எம்.கோபாலகிருஷ்ணன் – ஓர் அறிமுகம்
எழுபத்தைந்து பைசா என்பது 1980களின் இறுதியில், ஒரு குரோஸ் என்று சொல்லப்படும் நூற்றி நாற்பத்தி நான்கு ஜோடி பட்டாசு அட்டைகளைப் பெட்டிகளாக வளைத்து ஒட்டிக்கொடுத்தால் கொடுக்கப்பட்ட ஊதியம். சிவகாசியின் கடும் தண்ணீர் பஞ்சத்திலும் வறட்சியிலும் சிக்கித் தவித்த பெண்கள் வீட்டு வேலைகளையும் பிள்ளைகளையும் கவனித்தபடி, தங்கள் வீட்டிலிருந்தபடியே இப்படி பெட்டி ஒட்டியும், தீக்குச்சி அடுக்கியும் நாளொன்றுக்கு பத்து ரூபாயாவது சம்பாதிக்க முடிந்தது. இது அவர்களை ஆண்களைச் சாராமல் தனித்து நின்று குடும்பத்தைத் தாங்குவதற்கு மட்டுமில்லாது, ஒட்டுமொத்த சுற்றுப்புற பகுதியின் பொருளாதாரத்தையுமே உயர்த்தியதற்கும் ஒரு வலுவான காரணமாக அமைந்தது. ஒரு சிறிய வறண்ட நிலப்பகுதி முக்கியத் தொழில்நகரமாக உருவாகிவருகையில் அது அங்கு வாழும் மக்களின் வாழ்வை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கிறது. ஆனால் அந்த மாற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் அங்கு வாழும் மக்கள் அளித்ததும் இழந்ததும் என்ன என்பது உடனடியாகத் தெரிவதில்லை. அதே வாழ்க்கைச் சூழலில் அல்லது அதற்கு நிகரான இன்னொரு சூழலில் வாழ்ந்த, அந்த மக்களையும் மாற்றத்தையும் தள்ளி நின்று நோக்கக்கூடிய ஒரு படைப்பாளி, அந்த மாற்றம் பற்றிய ஒட்டுமொத்த பார்வையைப் புனைவாகப் படைக்கையில், இயல்பாகவே அவர் நமக்கு மிக நெருக்கமானவராக ஆகிவிடுகிறார். அவ்வகையில் தமிழகத்தின் முக்கியத் தொழில்நகரமான திருப்பூரின் பின்புலத்தில் தொழில்மயமாக்கம் உருவாக்கும் வாழ்க்கைச் சிக்கல்களை சித்தரிக்கும் மிகச்சிறந்த படைப்புகளைத் தந்த எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளராகத் திகழ்கிறார்.
எங்கும் தம்மை முண்டியடித்து முன்னிறுத்த விரும்பாத தலைமுறையின் இன்னொரு அடையாள சக்தியென குறிப்பிடப்படும் எம்.கோபாலகிருஷ்ணன் தமிழிலக்கியச் சூழலில் முப்பதாண்டுகளாக செயல்பட்டு வருபவர். அம்மன் நெசவு , மணல்கடிகை, மனைமாட்சி, தீர்த்தயாத்திரை, வேங்கைவனம் எனத் தொடரும் நாவல் வரிசைகளால் தமிழின் முக்கிய நாவலாசிரியர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் எம்.கோபாலகிருஷ்ணன், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சாத்தியமான அனைத்து வடிவங்களிலும் தன்னைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். வால்வெள்ளி ,மாயப் புன்னகை ஆகிய குறுநாவல் தொகுதிகள், பிறிதொரு நதிக்கரை முனிமேடு, சக்தியோகம், மல்லி ஆகிய சிறுகதைத்தொகுதிகள் அவரிடமிருந்து வெளிவந்துள்ளன. காதலின் துயரம் [கதே], ஆண்டன் செகோவ் கதைகள் ஆகிய நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். நாராயணகுருவின் ‘அறிவு’,நித்ய சைதன்ய யதியின் ஈஸோவாஸ்ய உபநிடத உரை நூலானது கற்று, உய்த்து, ஊழ்கத்திலமர்ந்து அறிய வேண்டிய உபநிடதங்களுக்கு ஒரு பொன்வாசல். இந்திக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தது எம்.கோபாலகிருஷ்ணனின் தனித்துவமான பங்களிப்பாகும்.
திருப்பூரில் எளிய கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் எம்.கோபாலகிருஷ்ணன். வணிகவியலிலும் இந்தி இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்ட தன் அம்மாவிடமிருந்து தனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டதெனக் கூறும் அவர், கவிதையில் மிகுந்த ஆர்வமுடையவர். அவரது முதல் படைப்பு, தன் பக்கத்து வீட்டில் இருந்த மூன்று வேப்பமரங்களை ஒவ்வொன்றாக வெட்டி, விறகுக்குப் பயன்படுத்தியதைக் கண்டு உருவான வெறுமையை கவிதையாக எழுதி, தன சக ஊர்க்காரரான சுப்ரபாரதி மணியனுக்கு அனுப்ப, அவர் அதை கணையாழிக்கு அனுப்பி அது பிரசுரமானது. கல்லூரிப் பருவத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ‘எண்ணங்கள்’ கையெழுத்துப் பத்திரிக்கையை நடத்தி அதன் வழியாக இலக்கிய அறிமுகம் பெற்றவர். நாவல்களை எழுதுவதே தனது முதன்மை விருப்பம் எனவும், பெரும்பாலும் நண்பர்கள் வற்புறுத்தலின் பேரிலேயே சிறுகதைகள் எழுதுவதாகவும் கூறும் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதையான ‘விளிம்பில் நிற்கிறவர்கள்’, எழுத்தாளர் யூமா வாசுகியின் தூண்டுதலின்பேரில் அவர் எழுதி, திருப்பூரிலிருந்து வெளிவந்த குதிரை வீரன் பயணம் இதழில் நவம்பர் 1994-ல் வெளியானது. அப்போது யூமா வாசுகி சூட்டிய புனைப்பெயர்தான் ‘சூத்ரதாரி’. அதே சமயத்தில் புதிய பார்வை இதழில் ‘இருப்பு’ சிறுகதையும் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு ‘பிறிதொரு நதிக்கரை’ டிசம்பர் 2000-ல் கோவை, ஐடியல் பள்ளி நஞ்சப்பன் அவர்களது ‘வைகறை’ பதிப்பகம் வெளியிட்டது.
1999ல் எழுத்தாளர் ஜெயமோகனோடும் நண்பர்களோடும் இணைந்து ‘சொல் புதிது’ இதழை கோபாலகிருஷ்ணன் கொண்டுவந்தார். இதழின் ஆசிரியராக அவரே பொறுப்பு வகித்தார். அன்றைய காலகட்டத்தில் ஒரு பேட்டி, இரண்டு சிறுகதைகள், சில கவிதைகள் உள்ளடங்கியதாகவே சிறு பத்திரிகைகள் இருந்த நிலையை உடைத்து, வெளி அரங்கிலான பார்வைகள், பிற அறிவுத் துறையில் கிடைக்கும் தேடல்கள், இலக்கியப் படிமங்கள், மனித உளவியல் உள்ளிட்டவற்றையெல்லாம் உள்ளடக்கமாகக் கொண்டு `சொல் புதிது’ இதழை வெளியிட்டார். பணிச்சுமையின் காரணமாக அப்பொறுப்பிலிருந்து பின்னர் விலகினாலும், இதழாசிரியாகத் தனக்குக் கிடைத்த அனுபவங்களை மிக முக்கியமானதெனக் குறிப்பிடுகிறார். “அதில் ஏற்பட்ட அனுபவம், என் எழுத்துக்கு மேலும் உரமூட்டியது. அதுதான் `அம்மன் நெசவை’ எழுத வைத்தது” என்றும் கூறுகிறார்.
இன்று முதன்மையாக நாவலாசிரியராக அறியப்படும் எம்.கோபாலகிருஷ்ணனின் முதல் நாவலான ‘அம்மன் நெசவு’ தேவாங்கர் குடியினரின் இடப்பெயர்வு பற்றியது. இது 2002ம் ஆண்டில் வெளியானது. தேவாங்க செட்டியார்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த நாவலில் நெசவாளர்களுக்கும் அவர்கள் சார்ந்து வாழ வேண்டிய கௌண்டர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலினால், கவுண்டர்களின் தொல்லை தாங்காமலும் தொழில் தேடியும் நெசவாளச் சமூகம் திருப்பூர் நகரத்திற்கு குடிபெயர்கிறது. நெசவாளர்குடிகளின் புலம்பெயர்தல் பற்றிய அவருடைய அம்மன்நெசவு தொன்மத்தில் இருந்து சமகால வாழ்க்கை வரை நீடிக்கும் படைப்பு. நவீன தமிழ் இலக்கியத்தில் மக்களின் குடிபெயரும் வரலாற்றை எழுதிய கி.ராஜநாராயனனின் கோபல்ல கிராமம் போல எம்.கோபாலகிருஷ்ணனின் அம்மன் நெசவு நாவல் மக்கள் குடிபெயர்தலைப் பற்றி பேசிய முக்கியமான ஆக்கங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. யதார்த்தவாத ஆக்கங்களின் சிறப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றைத் தொன்மத்தோடு இணைத்துக் கூறும் எம்.கோபாலகிருஷ்ணன், “1995-க்குப் பிறகு வந்ததுதான் நவீனத்துவம், பின்நவீனத்துவம் எல்லாம். இப்படியான பரிசோதனைகளில், கதைகளை கலைத்துப் போட்டு, மேற்கத்திய பாணியில் விளையாடுவது, வழக்கமான வடிவத்தை விடுத்து, வேறு வடிவத்தை மாற்றி எழுதுவது போன்ற விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லை. கதைக்கு தகுந்த வடிவம்தான் வர வேண்டுமென தவிர, வடிவத்துக்காக ஒரு கதையை எழுத்தாளன் எழுதுவதில்லை. வாசகனும் அதை விரும்புவதில்லை” என்கிறார்.
திருப்பூர் ஒரு தொழில்நகரமாக ஆகும் வளர்ச்சிமாற்றத்தில், நான்கு வெவ்வேறு இளைஞர்களின் வாழ்க்கை வழியாக அங்குள்ள மக்களின் வாழ்க்கையில் வரும் மாற்றங்களை ஆராய்கின்ற மணல்கடிகை தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்று என்று குறிப்பிடப்படுகிறது. “தொழில் வளர்ச்சியும் கலாச்சார வளர்ச்சியும் எதிரெதிர் திசையில் பயணிக்கும் திருப்பூர் நகரத்தை இந்த நாவல் களமாக மட்டுமே கொண்டுள்ளது. மற்றபடி இது திருப்பூரைப் பற்றிய நாவல் அல்ல; மனிதனைப் பற்றியது.” என்று எம்.கோபாலகிருஷ்ணன் தன் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். நம் அனைவருக்கும் தொடர்பிருக்கும் அதேநேரம் அனைவருமே கவனிக்கத் தவறிய ஒரு வாழ்வை எம்.கோபாலகிருஷ்ணன் முன் வைக்கிறார் என்று கூறும் விமர்சகர் சுரேஷ் பிரதீப், மணல்கடிகை நாவலைப் பற்றிய தன் விமர்சனத்தில், “நிலங்களும் மாற்றத்தின் தருணங்களும் காலத்தில் நகர்ந்து பின்செல்லக்கூடியவை. அந்த மாற்றத்தை எதிர்கொண்ட மனங்களின் துயரும் உத்வேகமும் கொண்டாட்டங்களுமே நம்மை வந்து சேர்கின்றன. அவ்வகையில் திருப்பூர் தொழில் நகரமாக எழுகிறது எனும் நிமித்தத்தின் வாயிலாக மணல் கடிகை காலத்தை அதை உணரும் மனித அகத்தை மிக வெற்றிகரமாக பிரதிபலிக்கிறது” என குறிப்பிடுகிறார்.
கணவன் மனைவி என்கிற குறிப்பிட்ட உறவினிடையே எழும் உணர்வுச்சிக்கல்கள் வெவ்வேறு குடும்பங்களில் வர்ணவேறுபாடுகளோடு அமைந்திருக்கும் விதத்தை மனைமாட்சி நாவல் பேசுகிறது. “அன்பின் வழி மனம் நிகழ்த்தும் பாய்ச்சல்களை எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள். ஆனால், அன்பின் நீர்ச்சுனை வற்றிவிடும் தருணத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளத் தத்தளிக்கும் மனதின் ஊசலாட்டத்தை இத்தனை கருணையுடன் வேறு எவரும் அணுகியதில்லை” என்று விமர்சகர் கோகுல்பிரசாத் இந்த நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.தனது முந்தைய நாவல்களிலிருந்து மாறுபட்ட ஒன்றாக அடுத்த நாவல் அமையவேண்டும் என்ற சவாலை எதிர்கொள்வதற்காகவும், தனக்குப் பரிச்சயமில்லாத புதிய களத்தில் புனைவாக்கத்தில் அடுத்த கட்டத்தை எட்டுவதற்காகவுமான முயற்சியாக ‘தீர்த்த யாத்திரை’ நாவலை எழுதியதாக எம்.கோபாலகிருஷ்ணன் கூறுகிறார். அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி மற்றும் தீர்த்த யாத்திரை ஆகிய நான்கு நாவல்களுக்குமுள்ள பொதுத்தன்மை அதிலுள்ள மனித உறவுகள் சார்ந்த விசாரணை என்பது தான்.
“குடும்பம், ஆண் பெண் உறவுகள் போன்ற களங்களை எழுதுபவர் என்ற வரையறைக்குள் நின்றுவிடுவேனோ என்ற எண்ணம் எழுந்தது” எனக் கூறும் அவர், தனக்கு முற்றிலும் அறிமுகமில்லாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு கற்பனையின் துணைகொண்டு புனைவின் சாத்தியத்தைத் தொட்டுப் பார்க்கலாம் என்றெண்ணி எழுதிய நாவல் தான் ‘மாயப் புன்னகை’. டாவின்சியின் பிரசித்தி பெற்ற மோனாலிசா ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒரு பாமரனால் களவாடப்பட்டு இரண்டாண்டுகளுக்குப் பின் பாரீசுக்குத் திரும்பிய வரலாற்று சம்பவங்களைத் தொகுத்து, அவற்றின் இடைவெளிகளைத் தன் புனைவின் மூலம் நிரப்பி, ஒரு சுவாரசியமான துப்பறியும் கதையாக இந்தக் குறுநாவலை அமைந்திருக்கிறார் கோபாலகிருஷ்ணன். பிரெஞ்சுக்காரர்களால் நாள்தோறும் வந்தேறி என ஏளனம் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்படும் எளிய பாமரனான பெரூஜா, அதற்கு பழிவாங்க ஒருநாள் லூவர் அருங்காட்சியகத்திலிருந்து மோனாலிசா ஓவியத்தைத் திருடிவிடுகிறான். உண்மையில் அவன் திருடத் திட்டமிட்டது வேறொரு ஓவியத்தை. சட்டைப்பைக்குள் வைத்து எடுத்துச் செல்ல வசதியாக இருந்ததால் மோனாலிசா மாட்டிக்கொள்கிறாள். இங்கு தொடங்கி அதன்பின் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் ஒருவகையில் வரலாற்று முரண்களின் தொகுப்பாக அல்லது வரலாறு மனிதனைக் கொண்டு நிகழ்த்தும் பகடியாக இருக்கிறது. மோனாலிசா தன்னைப் பார்ப்பவர்களைக் கண்ணீர் விட்டு அழ வைப்பாள்; மகிழ்ச்சியோடு புன்னகைக்க வைப்பாள். மனதை அமைதிப்படுத்தவும் செய்வாள்; தன் புன்னகையே இறுதிக் காட்சியென்றாக்கி தற்கொலைக்கும் தூண்டுவாள். வீரமும் வெற்றியும் கொண்ட நெப்போலியனின் அரண்மனைப் படுக்கையறையை அலங்கரிப்பாள்; ஊர் பெயர் தெரியாத பாமரனின் டிரங்குப் பெட்டிக்குள்ளிருந்தும் புன்னகைப்பாள். அந்தப் புன்னகை மாயமன்றி வேறென்ன?
எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புகளில் மிக வேறுபட்ட கதைக்களம் கொண்டதும் சூழியல் இலக்கியங்களில் மிக முக்கியமானதுமானது வேங்கை வனம் நாவல். கயல்முக வேங்கையான மச்லியின் கதையைப் பிரதானப்படுத்திக் கூறும் இந்த நாவல் கிபி 1110 லிருந்து 2014 வரையான வரலாற்றை முன்வைக்கிறது. வரலாறு, இந்திய அரசியல், சூழியல், மானுடவியல் எனப்பல தளங்களில் வாசிக்க இடமளிக்கும் மிக முக்கியமான படைப்பாக இது அமைந்திருக்கிறது. இந்த நாவலைப் பற்றிக் கூறுகையில் ‘காட்டுயிர்களில் ஒன்றாய் இருந்த மனிதன் பகுத்தறிவின் துணைகொண்டு வேறொரு உயரத்தை எட்டியிருந்தபோதும்கூட அடிப்படையில் அவனுக்குள் உள்ளேயிருக்கும் மிருக இச்சையும் குணமுந்தான் அவனைத் தொடர்ந்து இயக்குகிறது; தத்துவம், கலை, இலக்கியம், அறிவியல் என்று பல்வேறு துறைகளின் பாவனைகளைக்கொண்டு மனிதன் அந்த உயிரிச்சையை, தன்னை மட்டுமே பேணிக் காத்துக் கொள்ளும் சுயநலத்தை மூடி மறைத்துக் கொள்கிறான்’ என்ற எண்ணம் உறுதிப்பட்டது.” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
ஒரு புனைவெழுத்தாளனாக மட்டுமின்றி ஆங்கிலத்திலிருந்தும், இந்தியிலிருந்தும் பல படைப்புக்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். நித்ய சைதன்ய யதியின் ஈஸோவாஸ்ய உபநிடத உரை நூலானது கற்று ,உய்த்து, ஊழ்கத்திலமர வேண்டியவை உபநிடதங்கள். அதைத் தான் கேட்டுக்கொண்டதற்கிணங்க எம். கோபாலகிருஷ்ணன் மொழியாக்கம் செய்தார் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். பிரடெரிக் டக்ளஸ் எழுதிய ‘ஒரு அடிமையின் வரலாறு’ என்ற வாழ்க்கைச் சரிதம், சோல்ஸெனிட்சன் எழுதிய ‘வாழ்விலே ஒரு நாள்’ நாவல், ராகுல சாங்கிருத்யாயனின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ஆகியவை அவர் மொழிபெயர்ப்புகளில் சில. மேலும் கீத் சதுர்வேதி , மங்களேஷ் டபரால் , அசோக் வாஜ்பாயி , கிரிராஜ் கிராது , கேதார்நாத் சிங் என்று பல முக்கிய இந்தி கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து தமிழுக்கு கொண்டுவந்துள்ளார்.
‘கதா’ தேசிய விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான தமிழக அரசு விருது, மனைமாட்சி’ நாவலுக்காக தஞ்சை பிரகாஷ் நாவல் விருது மற்றும் ஸ்பேரோ’ விருது ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கும் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன், “எங்கேனும் சிலர் என் எழுத்தை வாசிக்கக்கூடும் என்ற நம்பிக்கையும், ‘நான் எழுதவேண்டிய சிலவற்றை வேறு யாரும் எழுத முடியாது’ என்கிற உறுதியும் என்னைத் தொடர்ந்து எழுதச் செய்கின்றன” என்று கூறுகிறார்.
தரவுகள் : தமிழ் விக்கி
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
