- உதயத்தில் ஓர் அஸ்தமனம்
- பிரம்மாஸ்திரம்
- ஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்
- விமான தளத்தை விற்ற சிறுவன்
- துக்கம்
- காளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை]
- என் தலைக்கான கொன்றை
- என் குழந்தைகளின் புகைப்படங்கள்
- வேட்டை நாய்
- வரிசையில் ஒரு சிநேகம்
- குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்
- தீப்பெட்டி
- சௌவாலி
- டிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது
- வைரஸ்
- ஒரு பெண் பற்றிய சொற்சித்திரம்
- ஐந்து பெண்கள்
- நெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்
- மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு
- காட்டு மல்லி
- குங்கும பரணி
- மர பொம்மைகள்
- வக்கீலின் கடிதம்
- தொலைந்து போன பொருள்
- உங்கள் கதை [ என்னுடையதும் ]
- கருப்பு எஜமானி
- ஹெட்மாஸ்டர்
- ஏழாவது மலர்
- விற்பனை
- இலக்கு – சேது
- பெருங்காய கச்சோடி
மூலம் : என். மோகனன்
ஆங்கிலம் : ஏ.ஜே.தாமஸ்
தமிழாக்கம் : தி.இரா.மீனா

போலீஸ் துப்பாக்கிச் சூடு. ஓ, பவுலோஸ், நீ இறந்து விட்டாய். நான் அந்த இடத்தில் இல்லாததால் அந்தச் சம்பவம் பற்றிய விவரங்கள் என்னிடமில்லை. என் முன்னால் இருக்கும் செய்தித்தாள் விவரங்கள், அந்தச் சம்பவம் பற்றிய இரண்டு வெவ்வேறு பார்வைகளைத் தோற்றுவிக்கின்றன.
அதில் ஒன்று உன்னை தேசத்திற்குப் பெருமை தேடித் தந்த புரட்சிகரமான, துணிச்சலான சுதந்திரப் போராட்டத் தியாகியென்கிறது. நீ உயர்ந்த பாரம்பரியம் சார்ந்த தேசியவாத இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றும், அமைதியான ஊர்வலத்தை முன்னெடுத்துச் சென்றதால் போலீஸ் உன்னைச் சுட்டது என்று விவரிக்கிறது.
மற்றொரு வடிவம் பயங்கரவாதியான பவுலோஸ் இரண்டாயிரம் ரவுடிகளைச் சேர்த்துக் கொண்டு போலீஸ் நிலையத்தைத் தாக்க வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட கைகலப்பில் போலீஸ் உன்னைச் சுட்டுக் கொன்றதாகவும் சொல்கிறது.
எனக்கு முன்னால் இந்தத் தகவல் அறிக்கைகள் மட்டுமிருக்கின்றன. என்ன நடந்தது என்பதை நேரில் கண்ட சாட்சியில்லை நான். எனினும் பவுலோஸ் இறந்து விட்டான்!
உன்னை எனக்குத் தெரியும். என்னுடைய சமையல்காரனாகவும், வீட்டு உதவியாளனாகவும் இருந்தவன் நீ. நம்ப முடியாத நிலையில் உன்னை ஒன்று கேட்கிறேன் : நீ எப்போது ஒரு துணிச்சலான புரட்சியாளனானாய்? ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி? எப்போது ஒரு ரவுடியாகவும், கலகக்காரனாகவும் ஆனாய்?
ஒரு ஜூன் மாதத்தின் மழைக்கால காலைப் பொழுதில், எங்கள் கல்லூரியின் பியூன் ராமன் நாயர் பவுலோசை என் வீட்டிற்கு அழைத்து வந்து “ மாஸ்டர், இவன் துரதிர்ஷ்டமான சிறுவன். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவன். மிகப் பணிவானவன். நீங்கள் சம்மதித்தால் உங்களுக்கு உதவியாக இவன் இங்கு இருக்கட்டும்.!” என்று அறிமுகப் படுத்தினான்.
உண்மையைச் சொல்லப் போனால் முதல் பார்வையிலேயே அவனை எனக்குப் பிடிக்கவில்லை. அவனைச் சமையல்காரனாகவும், வீட்டு உதவியாளனாகவும் வைத்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. பவுலோசின் அடர்த்தியான தலமுடி ஒழுங்கற்று இருந்தது; அவனது உடைகள் கிழிந்தும், அழுக்காகவுமிருந்தன.
ஆனால் அவனுடைய முகம் அப்பாவித் தன்மையோடும், பரிதாபமாகவும் இருந்தது. அவன் கண்கள் வலியோடு என் முகத்தில் எதையோ தேடுவதாக இருந்தன.
அந்தக் கணத்தில் ஓர் அனாதை ஆத்மாவின் வேதனையை என்னால் உணர முடிந்தது. அந்த மழைக்காலக் காலை நேரத்தில் என் வீட்டு வாசலில் வந்து நின்ற அவனைத் திருப்பியனுப்ப எனக்கு மனம் வரவில்லை. வீட்டைப் பெருக்கித் துடைத்து விட்டு அவன் வந்த போது, குளித்து விட்டு வரும்படி சொல்ல மட்டுமே என்னால் முடிந்தது. என் சட்டை ஒன்றையும் ,ஒரு வெள்ளை முண்டுவையும் தந்தேன்.
அதற்குப் பிறகு அந்த வீட்டில் நாங்கள் இரண்டு வருடமிருந்தோம். அது நீண்ட காலமில்லை. மனித வாழ்வில் அது மிகப் பெரிய காலமாக இல்லாமலிருக்கலாம். எனினும் ஒரு சிறிய கணம் கூட மனித மனதில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.
ஓ,பவுலோஸ்! என்னையறியாமலே உன் மீது வாஞ்சை வந்து விட்டது. அந்த மாதிரி நான் இருந்தது தவறு என்று இன்று தோன்றுகிறது. உன் அன்பில் உரிமை கோரக் கூடாது. (அன்பில் யார்தான் உரிமை கோர முடியும்)
நீ ஒரு கிறித்தவன். நான் நம்பூதிரி.
ஒரு கிறித்தவனும் நம்பூதிரியும்!
உன் மீது அன்பாக இருந்து உரிமை கொண்டாட நான் யார்? எனக்கு என்ன அதிகாரமிருக்கிறது?
ஆனால் என்னால் இப்படித்தானிருக்க முடியும், பவுலோஸ்! நான் குழந்தைப் பருவத்திலிருந்தே இப்படி இருக்கிறேன். என் வீட்டைச் சுற்றிலும் வெவ்வேறு இன மக்கள் தீண்டத்தகாதவர்கள், எங்களை அணுக முடியாதவர்கள் என்று எல்லோருமிருந்தார்கள். விளையாடுவதற்கு என் இனத்தைச் சேர்ந்த நண்பர்கள் என்று யாரும் இருந்ததில்லை.
நான் ஒரு சாதாரணக் குழந்தை.
என் மனம் போனபடி எல்லாம் சண்டை போட, மகிழ்ச்சியாக இருக்க, கூச்சலிட்டுக் கொண்டாட எனக்கு நண்பர்கள் வேண்டுமென்று நான் ஏங்கினேன்
தாழ்ந்த சாதிக் குழந்தைகளோடு விளையாடியதற்காக எத்தனை முறை கடுமையாக அடி வாங்கியிருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? எத்தனை முறை எனக்கு அதற்காக வீட்டில் சுத்திகரிப்புப் பூஜை செய்திருக்கிறார்கள்! ( கோவிந்தனின் தோளில் கை போடுவாயா? ஜேக்கப்பின் வீட்டிற்குப் போவாயா? போவாயா.. போவாயா?அவர்களோடு சேர்ந்து சாப்பிடுவாயா?)
வீட்டின் மேற்குப் பகுதி வராந்தா தூணில் சாய்ந்து கொண்டு, அடிபட்ட என் தொடைகளில் உள்ள கறைகளைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அதே நேரத்தில், மேற்கு வானத்தின் தொடைகளில் இருக்கும் செம்மையான கறைகளையும் கவனித்திருக்கிறேன்! மேகங்கள் கலந்த மாலை நேர வானமும் என்னோடு சேர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும்.
எத்தனை இலைகள் உதிர்ந்தன! எவ்வளவு தண்ணீர் கடந்திருக்கிறது?
இன்றும் கூட, உன்னைப் பற்றி நினைத்துக் கொண்டு இந்த நகர இரைச்சலின் மத்தியில், மனதில் செம்மையான கறைகளோடு நான் உட்கார்ந்திருக்கும் போது, என்னைப் போலவே வானமும் அழுகிறது.
என் ஆத்மா தாக்கப்பட்டிருக்கிறது. அதை யாரோ கடுமையாகச் சித்திரவதை செய்திருக்கிறார்கள்.
அல்லது தகுதியில்லாத அன்பிற்காக நான் கடுமையாக தாக்கப்பட்டு இருக்கிறேனா?
ஆமாம், அதில் சந்தேகமில்லை.
ஆனால், என் சோகப் பேரரசில் ஒரு கருப்பு நிழலாய் நீ ஏன் நிற்க வேண்டும்? உனக்குச் சிறிதும் சரியில்லாத பெரிய சட்டையைப் போட்டுக் கொண்டு (ஆமாம்,அது என்னுடைய பழைய சட்டை அல்லவா?) உன்னுடைய அடர்த்தியான ஒழுங்கற்ற தலைமுடியுடன். கருப்பு நிழல் போல சறுக்கிக் கொண்டு, ஏன் என்னுடைய வெற்று நிலத்திற்கு வந்து நின்றாய்?
அனுமதிக்கப்படாத அன்பின் உலகத்தில் நீ ஏற்கத் தகாத ஓர் விருந்தாளியாக இருந்தாய்.
ஆற்றின் கரையருகேயிருந்த வீட்டில் நான் வாழ்ந்த அந்த இரண்டு வருடங்கள் , என் வாழ்க்கையில் மிக உற்சாகமான கட்டம்.
அந்தக் காலகட்டத்தில், நான் காதலிக்கப்பட்டேன். நானும் காதலித்தேன்.
இது எதுவுமே உனக்குத் தெரியாது பவுலோஸ். நீ சிறுவன். இருப்பினும் என் வாழ்க்கைக் கதை நகர, ஒவ்வொரு ஒன்று விட்ட நாளிலும் என் கடிதங்களைத் தபால் பெட்டியில் சேர்த்தாய். அந்தக் கடிதங்களில் என் கனத்த ஆசைகள் தங்கள் சிறகுகளை அடித்துக் கொண்டு உயரப் பறந்தன.
( நீயே என் வாழ்க்கை
நீயில்லாமல் எனக்கு வாழ்க்கையில்லை, அன்பே!
நாம் ஒருவருக்கொருவராய் உருவானவர்கள்.
உன்னைப் பார்க்க ஏங்குகிறேன். தயவு செய்து வா…)
அதுதான் தடை செய்யப்பட்ட, நொறுங்குவதற்காகவே விதிக்கப்பட்ட காதலின் கதை. அது எதுவுமே உனக்குத் தெரியாது பவுலோஸ்! அப்போது நீ சின்னக் குழந்தை. நீ தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை.
நகரத்தில் எனக்கு வேலை கிடைத்த பிறகு ,அந்தச் சிறிய வீட்டை விட்டு நான் கிளம்பத் தயாரான போது, நீ என்னுடன் வருவதற்குத் தயாராக இருந்தாய்.
“என் திருமணம் நடக்கட்டும். வீடு பார்த்ததும் சொல்கிறேன். அப்போது நீ வந்தால் போதும், சரியா?” என்று உன்னிடம் சொன்னேன்
ஆனால் பவுலோஸ்! அந்தத் திருமணம் நடக்கவில்லை. நடக்கப் போவதுமில்லை. எனக்கு வீடு என்பது எப்போதும் இருக்காது. அதனால் தான், நான் உன்னைக் கூப்பிடவேயில்லை. ஒரு வேளை திருமணம் நடந்திருந்து, நான் வீடு பிடித்திருந்தால் இன்று நீ இறந்திருக்க மாட்டாய்.( (திருமணம் நடந்திராத போதும் நான் உன்னை அழைத்திருக்க வேண்டுமா? ’நம் வீட்டில் ஒரு கிறித்தவப் பையனை சேர்க்கக் கூடாது’ என்று என் மனைவி சொல்லியிருக்கலாம். ஏனெனில் அவள் என் மதம், இனம் சேர்ந்தவளில்லை. என் மனைவியிடமிருந்து வருகிற வேண்டுகோள் என்பதால் ஒரு வேளை நான் அதற்கு இணங்கியிருக்கலாம்)
இன்னும் இருக்கிறது. நான் பவுலோசுக்கு அவன் செய்த வேலைக்காக பணம் கொடுக்கக் கடன் பட்டிருக்கிறேன். அவன் ஆரம்பத்தில் சொன்னான், ’சார், சம்பளத்தை நீங்களே வைத்திருங்கள். மொத்தமாகச் சேர்ந்தவுடன் அதை வைத்துக் கொண்டு நான் ஒரு ’பான் ஷாப்’ ஆரம்பிப்பேன்’ என்று.
அவன் அதைச் சொன்ன போது, அவன் கண்கள் ஒளி மிகுந்த எதிர்காலத்தைக் கண்ட மகிழ்ச்சியில் சிரித்ததை என்னால் உணர முடிந்தது. சொந்தமாக ஒரு பான் ஷாப் வைக்க வேண்டுமென்பது அவனுடைய பெரிய கனவாக இருந்தது. அவன் அதைப் பற்றி எப்போதெல்லாம் பேசுகிறானோ அப்போது அப்பகுதியில் பெரிய ஜவுளிக் கடை வைத்திருக்கும் வர்க்கீஸ் பற்றியும் பேசுவான். அந்த அழகான கடையில் வானவில் பார்டர்களோடு வெள்ளை, சிவப்பு, நீலம் என்று பல வண்ணங்களில் புடவைகள் தொங்கிக் கொண்டிருக்கும். நியான் பல்புகளின் வெளிச்சத்தின் கீழ் ’வர்க்கீஸ் ஸ்கரியா & சன்ஸ், ஜவளி வியாபாரிகள்’ என்று கடையின் பெயர்ப் பலகை மின்னும். வர்க்கீசுக்கும் அதிர்ஷ்டம் ’பான் ஷாப்’ பிலிருந்துதான் வந்தது.
பவுலோஸ் தன் எதிர்காலத்தைப் பற்றிப் பேசும் போதெல்லாம் நானும் இயல்பாக அவனது கற்பனை உலகத்திற்குள் போய் விடுவேன். லேசான பரிகாசக் குரலில் ’ஞாபகம் வைத்துக் கொள். சில காலத்திற்குப் பிறகு என் மகளின் திருமணத்திற்குச் ஜவுளி எடுக்க நான் உன் பிரமாண்டமான துணிக்கடைக்கு வருவேன். தயவு செய்து கடனில் ஜவுளி தர வேண்டும்..”
அவன் தலையைக் குனிந்து கொண்டே வெட்கத்துடன் போய் விடுவான்.
ஆனால் நகரத்திற்கு வந்த பிறகு அவனுடைய மொத்தமான கூலிப் பணத்தை என்னால் தர முடியவில்லை.( அப்போது தனியார் கல்லூரியில் வேலை பார்த்த ஒரு சாதாரண ஆசிரியர் நான் ) அந்தப் பழைய வீட்டை விட்டுக் காலி செய்யும் போது விரைவில் அந்தப் பணத்தை அனுப்பி விடுவதாக அவனிடம் சொன்னேன். மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ரயில் நிலையத்தில் என்னை விடுவதற்காக நண்பர்கள் காத்திருந்தனர். எவ்வளவோ முயன்றும் என்னால் பவுலோசைப் பார்க்க முடியவில்லை. ஒரு நிமிடத்திற்கு முன்னால் தான் என் பெட்டி ,படுக்கையை காரில் வைத்து விட்டுப் போயிருந்தான்.
பவுலோஸ் எங்கே?
நான் அவனைத் தேடிக் கொண்டு வீட்டினுள்ளே போனபோது அவன் கண்களில் கண்ணீர் வடிய சமையலறைச் சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.
’நான் அவனுக்குச் சம்பளம் தராததால் அவன் அழுகிறான் ’ என்று நினைத்தேன். அவன் உள்ளங் கையில் ஐந்து ரூபாயை அழுத்தி விட்டு, ’பவுலோஸ், அழாதே! அங்கு போனவுடன் உனக்குப் பணம் அனுப்பி விடுகிறேன் ’என்றேன். அவன் விம்மிக் கொண்டே’ சார், எப்பொழுது முடியுமோ அப்போது சம்பளம் தந்தால் போதும்! நீங்கள் என்னைப் பற்றி அப்படி நினைத்து விட்டது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. தயவுசெய்து என்னை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். நானும் உங்களுடன் வருகிறேன். எனக்கென்று வேறு யாருமில்லை..’
அவன் அந்த ஐந்து ரூபாயை வாங்கிக் கொள்ளவில்லை.
எனக்குத் திருமணமாகி வீடு பார்த்தவுடன் அவனை அழைத்துக் கொண்டு போவதாக உறுதியளித்து விட்டுக் காரில் ஏறினேன். ரயில் நிலையம் வரை என்னோடு காரில் வர அவன் ஆசைப்படுவான் என்று அப்போது எனக்குத் தோன்றவில்லை. ஆனால் மூன்று மைல் தூரம் ஓடி வந்து, ரயில் நிலையத்தில் அவன் நின்று கொண்டிருந்தது எனக்குள் வலியை ஏற்படுத்தியது.
அது இரவு நேரம். தூறிக் கொண்டிருந்தது. காலியான அந்த ரயில் நிலையத்தில் நான் நண்பர்களோடு நின்று பேசிக் கொண்டிருந்தேன். திடீரென அவனை நான் பார்த்து விட்டேன். விளக்குக் கம்பத்திலிருந்து விழும் கருப்பு நிழலாய், மிகச் சிறிய இடைவெளியில் அவன் நின்றிருந்தான். நான் அதிர்ந்து போனேன்.
பவுலோஸ்!
அது அவன்தான்.
’ஏன் வந்தாய், பவுலோஸ்! இரவில்! அதுவும் இந்த மழையில்?’
’உங்களுக்கு விடை கொடுக்க சார்! ’
நான் அவனருகில் போன போது அவன் முகம் செம்மையானது. கண்கள் நீரில் மிதந்தன. ஒரு சிறிய பொட்டலத்தை என்னிடம் தந்து ’இது உங்களுக்கு மாஸ்டர்! என் பரிசு…’
சொல்ல வந்ததை அவனால் முடிக்க முடியவில்லை. தன் உள்ளங் கைகளால் முகத்தை மூடிக் கொண்டான். விளக்குக் கம்பத்தைப் பார்த்து திரும்பி நின்று விம்மினான். அந்தப் பொட்டலத்திற்குள் விலை மலிவான ஒரு சாக்லெட் மிட்டாயிருந்தது.
ஓ, பவுலோஸ், அந்தக் கணத்தில் எனக்குள் ஏற்பட்ட வலியை உன்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. உனக்கு எப்போதும் அது தெரியவும் கூடாது. உன்னைக் கட்டித் தழுவிக் கொண்டு உன்னோடு சேர்ந்து அழ வேண்டுமென்று நினைத்தேன். உன்னைத் தடவிக் கொடுத்து ’நீ என் தம்பி. உன்னை எப்போதும் மறக்க மாட்டேன் ’என்று சொல்ல நினைத்தேன்.
ஆனால் ஒரு சின்னக் குழந்தை விளக்குக் கம்பம் புறம் திரும்பி, ,உள்ளங் கைகளால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு அழுததைப் பார்க்க மட்டுமே என்னால் முடிந்தது.
( நான் ஒரு நம்பூதிரி, நீ ஒரு கிறித்தவன்..
நான் மாஸ்டர், நீ சேவகன்,
நான் ஓர் இளைஞன், நீ ஒரு குழந்தை)
எனக்குள் சோகம் கடலாய் ஆர்ப்பரித்தது. அதன் அலைகள் என் கண்கள் வழியாக வெளியேற, நான் முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தேன். அவனுக்கு முன்னால் என் பலவீனத்தைக் காட்ட முடியாமல்…
என் அருமைக் குழந்தை!
அசாதாரணமான அந்த அன்பின் மொழியும், மலிவான அந்த சாக்லெட் மிட்டாயும் இன்னமும் எனக்குள் கசிந்து கொண்டிருக்கிறது.
ரயில் கிளம்பியவுடன், நான் தலையைத் திருப்பிக் கொண்டு காலியான அந்த பிளாட்பாரத்தை பார்த்தபடி இருந்தேன். நாணல் கட்டுக்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. அந்தப் பழைய ரயில் நிலையத்தின் அலுவலகக் கட்டிடம் அதன் சுவர்கள் கரியால் மூடபட்டிருந்தன. அருகிலிருந்த குல்மஹர் மரத்தின் இலைகள் பசுமையாகப் பரவியிருந்தன. தெரு விளக்கின் அருகிலிருந்த குல்மஹர் மரத்தினடியில் விளக்குக் கம்பத்தின் நிழல் கருமையாய்ப் பரவியது போலிருந்தது.
’எனக்கு யாருமில்லை, மாஸ்டர்! உங்களோடு என்னை அழைத்துச் செல்லுங்கள், மாஸ்டர்!’
அந்த வார்த்தைகளே எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அது உண்மைதான். அவன் மீது அன்பு காட்ட யாருமில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே தாய் இறந்து விட்டாள். அவன் தந்தை, மத்தாய் மாப்பில்லா ஒரு குடிகாரன். அவருக்கு இன்னொரு மனைவியும், குழந்தையுமுண்டு. அவர்களுக்குப் பவுலோசைப் பிடிக்காது. அப்பா குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, அவனை விளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து தாறுமாறாக அடிப்பார் என்று என்னிடம் சொல்லியிருக்கிறான். ஆற்றின் மறு பக்கத்தில் வைக்கோலால் வேயப்பட்ட ஒரு சின்ன வீட்டைப் பார்த்திருக்கிறேன். மிக வறுமையான, கனிவில்லாத அந்தக் குடும்பத்திற்கு அவன் திரும்பிப் போவது என்பதும் மிகச் சங்கடமான நிலைதான்.
நான் கிளம்பி வந்த பிறகு, அவன் எதிர்மறையான ஓர் உலகிலேயே வாழ்ந்திருக்க வேண்டும். என்னோடு வந்து இருக்கப் போகும் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு,ஒவ்வொரு நாளும் அந்த செய்திக்காகக் காத்திருந்திருப்பான். எனக்குத் திருமணமான பிறகு எங்கள் வீட்டிற்கு உதவியாளாக வர அவன் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்திருப்பான்.
ஆனால் அந்தத் திருமணம் நடக்கவில்லை பவுலோஸ். அது நடக்கவும் போவதில்லை. என்னுடைய ஆசைகள் எல்லாம் மடிந்து விட்டன. என் கனவுகள் எல்லாம் சிதைந்து அழிந்து விட்டன. நான் உடைந்து போனேன். உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் நான் உன்னை மறக்கவில்லை. ஜூன் மாதத்தின் மழைக்கால காலைகளில் ஈரமான தோற்றத்தோடு நீ என் முன்னால் வந்து நிற்பாய். இருள் மறைந்து, அடிவானத்தில் செம்மை எழும் பொழுதில் ஒரு சின்னப் பையன் மிகப் பெரிய சட்டை அணிந்து கொண்டு அடர்த்தியான தலை முடியோடு, கையில் ஒரு கடிதத்தோடு வருவான். உன் கையிலிருந்த அந்தக் கடிதம் – மிக நீண்ட அந்தக் கடிதம் அந்தப் பெண்ணால் எனக்கு எழுதப்பட்ட கடைசிக் கடிதமாக இருக்கலாம். அந்தக் கடிதம் எனக்கு ஒரு போதும் கிடைக்காது. சாவு – அந்தக் கொடூர உண்மை, ஏற்கெனவே உனக்கும் எனக்கும் இடையே விழுந்து விட்டது. தார் ரோட்டின் ஓரத்தில் குருதியில் குளித்தவனாய்க் கிடக்கிறாய்..
யாரிதைச் செய்தது? உன் பான் ஷாப்பை அழித்தது யார்? உன் ஜவுளிக் கடைக்கு தீ வைத்தது யார் ?
போலீஸ்காரர்கள்தான் செய்தார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். கருப்பு அங்கியணிந்த பாதிரியார்கள் செய்தனர் என்று சிலர் சொல்கிறார்கள்.
நான் இது எதையும் நம்பவில்லை. யார் செய்தார்களென்று எனக்குத் தெரியும்! உன் வானளாவிய கனவை — மகிழ்வை யார் சுட்டுத் துளைத்தார்கள் என்று எனக்குத் தெரியும்.
நாம்தான் அதைச் செய்தோம். நாம் — நான் உள்பட.
என்னையும் அதில் சேர்த்துக் கொள்ளும் போது உன்னால் அதை நம்ப முடியாது. நீ நம்புவாயா? நான் சொல்வதைக் கேள். நமக்கு இது கேலிதான். பெயருக்குப் பின்னால் பட்டமிருக்கிறது. மிகையான வாழ்வாதாரம் நமக்கிருக்கிறது.
மாலை நேரங்களில் மைதானத்திற்குப் போய், தத்துவார்த்தனமான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறோம். சோர்வைத் தவிர்க்க ஹோட்டல் போன்ற இடங்களுக்குப் போனால் உங்களைப் போன்ற அப்பாவிகள் உற்சாகத்தின் உச்சத்துக்குப் போய் விடுகிறீர்கள்…நீங்கள் அப்படிப் போகும் போது, சாவு என்னும் கொடூரம் உங்களைச் சிதைத்து விடுகிறது.
பவுலோஸ் ! நாங்கள்தான் உன்னையும் கொன்றோம். (இது முதல் சம்பவமில்லை, கடைசியானதுமில்லை) இந்த விளையாட்டைத் தொடங்கி ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகி விட்டது.
ஒரே ஒரு வித்தியாசம், ஒவ்வொரு சகாப்தத்திலும் வெவ்வேறு பட்ட முறையில் நாம் கொலை செய்கிறோம். வெகு காலத்திற்கு முன்னால் உங்களை ஏதென்சின் இருட்டு அறையில் தள்ளி, நஞ்சைக் கொடுத்து கொன்றோம். அப்போதும் நீங்கள் உயிருடனிருந்தால், ரோம் நகர வீதிகளில் எரித்தோம். தலையில் முட்களைக் குத்தியும்,தோளில் கனமான சிலுவையை சுமக்க வைத்தும், தூக்கிய சிலுவையாலே உங்களை அழித்தோம். மெக்காவிலிருந்து மெதினாவுக்குப் போகும் போது கல்லால் அடித்தோம். கடைசியில் ஜனவரியில் நெஞ்சில் மூன்று முறை சுட்டோம்.
இப்போது மீண்டும்…
நீ தார் சாலையின் ஓரத்தில் ரத்தக் குளியலில் கிடந்தாய்.
ஓ பவுலோஸ்! நீ தொலைவிலுள்ள நகரத்தின் தார்ச் சாலையில் மட்டும் விழுந்து கிடக்கவில்லை. பலவீனமான என் மனசாட்சி என்னும் தாரில்லாத தெருவில் நீ ரத்தம் சூழப் படுத்திருந்தாய். அனாதையான மதிப்பற்ற மனிதாபிமானத்தின் ரத்தக் குளியலில் இரக்கத்திற்குரிய நிலையில் கிடந்தாய்.
உன் ரத்தத்தால் உன் கதையை எழுத்த தயாராகும் போது, பக்கத்திலுள்ள மைதானத்தில் உன்னைப் பற்றி தலைவர் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கிறேன்: உடல் தரையில் விழுந்து கிடந்த போதிலும், சாவு என்பது இல்லை. அவன் தோற்கடிக்கப்படாத மனிதன். அவனுக்கு இறப்பு இல்லை. அவன் மீண்டும் மீண்டும் பிறப்பான்!’
என்ன ஒரு மனநிலை !
எவ்வளவு பெருமை! அந்தத் தலைவர் உன்னைச் சுட வைத்து விட்டு, நாளை உன்னைக் கொல்லுவார். ஓ! நீ இறக்கக் கூடாது!
’அவனுக்கு இறப்பேயில்லை. அவன் மீண்டும் பிறப்பான்.
இது சரியா பவுலோஸ்? உனக்கு இறப்பில்லையென்றால், என் மனசாட்சி வீதியில் திறந்த வாயோடு, அரையாக மூடிய கண்களோடு ரத்தக் குவியலில் கிடப்பது யார்?
நீ மீண்டும் பிறப்பாயா?
அப்படியெனில்…நீ மீண்டும் பிறந்தால்..
உன்னிடம் ஒரு வேண்டுகோள். இந்த பூமிக்குத் திரும்ப வராதே. நீ இங்கு பிறந்தால் மீண்டும் நாங்கள் உன்னைக் கொல்வோம். தயவு செய்து மீண்டும் இங்கு வராதே.
அன்பு தழுவிய அப்பாவித் தன்மையின் உயிர்ப்புச் சக்தியாக நீ இருந்தாய். தூய்மையின் புன்னகையும் கூட . அதனால்தான் நீ வெண்தாமரையாய் மலர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதுவும் கூட தேவையற்றது தான். மனிதனின் கை தாமரை மலரின் தண்டை நோக்கி நீளும். தயவுசெய்து மீண்டும் இங்கே பிறக்காதே, பறிக்கப் படுகிற ஒரு மலராய்க் கூட.
கண்ணுக்குப் புலப்படாத எல்லையற்ற நட்சத்திர உலகத்திற்கு அப்பால் தொலைவில் நீ வாடாத மலராக விரிந்திருக்க வேண்டும். திகில் தரும் இரவுகளை உன் புன்னகை கீற்றால் அலங்கரிப்பாய்.
ஜூன் மாதத்தின் வைகறைகளில், மதிய ஒளியில், செம்மையான அந்தியில் ,கரும் இரவுகளில் தொலை தூரத்திலிருக்கும் உன்னை இங்கிருந்தே நான் தேடிக் கண்டு பிடிப்பேன். பிறகு அமைதியாகப் பிரார்த்திப்பேன் : சொர்க்கத்திலுள்ள புனிதமான தேவன் உரிய வழி காட்டுவான்!”
இப்போது வெள்ளை, சிவப்பு, நீல நிறப் பட்டுகள் சொர்க்கத்தில் விரிந்து கிடக்கின்றன; அங்கே நீ உருவாக்கியிருக்கும் ஜவுளிக் கடையில் உள்ள வானவில் பார்டரோடு இருக்கும் புடவைகளை நீ எனக்கு அனுப்பி வைப்பாய். நட்சத்திரங்களாகிய நியான் பல்புகளின் வெளிச்சத்தில் ’பவுலோஸ் மத்தாய் ஜவுளிக் கடை வியாபாரி ’என்று எழுதியிருக்கும் கடைப் பெயர்ப் பலகையைக் கூட என்னால் படிக்க முடிகிறது.
எனக்குப் பிறக்கவேயில்லாத மகளின் திருமணத்திற்காக நான்ஜவுளி வாங்க வரும்போது, பவுலோஸ், தயவுசெய்து அவற்றை நீ எனக்குக் கடனில் தர வேண்டும்….!
———————-
நன்றி : The Greatest Malayalam Stories Ever Told A.J.Thomas , Aleph Company ,India
முந்தைய ஆக்கம்
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
