தாய்மையின் தவிப்பும், தனிமையின் துயரமும்

எம். கோபாலகிருஷ்ணனின் இரு சிறுகதைகளை முன்வைத்து

 என் வாழ்வின் கணிசமான அளவை கொங்கு நிலத்தில் கழித்தவன் என்ற வகையில் எம். கோபாலகிருஷ்ணனின் சிறுகதைகளின் புனைவுலகம் எனக்கு அணுக்கமாகவே இருக்கிறது. கைத்தறித் தொழிலையும், பவர்லூம் ஓட்டுவதையும் நம்பி வாழும் மனிதர்களின் உலகம். செய்யும் தொழிலால் ஒரு சாதியாகக் கூடி வாழும், தன் கொண்டாட்டங்களை, துக்கங்களை, இழப்புகளை, தங்களுக்குள்ளேயே பகிர்ந்தும் அனுபவித்தும் வாழும் ஓர் உலகம். திருப்பூர் நிலத்தின் ஜவுளித் தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்வியல் குறித்து எழுதுபவர் என்பதாக எம். கோபாலகிருஷ்ணனை அறிந்திருக்கிறேன். அவருடைய படைப்புகளைக் கொண்டாடும் விதமாக சொல்வனம் அவருக்கு ஒரு சிறப்பிதழ் கொண்டு வருகிறது. அதில் அவருடைய சிறுகதைகள் குறித்து எழுதலாம் என்று எண்ணினேன். அவரது சிறுகதைகளான கடைவழி, 305 ஆம் எண் வீட்டில் ஒரு கிழவர் என்ற இரு சிறுகதைகளையும் எடுத்துக் கொண்டு அவரது புனைவுலகம் குறித்த எனது அவதானிப்புகளை எழுதலாம் என்று கருதுகிறேன்.

கடைவழி சிறுகதையின் மையக் கதாபாத்திரமான ஜந்தம்மா கிழவியின் மூன்று மகள்கள் அவளுக்கு முன்பே பல்வேறு காரணங்களால் இறக்கிறார்கள். மூன்றாவது மகள் இறக்கும் நாளன்று கதை துவங்குகிறது. ஜந்தம்மா முதுமையாலும், நோய்மையாலும் வேப்பமரத்தடியில் படுத்தபடுக்கையாகி விடுகிறாள். அவளால் எழுந்து நடக்க இயலாது. படுக்கையிலேயே மூத்திரமும், மலமும் கழிக்கும் நிலை. மகளின் முகத்தை இறுதியாக ஒரு முறை பார்த்து விட வேண்டுமென்று துடிக்கிறாள் ஜந்தம்மா. ஆனால்  அருகாமையிலேயே இருக்கும் மகள் வீட்டுக்கு அவளை அழைத்துச் செல்ல அவளது மருமகள் முன்வரவில்லை. “ஆமா. போயிட்டா. அதான் பொறந்தூட்டு சீரை எடுத்துட்டு உங்க மவன் போயிருக்காரு. செறப்பா செஞ்சட்டு வருவாரு. நீயும் போகணுமா? புத்து வெச்சு செத்துப் போனவள இத்துப் போன நீ போய் பாக்கறியா? மோளறதுக்கும் பேளறதுக்குமே தள்ளிப் போ முடியலேங்கற. மவளப் பாக்க மண்டிபோட்டுட்டு போறியா? நல்லா வருது வாயில. இனி ஒருக்கா சத்தம் போட்டு கூப்பிட்டியா வந்து நாலு மொத்து மொத்திருவேன் பாத்துக்க,” என்கிறாள். 

தங்கா! தங்கா! என்று தன் மகள் பெயரைச் சொல்லிப் புலம்புகிறாள் ஜந்தம்மா. சின்னவள் ராசாத்தியும், இரண்டாமவள் சுந்தரியும் இறந்த விதம் குறித்து எண்ணிப் பார்க்கிறாள். ராசாத்தியின் கணவன் அக்கா மகளோடு தொடுப்பில் இருக்கிறான். அம்மாவைத் தறி போட்டுத் தரும்படிக் கேட்கிறாள். கணவனுடன் சண்டையிட்டு அம்மா வீட்டுக்கு வருகிறாள். விலகி வந்தவள் அவன் வந்து அழைத்தவுடன் விரும்பி அவனுடன் போகிறாள். போன பதினெட்டாவது நாள் அவளது சாவுச் செய்தி வருகிறது. ஜந்தம்மா வீரபாண்டிக்குச் சென்று சேரும் முன்பே அவளை வாயிலில் கிடத்திக் குளிப்பாட்டத் துவங்கி விடுகிறாள். இரண்டாமவள் சுந்தரி, “புள்ளையில்லா துக்கத்துக்கு அரளிவெதைய வயித்துல கட்டிட்டு” போய் சேருகிறாள். மூத்தவளான தங்காளுக்குத் தொண்டையில் புற்று. பிணத்தை ஜந்தம்மா வீட்டு வழியாகக் கூட கொண்டு செல்லக்கூடாது என்று தடுத்து விடுகிறான் அவளது கணவன். ஜந்தம்மாளால் தானே எழுந்து மகளின் உடலைக் காணச் செல்ல முடியாத நிலை. அவள் தவித்துப் புலம்பிக் கொண்டிருக்கும்போது ஆராயி அங்கு வருகிறாள். அவள் தங்காவைப் பார்த்து விட்டு வந்ததையும், அவளது கணவன் அவள் பிறந்த வீட்டின் மீது சினத்துடன் இருப்பதையும், பிறந்தவீட்டு சீரைக் கூட மறுத்து விட்டதையும் கூறுகிறாள். மகளுக்குத் திருமணமானதையும், அவளது கணவன் ஒரு காது கேட்காது என்பது மூன்று பிரசவங்கள், இரண்டு கருக்கலைப்புகளுக்குப் பிறகுதான் தெரிய வந்ததையும் மனசுக்குள் அசைபோடுகிறாள் ஜந்தம்மா. மகளின் புகையிலைப் பழக்கம் நினைவுக்கு வருகிறது. தன்னிடமிருந்துதான் மகளுக்கு அப்பழக்கம் தொற்றியிருக்கிறது. ஆராயியிடம் கொஞ்சம் “போத்தாளை” தரும்படிக் கேட்கிறாள். தன்னை மகளிடம் கூட்டிச் செல்லும்படிக் கேட்கிறாள். “எடுக்கறதுக்கு முன்னாடி அவளுக்கு ஒரு இணுக்கு போத்தாளையை போட்ரலாண்டி.”

ஆராயி தயங்குகிறாள். ஜந்தம்மாவே கைகளைத் தரையில் ஊன்றி தேய்த்து, தேய்த்து நகர்கிறாள். தோல் கிழிந்து ரத்தம் வருகிறது. வீட்டுத் தெருவும், காலனியும் சந்திக்கும் இடத்தை அடைந்ததும், பிணம் சவுண்டிச் சத்தம் சூழ அவளை விட்டு விலகிப் போய்க்கொண்டே இருக்கிறது. ஜந்தம்மா நடுங்கும் கைகளால் தரையில் கிடந்த பூக்களை தடவி எடுக்கிறாள். பூக்களுடன் நீட்டிய கையில் ஒரு துண்டு போத்தாளையை வைக்கிறாள். கைகளை உயர்த்தி பூக்களோடு சேர்த்து புகையிலைத் துண்டையும் காற்றில் எறிகிறாள். “போய்ட்டு வாடீம்மா!”

தனக்கும் முன்னே தன் மகள்களை இழக்கும் ஒரு தாயின் தவிப்பு இந்தக் கதையில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. அதே நேரம் தமிழ் நிலத்தின் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜந்தம்மாளின் ஒவ்வொரு பெண்ணின் மரணமும் எவ்வாறு நிகழ்ந்ததென்று இக்கதை விவரிப்பதிலிருந்து நெய்தல் சமூகத்தில் பெண்களின் பாடுகளை இக்கதையின் மூலம் வாசகன் அறிய வருகிறான். எல்லா சமூக அமைப்புகளையும் போலவே இவ்வுலகத்திலும் பெண்ணுக்கான இடமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பிள்ளை பெறுதலும், கணவனையும் அவன் குடும்பத்தையும் பேணிக்காத்தலும், கணவனின் தறித்தொழிலில் தங்களுக்கான பங்கை ஆற்றி குடும்பப் பொருளாதாரத்தைப் பேணுவதிலும் (பல குடும்பங்களில் வருமானத்துக்கு அவளே ஆதாரம்) அவளுடைய பங்கு இன்றியமையாதது.  இந்த நிலத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கென்றே சில கடமைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. பிறந்த வீட்டில் அப்பாவுக்கு, அண்ணன், தம்பிகளுக்கும் தன் தாயுடன் இணைந்து பணிவிடை செய்தல், வீட்டுத் தொழிலில் பங்கேற்று வீட்டின் வருமானத்துக்கு உதவியாக இருத்தல் (தார் போடுதல், பீஸ் பார்த்தல், எம்ப்ராய்டரி இயந்திரம் ஓட்டுதல், ராட்டை சுற்றுதல், கர்ச்சீஃப் தைத்தல், பனியன் கம்பெனிகளில் சென்று வேலை செய்தல் என்று பெண்களுக்கு உரித்தான பணிகளாகப் பல விதிக்கப்பட்டிருக்கின்றன.)  திருமணமான பின் கணவன் வீட்டிலும் அதே பணிகள் தொடரும். இப்போது பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற மற்றொரு கடமையும் இணைந்து கொள்ளும். அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருப்பதையே காலப்போக்கில் அவளும், அவளைச் சுற்றியிருப்பவர்களும் மறந்து விடுகிறார்கள். பல பெண்களின் வாழ்வு இளமை முடிவதற்குள்ளேயே முடிந்து விடும் அவலம். ஏதேனும் கொடு நோய் உடலில் இருப்பினும் எங்கே வெளியே சொன்னால் அதற்கு அதீத செலவு பிடித்து அது குடும்பத்துக்கு பாரமாகி விடுமோ என்று அஞ்சி அந்த நோயை மறைத்து, நோயின் தீவிரத்தால் ஆள்கொள்ளப்பட்டு உயிர் துறந்த பலரை நான் அறிவேன். அப்படி உயிர் துறந்த மூன்று பெண்களைப் பற்றி இந்தக் கதை சொல்கிறது. காற்றில் அறியமுடியாத பறவையின் சுவடுகளைப் போல பெண்களின் மரணம் நிகழ்ந்து விடுகிறது. மறைந்த பெண் அவளைச் சார்ந்தவர்கள் நினைவிலிருந்து விரைவில் நீங்கி விடுகிறாள். இன்னொரு பெண்ணின் மனதில்தான் இழப்பின் தவிப்பு உண்மையாக வெளிப்படுகிறது. இக்கதையில் மகளை இழந்த தாயின் துயரமும், மகளை இறுதியாகக் காணமுடியாத தவிப்பும், அவளைக் காணத் தடையாக இருந்த நெருக்கடிகளை அவள் எவ்வாறு தாண்டி அவளை இறுதியாக வழியனுப்பி வைக்கிறாள் என்பதும் எம். கோபாலகிருஷ்ணனி எழுத்தில் தெளிவாக வெளிப்பட்டிருக்கின்றன.

சிறுகதைகளின் செவ்வியல் வடிவம் எம்.ஜி.கேயின் (ம.கோ.கி என்று தமிழில் எழுதிப்பார்த்தேன். ஏதோ ஜப்பானியப் பெயர் போல ஒலித்தது.) கதைகளில் எவ்வாறு தொழிற்பட்டிருக்கின்றது என்று இக்கதையை எடுத்துக்காட்டாகக் கொண்டு காண முடியும். 

கதைகளின் செவ்வியல் வடிவம் என்பது காலந்தோறும் வாய்மொழியாகக் கூறப்பட்டு வரும் நாடோடிக் கதைகளிலிருந்து,  வணிக இலக்கியம், தீவிர இலக்கியம் என்ற வகைமைகளில் எழுதப்படும் கதைகள் வரை பொருந்தி வரும். சிறுகதைள், குறுநாவல், நாவல் எவையாயினும் அவை அடிப்படையில் ஒரு வாசகனுக்கு சுவாரசியமான கதை சொல்வதற்கான முயற்சிகளே. கதையின் செவ்வியல் வடிவத்தின் கூறுகளை கீழ்க்கண்டவாறு விளக்கலாம்.

எல்லாக் கதைகளும் அதன் மையக்கதாபாத்திரம் ஒன்று ஏதோ ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள தீவிரமாக விரும்புவதிலிருந்து துவங்குகின்றன. அந்தச் செயலுக்குத் வெளி சூழ்நிலைகளிலிருந்தும், மைய மாந்தரின் அகத்திலிருந்துமே தடைகள் வருகின்றன. அத்தடைகள் முரண்களை உருவாக்குகின்றன. அந்த முரண்களை தான் இருக்கும் சூழ் நிலையிலிருந்து வெற்றிகொள்ள இயலாமல் மையக் கதாபாத்திரம் முதலில் தடுமாறுகிறது. தான் நினைத்ததை அடைய முடியாதோ என்று மயங்குகிறது. பின் ஏதோ குறிப்பிட்ட கிரியா ஊக்கி ஒன்றின் மூலம் செயல் வேகம் பெற்று புதிய சூழ்நிலைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு அத்தடைகளை படிப்படியாக வெற்றி கொண்டு, தனக்குள்ள முரண்களுக்கு மையப்பாத்திரம் தீர்வு காண்கிறது, தன்னுடைய தீரா விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்வதன் மூலம், அல்லது தான் விரும்பியதை அடைய இயலாததன் மூலம் மையப்பாத்திரத்திரத்தின் குணாதியசங்கள் எங்கனம் மாற்றமடைகின்றன என்பதை கதையின் இறுதியில் காட்டுவதும் கதைகளின் செவ்வியல் வடிவத்தின் கூறுகளாகக் குறிப்பிடப்படுகிறது. என்னுடைய அவதானிப்பில் இந்தச் செவ்வியல் வடிவம் இக்கதையிலும் அழகாகப் பயின்று வந்திருக்கிறது என்று கருதுகிறேன்.

மேலும், சிறுகதை ஒரு சமையல் குறிப்பு என்ற கட்டுரையில் ஜெயமோகன் ஒரு செவ்வியல் சிறுகதையின் அம்சங்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடுகிறார்.

‘திருப்பம் ஒரேவரியில் குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கும். ஆகவே முதலில் திருப்பத்தை கற்பனை செய்து ஊகிக்கும் பொறுப்பு வாசகனுக்கு வருகிறது. அதன் பின்னர் அதன் அடிப்படையில் அவன் கதையை மீண்டும் மனதில் கற்பனைசெய்து கொள்கிறான். வாசகனின் பங்கேற்பை அதிகரிக்கிறது.’

சிறுகதையில் என்ன நடக்கிறது? என்ற கட்டுரையில்: ‘இனிமேல் ஒற்றைப்புள்ளியில் உச்சம் கொள்ளும் ஒரு கதை முழுமையானதாக உணரப்படாது. இன்றைய கேள்வி பன்முகத்தன்மையையும் உரையாடல்தன்மையையும் ஒருங்கே கொண்ட ஒரு யதார்த்தவாதச் சிறுகதை வடிவை அடைவது எப்படி என்பதாக இருக்கும் என்று மட்டும் தோன்றுகிறது.’ என்றும் குறிப்பிடுகிறார்.

ஜந்தம்மாளுக்கு இறந்த தன் மகள் தங்காளின் உடலை கடைசியாக ஒரு முறையேனும் பார்த்து விட வேண்டும். அதை நிறைவேற்றிக் கொள்வதுதான் அவளது தீவிரமான விருப்பம். அவ்விருப்பத்திற்குப் பல தடைகள்: அவளது நோய்வாய்பட்ட மூதுடலால் அவளால் நகர இயலாமை ஒரு தடை. இறந்த அவளது மகளின் கணவன் அவள் குடும்பத்தின் மீது காட்டும் கோபம், அதனால் பிணத்தை அவர்கள் வீட்டு வழியாகக் கூடக் கொண்டு செல்லக் கூடாது என்று அவன் நிர்பந்திப்பது இரண்டாவது தடை. அவளை மகள் உடலைக் காண அழைத்துச் செல்ல அவளது மருமகளோ, தோழியோ முன்வராதது மூன்றாவது தடை. இத்தடைகளையும் மீறி ஜந்தம்மாள் தன் மகளின் உடலைக் கடைசியாகக் காண வேண்டும் என்ற விருப்பத்தை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்கிறாள் என்பதை வாசகர் அறியும் போது கதை நிறைவு பெறுகிறது. இதனாலேயே இக்கதை சிறுகதையின் செவ்வியல் வடிவத்துக்குள் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. கதையின் முடிவை அல்லது கதையின் அடி நாதமான பிரச்னைக்கான தீர்வை நோக்கிச் செலுத்தக் கூடிய வகையிலான ஒரு க்ரியா ஊக்கி எல்லா நல்ல கதைகளிலும் இருப்பதைக் காணலாம். அதைத் தூண்டுதல் சம்பவம் (Inciting Incident) என்று தோறாயமாக மொழிபெயர்க்கலாம். இந்தச் சம்பவம் மையக்கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட வகையில் செயல்பட்டு, கதையின் முடிவை நோக்கி உந்தப்படுவதற்குக் காரணமாக இருப்பதால் தூண்டுதல் சம்பவம் என்றழைக்கப்படுகிறது. இக்கதையில் ஆராயியிடம் இருந்து ஜந்தம்மாள் வாங்கும் புகையிலைதான் அவளை கதையின் முடிவை நோக்கிச் செலுத்தும் க்ரியா ஊக்கி. புகையிலை கையில் கிடைத்தவுடன்தான் மகளின் முகத்தைக் கடைசியாகக் காணவேண்டும் என்ற அவளது விருப்பம் அவள் வாயில் ஒரு இணுக்கு போத்தாளையை வைத்து அவளைக் கடைவழி அனுப்ப வேண்டும் என்பதாகத் தீவிரமடைகிறது. அது நிறைவேறாமற் போகும்போது, பூக்களுடன் போத்தாளையை வைத்து அவள் செல்லும் திசை நோக்கி எறிந்து போய் வா மகளே என்று வழியனுப்பும் தன்மைக்கு அவள் மனம் மாற்றமடைகிறது. தான் நினைத்த காரியத்தை முடித்த திருப்தி கொள்கிறது அவள் மனம். மனித மனத்தின் விசித்திரம் இதுவே. தன்னால் ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள இயலாது என்ற அறிந்தால், அடைய இயன்ற செயலைத் தன் குறிக்கோளாக சட்டென்று மாற்றிக் கொள்ளும் ரசாயனவாதம் செய்யும் திறன் கொண்டது. இங்கு இன்னொரு குறிப்பிட்ட விஷயத்தையும் சொல்ல வேண்டும். தங்காள் இறப்பது தொண்டையில் புற்று வந்ததனால். தங்காளின் புகையிலைப் பழக்கம் அவளது அம்மா ஜந்தம்மாளிடம் இருந்துதான் அவளுக்கு வருகிறது. தன்னிடமிருந்து தொற்றிக்கொண்ட புகையிலைப் பழக்கத்தால்தான் தன் மகளுக்குத் தொண்டையில் புற்று வந்து அவள் இறப்புக்குக் காரணமாகி விட்டதோ என்ற ஐயம், குற்றவுணர்ச்சி ஜந்தம்மாளை வாட்டுவதாகவும் நாம் கருதிக்கொள்வதற்கான வாசிப்புக்கு இந்தக் கதையில் இடமிருக்கிறது.  

——-

அறை எண் 305 ஆம் எண் வீட்டில் ஒரு கிழவர் என்ற கதையிலும் மரணம் தான் பேசப்படுகிறது. 

அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் 305 ஆம் எண் வீட்டில் ஒரு கிழவர் தனியாக வசித்து வருகிறார். புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். எதிர் வீட்டில் வசிக்கும் சரசுவுக்கு அவரைக் கண்டாலே ஒவ்வாமை, வெறுப்பு. வழக்கம் போல அவள் மின்தூக்கியில் கீழே செல்லும்போது அவர் கதவைத் திறந்து வைத்துப் புகைபிடிப்பதைக் காண்கிறாள். நாற்றம் சகிக்க முடியாமல் கூடவரும் பூரணியிடம் புலம்புகிறாள். அவர் இருட்டிய பிறகுதானே வெளியே வருவார். இந்தப் பகலில் எப்படி என்று வியக்கும் பூரணியிடம்,

“செவுத்தப் புடிச்சுட்டு எதையோ தேடறாப்பல நிக்கறான். தண்ணி கிண்ணி போட்டுருக்கானா தெரியலை. தலை தொங்கிக் கெடந்துச்சு. எங்களுக்குன்னு எதிர்வீடு வாச்சிருக்கு பாருக்கா.”

அவர் உடல் நிலையில் ஏதோ பிரச்னை வந்து தடுமாறிக்கொண்டிருக்கிறார் என்பது இங்கு உணர்த்தப்படுகிறது. மீண்டும் மின்தூக்கியில் மேலே வரும்போது கிழவர் தரையில் விழுந்து கிடப்பதைக் காண்கிறாள். குடியிருப்புப் பகுதியின் மேலாளரை அழைக்கிறாள். அவருடன் சேர்த்து சுகுணா, கிருஷ்ணன், மணி, மருத்துவர் ஆனந்த் என்ற பல பாத்திரங்கள் கதையில் வருகின்றன. கிழவரின் பெயர் கூட யாருக்கும் தெரிவதில்லை. அவர் வசிக்கும் வீடு அவர் மனைவியின் பெயரில் இருக்கிறது. துபாயில் வசிக்கும் அவரது தம்பி மகள் அவருக்கு பணம் அனுப்பி வருகிறாள். மருத்துவர் கிழவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்தபிறகு துபாயில் வசிக்கும் தம்பி மகளுக்கு சேதி சொல்லப்படுகிறது. ஆனால் அவள் வருவதற்கு ஒன்றரை நாள் ஆகிவிடும். அவள் ஒரு பெரியவரையும், இளைஞனையும் அனுப்பி, அவள் வரும் வரை கிழவரின் உடலை ஐஸ் பெட்டியில் வைத்திருக்கச் சொல்கிறாள். அவள் வந்துதான் காரியங்கள் செய்ய வேண்டும். மாடிகள் ஏறிவந்த ஐஸ்பெட்டி வீட்டுக்குள் நுழைய முடிவதில்லை. அதன் அளவுக்கு வாயிலின் அகலம் சிறிதாக இருக்கிறது. தம்பி மகள் வரும் வரை கிழவரின் உடல் ஐஸ் பெட்டிக்குள் வீட்டின் வாயிலிலேயே வைக்கப்பட வேண்டிய நிலை. அது பற்றி அங்கு ஒரு சின்ன சலசலப்பு நிலவுகிறது.

‘‘அதெப்பிடி. நாலுபேர் நடமாடற எடத்துல பொணத்தைப் போட்டு வெக்க முடியுமா?”

‘‘கொழந்தைகெல்லாம் இருக்காங்க. பயந்துறாதா?”

‘‘ராத்திரியெல்லாம் யாரும் வெளியில வர முடியாது. போ முடியாது. அதெல்லாம் முடியாது.”

‘‘விடிஞ்சும் விடியாம பொணத்து மூஞ்சில முழிக்க முடியாது.”

பின் சரசு சமாதானமாகி, ‘‘அதெல்லாம் வேணாங்க. பாவம், யாருமில்லாம தனியா போன உசுரு. இனியும் அதை அலைக்கழிக்க வேணாம். இங்கயே வெச்சிக்கலாம்” என்று கண்களைத் துடைத்துக் கொள்கிறான்.

இளைஞனும், பெரியவரும் கிழவரை ஐஸ் பெட்டிக்குள் வைத்து வாயிலில் கிடத்தி வைத்து விட்டு, சவப்பெட்டியை ஒருமுறை வெறித்துப் பார்த்து விட்டு டிஃபன் சாப்பிடுவதற்காகக் கீழிறங்கிச் செல்வதாகக் கதை முடிகிறது.

இக்கதையில் முதுமையில் தனித்தருத்தலின் துயரம் ஓர் கோட்டோவியமாகத் தீட்டிக் காட்டப்படுகிறது. கடைவழி கதையோடு இக்கதையை ஒப்பிட்டுப் பார்த்தால் இக்கதையில் சிறுகதையின் செவ்வியல் வடிவத்தின் பெரும்பாலான கூறுகள் எதுவும் பயின்று வரவில்லை என்றே கூற வேண்டும். இக்கதையில் வரும் பாத்திரங்கள் எதுவும் கிழவரின் மரணத்தால் பாதிக்கப்படுவதில்லை எனலாம். அல்லது பொதுப்படையாக அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவரது வீட்டுக்கு அருகாமையில் உள்ள அனைவருமே அவரது மரணத்தால் சில மணி நேரங்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கொள்ளலாம். கதையின் மையப்பாத்திரம் சரசுதானோ என்று சிந்தித்துப் பார்த்தால், கதை அவளுடைய நோக்கில் சொல்லப்படத் தொடங்கினாலும், கிழவரின் உடலைக் கண்டபின் நிகழும் நிகழ்வுகளில் பிற பாத்திரங்களும் பிரதானமாகப் பங்கு கொள்வதால், சரசுவின் பாத்திரம் கதை நகர நகர மங்கிப் பின் தங்கி விடுகிறது. இறுதியில் அவள் கிழவரின் சடலம் தன் வீட்டின் முன் கிடத்தப்பட ஒப்புக்கொள்வது கூட வேகமாகக் கூறி முடிக்கப்படுகிறது. எனவே கிழவரின் மரணத்தால் அவள் மனதில் நிகழும் மாற்றம் என்று எதையும் நம்மால் குறியிட்டுச் சொல்ல முடிவதில்லை. ஒருவேளை இப்படிக் கற்பிதம் செய்து கொள்ளலாம்: இந்தக் கதையின் மையக்கதாபாத்திரம் அதன் வாசகராகிய நாமேதான். கிழவர் புகைபிடித்தபடி வீட்டின் வாயிலில் நின்று கொண்டிருப்பதை சரசு வெறுப்புடன் காண்பதை அவதானிப்பதிலிருந்து கதையின் நிகழ்வுகளின் பார்வையாளராக இருக்கிறோம். மெல்ல மெல்ல கிழவரின் நிலையை நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மீதும், நம் மீதுமே போட்டுப் பார்த்து முதுமையில் தனிமையின் கொடுமையை உணரத் தலைப்படுகிறோம். இக்கதை நிகழ்வுகளை வெறுமனே காட்டி விட்டு நகர்ந்து விடுகிறது. தனிமையின் துயரம், தனிமையின் அவலம் இக்கதையின் நிகழ்வுகளில் வெளிப்படுகிறதென்று நாம் அறிகிறோம். அந்த வகையில் இக்கதை சிறுகதையின் செவ்வியல் வடிவக் கூறுகளை மிகவும் குறைவாக பயன்படுத்தியிருக்கிறது என்பது என்னுடைய அவதானம்.  


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.