சோர்வு & இரவின் இருள்

சோர்வு

நல்ல கனமழை பெய்த பின்
மண்ணின் நிறத்தில் ஆற்றில்
வேகமான நீரானது
மீன்களுக்கு சவால் விட்டு
ஓடியது கண்டு நாங்கள்
ஆற்றிலிறங்கவில்லை
நான்கைந்து நாட்களில் நிறம்
மாறி மெதுவாக ஓடி கரையிலிருந்த
எங்களை கையாட்டி கூப்பிட்டது
குளிக்க உடைகளை களைந்து
கூச்சலிட்டு குதூகலத்தோடு
ஆற்றில் குதித்தோம்
புரண்டு மல்லாந்து படுத்த ஆறு
எங்களை தாங்கி மிதக்க விட்டது
நீச்சலடித்து கரையேறியதும்
மீண்டும் குதிக்க வேண்டி
கூப்பாடு போட்டு அழைத்தது
நீரில் உருட்டி விளையாட்டு காட்டி
தானும் மகிழ்ந்தது
உச்சியிலிருந்து வேடிக்கை பார்த்த
சூரியனின் ஆக்ரோஷம் செல்லுபடியாகாததால் மெல்ல தணிந்தான்.
சோர்வடைந்த ஆறு எங்களை கரையில் ஏற்றி விட்டு
படிகளில் அமர்ந்து இளைப்பாறியது.

நீண்ட காலமாக என்னைக்
காணாத படித்துறையும் ஆற்று நீரும்
பாலத்தின் தூணிலிருந்து தன் மீது
பாய்ந்த உடலை நுரையில் தாங்கி
மிதக்க வைத்தது
கரையிலிருந்த பெரும் ஆல் தன் நீளமான கைகளை நீட்டி
பிடிக்க முயன்றது
தப்பித்து சுழன்று விளையாட்டு காட்டி எதிர்பாராத நேரத்தில்
தொங்கும் கைளை பிடித்து
தொங்கி ஊஞ்சலாடி
நீரில் குதித்தேன் பின்
தொடர்ந்த ஆல் ஆற்றில் இறங்கி
என்னுடன் விளையாடியது
நீண்ட நேரம் விளையாடி
கரையேறினோம்
கைகளைப் பிடித்த ஆல் நாளையும்
வருவாயா காத்திருப்பேன் என்றது.
பல்லாண்டு பழக்கம் தட்டிக்கழிக்க
மனமில்லாமல் தலையாட்டி
சரி என்றேன் குதூகலத்தில்
ஆற்றில் “டைவ்” அடித்தது

மயங்கும் ஆளில்லா மாலை
பொழுது
பெரும்பரப்பில் தாமரை மலரும்
குளம்
குளத்தின் நடுவிலிருந்து சிரிப்பொலி கேட்டது
அகன்ற இலைகள் மேல்
நடந்து நடு குளத்தில் தாமரை மலர்கள் சூழ்ந்திருக்க அணுகினேன்
சிரிப்பொலி ஒடி ஒளியும் சப்தம்
கேட்டது
குசுகுசுவென்ற மெல்லிய பேச்சொலி எழுந்தது
சோகத்தோடு எழுந்த ஒலி
எங்களை பறிக்க வேண்டாம்
விட்டுவிடுங்கள் நடுவில் பிறந்தது
அதற்காகவே என்றன
பறிக்க வரவில்லை ஆதரிக்கவே
வந்தேன் ஆதரவாக பூக்களை தடவினேன்
ஸ்பரிசத்தின் உணர்வினால் கூட்டாக நெகிழ்ந்தன
கூடி நடுவில் இலைகள் மேல் .
ஆனந்தக் கூத்தாடினேன்.

தேன்மதுரத் தேநீரின் மணம்
என்னை தூக்கிக் கொண்டு
நடந்தது
கண் மூடி சுவைத்த போது
நாவினுள் பட்டு எல்லையிலா
பிரபஞ்ச வெளியில் நின்றிருந்தேன்
நுண்ணிய கசப்புடன் துவர்ப்பும்
இனிப்புடன் தேனினிமையானது
மெல்ல மெல்ல மிதந்தபடி
பிரக்ஞை பிரபஞ்சமானது
கோடியில் ஒருவருக்கே எஞ்சும்
சூச்சும புல்வெளியில் படர்ந்து
வெல்வெட்டு படுக்கையில் புரண்டு
படுத்து பார்த்தது
விழிப்பு தட்டியது தேநீர் கோப்பை
காலியானது கசப்பின் சுவை
நாவில் மனதில் நினைவில்
படிந்தது.


இரவின் இருள்

மாய உலகில் மிதக்கும்
செங்கற்களால் கட்டப்பட்ட வீடு
நிலையும் நிலைக்கதவும்
வீர்ய நீரில் மூழ்கி வளர்ந்த
விநோத மரத்தாலானது
கூடமும் சமையற் கட்டும்
ஒரே நேர் பாதையை கொண்டது
இரு படுக்கையறைகளிலும்
என்னின் பிம்பங்கள்
ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு
மிதந்தபடி தூங்க விழித்திருந்தது
இரவு
பகலை தேடிய போது இரவினுள்
ஒளிந்திருந்தது
ஒளிந்திருந்ததை ஒளிந்திருந்து பார்த்த போது
தூங்க ஆரம்பித்தது இரவு


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.