கொலையாளியை ஜீரணித்தவர்

மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா

தமிழாக்கம் : கார்த்திக்

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபொழுது அவர்களுடன் பயணித்த ரிஷி லோமேசர், ஒரு கட்டத்தில் அவர்களுடன் பயணிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அறிவுறுத்தினார். அவரின் ஆலோசனைப்படி தங்களுடன் பயணித்த பலருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு ஒரு சிறு குழுவுடன் தங்களது யாத்திரையை பாண்டவர்கள் தொடர்ந்தனர். அப்பொழுது ரிஷிகளில் சிறந்தவரான அகஸ்தியரின் வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு ரிஷி லோமேசர் கூறலானார்.

அகஸ்தியர் வனத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது ஒரு இடத்தில் சிலர் ஆவிகளாய் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டார். அவர்கள் அவ்வாறு தொங்கிக் கொண்டிருப்பதன் காரணத்தை அவர்களிடம் வினவினார்.

“அகஸ்தியா! நாங்கள் உன் முன்னோர்கள். நீ இன்னும் திருமணம் செய்து கொள்ளாதக் காரணத்தினால், எங்களுக்கு நீத்தார் கடன் செய்ய உனக்கு பிள்ளை இல்லை. நீ திருமணம் செய்து பிள்ளை பெறும் வரை நாங்கள் இப்படித்தான் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்” என பதில் உரைத்தனர்.

சில காலம் கழித்து குழந்தைப் பேறு இல்லாத விதர்ப அரசன் அவரிடம் வந்து குழந்தை பெற ஆசி வழங்குமாறு வேண்டினான். இணையற்ற அழகும் , சிறந்த குணமும் கொண்ட பெண் பிறப்பாள் என அகஸ்தியர் ஆசிர்வதித்தார். அந்த பெண்ணுக்குத் திருமண வயது ஆனவுடன் தனக்கே அவளை மணமுடித்து தரவேண்டும் என நிபந்தனை விதித்தார்.

அவ்வாறே தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு லோபாமுத்ரா என பெயரிட்டு வளர்த்து வந்தான் விதர்ப்ப அரசன். இணையற்ற அழகியாய் விளங்கிய லோபாமுத்ராவை திருமணம் செய்து கொள்ள பல தேசத்து அரசர்கள் விரும்பினாலும் அகஸ்தியர் மேல் இருந்த பயத்தால் யாரும் பெண் கேட்டு செல்ல துணியவில்லை. அகஸ்தியர் ஒரு நாள் விதர்ப்ப தேசத்துக்கு சென்று லோபாமுத்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டினார். அவரது வயதையும் அவர் வாழும் எளிய வாழ்வையும் எண்ணி அவருக்கு தனது மகளை மணமுடிக்க தயங்கினான் அரசன். ஆனால் லோபாமுத்ராவோ அவரது ஞானத்தையும் அறிவையும் எண்ணி அவரை மணமுடிக்க சம்மதித்தாள்.

தனது ஆடம்பரமான உடைகளை துறந்து துறவிகள் அணியும் காவி உடை அணிந்து அகஸ்தியருடன் சென்று எளிய வாழ்வை வாழத் துவங்கினாள். நாளடைவில் இருவரிடையே அன்பு பெருகத் துவங்கியது. ஆனால், தன் விருப்பத்தை நேரடியாக சொல்ல நாணி, குடியிருக்க நல்ல வீடும், உடுத்திக் கொள்ள ஆடம்பர உடைகளும் வேண்டும் என அவரிடம் கேட்டார்.

அகஸ்தியரும் பல அரசர்களிடம் சென்று தானம் கேட்டார். ஆனால், அன்றைய சூழலில் அவர் கேட்கும் தனத்தை தர எந்த அரசரிடமும் வழியில்லாமல் இருந்தது.

வில்வலன் மற்றும் வாதாபி என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். தங்களுக்கு பிடிக்காதவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். வாதாபி ஆடாய் மாற அவனை வெட்டி கறியாக விருந்துப் படைப்பர். விருந்தினர் உண்டவுடன், வில்வலன் “வாதாபி! வெளியே வா!” என அழைக்க விருந்தினரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான் வாதாபி. விருந்தினரின் செல்வம் அனைத்தையும் அபகரித்துக் கொள்வர் இருவரும்.

ஒரு முறை அகஸ்தியர் அவ்வழியே வர, அவரை விருந்துக்கு அழைத்தான் வில்வலன். அவரும் சம்மதித்து விருந்தை உண்டார். அவர் உண்டு முடித்தவுடன் வாதாபி வெளியே வருவான் என வில்வலன் காத்திருக்க அவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. வாதாபியை தான் ஜீரணித்து விட்டதாக அகஸ்தியர் கூறினார். அதைக் கேட்டு பயந்த வில்வலன், அவரை சரணடைந்து தான் கைப்பற்றிய செல்வங்கள் அனைத்தையும் அவருக்கு சமர்ப்பணம் செய்து உயிர் பிச்சைப் பெற்றான். தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற அவருக்கு தேவையான செல்வமும் கிடைத்தது.

சிலகாலம் கழித்து, லோபாமுத்ராவிற்கு அழகிய ஆண் மகவு பிறந்தது. அதன் மூலம், அவர்களது முன்னோர்களின் கடன் தீர்க்க வழியும் பிறந்தது.


சிறுமையும் பெருந்தன்மையும்

ரிஷி ரைபாயாவிற்கு இரு மகன்கள் இருந்தனர். ப்ரத்யும்னன் என்ற அரசன் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்தை நடத்தி வைக்க அவரது மகன்களான பரவசு மற்றும் அர்வவசு இருவரையும் அனுப்பித் தர வேண்டினான். ரைபாயாவும் சம்மதித்து தனது மகன்களை யாகம் நடத்த அனுப்பினார்.

யாகம் நடத்த முன்னேற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்த சமயத்தில், பரவசுவிற்கு தனது மனைவியை காண வேண்டும் என ஆவல் எழுந்தது. எனவே, தனது ஆசிரமத்திற்கு திரும்பி சென்றான். அவன் ஆசிரமத்தை நெருங்கிய நேரம், சூரியன் முழுவதும் வராத கருக்கல் நேரம். ஏதோ ஒரு கொடிய வனவிலங்கு ஆசிரமத்தை நெருங்குவது போல் தோன்ற, தன் கையில் இருந்த கனத்த தடியை அந்த உருவத்தை நோக்கி வீசினான். அதை நெருங்கி பார்த்தப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது மரவுரி தரித்திருந்த தன் தந்தையை தான் தவறுதலாக கொன்றுவிட்டது.

அப்பொழுதுதான் பாரத்வாஜ முனிவரின் சாபம் நினைவிற்கு வந்தது. பரத்வாஜ முனிவரின் மகன் யவக்ரீதா செய்த தவறுக்காக ரிஷி ரைபயா அவனை கொன்றார். மகனை இழந்த கோபத்தில் உன் மகனின் கையாலே இறப்பாய் என ரிஷி ரைபயாவிற்கு சாபமிட்டிருந்தார். அது இப்பொழுது உண்மையாகிவிட்டிருந்தது.

வேகவேகமாய் தந்தையின் இறுதி சடங்குகளை முடித்த பரவசு, அர்வவசு தங்கி இருந்த இடத்திற்கு சென்று நடந்ததை விவரித்தான். பின், தந்தையை கொன்ற பாபம் விலக நாம் பரிகாரம் செய்ய வேண்டும். அதே நேரத்தில், அரசன் நடத்தும் யாகமும் தடையின்றி நடக்க வேண்டும் எனக் கூறி அதற்கு ஒரு தீர்வையும் கூறினான். அரசனின் யாகத்தை தன்னால் தனியாக நடத்த முடியும் ஆனால் அர்வவசுவால் அவ்விதம் செய்ய முடியாது எனக் கூறி தனக்காக காட்டிற்கு சென்று பரிகாரம் செய்யக் கூறினான்.

அவன் மேல் எந்தவித சந்தேகமும் கொள்ளாத அர்வவசு அதற்கு சம்மதித்து பரிகாரம் செய்ய சென்றான். இங்கே பரவசு யாகத்தை துவங்கினான். செய்ய வேண்டிய பரிகாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிய அர்வவசுவை பார்த்தவன் பொறாமையில் பொசுங்கினான். காரணம் , தான் செய்ய வேண்டிய பரிகாரத்தை வேறொருவரை செய்ய சொன்னதால் அவன் பாவம் தீரவில்லை. அதன் விளைவாய், அவன் மனதில் தீய எண்ணம் மூண்டது. அர்வவசுவை பார்த்து “தன் தந்தையை கொன்றவன் வருகிறான். யாகம் நடக்கும் இந்த புண்ணிய இடத்தில் இத்தகைய தீய குணம் உள்ளவனை எப்படி அனுமதிக்கலாம்?” எனக் கூறினான்.

அர்வவசுவின் விளக்கங்களை கேட்க அங்கே யாரும் தயாராக இல்லை. தனது சகோதரனுக்காக பரிகாரம் செய்ததே அவனுக்கு எதிராய் திரும்ப அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டான்.

அங்கிருந்து திரும்பிய அர்வவசு, காட்டிற்குள் சென்று அகோரமாக தவம் புரியத் துவங்கினான். பலகாலம் அவன் புரிந்த தவத்தினால் மகிழ்ந்த தேவர்கள் பிரசன்னமாகி அவனிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்டனர். தவத்தினால் மனதில் இருந்த க்ரோதம் நீங்கியிருக்க “தேவர்களே! எனது தந்தையை தாங்கள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். மேலும் , என் சகோதரனின் மனதில் உள்ள க்ரோதங்கள் நீங்கி , அவனது பாபங்களையும் நீக்க வேண்டும்” என கேட்டான். அவனது பெருந்தன்மையை கண்டா தேவர்களும் அவன் கேட்ட வரத்தை வழங்கின

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை

கொக்கென நினைத்தாயோ ? பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.