- மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்
- ஹோமியோபதி – ஓர் எளிய அறிமுகம்
- மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்
- 3. மரணமின்மையின் முதற்துளி
- 4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி
- அறிவு அளித்த விடுதலை
- 6. ஞானங்களின் விளைநிலம்
- 7. மூன்றே பொருளாய் முடிந்தது
- 8. பிரபஞ்ச ஒழுங்கை வழிநடத்தல்
- 9. ஒருங்கிணைப்பின் வழியே
- 10. மீண்டெழல்
- 11. அறிவின் ஒளி
- 12. என்றென்றும் நிலைத்திருப்பது
“இங்கு எந்த ஒரு ஆரோக்கியமான மனிதனும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மருத்துவம் முன்னேறி இருக்கிறது” என்று எழுத்தாளர் ஆல்டஸ் ஹக்ஸ்லி கூறியதாக ஒரு மேற்கோள் சொல்லப்படுகிறது.
இது பெரும்பாலும் அறிவியல் மறுப்பாளர்கள் மற்றும் அவநம்பிக்கைவாதிகள் போன்றோரால் நவீன மருத்துவத்தை மறுக்க மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால், நாம் இங்கு “மருத்துவம்” என்பதற்கு பதிலாக “ஊடகப்பெருக்கம்” என்று எடுத்துக்கொண்டாலும் அந்தக் கூற்று அப்படியே பொருந்தும்.

நாம் வாழும் இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் மற்றும் நோய் சம்பந்தமான ஒரு குறிப்பைக் கூடப் பார்க்காமல், கேட்காமல் ஒரு நாளைக் கடக்க முடியாது. தகவல் ஊடகம் சார்ந்து அல்லது தகவல் ஊடகத்தைச் சார்ந்த நமது சுற்றம் மூலம், தொடர்ந்து ஆரோக்கியம் பற்றிய ஒரு நோக்கு நம் மீது திணிக்கப்படுகிறது. ஆன்மீக குருக்கள், நவீன மருத்துவர்கள், மாற்று மருத்துவர்கள், அறிவியலாளர்கள், விளம்பரதாரர்கள், யோகா மாடல்கள், சினிமா நடிகர்கள், கவனத்தைக் கவரும் கன்டன்ட் கிரியேட்டர்கள் போன்றோரால் நோய் பயம் மற்றும் முழு முதல் ஆரோக்கியம் பற்றிய கதையாடல் உருவாக்கப்படுகிறது.
இந்தக் கதையாடல் எவரொருவருக்கும் தெளிவளிப்பதற்கு பதிலாக மேலும் பதற்றத்தை நோக்கித் தள்ளுகிறது அல்லது ஒற்றைப்படையான நம்பிக்கையை விதைக்கிறது. வெள்ளை பூசணியை அரைத்துக் குடிப்பதா இல்லை பேலியோ கால உணவுமுறையைப் பின்பற்றுவதா? உண்மையிலேயே ஆதி மனிதன் நோயற்று வாழ்ந்தானா?
இது நோயா அல்லது சதிக்கோட்பாடா? போன்ற தீராத விஷச்சுழலில் சிக்க வைக்கிறது. இவற்றை அறிய நாம் மருத்துவ வளர்ச்சிப் பரிணாமத்தை வரலாற்றின் வழியே சென்று பார்ப்போம்.
இக்கட்டுரைத் தொடர், அறிவியல் கருத்துக்களை பயன்படுத்தி இருந்தாலும் இது ஒரு அறிவியல் கட்டுரை அல்ல. மருத்துவக் கட்டுரையுமல்ல. மாறாக, வரலாற்றுத் தகவல் குறிப்புகளின் வழியாகவும், தத்துவத்தின் வழியாகவும், கொஞ்சம் கற்பனையின் உதவியையும் கொண்டு ஒரு பொதுப்புரிதலை, சமநிலைப் பார்வையை அடைய எழுதப்படுகிறது.
மருத்துவம் அடைந்த மாற்றங்களை பல்வேறு புராதான நாகரீகம் முதல் இன்றுவரை முன்முடிவுகளும், மனச்சாய்வும் இல்லாமல் எழுத முயற்சி செய்திருக்கிறேன். நீளம் கருதியோ, புரிதல் போதாமையாலோ சில முக்கிய தகவல்கள் விடுபட்டு இருக்கலாம். முக்கிய குறிப்புகள் விக்கிபீடியா அல்லது ஆய்வு கட்டுரைகள் சார்ந்து எழுதப்பட்டுள்ளன.
மனித நாகரீகங்கள் மற்றும் மருத்துவ வளர்ச்சி நிலையின் காலங்கள் ஒரு பொது புரிதலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை அடுக்குமுறையாக (Hierarchy) கருத்தில் கொள்ளாமல், வெவ்வேறு சம வழிகளாக பார்க்கக் கோருகிறேன்.
ஆதியில் மருத்துவம்
1898 ஆம் ஆண்டு H.G. Wells எழுதிய The War of the Worlds புத்தகத்தைத் தழுவி ஸ்பீல்பெர்க் எடுத்த War of the Worlds திரைப்படத்தில், வேற்றுக்கிரக உயிரினங்கள் பூமியை ஆக்கிரமிக்க வரும்போது, மனிதனின் அனைத்து ஆயுதங்களும் பலன் தராத நிலையில், பூமியில் உள்ள கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாகி அவை அழிந்துவிடும். அப்போது பின்னணியில் H.G Wells இன் மேற்கோள் ஒலிக்கும் “ஆக்கிரமிப்பாளர்கள் எந்த நேரத்தில் நம் காற்றை சுவாசித்து, நம் உணவை உண்டு, நம் நீரை அருந்தினார்களோ அப்போதே அவர்களின் முடிவு நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. கோடிக்கணக்கான மனித உயிர்களை பலிக்கொடுத்து, மனித இனம் நோய் எதிர்ப்பாற்றலை பெற்று, முடிவிலா உயிர்குலங்களுக்கு இடையே வாழும் உரிமையைப் பெற்று உள்ளது. அந்த உரிமை நமது அனைத்து சவால்களையும் சந்திக்கவல்லது. இங்கு மனிதர்கள் வீணாக வாழ்வதும் இல்லை, இறப்பதும் இல்லை”
ஆம், கோடிக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் இந்தப் புவியின் மீது நோய்களுடன், மருத்துவம் எனும் ஆயுதத்தை கையில் ஏந்தி தீராத போரில் இருக்கிறது. அந்த வெற்றியின் விளைவாக நாம் இங்கு இருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது.
யானை, ஓநாய், குரங்கு போன்ற கூடிவாழும் உயிரினங்கள், தங்களுக்குள் நோய்வாய்ப்பட்ட, அடிபட்ட விலங்குகளை பராமரிக்கின்றன. சில விலங்குகள் நோய்க்கான மருந்துகளை தேடிச்செல்வதும் உண்டு. இது பெரும்பாலும் அவற்றின் தங்கி வாழும் உயிரியல்பால் முடிவு செய்யப்படுகிறது.
மாறாக, மனித இனத்தின் நோய்க்கான சிகிச்சைத் தேடலானது அவற்றின் அறிவின்பால் நிகழ்ந்த பெரும்பாய்ச்சலும், சக உயிரினம் மேல் கொண்ட பரிவின் விளைவும் ஆகும்.
வரலாற்று காலத்துக்கு முந்தைய மருத்துவம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது எழுத்துக்கள் தோன்றாத, மனித இனம் தோன்றிய ஏறத்தாழ 33 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய முதற்கற்காலத்திலிருந்து, நமக்கு முதல் எழுத்து தரவு கிடைக்கும் 5000 ஆண்டுகளுக்கு முன்புவரை கணக்கில் கொள்ளப்படுகிறது. வரலாற்று ஆய்வாளர்கள் இந்த மனித சமூகங்களை பொதுவாக நாடோடி சமூகங்கள், வேட்டை – சேகரிப்பு சமூகங்கள், கற்காலகருவிகள் பயன்படுத்திய சமூகம், வேளாண்மை – தங்கி வாழும் சமூகங்கள், அதன் பின்னரே எழுத்து உருவாகி வரும் சமூகங்கள் என்று வகை பிரிக்கின்றனர்.
அரிதாகக் கிடைக்கும் மனித உடலின் எச்சங்களில் இருந்தும், பல்வேறு மத, ஆன்மீக சடங்குகள் சார்ந்து வரையப்பட்ட குகை ஓவியங்களில் இருந்தும், பின்னர் எழுத்து உருவான சமூகங்களில் இருந்து முன் சென்று அவர்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை ஆராய்வது மூலமும், இதுவரை நாகரிகம் சென்று தொடாத பழங்குடி சமூகங்களின் பழக்கங்களை ஆராய்வது போன்றவற்றின் மூலமும்
தொல்லியல் மற்றும் மானுடவியல் ஆய்வாளர்கள் நோய்கள் மற்றும் மருத்துவம் தொடர்பான ஊகத்தை நிகழ்த்துகின்றனர்.
இதிலும் உலகமெங்கும் பரவி வாழ்ந்த மனித நாகரிகத்தில் சுமேரியா போன்ற பிரதேசங்களில், எழுத்து தோன்றி பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னரே ஐரோப்பிய நிலத்தில் எழுத்து உருவாகிய சமூகங்கள் தோன்றின என்பதும், இவற்றை ஊகிப்பதில் சவாலாக உள்ளது.
இவற்றிலிருந்து, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பின்வரும் நோய்கள் பரவலாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
- வெட்டுக்காயங்கள், விபத்துகள், எலும்பு முறிவு
- மூட்டு வலி, எலும்புத்தேய்மானம், ஸ்பாண்டிலோசிஸ்
- விட்டமின் டி குறைபாட்டால் தோன்றும் ரிக்கெட்ஸ்
- கிருமிசார் தொற்று நோய்கள்
- பிரசவ கால இறப்புகள்
- சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, அதன் மூலம் ஏற்படும் தொற்றுகள்
- உணவுத்தட்டுபாடு / நுண்சத்துக்கள் போதாமை
இவற்றில் முதல் இரண்டும் வேட்டை சார்ந்தும், கனமான கற்கள் மற்றும் வேட்டை விலங்குகளைத் தூக்கி அல்லது இழுத்துச் சென்றதால் ஏற்பட்டவையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
முதல் மருத்துவன்
1914 ஆம் ஆண்டு பிரான்சின் Montesquieu-Avantès -இல் கண்டுபிடிக்கப்பட்ட Cave of the Trois-Frères குகை ஓவியங்களில் காணப்படும் மான்தோல் போர்த்திய, முகக்கவசம் அணிந்த ஓவியம் ஒரு மருத்துவனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கலைஞனும், பூசாரியும், மருத்துவனுமான ஒரு குடித்தலைவன் அல்லது அரசன். இந்த ஓவியங்கள் ஏறக்குறைய 15000 முதல் 13000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாக இருக்கலாம்.

ஆதி மனிதன் ஆரோக்கியமானவனா?
நமது இன்றைய நோய்களுக்கெல்லாம் காரணம், சமீப காலங்களில் நாம் ஏற்றுகொண்ட நவீன மாற்றங்களே என்றும், இவற்றுக்கு முந்தைய பரிசுத்தமான மனிதன் முழுமையான ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்தான் என்றும் பொதுப்புத்தியில் ஒரு சித்திரம் புனையப்படுகிறது. இது உண்மையாக இருக்க எந்தளவு சாத்தியம் இருக்கிறது என்பதை நமக்கு கிடைத்த ஒரேயொரு ஆதிமனிதனின் உடலைக்கொண்டு பார்ப்போம்.
ஏட்ஸி பனிமனிதன் (Ötzi the Iceman)
1991 ஆம் ஆண்டு ஆல்ப்ஸ் மலை உச்சியில் இயற்கையாக பதப்படுத்தப்பட்ட முழுமையான மனித உடல் (mummy) கண்டுபிடிக்கப்பட்டது. இது தொல்லியல், வரலாறு, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளுக்கு சுவாரஸ்யமான ஒரு கண்டுபிடிப்பாகும். இங்கு நாம் மருத்துவம் சார்ந்து மட்டும் பார்ப்போம். இவனுக்கு ஏட்ஸி (Ötzi) என்று பெயரிடப்பட்டது.
இவன், ஏறக்குறைய 5300 ஆண்டுகளுக்கு முன், கற்காலத்தின் இறுதியில் வாழ்ந்தவன். சுமார் 40 முதல் 50 வயது உடையவன்.
காடுகளில் வாழ்ந்த, சுத்தமான காற்று, நீர், பூச்சிகொல்லிகளற்ற தானியங்கள், இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த ஏட்சி, நாம் இன்று கனவு காணும் முழு ஆரோக்கிய மனிதனாக இருந்திருப்பான் என்று நினைக்கிறீர்களா?
ஏட்ஸியின் உடலை ஆராய்ந்ததில், அவனுக்கு இதயத் தமனிகளில், மூளைக்கு செல்லும் தமனிகளில் தடிப்பு உள்ளது. அவன் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் அவனுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும்.
உண்ணிகளால் ( Tick) பரப்பப்படும் Borrelia பாக்டீரியா ஏற்படுத்தும் Lyme Disease இருந்து உள்ளது.
கோதுமை, பார்லி போன்ற தானியங்களை உண்டது அவனுக்கு பற்களில் சொத்தைகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு எலும்பு முறிவுகள் ஏற்பட்டு அவன் அதற்கு சிகிச்சை செய்து சரியாகி உள்ளது தெரியவருகிறது.
பித்தப்பை கற்கள் இருந்துள்ளன. தீராத குடற்புழு பிரச்னையால் அவன் அவதிப்பட்டுள்ளான். அவனுடைய விரல் நகங்களை ஆராய்ந்த போது அவன் தொடந்து நோய்வாய்ப்பட்டு இருந்தது தெரிய வருகிறது. அவன் டிஎன்ஏ ஆய்வில் காணப்படும் சுமார் 84 வகை stress response புரதங்கள் தீவிர மன அழுத்தத்தின் விளைவாக இருக்கலாம். மன அழுத்தம் ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது வாழ்வியல் காரணங்களால் ஏற்பட்டு இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது1.
இவன், உடல் முழுவதும் சுமார் 61 இடங்களில் பச்சை குத்தி உள்ளான். முக்கியமாக மூட்டு பகுதிகள், முதுகு தண்டுவடத்தில் இருபுறமும் பச்சை குத்தி உள்ளான். இது வலி சார்ந்த ஒரு சிகிச்சை முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது2.

ஆச்சர்யமளிக்கும் விதமாக, அவன் கூடவே ஒரு முதலுதவிப் பெட்டியை வைத்துள்ளான். அதனுள்ள்ளே பிர்ச் வகைக் காளான்களை வைத்துள்ளான். இது நுண்ணுயிர்க்கொல்லியாகப் பயன்பட்டு இருக்கலாம். மேலும் அவன், Sphagnum affine எனப்படும் பாசிவகையைக் கொண்டு இரத்தக் காயத்தை குணப்படுத்தியுள்ளான் என்றும் தெரிய வருகிறது3.
நோய்க்கான காரணம்
பொதுவாக, ஆதியில் மனிதர்கள் நோய்க்கான காரணம் இயற்கை அல்லது கடவுளின் கோபம் என்று நினைத்திருக்க வாய்ப்புண்டு என்ற கருதுகோள் பரவலாக நம்பப்படுகிறது. பூசாரியும், மருத்துவனும் இணைந்த (shaman) குகை ஓவியங்களிலிருந்து இது ஊகிக்கப்படுகிறது.
உடலில் சேரும் வெளிப்புற விஷங்களே நோய்க்குக் காரணமாகின்றன. உடலின் இந்த விஷத்தை நீக்க, பல்வேறு தாவரச்சாறுகளை உட்கொண்டனர் என்றும் தெரிய வருகிறது. இது Purging முறை எனப்படும். வயிற்றுபோக்கு, வாந்தி, வியர்வை போன்றவற்றை மருந்துகள் (மூலிகைகள், வேதியியல் சேர்மானங்கள்) மூலமோ, கைகள் அல்லது கருவிகளை பயன்படுத்தி தூண்டுவதன் மூலமாகவோ வெளியேற்றுவது ஒரு சிகிச்சைமுறையாக இருந்துள்ளது. இது இன்றுவரை எப்படி நம் சிந்தனையை ஆள்கிறதென்று வரும் அத்தியாங்களில் காண்போம்.
சிகிச்சை முறைகள்
எழுதப்பட்ட தரவுகள் எதுவும் இல்லாததால், பெரும்பாலும் தொல்லியல் ஆதராங்களிலிருந்து இவை ஊகிக்கப்படுகின்றன.
- தாவர மூலிகை சார்ந்த சிகிச்சைகள்
ஆதி மனிதர்களுக்கு தாவரங்களின் குணப்படுத்தும் தன்மை மற்றும் மனமயக்கம் ஏற்படுத்தும் தாவரங்களைப் பற்றிய அறிமுகம் இருந்திருக்கலாமென்று தெரிகிறது.
யாரோ ( Yarrow / Achillea millefolium) தாவரம் காயங்களை குணப்படுத்தவும், இரத்தப் போக்கை நிறுத்தவும், மலமிளக்கியாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இது பேலியோலித்திக் காலத்தில், மனிதர்கள் வாழ்ந்த குகையில் கிடைத்த மகரந்தப் படிமங்களிலிருந்து ஊகிக்கப்படுகிறது4.

- மன மயக்கம் ஏற்படுத்தும் தாவரங்கள் மற்றும் காளான்கள் (Psychedelics) பற்றி பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கின்றன. இன்றிலிருந்து சுமார் 15000 ஆண்டுகளுக்கு முன் (13000 BC) இன்றைய இஸ்ரேல் பகுதியில் பார்லியிலிருந்து பீர் தயாரித்திருக்கிறார்கள். ஓபியம், கஞ்சா, Psilocybin mushrooms போன்றவற்றின் மனமயக்கதன்மைக்காக அவற்றை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம்5.

- மண் சார்ந்த சிகிச்சை முறைகள் (Geophagy)
ஆதி மனிதர்களில் மட்டுமல்லாமல், விலங்குகள் கூட களிமண் போன்றவற்றின் குணப்படுத்தும் திறனை பயன்படுத்துகின்றன. பல்வேறு களிமண் வகைகள் காயங்களை குணப்படுத்தவும், இரத்தப் போக்கை நிறுத்தவும், நுண்சத்துக் குறைபாடுகளைக் களையவும் பயன்படுத்தபட்டிருக்கலாம்6.

4. மண்டையோட்டில் துளையிடுதல் ( Trepanning)
அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கும் மண்டையோடுகளில் துளை இடப்பட்டுள்ளது விந்தையான ஒன்று. இது பெரும்பாலும் நோய்க்குக் காரணமான கெட்ட ஆவிகளை வெளியேற்ற செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கிப்படுகிறது.
இந்த மண்டையோடுகளில் ஓட்டை இடுவதென்பது உலகம் முழுக்க வழக்கத்தில் இருந்துள்ளது என்பதை தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன. மேலும் ஆண், பெண், குழந்தைகள் என வேறுபாடின்றி அனைவரிலும் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் அந்த மண்டையோட்டு துளையின் அருகே நிகழ்ந்துள்ள எலும்பு வளர்ச்சியானது, இவை உயிரோடு இருக்கும்போதே செய்யப்பட்டவை என்பதையும், அதன்பின் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்திருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வாறு மண்டையோட்டில் துளையிடப்பட்டதற்கு பல்வேறு ஊகங்கள் முன் வைக்கப்படுகின்றன.
- தலைவலி, வலிப்பு நோய், மன நோய்கள், நடத்தைக் கோளாறு போன்றவற்றிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையாக இருக்கலாம்.
- ஆன்மீகம் சார்ந்த சடங்கு முறையாக இருக்கலாம்.
- விபத்துகால அவசர அறுவைசிகிச்சை முறையாக, தலையில் உடைந்த சிறு எலும்புகளை நீக்கவும், அதன் அடியில் உறைந்த இரத்தத்தை வெளியேற்ற செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்.
- நீர் கொண்டு செல்லவும், குடிக்கவும் குடுவையாக பயன்படுத்த இவ்வாறு இறந்த மனிதர்களின் எலும்புகளை எடுத்து துளையிட்டு பயன்படுத்தி இருக்கலாம்.


மருத்துவ வரலாற்றை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
சாதரணமாக நோய் வந்தால் மருத்துவரை சென்று பார்த்து குணப்படுத்திக் கொள்ளப்போகிறோம், ஏன் நேரம் செலவு செய்து இந்த வரலாற்றின் போக்கை படித்து அறிந்து கொள்ள வேண்டுமென்று தோன்றலாம். நியாமான கேள்விதான். இந்த மண்டை ஓட்டில் துளையிடுவதைப் படித்த போது உங்களுக்கு என்ன தோன்றியது? ஆதி காலத்தில் அறிவற்ற காட்டுமிராண்டி மக்கள் மேற்கொண்ட ஒருமுறை என்றா? அல்லது அப்போதே முன்னோர்கள் அறுவை சிகிச்சைமுறையை அறிந்து வைத்து இருந்தார்கள் என்றா? இந்த இருவேறு சாத்தியங்களும் எப்படி நிகழ்காலத்தில் நம் சிந்தனைமுறையை ஆள்கின்றன என்று பார்ப்போம்.
இந்த மண்டையோட்டில் துளையிடும் முறை கற்காலத்தோடு அழிந்து விடவில்லை. அது தொடந்து எகிப்திய, ரோம, சீன, இந்திய நாகரீகங்களில் சடங்கு சார்ந்தும், நோய்க்கான சிகிச்சை முறையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
1960 களில் மூளைத்திறனை அதிகரிக்கச் செய்யவும், மூன்றாம் கண்ணை திறக்கும் வழியாகவும், பின் வருவதை முன் கூட்டியே அறியும் திறனைப் பெறவும் (Clairvoyance) ஒரு போலி அறிவியல் முறையாக உருவெடுத்தது. 2000 ஆம் ஆண்டில் Utha மாநிலத்தில் மனச்சோர்வுக்கு சிகிச்சையாக இதை பயன்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்7. தொடந்து இது பல்வேறு ஆன்மீக மற்றும் போலி மருத்துவ காரணங்களுக்காக இன்றும் பின்பற்றப்படுகிறது.
Lobotomy – நோபல் பரிசு
மாறாக, நவீன அறிவியலில், இந்த மண்டை ஓட்டில் துளையிடும் முறை நவீன லோபோடோமி (Lobotomy ) சிகிச்சையின் முன்னோடி என கருதப்பட்டது. 1949 ஆம் ஆண்டு போர்ச்சுகல் நரம்பியல் மருத்துவரான António Egas Moniz , கண்டுபிடித்த லோபோடோமி எனும் சிகிச்சை முறைக்காக அந்த ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த முறையானது வலிப்பு, மனச்சோர்வு, மன நோய்களுக்கு மண்டையோட்டில் துளையிட்டு மூளையின் வெளிப்புற பகுதியின் நரம்பு அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தும் அறுவை முறையாகும்.
அமெரிக்கா ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியின் சகோதரி ரோஸ்மேரி கென்னடி , 23 வயதில் தீவிர நடத்தைக்கோளாறு உள்ளவராக கருதப்பட்டு 1941 இல் இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சிகிச்சைக்குப் பிறகு அவரின் மனம் இரண்டு வயது குழந்தையின் நடத்தை அளவுக்கு மாறிவிட்டது. அவரால் தொடர்ச்சியாக பேசவோ, நடக்கவோ இயலவில்லை. அவரின் இறுதிக்காலம் வரை பொதுவெளியில் இருந்து மறைத்து வைக்கப்பட்டார்.

படம் : ரோஸ்மேரி கென்னடி
1970 களின் இறுதியில் இந்த சிகிச்சை, மருத்துவ காட்டுமிராண்டித்தனம் எனத் தடை செய்யப்பட்டது.
இந்த வரலாற்றின் வழியே, நோயற்ற முழுமுதல் ஆரோக்கியம் என்பது ஆதிமனித குலத்துக்கே அளிக்கப்படவில்லை என்றும், அதிநவீனமாக கருதப்படும் ஒரு சிகிச்சை முறை, பிற்காலத்தில் மோசடியாக பார்க்கப்பட வாய்ப்பு இருப்பதையும், அழிந்த முறைகள் வேறு வடிவங்களில் திரும்ப வருவதையும் நம்மால் உணரமுடிகிறது.
நோயற்ற ஆரோக்கியம் இல்லை என்றான பின் அதை விடப் பெரிய மரணமில்லா பெருவாழ்வை அமைத்துக்கொண்டால் நோயை வென்றவராவோம் இல்லையா? ஆம், அதை தேடிச் சென்ற மூதாதையை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.
சான்றாதாரங்கள்
- https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC11113858/
- https://www.cambridge.org/core/journals/european-journal-of-archaeology/article/chalcolithic-tattooing-historical-and-experimental-evaluation-of-the-tyrolean-icemans-body-markings/C19A6B61CEA938FBE6E47B0C81B96FD7
- https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(05)79939-6/fulltext
- https://pubmed-ncbi-nlm-nih-gov.translate.goog/25769538/
- https://akjournals.com/view/journals/2054/3/2/article-p63.xml
- https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0003347299913763?via%3Dihub
- https://www.rcfp.org/abc-ordered-hand-over-unedited-head-drilling-tapes/
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

கட்டுரை “முழுமையான ஆரோக்கியம்” என்னும் “நோயற்ற வாழ்வு” என்பது எந்தக் காலகட்டத்திலும், ஆதிகால மனிதர்களுக்குக் கூட இருந்ததில்லை என சொல்கின்றது.
பலர் நம்புவதுபோல, பண்டைய காலத்தில் மனிதர்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்ததால் அவர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள் என்ற கருத்தை இக்கட்டுரை மறுக்கிறது.
கட்டுரையின் சிறப்பம்சங்கள்:
1.”ஏட்ஸி பனிமனிதன்” (Ötzi the Iceman) எனும் 5,300 ஆண்டுகள் பழமையான பதப்படுத்தப்பட்ட உடலை ஆராய்ந்து, அந்த ஆதிகால மனிதனிடம் இருந்த பல நோய்களை (இதயநோய் அறிகுறிகள், லைம் நோய், பல் சொத்தைகள், பித்தப்பை கற்கள், ஒட்டுண்ணிகள், மன அழுத்தக் குறிகாட்டிகள்) எடுத்துக்காட்டுகிறது.
2.மண்டையோட்டில் துளையிடுதல் (Trepanning) போன்ற பழங்கால மருத்துவ முறைகளை வரலாற்று ரீதியாகத் தொடர்ந்து, அவை எவ்வாறு நவீன முறைகளான லோபோடோமி போன்றவற்றாக பரிணமித்தன என்பதை விளக்குகிறது.
3.ஆதிகால மனிதர்கள் தாவரங்கள், காளான்கள், மண் போன்றவற்றைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்த முயன்றதைக் காட்டி, மருத்துவ அறிவின் பழமையான வேர்களை வெளிப்படுத்துகிறது.
4.பழைய மருத்துவ முறைகள் எவ்வாறு மறைந்து, பின்னர் மாற்று வடிவங்களில் மீண்டும் தோன்றுகின்றன என்பதைக் காட்டுகிறது.
கட்டுரை ஆசிரியரின் மொழியும், கூறும் முறையும் கட்டுரையை கடகவென வாசிக்க உதவுகின்றது. சிக்கலான விஷயங்களை எளிமையான சொற்றொடரில் சொல்கின்றார். அடுத்தடுத்த பாகங்கள் தொடர்ந்து வருமென எதிர்பார்க்கின்றோம்.
கட்டுரை ஆசிரியர் தான் கூறவரும் கருத்தினை விளக்க கொடுத்துள்ள படங்களும் அவரது எழுத்துக்கு வலு சேர்க்கின்றது.