு வாங்குவதற்கு இவனிடம் பணமிருக்குமா? கை தானாக சட்டைப் பையை தொட்டுப் பார்த்தது. பணமும் சில்லறையுமாக பை கனத்தது. நாம் ஏதாவது கொடுத்தாலென்ன ! வாங்கிக்கொள்வானா? இவன் பிச்சை வாங்குபவன்தானா ? உழைப்பை நம்பி பிழைப்பவனாக இருந்துவிட்டால், கொடுக்கிற காசை திருப்பி, நம் முகத்திலேயே விட்டெறிந்து விடுவானே ! இத்தனை பேருக்கு முன்னால் அப்படி அவமானப்பட நேர்ந்துவிட்டால் என்ன செய்வது ! ஆனால் அதற்கு பயந்து கொண்டு எதுவும் கொடுக்காமல் போனால், இவன் உண்மையிலேயே பிச்சைக்காரனாக இருந்துவிட்டால்…’ பள்ளத்தில் விழுந்த லாரியாக மனது முன்னும் பின்னுமாக இழுபறித்தது. ஆனது ஆகட்டும், கையைக் கட்டிக்கொண்டு சும்மா போகக் கூடாது. சட்டைப் பையில் கையை விட்டு, மொத்த பணத்தையும் சில்லறையையும் எடுத்து கையில் இறுக்கி வைத்துக் கொண்டான்.

ரயில், வேகம் குறைந்து விழுப்புரம் ஸ்டேஷனுக்குள் மெதுவாக ஓடி நின்றது. இடித்துத் தள்ளிக் கொண்டு இறங்கிய கூட்டத்துடன் வெளியேறி, பெண்ணின் கையைப் பிடித்தபடி போய்க் கொண்டிருந்த அந்த ஆளை இரண்டு தப்படியில் நெருங்கி, அவனின் தோளில் தட்டினான். திடுக்கிட்டு திரும்பியவனின் கையில் மொத்தப் பணத்தையும் சில்லறையையும் திணித்து,

”குழந்தைக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக்  குடு” என்று தணிந்த குரலில் அவசரமாக சொல்லிவிட்டு, சட்டென்று திரும்பி விருவிருவென்று எதிர்பக்கமாக நடந்தான்.

ஸ்டேஷனுக்கு வெளியே வந்து, புதுச்சேரிக்கு போகும் பஸ்ஸில் எறி அமர்ந்து, பஸ் மேம்பாலத்தில் போகும்போது, ஸ்டேஷனை உற்றுப் பார்த்தான். உயரத்தில் எறிந்த விளக்கு வெளிச்சத்தில், ஒரே லுங்கியால் போர்த்தபடி, இரண்டு பேரும் ஒரே உருவமாய் மெதுவாக நடந்து போவது தெரிந்தது.

உட்கார்ந்திருந்த இருக்கையில் பெருமூச்சோடு தலையை சாய்த்தான். 

‘அப்பா வந்தாச்சு…!’ அவன் மகளின் மகிழ்ச்சி குரல் மனதிற்குள் இப்போதே கேட்டது.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.