- உதயத்தில் ஓர் அஸ்தமனம்
- பிரம்மாஸ்திரம்
- ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்
- விமான தளத்தை விற்ற சிறுவன்
- துக்கம்
- காளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை]
- என் தலைக்கான கொன்றை
- என் குழந்தைகளின் புகைப்படங்கள்
- வேட்டை நாய்
- வரிசையில் ஒரு சிநேகம்
- குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்
- தீப்பெட்டி
- சௌவாலி
- டிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது
- வைரஸ்
- ஒரு பெண் பற்றிய சொற்சித்திரம்
- ஐந்து பெண்கள்
- நெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்
- மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு
- காட்டு மல்லி
- குங்கும பரணி
- மர பொம்மைகள்
- வக்கீலின் கடிதம்
- தொலைந்து போன பொருள்
- உங்கள் கதை [ என்னுடையதும் ]
- கருப்பு எஜமானி
- ஹெட்மாஸ்டர்
- ஏழாவது மலர்
- விற்பனை
- இலக்கு – சேது
- பெருங்காய கச்சோடி
மூலம் : பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய்
தமிழாக்கம் : அனுராதா க்ருஷ்ணசுவாமி

அப்போது நாங்கள் ஹரி பாபுவின் மூங்கில் கழிகளின் மீது ஓடுகள் வேயப்பட்ட ஒற்றை அறை ஒண்டுக் குடித்தனத்தில் குடியிருந்தோம். அந்த வீட்டில் எங்களைப்போல மேலும் பல குடும்பங்கள் குடியிருந்தன. ஒரு அறையில் வளையல் விற்பவரும் அவரது மனைவியும் குடி இருந்தார்கள். அவர் பெயர் கேசவ். நான் அவரை கேசவ் மாமா என்று கூப்பிடுவேன். தினமும் காலையில் குழாயில் தண்ணீர் விட ஆரம்பித்ததுமே எல்லோரும் தத்தம் பானைகளையும் பாத்திரங்களையும் பக்கெட்டுகளையும் குழாய் அருகே வரிசையாக வைத்து விடுவார்கள். குடித்தனக்காரர்களிடையே பலத்த சண்டை மூளும். என் அப்பா “நம்மால் இங்கு இருக்க முடியாது. இவர்கள் காட்டுமிராண்டிகளைப் போல நடந்து கொள்கிறார்கள். நாம் இங்கிருந்து சீக்கிரமே கிளம்பி விட வேண்டும்” என்று சொல்வார். ஆனால் நாங்கள் ஏன் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாறவில்லை என்று எனக்கு புரிந்ததில்லை. நாங்கள் ஏழைகளாகவும் வசதி இல்லாதவர்களாகவும் இருந்ததால்தான் என்று நினைக்கிறேன்.
எங்கள் வீட்டுக்கு எதிரே சாலையின் மறுபுறம் ஒரு பெரிய கிடங்கு இருந்தது. அதையடுத்து வெல்ல மண்டி ஒன்று இருந்தது. எதிரே முனிசிபாலிட்டி குழாய் இருந்தது. தினமும் கும்பல் கும்பலாக ஆட்கள் இந்த குழாயிலிருந்து நீர் நிரப்பிச் செல்வார்கள். எப்போதும் ஒரே கூச்சலும் தள்ளு முள்ளுமாக இருக்கும். பெண்கள் கூட ஒருவரோடு ஒருவர் சண்டை போடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
இப்படியாக நாங்கள் ஒரு வருடம் – ஜூனிலிருந்து ஜூன் வரை – அந்த ஓட்டு வீட்டில் குடியிருந்தோம். நாங்கள் ஜூன் மாதத்தில்கிராமத்து வீட்டை விட்டு புறப்பட்டோம். கிராமத்தில் நானும் காளியும் மூங்கில் தோட்டத்தை ஒட்டி, முட்புதருக்கு அருகே ஒரு குடிசையை கட்டி இருந்தோம். காளி என்னை விட பலசாலியாக இருந்ததால் மூட்டை மூட்டையாக காய்ந்த இலந்தை இலைகளையும் குச்சிகளையும் சுமந்து கொண்டு வந்தான். நாங்கள் இருவரும் சேர்ந்து என்ன அருமையான நிஜ குடிசையை போலவே ஒரு குடிசையை கட்டியிருந்தோம் தெரியுமா! அப்படித்தான் காளி சொல்வான். மரத்தின் கனமான கிளையில் அவன் சிதிலமாகிப்போன பறவை கூட்டொன்றை பொருத்தியிருந்தான். நிலவொளி வீசும் செப்டம்பர் மாத இரவுகளிலோ அல்லது ஆகஸ்ட் மாத மத்தியிலோ இரவு நேரத்தில் நடமாடும் மரங்கொத்திப் பறவைகளோ அல்லது செம்மூக்கு ஆள்காட்டி பறவைகளோ அந்த கூட்டில் முட்டையிடும் என்று காளி சொன்னான். நாங்கள் ஜூன் மாதத்திலேயே கிராமத்தை விட்டு புறப்பட்டு விட்டதால் காளி சொன்னது எவ்வளவு நிஜம் என்று என்னால் சரிபார்க்க முடியவில்லை. ஏனென்றால் ஜூன் மாதத்திலேயே கிராமத்திலிருந்து இதோ இந்த ஓட்டு வீட்டிற்கு நாங்கள் குடி வந்துவிட்டோம்.
காளியும் நானும் கிராமத்தில் கவனமாக பார்த்து பார்த்து கட்டிய, முட்புதருக்கு அருகே இருந்த அந்த குடிசையும் மரத்தின் மீது காளி பொருத்தியிருந்த பறவைக் கூடும் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வந்தன. செப்டம்பர் மாத நிலவெளியில் மரங்கொத்தி பறவைகள் முட்டை இட்டிருக்குமா?
இந்த கல்கத்தா வீடு குறுகியதாகவும் ஜனசந்தடி நிறைந்த இடத்திலும் இருந்தது. நான் காலை முழுவதும் மெலிதாகக் கூரை வேயப்பட்ட வராண்டாவில் தான் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் நீர் நிரப்புவதையும், மாட்டு வண்டியில் இருந்து வெல்லம் கிடங்கில் இறக்கப்படுவதையும், தெருக் கோடியிலிருந்தஇரண்டு மாடி வீட்டு ஜன்னலில் இருந்து இளம் பெண்ணொருத்தி என்னை போலவே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பேன். சில சமயம் எங்கள் தெருவின் ஆரம்பத்தில் இருந்த பிஹாரி நபர் ஒருவரின் கடையிலிருந்து நான் தின்பண்டம் வாங்கி சாப்பிடுவது உண்டு. பிரதான வீதி எப்போதும் வாகனங்களால் நிரம்பி இருக்கும். நான் எங்களது கிராமத்தில் ஒரு குதிரை வண்டியைக் கூடப் பார்த்ததில்லை. எனக்கு அவற்றை வேடிக்கை பார்ப்பது சலிக்கவே சலிக்காது. ஆனால் என் அம்மா நான் வண்டிச்சக்கரத்துக்கு அடியே சிக்கிக் கொண்டு விடுவேன் என்று பயந்து என்னை கீழே இறங்கவே விடமாட்டாள்.
எங்கள் தெருவின் மறு கோடியில் எங்களுடையதைப் போலவே சில ஓட்டு வீடுகள் வரிசையாக இருந்தன. சில சமயம் நான் இந்த வீடுகளுக்கு போயிருக்கிறேன். அந்த வீடுகள் சுத்தமாக இருக்கும். வீட்டில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடிகள், பொம்மைகள், கண்ணாடி அலமாரிகள் போன்றவை இருக்கும். சுவர்களில் படங்களும் மாட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் மட்டும் வசித்தார்கள். நான் அங்கிருந்த எல்லா வீடுகளுக்குமே பெரும்பாலும் மாலை நேரங்களில் சென்றிருக்கிறேன். சில சமயம் காலை நேரங்களிலும் போனதுண்டு.
அவ் வீடுகளில் ஒன்றில் குசும் என்ற பெயருடைய பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். எனக்கும் அவளைப் பிடிக்கும். நான் பெரும்பாலான நேரத்தை குசுமின் வீட்டில் தான் கழிப்பேன். அவள் என்னுடன் நிறைய பேசுவாள். என்னுடைய கிராமத்தை பற்றி எல்லாம் கேட்பாள். அவள் பர்த்வான் என்ற இடத்தைச் சேர்ந்தவள். ஆனால் இப்போது அவள் அந்த அறையில் வசித்து வந்தாள்.
“எனக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கிறது. நீ தினமும் இங்குவருவாயா?”
“எனக்கும் உன்னை மிகவும் பிடிக்கும். நான் தினமும் இங்கு வருவேன்”
“உன்னுடைய கிராமம் எங்கே இருக்கிறது?”
“என்னுடைய கிராமத்தின் பெயர் ஆஷின் கிரி. ஜஸ்ஸூரில் இருக்கிறது.”
“கல்கத்தாவுக்கு முதல் முறையாக வந்திருக்கிறாயா?”
“ஆமாம்”
குசும் மாலை வேலைகளில் மிகவும் கவனமாக அலங்காரம் செய்து கொள்வாள். நெற்றியில் செந்தூரம் இட்டு மாவு போன்ற ஒரு பவுடரை முகத்தில் பூசிக் கொள்வாள். தன்னுடைய கூந்தலையும் சீவி நன்றாக அலங்கரித்துக் கொள்வாள். அது அவளுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கும் தெரியுமா! ஆனால் அந்த நேரத்தில் அவள் என்னைத் தன் அறையில் இருக்க அனுமதிக்க மாட்டாள். “வீட்டுக்கு போ. இது பாபு வரும் நேரம்” என்பாள். முதல்முறையாக இதைக் கேட்ட போது நான் அவளிடம் ‘யார் அந்த பாபு’ என்று கேட்டேன். “உனக்கு அவரைத் தெரியாது. உனக்குப் புரியாது. இப்போது நீ வீட்டுக்கு போ” என் பாள். எனக்கு எரிச்சலாக இருக்கும். “பாபு வரட்டுமே அவர் என்னை என்ன செய்து விடுவார்? நான் இங்கு தான் இருப்பேன்” என்பேன்.
“இல்லை. நீ இங்கே இருக்கக் கூடாது போய்விடு, என் கண்ணில்லையா” என்பாள் அவள்.
குசுமின் பாபு யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ள எனக்கு மிகவும் ஆவலாக இருந்தது. அவள் ஏன் என்னை வீட்டுக்கு போகச் சொல்லி துரத்துகிறாள்? கடைசியாக ஒரு நாள் நான் அவரைப் பார்த்து விட்டேன்!
கனத்த சரீரமும் நீள முடியும் கொண்ட ஒருவர் – அவர் கையில் சாப்பாட்டு பொட்டலம் ஒன்றை வைத்துக் கொண்டிருந்தார். கடைகளில் காய்ந்த இலைகளில் இப்படி சாப்பாடு கட்டி தருவது உண்டு. எங்கள் கிராமத்தில் இந்த மாதிரி இலை எல்லாம் கிடையாது. ஹரியின் கடையில் ஜிலேபி வாங்கினால் அதை அவன் அதைத் தாமரை இலையில் வைத்து கட்டி தருவதுதான் வழக்கம். பொட்டலத்தைப் பிரித்து குசும் ஒரு பெரிய கச்சோடியை என்னிடம் கொடுத்து, “இந்தா, வீட்டுக்கு போகும் வழியில் இதை சாப்பிட்டுக் கொண்டே செல்” என்றாள்.
நான் கச்சோடியை ஒரு கடி கடித்தேன். மிகவும் ருசியாக இருந்தது. கிராமத்தில் நான் இதைப் போன்ற சுவையான கச்சோடியை சாப்பிட்டதில்லை. கிராமத்தில் ஹரி செய்யும் கச்சோடிகள் எண்ணெயில் பொறிக்கப்பட்டிருக்கும். இவ்வளவு ருசியாகவும் இருக்காது.
நான் மிகவும் சந்தோஷமாக, “ஆஹா என்ன ருசி! இந்த தின்பண்டத்தின் பெயர் என்ன?” என்று கேட்டேன் .
இது பெருங்காய கச்சோடி என்று குசும் சொன்னாள்.
குசுமின் பாபு நான் யார் என கேட்டார்.
“முனிசிபாலிட்டி குழாய்க்கு எதிரே இருக்கிற வீட்டில் குடி வந்திருக்கிறார்கள். பிராமணர்கள்”
“வீட்டுக்கு போ கண்ணா. இப்போது வீட்டுக்கு போ” என்றார் குசுமின் பாபு”
நான் ஏன் இங்கேயே இருக்க கூடாது? நான் இருந்தால் என்ன தவறு என்று கேட்க நினைத்தேன். ஆனால் அவரைப் பார்த்ததும் எனக்கு நாவெழவில்லை. அவரைப் பார்த்தால் கோபக்காரர் போல இருந்தது. என்னை அடித்து விடுவாரோ என்று பயமாக இருந்தது. அதற்குப் பிறகு நான் பெருங்காயக் கச்சோடி சாப்பிடும் நப்பாசையில் குசு மின் பாபு வரும் வரை அங்கு காத்திருக்க ஆரம்பித்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் குசும் எனக்கு இரண்டு பெருங்காய கச்சோடிகள் கொடுப்பாளா என்ன? அடடா நான் கச்சோடி வாங்கி வர மறந்து விட்டேன். உனக்காக மொறுமொறு குஜியா வாங்கி வர வேண்டும் என்று நினைத்தேன். நாளை கட்டாயம் வாங்கி வருகிறேன் என்று குசுமின் பாபு சொல்வார். எனக்கு இப்போதெல்லாம் அவரிடம் பயமாக இருப்பதில்லை. “நாளைக்கு கட்டாயம் மறக்காமல் வாங்கி வர வேண்டும் சரியா” என்றேன். பாபு சிரித்துக் கொண்டே மறக்க மாட்டேன் கட்டாயம் வாங்கி வருகிறேன் என்றார். குசும் என்னை வீட்டுக்கு போகச் சொன்னாள். “நான் போக மாட்டேன். நான் ஏன் இங்கே இருக்கக் கூடாது?” என்றேன்.
பதிலுக்கு பாபு எதையோ சொன்னார். அது எனக்கு சரியாக புரியவில்லை. குசம் கோபத்துடன் ஒரு குழந்தையின் எதிரில் இதையெல்லாமா பேசுவது என்று அவரை கடிந்து கொண்டாள்.
வீட்டுக்கு போனதும் நான் அம்மாவிடம் கேட்டேன் ” நீ எப்போதாவது பெருங்காய கச்சோடி சாப்பிட்டி ருக்கிறாயா?”
“ஏன்?”
“நான் சாப்பிட்டிருக்கிறேன் இவ்வளவு பெருசாக இருக்கும். பெருங்காய வாசனை மணக்கும்.”
“உனக்கு எங்கிருந்து அது கிடைத்தது?”
“குசும் வீட்டுக்கு வரும் பாபு வாங்கிக் கொண்டு வந்தார். எனக்கும் ஒன்று கொடுத்தார்”
“அங்கு போகக்கூடாது என்று நான் உனக்கு பல முறை சொல்லி இருக்கிறேனா இல்லையா? இனிமேல் அங்கே போகாதே!”
“ஏன்?”
“ஏனென்றால் நீ அங்கெல்லாம் போகக்கூடாது. அவர்கள் நல்லவர்கள் இல்லை”
“இல்லை அம்மா குசும் மிக நல்லவள். அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். அவள் தினமும் எனக்கு பெருங்காய கச்சோடி தருவாள்”
“உன்னுடைய பெருங்காய கச்சோடியை என்னிடம் சொல்லாதே.
இங்கு வீட்டில் வயிறு நிறைய உனக்கு சாப்பாடு போடுவதில்லையா? நீ அந்த வீட்டுக்கெல்லாம் போக கூடாது. போனால் தொலைத்துவிடுவேன் ஜாக்கிரதை”
அடுத்த இரண்டு மூன்று நாட்கள் நான் குசும் வீட்டிற்கு போகவில்லை. ஆனால் என்னால் வீட்டிலும் இருக்க முடியவில்லை. நான் அம்மாவுக்கு தெரியாமல் குசும் வீட்டுக்கு போனேன்.. குசம் நான் ஏன் வரவில்லை என்று கேட்டாள். அம்மா என்னை இங்கு வரக்கூடாது என்று எச்சரித்திருந்தாள் என பதிலளித்தேன்.
“அப்படியானால் நீ இனி இங்கே வராதே. அம்மா உன்னிடம் கோபித்துக் கொண்டு விடப் போகிறாள்.”
“அதனால்தான் நான் இரண்டு நாட்களாக இங்கு வரவில்லை”
“ஆனால் மறுபடியும் இங்கு வந்து விட்டாயே!”
“எனக்கு உன்னை மிகவும் பிடிக்குமே அதனால் தான் “
” என் செல்லமே! எனக்கும் உன்னை பார்க்காவிட்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா? நீ வராத நாட்களில் நான் உன்னை மிகவும் தேடுகிறேன் தெரியுமா?”
“நானும் தான் “
“எல்லாம் என் தலைவிதி. இப்போது உன் அம்மா உன்னை திட்ட போகிறாளே என்று எனக்கு கவலையாக இருக்கிறது”
“நான் அம்மாவிடம் எதுவும் சொல்ல மாட்டேன். இங்கு வராவிட்டால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இப்போது நான் வீட்டுக்கு போகிறேன்”
“சாயங்காலம் வா”
“வருகிறேன்”
* * *
காலையில் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக நான் மாலையில் குசுமின் வீட்டிற்கு சென்றேன். குசுமின் பாபு வந்தவுடனேயே, “சின்ன பையா நீ இங்குதான் இருக்கிறாயா? இரண்டு மூன்று நாட்களாக எங்கே உன்னை காணவில்லை? என்றார். நான் உனக்காக மொறு மொறு சமோசா வாங்கி வந்திருந்தேன். அதைச் சாப்பிட உனக்கு கொடுத்து வைக்கவில்லை. இவனுக்கு ஒன்றிரண்டு கச்சோடிகள் கொடு குசும்” என்றார்.
“நாளைக்கு எனக்காக சமோசா வாங்கி வாருங்கள்” என்றேன். “அப்படியே செய்கிறேன். பெருந்தீனிப் பிராமணனே. ஜாங்கிரியும் ஜிலேபியும் கூட வாங்கி வருகிறேன். நீ ஜிலேபி சாப்பிட்டிருக்கிறாயா” என்றார் அவர். இல்லை என்றேன். “நாளைக்கு வாங்கி வருகிறேன் நீ கண்டிப்பாக வா” என்றார்.
“ஆனால் யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என் அம்மாவுக்கு தெரிந்தால் அவள் என்னை இங்கு வர விட மாட்டாள்” என்றேன்.
“நீ இங்கு வந்தால் உன் அம்மா உன்னை திட்டுவாளா?”
“ம்”
குசும் அவசரமாக இடைமறித்து, “அவன் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவன் குழந்தை. கண்ணா, நீ இப்போது வீட்டுக்கு போ. இந்தா உன் கச்சோடி. போகிற வழியில் சாப்பிட்டுவிட்டுப் போ” என்றாள்.
“இல்லை நான் இங்கேயே சாப்பிட்டு முடித்துவிட்டு தண்ணி குடித்துவிட்டு போகிறேன். இல்லாவிட்டால் அம்மா கண்டுபிடித்து விடுவாள்”
“நான் உனக்கு தண்ணீர் தர மாட்டேன். நீ முனிசிபாலிட்டி குழாயில் குடித்துக் கொள்.”
“அவனுக்கு குடிக்க ஒரு டம்ளர் தண்ணி கொடுப்பதால் என்ன குறைந்துவிடும்” என்றார் பாபு. குசும் அவரிடம் திட்டவட்டமாக “கொஞ்சம் அமைதியாக இருங்கள். என்னால் ஒரு பிராமணப் பையனுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது. அதுதான் இந்த பிறவியில் எனக்கான தண்டனை. என் கைப்பட நான் அவனுக்கு சாப்பிட கொடுப்பதே பெரிய பாவம்” என்றாள்.
எனக்கு குசுமின் மீது கோபம் வந்தது. குடிக்க ஒரு டம்ளர் தண்ணீர் கூட கொடுக்கக் கூடாத அளவுக்கு நான் என்ன அவ்வளவு கெட்ட பையனா! நான் அங்கிருந்து புறப்படும்போது, குசம் மீண்டும் மீண்டும் “நாளை காலையில் வா” என்று சொன்னாள். நான் பதிலேதும் பேசவில்லை.
அடுத்த நாள் காலை நான் அங்கு போகும்போது குசும் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். வா கண்ணா என்று என்னை அன்போடு வரவேற்றாள்.
“நான் உன்னோடு பேசப்போவதில்லை”
“ஏன்? என்னோடு ஏன் பேச மாட்டாய்? அப்படி நான் என்ன செய்து விட்டேன்?”
“நீ எனக்கு குடிக்க தண்ணீர் தர மறுத்து விட்டாய். நேற்று நீ எனக்கு குடிக்க தண்ணீர் தரவில்லை”
“இதுதானா விஷயம்? உட்கார் கண்ணா. உனக்கு சொன்னால் புரியாது நீ பிராமண குடும்பத்து பையன். உனக்கு நாங்கள் குடிக்கத் தண்ணீர் கொடுக்க முடியாது. புரிந்ததா? நான் இலந்தை ஊறுகாய் போட போகிறேன். உனக்கு கொஞ்சம் வேணுமா? ஊறுகாய் இன்னும் தயாராகவில்லை நான் வெல்லம் மட்டும் தான் சேர்த்திருக்கிறேன்.” இப்படியாக குசுமும் நானும் மறுபடியும் பேச ஆரம்பித்தோம். குசும் இலந்தை ஊறுகாயை என் கையில் தந்ததுமே என்னுடைய கோபத்தையும் வலியையும் நான் மறந்து போனேன். நாங்கள் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு நான் குசுமின் அறையை ஒட்டியிருந்த மாக்கனின் அறைக்குச் சென்றேன். அவளுடைய அறையில் நூற்றுக்கணக்கான பொம்மைகள் இருந்தன. மர அலமாரியில் களிமண்ணால் செய்யப்பட்ட ஆப்பிள்களும் மாம்பழங்களும் லிச்சி பழங்களும் இன்னபிற அதிசய பொருள்களும் வைக்கப்பட்டிருந்தன. அச்சசலாய் மாம்பழம்! அச்சாசலாய் ஆப்பிள்! மாக்கன் என்னை உள்ளே அழைத்தாள். ” வா கண்ணா, அந்த களிமண் பொம்மைகளை மட்டும் தொடாதே. அவை உடைந்து விடும். இங்கே வந்து உட்கார்” என்றாள்.
“நீ ஏன் புகை பிடிக்கிறாய்?”
மாக்கன் சிரித்துக் கொண்டே சொன்னாள் – ” இந்த பையன் சொல்வதைப் பாரேன். எல்லோரும் புகை பிடிப்பார்கள் தானே. அதுல என்ன அதிசயம்”
“பெண்கள் புகைபிடிப்பார்களா? என் அம்மா புகை பிடிப்பதில்லை. ஆனால் அப்பா புகை பிடிப்பதுண்டு”
“இவன் பேச்சைக் கேள்! யாருக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டோஅவர்கள் கட்டாயம் பிடிப்பார்கள்”
“குசுமின் பாபு எனக்கு சமோசா வாங்கித் தரப் போகிறார்”
“அப்படியா? ரொம்ப நல்லது!”
“உன்னுடைய பாபு எங்கே?”
“இந்தப் பையன் பேசுவதெல்லாம் கேளேன்” மாக்கண் புடவை தலைப்பால் வாயை பொத்திக்க்கொண்டு சிரித்தாள். மாக்கனுக்கு குசுமை விட வயது அதிகம் என்று தோன்றியது. அங்கிருப்பவர்களிலேயே குசும்தான் மிக அழகானவள். அவள் மாக்கனை அக்கா என்று அழைப்பாள். குசும் உள்ளே வந்து என்னை தன்னுடைய அறைக்கு கூட்டிச் சென்றாள். வேறு யாருடைய அரைக்கும் போகக்கூடாது என்றும் கண்டித்தாள். உண்மையாக சொல்வதென்றால் நான் தான் சாப்பிட ஏதாவது ருசியாக கிடைக்காதா என்று மாக்கனின் அறைக்குச் சென்றேன். ஆனால் அந்தப் பெண்களின் பாபுக்கள் எப்போது வருவார்கள் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. எனவே நான் ஏமாந்து போனேன். குசும் என்னை கடிந்து கொண்டாள். “அவர்களிடம் உனக்கு என்ன பேச்சு? நீ சின்னப் பையன். மற்றவர்களின் அறைகளுக்கு போக உனக்கு அனுமதி இல்லை. நீ இங்கேயே இரு.”
“எனக்கு பிரபாவை பார்க்க வேண்டும்”
“எதற்காக அங்கே போக வேண்டும்? அங்கு போய் என்ன சொல்வாயோ யாருக்கு தெரியும்? முட்டாள் பையா. பெருந்தீனிப் பண்டாரமே. இப்போது தானே உனக்கு இலந்தை ஊறுகாய் கொடுத்தேன்”
நான் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு ஆச்சரியத்துடன்”நான் யாரிடமும் எதுவுமே கேட்பதில்லை. வேண்டுமானால் பிரபாவிடம் நீயே கேட்டு பார்த்துக் கொள்” என்றேன்.
“போகட்டும். நீ பிரபாவின் அறைக்கு போகக்கூடாது.”
“நான் ஒரே ஒரு முறை போய்விட்டு வரட்டுமா? உடனே வந்து விடுவேன்”
உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் பிரபாவினரைக்கு போவதற்கான முக்கிய காரணம் தின்பண்டம் அல்ல. அங்கிருந்த கிளி. கிளி எப்போதும் “ராம் ராம்! யாரது? இங்கிருந்து போய்விடுகள். சித்தி சித்தி” என்று அழைக்கும். நான் உள்ளே நுழையும் போதெல்லாம் “யாரது யாரது” என்று கேட்கும்.
“என் பெயர் வாசுதேவ்”
“யாரது யாரது”
எனக்கு சிரிப்பு வந்தது. கிளிப்பேச்சு கேட்பது மிகவும் வேடிக்கையாக இருந்தது. அது மனிதர்களைப் போலவே பேசியது.
“யாரது யாரது”
“அறைக்குள் யார் வந்தது?” சமைத்துக் கொண்டிருந்த பிரபா கேட்டாள். பருப்பு சொட்டும் கரண்டியோடு பிரபா வெளியே ஓடி வந்தாள்.
“என்னை அடிக்கப் போகிறாயா?”நான் சிரித்துக் கொண்டே கேட்டேன.
” ஓ! பைத்தியக்கார பிராமணச் சிறுவனா? இந்த மதிய வேளையில் யார் வந்திருப்பார்கள் என்று நான் ஆச்சரியப்பட்டேன்”
“உங்கள் வீட்டில் இலந்தை ஊறுகாய் இருக்கிறதா? குசுமின் வீட்டில் இருக்கிறது. எனக்கு அவள் கொஞ்சம் ஊறுகாய் கொடுத்தாள். மிகவும் சுவையாக இருந்தது.”
“குசுமின் பாபு பணக்காரர். எனக்கு அப்படி யாரும் இல்லை. பின் நான் எப்படி மாங்காய் ஊறுகாயையும் இலந்தை ஊறுகாயையும் தயாரிக்க முடியும்?
“குசுவின் பாபு எனக்கு சாப்பிட கோஜா வாங்கி தரப் போகிறார்”
“ஏன் வாங்கி தர மாட்டார். நாற்சந்தியில் இருக்கிற பெரிய மிட்டாய் கடையைத்தான் அவர் குசும் பெயரில் எழுதி வைத்திருக்கிறாரே! சரி விடு! நான் பிறந்ததே வேஸ்ட். இதற்கு பதிலாக நான் இறந்திருக்கலாம்.”
” தயவுசெய்து என் மீது கோபித்துக் கொள்ளாதே” நான் சற்று தயக்கத்துடன் பிரபாவிடம் சொன்னேன்.
“இல்லை. நான் எதற்கு உன் மீது கோபப்பட வேண்டும்? வருத்தமாக இருந்தது. அவ்வளவுதான். நானும் ஒரே ஒரு நபருக்கு மட்டும் துணைவியாக இருந்தவள் தான். நாங்கள் யாரும் சுலபமாக மிதந்தபடியே இங்கு வந்து விடவில்லை. என்னுடைய அதிர்ஷ்டம் தீர்ந்து போனதும் 15 வயதில் நான் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்.”
“நீ ஏன் வீட்டை விட்டு வெளியே வந்தாய்?”
“இந்த சோகக் கதை எல்லாம் உன்னிடம் ஏன் சொல்ல வேண்டும்? அதனால் உனக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? அடுப்பில் வைத்த பருப்பு தீய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. வெறும் பேச்சு வயிற்றையா நிரப்பும்?”
“நான் போகவா?”
“சமையலறைக்குள் வா”
பிரபா சற்று பருத்த தேகம் கொண்டவள். கரிய நிறம். மூக்கின் மீது ஒரு பெரிய மரு இருந்தது. அவள் ஒரு நாள் எனக்கு சுடச்சுட ஜிலேபியும் அரிசிப் பொரியும் சாப்பிடத் தந்தாள். கூண்டில் இருந்த வளர்ப்பு கிளியைத் தவிர அவளுடைய அறையில் அதிக சாமான்கள் இல்லை. பிரபா ஊகக்காய் பழத்தை துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாள். பளிங்கு பாத்திரத்தில் அவை கொதித்துக் கொண்டிருந்தன. கிராமத்தை விட்டு புறப்பட்ட நாளாக நான் ஊகக் காயை ருசி பார்க்கவில்லை. இந்த சமயத்தில்தான் குளக்கரையை ஒட்டி இருக்கும் மரத்தில் ஊகக்காய்கள் பழுத்து வெடித்திருக்கும்.
“ஊகக்காய் உனக்கு எங்கிருந்து கிடைத்தது?
“கடைத்தெருவிலிருந்து தான். வேறு எங்கிருந்து கிடைக்கும்?”
“பார்ப்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும் போலத் தெரிகிறது”
பிரபா பதில் ஏதும் பேசாமல் சமையலைத் தொடர்ந்தாள்.
“உன்னுடைய பெற்றோர்கள் எங்கு இருக்கிறார்கள்?”
“என்னுடைய பாவப்பட்ட வாயால் நான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது”
“நீ உன் வீட்டுக்கு போக மாட்டாயா?”
“எந்த வீட்டுக்கு?”
“கிராமத்தில் இருக்கிற உன்னுடைய வீட்டுக்கு தான்”
“நான் நரகத்தில் இருக்கும் என்னுடைய வீட்டுக்கு தான் போவேன்”
“உன்னுடைய கிராமத்தில் இலந்தை மரங்கள் உண்டா? எங்கள் கிராமத்தில் நிறைய உண்டு”
பிரபா எந்த எதிர்வினையும் ஆற்றாமல் சமையலைத் தொடர்ந்தாள். சற்று நேரம் கழித்து சமைப்பதற்காக உபயோகப்படுத்திய மண் சட்டியை ஒரு பாத்திரத்தை கவிழ்த்து மூடினாள். தனக்கு தேநீர் தயாரித்துக் கொண்டு அதை ஒரு கண்ணாடி டம்ளரில் தன் புடவையால் சுற்றி உறிஞ்சி குடித்தாள். நானும் தேநீர் குடிக்க விரும்புகிறேனா என்று அவள் என்னிடம் கேட்கவில்லை. நான் தேநீர் குடிப்பதில்லை. தேநீர் குடிக்க அனுமதி இல்லை. மேலே படியும் ஆடையை மட்டும்தான் நான் சாப்பிட முடியும். பிரபா அவளுடைய கிராமத்து வீட்டில் இருந்த பசு மாடுகளைப் பற்றி என்னிடம் பேச ஆரம்பித்தாள். பசுமாடுகள் எவ்வளவு பால் கொடுத்தன என்பது பற்றியும் அவளுடைய வீட்டை யடுத்து இருந்த குளத்தில் மீன்கள் நிறைந்திருந்ததைப் பற்றியும் அவள் சொன்னாள். அவளால் அவை எவற்றையும் மறுபடியும் பார்க்க முடியாது. பிறகு பிரபா எப்போதும் இல்லாத ஒன்றைச் செய்தாள். கொஞ்சம் சோறும் ஊகக்காயும் சாப்பிடுகிறாயா என்று என்னிடம் கேட்டாள். ‘எனக்கு சாப்பிட விருப்பம் தான் ஆனால் குசுமுக்கு தெரியக்கூடாது’ என்றேன். பிரபா சிரித்துக் கொண்டே ‘நீ குசுமிடம் ஏன் இவ்வளவு பயப்படுகிறாய்? அவள் கண்டுபிடித்தால் என்ன ஆகிவிடும், இப்போது சாப்பிடு’ என்றாள். நான் சோற்றோடு ஊகக்காயை கலந்து அப்போதுதான் பிசைய ஆரம்பித்திருந்தேன்.அதற்குள் குசுமின் குரல் கேட்டது. “அந்த பிராமணச்சிறுவன் உங்கள் வீட்டில் இருக்கிறானா பிரபாக்கா? அவன் இங்கு வந்து ரொம்ப நேரம் ஆகிறது. அவனை வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும். அவன் இந்த பகுதியில் வசிப்பவன் இல்லை” என்றாள். நான் சமையலறையின் மூலைக்குச் சென்று ஒளிந்து கொண்டேன். என் கையில் சோற்றுப் பருக்கைகள் ஒட்டிக்கொண்டிருந்தன. பிரபா பதில் ஏதும் சொல்வதற்கு முன்பே குசும் வீட்டிற்குள் நுழைந்தாள். என்னை பார்த்து விட்டாள். “என்ன இது! நீ ஏன் மூலையில் ஒளிந்து கொண்டிருக்கிறாய்? இந்த தட்டில் சாப்பாடு யாருக்காக வைத்திருக்கிறது? என்று கேட்டாள். பிறகு பிரபாவை நோக்கி திரும்பி, ” பிரபா அக்கா அவன் ஒரு குழந்தை அவனுக்கு ஒன்றும் தெரியாது. உங்களுக்குமா தெரியவில்லை? நீங்கள் எப்படி அவனுக்கு உணவு கொடுக்க முடியும்? என்றாள். பிரபா தயக்கத்துடன் “அவன் ஊகக் காயை பற்றி பேசிக்கொண்டே இருந்தான். அதனால்தான் கொஞ்சம் சோற்றோடு….”
” மானக்கேடு. என்னோடு வா கண்ணா. ஏற்கனவே வாழ்நாள் முழுவதுமான சாபங்களை நாங்கள் சுமந்து கொண்டு திரிகிறோம். ஒரு பிராமணச் சிறுவனுக்கு உணவு கொடுத்து என் பாவம் மூட்டையை நான் அதிகப்படுத்தி கொள்ளப் போவதில்லை. வா போகலாம். உன் விரல்களில் சோறு ஒட்டிக் கொண்டிருக்கிறதா? நீ சாப்பிட ஆரம்பித்து விட்டாயா?”
நான் தயக்கத்துடன் இல்லை என்று தலையசைத்தேன்.
“என்னோடு வா. உன் கைகளை அலம்பி விடுகிறேன்”
குசம் என்னை அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படுகையில், ப்ரபா “பாவம் அவன். நீ அவனை சாப்பிட விடவில்லை. அவன் இன்னும் சாப்பிட ஆரம்பிக்க் கூட இல்லை” என்றாள்.
“இருக்கட்டும் சாப்பிட வேண்டிய தேவையில்லை. நீ வா என்னோடு” என்று குசும் என்னை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். குசும் என் அம்மாவை விட கறாராக இருந்தாள். நான் சாப்பாட்டை விட்டுவிட்டு அவளுடன் வர வேண்டியதாயிற்று. வீட்டின் மூலைக்கு அழைத்துச் சென்று என் கைகளை அலம்பிவிட்டபடியே, “நீ ஏன் இவ்வளவு பரக்காவட்டியாக இருக்கிறாய் கண்ணா? நீ இங்கு சாப்பிடக்கூடாது என்பது உனக்கு ஞாபகம் இல்லையா மானக்கேடு! வெட்கமாக இல்லை? சாயங்காலம் நான் உனக்கு சாப்பிட கச்சோடி தருவேன். ஆனால் நீ அந்த வீட்டில் ஒருபோதும் சாப்பிடக்கூடாது. நீயாவது ஒன்றும் தெரியாத குழந்தை, ஆனால் அவள் எல்லாம் தெரிந்தவள் தானே? எப்படி ஒரு பிராமண சிறுவனுக்கு அவள் சாப்பாடு கொடுக்க முடியும்? …. உண்மையிலேயே இவர்கள் செய்வதை எல்லாம் பார்த்தால்….
நல்லவேளை ப்ரபாவால் இது எதையும் கேட்க முடியவில்லை. அவள் அருகில் கூட இல்லை.
“தயவுசெய்து என் அம்மாவிடம் எதையும் சொல்லி விடாதே” என்றேன்.
“உன் அம்மாவிடம் இதை எல்லாம் நான் சொல்வேன் என்று நினைக்கிறாயா? எனக்கு செய்வதற்கு வேறு பல முக்கியமான வேலைகள் இருக்கின்றன.”
அம்மாவிடம் சொன்னால் அவள் என்னை பிளந்து கட்டி விடுவாள்”
“உனக்குத் தேவை தான் அது. அப்போதுதான் உன் பேராசை அடங்கும்”
நான் வீடு திரும்பியதும் அம்மா நான் எங்கே போயிருந்தேன் என்று கேட்டாள். தெருவில் தான் விளையாடிக் கொண்டிருந்ததாகச் சொன்னேன். வேறு எங்காவது போயிருந்தேனா என்று அம்மா கேட்டதற்கு நான் இல்லை என்று பதில் அளித்து விட்டேன்.
ஆனால் ஒரு நாள் நான் வசமாக மாட்டிக் கொண்டேன். அது கூட குசுமின் தவறால் தான் நாம் கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம் நீயும் கூட வருகிறாயா என்று அவள் என்னிடம் கேட்டாள். அது ஒரு பின் மதிய நேரம். அதிகம் வெயிலாக இல்லை. நாங்கள் ட்ராம் லைனை கடக்கும் போது நான் ‘அம்மா என்னை தெருவைக் கடக்க அனுமதிக்க மாட்டாள். நான் ஒரு போதும் தெருவை கடந்து போகக்கூடாது என்று சொல்லி இருக்கிறாள்’ என்று குசுமிடம் பயந்தபடியே சொன்னேன். ” அதனாலென்ன, நான் தான் உன் கூட வருகிறேனே கவலைப்படாதே’ என்றாள் குசும்.
பிரதான சாலையைக் கடந்து கொஞ்ச தூரம் போன பிறகு நாங்கள் குடிசைகள் இருந்த சேரிப் பகுதிக்குள் நுழைந்தோம். குறுகலான தெருவின் இருபுறமும் குடிசை வீடுகள் இருந்தன. நாங்கள் நுழைந்த கட்டிடத்திற்குள்ளும் பெண்கள் தான் நிறைந்திருந்தார்கள். ஒரு ஆண் கூட தென்படவில்லை. அவர்களில் ஒரு பெண் குசுமைப் பார்த்ததும் ” வா குசம். எவ்வளவு நாள் ஆயிற்று உன்னை பார்த்து! நமக்கு ஆண்பிள்ளை துணை இல்லாவிட்டால் என்ன? அதற்காக நீ எங்களை ஒரேயடியாக மறந்து விட வேண்டுமா ?” என்றாள். என்னைப் பார்த்து” யார் இந்த சிறுவன்? அழகாக இருக்கிறானே” என்றாள்.
“இவன் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்கள் தெருவில் தான் வசிக்கிறான். நான் போகும் இடமெல்லாம் என் பின்னாலேயே வருவான்”
” அப்படியா? நல்லது. உட்காரு கண்ணா”
“இவன் ஒரு பெருந்திணிக்காரன். சாப்பிடக் கொடுத்தால் போதும். மிகவும் சந்தோஷப்படுவான்”
“ஓ அப்படியா! உனக்கு நான் என்ன தரட்டும்? என்னிடம் இலந்தை ஊறுகாய் இருக்கிறது. உனக்கு பிடிக்குமா?”
எனக்கு இலந்தை ஊறுகாய் மிகவும் பிடிக்கும் என்று நான் எதையும் யோசிக்காமல் சட்டெ ன்று உளறி விட்டேன். குசும் என்னை முறைத்துப் பார்த்தாள். “உனக்கு பிடிக்காத உணவுப் பண்டமே எதுவும்கிடையாதா” என்று கோபமாக கேட்டாள். பிறகு எனக்கு சளி பிடித்திருப்பதாகவும் நான் ஊறுகாய் சாப்பிட கூடாது என்றும் எனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் அவளே என்னைக் கேட்காமலேயே மறுத்துவிட்டாள்.
எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. குசும் என்னை இலந்தை ஊறுகாய் சாப்பிட அனுமதிக்கவில்லை. எனக்கு எப்போதிலிருந்து சளி பிடித்திருந்தது? எனக்கு இலந்தை ஊறுகாய் ரொம்ப பிடிக்கும். அந்த வீட்டில் சற்று நேரம் இருந்துவிட்டு நாங்கள் வேறொரு வீட்டிற்குச் சென்றோம். அவர்களும் என்னை பற்றி பல கேள்விகள் கேட்டார்கள். அங்கு எனக்கு வீட்டிலேயே தயாரித்த அல்வா ஒரு கிண்ணத்தில் வழங்கப்பட்டது. குசும் அதையும் என்னை சாப்பிட விடவில்லை. எனக்கு அஜீரணத் தொந்தரவு இருப்தாகச் சொல்லி விட்டாள். மாலை இருட்டுவதற்கு முன்பு குசும் என்னை ட்ராம் லைனைத் தாண்டி பத்திரமாகக் கூட்டி வந்தாள். தூரத்தில் ஒரு டிராம் வண்டி வந்து கொண்டிருந்தது. நான் குசுமிடம் “கொஞ்சம் இரு. எனக்கு இந்த ட்ராம் வண்டியைப் பார்க்க வேண்டும்” என்றேன்.
“இருட்டாகிக் கொண்டிருக்கிறது உன் அம்மா உன்னை வையப் போகிறாள்”
“வையட்டும்”
“ஓ! பயலுக்கு ரொம்ப தைரியம் வந்துவிட்டதோ!”
“நீ ஏன் அப்படிச் சொன்னாய் குசும்? நீ என்னை ஏன் இலந்தை ஊறுகாய் சாப்பிட அனுமதிக்கவில்லை? நான் சாப்பிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள் தெரியுமா?”
“நீ குழந்தை. உனக்கு என்ன தெரியும்? அந்த இடத்தில் வசிப்பவர்களுக்கு பயங்கரமான வியாதிகள் இருக்கும். உனக்கு அவர்கள் எதையேனும்சாப்பிடக் கொடுப்பதை நான் அனுமதிப்பேன் என்று நீ எப்படி நினைத்தாய்? நீ விரும்பும் இடத்தில் எல்லாம் சாப்பிட முடியுமா? உனக்கு ஒரு மண்ணும் தெரியாது. அவர்களில் சிலருக்கு என்னென்ன வியாதிகள் இருக்கும் என்று உனக்கு தெரியுமா?”
“ஆண்பிள்ளை துணை என்றால் என்ன குசும்?”
“ஒன்றுமில்லை. நீ எங்கே அதைக் கேட்டாய்?”
“அவர்கள் உன்னிடம் சொன்னார்களே?”
“சொன்னால் சொல்லட்டும். அதற்கு உனக்கும் என்ன சம்பந்தமடா குறும்புக்கார பயலே?”
என்னை வீட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு முன், “பாபு கச்சோரி வாங்கி வந்திருப்பார், வீட்டுக்கு வா” என்றாள்.
“வருகிறேன். எனக்கும் பசிக்க ஆரம்பித்துவிட்டது “
“உனக்கு பசி இல்லாத நேரம் என்று ஏதேனும் ஒன்று உண்டா? உன் அம்மாவை எப்போதாவது பார்க்க நேரிட்டால் நான் அவளிடம் உன் மகன் ஏன் எந்நேரமும் பேராசை பிடித்த பரக்காக்காவட்ட்டியாக இருக்கிறான் என்று கண்டிப்பாக கேட்கப் போகிறேன்.”
“நான் அப்படியே இருந்து விட்டு போகிறேன், நீ எனக்கு கச்சோடி கொடுப்பாய் தானே?”
“வா”
” உன்னுடைய பாபு சமோசாவும் வாங்கி வந்திருப்பாரா?”
“எனக்கு தெரியாது”
“நீ நாளைக்கு எனக்கு சமோசா தருவாயா?”
“ஆகட்டும். கண்டிப்பாக தருகிறேன். இப்போது இந்த கச்சோடியை எடுத்துக் கொண்டு ஆளை விடு”
அன்று மாலை குசும் என் கூட முனிசிபாலிட்டி குழாய் வரை வந்து என்னை வீட்டில் விட்டுவிட்டுத் திரும்பினாள்.
நான் குசும் வீட்டிற்கு சென்றதையும் அவள் எனக்கு சாப்பிட கச்சோடி கொடுத்ததையும் மறைக்காமல் அம்மாவிடம் சொல்லிவிட்டேன். அம்மா என்னை வெகுவாக கடிந்து கொண்ட தோடல்லாமல் என்னை வீட்டிலேயே கட்டிப் போட்டு விடுவேன் என்றும் பயமுறுத்தினாள். அன்றிரவு அம்மா அப்பாவிடம் கூட இதைப்பற்றி சொன்னாள். ஆனால் அவர் அதை காது கொடுத்து கவனமாக கேட்கவில்லை.
* * *
அடுத்த நாள் காலையில் எனக்கு ஜுரம் வந்துவிட்டது. நான்கைந்து நாட்கள் படுத்த படுக்கையாக இருக்கும்படியானது. வயதான மருத்துவர் ஒருவர் வந்து என்னை பரிசோதித்து விட்டு மருந்துகள் எழுதிக் கொடுத்தார். ஜன்னலுக்கு அருகே எனக்கு படுக்கை விரிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் மதியம் எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறம் நின்று கொண்டு குசும் உள்ளே எட்டிப்பார்த்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவளுடன் மாக்கனும் நின்று கொண்டிருந்தாள். அவர்கள் இரண்டு வீடு தள்ளி நின்று கொண்டிருந்தனர். நான் குசுமை பெயர் சொல்லி அழைத்தேன். அவள் திரும்பிப் பார்த்து மாக்கனிடம் “அக்கா அதோ அந்த வீடுதான் போலிருக்கிறது” என்றாள். என் அம்மா முனிசிபாலிட்டி குழாயருகே நின்று கொண்டிருந்தாள். குசுமும் மாக்கனும் ஜன்னலருகே வந்தார்கள். ” உனக்கு என்ன ஆயிற்று? நீ ஏன் இவ்வளவு நாட்களாக வரவில்லை?”என்று குசும் கேட்டாள். அந்தப் பையனுக்கு என்ன ஆகிவிட்டதோ என்று குசும் ஒரேடியாக கவலை பட்டாள் என்றும், வா நாம் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று மாக்கன் தான் அவளை அழைத்துக்கொண்டு வந்ததாகவும் சொன்னாள். எனக்கு கடந்த நான்கைந்து நாட்களாக ஜுரமாக இருந்தது என்று சொன்னேன். குசும் என்னிடம் அம்மா எங்கே என்று கேட்டாள்.
“இங்கிருந்து போய்விடு குசும். என் அம்மா உன்னை பார்த்து விட்டால் என்னை உன் வீட்டிற்கு இனி ஒருபோதும் வர விட மாட்டாள். உடல்நிலை சரியானதும் நானே வருகிறேன். இப்போது நீ இங்கிருந்து போய் விடு”
அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். ஆனால் அடுத்த நாளே குசும் மறுபடியும் தெருவில் வந்து நின்றாள். அவள் என்னிடம் மிகவும் மெதுவாக நான் வரலாமா என்று கேட்டாள். அப்போது அம்மா வீட்டில் இருந்திருக்கவில்லை. அம்மா பைத்தியநாத் கடையில் பருப்பு வாங்க சென்றிருப்பது எனக்குத் தெரியும். சற்று நேரம் முன்பு தான் வீட்டை விட்டுச் சென்றிருந்தாள். புறப்படுவதற்கு முன் பூனை என் குட்டி கண்ணனுக்காக வைத்திருக்கும் பாலை குடிக்காமல் பார்த்துக் கொள்ளும்படியும் தான் பைத்யநாத் கடையில் பருப்பு வாங்கச் செல்வதாகவும் என்னிடம் கூறி விட்டுதான் சென்றிருந்தாள். நான் கையசைத்து குசுமை அருகே வரும்படி அழைத்தேன். அவள் ஜன்னலுக்கு அருகே வந்து நின்றாள்.
“எப்படி இருக்கிறாய்?”
“முன்னிருந்ததை விட வெகுவாக குணமடைந்திருக்கிறேன். நாளையிலிருந்து நான் சோறு சாப்பிட முடியுமாம்”
“நான் உனக்காக கொஞ்சம் ஆரஞ்சு பழங்கள் வாங்கி வந்திருக்கிறேன். வேண்டுமா?”
“சீக்கிரமாகக் கொடு”
“சாப்பிட மறந்து விடாதே”
“மறக்க மாட்டேன்.”
“உடம்பு சரியானதும் வீட்டுக்கு வா”
“கண்டிப்பாக வருகிறேன்”
“நாளை சோறு சாப்பிட போகிறாயா?”
“அப்பா அப்படித்தான் சொன்னார்”
“நான் நாளை மறுபடியும் வருவேன் சரியா?”
“வா. ஆனால் நான் சொல்லும் வரை ஜன்னல் அருகே வந்து விடாதே.”
“சரி நான் பொறுமையாக தெருவில் காத்து நிற்கிறேன். உனக்கு விசில் அடிக்க தெரியுமா?”
“தெரியாது. நான் கையாட்டும்போது வா”
சொன்னபடியே குசம் அடுத்த இரண்டு நாட்களும் மதிய நேரத்தில் வந்தாள். பிரபாவும் என்னைப் பார்க்க விரும்பியதால் ஒருநாள் அவள் பிரபாவையும் அழைத்துக் கொண்டு வந்தாள். நான் பொய் சொல்ல மாட்டேன். பிரபாவும் எனக்கு ஆரஞ்சுப் பழங்கள் வாங்கித் தந்தாள். நான் அவற்றை தலையணைக்கு அடியில் ஒளித்து வைத்துக்கொண்டடேன். அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் தின்றுவிட்டு தோலை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்.
உடல் குணமான பிறகு நான் இரண்டு முறை குசுமின் வீட்டிற்கு போனேன். திடீரென ஏதேதோ நடந்துவிட்ட காரணத்தால் நாங்கள் கல்கத்தா வீட்டை காலி செய்துவிட்டு கிராமத்திற்கு திரும்ப வேண்டி இருந்தது. ஒருநாள் என் அம்மா சோடா பாட்டிலைத் திறக்க முயற்சித்த போது கூர்மையான கண்ணாடி அவளது கையை பதம் பார்த்து விட்டது. அவளுடைய மணிக்கட்டிலிருந்து ரத்தம் எல்லா பக்கமும் வழிந்து கொண்டிருந்தது. கோடி வீட்டில் இருந்த பிபின் பாபு தான் ஏதோ மருந்தை வைத்து கட்டி விட்டார். ஆனால் அம்மாவின் கைக் காயம் குணமாகவில்லை. நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேயிருந்தது. அம்மாவால் சமைக்கக்கூட முடியாமல் போனது. அம்மா ஒவ்வொரு இரவும் வலியால் துடித்து அழுதாள். மருத்துவர் தினமும் வந்து அம்மாவை கவனித்தார. என்னுடைய தாய் மாமாக்கள் மிகவும் வசதியானவர்கள். கடிதம் வாயிலாக அவர்கள் விஷயத்தை கேள்வி பட்டதும் மாமாக்களில் ஒருவர் வந்து எங்கள் அனைவரையும் அவருடைட வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இது நடந்தது ஜூலை மாத நடுவில். அப்போது பனை மரத்தில் பழங்கள் பழுக்க ஆரம்பித்திருந்தன. என் தாய் மாமாக்கள் வசித்து வந்த கிராமத்தில் வயலை அடுத்திருந்த குளக்கரையில் நிறைய பனை மரங்கள் இருந்தன. கிராமத்துக்கு போன முதல் நாளே பழுத்த பனம்பழம் ஒன்றை கண்டெடுத்தது எனக்கு இன்னமும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. இங்கு வந்ததும் அம்மாவின் கை குணமாக ஆரம்பித்தது. செப்டம்பர் மாத நடுவில் நாங்கள் எங்கள் கிராமத்துக்குச் சென்றோம். எங்களால் கல்கத்தா திரும்பிச் செல்ல முடியவில்லை. அப்பா அங்கிருந்த வீட்டை காலி செய்து கொண்டு கிராமத்துக்கு திரும்பினார்.
* * *
30 வருடங்களுக்குப் பிறகு நான் கல்கத்தாவில் குமாஸ்தா வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தேன். மனைவியும் குழந்தைகளும் கிராமத்து வீட்டில் வசித்து வந்தனர். ஒரு விடுமுறை நாளில் என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் ஸ்ரீபதியுடன் நான் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது, அவன், நேற்று மாலை நான் பிரேம்சந்த் போரால் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது தெருவின் இருபுறமும் மிகையான அலங்காரத்துடன் முகங்கள்- பார்க்கவே மிகவும் அசிங்கமாக இருந்தது” என்றான்.
“நானும் அவர்களை பார்த்திருக்கிறேன். எனக்கும் அதே வழியாகத் தான் போகவேண்டும். ஆனால் நான் அவர்களை வேறு விதமாக பார்க்கிறேன். எனக்கு அவர்களை மிக நன்றாகத் தெரியும். ஒரு காலத்தில் நான் அவர்களுடைய வீடுகளுக்கு அடிக்கடி செல்வதுண்டு.”
என் நண்பன் ஆச்சரியத்துடன் நம்பிக்கையின்றி “நீயா!” என்றான்.
“ஆம்! நானே தான். உண்மையாகத்தான் சொல்கிறேன்!”
“அபத்தம்! இதை நான் நம்பவில்லை!”
” ரொம்ப நல்லது. என்னோடு வா நான் உனக்கு நிரூபித்து காட்டுகிறேன்”
15 வருடங்களுக்கு முன்பு நான் நந்த்ராம் சென் தெருவுக்கு வழியை தேடி கண்டுபிடித்துக் கொண்டு சென்றேன். அங்கு மாக்கணை அவளது வீட்டில் சந்தித்தேன். அப்போது குசுமோ பிரபாவோ அங்கு இருந்திருக்கவில்லை. அவர்களுடைய குழுவில் மாக்கன் ஒருத்தி மட்டும் தான் அந்த தெருவில் இன்னும் வசித்து வந்தாள். நான் ஸ்ரீபதியை நந்தராம் சென் தெருவுக்கு அழைத்துச் சென்றேன். மாக்கன் இன்னமும் அங்குதான் தங்கி இருந்தாள். முடி நரைத்து பற்கள் எல்லாம் விழுந்து பார்க்க சூனியக்காரியைப் போலத் தோற்றமளித்தாள். என்னைப் பார்த்ததும் மாக்கன் உள்ளே வா என்று அழைத்தாள்.
“எப்படி இருக்கிறாய்? உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா?”
“கடவுளே! எனக்கு உன்னை எப்படி அடையாளம் தெரியாமல் போகும்! எங்கள் கண் முன்னால் வளர்ந்தவன் அல்லவா நீ! அது இருக்கட்டும் குசும் எங்கே இருக்கிறாள் என்று நான் கண்டுபிடித்து விட்டேன்”
“எங்கே? எங்கே இருக்கிறாள் அவள்?”
“ஷோபா பஜார் தெருவில் ஒரு விருந்தினர் இல்லத்தில் வேலைக்காரியாக இருக்கிறாள். இடக்கை பக்கம் முதல் கட்டிடம். கோவிலை ஒட்டி இருக்கும் இடிந்து போன மாடி வீடு. என்னுடன் இருப்பவர்கள் ஒருநாள் என்னை கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போதுதான் நான் அவளைக் கண்டுபிடித்தேன்”
ஸ்ரீபதி என் பின்னோடு வர நான் அந்த விருந்தினர் இல்லத்தை கண்டுபிடித்தேன். அப்போது மாலை நேரம் நெருங்கி இருக்கவில்லை. அந்த விருந்தினர் இல்லத்தின் தரைத்தளத்தில் இருந்த சமையலறையின் பொறுப்பாளரிடம் இங்கு வேலை செய்யும் பெண்மணி எங்கே என்று கேட்டேன்.
“அவள் கடைத்தெருவுக்கு சென்று இருக்கிறாள் சீக்கிரம் வந்து விடுவாள். ஏன் கேட்கிறீர்கள்?”
“எனக்கு அவளுடன் பேச வேண்டும். அவள் பெயர் குசும் தானே?”
“ஆமாம் சார்.”
சிறிது நேரத்தில் உயரமான, மெலிந்த, முற்றிலும் வேலைக்காரியை போலத் தோற்றமளிக்கும் ஒரு பெண்மணி சமையலறக்குள் வந்தாள். சமையல்காரர் நாங்கள் அவளை சந்திக்க காத்திருப்பதாக அவளிடம் தெரிவித்தார்.
நான் அந்த வேலைக்கார பெண்மணியை ஆச்சரியத்துடன் பார்த்தேன். என்னுடைய பால்ய காலத்து அழகி குசுமா இப்படி அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாள்! குசுமுக்கு மாக்கன் அளவுக்கு வயதாகாத போதிலும் அவள் இப்போது நிச்சயமாக முதுமை அடைந்திருந்தாள். அவளை வேறு எப்படியும் வர்ணிக்க முடியாது. எனக்கு அவளுடைய முகம் ஞாபகம் இருந்தது. ஆனால் இந்த வயோதிக பெண்மணிக்கும் அந்த முகத்துக்கும் பொதுவான அம்சம் என எதுவுமே இல்லை. சமையல்காரர் எங்களுக்கு சொல்லி இருக்காவிட்டால் இதுதான் அந்த பழைய குசும் என்று நான் ஒருபோதும் நம்பி இருக்க மாட்டேன். குசுமும் எங்களை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து, “என்னைப் பார்க்கவா வந்திருக்கிறீர்கள் உங்களை யார் அனுப்பியது?” என்று கேட்டாள்.
“மாக்கன் அனுப்பினாள்”
“யார் மாக்கன்?”
“நந்த்ராம் சென் தெரு வீட்டுச் சொந்நக்காரி.”
“ஓ! அப்படியா! ஆனால் நீங்கள் எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்?”
“இங்கே வாருங்கள். உங்களிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்.”
“நாம் சாப்பாட்டு அறைக்கு போய்விடலாம்”
சாப்பாட்டு அறையில் நான் அவளிடம் ” என்னை அடையாளம் தெரியவில்லையா குசும்?” என்று கேட்டேன்.
“இல்லை சார்”
“நாங்கள் நந்த்ராம் சென் தெருவில் தான் வசித்து வந்தோம். அப்போது எனக்கு எட்டு வயது. என் பெற்றோர் முடி திருத்துபவருடைய வீட்டில் குடியிருந்தார்கள். ஞாபகம் வருகிறதா?”
குசம் சிரித்துக் கொண்டே”எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நீதான் அந்த பைத்தியக்கார பிராமணச் சிறுவேனா? எப்படி வளர்ந்து விட்டாய்! உன்னுடைய பெற்றோர் உயிரோடு இருக்கிறார்களா?”
“யாரும் எப்போது உயிரோடு இல்லை”
“உனக்கு எத்தனை குழந்தைகள்?”
“ஐந்து “
“உட்காரு கண்ணா உட்காரு!”
சிறிது நேரம் எங்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு குசும் எங்களை காத்திருக்கச் சொல்லிவிட்டு எங்கோ மறைந்து போனாள். கொஞ்ச நேரத்தில் இரண்டு பொட்டலங்களை எடுத்துக்கொண்டு வந்து அவற்றை எங்களிடம் கொடுத்தாள். எனக்கு அப்போது எதுவும் அதிகமாக ஞாபகம் இருந்திருக்கவில்லை, ஆனால் நான் பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்தவுடன் அனைத்தும் தெளிவாக நினைவுக்கு வர ஆரம்பித்தது. நான்கு பெரிய பெரிய பெருங்காய கச்சோடிகள்! சட்டென்று எனக்கு குசுமின் பாபுவும் அவர் வாங்கிவரும் பெருங்காய கச்சோடிகளும் நினைவுக்கு வந்தன. 30 வருடங்களுக்கு முன்பு கச்சோடி சாப்பிட ஆலாய் பறந்த அந்த சிறுவன் நினைவுக்கு வந்தான். குசுமுக்கும் நினைவிருந்திருக்க வேண்டும். நினைவிருந்ததா இல்லையா என்று என்னால் கணிக்க முடியவில்லை. நான் பெருங்காயக் கச்சோடியை சாப்பிட ஆரம்பித்ததும் என் நினைவுகள் பின்னோக்கி பாய்ந்தன. புழுதி படிந்த 30 வருட இடைவெளியிலிருந்து நேராக, நந்த்ராம் சென் தெருவில் முனிசிபாலிட்டி குழாய்க்கும் வெல்ல மண்டி கும் எதிராக இருந்த நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு என் நினைவுகள் பின்னோக்கி ஓடத் தொடங்கின. 25 வயது இளம் அழகியாக குசுமும் தினமும் பெருங்காய கச்சோடி கொண்டு வருகிற அவளது பாபுவும் என் நினைவுகளை பசுமையாக நிறைத்திருந்தார்கள்.
பெருங்காய கச்சோடி by பிபூதி பூஷன் பந்தோபாத்யாய. இது நிதி பத்மா என்ற பெயரில் பெங்காலியிலும் (1970) அமர் ப்ரேம் என்கிற பெயரில் ஹிந்தியிலும் (1972) திரைப்படமாக வெளிவந்தது.
‘हींग की कचौरी’ – Heeng Kochuri By Bibhutibhushan Bandyopadhyay
Publisher: SAHITYA AKADEMI
Language: Hindi
Pages: 108
Edition: 2024
ISBN: 9788119499298
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
