பாகம் – 4
விதூஷகன் என்று ஒரு பாத்திரம் மூலம் நாடகங்களில் கதையாக சொல்ல வேண்டியவைகளை சொல்வது முறை. அதன் படி அரசன் உதயணனின் அணுக்க காவலன் போல எப்பொழுதும் உடன் இருக்கும் ஒருவன்,சொல்வதாக இந்த பகுதி ஆரம்பிக்கிறது.

‘நல்ல காலம் வருமா என்று இருந்தது. பங்காளியே பகைவனாக வந்து ராஜ்யத்தை அபகரித்தான், என் தலைவன் உதயண ராஜாவின் மனைவி மறைந்தாள் என்று வரிசையாக துன்பங்களே வந்து கொண்டிருந்தன, இவரோ மிகவும் கோமளமான குணங்கள் உடையவர். சங்கீத கலைஞர். கடவுள் கண் திறந்து விட்டார். இனி நல்ல காலமே. பத்மாவதியுடன் திருமணம் இவருக்கு பல நன்மைகளை கொண்டு சேர்க்கும். நல்ல உணவு கூட இவரை மகிழ்விக்க முடியவில்லை. உடன் இருந்த எனக்கென்று யார் தருவார்கள். இந்த விவாகம் விமரிசையாக நடக்கும். எனக்கும் நல்ல ருசியான பண்டங்கள் கிடைக்கும். இறைவா, நன்றி. அரசனுடன் எனக்கும் இங்கு உபசாரங்கள் கிடைக்கின்றன. “
ஒரு பணிப் பெண் வந்து, ஐயா, உங்களைத் தான் வெகு நேரமாக தேடிக் கொண்டிருக்கிறேன்.
விதூஷகன்: அட, என்னைக் கூட தேடும் படி அப்படி என்ன பெரிய காரியம்?
அரசன் நீராடி விட்டு வந்தவுடன், மாலை, வாசனை திரவியங்கள் முதலான அலங்காரத்துக்கான பொருட்களை எடுத்துக் கொண்டு உங்கள் இருப்பிடத்தில் கொண்டு வைத்து விட்டோம். மணமகனை மணப் பந்தலுக்கு அழைத்து வருவது உங்கள் பொறுப்பு என்பதால் மகாராணி உங்களை அழைத்து வரச் சொன்னார்.
அந்த சமயம் பத்மாவதி அவந்திகா தொடர, உபவனத்தில் நுழைகிறாள் பணிப்பெண், ராஜகுமாரி! இது என்ன? இந்த நேரத்தில் இங்கு என்ன வேலை? பத்மாவதி தோன்றிய ஏதோ காரணம் சொல்கிறாள். என் பாரிஜாத செடியில் பூக்கள் வந்து விட்டனவா ? அதை பார்க்கத்தான் வந்தேன். பணிபெண், ஆங், அதை விடுவோமா, சிவப்பு நிற காம்பும், வெண் முத்து போன்ற பூவிதழ்களும், உங்கள் சகி அவந்திகா மிகவும் விரும்பி மாலையில் தொடுத்து விட்டார்.
இருவரும் அங்கு இருந்த மேடையில் அமருகின்றனர். பாரிஜாத புஷ்பங்கள் எனக்கும் பிடிக்கும், என்ற வாசவதத்தா, ஏதோ நினைவில் ஆழ்ந்து விட்டாள். பணிப்பெண் மேலும் கை நிறைய பூக்களோடு வந்தாள். இருவருமே அவசரமாக, போதும், இன்னும் பறிக்காதே என்றனர்.
அவந்திகா பத்மாவதியை விசாரித்தாள். எல்லாம் நலம் தானே. பேசினாயா, வத்ஸ தேச அரசனுடன். பிரியமாக இருக்கிறாரா? என்றாள். பத்மாவதி, ஆமாம், பிரியமாக பேசினார். அதுவே இன்னமும் என் மனதில் நிறைந்து உள்ளது. ஆனாலும் ஒரு சந்தேகம்?
என்ன சந்தேகம்?
இதே போலத் தானே முதல் மனைவி வாஸவதத்தாவிடமும் பேசியிருப்பார்.
வாஸவதத்தா தவறுதலாக இன்னும் கூட அதிகம் இருக்கலாம். சொல்லி முடிக்கும் முன் உணர்ந்து திருத்திக் கொள்ளும் விதமாக தொடர்ந்தாள். அவள் அவருடைய மாணவி இல்லையா? நீயும் அவரிடம் வீணை கற்றுக் கொள். அதனால் நெருங்கி பழகி தெரிந்து கொள்ளவும் முடியும்.
சொன்னேன். ஆனால் பதில் எதுவும் சொல்லாமல் வெளியேறி விட்டார். எனக்கு ஏன் கேட்டோம் என்று ஆகி விட்டது. பழைய நினைவுகளில் மூழ்கி விட்டார் போலும். எனக்கெதிரில் தன் முக பாவம் மாறாமல் தவிர்க்கவே நினைத்திருக்கலாம். வீணை என்றதும், மாணவியாக வாஸவதத்தாவுடன் பழகியதும், அதைத் தொடர்ந்த நினைவுகளும் வந்திருக்கலாம். கண்கள் கசிந்ததாக எனக்குத் தோன்றியது.
நீயாக ஏன் கற்பனை செய்து வருந்துகிறாய். இருக்கலாம், வேறு காரணங்களும் இருக்கலாம். (தனக்குள், இந்த மட்டும் என்னை நினைவில் வைத்து இருக்கிறார் என்றால் நான் பாக்ய சாலி தான்.)
வத்ஸ நாட்டு அரசன் உதயணனின் அணுக்க சேவகன் வசந்தகன் என்ற விதூஷகன் (விதூஷகன் என்பவனையே வசந்தகன் என்று பொதுவாக சொல்வதும் உண்டு) குரல் கேட்கிறது. என்ன இது, இங்கு பூக்களை பறிக்கவே மாட்டார்களா? செடி கொடிகள், மரங்களில் கூட பூக்கள் மணம் விசிக் கொண்டிருக்கிறன. அழகிய உபவனம் இந்த बन्धूक पुष्प_ம் நம் அரசனுக்கு பிடிக்கும். ( இந்த மலர் நடுப் பகலில் பூக்குமாம். உச்சித் திலகம் என தமிழ் பெயர். அழகான சிவந்த அல்லது இளம் சிவப்பு வண்ணத்தில் செங்குத்தாக வளர்ந்த செடியில் நடு நடுவில் பூக்குமாம். Noon plant என்ற பெயரும் நடுப்பகலில் என்ற பொருளிலேயே அமைந்துள்ளது. ) எங்கும் இறைந்து கிடக்கிறது. இதன் அழகே அழகு.
வருக, வருக என்று அழைப்பதைக் கேட்ட அவந்திகா, பத்மாவதி உடன் இருந்த பணிப்பெண் மூவரும் திடுக்கிடுகின்றனர். என்ன இது, உதயண ராஜா வருகிறார் போலும். அவரை சந்திக்கலாமா வேண்டாமா என்ற சிந்தனை, அவந்திகா என்ன செய்வது அரசனுக்கு எதிரில் போக விரும்பவுமில்லை. அதற்குள் பத்மாவதியே நான் எதிர் கொண்டு அழைப்பேன், ஆனால் அவந்திகா தயங்குகிறாள். என்ன செய்யலாம்? அதற்குள் பணிப்பெண் அவ்விருவரும் அருகில் வராமல் செய்கிறேன் என்று சொல்லியபடி, ஒரு கொடியை அசைத்து அதில் இருந்த வண்டுகளை விரட்டுகிறாள்.
அரசன் தன் உடன் வந்த வசந்தகனிடம் சொல்கிறான். நான் உஜ்ஜயினியில் வாஸவதத்தாவை யதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. பார்த்தவுடனேயே அவள் அழகில் மனதை பறி கொடுத்தேன். முழுவதும் இதழ்கள் விரியாத புது மலர் போல இருந்தாள். மன்மதன் தான் தன் ஐந்து பாணங்களையும் ஒரே சமயத்தில் செலுத்தி என்னை ஆட்டுவித்தானே, அந்த பாணங்கள் என் மனதை துளைத்து எடுத்தனவே, இன்னமும் அவை என் மனதில் அப்படியே இருக்க, ஆறாவது பாணம் வைத்திருக்கிறானா, திரும்பவும் என் மேல் செலுத்தி சோதிக்க. வாஸவதத்தாவை பிரிந்த சோகம் என் மனதில் தீயாக வாட்டிக் கொண்டிருக்கையிலேயே, மற்றொன்றை எப்படி ஏற்றேன். தற்சமயம் பத்மாவதியையும் என்னால் அதே போல நினைக்கவும் விரும்பவும் முடிகிறது. என்ன மனிதன் நான் அல்லது இதுவும் விதியா? தெய்வங்கள் என்னை தர்ம சங்கடத்தில் மாட்டி விட்டனவா?
வசந்தகன் தனக்குள்- இளவரசி பத்மாவதி இங்கு வந்தால் நல்லது. அரசனுக்கு ஆதரவாக பேசுவாள். அரசனிடம், இந்த மேடையை பாருங்கள் அரசே! உச்சி நேரத்தில் மலர்கள் உதிர்ந்து இடையிடையே ஸூரிய கிரணங்கள் கோலம் போட்டபடி சிறுத்தை புலியின் தோலால் மூடி வைத்தது போல இருக்கிறதே. இதில் அமரலாம், வாருங்கள். இதோ சப்தபர்ணிகா ( தமிழில் ஏழிலை பாலை) கொத்தாக பூத்திருக்கின்றன. அரசே, இவை மருத்துவ குணம் கொண்டவை. இதன் பட்டைகள் கூட பயன் படும். கருமையான எழுது பலகைகள் (black board) தயாரிக்க இதன் வண்ணத் துகள்கள் பயன் படுமாம். கடுமையான கசப்பு வாசனை. தாங்க முடியவில்லை. சற்று தள்ளிச் செல்வோம். பறவைகள் கூட்டமாக தெரிகின்றன. குளம் இருப்பது போலவும், கொடி வீடு போலவும் தெரிகிறது, வாருங்கள், அங்கு அமரலாம்.
உதயணன் அருகில் வர வர குளத்தின் அருகிலிருந்து கூட்டமாக சாரஸ பறவைகள் கிளம்பி வானத்தில் பறக்கலாயின. தூய வெண்ணிறமான பறவைகள் ஒரு ஒழுங்கில் பறந்து செல்வதை சற்று நேரம் ரசித்துக் கொண்டிருந்த உதயணன், சகே இதோ பார், பலராமனின் புஜங்கள் போன்று இரண்டு பிரிவாக , அதிலும் சமமான இடைவெளியுடன் பறக்கின்றன – சில சாரஸ (நீர் வாழ் பறவைகள் பறவைகள் – வெண் கொக்கு போன்றவை) நேர்முகமாக, சில வளைந்து ஏதோ சித்திரம் வரைவது போல, சில திரும்பி சப்தரிஷி மண்டலம் வானத்தில் தெரிவதை தாங்களும் செய்து பார்க்கின்றன போலும் என்றான். சட்டையை உரித்து போட்ட சர்ப்பத்தின் அடி வயிறு போன்ற வெளிர் நிறம், கோடு போட்டது போல நிர்மலமான வானத்தை பிளந்து கொண்டு செல்லும் விமானம் போலவும் இருப்பதைப் பார் என்றான்.
வசந்தகன், குழம்பி இருந்த அரசனின் மனம் லேசாகி விட்டதாக நினைத்தான். இயல்பான ரசிகத் தன்மை வெளிப்பட இயற்கையை ரசிக்கிறான். அதுவே பெரிய ஆறுதல். இந்த உபவனம் அழகாக இருக்கிறது. அந்த மேடையிலேயே அமருவோம். பத்மாவதி வந்திருந்தாலும் நம்மை பார்த்து அருகில் வருவாள் எனவும். எனக்கு குளிருகிறது, மண்டபத்தின் உள்ளேயே போகலாம் என்ற வசந்தகன் நின்றான். இருவரும் பேசிக் கொண்டே அதே கொடி விட்டை நோக்கி வரவும், பணிப்பெண் ஆட்டியதால் சிதறிய வண்டுகள் ரீங்காரமிட்டு சுழலுவதும் கேட்கிறது. சற்று முன் இளவரசி இங்கு வந்திருந்தார் என்று நினைக்கிறேன் என்று சொல்லியபடி சுற்று முற்றும் பார்த்த வசந்தகன், ஆ வண்டுகள் மொய்க்கின்றன, பொல்லாத ஜீவன்கள், கொட்டினால் தாங்க முடியாது, திரும்பி விடலாம் வாருங்கள் என்று பதறினான். அரசனோ, ப்ரமரம்- வண்டுகளை ஏன் நிந்திக்கிறாய். நமது காலடி சத்தம் தான் அமைதியாக இருந்தவைகளை கலைத்து விட்டிருக்கும். மதுகர என பெயர் பெற்றவை. தேனை சேகரிக்கும் சிறு வண்டுகள், பாவம், திடுமென வந்த ஆபத்து, அதில் மனைவியை இழந்த என்னைப் போல இவைகளும் பரிதவிக்கும். வாஸவதத்தா நினைவு வரவும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் இருந்த உதயணனைப் பார்த்து, கொடி வீட்டில் இருந்த பத்மாவதி செய்வதறியாது திகைத்தாள்.
பணிப்பெண், இளவரசி, அவந்திகா கண்கள் கலங்குகின்றன, என்ன காரணம்? திரும்பிப் பார்த்த பத்மாவதியும் விசாரித்தாள். அவந்திகா சமாளித்தாள், இந்த வண்டுகளை கிளப்பி விட்டதில் தூசியை தட்டி விட்டு விட்டது. என் கண்களில் விழுந்திருக்கும் போல. வேறு ஒன்றுமில்லை. இருக்கலாம் என்று பத்மாவதியும் ஆமோதித்தாள்.
வசந்தகன்: இது என்ன இந்த உபவனம் திடுமென சூன்யமாக ஆகி விட்டது. பறவைகள் சப்தமோ, நடமாடும் ஜீவன்களோ எதுவுமே இல்லை போன்று அமைதி காக்கிறது. நாம் இருவரும் என்ன பேசினாலும் யார் காதிலும் விழாது. அதனால் சொல்லுங்கள், யார் உங்களுக்கு அதிக பிரியமானவள், முன் இருந்த வாஸவதத்தாவா? தற்போதைய பத்மாவதியா?
உதயணன்: எதற்கு இந்த அனாவசிய கேள்வி?
வசந்தகன்: மெதுவாக சொல்லுங்கள். ஒருவள் உலகிலேயே இல்லை. மற்றவளும் அருகில் இல்லை. மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த மூவரும் ஆவலுடன் என்ன சொல்லப் போகிறார் என்று கவனித்தபடி இருந்தனர். கூடவே, இந்த அசட்டு விதூஷகன், ஏன் இப்படி ஒரு கேள்வியை கேட்டு வம்பை கிளப்பி இருக்கிறான் என்று கோபமும் கொண்டனர்.
உதயணன்: நீ ஒரு ஓட்டை வாயன். யாரிடமாவது சொல்லி வைப்பாய். நான் சொல்ல மாட்டேன்.
வசந்தகன்: சத்யமாக யாரிடமும் சொல்ல மாட்டேன்.
உதயணன்: எதுவும் சொல்லத் தோன்றவில்லை. என்னை விடு.
வசந்தகன்: ஆங், விடுவேனா, சொல்லாமல் இந்த மேடையை விட்டு நகர விட மாட்டேன். என் மேல் ஆணை.
உதயணன்- இதென்ன பிடிவாதம்? சரி சொல்கிறேன். பத்மாவதியை பிடிக்கும். அவளிடம் என்ன இல்லை. அழகி, மதுரமாக பேசுகிறாள். அரசிக்குரிய அனைத்து குணங்களும் உள்ளவள். மனைவியானபின் என் அன்புக்கு பாத்திரமாகி விட்டாள். வாஸவதத்தாவும் என் மனம் கவர்ந்தவள். அவளை மறக்கவா முடியும்?
பணிப் பெண்: இது என்ன இப்படி சொல்லி விட்டார். அவந்திகா தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு வேறு எப்படி சொல்வார்? கூடவே வாழ்ந்தவளை மறந்து விட்டதாகவா சொல்வார். நல்ல குலத்தினர் சொல்லும் பெருந்தன்மையான சொல் இது.
வசந்தகன்: ஆமாம். மறக்கவா முடியும்? என்னை அழைத்து உணவருந்தச் செய்வாள். என்ன ருசி, என்ன ருசி. வாழ் நாளில் அது போல இனி கிடைக்குமா?
உதயணன்: அசடு, அது தானா முக்கியம். விடு. அனாவசியமாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு என்னையும் பழைய நினைவுகளில் தள்ளி விட்டாய். மறைந்தவள் திரும்பி வரவா போகிறாள். என்ன நினைத்தாய். பரஸ்பரம் அன்பு கொண்ட தம்பதி பற்றி என்ன அறிவாய்? உள் மனதில் பதிந்து போன பற்றுதல். நாளாக ஆக வேரூன்றி உறுதியாகும் தன்மையுடையது. திடமான அந்த அன்பு மனதை தூய்மையாக்கும். எதிர்பாராத இழப்பும், அதனால் வந்த பிரிவும் என்னை வாட்டுகிறது. சொன்னால் உனக்கு புரியவா போகிறது. கண்களில் ஜலம் பெருகி வழிவதைப் பார்த்த வசந்தகன் பதறினான்.
அடடா, என்ன காரியம் செய்து விட்டேன். உங்கள் மனதை வருந்தும்படி பேசி, இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன். முகம் கழுவிக் கொள்ளுங்கள். சொல்லிக் கொண்டே நீர் இருக்கும் இடம் தேடிச் செல்கிறான்.
பத்மாவதி: இந்த மன நிலையில் நம்மை பார்க்க வேண்டாம். வேறு வழியாக வெளியேறுவோம். அவந்திகா தடுத்தாள். இந்த நிலையில் தனியாக விடக் கூடாது. நீ யதேச்சையாக வந்தது போல அருகில் சென்று பேசு. நான் போகிறேன், என்று சொல்லியபடி மறைவாக இருந்த இடம் வழியாக வெளியேறினாள். பத்மாவதியை வழியிலேயே சந்தித்த வசந்தகன், தண்ணீர் நிறைந்த தாமரை இலையை கொடுத்து, நல்ல வேளை தாங்கள் வந்தீர்கள். தூசி கண்களில் விழுந்து அரசர் கண் சிவந்து விட்டது. இதைக் கொண்டு போங்கள் என்று சொல்லி கொடுத்தான்.
கண் மூடிய படியே நீரை வாங்கி முகத்தைக் கழுவிக் கொண்டவன், பத்மாவதியைப் பார்த்து மகிழ்ந்தான், சரியான சமயத்தில் வந்தாய். வா, இங்கு அமர்ந்து கொள் என்று தன் அருகில் அமரச் செய்தபடி – இந்த பருவத்து மலர்கள் காற்றில் பறக்கின்றன. அதில் ஒன்று கண்களில் விழுந்திருக்கும். சொல்லு, எப்பொழுது வந்தாய்? என்று தன் இயல்பான பரிவுடன் கேட்டான்.
ஒரு அரச சேவகன் வந்து மகத ராஜா சபையில் உங்களை தரிசிக்க காத்திருக்கிறார். உங்களைக் கூப்பிடுகிறார் என்று சொல்லவும் அனைவரும் உபவனத்தை விட்டு வெளியேறுகின்றனர். உதயணன் தனக்குள்- சமயத்தில் உபகாரம் செய்தவர், பெறுபவரும் மரியாதையுடன் பெறுவதே முறை. கொடுப்பவன் உத்தேசம் பலவாக இருக்கலாம். தன் கௌரவம், மித மிஞ்சிய செல்வம், அதனால் பெறும் புகழ், எதுவானாலும் யாசகன் கை தாழ்ந்து தானே இருக்கும். எனக்கும் மகத ராஜாவின் உதவி தேவை. எளிதில் கிடைக்காத உபகாரம். அனாவசியமாக உள் நோக்கம் என்னவாக இருக்கும் எதற்கு யோசிக்க வேண்டும்.
அனைவரையும் பார்த்து, அரச ஆணை போகலாம் என்று கிளம்பினான். அனைவரும் உடன் சென்றனர்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
