டேனியல்புரம்

 முதன் முதலில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் உச்சியில் அவரை டிவிட்டரில் சந்தித்தேன்.

அடக்கமான குரல், சிந்திக்க வைக்கும் வார்த்தைகள். மிகு உணர்ச்சி கிடையவே கிடையாது. 

நான் தூத்துக்குடி வாசி தான் என்று ஒரு முறை உள்பெட்டியில் அறிமுகப்படுத்திக் கொண்டேன். கவலை தெரிவித்தார். “கேன்சர் பத்திரம்,” என்றார்.

என் பிள்ளைகளைப்  பற்றி அவ்வப்போது விசாரித்தார். பிறகு போராட்டம் வெற்றி பெற்ற பின் கலைந்து சென்றோம். 

சில வருடங்கள் சென்ற பின் பிரியாவிற்கு  உடம்பு சரியில்லாமல் போன போது டேனியல்புரம் அரசு மருத்துவமனையில் அவர் நினைவு வந்தது.

பிரியாவுடன் கேன்சர் வார்டு வழியே போனேன். எவ்வளவு சிறியவர்கள். முடி எல்லாம் உதிர்ந்து போய்….

அங்கே விசாரித்துக் கொண்டிருக்கும் போது தான் அவர்கள் பலரும் அடுத்த அடுத்த தெருவினர் என்று தெரிந்தது! 

கல்லூரியில் புள்ளிவிவரயியல் படித்திருந்தேன். ஆனால் அதற்குச்  சம்பந்தமில்லாத தொழில். 

வேலை பொழுது போக பிற நேரங்களில் டேனியல்புரத்தின் அருகே சுற்றி வரத் தொடங்கினேன். முதலில் சில தெருக்கள். 

பின் அவற்றின் நடுவே இருந்த எத்தியாள் ஏரிக்கு மறுபுறம். 

சீக்கிரத்தில் என் வீட்டில் தூத்துக்குடியின் பெரிது செய்யப்பட்ட வரைபடத்தை வைத்துக் கொண்டேன். முன்னூறு வீடுகள். பத்து சதவிகிதம் போதுமானது – ஆனால் என்னிடமோ இருபது சதவிகிதத்திற்கு கேன்சர் பரவலாக இருப்பதற்கான ஆதாரம் இருந்தது.

அரசிற்கு கடிதம் எழுதினேன் – காத்திருந்தேன்.

மூன்றாவது மாதம் சலித்துப் போய் தான் அவரை டிவிட்டரில் மறுபடி தொடர்பு கொண்டேன்.

அதுவே என்னை துப்பாக்கியைத் திருட வைத்தது.

*

“நல்லா நினைவிருக்கும்மா…எப்படி இருக்க? பசங்க?”

“நல்லா இருக்காங்க சார்.”

“தூத்துக்குடி காத்து இப்போ க்ளியரா இருக்குன்னு கேள்விப்பட்டேன்?”

“அது பத்தி தான் சார் உங்க கிட்ட பேசணும்.”

அவரிடம் டேனியல்புரம் கேன்சர் ஆய்வு குறித்து முழு விவரம் சொன்னேன். 

“நீ தனியா பண்ணியா?”

“ஆமாம் சார்.”

“இது எந்த ஏரியா? மேப்ல சொல்லு?”

நான் மேப் சுட்டி அனுப்பி வைத்தேன்.

சற்று நேரம் அமைதி – பிறகு:

“இது ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து தள்ளி இருக்கேம்மா?”

“ஆமாம் சார். இது வேற ஏதோ…அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.”

“அப்டி நம்ம தடார்னு சொல்லிட முடியாது. இருந்தாலும் நல்லா  பண்ணியிருக்க. முழு டேட்டா எனக்கு அனுப்பி வைக்குறியா?”

“பண்றேன் சார். நீங்க தான் கொஞ்சம் ஆன்லைன்ல கவர்ன்மெண்டுக்கு அழுத்தம் கொடுக்க உதவணும். உங்க பழைய  நெட்வர்க் எல்லாம் இருப்பாங்களே?”

“கட்டாயமா.”

*

“உமா, டேட்டா முழுக்க பாத்திட்டேன். செமை உழைப்பு. தெருத்தெருவா நடந்திருக்கீங்க?”

“நன்றி சார்”

“நீங்க சொன்னா மாதிரி இது வேற ஏதோ ஃபாக்டரின்னா நினைக்கிறீங்க?”

“ஆமா சார். இது சமீபத்துல நடந்ததும் இல்லை. அந்த ஏரியாவில் பத்து வருஷமா இருக்கிற பிரச்சினை தான். நாம எல்லாம் ஸ்டெர்லைட் போராட்டத்தில இருந்த போதே இது போயிட்டு இருந்திருக்கு.”

“கவர்ன்மெண்ட் கிட்ட என்ன கேட்டிருக்கீங்க?”

“தனி கமிட்டி போடச் சொல்லி அந்த ஏரி தண்ணிய சாம்பிள் எடுத்து…”

“அவங்க இது வரை ஒண்ணும் செய்யலை?”

“இல்ல சார்.”

“இந்த டேட்டா நல்லா பாத்தேன். இதுல கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரில இருந்து சில பேஷண்ட் விவரம் இருக்கு. எப்படி எடுத்தீங்க அதை? கொடுக்க மாட்டாங்களே?”

“நான் கேட்டா கொடுப்பாங்க சார்.”

சிறு அமைதி.

“புரியலை.”

“நான் இங்க போலீஸ்ல தான் சார் இருக்கேன். ஏதாவது காரணம் சொல்லி கேட்டா தருவாங்க.”

இரண்டு நாட்களுக்கு மறுமொழி வரவில்லை. போலீஸ் என்றவுடன் தேவையில்லாமல் பயந்து விட்டார் என்று நினைத்துக் கொண்டேன்.

வேறு யாரை அணுகுவது என்று யோசிக்கும் போது அவரிடம் மறுமொழி வந்தது:

“உமா, எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்.”

“சொல்லுங்க சார்.”

*

எனக்கும் நினைவு இருந்தது – தூத்துக்குடி போராட்டத்தின் முடிவில் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் சென்ற போது நடந்த துப்பாக்கி சூடு. அப்போது நான் போலீஸ் வேலைக்கு முயன்று கொண்டிருந்தேன். அந்த சம்பவம் நடந்த போது எனக்கு வந்த ஆத்திரம் சொல்லி முடியாது. பல நாட்கள் டிவிட்டர் பக்கமே போகவில்லை – சனியன்கள் இதையும் ஆதரித்து எழுதிக் கொண்டிருந்தார்கள்.

உள்பெட்டியில் என் டிவிட்டர் நண்பர் ஒரு சுட்டி அனுப்பி வைத்தார். அது ஒரு ட்விட்டர் திரி. ஐந்து வருடங்களுக்கு  முன்னால், ஸ்டெர்லைட் போராட்டத்தின் இறுதியில், துப்பாக்கிச் சூட்டிற்கு சில நாட்கள் கழித்து  டிவிட்டரில் போடப்பட்ட சிறு வீடியோ.

ஒரு டிரோன் ஷாட். கீழே தூத்துக்குடி தானா என்று கூடத் தெரியவில்லை. ஆனால் சற்றுத் தள்ளி ஒரு கூட்டம் தெரிந்தது. வீடியோவில் ஒரு சிறு X தோன்றியது – ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடி. X இன்னும் கூர்ந்து பாத்தால் அங்கே ஒரு உருவம் படுத்திருந்தது. 

X இப்போது sniper என்று மாறியது.

வீடியோ முடிந்து விட்டது..

ஆனால் அதன் கீழ் அந்த ட்விட்டர் திரியில் பெரிய ரகளையே நடந்திருந்தது – அது தூத்துக்குடி கலவரத்தின் போது மேலிருந்து எடுக்கப்பட்ட டிரோன் ஷாட் தான் எனவும்; இந்த மறைந்திருந்த துப்பாக்கியின் குண்டினால் தான் முதல் சாவு நிகழ்ந்ததாகவும் ஒரு சாரார்.

அதற்குப் பதிலாக போராட்டத்தை எதிர்க்கும் எதிர் சாரார் எழுதியதில் ஒரு பதிவை என் நண்பர் எனக்கு சுட்டிக் காட்டியிருந்தார். 

“வீடியோவில் காட்டும் அந்த கட்டிடத்தை நான் அறிவேன்,” என்று அந்தப் பழைய  பதிவில் யாரோ ஒரு ஆள் எழுதியிருந்தார்.  “அங்கே மேலே ஒருவர் படுத்திருந்தால் கூட்டத்திற்கும் அவருக்கும் நடுவே சுட angle கிடையாது. குறுக்கே தடைகள் உண்டு. யாரோ மொட்டைமாடியில் வடகம் காயப் போட வந்தவர்களை இவர்கள் sniper  என்கிறார்கள்.” 

*

“இவங்க  எல்லாம் இது போல அடிச்சு விடக் காரணம் நான் துபாயில் இருக்கிறது தான்,” என்றார் என் டிவிட்டர் நண்பர். “அந்தக் கட்டிடத்தில் இருந்து Sniper சுட முடியாது, Line of fire கிடையாதுனு னு சொல்ற அந்த ஆள் தூத்துக்குடி பக்கமே போயிருக்க மாட்டான். நேரில் பார்த்தது போலப் பொய் சொல்றான்.”

எனக்கு அவர் என்ன கேட்க வருகிறார் என்று புரிந்தது.

“நல்லவேளை, நீ தூத்துக்குடில இருக்க. போலீஸ் வேற. உன்னால் நம் தரப்பே சரினு கட்டாயம் நிரூபிக்க முடியும்.”

எனக்கு உள்ளே இதயத்தை யாரோ பிசைவது போல இருந்தது. யார் இந்த ஆள்? இவனிடம் நான் எப்படி வந்து மாட்டிக் கொண்டேன்?

“கலவரம் நடந்தது மாலை வேளை,” அவர் தொடர்ந்தார். “அந்த துப்பாக்கி கட்டாயம் உங்க கமிஷனர் ஆபீஸ்ல இருக்கும். என்ன செய்யணும்னு நான் உனக்குச் சொல்லவே வேண்டாம்.”

“ஆனா, சார், இந்த வீடியோ தூத்துக்குடி போலவே இல்லையே? வேறு ஏதோ ஊர்ல இருந்து எடுத்து போட்ட மாதிரி இருக்கு?”

“அது முக்கியமில்லை,” என்றார் அவர். “அந்த ஆள் அன்னிக்குச் சொன்னதைப் பொய்யாக்குறது தான் முக்கியம்.”

*

நான் சில நாட்கள் டிவிட்டர் பக்கம் செல்லாமல் இருந்தேன். ஒரு வாரம் கழித்துத் திறந்த போது அவர் உள்டப்பியில் பலமுறை மெஸேஜ் அனுப்பியிருந்தார்.

கடைசியாக முந்திய நாள்:

 ”சிரமப்பட்டு டேனியல்புரம் எத்தியாள் ஏரி  பற்றி ஆதாரம் சேர்த்திருக்கிறாய். ஆனால் முறைகேடாக அரசு மருத்துவமனையில் சில நோயாளிகளின் விவரம் வாங்கியிருக்கிறாய். வெளியே சொன்னால் அதை வைத்தே உன் ஆதாரத்தை அழித்து விடுவார்கள்,” என்றார்.

மறு நாள் அந்தத் துப்பாக்கி இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டேன். 

*

கலெக்டர் அலுவலகத்தின் பக்கத்தில் சில மூன்று, நான்கு மாடிக் கட்டிடங்கள் இருந்தன. அவற்றில் அவர் ஒன்றைப்  பொறுக்கி எடுத்தார். நாளும் கிழமையும் நேரமும் அவரே குறித்தார்.

முந்தைய தினம் இரவு கமிஷனர் அலுவலகத்தில் துப்பாக்கி இல்லை என்று கண்டு கொண்டார்கள். உண்மையில் அந்த வகை துப்பாக்கி அங்கே இருப்பதே பெரும் ரகசியம். நான் எதிர்பார்த்தது போலவே வெளியில் தெரியாமல் தூத்துக்குடி காவல் துறையே சமாளிக்க முயன்றார்கள் – விசாரிக்க அவர்கள் கொண்டு வந்த ஆளை எனக்கு தெரியும். 

துப்பாக்கி என் வீட்டில் தான் இருந்தது.

இரவு என் ட்விட்டர் நண்பரிடம் கடைசி முறையாகப் பேசினேன் (அவரை ஏன் இன்னும் நண்பர் என்று அழைக்கிறேன் தெரியவில்லை). 

“உண்மையில்  இந்த டேனியல்புரம் கேன்சர் விஷயம் வெளிய வந்தா உங்களை போல கார்பரெட்டுக்களுக்கு எதிராகப் போராடுறவங்களுக்கு வெற்றி தானே? பிறகு எதுக்கு இந்த sniper விஷயத்தில் வெற்றி தேவைப்படுது?”

அவர் வெறும், “Lol,” என்று அனுப்பினார்.

மறுநாள் மாலை நான் கலெக்டர் அலுவலகம் கிளம்பும் போது என் போனில் அவர் பதில் வந்திருந்தது.

“நீ கண்டுபிடிச்சது நம் தரப்புக்குத் தோல்வினு முதல்ல நீ  புரிஞ்சுக்கணும். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது வேற நிறைய இடங்கள்ல இது போல மாசுபட்ட இடங்கள் இருக்காதானு நம் எதிர் தரப்பு கேட்டுக் கொண்டிருந்தார்கள். நீ கண்டுபிடிச்சிருக்கிறது அதுக்கு வலுச்  சேர்ப்பது, இல்லையா? இப்போ ஸ்கோர் 1-1னு ஆயிடும்”

பின்: “வெற்றியோடு திரும்பி வா! அங்க போய் டிவிட்டர்ல லைவ் போட மறந்துறாதே.”

*

மாலை ஐந்து மணிக்கு அரசு அலுவலகங்களில் இருந்து வரும் கூட்டம். பலரும் அங்குமிங்கும் அந்தச் சாலையில் போய் வந்தார்கள். வாகனங்களின் அலறல். 

என் நண்பர் குறித்துக் கொடுத்த அந்தக் கட்டிடம் முழுவதும் கடைகள். எளிதில் யாரும் கவனிக்காமல் மொட்டை மாடி போய் விட்டேன். ஒரு கித்தார் பையில் துப்பாக்கியின் பாகங்களை வைத்திருந்தேன்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒருவன் முதல் குண்டடி பட்டு விழுந்த இடத்தின் அருகில் ஒரு விளக்குக் கம்பம் இருந்தது. அதுவே எனக்கு ஒரு அடையாளம். துப்பாக்கியை அதன் ஸ்டாண்டில் வைத்து விட்டு முகத்தில் முகமூடி போட்டுக் கொண்டேன். பிறகு தான் ட்விட்டர் லைவ்.

நான் எதிர்பார்த்தது போலவே நான் செய்வதைப் பார்க்க  என் நண்பர் அவர் பட்டாளத்தை லைவுக்கு  கூட்டி வந்தார். அதற்குள் சிலர் எதிர் தரப்பிலும் வந்திருந்தார்கள். எல்லோரும் டிவிட்டரில் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

நான் கீழே ஸ்கோப் சரி செய்து கொண்டு அதன் வழியே பார்த்தேன்.

விளக்கு கம்பத்தின் அருகே கூட்டம் அதிகமில்லை. 

ஒரு சில இளைஞர்கள் குறுக்கே சென்றார்கள்.

நான் கண்களை அகற்றி மீண்டும் பார்த்த போது ஒருவன் அங்கே, அதே இடத்தில், சொல்லி வைத்தது போல நடந்து கொண்டிருந்தான். அவனுக்கும் எனக்கு நடுவே எந்தத் தடையும் இல்லை! 

நான் ட்ரிக்கரை அழுத்தினேன்.

 


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.