“அமைதி என்பது”, “தனியன்” சிறுகதைகள் வாசிப்பு அனுபவம்
பெரும்பாலும், ஒரே போல வாழக்கை என்பதே அனைவருக்கும் வாய்ப்பது. அந்த சீரான ஓட்டம் நம்முடைய கால்கள் தரையில் பதிந்து இருப்பதற்கு மிகவும் அவசியமானது. காட்டு விலங்குகளைப் போல் ஒரு உறுதியற்ற வாழக்கை முறைக்கு மாறாக நாகரீக மனிதன் கண்டடைந்த உயரிய சாதனம். ஆனால், அந்த சுழற்சியில் இருந்துக் கொண்டே அதை மீறும் வழியை , மீண்டு வந்து அதில் பெற்றவையை தன் சுழற்சியில் சேர்த்து சிறு மாற்றம் செய்து, பின் மீண்டும் மீறி, பெற்று, சேர்த்து, மாற்றி என சுழற்சிக்குள் ஒரு சுழற்சியாக இருப்பது கலைகளை சார்ந்து இருப்பது.
கலைகளை சார்ந்து இருத்தல் என்பதில் பல வகைகள் உண்டு. பெற்றுக்கொள்ளுதல், பராமரித்தல், பகிருதல், வளர்த்தல் – இவை அனைத்துக்கும் மேலாக படைத்தல். இயற்கை சமநிலை பேணுவது போல் இந்த கூட்டு இயக்க செயல்பாடு கலையின் சமநிலைக்கு தேவையாகிறது. ஏதோ ஒரு கணம், இந்த பிரபஞ்சத்தை, கோள்களை, இயற்கையை, அதில் இருக்கும் உயிர்களை தோற்றுவித்தது போல், மனித இனமும் கலையை கண்டறிந்து, அதன் வடிவங்களை விரிவாக்கி கொண்டே செல்கிறார்கள். மௌனத்தில் இருந்து மொழி வரை வந்து பின் மொழியின் வழியே ஆழ்ந்த அக மௌனங்களை நோக்கி நம்மை மீண்டும் செலுத்துகிறது.
மொழி வழி கலைகளில் சிறுகதை என்பது ஒரு சில பக்கங்களில், வாழ்க்கையின் மிக சிறிய பகுதியை முன்வைத்து, அதனுள் மறைந்திருக்கும் மீதி வாழ்வை படிப்பவர்கள் தேடி தேடி அடைய செய்வது. ஒரு மனிதனின் வாழ்வு, ஒப்புநோக்க அளவில் சிறு துளி மட்டுமே. இந்த துளியில் இருந்து காட்சிக்குள் அடங்கா பெரு மழையை, பெரு விரிவை அவன் எண்ணி எண்ணி அறிவதை போலவே சிறுகதை வாசிப்பு என நாம் எடுத்துக்கொள்ளலாம்.

சுமார் ஐம்பது வயதை நெருங்கிற ஒரு ஆணின் வழியே சொல்லப்படும் இந்த கதையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தனியர்கள் – 32 வயதில் இருந்து அவனுடைய அம்மா, தன்னுடைய சம்பளத்திற்காக வரும் வரன்களை எல்லாம் காரணம் சொல்லி தவிர்க்கும் அண்ணனை கொண்ட மங்கையர்க்கரசி, எஸ்பிஎஸ் துணிக்கடை வாசலில் கிடந்த நாற்காலியில் சாய்ந்திருக்கும் பாலு ஐயா (வேறு ஒரு உலகத்தில், இவர் ஒத்தைத் தறி முதலியார் ஆக இருக்கலாம் 🙂 ), கோயில் அருகே இருக்கும் அரச மரம். (நகர் நடுவே வீற்றிருக்கும் கடவுள் சடையப்பரைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்)
தள்ளிப்போகும் திருமணம், வயதிற்கு உரிய கற்பனைகளும், பசிகளும், அதனால் உண்டாகும் எரிச்சலும், ஏமாற்றங்களும், தாழ்வு மனப்பான்மையும் என இருப்பவனின் பார்வையில் அனைத்தும் இணையோடு அல்லது சுற்றத்தோடு இருப்பதைப் போலவே தெரிகிறது. தெருவில் தனியாக, அடையாளமாக இருந்த பஞ்சாலை வீட்டு மனைகளாக, யூனிவெர்சல் தியேட்டர் சாலை – என ஆசிரியர் அன்றைய நகரத்தின் மாற்றங்களையும், கதை சொல்லியின் மனதில் உண்டாகும் அதிர்வுகளையும் ஒரு சேர முன்வைக்கிறார்.
ஆரம்ப காலத்தில் காமத்தை, உடல் சுகத்தை குறித்து விரும்பியவனாய் அவ்வப்போது வெளிப்பட்டவன் பின்னர் காலம் கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்ததை உணர்ந்து இருப்பவனை, இறுதியில் வீட்டில் பெண் பிள்ளைகள் இருப்பதால், ஒதுங்கிக் கொள்ள சொல்லுகையில், அவன் எண்ணமாய் வரும் இந்த வரி
பெறாவிட்டாலும் என் பிள்ளைகள் அவர்கள். ஆனாலும் நான் தனியன். ஆண் எனும் அச்சம். சரிதான், யாரிடமும் எதையும் நிரூபிக்க முடியாது.
ஒரு பார்வையில், எந்த வயதிலும் ஒரு பெண் தனியாக இருக்க நேர்ந்தால், அவளை ஏற்றுக்கொள்ள, உடன் இருந்து பார்த்துக் கொள்வதை இயல்பு என ஏற்றிருக்கும் மன நிலை – திருமணம் வழியே தனக்கென்று குடும்பம் இல்லாத ஒரு நடுத்தர வயது ஆணுக்கு – அதிலும் கூட்டுக்குடும்பத்தில் அவன் இருக்க நேர்ந்தால் – எப்போதும் ஒரு சந்தேகமும், அச்சமும், விலகல் நடைமுறையை கடைப்பிடிக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது இக்கதை.
எல்லாம் இருந்தும் எதிலும் பங்கு எடுக்க வேண்டாம் என இருப்பது, எதிலும் பங்கு எடுக்க முடியாது எல்லாவற்றையும் வேறு ஒரு காரணத்திற்க்காக துறப்பது – என்ற இரு வகை தனிமைக்கு இடையே இன்னொன்று இந்த கதை சொல்லியின் தனிமை.
ஜெயன் போன்ற உலக வாழக்கையில் இருப்பவர்கள் – தன்னுடைய தோழனை, நெருக்கமானவர்களை எப்படியாவது பசி, வறுமைகள் தொடாத இடத்தில் வைத்துவிட தங்களால் இயன்றவரை முயல்கிறார்கள். ஒரு விதத்தில் இயற்கையோடு (அல்லது விதி அல்லது ஏதோ ஒன்று) தொடர் சமரில் இருப்பவர்கள். அனைத்து பொறுப்புகளையும் சுமந்து, தன்னை காரணகர்த்தாவாக எண்ணிக்கொள்ளுதல். மறுபக்கம் தூய ஞானிகள் – இங்கு நடக்கும் அனைத்தையும் சமநிலை தவறாது பார்ப்பவர்கள். கரையில் இருந்து அலையடிக்கும் கடலை பார்ப்பது போல்
ஐந்தாவது மாடியில் குளிரூட்டப்பட்ட அலுவலகத்தில் வேலை பளு இல்லாத, பெரிதாக அவனை தொந்தரவு செய்யாத நிரந்தர வருமானம் தரும் வேலையின் அமைதியில் ஒன்ற முடியவில்லை. மறுபக்கம், மலையின் உச்சியில் இருக்கும் ஆசிரமம் போல் உச்சத்தில் இருக்கும் அத்வைத துறவிகள் தரும் அமைதியிலும் ஒன்ற முடியவில்லை. இரண்டுக்கும் நடுவில் – இரைச்சல்களின் அமைதி, அடுத்த வேளையின் நிரந்தரமின்மை தரும் அமைதியை தேர்ந்து எடுத்து செல்கிறான்.
துளியும் அழுக்காகாத நீர் நிலையில் முகம் பார்த்தால், நாம் அறியாத ஒன்றை காட்டுவதை சமயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. கள்ளமின்மை நிறைந்த குழந்தைகளின் தொடுகையில் குழைந்து போவது போலவே, அத்வைதிகளின் சுற்றமும். குழந்தைகள் வெகு இயல்பாய் உரையாடும் குருவிடம், அவன் கிளம்பும் போது கூட மௌனம் மட்டுமே வெளிப்படுகிறது. அந்த உச்சத்தில் இருந்து மீண்டும் சென்னை வாழ்க்கைக்கு திரும்புவதை, “சாவி“யின் கதையில் வரும் குரங்கினை நினைவுக்கு கொண்டு வந்தது. (மேலிருந்து கீழே வருதல்) . அவன் திரும்பும் முடிவை கேட்கும் அனந்தன் சுவாமி சரி என்பதை தவிர வேறொன்றும் சொல்லவில்லை. நித்யாவின் காலையிலேயே புறப்பட்டாச்சா? என்ற கேள்வி – அவனை நன்கறிந்த, ஆனாலும் மாற்ற விரும்பாத பார்வையை காட்டுகிறது. (யோகம் கதையில் இதே அனந்தன் சுவாமி கத்தியால் குத்து வாங்கிய பிறகும் அதே சம பார்வை மட்டுமே கொள்கிறார்)
வேலியை சீரமைத்தல் -ராபர்ட் பிராஸ்ட்டின் கவிதையும் மனிதனுக்குள் இருக்கும் முரண்பாடுகளை – தானே எல்லைகளை, கட்டுப்பாடுகளை உண்டாக்கி, அதை தானே உடைக்கும் ஒரு முடிவில்லாத சுழற்சியை சொல்லும் ஒரு கவிதை நல்ல தேர்வு – கவியான இந்த கதையின் நாயகனும் அதை உள்வாங்கி இருக்கிறான். ஓவியம், கவிதை என்ற இரு குதிரைகள் இல்லாது “ஒன்றை” மட்டுமே கொள்ளும் அந்த ஜப்பானிய பெண் துறவி வரும் ஒரு சில வரிகளிலும் அத்வைதம் எட்டி பார்க்கிறது.
தன்னை எரித்தழித்து கலையை கொள்வது ஒரு புறம், அக்னியை உள்ளுக்குள் வளர்த்து வளர்த்து நிலைத்து நிற்பது இன்னொரு புறம். முதலாவது எளிது (அல்லது) அது தான் காலம் நமக்கு வைக்கும் முதல் தேர்வு. அந்த முதலைகள் சூழ் அகழியை கவனமாக கையாள சந்தர்ப்பங்களும், உறுதியான பற்றும் தேவைப்படும். முடிவாக, சில செடிகள் வீட்டுக்குள் வளரும், சில வீட்டுக்கு வெளியே, ஒரு சில பாலையில், இன்னும் சில பாறையில் – ஏன் என்ற தேர்வு அதனிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் இந்த முறைக்கு (பிறவி) அப்படித்தான்.
கதையின் பல இடங்களில் கவித்துவமும், படிமங்களும் ஊடு பரவி இருக்கிறது, உதாரணத்திற்கு,
வெப்பத்தைத் தேக்கிய ஓடுகள் வேய்ந்த பழவந்தாங்கல் அறைக்குள் அட்டைகளில் எழுதிய ஓவியங்களையும் கூட கரையான்கள் விட்டுவைத்ததில்லை. மழையில் நனைந்து வண்ணம் கரைந்து நைந்த ஓவியங்கள்தான் எத்தனை?
புகை கக்கியபடி ஓசையில்லாமல் ரயில் வருவது தெரிந்தது. மலை மடுப்பிலிருந்து சிறு புழுவைப்போல ஊர்ந்து வருகிறது.
மேயும் இந்தக் குதிரையின் வாலசைவு நேற்று நாம் பார்த்ததில்லை. இதோ இந்தக் கணத்தில் நிகழ்வது. இங்கு நாம் காண்பது எதுவுமே ஏற்கெனவே நாம் கண்ட காட்சிகள் அல்ல. அவை நம் நினைவில் அறிவைக் கொண்டு நாம் பார்ப்பவை. இரண்டும் வேறு வேறு
தனியன், ஒத்தைத் தறி முதலியார் போன்ற கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை. எப்போதும் சுவையாக தரும் “அரிசி பருப்பு சாதத்தில்” இருந்து “அமைதி என்பது” ஒரு அறுசுவை விருந்து.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
